வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–52

பகுதி எட்டுகுருதிகொள் கரியோள் – 2

bl-e1513402911361பலந்தரை காசிநாட்டுக்கு திரும்பி வந்தபோது அவள் அன்னை துறைமுகப்பிலேயே அவளுக்காகக் காத்து நின்றிருந்தாள். படகிலிருந்து அவள் இறங்கியதும் ஓடிவந்து தோள்தழுவி நெஞ்சோடணைந்து “மீண்டு வந்தாயா? நன்று, அங்கேயே இருந்துவிடுவாயோ என்று அஞ்சினேன்” என்றாள். “அங்கு எனக்கென ஏதுள்ளது?” என்றாள் பலந்தரை. “அங்கு பிற அரசியர் இருக்கக்கூடுமென எனக்கு சொல்லப்பட்டது” என்றாள் அன்னை. “பிறந்த நாட்டிற்குச் செல்ல சேதிநாட்டு அரசியர்களுக்கு வாய்ப்பில்லையல்லவா? அவர்களின் தமையன் இளைய யாதவரால் கொல்லப்பட்டபின் அந்நகர் அவர்களை எதிர்கொள்ளாது என்று எண்ணினேன்” என்றாள்.

அன்னையின் பேச்சு தன்பேச்சுபோலவே இருப்பதாக பலந்தரை உணர்ந்தாள். அவள் கைவிரித்து அணுகியதுகூட அவளைப்போலவே தோன்றியது. “முதலில் கிளம்பிச் சென்றவர்கள் அவர்களே. சேதிநாடு அவர்களை தங்கள் அரசியர் என்றே எதிர்கொண்டது” என்று அவள் சொன்னாள். “செல்லத் தயங்குபவர்கள் சிறுகுடி ஷத்ரிய அரசியரான தேவிகையும் விஜயையும்தான். அங்கு இந்திரப்பிரஸ்தத்தில் ஒவ்வொருவருக்கும் நூறு சேடியரும் வெள்ளிப் பல்லக்கும் ஏழு நிரை அகம்படியரும் உண்டு. அவர்களின் மலைநாட்டிலும் பாலையிலும் ஆடு மேய்க்கவோ ஒட்டகம் புரக்கவோ அனுப்பிவிடுவார்களென அஞ்சினார்கள் போலும்” என்றாள்.

அன்னையின் முகம் மலர்வதைக் கண்டபோது அவளுக்குள் கசப்பு எழுந்தது. காசிநாட்டரசர் விருஷதர்பரின் முதலரசி அனுபநாட்டு அரசன் கர்மஜித்தின் தமக்கையான மகாபத்மை. அவளுக்குப் பிறந்தவள் பானுமதி. மகாபத்மையின் இறப்புக்குப் பின்னர் குண்டலநாட்டில் இருந்து அவள்  அன்னை காந்திமதியை தந்தை மணம்புரிந்துகொண்டபோது காசியின் மக்கள் மகிழ்ந்தனர். ஆனால் மிக விரைவிலேயே அனைவரின் வெறுப்புக்குமுரியவளாக அன்னை ஆனாள். அன்னையில் அவர்கள் வெறுப்பது எது என அப்போது அவளால் உணரமுடியும் என தோன்றியது. அஞ்சி அவள் எண்ணத்தை விலக்கிக்கொண்டாள்.

அன்னை “சென்றபடியே திரும்பிவந்திருக்கிறாயடி… வா, நீ விட்டுச்சென்ற அனைத்தும் அவ்வண்ணமே எஞ்சுகின்றன” என்று அழைத்துச் சென்றாள். தேரில் காசியின் தெருக்களின் வழியாக செல்கையில் அவள் ஒவ்வொன்றும் அங்கே இருக்கிறதா என்று நோக்குபவள்போல சாளரம் வழியாக விழிநிலைக்க அமர்ந்திருந்தாள். “நீ வருவதை நகர் கொண்டாடவேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறேன். இன்று மாலை ஆலயங்களில் விறலியர் ஆடலும் சூதர் பாடலும் நிகழும்” என்றாள் அன்னை. “அங்கே அவர்கள் கானேகுகிறார்கள், நாம் அதைத்தான் கொண்டாடுகிறோம் என்று தெரியப்போகிறது” என்றாள் பலந்தரை.

“அவ்வண்ணமே தோன்றட்டும். அவர்கள் நமக்கென்ன பொருட்டு?” என்ற அன்னை அவள் கைகளைத் தொட்டு மெல்லிய வஞ்சச் சிரிப்புடன் “இக்கொண்டாட்டம் என் பிற இரு மகள்களும் முற்றரசு பெற்று முடிசூடி அமர்ந்ததற்கு என்று கொள்வோம்… பிறகென்ன?” என்றாள். அவள் அன்னையின் கையிலிருந்து மெல்ல விடுவித்துக்கொண்டு “அவர்கள் அதில் மகிழமாட்டார்கள்” என்றாள். “அதெல்லாம் வெறும் பேச்சு. புகழும் முடியும் செல்வமும் நிலமும் எவரையும் மகிழவே வைக்கும். அதை காட்டுபவர்கள் மறைப்பவர்கள் என இரு வகையினரே மானுடர்” என்றாள். அவள் விழிகளைத் திருப்பி அணுகிவரும் உள்கோட்டை முகப்பை நோக்கினாள். எத்தனை சிறிய நகர் காசி என்னும் எண்ணம் எழுந்தது.

அரண்மனையை அடைந்து ஆடைமாற்றி இளைப்பாறியதுமே அவள் தந்தையை காணச்சென்றாள். தனியறையில் அமைச்சர்களுடன் அமர்ந்திருந்த விருஷதர்பர் அவளை நோக்கி “நீ இங்கு வருவது பாண்டவர்களின் ஆணைப்படிதான் அல்லவா?” என்றார். அவள் “நான் எவர் ஆணைக்கும் கட்டுப்பட்டவள் அல்ல” என்றாள். தந்தை களைத்த கண்களும் சோர்ந்த உடலுமாக பீடத்தில் அமர்ந்திருந்தார். அவர் கையசைத்து ஏதோ சொல்ல முயல்வதற்குள் அருகே நின்றிருந்த அமைச்சர் முகுளர் அடக்கப்பட்ட சினம் தெரியும் சொற்களால் “தாங்கள் தங்கள் கணவரின் ஆணைக்கு முற்றிலும் கட்டுப்பட்டவரே, பாண்டவ அரசி. ஷத்ரியகுலத்து அரசியரின் நெறி அதுவே” என்றார்.

பலந்தரை “அது ஷத்ரியர்களால் மணம்கொள்ளப்பட்டவர்களுக்கு. இங்கிருந்து கவர்ந்து செல்லப்பட்டபோதே நான் யாதவப் பெண்ணாகிவிட்டேன். யாதவப் பெண்களை கற்போ குலநெறியோ கட்டுப்படுத்துவதில்லை” என்றபின் உதடைச் சுழித்து “வேண்டுமென்றால் இங்கு கன்றுத் தொழுவில் இருக்கும் பசுக்களை நாளை முதல் காட்டுக்கு கொண்டுசெல்லலாம் என்று எண்ணுகின்றேன்” என்றாள். முகுளர் “பேரரசி, அஸ்தினபுரியின் செய்தி இன்னமும் நமக்கு முறைப்படி வந்துசேரவில்லை. நாம் எவர் தரப்பை எடுப்பது என உத்கலத்திற்குச் சென்றுள்ள இளவரசர் வந்த பின்னரே முடிவெடுக்கமுடியும்… அதைக் குறித்தே சொல்சூழ்ந்துகொண்டிருக்கிறோம்” என்றார்.

“என்ன முடிவு எடுக்கப்போகிறீர்கள் என எவர் அறியமாட்டார்? அஸ்தினபுரியின் கை ஓங்கியுள்ளது. சிம்மம் வேட்டையாடுவதற்குப் பின்னால்தான் நரிகள் செல்லவேண்டும்” என்றாள் பலந்தரை. “அங்கு இங்குள்ள இரு அரசியர் உள்ளனர். கொக்கியை வீசி எறிந்துவிட்டீர்கள். பற்று உறுதியா என நோக்கிவிட்டு தொற்றி ஏறவேண்டியதுதானே?” முகுளர் சிவந்த முகத்துடன் சொல்லெடுக்க முயல அவரை கைவீசித் தடுத்து விருஷதர்பர் சலிப்புடன் “செல்க, உங்களிடம் சொல்லாடும் நிலையில் இல்லை நாங்கள்” என்றபின் அமைச்சரிடம் “சுபாகுவுக்கு செய்தி சென்றுவிட்டதா என்று மட்டும் நோக்கி சொல்க!” என்றார். பலந்தரை ஏளனத்துடன் புன்னகைத்துவிட்டு அன்னையின் தோளைத் தொட்டு “வருக, அன்னையே!” என்று திரும்பி நடந்தாள்.

மீண்டு வந்த சில நாட்களிலேயே இந்திரப்பிரஸ்தத்தையும் பாண்டவர்களையும் முற்றாக மறக்க அவளால் இயன்றது. மைந்தனைக்கூட எப்போதேனும்தான் நினைவிலிருந்து எடுத்தாள். விட்டுச்சென்ற காலத்திலேயே வந்து மீண்டும் பொருந்திக்கொள்ள முடியும் என்பது அவளுக்கு எண்ணிப்பார்க்க முடியாததாக இருந்தது. அன்னை அவளை முன்பு இருந்த பலந்தரை என்றாக்க அனைத்தையும் செய்தாள். ஒவ்வொரு நாளும் முன்புபோல் அகல்விழி அன்னை உடனுறை உலகாள்வோன் ஆலயத்திற்கும் காலபைரவன் ஆலயத்திற்கும் அழைத்துச்சென்றாள். முதற்புனல் விழா அணுகியபோது அவள் முற்றிலும் காசிநாட்டவளாக மாறிவிட்டிருந்தாள்.

அஸ்தினபுரி இந்திரப்பிரஸ்தத்தை முற்றாக எடுத்துக்கொண்டதை அவள் அறிந்தாள். அதன்பின் இந்திரப்பிரஸ்தத்தில் நிகழ்ந்த முதல் இந்திரவிழவில் பானுமதியும் அசலையும் அரசணிக்கோலத்தில் அவையமர்ந்திருந்ததை ஒற்றர்கள் சொல்லி அறிந்தபோது மட்டும் அவள் உள்ளம் எரிந்தணைந்தது. “அவள் அமர்ந்து மகிழட்டும். ஆனால் பாஞ்சாலத்து அரசி வேங்கை. அது திரும்பி வருகையில் தன் அளவென்ன என்று இவள் அறிவாள்” என்றாள். அன்னை திகைத்து “என்னடி சொல்கிறாய்?” என்றாள். “நான் சொல்வதற்கொன்றும் இல்லை” என்றபின் அவள் சினத்துடன் எழுந்துசென்றாள்.

bl-e1513402911361கீழே அவளுடைய அணுக்கச்சேடி விகிர்தை உள்ளே நுழைந்தாள். அவளைத் தொடர்ந்து தனிப்புரவியில் வந்த ஒற்றன் புரவியை நிறுத்தி கடிவாளத்தை அளித்துவிட்டு முற்றத்தில் நின்றான். விகிர்தை ஒற்றனிடம் தன்னைத் தொடரும்படி சொல்லிவிட்டு படிகளில் ஏறி உள்ளே வந்தாள். பலந்தரை இடைநாழிக்குச் சென்று தன்அறைக்குள் நுழைந்து மஞ்சத்திலிட்டிருந்த மேலாடையை எடுத்து அணிந்தாள். ஆடியில் நோக்கி தோளில் புரண்ட குழலை சீரமைத்தாள். ஒவ்வொரு முறை ஆடி நோக்குகையிலும் எழும் உளச்சுளிப்பை அடைந்தாள். அவளுடையது அசலையின் அதே முகம். ஆனால் அசலையிடமிருந்த அழகு முழுமையாகவே விடுபட்டிருந்தது. மூக்கும் விழிகளும் வாயும் அனைத்தும் அவையே. அவற்றை முகமென்றாக்கும் ஒன்று அமையவில்லை.

சிறு கூடத்திற்குச் சென்று பீடத்தில் அமர்ந்து மேலாடையை அரசியருக்குரிய முறையில் கைகளுக்கு குறுக்காக பொன்னூல் பின்னல் தெரியும்படி போட்டுக்கொண்டாள். விகிர்தை உள்ளே வந்து தலைவணங்கி “வணங்குகிறேன் அரசி, ஒற்றர் சுகேசர் வந்துள்ளார்” என்றாள். “வரச்சொல்” என்று அவள் கையசைத்தாள். சேடி வெளியே சென்று ஒற்றனை உள்ளே அழைத்துவந்தாள். மெல்லிய குற்றடிகள்கொண்டு உள்ளே வந்த சுகேசன் ஒடுங்கிய சிற்றுடலும் கன்ன எலும்புகள் உந்திய முகமும் கொண்டிருந்தான். அவன் தலைவணங்கி முகமன் உரைக்க அவள் மெல்ல தலையசைத்து அமரும்படி கைகாட்டினாள்.

சுகேசன் அருகிலிருந்த பீடத்தில் அமர்ந்து அவள் சொல்லெடுக்கும் வரை காத்தான். அவள் முதல் சொற்றொடரை எங்கு தொடங்குவது என்று தொட்டு தொட்டுச் சென்று சுழன்று கொண்டிருந்தாள். மிகையான ஆர்வம் எழலாகாது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். அவர்கள் எதிர்பார்க்கும் உணர்வுகளை வெளிக்காட்டியாகவேண்டும். வழக்கமான சொற்றொடர்களே ஏற்றவை. ஆனால் அவைகூட ஆர்வமின்மையாக தெரியக்கூடும். இயல்பாக நிமிர்ந்தபோது அவன் கண்களை சந்தித்தாள். “சுகேசரே, என்ன நடக்கிறது அஸ்தினபுரியில்?” என்றாள். அவ்வெற்றுக்கேள்வியால் அவளே திகைப்புற்று “போர் அறிவிக்கப்பட்டுவிட்டது என்று கேட்டேன்” என்றாள்.

அது அவளுடைய ஆர்வத்தை காட்டிவிட்டது. ஆனால் சுகேசனின் விழிகளில் ஏதும் தெரியவில்லை. “ஆம் அரசி, போர் நிகழவிருக்கிறது” என்றான். அவள் புருவத்தைச் சுருக்கி “இளைய யாதவர் போரை தடுக்கமுயல்வதாக செய்திகள் வந்தன” என்றாள். “ஆம், அதன் பொருட்டே அவர் இரண்டாம்முறை அரசர்கள் கூடிய அவைக்கு தூது சென்றார்” என்றான் சுகேசன். “அரசப்பேரவையில் பாண்டவர்க்கென அவர் கோரியது ஐந்து சிற்றூர்கள் மட்டுமே. அவை எல்லைப்புற காட்டுக்குடிகளாக இருப்பினும் ஏற்பதாக சொன்னார். அஸ்தினபுரியின் அரசர் அதை முற்றிலும் மறுத்து ஆணையிட்டார். நீட்டிய கையை மடித்து துயருற்று தனித்து இளைய யாதவர் திரும்பிச் சென்றார்.”

பலந்தரையால் அது தனக்கு நன்மை பயப்பதா தீதிழைப்பதா என முடிவுசெய்ய இயலவில்லை. ஆனால் அவள் முகம் மலர்ந்துவிட்டது. அது ஏன் என்று உள்ளூர வியந்தாள். மறுகணமே அதை பானுமதியும் அசலையும் எப்படி எதிர்கொண்டிருப்பார்கள் என எண்ணம் ஓடியது. அவர்கள் மகிழ்ந்திருப்பார்களா? “அவையில் இளைய யாதவர் என்ன கேட்டார்?” என்றாள். சுகேசன் அவைநிகழ்வுகளை சொல்லச் சொல்ல அவள் உணர்வுகள் இருமுனைகளிலுமாக ஊசலாடின. குந்தியை துரியோதனன் அவையில் சிறுமை செய்ததைக் கேட்டபோது எழுந்த படபடப்பு உவகையா ஒவ்வாமையா என அவளுக்கே புரியவில்லை. இளைய யாதவர் துயருற்று கை சுருக்கி அவைநீங்கியதை கேட்டபோது அவள் அசலையின் முகத்தை அகக்கண்ணில் கண்டாள். அது அவளை மலரச்செய்தது. “அவர் வெல்லற்கரியவர் என்கிறார்களே, இந்த அவைச்சிறுமை அவருடைய அப்பெருமைக்கு இழுக்கு சேர்க்குமே?” என்றாள்.

அதை சொல்லியிருக்கலாகாது என உடனே உணர்ந்தாள். ஆனால் சுகேசன் முகத்தில் எவ்வுணர்ச்சியும் வெளிப்படவில்லை. “அவ்வாறு அவைநீங்கியது அவருக்கு மேலும் பெருமையையே கூட்டியது, அரசி. ஏனென்றால் அவர் தனக்காக வரவில்லை. தன் சேவடி நோக தோழரின் பொருட்டு நடந்த பெரியோன் என்று நான் வரும்வழியில் ஒரு சூதன் பாடியதை கேட்டேன். ஊர்மன்றில் அவனைச் சூழ்ந்து நின்றிருந்தவர்கள் கண்களில் நீர்வழிய அதை கேட்டுக்கொண்டிருந்தனர். வென்று சொல்லெழுவது மட்டுமல்ல கீழ்மைமுன் திரும்புவதும் பெரியோருக்குச் சிறப்பே என்று அச்சூதன் சொன்னான்” என்றான்.

அவள் சலிப்புடன் கைவீசி “அது அவர்கள் உருவாக்கிய பாவை, அதை எந்நிலையிலும் பேணவே விழைவார்கள்” என்றாள். “இனி அவர் என்ன செய்யக்கூடும்?” சுகேசன் “அவர் அவைவந்து சொல்வைப்பதற்கு ஏதுமில்லை என்றார்கள்” என்றான். அவள் பெருமூச்சுடன் இரு கைகளையும் பீடத்தின் கைப்பிடிகளில் மெல்ல தட்டியபடி நிமிர்ந்து அமர்ந்தாள். “அஸ்தினபுரியின் மக்கள் எவ்வாறு உணர்கிறார்கள்?” என்றாள். “அங்கே நிகழ்வனவற்றை முன்பு அந்நகரைக் கண்ட எவரும் நம்பவியலாது. போருக்கு முந்தைய நகர்ச்சூழலை முன்பு கண்டவர்கள் பிறிதொன்றை எண்ணவும் இயலாது” என்றான் சுகேசன்.

“அஸ்தினபுரி போர்வெறி கொண்டிருக்கிறது. குருதி ஒன்றைத்தவிர அங்கே மக்கள் எதையும் விழையவில்லை. விடாய்கொண்ட இருள்தெய்வங்கள் அந்நகரில் குடிகொண்டிருக்கின்றன” என்று அவன் தொடர்ந்தான். “அங்கே ஏதோ நோய் பரவியிருக்கின்றது என்கிறார்கள் சூதர். நகரெங்கும் வானிலிருந்து நஞ்சு பொழிகிறது, சுவர்களில் நீலமூலி என படர்கிறது, காகங்களும் நாகங்களும் நகரை நிறைத்துள்ளன, நடுப்பகலில் நரி ஊளையிடுகிறது என்றெல்லாம் பாடிப்பரப்புகிறார்கள். நான் எதையும் காணவில்லை. அங்கு கண்டதெல்லாம் பித்துகொண்ட கண்களையும் களிகொண்ட சிரிப்புகளையும் மட்டுமே.”

“அவை இறுதி முடிவை எடுத்துவிட்டதா?” என்றாள் பலந்தரை. “ஆம் அரசி, உண்மையில் இளைய யாதவர் அவைநீங்கியபின் அங்கே பெரிதாக எதுவும் நிகழவில்லை. அனைத்து முடிவுகளும் ஓரிரு சொல்மாற்றுகளுடன் உடனடியாக ஏற்கப்பட்டுவிட்டன. அம்முடிவுகளை ஆட்டுத்தோல் ஏடுகளில் எழுதி அரசர்கள் அனைவரிடமும் முத்திரைச் சாத்து பெற்றனர். மறுநாளே அஸ்தினபுரியின் குடிப்பேரவையில் ஷத்ரியப் பேரவையின் முடிவுகள் முன்வைக்கப்பட்டன. குடிப்பேரவை முழுதுள்ளத்துடன் அனைத்தையும் ஏற்றது. அவர்கள் அகிபீனா உண்டு வெறிகொண்டவர்கள்போல ததும்பிக்கொண்டிருந்தனர்” என்றான் சுகேசன்.

“நேற்று காலை பிதாமகர் பீஷ்மரின் பெயரால் அரசாணையாக முதன்மை அறிவிப்பு அஸ்தினபுரியின் கிழக்குக்கோட்டை வாயிலில் வெளியிடப்பட்டது. யானைமேல் ஏறி நின்ற நிமித்திகன் இரட்டை முரசொலி ஓய்ந்ததும் அதை படித்தளித்தான். பாண்டவர்களுக்கு குலமுறைப்படியும் அரசநெறிப்படியும் இந்திரபிரஸ்தத்திலோ அஸ்தினபுரியின் மண்ணிலோ கருவூலத்திலோ எவ்வுரிமையும் இல்லை என்றான். அதன்பொருட்டு பாண்டவர்கள் திரட்டியுள்ள படை அஸ்தினபுரிக்கும் அரசர்களுக்கும் எதிரான குடிக்கிளர்ச்சியாகவே கருதப்படும் என்று அவன் சொன்னபோது அங்கே கூடியிருந்தவர்கள் கொல்க, கொல்க என்று கூவினர். ஒருவன் இருவரின் தோளிலேறி குருதி, குடியிலிகளின் குருதிவேண்டும் என் விடாய் தீர என்று கூச்சலிட்டான்” என்று சுகேசன் தொடர்ந்தான்.

“பாண்டவர்களின் துணைக்கென உடன் கூடியிருக்கும் நிஷாதர்கள், கிராதர்கள், அரக்கர்கள், அசுரர்கள் அனைவரும் பாரதவர்ஷத்தின் ஷத்ரிய மேல்கோன்மைக்கு எதிராக அறைகூவும் பெருந்தவறை இழைக்கிறார்கள், அவர்கள் படைதிரட்சியை முற்றாகக் கைவிட்டு தங்கள் இடங்களுக்கு திரும்ப வேண்டும், தங்கள் மரபு சார்ந்த வேட்டைப் படைக்கலங்கள் அன்றி வேறெந்த கொலைப்பொருளும் அவர்களிடம் இருக்கலாகாது. அவர்கள் தாங்கள் வெவ்வேறு வகையில் வாங்கித் திரட்டியிள்ள போர்க்கலங்கள் அனைத்தையும் அஸ்தினபுரியின் படைகளிடமோ பிற ஷத்ரியர் படைகளிடமோ ஒப்படைத்து தலை மண்ணில் படிய முற்றாக அடிபணியவேண்டும், இல்லையேல் அவர்கள் கொலைக்குரியவர்கள் என்று அறிவிக்கப்பட்டது.”

அவன் அங்கு நிகழ்ந்ததை நேரில் கண்டு சொல்வதைப்போல உணர்வற்ற நேர்க்குரலில் சொல்லிக்கொண்டிருந்தான். “ஷத்ரியர் அவைக்கூட்டுக்கு வந்து முத்திரைச்சாத்து கொள்ளாத அத்தனை நாடுகளும் ஷத்ரியக் கூட்டமைப்புக்கு அடிபணிந்து கப்பம் கட்டி அருள்பெற்று ஒழுகவேண்டும் என்று அஸ்தினபுரியின் மன்னர் ஷத்ரியப் படைக்கூட்டின் பெயரால் ஆணையிட்டார். அதற்கு அவர்கள் தங்கள் முற்றொப்புதலை ஏழு நாட்களுக்குள் அஸ்தினபுரிக்கோ ஷத்ரியர் நாடுகளுக்கோ அறிவிக்க வேண்டும். அஸ்தினபுரியின் செங்கோலையும் தாங்கள் அடிபணியும் ஷத்ரிய அரசின் அரியணையையும் தலைசூடுவதாக வாள்தொட்டு குடிமூதாதையர் பெயரால் பொது இடத்தில் ஆணையிடவேண்டும். அவ்வாணை கைச்சாத்திடப்பட்ட ஓலை என அஸ்தினபுரியை வந்தடையவேண்டும் எனக் கூறப்பட்டது.”

“அதன் பின்னர் அஸ்தினபுரியிலிருந்து அவர்கள் அனைவருக்கும் செங்கோல் என கொடுத்தனுப்பப்படும் அத்திமரக் கிளையை அவர்கள் தங்கள் அரியணையில் வைத்து அரசரென அரிமலரிட்டுத் தலைவணங்கி சொல்லேற்கவேண்டும். மணிமுடியும் கங்கைமுழுக்காட்டும் அக்கோலுக்கு செய்யப்படவேண்டும். அவர்களின் குடித்தலைவர்கள் அனைவரும் தங்கள் வாளையோ குடிக்கோலையோ அதன் முன் தாழ்த்தி முற்றடிபணிவதாகவும் மறு சொல்லெழுவதை பிழையென்று உணர்வதாகவும் ஆணையிடவேண்டும். குருதி தொட்டு தங்கள் தொல்நிலத்தின்மேல் ஆணை உரைக்கவேண்டும்.”

பலந்தரை நெஞ்சு படபடப்பதை உணர்ந்தாள். அது ஆவல் அல்ல அச்சம் எனத் தெரிந்தது. அச்சம் எதற்கு எனப் புரியவில்லை. இவை காசியை ஒன்றும் செய்யப்போவதில்லை. அவள் தந்தையும் தமையனும் அஸ்தினபுரியின் தலைமையில் ஷத்ரியப் படைக்கூட்டில் கைச்சாத்து இட்டுவிட்டு வந்துகொண்டிருக்கிறார்கள். அவ்வச்சம் முகமற்றது. அது படையெழுச்சியின், போரின் மெய்யான ஆற்றலை நேருக்குநேர் காணும்போது எழுவது. அதுவரை கேட்டறிந்ததெல்லாம் கவிதையிலும் கதையிலும்தான். இது சிம்மம் இரைவிலங்கைக் கொன்று கிழித்துண்பதுபோல நேரடியானது. உட்பொருட்களும் நீள்விளக்கங்களும் அற்றது. ஆனால் நான் இதை ஏன் அஞ்சுகிறேன்? நான் அரசி. இதை அஞ்சவேண்டியவர்கள் எளிய குடிகள். நான் கொலைவிலங்கின் கணம். ஆனால் அவள் கைவிரல்கள் குளிர்ந்து நடுங்கிக்கொண்டிருந்தன.

“அச்சொல்லை மீறுவார்களென்றால் அவர்கள் அனைவரும் அஸ்தினபுரியின் பெரும்படைகளால் முற்றழிக்கப்படுவதும், அவர்களின் நிலம் பறிக்கப்படுவதும் அவர்களின் குடி பெயருமின்றி ஒழிக்கப்படுவதும் முறையென்றாகும். அவர்கள் அனைவரும் தங்கள் அரச குடியிலிருந்தும், மூத்த தொல்குடிகளிலிருந்தும் ஒவ்வொரு பெண்டிரை அஸ்தினபுரிக்கோ அவர்கள் அடிமைப்பட்டுள்ள ஷத்ரிய குடிகளுக்கோ அனுப்பி வைக்கவேண்டும். அவர்கள் அங்குள்ள அரசகுடியினராலோ படைத்தலைவர்களாலோ மணம்கொள்ளப்படுவார்கள். அரண்மனைச் சேடியர் என்றும் அமர்த்தப்படுவார்கள். அவர்கள் கருவில் பிறந்த மைந்தரே அக்குடிகளுக்கு அடுத்த அரசரென்றும் வழித்தொடர் மைந்தரென்றும் அமைவார்கள்.”

“அக்குடிகளின் ஆலயங்கள் அனைத்திலும் ஷத்ரியப் பிரஜாபதிகளும், தெய்வங்களும் அவர்களின் குடித்தெய்வங்களுக்கு ஒரு படி மேலாக அமைக்கப்படவேண்டும். அவர்கள் அளிக்கும் பூசனைகளும் பலிக்கொடைகளும் முதலில் அப்பிரஜாபதிகளுக்கும் தெய்வங்களுக்கும் அளிக்கப்பட்ட பின்னரே அவர்களின் குடித்தெய்வங்களுக்கு கொடுக்கப்படவேண்டும். அவர்களின் ஊர்களிலும் நகர்களிலும் அவர்கள் அடிபணிந்து தலைக்கொண்ட ஷத்ரிய அரசின் கொடி முதன்மையாகவும் அவர்களின் கொடிகள் ஒருபடி தாழ்ந்தும் பறக்கவிடப்பட வேண்டும். அவர்களின் அத்தனை குலமுத்திரைகளுடனும் அவர்கள் அடிமைப்பட்டுள்ள நாட்டின் முத்திரை மேலே பொறிக்கப்பட்டு தாஸ என்னும் சொல் கீழே எழுதப்பட்டிருக்கவேண்டும்.”

“இவற்றை மறுத்து ஒரு சொல்லெழுவதும் நேரடிப் போருக்கான அறைகூவல் என்றே கொள்ளப்படும். வெங்குருதியால் அப்பழி முற்றாகத் தீர்க்கப்படும் என்று அஸ்தினபுரியின் அரசர் ஷத்ரிய படைக்கூட்டின்பொருட்டு ஆணையிட்டிருந்தார்” என்று சுகேசன் சொன்னான். “அச்சொற்களை அருகே நின்றமையால் நான் விழிகளால் அறிந்தேன். அவர்களைச் சூழ அஸ்தினபுரி கடற்கோள் என முழங்கிக்கொண்டிருந்தது.” பலந்தரை பெருமூச்சுவிட்டாள். “பாண்டவர்கள் என ஒரு சொல் உரைக்கப்பட்டதுமே கொல்க, அவர்களைக் கொல்க என கூவினர். வஞ்சகர்கள், கீழ்மக்கள், குடியிலிகள் என வசைபொழிந்தனர்.”

அத்தருணம் பலந்தரையின் உள்ளத்தில் சீற்றமே எழுந்தது. பற்களைக் கடித்தபடி “கீழ்மக்கள், அன்று யுதிஷ்டிரர் காலில் விழுந்து கூவியழுத பேதைகள்” என்றாள். “அவர்கள் செத்து குவிவார்கள். குருதியிலும் கண்ணீரிலும் ஆடுவார்கள். ஆம், அதுவே நிகழப்போகிறது.” சுகேசன் அவள் சொன்னதை அறியாதவன் என அமர்ந்திருந்தான். “நம் அரசரும் பேரரசரும் அவையில் ஏதும் உரைக்கவில்லையா?” என்றாள். “அரசி, ஷத்ரியப்பேரவையில் எழுந்து சொல்லுரைக்கும் இடம் நமக்கில்லை, நமக்குப் படையென ஏதுமில்லை. மரபுப்படி நாம் உலகாள்வோன் ஆலயத்தின் காப்பாளர்கள் மட்டுமே.” அவள் சினத்துடன் தலைதூக்கி பின் தன்னை அடக்கி “அவர்கள் கைச்சாத்திட்டனரா?” என்றாள். “ஆம், அரசி” என்றான் சுகேசன். “போருக்குப் பின் தங்களுக்குக் கிடைப்பதென்ன என்று ஒரு சொல்லேனும் உசாவினார்களா?” என்றாள் பலந்தரை. “இல்லை, அரசி” என்று சுகேசன் சொன்னான். “அறிவிலிகள்” என்றாள் பலந்தரை.

அவள் சொன்னதை செவிகொள்ளாதவனாக சுகேசன் தொடர்ந்தான். “பாண்டவர்களுக்கு அஸ்தினபுரியின் குடிமக்கள் என்பதற்கு அப்பால் எந்தக் குலஅடையாளமும் அரசத் தொடர்பும் அளிக்கப்படமாட்டாது என்று அவ்வரசாணை சொன்னது. அவர்கள் ஷத்ரியர்கள் அல்ல என்பதனால் நான்காம் குடியினருக்குரிய மரபுவழித் தொழில்களை ஆற்றி அவர்கள் வாழவேண்டுமென்றும் அவர்கள் மைந்தர்கள் குருகுலத்துக் கொடிவழியினர் என்றோ ஷத்ரியர் என்றோ தங்களை சொல்லிக்கொள்ளக்கூடாதென்றும் கூறியது. அவர்களை கொல்லுங்கள், நஞ்சு மிஞ்சலாகாது, அனல் எஞ்சலாகாது என ஒரு முதியவர் கூவ அனைவரும் தங்கள் வாள்களையும் கோல்களையும் தூக்கி கூச்சலிட்டனர்.”

“அரசி, மேற்குப்பாலையில் ஒருமுறை பசிகொண்ட ஓநாய்க்குழு ஒன்றின்முன் நாங்கள் சிக்கிக்கொண்டோம். இளித்த வாய்களில் எழுந்த வெறிச்சிரிப்பன்ன வெண்மையை, விழியெரித்துளிகளை இப்போதும் கொடுங்கனவிலென நினைவுகூர்கிறேன். ஆயிரக்கணக்கான பாலைநிலத்து ஓநாய்களைப் போலிருந்தனர் அம்மக்கள்” என்றான் சுகேசன். பலந்தரை கைதளர்ந்து அசையாமல் அமர்ந்திருந்தாள். பின்னர் “அவள் என்ன செய்தாள்?” என்றாள். அதை புரிந்துகொண்ட சுகேசன் “அஸ்தினபுரியின் பேரரசி இறுதிவரை அவையில் அமர்ந்திருந்தார். மறுநாள் குடியவைப் பேரவையில் அரசருக்கு இணையாக அமர்ந்து அனைத்துச் சடங்குகளையும் ஆற்றினார்” என்றான்.

பலந்தரை சிலகணங்கள் விழிதாழ்த்தி அமர்ந்திருந்தபின் “அவள் எப்படி இருந்தாள்?” என்றாள். சுகேசன் தயங்கி அமர்ந்திருந்தான். “அவையில் காவலராக இருந்தீர்கள் அல்லவா?” என்றாள் பலந்தரை. “ஆம் அரசி, நான் அனைத்தையும் கண்டேன்.” பலந்தரை “சொல்க!” என்றாள். “அரசி, இளைய அரசியர் இருவரும் ஷத்ரியப் பேரவையிலிருந்து சினமும் விழிநீருமாக விலகிச் சென்றனர். மூத்த அரசி அவையிலேயே இருந்தார். விழிவிலக்காது அரசரையே நோக்கிக்கொண்டிருந்தார். காதல்கொண்ட முதிராமகள் என அவர் முகம் களிகொண்டிருந்தது.”

பலந்தரை போதும் என்பதுபோல கையசைத்தாள். பின்னர் எழுந்து தன் மேலாடையை விசையுடன் சுழற்றி அணிந்தபடி அறையிலிருந்து வெளியே சென்றாள். சுகேசன் எழுந்து அவள் சென்ற திசைநோக்கி தலைவணங்கிவிட்டு காகம்போல் மெல்லடி வைத்து நடந்து வெளியே சென்றான்.

வெண்முரசு வாசிப்பு முறை – ராஜகோபாலன்

முந்தைய கட்டுரைஅஞ்சலி , செழியன் [கனடா]
அடுத்த கட்டுரைஜப்பானில் நாஞ்சில்நாடன்