ஏற்புக் கோட்பாடு

இலக்கிய விமர்சனத்தை மூன்று பெரும் காலகட்டங்களாகப் பகுக்கலாம். ஒன்று, படைப்பாளியை மையப் படுத்தி ஆராயும் விமர்சனம். கற்பனாவாத கால கட்டத்தில் இலக்கிய விமர்சனம் அப்படித்தான் ஆரம்பித்தது. கூல்ரிட்ஜின் இலக்கிய விமர்சன முறை இதுவே. அதற்கு மாற்றாக படைப்பை முன்னிறுத்தி ஆராய்வது புதுத் திறனாய்வு முறை. எலியட் முதல் அது ஆரம்பிக்கிறது. அமெரிக்க புதுத் திறனாய்வாளார்களில் உச்சம் கொள்கிறது.

மூன்றாவது அலை என்பது வாசகனை மையப்படுத்தியதாகும். இலக்கிய ஆக்கம் என்பது வாசிப்பு வழியாக உருவாவதே என்பதுதான் இந்த ஆய்வின் முதல் கோட்பாடு. ழாக் தெரிதா அதன் முக்கியமான கருத்துமையம். அவரில் இருந்து அச்சிந்தனை பல கிளைகளாக பிரிந்து வளர்ந்துள்ளது. இந்நோக்கின் மூலம் உருவான இலக்கிய ஆய்வு முறைமை என ஏற்புக்கோட்பாடுகளைச் சொல்லலாம்.

ஏற்புக் கோட்பாடு இலக்கியபிரதிகள் வாசிப்பைப்பெறும் விதத்தை கூர்ந்து கவனிக்கிறது. எல்லா இலக்கிய விமர்சனங்களும் விவாதங்களும் படைப்புகளை அர்த்தமாக ஆக்கும் செயல்பாடுகள்தான். சமூகமனம் இலக்கிய ஆக்கங்களைத் தொடர்ச்சியாக அர்த்தப்படுத்தி தன்வயமாக்கிக் கொண்டே இருக்கிறது. கடைசியில் ஒரு சமூகத்தில் எஞ்சுவது அந்த வாசிப்புகள் மூலம் உருவாகும் பிரதியே. ஆகவே இலக்கியப்பிரதி எழுதுவதன்மூலம் உருவாவதில்லை, வாசிப்பதன் மூலம் உருவாவதே

ஓர் உவமையாகச் சொல்லலாம் சிப்பிக்குள் நுழையும் சிறு பொருளைச் சிப்பி தன் சதையால் சூழ்ந்து முத்தை உருவாக்குகிறது. ஆக முத்து என்பது சிப்பியின் உருவாக்கமே. அதற்கான தூண்டுதலே அந்த பொருள்

ஏற்புக்கோட்பாடு இன்னும் நம் கல்வித்துறைகளில் பேசப்படவில்லை. ஏற்புக்கோட்பாடு போன்றவற்றை இறுதியான இலக்கிய முறைமைகளாகக் கொள்வதில் அபாயமிருக்கிறது. அவை மீண்டும் இலக்கிய ஆக்கத்தை சிறுமைப்படுத்துவதில், எளிமைப்படுத்துவதில் நம்மைக் கொண்டுசென்று நிறுத்தும். எந்த இலக்கிய விமர்சனமுறை அறிமுகமானாலும் இங்கே நிகழ்வது அதுவே. மாறாக நம் இலக்கிய மரபை புதிய கோணத்தில் புரிந்துகொள்ள அதை கையாண்டால் பல திறப்புகள் நிகழலாம்.


ஏற்புக் கோட்பாடு Reception Theory

ஒரு படைப்பை வாசகர்கள் ஒட்டுமொத்தமாகக் காலம்தோறும் எப்படியெல்லாம் வாசித்து வந்திருக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் அதை மதிப்பிடும் இலக்கியத்திறனாய்வு முறை. ஒரு இலக்கியப்பிரதி என்பது அதை வாசகர்கள் வாசித்து அர்த்தப்படுத்திக்கொள்வதன் மூலம் உருவாகும் பொதுஅர்த்தங்களின் தொகை என்று கருதும் ஆய்வ்முறை. வாசக எதிர்வினைக் கோட்பாட்டின் வரலாற்று ரீதியான விரிவாக்கம் இது. இது ஹான்ஸ் ராபர்ட் ஜாஸ் [Hans Robert Jauss] என்பவரால் 1960 களில் முன்வைக்கப்பட்டதாகும்.பண்பாட்டு ஆய்வாளர் ஸ்டுவர்ட் ஹால் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது

ஜாஸ் ஒரு பிரதிக்கு புறவயமான நிலைத்த அர்த்தம் இல்லை என்ற பின் அமைப்புவதாதக் கோட்பாட்டை ஏற்கிறார். ஆனால் படைப்பு புறவயமாக அடையாளம் காணப்படச் சாத்தியமான சில எதிர்வினைகளை உருவாக்குகிறது அல்லது புறவயமாக வகுக்கக்கூடிய சில அர்த்தங்களை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட வாசகச் சூழலில் உருவாக்குகிறது என்றார் ஜாஸ்.

ஒரு தனிவாசகர் ஒரு படைப்பை படிக்கும்போது உருவாகும் அவரது எதிர்வினையானது கீழ்க்கண்ட அம்சங்களைக் கொண்டது.

1) வாசகராக அவரது பொது எதிர்பார்ப்பு.

2) வாசிப்பில் அந்த எதிர்பார்ப்பின் விளைவுகளாக உருவாகும் ஏமாற்றம். நிறைவு, மறுப்பு, ஏற்பு.

3) அவரது சொந்த எதிர்பார்ப்பையும் எதிர்வினைகளையும் எதிர்த்து செயல்படும் படைப்பின் இயல்புகள்.

இப்படிக்கூறலாம், படைப்புக்கும் வாசகனுக்கும் இடையேயான முரணியக்கமே வாசக எதிர்வினையை உருவாக்குகிறது. படைப்பின் தனித்தன்மைகளுடன் வாசகனின் மொழித்திறன், கற்பனைத்திறன், பண்பாட்டுப் பயிற்சி போன்றவை இணைந்துதான் அவன் அடையும் பிரதி உருவாகிறது.

ஆனால் காலப்போக்கில் வாசிப்பு ஒட்டுமொத்தமான ஒரு வளர்ச்சியை அடைகிறது. விமரிசனங்கள், பிற வாசகர்களின் எதிர்வினைகள் வருகின்றன. அப்படைப்பு நின்று பேசும் தத்துவ அரசியல் தளங்கள் பரிச்சயத்துக்கு உள்ளாகின்றன. அதன் விளைவாக வாசகன் பக்குவப்படுகிறான், வளர்கிறான். விளைவாக ஏற்கனவே இருந்ததைவிடச் சிறந்த வாசிப்பு ஒட்டுமொத்தமாக உருவாகிறது. அதாவது வாசிப்பு ஒரு இயக்கமாக மரபாக மாறிவிடுகிறது. கூட்டுவாசிப்பு என்று இதைக் கூறலாம். இதை ஜாஸ் படைப்புகளுடனான தொடர்பு உரையாடல் என்கிறார். தொடர்ந்துவரும் வாசகர் வரிசை மூலம் இவ்வுரையாடல் விரிந்து வளர்கிறது. இலக்கியப் படைப்புக்கு இறுதி அர்த்தம் ஒன்று இல்லையாதலால் இந்த வாசிப்பு தொடர்ந்து வளர்ந்து செல்கிறது. அவ்வாறாக அந்த பிரதி முடிவில்லாமல் கட்டப்பட்டுகொண்டே செல்கிறது.

உதாரணம் மூலம் கூறலாம். தமிழில் ப.சிங்காரத்தின் நாவல்கள் வெளிவந்த காலத்தில் அவை சாதகமான வாசக எதிர்வினையைப் பெறவில்லை. குறைந்த அளவிலான வாசகர்களே அவற்றின் சிறப்பை உணர்ந்தனர். காரணம் அதன் சிதறிப் பரக்கும் வடிவமும், இலக்கு இல்லாத அங்கதப் பார்வையும்தான். காலப்போக்கில் அதற்கு நல்ல வாசிப்புகள் வந்தன. திறனாய்வுக் கட்டுரைகள், வாசக எதிர்வினைக் குறிப்புகள் வெளிவரத் தொடங்கின. மெல்ல அதன் மீதான வாசிப்பு ஒரு கூட்டுவாசிப்பாக மாறியது. அதன்மீது ஒரு சிறந்த வாசகன் நடத்திய வாசிப்பின் பலன் இன்னொரு வாசகனுக்கு கிடைத்தது. இவ்வாறு வாசிப்புகள் திரண்டபோது அது உருவாக்கிய திகைப்பு இல்லாமலாகி பரவலாக ரசிக்கப்பட்டது.

இவ்வாறு இலக்கியப் பிரதிகள் மீதான வாசிப்பு கூட்டாக முன்னெடுக்கப்படுகிறது. வெளிவந்த உடனே பெரிய வாசிப்புத்தடைகளை உருவாக்கும் படைப்புகள் ஓரிரு வருடங்களுக்குள் சாதாரண வாசகனுக்கும் எளிதில் கடந்துவிட முடிவதாக ஆவது இப்படித்தான். சிங்காரத்தின் சிதறுண்ட வடிவம் பின்நவீனத்துவ எழுத்துமுறைக்கு சமானமாக அடையாளம் காணப்பட்டது. அவரது அங்கத்தின் தத்துவ தளம் பகுப்பாய்வு செய்யப்பட்டது. அவர் தரும் பண்டை இலக்கிய உட்குறிப்புகள் நுட்பமாக கண்டறியப்பட்டன. விளைவாக சிங்காரம் எளியவராக ஆனார்.

கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற பேரிலக்கியங்கள் மீதான வாசிப்பு இவ்வாறு தலைமுறை தலைமுறையாக கூட்டாக நிகழ்த்தப்பட்டு ஓர் சமூகச் செயல்பாடாகவே நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக கம்பராமாயணம் எப்படி வாசிக்கப்பட்டுள்ளது என்று பார்ப்பது உதவிகரமானது. கம்பராமாயணம் எழுதப்பட்ட காலம் சோழர்காலம் .போர்களின் காலம். ஆகவே அன்று யுத்தகாண்டம் அதிகமாக ரசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டிருக்கலாம். அந்த பாதிப்பை நாம் கலிங்கத்துப்பரணி முதலிய நூல்கலில் காணலாம்

ஆனால் பின்னர் பக்தி காலக்கட்டத்தில் அதன் காவியத்தன்மையின் சிக்கல் அன்றைய வாசகர்களுக்கு ஒரு தடையாக இருந்தது. கம்பராமாயணத்தை ‘தூய’ பக்தியிலக்கியமாக எப்படி வாசிப்பதென அவர்கள் முயன்றார்கள். ஆகவே யுத்தகாண்டம் தவிர்க்கப்பட்டு சுந்தரகாண்டம் அழுத்தம் தரப்பட்டு ஒரு வாசிப்பு உருவானது. கம்பன்னின் உவச்சர் குல [சைவ] பின்புலம் மழுங்கடிக்கப்பட்டு அவர் கம்பநாட்டாழ்வாராக அறியப்படலானார். இது பல்லாயிரம் கதாகாலட்சேபங்கள் வழியாக ஒரு பெரும் சமூகக் கூட்டியக்கமாக நிகழ்ந்தது.

பிற்பாடு தமிழ் மறுமலர்ச்சியின் காலகட்டத்தில் கம்பராமாயணத்தின் மொழியழகும் அணியழகுகளும் முக்கியப்படுத்தப்பட்ட ஒரு வாசிப்பு உருவானது. அந்த வாசிப்புக்கு முந்தைய பக்தி காலகட்டத்து வாசிப்பின் சிறந்த அம்சங்கள் உதவியாக அமைந்தன. அதற்கு வ.வெ.சு அய்யர், வ.உ.சிதம்பரம் பிள்ளை முதல் டி.கெ.சி வரையிலானவர்கள் பங்களிப்பாற்றினர்.

அதன்பின் திராவிட இயக்கம் கம்பராமாயணத்தை வட இந்திய தத்துவம், மூட நம்பிக்கை ஆகியவற்றை பரப்பும் ஓர் ஆபாச நூலாக சித்தரித்து ஒரு வாசிப்பை நிகழ்த்தியது. அதற்கு எதிர்வினையாக காரைக்குடி கம்பன் கழகம் நிறுவிய சா.கணேசன் ஒரு கம்பராமாயண வாசிப்பு இயக்கத்தை உருவாக்கினார். பல்லாயிரம் மேடைப்பேச்சுகள் பட்டிமன்றங்கள் மூலம் இவ்வியக்கம் கம்பராமாயணத்தில் உள்ள தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளுக்கு முக்கியத்துவம் தந்து ஒரு வாசிப்பை உருவாக்கியது. இந்த வாசிப்பு வரலாற்றில் குறைந்தது நூறு முக்கியமான திறனாய்வாளர் பெயர்களைப் பட்டியலிடலாம்.

இன்று ஒருவர் கம்பராமாயணத்திற்குள் நுழையும்போது இத்தனை வாசிப்புகளுக்கும் வாரிசாகவே நுழைகிறார். இத்தனை வருட வாசிப்பியக்கம் அவரது வாசிப்புக் கோணத்தை வடிவமைத்துள்ளது. அதன் இறுதிப் புள்ளியிலிருந்து அவர் முன்னகர்கிறார்.

ஜாஸ் ஒரு பிரதியின் புறுவயமான அர்த்தம் இப்படிப்பட்ட வாசக எதிர்வினையின் வரலாறு மூலம் உருவாகிவருவதே என்று வாதிடுகிறார். கம்பராமாயணம் என்று நாம் அறியும் பிரதி பக்தி+தமிழியக்கம்+திராவிட இயக்கம்+கம்பன் கழக வாசிப்பின் ஒட்டுமொத்தமே என்று அவர் கூறக்கூடும்.

ஏற்பு அழகியல் கோட்பாடு Reception aesthetic theory

ஒரு படைப்பின் அழகியல் என்பது அதன் அழகியல்சாத்தியக்கூறுகள் வாசக ஒட்டுமொத்தத்தால் சந்திக்கப்படும்போது உருவாவதே என்று வாதிடும் கோட்பாடு. இது ஹான்ஸ் ராபர்ட் ஜாஸ் ஆல் உருவாக்கப்பட்ட ஏற்புக் கோட்பாட்டின் ஒரு பகுதி. படைப்பு என்பது வாசிப்பு மூலம் உருவாவதே என்று இது கூறுகிறது. படைப்பின் இயல்புகளை வாசிப்பின் இயல்புகள் சந்திக்கும்போது உருவாகும் முரணியக்கத்தின் விளைவு இது. ஒரு படைப்பின் அழகியல் தனித்தன்மை என்று நாம் காண்பது ஒரு குறிபிட்ட காலஅளவில் குறிப்பிட்ட வாசகர் தொகை அடிப்படையில் அடையாளம் கண்டு விரித்தெடுத்த அழகியல் கூறுகளின் ஒட்டுமொத்தத்தையே

உதாரணமாக கம்பராமாயணத்தில் பக்தி காலகட்டத்தில் ‘அய்யா இவன் அழகென்பது போல ஓர் அழியா அழகுடையான்’ என்பது போன்ற பக்தி நெகிழ்வு சார்ந்த வரிகள் அடையாளம் காணப்பட்டன. தமிழியக்கக் காலகட்டத்தில் ‘வஞ்சமென நஞ்சமென் வஞ்சமகள் வந்தாள்’ போன்ற செய்யுழகுக் கூறுகள் அடையாளம் காணப்பட்டன. கம்பன் கழக வாசிப்புகளுக்குப் பிறகு ‘குகனொடும் ஐவரானோம்’ என்பது போன்ற மானுட அறம் சார்ந்த நுட்பங்கள் அடையாளம் காணப்பட்டன.

இவ்வாறு சென்ற ஏழெட்டு நூற்றாண்டுகளாக ஒட்டுமொத்த தமிழ்மனம் அதில் அடையாளம் கண்ட அழகியல் கூறுகளின் தொகையே கம்பராமாயணத்தின் அழகியல் தனித்தன்மை. இதையே ஏற்பு அழகியல் என்று ஜாஸ் கூறுகிறார். பண்பாட்டு ஆய்வாளர் ஸ்டுவர்ட் ஹால் இச்சிந்தனையை விரிவாக்குகிறார். ஒரு படைப்பின் வடிவம் என்பது வாசகனால் முடையப்படுவது. அதற்கான கச்சாப்பொருட்களையும் வாய்ப்புகளையும்தான் நூல்கள் வழங்குகின்றன. வாசகனின் பொருள்கோள்முறையை சூழல், அவனுடைய இயல்பு ஆகியவை தீர்மானிக்கின்றன.

வாசகன் ஒரு பிரதியை வாசிக்கையில் அதிலுள்ள செய்திகள் மற்றும் குறிப்புகளைக்கொண்டு அதை உருவாக்கிக்கொண்டே செல்கிறான். அதில் அவன் டையும் இடர்தான் இடைவெளி [gap] அவன் அதில் முட்டிக்கொள்கிறான். அதனூடாகச் செல்கிறான். கற்பனையால் அதை நிரப்புகிறான். அதன்வழியாக அவன் அதில் சொல்லப்பட்டவற்றைவிட பெரிய பிரதியை உருவாக்கிக்கொள்கிறான். எழுதுபவனும் வாசிப்பவனும் அடையாத ஒன்றை இருவரும் சேர்ந்து அடையக்கூடும். இவ்வாறு பிரதி என்பது இருமுனைகளிலுமிருந்து பின்னப்படுகிறது.


ஏற்பு வரலாறு கோட்பாடு Reception History Theory

வாசக ஏற்பின் அடிப்படையில் உருவாக்கப்படும் இலக்கிய வரலாறுதான் உண்மையான வரலாறு என்ற கோட்பாடு. இது ஹான்ஸ் ராபர்ட் ஜாஸ் உருவாக்கி ஏற்புக் கோட்பாட்டின் ஒரு வாதமாகும். சென்ற காலங்களில் இலக்கிய வரலாறு என்பது நூல்களின் காலவரிசை, பிற தகவல்கள், உள்ளடக்க அட்டவணை, உள்ளடக்கத்திற்கும் பிற வரலாற்றுத் தகவல்களுக்கும் உள்ள தொடர்பு என்ற வகையிலேயே உருவாகியிருந்தது. ஜாஸ் இது சரியான வரலாறல்ல என்கிறார். ஏனெனில் இது இன்று எந்தப் படைப்புகள் ஏற்கப்படுகின்றனவோ அவற்றின் அடிப்படையில் இன்றைய ஏற்புமுறையின் அடிப்படையில் நேற்றை மதிப்பிடுவது ஆகும்.

உதாரணமாகத்  தமிழியக்கம் உருவான பிறகு திருக்குறளுக்குத் தமிழிலக்கிய மரபில் முதலிடம் உள்ளது. இம்முதலிடம் என்றுமே அதற்கு இருந்தது என்ற பாவனையில் நாம் வரலாற்றாய்வை செய்து வருகிறோம். உ.வே.சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’ என்ற சுய வரலாற்று நூலில் உள்ள சித்திரம் அதுவல்ல. அவரது இளமைக்காலத்தில் சிற்றிலக்கிய நூல்கள், புராணங்கள்ஆகியவையே முதன்மை முக்கியத்துவம் பெற்றிருந்தன. குறள் கவனத்திற்குரிய நூலாக இருக்கவில்லை. அவரது ஆசிரியரான மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை சங்க இலக்கியங்களை கேள்விப்பட்டிருக்கவே இல்லை.

வாசிப்பே பிரதிகளை உருவாக்குகிறது என்று யோசித்தால் இலக்கிய வரலாறு என்பது வாசிப்பின் வரலாறாகவே இருக்க வேண்டும் என்கிறார் ஜாஸ். சென்ற காலங்கள் இலக்கியப் பிரதிகள் எப்படி கூட்டாக வாசிக்கப்பட்டு மதிப்பிடப்பட்டன என்பதே உகந்த இலக்கிய வரலாற்றுச் சித்திரத்தை அளிக்கும். குறள் என்ன சொல்லுகிறது என்பதைவிட எப்படி வாசிக்கப்பட்டு வருகிறது என்பதே முக்கியமானது. அது சமண மதம் சார்ந்த நீதிநூலாக வாசிக்கப்பட்டுள்ளது. சமணம் அழிந்த பிறகு அதில் உள்ள சமரசத்தன்மை மற்றும் சாரம்சத் தன்மைக் காரணமாக பொது நீதி நூலாக வாசிக்கப்பட்டது. பின்னர் ஜனநாயக யுகத்தில் மதச்சார்பற்ற தமிழ் நீதி நூலாக நவீன காலகட்டத்தில் மறுவாசிப்பு தரப்பட்டு முன்னிலைப்படுத்தப்பட்டது. அதாவது குறள் வாசகர்களால் தொடர்ந்து மாற்றி உருவாக்கப்பட்டபடியே உள்ளது. உண்மையில் இதுவே குறளின் வரலாறாகும்.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா பதிவுகள்
அடுத்த கட்டுரைஒருமையும், உறுதியும்