வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–50

பகுதி ஏழு : அலைகளில் திரள்வது – 8

bl-e1513402911361எவரோ ஒருவர் கைசரித்தபோது கங்கணம் சரிந்த ஓசைகூட கேட்குமளவுக்கு அவையில் அமைதி நிலவியது. துரியோதனன் இரு கைகளையும் மேலே தூக்கி அசைவில்லாது நின்றான். அசைவின்மையே அவன் இயல்பு என்றும் அசைவுகள் நிகழ்ந்து மறைவன என்றும் தோன்றியது. பின்னர் “அவையோரே, நான் என் சொல்லைக் காக்க ஒப்புகிறேன். ஆம், அச்சொல்லை நான் வேதம்நிறுவிய அவையில் வேதநீர் விழுந்த முடிசூடி அமர்ந்துதான் ஏற்றுரைத்தேன்” என்றான்.

“வேதத்தை மறுத்து ஒரு நிலையும் நான் எடுக்கப்போவதில்லை. இது வேதமே தன்னை காக்கும்பொருட்டு உருவாக்கிய ஷத்ரியர்களின் பேரவை. அந்தணர்களே, வேதத்திற்கு அந்தணர் மட்டும் பொறுப்பானவர்கள் அல்ல. அதை சொல்லென நிறுத்தவேண்டியவர் நீங்கள். அறமென நிறுத்தவேண்டியவர்கள் நாங்கள். வாழ்வென நிறுத்தவேண்டியவர் பிற இருநிலையினரும் என்றுணர்க!” என்று துரியோதனன் தொடர்ந்தான்.

“பதின்மூன்று ஆண்டுகாலம் அவர்களுக்கு நிலத்தையும் கருவூலத்தையும் திருப்பியளிக்கவேண்டும் என்றே எண்ணியிருந்தேன். ஆகவேதான் அந்நிலத்திற்கும் செல்வத்திற்கும் அவர்களின் குடிக்கும் மைந்தருக்கும் காவலன் என்று மட்டுமே என்னை நிறுத்தியிருந்தேன். ஐயமிருப்பின் இளைய யாதவர் கூறுக, பாண்டவர்களின் மைந்தர் பிறிதொன்றை உணர்ந்தார்களா என்று” என்றான்.

இளைய யாதவர் “இல்லை, அவர்கள் தங்கள் பெரியதந்தை என்றே தங்களை உணர்ந்தனர், அரசே. அதை நாடறியும்” என்றார். “நன்று… அவ்வண்ணமென்றால் பிறகெப்போது நான் அவ்வெண்ணத்திலிருந்து ஒழிந்தேன்? இந்த அவையில் அதை முன்வைத்து என் குலத்து மகளிரையும் எந்தையையும் சிறுமைசெய்ய நான் விழையவில்லை. ஆனால் அதற்குரிய இக்கட்டுநிலையை இளைய யாதவர் உருவாக்கிவிட்டார். இனி நிகழ்வனவற்றுக்கு அவரே பொறுப்பென்று உணர்க!” என்றான் துரியோதனன்.

அசலை “என்ன சொல்கிறார்?” என்றாள். பானுமதி அவள் சொல்வதை செவிகொள்ளவில்லை. பித்தெழுந்த விழிகளுடன் துரியோதனனையே நோக்கிக்கொண்டிருந்தாள். அசலை பெருமூச்சுவிட்டு தாரையை நோக்க அவள் தன் ஆடையைச் சுழற்றியபடி முகம்சுளித்து அவையை நோக்கிக்கொண்டிருப்பதை கண்டாள். “என்னடி சொல்கிறார்?” என்றாள். தாரை “குந்தியன்னையை சிறுமைசெய்யப்போகிறார்” என்றாள். “அவரா, அவரிடம் என்றுமே அச்சிறுமை கிடையாது” என்றாள் அசலை. “இல்லை, இன்று வேழத்தின் மருப்பில் குரங்கு அமர்ந்திருக்கிறது” என்றாள் தாரை.

துரியோதனன் “அந்தணரே சொல்க, அரசை நான்காம் நிறத்தோருக்கு அளிக்க வேதம் வகுத்துள்ளதா?” என்று கேட்டான். “இல்லை, அவரவருக்குரிய தொழிலே அவர்களின் அறமும் மெய்மைக்கான வழியுமாகும் என்பதே வேதம் வகுத்தது” என்றார் தவள கௌசிகர். துரியோதனன் “அந்தணரே, ஷத்ரியர் எவர்? சொல்க!” என்றான். “ஷத்ரிய நிலை மூவகையில் அமைகிறது. ஷத்ரியக்குருதியில் பிறந்தோர் இயல்பாகவே ஷத்ரியர். ஷத்ரிய நிலை என்பது தந்தைவழியில் அமைவது. தந்தையால் மைந்தருக்கு உகந்து அளிக்கப்படுவது. எக்குடியில் பிறந்தவர் என்றாலும் தந்தையென்று ஷத்ரியர் ஒருவர் அமர்ந்து வேதச்சடங்குகளை முறைப்படி இயற்றினால் அவர் ஷத்ரியரே. அது பிதுரார்ஜிதம் எனப்படுகிறது” என்றார் தவள கௌசிகர்.

“தன் வாள்வல்லமையால் நிலம்வென்று குலம்தொகுத்து வேதநெறியேற்று வேள்விக்காவலர் என அமைந்து ஷத்ரிய நிலையை எவரும் அடையலாம். அது சுயார்ஜிதம் எனப்படுகிறது. கார்த்தவீரியனை அவ்வண்ணமே ஷத்ரியர் என ஏற்றன நூல்கள்” என்று தவள கௌசிகர் தொடர்ந்தார். “வேதமுணர்ந்து மெய்மையறிந்து அமைந்த முனிவரால் நீரூற்றி நிறுவப்பட்டால் எவரும் ஷத்ரியர் என்றாகலாம். அது திவ்யதத்தம் எனப்படுகிறது. முதல் வகையினர் இயல்பிலேயே ஷத்ரியர். பிறர் ஹிரண்யகர்ப்பச் சடங்குகளை இயற்றி மீள்பிறப்பெடுத்து பூணூல் அணிந்து ஷத்ரியர்கள் என்றாகவேண்டும்.”

துரியோதனன் “ஆம், தெளிவுற உரைத்தீர்கள், உத்தமரே” என்றான். “பாண்டவர்கள் நகர்மீண்டு எனக்கு நிலம்கோரி தூதனுப்பியபோது நூலறிந்தோரிடம் உசாவினேன். ஷத்ரியர் அல்லாதோருக்கு மண்ணாளும் உரிமை இல்லை என்று உரைத்தனர். ஏனென்றால் ஷத்ரியர்களுக்கு வேதம் ஆணையிடும் கடமைகள் எவையும் அவர்களுக்கில்லை. அஸ்தினபுரியின் நிலம் ஷத்ரியனாகிய என்னால் வேதநெறிப்படி ஆளப்பட்டது. ஆகவே அதன் வயல்களிலும் பசுக்களிலும் அமுது விளைந்தது. கருவூலம் பொன்பொலிந்தது. அதை நெறியமையாதவர் ஆள விட்டுக்கொடுத்து அழிவை அளிப்பதற்கு எனக்கு உரிமை உண்டா? அந்தணரும் அவையோரும் கூறுக, என் சொல்லின் பொருட்டு வேதச்சொல் மறுக்கப்படவேண்டுமா?”

அவையோரை நோக்கி சில கணங்கள் விரித்த கைகளுடன் நின்றபின் துரியோதனன் தொடர்ந்தான் “ஆகவேதான் நான் என் சொல்லை ஒழிந்தேன். நான் சொல்வது இதுவே, பாண்டவர்கள் ஷத்ரியர்கள் அல்ல, அவர்கள் சூத்திரர்கள் மட்டுமே.” விதுரர் கைகள் பதற அமர்ந்திருந்தார். அச்சொல் எழுந்ததும் திடுக்கிட்டு அறியாமல் எழுந்துவிட்டார். அதை கண்ணுறாதவன் என துரியோதனன் தொடர்ந்தான். “அவர்கள் எவ்வாறு ஷத்ரியர் ஆக முடியும்? அவர்களின் அன்னை நான்காம் குலத்தவர். அவர்கள் பெயர்சூடியிருக்கும் என் தந்தையின் இளையோனாகிய பாண்டுவுக்கு அவர்கள் பிறக்கவில்லை. எவ்வகையில் அவர்கள் ஷத்ரியர்களாக முடியும்?”

எவரோ ஏதோ சொல்வதுபோல் அசைய அத்திசை நோக்கி திரும்பி உரத்த குரலில் துரியோதனன் சொன்னான். “ஆம், நியோக முறைப்படி ஐந்து மைந்தரும் பெறப்பட்டார்கள் என நமக்கு சொல்லப்பட்டது. ஐவருக்கும் அவ்வண்ணமே சதசிருங்கத்தில் வைதிகச் சடங்குகள் செய்யப்பட்டு அவர்கள் ஷத்ரியர் என அறிவிக்கப்பட்டனர். ஆனால் அதை நியோகம் என்பவர் யார்? எந்த அடிப்படையில்? யாதவகுலத்து முதியோள் அதை சொன்னால் போதுமா?”

விதுரர் எழுந்து கைகளை நீட்டினார். உடல் பதறியமையால் கை ஆடியது. அவர் குரல் மேலெழவில்லை. “சொல்க அமைச்சரே, அது எவ்வகையில் நியோகம்?” என்றான் துரியோதனன். அவர் மேலும் மூச்சுவாங்கி குரல் இடறி கனைத்து தன்னைத் திரட்டியபடி “அதை நியோகம் என ஏற்கவேண்டியவர் யாதவ அரசியின் கணவராகிய பாண்டு மட்டுமே. அவர் ஏற்றால் அதுவே வேதமுறைப்படி ஏற்புடையதாகிவிடும்” என்றார். துரியோதனன் “அவர் ஏற்றார் என்பதற்கான சான்றுகள் எவை?” என்றான்.

விதுரர் “இது என்ன வினா? இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இதை அவையெழுப்ப நாம் ஒப்பலாமா?” என்றார். “நான் கேட்பது இதுவே, அதை என் இளைய தந்தை ஏற்றார் என்பதற்கு சான்று என்ன?” விதுரர் “எவருமறிந்ததே. கானகத்தில் அவர்களுக்கு நிகழ்ந்த பிறவிச்சடங்குகள் அகவைச்சடங்குகள் அனைத்திலும் அஸ்தினபுரியின் மன்னர் பாண்டு அமர்ந்திருக்கிறார். கையில் புல்லாழி அணிந்து வேதமோதி அவியிட்டு அனலோம்பியிருக்கிறார். நீரூற்றி மைந்தரை வாழ்த்தியிருக்கிறார். வேறென்ன சான்று வேண்டும்?” என்றார்.

குரல் நடுங்க, கைகள் பொருத்தமின்றி பதறி காற்றில் உலைய “வேண்டுமென்றால் அன்று அவ்வேள்விக்கு அமர்ந்த அந்தணரை இந்த அவைக்கு கொண்டுவருவோம். அவர்களில் சிலர் இறந்திருக்கலாம். அந்நிலையில் அவர்களின் குருமரபில் ஒருவரின் சான்றே போதுமானது. அந்தணரின் உண்மையை ஆராய ஷத்ரியருக்கோ பிறருக்கோ உரிமை இல்லை, அதை அந்தணர் முடிவெடுக்கட்டும்” என்றார் விதுரர். தவள கௌசிகர் “அந்தணர் அமர்ந்து வேள்வி செய்தார் எனும் செய்தியே போதுமானது, அமைச்சரே. அந்தணர்நெறியை ஐயப்படலாகாது” என்றார்.

அசலை “ஆம், அதற்கப்பால் என்ன சான்று தேவை?” என்றாள். “அரசர் உளறுகிறார். அவருக்கு நெறி புரியவில்லை.” தாரை “அல்ல அரசி, அவருக்குள் எழுந்த தெய்வம் மானுடரின் கீழ்மைகள் அனைத்தையும் அடிச்சேறுவரை சென்று அறிந்தது” என்றாள். துரியோதனன் “ஆம், அது சான்றே. ஆனால் அச்சடங்குகள் செய்யப்பட்டபோது பாண்டு எவராக இருந்தார்? அவர் அஸ்தினபுரியின் அரசரா? முடிதுறந்து சென்றாரா?” என்றான். விதுரர் திகைத்தார். துரியோதனன் செல்லுமிடம் அவருக்கு புரிந்தது. “அஸ்தினபுரியின் முடிதுறந்து அவர் சென்றார் என்றால் அவர் காட்டில் இயற்றிய அச்சடங்குகளே போதுமானவை. ஆனால் அந்நிலையில் அவருடைய மைந்தருக்கு மண்ணுரிமை உண்டு என்னும் பேச்சே எழவில்லை. அரசு எந்தையிடமிருந்தது, இயல்பாக என்னிடம் அது வந்தாகவேண்டும்” என்றான் துரியோதனன். “அன்றி அஸ்தினபுரியின் அரசர் அவர் என்றால் அவர்கள் நியோக மைந்தர் என்பதை அவர் அஸ்தினபுரியின் குடியவையில் அறிவித்தாகவேண்டும். குடிமூத்தோர் ஒப்புதல் பெற்ற பின்னரே அவர்களை தன் மைந்தர் என்று ஏற்கமுடியும்.”

விதுரர் திகைத்து நின்றார். “நான் ஐயுறுகிறேன், இந்த அவையில் நான் என் ஐயத்தை அறிவிக்கிறேன். அவர்களின் பிறப்பு முறையற்றது. அரசர்களே, அந்தணப்பிறப்பும் அரசப்பிறப்பும் அனைவரும் அறியவேண்டியவை. அந்தணர் எனத் தன்னை அறிவிப்பவர் பன்னிரு தலைமுறைக்கால குருதிமரபை முன்வைத்தாகவேண்டும். அரசர் என்று அறிவிப்பவர் ஏழு தலைமுறைக்கால குருதிமரபை அறிக்கையிட்டாகவேண்டும். அந்தணர் பிறப்பை அவர் அமரும் வேள்வியை நிகழ்த்துவோர், அவ்வேள்வியால் பயன்பெறுவோர் அறியும் உரிமை கொண்டவர். அரசப்பிறப்பை அவர்கள் ஆளும் நிலத்தமைந்த குடிகள் அனைவரும் அறியும் உரிமைகொண்டிருக்கிறார்கள்.”

“ஏனென்றால் குலத்தளவே ஆகும் குணம் என்கின்றன நூல்கள். அறியாப் பிறப்பு ஏற்கப்படும் என்றால் அரக்கரோ அசுரரோ பெற்ற மைந்தர் வந்து அரியணையமரக்கூடும். மூதாதையரையும் குலதெய்வங்களையும் வேள்வியால் பெருகும் தேவர்களையும் அந்நிலத்திலிருந்து அகற்றிவிடமுடியும். வறுதியும் நோயும் கொண்டு அந்நாட்டினரை முற்றழிக்க வகைசெய்ய முடியும். ஆகவேதான் அந்தக் காப்பு அமைக்கப்பட்டது” என்று துரியோதனன் சொன்னான்.

“யாதவ முதுமகள் சதசிருங்கத்தில் வாழ்ந்தநாளில் கருவுற்று பெறப்பட்ட இந்த ஐவரின் பிறப்பும் எவ்வண்ணம் நிகழ்ந்தன என்றுதான் குலப்பேரவையில் மூத்தோர் கேட்டிருப்பார்கள். அதற்கு மறுமொழி உரைத்து அவர்களை நிறைவுறச் செய்த பின்னரே நியோகத்தை அவர்கள் ஏற்கும்படி செய்ய முடியும்” என்று துரியோதனன் தொடர்ந்தான். “இன்றும் அவர்களுக்கு செல்வழி உள்ளது. யாதவ அன்னை அஸ்தினபுரியின் குடியவைக்கு முன் வந்து நிற்கட்டும். தன் கருவிலெழுந்த குருதி எவருடையதென்று சொல்லி நீர்தொட்டு அனல்நிறுத்தி ஆணையிடட்டும். அதை அவையோர் ஏற்கட்டும். அந்தணர் அந்த அவையில் எழுந்து இளைய தந்தை பாண்டு நிகழ்த்திய கருவேற்பு வேத ஒப்புதல் கொண்டதே என அறிவிக்கட்டும். அவ்விரண்டும் நிகழ்ந்தால் அவர்களை ஷத்ரியர் என்றும் இக்குடியில் பிறந்தவர்கள் என்றும் நான் ஏற்கிறேன். என் சொல் காக்கிறேன்.”

துரியோதனன் குரல் சீராக ஒலித்தாலும் பெருஞ்சினம் கொண்டவன்போல் அவன் சிவந்திருந்தான். “இன்னொரு வழியையும் நானே அளிக்கிறேன். அவர் கருவுக்கு குருதியளித்தவர் ஷத்ரியராக இருந்தால், அவர் அம்மைந்தரை ஷத்ரியர் என இந்த அவையில் எழுந்து அறிவித்தாரென்றால் அவர்கள் ஷத்ரியர் என ஏற்கிறேன். ஷத்ரியர்களுக்கு நிலமளிக்க ஒப்புகிறேன்.” சகுனி எழுந்து “அவ்வாறு அவ்வரசர் ஒப்பவில்லை என்றாலும்கூட அந்தணருக்கோ ஷத்ரியர்களுக்கோ பிறந்தவர்கள் அவர்கள் என யாதவ அன்னை அவைநின்று சொல்வார்கள் என்றால் அவர்களை சூதர் என ஏற்கமுடியும்” என்றார்.

விதுரர் கால்தளர்ந்து அமர்ந்தார். மீண்டும் பதறியவர்போல் எழுந்து பக்கவாட்டில் சரிந்து நிலத்தில் விழுந்தார். சிற்றமைச்சர்கள் பிரதீபரும் சம்விரதரும் அவரை தூக்கிக்கொண்டனர். கனகர் ஓடிவந்து “இவ்வழி இவ்வழி” என்றார். அவரை அவர்கள் அவையிலிருந்து வெளியே கொண்டுசெல்வதை ஷத்ரிய அரசர்கள் விழியிமைக்காமல் நோக்கி அமர்ந்திருந்தனர். எதுவும் நிகழாததுபோல துரியோதனன் தொடர்ந்தான். “ஆகவே அந்தணர்கள் வேதம் தொட்ட சொல் இங்கு மீறப்பட்டதென்று துயருற வேண்டியதில்லை. வேதச்சொல் காக்கப்படவே என் முடிவு எடுக்கப்பட்டது.”

தவள கௌசிகர் “ஆம், இதற்கப்பால் நான் சொல்வதற்கொன்றுமில்லை. அவையினர் முடிவெடுக்கட்டும்” என்று சொல்லி கைகூப்பி அமர்ந்தார். துரியோதனன்   “கூறுக இளைய யாதவரே, நீங்கள் சென்று யாதவ அன்னையிடம் நான் உரைத்ததை சொல்ல முடியுமா? அவர் வந்து அஸ்தினபுரியின் அவையில் நின்றால் அனைத்தும் முடிவுற்றுவிடும்” என்றான். இளைய யாதவர் எழுந்து நின்றபோது முதல்முறையாக அவர் முகத்தில் கசப்பையும் துயரையும் அசலை கண்டாள். “இல்லை, அவர் எந்த அவைக்கும் வரமாட்டார். அச்சொல் ஒழிக!” என்றார். கைகூப்பிய பின்பு அமர்ந்தார்.

“நன்று, அவ்வண்ணமென்றால் இங்கே இச்சொல்லுசாவல் நிறைவுகொண்டது” என்று துரியோதனன் கைகூப்பி தன் பீடத்தில் அமர்ந்தான். அவையில் அமைதி நிலவியது. இளைய யாதவர் தன் கைகளை மடித்து அதன்மேல் தலைவைத்து கண்மூடி அமர்ந்திருந்தார். எவரோ இருமும் ஒலி கேட்டது. தவள கௌசிகர் தன் மாணவர்களிடம் மெல்லிய குரலில் பேசும் ஓசை அவையெங்கும் சென்றது. அனுபநாட்டு அரசன் கர்மஜித் எழுந்து “அஸ்தினபுரியின் அரசே, நான் வினவுவது ஒன்றே. உங்கள் கணிப்பின்படி அங்கநாட்டரசர் எவ்வண்ணம் ஷத்ரியர் ஆகிறார்? அன்றி அவரை சூதரென்றே எண்ணுகிறீர்களா?” என்றார்.

துரியோதனன் புன்னகைத்து “அவர் ஷத்ரியர், சுயார்ஜித நெறியின்படி” என்றான். “தன் நிலத்தை வென்று வில்வல்லமையால் நிலைநிறுத்தியவர் அவர். பாரதவர்ஷத்தின் பாதி நாடுகளை என்பொருட்டு படைகொண்டு சென்று வென்றிருக்கிறார். இதோ, என் அவையிலிருக்கும் அரசர்களில் பெரும்பாலானவர்கள் அவர் நடத்திய படைக்கு முன் பணிந்து எனக்கு கப்பம் கட்டியவர்களே. பதினெட்டு நாடுகளில் வேள்விப்புரவி செலுத்திச் சென்றும் ஈட்டிய செல்வத்தை அள்ளி அள்ளி ஈந்தும் வேள்விக்காவலனாக அமர்ந்தும் தன்னை ஷத்ரியர் என நிறுவியவர். அதை வேதம் ஏற்று ஓதியது. அவரை மறுப்பவர்கள் எழலாம், அவர் ஷத்ரியவீரம் என்றால் என்னவென்று அவர்களுக்கு காட்டுவார்.”

“அவையோரே, இதோ இளைய யாதவர் அவைநின்றிருக்கிறார். இவரும் யாதவக்குடியில் பிறந்தவரே. ஆனால் வாள்வல்லமையால் நிலம் வென்றார். அங்கு நிகரற்ற நகர் ஒன்றை நிறுவி அரசமைத்தார். தன் குடிகளை அங்கே திரட்டி கோல்கொண்டு அமைந்தார். அஸ்தினபுரி அவரை அரசர் என்றே ஏற்றது. அவர் ஷத்ரியப் பெண்டிரை கவர்ந்து மணம் கொண்டபோதுகூட எங்கள் அரசு அவருக்கு துணையிருந்தது. இன்று அவர் அரசுதுறந்து வந்திருக்கிறார். ஆயினும் முதன்மை ஷத்ரியர்களுக்குரிய அவைமுறைமையை அஸ்தினபுரி அவருக்கு அளித்தது. இந்நகரியின் பட்டத்தரசியே சென்று அவரை எதிரேற்று அரண்மனையமர்த்தினார். அதை நீங்களனைவரும் அறிவீர்கள்.”

“அவ்வண்ணமே பாண்டவர்களும் சென்று தங்களுக்குரிய நிலத்தை வென்று வாள்வல்லமையால் நிறுவி முடிசூடி அமரட்டும். வேள்வியமைத்து காவலமர்ந்து வேதச்சொல் பெறட்டும். அதன்பின் அவர்கள் வந்தால் அவர்களை நான் ஷத்ரியர் என ஏற்கிறேன். அதன்பின் அவர்களுக்கு நான் சொல்லளிப்பேன் என்றால் அது வேதமுறைமைப்படி என்னை முற்றிலும் கட்டுப்படுத்தும். அதுவரை நிலம்விழையும் முறையிலாச் சூதர்கள் அவர்கள். அதை அஸ்தினபுரியின் நெறிகள் ஏற்காதென்றே அறைகிறேன்.” இரு கைகளையும் விரித்து “இனிமேலும் ஐயங்களிருந்தால் அவையிலெழுக அவை” என்றான்.

இளைய யாதவர் எழுந்து கைகூப்பி “அஸ்தினபுரியின் அரசே, நான் இறுதியாக ஒன்று மட்டும் கோரவிழைகிறேன். அவர்கள் ஷத்ரியர்கள் அல்லவென்றே இப்போது கொள்வோம். இந்நகரில் பிறந்தவர்கள், உங்கள் அரண்மனையில் உடன்பிறந்தாரென வளர்ந்தவர்கள். உங்கள் இளைய தந்தையின் பெயர் சூடியவர்கள். தங்கள் நிலத்தில் சிறிதை அவர்கள் பெறுவதற்கு அத்தகுதியே போதுமென எண்ணுகிறேன்” என்றார். அவர் குரல் இறைஞ்சும் முகமாக இறங்கியது. “அரசே, அரியணையமர்ந்து முடிசூடி அமர்ந்த உங்களிடம் இரு கையேந்தி இரக்கிறேன். அவர்கள் வாழ ஐந்து ஊர்களை அளியுங்கள். உரிமையென்றல்ல, அளிக்கொடையென அருளுங்கள். வெறுங்கையுடன் என்னை மீண்டுசெல்ல விடாதீர்கள்.”

“ஆம், கொடையளிக்க எனக்கு உரிமை உண்டு” என்று துரியோதனன் சொன்னான். “ஆனால் ஊர்த்தலைவராகும் தகுதி அவர்களுக்கு உண்டா? அவர்கள் எக்குடியினர்? எந்தக் குடி அவர்களை தங்கள் ஊருக்கு முதலோர் என ஏற்றுக்கொள்ளும்? சென்று அவர்களிடமோ அன்னையிடமோ உசாவி வருக, அவர்களின் குடி என்ன என்று. அதுவரை நீங்கள் கோரிய அக்கொடையையும் நான் அளிக்கவியலாது.” இளைய யாதவர் “இப்படி சொல்லெடுத்தால் இதற்கு முடிவேயில்லை. தாங்களறிவீர்கள், அவர்கள் இனி மண்ணுழுதோ ஆபுரந்தோ வாழமுடியாது. பிறரிடம் ஏவல்செய்வதோ காவல்நிற்பதோ உங்கள் குடிக்கும் இழுக்கு” என்றபோது அவர் குரல் மேலும் இறங்கியது.

“ஐந்து ஊர்கள் அவர்களை இத்தலைமுறையில் இடரின்றி வாழச்செய்யும். அவர்களின் மைந்தர்களிடமிருந்து குலம்பெருகட்டும். தெய்வங்கள் விழையும் என்றால் அவர்களிடமிருந்து புதியன எழுந்து வரட்டும். இக்கொடையை நீங்கள் அளிப்பீர்கள் என்றால் பெரும்போர் தவிர்க்கப்படுகிறது. மண்ணிலோ பொருளிலோ நீங்கள் இழப்பதும் ஏதுமில்லை” என்றார் இளைய யாதவர். சகுனி அமர்ந்தவாறே “பரிபேணலும் அடுமனைப்பணியும் அரண்மனைஏவலும் அவர்களால் முன்னரே பழகிக்கொள்ளப்பட்டுள்ளன, யாதவரே” என்றார். இளைய யாதவர் அவரை வெறுமனே திரும்பி நோக்கிவிட்டு “இந்தச் சிறு கொடையையும் மறுத்தால் நீங்கள் இழிவடைவீர்கள், அரசே” என்றார்.

“அல்ல, அதை அளித்தால்தான் நான் இழிவடைவேன்” என்றான் துரியோதனன். “ஐந்து ஊர்களை அளிக்க நெறியிருந்தால் அரைநாட்டை அளிக்கமட்டும் நெறியிராதோ என்ற வினாவே இக்கதை கூறப்படும் ஒவ்வொரு அவையிலும் எழும். அரையடி நிலம்கூட இல்லை என்று மறுக்கப்பட்டால் ஏன் மறுக்கப்பட்டது என்பது நாளடைவில் நாவிலிருந்து மறையும். மறுக்கப்பட்டமைக்கான புதிய அடிப்படைகளை சூதரும் செவிகொள்வோரும் உருவாக்கிக் கொள்வார்கள். காலம் செல்லச் செல்ல அதுவே வளரும்.” அவையில் மெல்லிய சிரிப்பொலி எழுந்தது. இளைய யாதவர் துயர்கொண்ட முகத்துடன், செயலற்ற கைகளுடன் அவையில் நின்றிருந்தார்.

துரியோதனன் அவரை நோக்கி புன்னகையுடன் மீசையை நீவி “ஒரு காலத்தில் பிடிமண்கூட அளிக்கப்படாமல் உறவாலும் அரசர்குடியாலும் துரத்தப்பட்டார்கள் என்பது அவர்கள்மீதான பழியாகவே நீடிக்கும். எப்போதும் அதுவே நிகழ்கிறது, ஐயமிருந்தால் பராசரரின் புராணமாலிகையை நவில்க!” என்றான். “இறுதியாக என்ன சொல்கிறீர்கள், அரசே? உங்கள் அளியைக் கோரி இந்த அவைமுன் நிற்கிறேன்” என்றார் இளைய யாதவர். “யாதவரே, நீங்களும் இன்று நாடற்றவர்தான். நீங்கள் கோருங்கள், உங்களுக்கு ஐந்து ஊர்களை அல்ல ஐந்து துணைநாடுகளையே அவைக்கொடையாக அளிக்கிறேன். அவர்கள் குடியற்றவர்கள், வீண்விழைவு கொண்டவர்கள். ஆகவே பழிசூடியவர்கள். அவர்களுக்கு எதுவும் அளிக்கவியலாது” என்று துரியோதனன் சொன்னான்.

“அவ்வண்ணமென்றால் நான் அவைநீங்குகிறேன். இரப்பதற்கென்று அவைமுன் நீட்டிய என் கை வெறுமையுடன் பின்வாங்குகிறது” என்றார் இளைய யாதவர். “யாதவரே, அக்கைகளில் இந்த மணிமுடியையே நான் வைப்பேன், அது உங்களுக்கு உதவும் என்றால்” என்றான் துரியோதனன். இளைய யாதவர் புன்னகைத்து “எனக்கு உகந்தது நிலமும் பொருளும் அல்ல, அரசே. அறமும் அளியும்தான். அவை இங்கு எழுமென்று எண்ணினேன். அவ்வெண்ணம் அவ்வண்ணமே எஞ்ச விடைகொள்கிறேன். அவையமர்ந்த பிதாமகரும் அறமறிந்த ஆசிரியர்களும் நெறிநிற்கும் அரசர்களும் என் வணக்கத்தை கொள்க! இந்த அவை மானுடருக்கு நலம் நிகழ்த்துக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று சொல்லி தலைக்குமேல் கைகூப்பி சுழன்று வணங்கியபின் வெளியே நடந்தார்.

அவர் செல்வதை அவையினர் மெல்லிய கலைவோசையுடன் நோக்கி அமர்ந்திருந்தனர். துரியோதனன் கைகாட்ட கனகர் நிமித்திகனிடம் சென்று ஆணையிட்டார். நிமித்திகன் தன் வெள்ளிக்கோலுடன் அவைமேடைமேல் ஏறி “ஷத்ரியப் பெருங்குடியினரே, அஸ்தினபுரியின் இந்தப் பேரவையில் அடுத்த நிகழ்வுகள் தொடரும். அஸ்தினபுரியின் அரசர் துரியோதனரை படைமுதல்வரெனக் கொண்டு இங்கே வகுக்கப்பட்ட படைக்கூட்டை பாரதவர்ஷத்திற்கு அறிவிக்கும் சொற்கள் இங்கே யாக்கப்படட்டும். அதை நடைமுறைப்படுத்தும் நெறிகள் ஏற்கப்படட்டும்” என்றான்.

அசலை பெருமூச்சுடன் எழுந்தாள். “செல்கிறீர்களா, அரசி?” என்றாள் தாரை. “ஆம், இங்கு அமர்ந்திருந்தமையாலேயே இழிவுகொண்டோம். இப்போது நடந்தது இன்னொரு துகிலுரிதல். மீண்டுமொரு குருதிப்பெரும்பழி” என்றாள் அசலை. திரும்பி பானுமதியிடம் “கிளம்புக, அக்கையே! இந்தக் கீழ்மையை நாம் நம் விழிநீரால் ஆற்றுவோம்” என்றாள். பானுமதி “நீ செல்க. நான் இங்கிருப்பேன்” என்றாள். “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள் அசலை. “நான் அவருக்குரியவள். அவருடன் இறுதிவரை இருந்தாக வேண்டியவள்” என்றாள் பானுமதி.

அசலை திகைப்புடன் “எண்ணித்தான் சொல்கிறீர்களா?” என்றாள். “ஆம், இப்பிறவியில் என் கடன் அதுவே” என்றாள் பானுமதி. “அக்கையே, இன்று இந்த அவையிலேயே அவர் மூதன்னையர் நூற்றெண்மரின் தீச்சொல்லை பெற்றுவிட்டார். இனி இன்னும் பிறக்காத நூறு தலைமுறை மைந்தரின் குருதிப்பழி கொள்வார். வேண்டாம், உங்கள் உளமயக்கு வெறும் அறியாமை” என்றாள் அசலை. “ஆம், அறியாமை என்றே இருக்கலாம். எனக்கு நூல்கள் நெஞ்சில் நிற்கவில்லை. அரசுசூழ்தல் மெய்ப்படவுமில்லை. முடிசூடியமர்ந்த எளிய பெண் நான்” என்றாள் பானுமதி. “ஆனால் என் மூதன்னையர் என்னை புரிந்துகொள்வார்கள்.”

அசலை உளமுடைந்த குரலில் “வேண்டாம், அக்கையே. நம் குடிக்கே பெரும்பழி சேர்க்கிறீர்கள். பெற்ற மைந்தரின்மேல் இருள் கவிக்கிறீர்கள்” என்றாள். அவளை ஏறிட்டு நோக்கிய பானுமதியின் கண்கள் தெளிந்திருந்தன . கைசுட்டி “நோக்குக, இந்த அவையிலுள்ள அத்தனை விழிகளும் அவர் உடல் கொண்ட ஒளியைக் கண்டு மயங்கி நின்றுள்ளன. அவரிலெழுந்த பேராண்மையைக் கண்டு பணிகின்றன. தெய்வங்களுக்குரிய உறுதியைக் கண்டு அஞ்சுகின்றன. ஆனால் அத்தனை உள்ளங்களிலும் ஆழத்தில் ஊறிக்கொண்டிருப்பது வெறுப்பே. அவையமர்ந்த ஷத்ரியர்களில், அள்ளி மடியிலிட்டு வளர்த்த பிதாமகரில், கற்பித்த ஆசிரியர்களில், சூழ நின்றிருக்கும் ஏவலரில் வெறுப்பே விளங்கக் காண்கிறேன்” என்றாள்.

“பிறந்த நாள்முதல் உடனிருந்த இளையோர்கூட அவரை உள்ளூர விலக்கிவிட்டனர். ஐயமிருந்தால் நோக்குக, அதோ துச்சாதனரின் உடலை. ஏன் அது வலிகொண்டதுபோல் துவள்கிறது? ஏன் அவர் கைவிரல்கள் அல்லலுற்று பிணைகின்றன? ஏன் விழிதாழ்த்தி உதடுகளை இறுக்கி நின்றிருக்கிறார்? அவர்கள் அவருக்காக தலைகொடுப்பார்கள். ஆனால் அந்த இறுதிக்கணத்திலும் அவ்வெறுப்பு எஞ்சியிருக்கும். அவரை இதுநாள்வரை நெஞ்சில் வைத்திருந்த தந்தையும் தாயும்கூட இன்று துறந்துவிட்டனர்” என்றாள் பானுமதி. ஒருபோதும் பானுமதியின் குரல் அப்படி உறுதிகொண்டதில்லை என்று அசலை எண்ணிக்கொண்டாள்.

“ஒரு மானுடன் அவ்வண்ணம் முழுக்கத் துறக்கப்படலாகாது. அவருடன் அத்தனை பழிகளையும் ஏற்க, அவர் செல்லும் அவ்விருண்ட உலகங்களுக்குச் செல்ல, முடிவின்மைவரை அங்கு உழலவேண்டியவள் நான். பிறிதொரு சொல் இல்லை. செல்க!” என்று சொல்லி பானுமதி திரும்பிக்கொண்டாள். அசலை கண்ணீர் வழிய அசையாமல் அவளை நோக்கியபடி நின்றாள். தாரை அவள் கைகளை தொட்டாள். அசலையின் விம்மலோசை கேட்டு பானுமதி திரும்பி நோக்கினாள். “என்ன துயர்? நான் எத்துறப்பும் செய்யவில்லை. மாறாக பேருவகையை ஈட்டிக்கொண்டிருக்கிறேன். அவருடைய அந்த உடலொளியை நோக்கு. மண்ணிலெழுந்த தேவன். அவரை இப்படி நோக்கி அமர்ந்திருப்பதுபோல அமுதிலாடும் பெருநிலை பிறிதில்லை. இது எனக்கு தெய்வங்கள் ஒருக்கிய விருந்து” என்றாள் பானுமதி.

அவள் முகத்தை நோக்கியபடி அசலை மேலும் சற்றுநேரம் நின்றாள். அவள் முகம் உள்ளூறிய புன்னகையிலென மலர்ந்திருப்பதை, நீர்மை படர்ந்த விழிகள் ஒளிகொண்டிருப்பதை கண்டாள். தாரை அவள் தோளைத் தொட்டபோது விழித்துக்கொண்டு நெடுமூச்சுடன் ஆடையை இழுத்து முகத்தின் மேலிட்டுக்கொண்டு வெளியே நடந்தாள்.

வெண்முரசு வாசிப்பு முறை – ராஜகோபாலன்

முந்தைய கட்டுரைஅருகமர்தல் -ஏ. வி. மணிகண்டன்
அடுத்த கட்டுரைபார்சல் பெருமாள்!