வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–47

பகுதி ஏழு : அலைகளில் திரள்வது – 5

bl-e1513402911361அவைக்கூடத்தின் மேற்குபக்கமாகத் திறந்த அரசப்பெருவாயிலின் முற்றத்தில் விதுரர் சிற்றமைச்சர் ஜலஜரும் ஏகசக்ரரும் துணைக்க காத்து நின்றிருந்தார். நிலைகொள்ளாதவராக மேற்கே அரண்மனையிலிருந்து கிளம்பி தெற்குவாயிலை ஒட்டிவந்த பாதையை நோக்கிக்கொண்டிருந்தார். ஜலஜர் “இளையோர் சித்ரபாணரும் சித்ரவர்மரும் அரசருடன் கிளம்பி வரப்போவதாக செய்தி, அமைச்சரே” என்றார். “ஆம், அவையில் அனைவரும் அமர்ந்துவிட்டனரா?” என்றார் விதுரர். “பார்த்துவரச் சொல்கிறேன்” என்று ஜலஜர் சொன்னார்.

“அடுமனைப் பொறுப்புக்குரியவர் யார்?” என்றார் விதுரர். அவர் அதை ஏழாவது முறையாக கேட்கிறார் என எண்ணிக்கொண்டு “கைடபர்… நாம் அவருக்கு உரிய ஆணை பிறப்பித்துவிட்டோம், அமைச்சரே” என்றார் ஜலஜர். விதுரர் “ஆம்” என்றார். “எவரேனும் ஒருவர் சென்று பேரரசரின் உடல்நிலை எவ்வாறுள்ளது என்று கேட்டு எனக்குத் தெரிவியுங்கள்…” ஜலஜர் “தலைமைக்காவலர் சாரதரை அனுப்பியிருக்கிறோம். அதற்கு முன் வந்த ஏவலரும் பேரரசர் துயின்றுகொண்டுதான் இருக்கிறார் என்றனர்” என்றார். “சஞ்சயன் எப்போதும் அவர் அருகே இருக்கவேண்டும்…” என்றார் விதுரர்.

கனகர் பதைப்புடன் உடல்குலுங்க ஓடிவந்து மூச்சிரைக்க “அரசர்நிரைகள் நிறைந்துவிட்டன, அமைச்சரே. பிதாமகர் பீஷ்மர் ஆசிரியர்கள் துரோணருடனும் கிருபருடனும் வந்து அவையமர்ந்துவிட்டார். தாங்கள் எங்கே என்று கேட்டார்” என்றார். “நான் இங்கே அரசருக்காக நின்றிருக்கிறேன் என்று சொல்லவேண்டியதுதானே?” என்றார் விதுரர். “அவ்வாறு சொல்லலாகுமா என ஐயுற்றேன். நோக்கிவருகிறேன் என வந்தேன்” என்றார் கனகர். “அறிவின்மையை மட்டுமே பேசுங்கள்…” என பல்லைக் கடித்தார் விதுரர். “செல்க!” என கையை வீசினார். கனகர் அச்சினத்தை விந்தையாக நோக்கியபின் திரும்பிச்சென்றார்.

அவைக்குள் விசாலநாட்டு அரசர் சமுத்ரசேனர் வாழ்த்தொலிகளுடன் நுழைந்து தன் பீடத்தை சென்றடைந்தார். மறுஎல்லையில் நிமித்திகன் கௌசிகி நாட்டு அரசர் மஹௌஜசரின் குடிமரபைச் சொல்லி அவர் அவைபுகுவதை அறிவித்தான். அவர் பீஷ்மரை அப்பால் நின்று நோக்கினார். அரசர்களில் சிலர் அவரை அணுகி வணங்கி வாழ்த்துபெற்று சென்றனர். சலிப்பு நிறைந்த முகத்துடன் எவரையும் அடையாளம் காணாத அயல்நோக்குடன் சொல்லின்றி வலக்கையால் அவர்களின் தலைதொட்டு அவர் வாழ்த்தினார். துரோணர் தாடியை உருவியபடி கிருபரிடம் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருக்க துரோணரின் களரியில் பயின்றவனாகிய அனுபநாட்டு அரசன் கர்மஜித் வந்து அவர் காலடியைப் பணிந்து வாழ்த்துபெற்றான்.

வெளியே காந்தாரத்து அரசர் அணுகுவதை முரசொலியும் கொம்பொலியும் கூறின. கனகர் வெளிவாயில் நோக்கிச் சென்றபடி ஏவலனிடம் “காந்தாரத்து இளவரசியர் எவரையேனும் அவைமுகப்புக்கு வரச்சொல்க!” என்றார். அவன் பணிந்து அகல அவர் சிறுகரவுப்பாதைக்குள் புகுந்து மூச்சிரைக்க ஓடி மறுபக்கம் எழுந்தார். தன்னை ஒரு பெருச்சாளி என உணர்ந்தபடி ஆடையை சீரமைத்தார். காந்தார நாட்டு அரசர் சுபலர் தன் மைந்தர்கள் அசலனும் விருஷகனும் தொடர தேரில் வந்திறங்கினார். அங்கே நின்றிருந்த துர்விமோசனும் அயோபாகுவும் சிற்றமைச்சர் பர்வதரும் குமாரரும் இருபக்கமும் துணைவர அவர்களை எதிர்கொண்டு முகமன் உரைத்தனர்.

கனகர் அவர்களைக் கடந்துசென்று “அஸ்தினபுரியின் ஷத்ரியப்பேரவைக்கு மாமன்னர் யயாதியின் குருதிமரபில், துர்வசுவின் கொடிவழியில் எழுந்த காந்தாரத்தின் தொல்குடி அரசர் வருகை தந்திருப்பது முழுமையின் மங்கலத்தை அளிக்கிறது” என்றார். சுபலர் புன்னகையுடன் “கனகரே, பாலையில் அலைந்ததுபோல வியர்வையில் உப்புகொண்டிருக்கிறீர்” என்றார். கனகர் புன்னகைத்து “அவைசென்றமைக, அரசே! தங்கள் அரசு இது” என்று வணங்கி பின்னால் நோக்கினார். ஏவலன் தொடர வந்த காந்தார இளவரசியர் ஸ்வாதாவும் துஷ்டியும் புஷ்டியும் மூச்சிரைக்க அருகணைந்து “வருக, தந்தையே. வருக, மூதாதையே” என வரவேற்றனர். “இது என்ன மூச்சிரைப்பு? ஓடிவந்தீர்களா? இந்நகரில் எங்களுக்கு ஏன் முறைமைச்சொல்?” என்றார் சுபலர். “முறைமை மீறப்படலாகாதல்லவா? இது குருவின் அரசு, ஹஸ்தியின் நகர்” என்றார் கனகர்.

இளவரசர்கள் சுபலரையும் இளவரசர்களையும் அவைக்குள் கொண்டுசெல்ல காசிநாட்டு விருஷதர்பரும் அவர் மைந்தனும் முடிகொண்ட அரசனுமாகிய சுபாகுவும் தேர்களில் வந்திறங்கினர். துர்விமோசன் “இவர்களை வரவேற்க முறைமைப்படி அரசியோ இளைய அரசி அசலையோ வரவேண்டுமல்லவா?” என்றான். கனகர் “முறைமையை நோக்கினால் நான் இங்கேயே நின்றிருக்கவேண்டியதுதான். நீங்கள் சென்று எதிர்கொள்க! நான் இங்கு நின்றிருந்ததை அவர்கள் அறியவேண்டியதில்லை” என்றபடி ஓடி சிறுபாதைக்குள் புகுந்து அவைக்கூடத்தின் அடியினூடாக மறுபக்கம் சென்று எழுந்தார்.

சிற்றமைச்சர் சுதாகரர் ஓடிவந்து பணிந்து “வடகலிங்கத்தின் அரசர் சுதாயுஸ் தன் இளையோன் தீர்க்காயுசுடன் வந்திருக்கிறார், அமைச்சரே. இருவருக்கும் நிகரான இருக்கை வேண்டுமென தீர்க்காயுஸ் சொல்கிறார். அது வழக்கமில்லை” என்றார். “அவர்களின் இருக்கையருகே இருப்பது எந்த அரசர்?” என்றார் கனகர். “திரிகர்த்த அரசர் சத்யரதர் ஒருபக்கம் மறுபக்கம் தசார்ணத்தின் அரசர் சித்ராங்கதர்” என்றார் சுதாகரர். கனகர் “இருவரும் ஒப்பமாட்டார்கள். இருக்கையை அமைப்பதாக சொல்லிக்கொண்டே இருங்கள். அவைகூடி நிகழ்வுகள் தொடங்கியதும் அவர் அமர்ந்துவிடவேண்டியதிருக்கும். வேறுவழியில்லை” என்றபின் முன்னால் சென்றார்.

தொலைவில் அஸ்தினபுரியின் அரண்மனையில் இருந்து துரியோதனன் கிளம்பிவிட்ட செய்தியை முரசொலிகள் அறிவித்தன. அதை அனைவருமே கேட்டுவிட்டனர் என்பதை அவையில் காற்றுதொட்ட இலைக்காடு என எழுந்த அசைவும் ஒலிமாறுபாடும் காட்டின. கனகர் மேற்குப்பெருவாயிலுக்கு சென்றார். விதுரர் “அரசர் வந்துகொண்டிருக்கிறார்” என்றார். “அவைக்குள் அனைத்தும் சித்தமாக இருக்கவேண்டும். அரசரே இறுதியாக அவைபுகவேண்டியவர். அவருக்குப்பின் எவருக்கும் வாழ்த்தொலியோ அவையறிவிப்போ எழலாகாது” என்றார். “ஆம், அதை பார்த்துக்கொள்கிறேன்” என்றார் கனகர்.

“அறிவிலியெனப் பேசலாகாது” என விதுரர் பற்கள் தெரிய சீறினார். “எந்த அரசரும் தவிர்க்கப்படலாகாது. தவிர்க்கப்படுபவர் நமக்கு எதிர்முகமைக்குச் செல்வார் என்பதை மறக்கவேண்டாம்.” கனகர் “ஆம், அதுவும் பார்த்துக்கொள்கிறேன்” என்றார். “உம்மைப்போன்றவர்களை நம்பி இங்கே அரசு நிகழ்கிறது… செல்க!” என்று விதுரர் கைவீசினார். கனகர் தலைவணங்கியபின் மீண்டும் சிறுகூடத்திற்கு வந்தார். அவைக்குள் நுழைந்து நோக்கியபோது சகுனி சுபலரின் அருகே நின்று பணிந்து சொல்லாடுவதை கண்டார். சோமதத்தரின் அருகே பூரிசிரவஸ் நின்றிருந்தான். அஸ்வத்தாமனின் அருகே அமைச்சருக்குரிய பீடத்தில் அமர்ந்து கிருதவர்மன் பேசிக்கொண்டிருந்தான். விதர்ப்பநாட்டு அரசர் பீஷ்மகரும் அவர் மைந்தர் ருக்மியும் அவைபுகுந்த அறிவிப்பு எழுந்தது.

அந்தப் பேரவையை எப்படி கணக்கு வைத்துக்கொள்வது என அவருக்கு தெரியவில்லை. எப்படி எதை கணித்தாலும் ஏதேனும் பிழைநிகழாமலிருக்காது என்று அவர் உறுதிகொண்டிருந்தார். ஓரிரு கணங்கள் தன்னை நிலைகொள்ளச் செய்தபின் மேற்குப்பெருவாயிலுக்குச் சென்று வெளியே நோக்கினார். துரியோதனனை வரவேற்க அணிச்சேடியரும் இசைச்சூதரும் கவச உடையணிந்த காவலரும் நிரைகொண்டிருந்தனர். ஒரு கணத்தில் அவருக்கு அனைத்திலும் சலிப்பு ஏற்பட்டது. தன்னை தூண் ஒன்றுக்குப் பின்னால் மறைத்துக்கொண்டு வெறுமனே வெளியே நோக்கி நின்றார்.

bl-e1513402911361துரியோதனன் துச்சாதனனும் துர்மதனும் சுபாகுவும் தொடர பொற்பூச்சுள்ள வெள்ளித்தேரில் அரண்மனையிலிருந்து கிளம்பி பேரவைக்கூடம் நோக்கி சென்றான். வழியெங்கும் அஸ்தினபுரியின் குடிகள் இருபுறமும் செறிந்து களிவெறி கொண்டு கூச்சலிட்டனர். தலைப்பாகைகளையும் மேலாடைகளையும் வானில் வீசி கைகளைத் தூக்கி குதித்தனர். வெறிகொண்டு ஆடி ஒருவர் மேல் ஏறி ஒருவர் விழுந்தனர். உப்பரிகைகளிலிருந்து முற்றங்களுக்கு குதித்தனர். ததும்பிய பெருங்கூட்டத்தின் விளிம்பு சாலையோரமாக வேலோடு வேல் இணைத்து வேலியென நின்றிருந்த படைவீரர்களை முட்டி அச்சரடை நெளிந்துலையச் செய்தது. துரியோதனன் அருகே அமர்ந்திருந்த சுபாகு அத்திரளசைவை கொப்பளிக்கும் புழுக்கூட்டங்களென்று ஒருகணம் உணர்ந்தான். தலையசைத்து அவ்வெண்ணத்தை விலக்கினான். இயல்பாக துர்மதனின் விழிகளை சந்தித்தபோது அவனும் அவ்வாறே எண்ணுகிறானோ என்ற ஐயத்தை அடைந்து திடுக்கிட்டு விலகிக்கொண்டான்.

சில இடங்களில் அணையுடைத்த மக்கள் பிதுங்கி தேர்ச்சகடங்களுக்கு நடுவே விழுந்தனர். நோக்கி விழிநட்டு ஓட்டிய தேர்ப்பாகன் சரடை இழுத்து தேரை நிறுத்தி மீண்டும் எடுத்தான். அப்படியும் ஓரிடத்தில் இருவர் புரவிக்காலடிகளில் விழுந்து மிதிபட்டு அலறினர். அஞ்சிய புரவி துள்ளி முன்னால் செல்ல தேர்ச்சகடம் அவர்களின் மேல் ஏறி எலும்புகளையும் உள்குடங்களையும் நொறுக்கி குருதிதெறிக்க உடலை உடைத்து எழுந்தமைந்து நின்றது. “செல்க!” என துர்மதன் கைகாட்டினான். துரியோதனன் தன்னைச் சூழ்ந்து ஒலித்த உணர்வொலிப்பெருக்கை அறியாதவனாக அசையாமல் தேர்பீடத்தில் அமர்ந்திருந்தான்.

அவைமுற்றத்தை அடைந்ததும் அங்கு நின்றிருந்த விதுரரும் சிற்றமைச்சர்களும் கைகூப்பியபடி அருகணைந்தனர். ஏவலரும் காவலர்நிரைகளும் வாழ்த்தொலி எழுப்பினர். பாதையின் இருபுறமும் இரும்புக் கவசங்களும், தீட்டப்பட்டு ஒளிவிட்ட வேல்வாள்களுமாக அணிவகுத்திருந்த அஸ்தினபுரியின் படைவீரர்கள் படைக்கலம் தாழ்த்தி வாழ்த்தொலி எழுப்பினர். மங்கலச் சேடியர் நூற்றெண்மர் ஏழு நிரைகளாகச் சென்று தாலமுழிந்து அரசரை வரவேற்றனர். மங்கல இசைச்சூதர் நூற்றெண்மர் இரு பிரிவுகளாக வாயிலருகே நின்று இசை முழங்கினர். கைகூப்பியபடி தேரிலிருந்து இறங்கி வாழ்த்தொலிகளை விழியசைவும் இன்றி ஏற்று துரியோதனன் அவைக்கூடம் நோக்கி நடந்தான். விதுரர் அருகே நடந்தார்.

துரியோதனன் மார்பில் பொற்கவசம் அணிந்திருந்தான். தோள்மலர்கள் கைவீச்சில் அலைந்தன. கங்கணங்கள் ஒளிசுழன்றன. இடையிலணிந்திருந்த பொற்கச்சைக்குக் கீழே தொடைவரை செறிந்த செறிவளைவுகள் பொன்னலையென எழுந்தமைந்தன. பொற்குறடுகளில் இளநீல வைரங்கள் ஒளிவிட்டன. சற்றே முளைக்கத் தொடங்கியிருந்த தலைமயிர் இளங்காற்றில் தளிர்புல்லென அசைந்தது. கூர்விழிமணிகளில் நிலைத்த நோக்கும் ஒவ்வொரு காலடியிலும் முற்றிலும் நிகர்கொண்ட நேர்நடையுமென அவன் வந்தபோது அவனையன்றி பிற எவரையும் அங்கிருந்தவர் நோக்கவில்லை.

கூடத்தில் நுழைந்ததும் விதுரர் “வருக அரசே, அவை ஒருங்கிக்கொண்டிருக்கிறது. சற்றுநேரம் காத்து அரியணை அமைந்ததும் அவைபுகலாம்” என சிற்றறையை காட்டினார். தலையசைத்து படிகளில் ஏறி கூடத்தை அடைய அங்கே நின்றிருந்த வைதிகர்கள் கங்கைநீர் தெளித்து வேதமோதி வாழ்த்தினர். விதுரர் சிற்றறைக்குள் அழைத்துச் சென்று பீடத்தில் அமரச் செய்தார். துச்சாதனனும் துர்மதனும் அவனுக்கு இருபக்கமும் நின்று கொள்ள சுபாகு அறைக்கு வெளியே வந்து அவனை நோக்கி ஓடிவந்து பணிந்த கனகரிடம் “அரசியரும் பிறரும் வந்துவிட்டார்களா?” என்றான். “மறுபக்க அறையில் அவர்கள் காத்திருக்கிறார்கள், இளைய அரசே” என்று கனகர் சொன்னார். “நோக்குக!” என்றபின் சுபாகு உள்ளே சென்றான்.

கனகர் கூடத்தைக் கடந்து மறுவாயிலினூடாக அரசியர் பக்கத்தை அடைந்து அங்கிருந்த சிற்றறைக்குள் நுழைந்து அவைச்சேடி சம்புகையிடம் “அரசியர் வந்துவிட்டார்களா?” என்றார். “காத்திருக்கிறார்கள். அவையில் அரசியர் மூவர் மட்டுமே அமர ஒப்புதல். பிறர் எதிரேற்புச்சடங்குகளுக்கு மட்டுமே என அமைச்சர் சொன்னார்” என்றாள் சம்புகை. “ஆம், அவர்கள் ஒருங்கியிருக்கட்டும். நான் அவைநோக்கி வருகிறேன்” என்று சொல்லிவிட்டு கனகர் மீண்டும் அவைக்குள் நுழைந்தார். ஒவ்வொரு முறையும் அவை முற்றிலும் வேறெனத் தோன்றியது.

அவையின் நூற்றெட்டு வாயில்களினூடாகவும் அரசர்களின் ஏவலரும் அணுக்கர்களும் உள்ளே நுழைந்துகொண்டிருந்தனர். முகப்பில் அமைந்த அரசமேடையில் துரியோதனன் அமர்வதற்கான பெரிய பீடம் போடப்பட்டிருந்தது. மேடைக்கு வலப்பக்கமாக பீஷ்மரும் துரோணரும் கிருபரும் அமர்ந்திருந்தனர். இடப்பக்கம் அந்தணர்கள் பன்னிருவர் அமர்ந்திருந்தனர். நேர்முகப்பில் ஒன்றுக்குள் ஒன்றென அமைந்த பிறைவடிவ இருக்கை நிரைகளில் அரசர்கள் குலவரிசைப்படி அமர்ந்திருந்தனர். சல்யரும் ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் ருக்மியும்… அறிந்த முகங்களை நோக்கியே விழி சென்றது. ஆனால் அறியா முகங்களில் இருந்துதான் இடர்கள் எழுந்துவரும், அவர்கள் அறியா முகமென்பதை அவர்கள் நன்கறிந்திருப்பதனால்.

சுஜாதன் தெற்குப்பக்க வாயிலில் இருந்து விரைந்து கனகரை அணுகி “அவை நிறைந்துவிட்டது. இன்னும் எவருக்காக காத்திருக்கிறோம்?” என்றான். “நிறைந்துள்ளதா என்று பலமுறை நோக்கவேண்டும். இங்கு வராதவர்கள் அங்கு சென்றுவிட்டார்கள் என்று பொருள்” என்றார் கனகர். “நான் சென்று அமைச்சரிடம் சொல்கிறேன், ஆனால் அதற்குமுன் இன்னொரு முறை எவரேனும் விடுபட்டிருக்கிறார்களா என்று பார்த்துக்கொள்ளவேண்டும்.” சுஜாதன் “எவருமில்லை. ஏட்டில் பெயர்களை எழுதி ஒவ்வொருவரையாக அடையாளப்படுத்திக் கூறும்படி சர்க்கரிடம் சொன்னேன்” என்றான். “ஆம், அந்த ஓலையை நான்தான் அனுப்பினேன். ஆனால் அது வெறும் எழுத்துநிரை. இது முகப்பெருக்கு” என்றார் கனகர்.

சுஜாதன் பொறுமையிழந்து தலையசைத்தான். “எவரிடமும் சொல்வதில் பயனில்லை. நாமே ஒருமுறை அனைவரையும் எண்ணிப் பார்த்துவிடவேண்டும். ஒருவர் விடுபட்டால்கூட அது அவைச்சிறுமையாகும். ஷத்ரியர் அவைச்சிறுமையின் பொருட்டு ஆயிரமாண்டுகால நட்பை இழக்கத் துணிபவர்கள்” என்றார் கனகர். சுஜாதன் மேலும் ஏதோ சொல்ல நாவெடுப்பதற்குள் ஏவலன் வந்து விதுரர் அவரை அழைப்பதாகக் கூறினான். கனகர் சுஜாதனிடம் “சற்று பொறுங்கள், அரசே” என்றபடி மூச்சுவாங்க அரசர் அமர்ந்திருந்த முகப்பறைக்கு சென்றார். அறைக்குள் நுழைவதா என தயங்கி நின்றார்.

அவர் வரவை உள்ளிருந்தே கண்டு அறைக்குள்ளிருந்து வெளிவந்த விதுரர் “அரசர் அனைவரும் அவைபுகுந்துவிட்டார்களா?” என்றார். “ஆம் அமைச்சரே, பிறிதொரு முறை எண்ணிப்பார்க்கச் சொல்லியிருக்கிறேன்” என்றார் கனகர். விதுரர் “பீஷ்ம பிதாமகரிடம் சென்று அவைமங்கலம் நிறைந்துவிட்டது, அவை கூடலாமல்லவா என்று முறைமை ஒப்புதல் வாங்கி வருக! மூத்தார் சொல்லில் அவையெழவேண்டும் என்பது மரபு. எவர் சொல்லில் எழுந்த அவை என்பதே அவைக்குறிப்பின் முதல் வரி” என்றார்.

கனகர் மீண்டும் அவைக்கு அடியில் புகுந்து குறுக்காக ஓடிக்கடந்து மறுபக்கம் மேலெழுந்து பீஷ்மர் அருகே சென்றார். பீஷ்மரின் காலடியில் அமர்ந்து தாழ்ந்த குரலில் “பிதாமகரே” என்றார். பீஷ்மர் சிறுதுயிலில் தலை அசைந்து இடம்சரிய அக்குரலில் திடுக்கிட்டு விழித்து “யார்?” என்ரார். “பிதாமகரே” என்றார் கனகர். பீஷ்மர் தாடியை வருடியபடி “என்ன?” என்றார். “அவைமங்கலம் நிறைந்துவிட்டது. தொடங்கலாமல்லவா?” என்றார்.

பீஷ்மர் புரியாதவர்போல செல்க என கைவீசினார். “மூத்தோர் ஆணைப்படி தொடங்கவேண்டும் என்பார்கள்” என்றார் கனகர். துயில்மாறா குரலில் “நான் எதற்கும் ஆணையிட விரும்பவில்லை. நான் என் சொற்களை சொல்லி முடித்துவிட்டேன்” என்று பீஷ்மர் சொன்னார். கனகர் திகைத்து துரோணரை நோக்க “இந்த அவையில் மூத்த ஷத்ரியர் சல்யர். அவர் ஆணைபெறுக!” என்றார் அவர். கனகர் “நன்று, தங்கள் ஆணை” என்றபின் “ஆசிரியர்களே, தங்கள் ஆணையும் கூட” என்றார். “நன்று! அஸ்தினபுரிக்கு நலம் சூழ்க!” என்றார் துரோணர்.

கனகர் மீண்டும் ஓடி அறையை அடைந்தபோது அங்கு விதுரர் இல்லை. விதுரரை தேடிச் சென்றபோது வெளிமுற்றத்தில் அவர் தனியாக நிற்பதை கண்டார். அருகணைந்து “சல்யரின் ஆணைப்படி தொடங்கலாமென்பது துரோணரின் ஆணை, அமைச்சரே” என்றார். “பிதாமகர் வேறு உளநிலையில் இருக்கிறார். எதுவும் இனி மிச்சமில்லை, அவை தொடங்கவேண்டியதுதான்.” விதுரர் “அறிவிலி, இளைய யாதவர் இன்னும் அவைபுகவில்லை” என்றார். கனகர் “ஆம், ஆனால் அவர் தூதராக அல்லவா வந்திருக்கிறார்?” என்றார்.

“அல்ல, அவருக்கு அரசமுறைமை செய்திருக்கிறோம். அவருக்கான இடம் அரசர்கள் நடுவேதான் போடப்பட்டிருக்கிறது” என்றார் விதுரர். “ஆம்” என்றார் கனகர். “நான் அதை எண்ணவில்லை.” விதுரர் சினமும் சலிப்புமாக “எண்ணிப்பார்க்கவேண்டும். அவைக்குள் எலிபோல குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதில் பொருளில்லை” என்றார். மேலும் எழுந்த சினத்தை அடக்கி “இங்கு நில்லுங்கள். இளைய யாதவர் அவைபுகுந்ததும் எனக்கு தெரிவியுங்கள்” என்றார். “ஆணை” என்றார் கனகர். விதுரர் அரசரின் அறைக்குள் நுழைந்தார். கனகர் பெருமூச்சுவிட்டார்.

கனகர் நிலையழிந்தவராக அவைமுற்றத்தில் காத்து நின்றார். அவரிடம் ஓடிவந்த சிற்றமைச்சர் பிரமோதர் “நிமித்திகரிடம் அவைநிரல் என்ன என்று முறைப்படி அறிவித்துவிட்டேன், அமைச்சரே” என்றார். கனகர் “ஆம், நிரல் அனைவருக்கும் கிடைத்ததா என்பதை மீண்டுமொரு முறை உறுதி செய்க!” என்றார். அவர் விலகிச்செல்ல கனகர் சாலையை நோக்கியபடி தன் ஆடையை சீரமைத்தார். அவையிலிருந்து சுஜாதன் ஓடிவந்து “இங்கு நிற்கிறீர்களா? நான் தேடிக்கொண்டிருந்தேன்” என்றான். மூச்சிரைக்க “அவையில் அனைவரும் அமர்ந்துவிட்டனர். இருமுறை உறுதி செய்துவிட்டேன்” என்றபடி அருகில் வந்து வியர்வை மணத்துடன் நின்றான்.

“நான் இளைய யாதவருக்காக காத்திருக்கிறேன்” என்றார் கனகர். “ஆம், அவர் இன்னும் வரவில்லை. ஆனால் அவைகூடி சடங்குகள் முடிந்த பின்னரே தூதர்களை அழைப்பது வழக்கம்” என்றான் சுஜாதன். “அவர் அரசராக வந்திருக்கிறார்” என்றார் கனகர். “ஆம், நான் அதை எண்ணவில்லை” என்றான் சுஜாதன். “எண்ணிப்பார்க்கவேண்டும், இல்லையேல் அரசகுடியினர் என்று சொல்லிக்கொள்வதில் பொருளில்லை” என்றார் கனகர். “மெய்தான்” என சுஜாதன் தணிந்தான். “ஏவலரையும் அமைச்சரையும் ஏவும்போது அப்பிழைகளுக்கு அப்பால் நின்றிருக்கவேண்டும் அரசர்கள். இளைய யாதவர் அவைபுகாமல் அரசர் மேடையமர்ந்தால் அவர் அரசராக அவைபுக இயலாது. தூதராக வந்தவருக்கு அரசருக்குரிய இடம் ஏன் என்னும் வினா எழும்” என்றார் கனகர்.

சுஜாதன் தலைகுனிந்து நின்றான். சாலையின் மறு எல்லையில் யாதவர்களின் பசுக்கொடி தெரிந்தது . “வருகிறார்” என்றான் சுஜாதன். கனகர் “ஆம், பார்த்தேன்” என்றார். “தாங்கள் இங்கு நிற்க வேண்டும், அரசே. அரசகுடியினரில் ஒருவர் நின்று வரவேற்பது நன்று” என்றார். “அதற்கு எனக்கு ஆணையில்லை, நான் தெற்குவாயிலில் நிற்கவேண்டியவன்” என்றான் சுஜாதன். “இது விதுரரின் சொல்” என கனகர் சொன்னார். சுஜாதன் தயங்கியபடி நின்றான். கனகர் “முறைமைச்சொல் உரைத்து அவரை எதிர்கொள்க! அழைத்துச்சென்று அவையமரச் செய்க! அரசகுடியில் ஒருவர் அதைச் செய்கையிலேயே முறைமை முழுமைகொள்கிறது” என்றார்.

இளைய யாதவரின் தேர் வந்து முற்றத்தில் நின்றது. அதிலிருந்து சாத்யகி இறங்கி இடையிலிருந்த சிறிய கொம்பை எடுத்து ஊதி “விருஷ்ணிகுலத்து இளைய யாதவர் கிருஷ்ணர் வருகை” என்று அறிவித்தான். சுஜாதன் “தனியாக வருகிறார்” என்றான். கனகர் அருகே சென்று வணங்கி “யாதவக் குடிமூத்தவரை அஸ்தினபுரியின் ஷத்ரியப் பேரவைக்கு வரவேற்கிறோம்” என்றார். இளைய யாதவர் படிகளில் இறங்கி கனகரின் தோள்மேல் கைவைத்து ”எப்படி இருக்கிறீர்கள், அமைச்சரே?” என்றார். கனகர் “நலம்” என்றார். சற்று தயங்கி நின்ற சுஜாதன் அருகே வந்து “அஸ்தினபுரியின் அவைக்கு நல்வரவு, மூத்தவரே” என்றான். அவனை அணுகி தோள்மேல் கைவைத்து பற்றி உடலுடன் அணைத்தபின் “உன் முகம் முதலில் கண்ட அந்த இளந்தோற்றத்திலேயே இன்னும் நினைவில் படிந்திருக்கிறது, இளையோனே” என்றபின் கனகரிடம் “இவர்களுக்கு முதுமையே இல்லை போலும்” என்றார்.

கனகர் அச்சிரிப்பால் மெல்ல நெகிழ்வுகொண்டு “தங்களைப்பற்றித்தான் அவ்வாறு பேசிக்கொள்கிறார்கள், யாதவரே” என்றார். இளைய யாதவர் “நான் எதையும் அக்கணமே கடந்துசென்றுவிடுகிறேன். காலத்தின் வண்டலே அகவை என்கிறார்கள்” என்றார். சுஜாதனிடம் “நல்ல சொல்லாட்சி, நினைவில்கொள். பெண்டிரிடம் சொன்னால் மகிழ்வார்கள்” என்றார். சிரித்தபடி “அவை நுழையலாமே” என்று சுஜாதன் சொல்ல கனகர் “ஆம், அவையே தங்களுக்கென காத்திருக்கிறது” என்ரார்.

சுஜாதன் இளைய யாதவரை அவைக்குள் அழைத்துச் சென்றதை நோக்கிநின்றபின் கனகர் ஓசைகேட்ட எலி என உள்ளிருந்தே திடுக்கிட்டு இடைநாழிக்குள் புகுந்து வட்டமாக அவையைச் சுற்றி மேற்குமுனையை அடைந்து அங்கு நின்றிருந்த விதுரரிடம் “இளைய யாதவர் அவைபுகுந்துவிட்டார். நாம் தொடங்க வேண்டியதுதான்” என்றார். “அரசரிடம் சொல்கிறேன்” என்று அருகிலிருந்த சிற்றறைக்குள் விதுரர் நுழைந்தார். “நீங்கள் அவைமுழுமையை இன்னொரு முறை நோக்கிவிடுங்கள்” என்று சொல்லி கதவை மூடினார்.

கனகர் மீண்டும் அவைக்கு வந்தபோது சுஜாதன் அவரை நோக்கி ஓடிவந்து “அமைச்சரே, இப்போதுதான் நோக்கினேன், இந்த அவைக்கு அங்கர் வரவில்லையா?” என்றான். “இது ஷத்ரியப் பேரவை” என்றார் கனகர். “அவர் நாடாள்பவர்” என்று சினத்துடன் சுஜாதன் சொன்னான். “ஆம், நமது பார்வையில் அவர் ஷத்ரியரே. ஆனால் இங்கு அமர்ந்திருப்பவர்களின் பார்வையில் அல்ல” என்று கனகர் சொன்னார். “நாம் அவரை ஷத்ரியர் என்று முன்னிறுத்தாவிடில் எவர் சொல்லப்போகிறார்கள்? பாரதத்தின் பெருவீரர் அமராத இந்த அவைக்கு என்ன பொருள்?” என்று சுஜாதன் உரக்க கேட்டான்.

“பொறுத்து குரல் எழுப்புக இளைய அரசே, எவரேனும் செவியுற்றால் அதுவே பேச்சென்றாகும்” என்றார் கனகர். “நான் மூத்தவரிடம் இதை கேட்காமல் இருக்கப்போவதில்லை. என்ன நிகழ்கிறது இங்கே? அங்கரில்லாமல் மூத்தோர் மட்டும் அமருவதென்றால் அதைவிட நமக்கு சிறுமை பிறிதென்ன?” என்றான். “இது கணிகரின் அவை. ஒவ்வொன்றும் அவர் விருப்பப்படியே அமைந்துள்ளது” என்று கனகர் சொன்னார். “இந்த அவையில் அங்கர் வந்தமர்ந்தால் ஷத்ரியர் இடையே ஒரு சிறு மறுகுரலேனும் எழாமல் இருக்காது. நமது எதிரிகளுக்கு அதுவே வாய்ப்பென்றாகும். கட்டுகையிலேயே விரிசலெழ வேண்டாம் என்று அவர் சொன்னபோது அரசர் அதை ஒப்புக்கொண்டார்.”

“இது சிறுமை… இது அவருக்கல்ல, நமக்கு சிறுமை” என்றான் சுஜாதன். “முதலில் ஷத்ரியக் கூட்டு நிகழட்டும். ஒற்றைக்குரல் என அனைவரும் நம் அரசரை தலைவர் என ஏற்கட்டும். அரசுமுறை அறிவிப்பு பாரதவர்ஷம் நோக்கி முன்வைக்கப்படட்டும். அங்கர் படைமுகம் நிற்பது எப்போது என்பதை அதன் பின்னர் முடிவு செய்வோம்” என்றார் கனகர். “இந்த அவையில் அங்கரை படைத்தலைவராக தேர்வு செய்வோமென்றால் நாம் வென்றோம் என்று பொருள். இல்லையேல் இது படையறிவிப்பே அல்ல, வெறும் பகடி விளையாட்டு” என்றான் சுஜாதன். “இளைய அரசே, இதை நாம் முடிவு செய்யப்போவதில்லை. தாங்கள் விரும்பினால் தங்கள் மூத்தவரிடம் பேசுக!” என்று கனகர் சொன்னார். “ஆம், நான் சொல்லத்தான் போகிறேன். எனக்கு எங்கும் அச்சமில்லை” என்றபடி சுஜாதன் திரும்பிச் சென்றான். அவன் போவதை நோக்கிநின்றபின் கனகர் அவனுக்குப் பின்னால் சென்று அப்பால் மங்கல இசை எழுவதைக்கண்டு தயங்கி நின்றார். இசை ஆர்ப்பரிக்க, அணிச் சேடியர் தாலங்களுடன் நிரைவகுக்க, துரியோதனன் தம்பியர் தொடர கைகூப்பியபடி ஷத்ரிய பேரவை நோக்கி சென்றான்.

அந்நிரையில் சென்ற விதுரர் ஒதுங்கி நின்ற கனகரைக் கண்டு தயங்கி நின்றார். அதற்குள் அவரைச் சென்று அடைந்த சுஜாதன் உரத்த குரலில் “அமைச்சரே, இது என்ன? அங்கர் இன்றி பாரதவர்ஷத்தின் ஷத்ரியப் பேரவை எப்படி முழுமையடையும்?” என்றான். விதுரர் “இது நான் வகுத்ததல்ல, கணிகர் வகுத்தது. நீங்கள் அவரிடம் பேசலாம்” என்றபின் அவைக்குள் சென்றார். சுஜாதன் அறைக்குள் இருந்து வெளியே வந்த துச்சலனின் கைகளைப்பற்றி “என்ன நிகழ்கிறது, மூத்தவரே? இந்த அவையில் அங்கர் இருக்கவேண்டாமா?” என்றான்.

துச்சலன் “நீ அரண்மனைக்கு திரும்பிச்செல்” என்றான். “மூத்தவரே…” என்றான் சுஜாதன். துச்சலன் பெருஞ்சினத்துடன் கையை ஓங்கி “மறுசொல்லுரைத்தால் இங்கே உன்னை அறைந்து வீழ்த்துவேன். அரண்மனைக்குச் செல்லடா, அறிவிலி” என்று பற்களைக் கடித்து தாழ்ந்த குரலில் சொன்னான். சுஜாதன் கண்கலங்க உடல் நடுங்க நின்றான். “உம்” என அவனிடம் உறுமிவிட்டு துச்சலன் கனகரிடம் “அரசி அவைபுகவேண்டும் அல்லவா?” என்றான். “ஆம், இளையவரே” என்றார் கனகர். “சென்று அறிவியுங்கள்” என்றான் துச்சலன். “ஆம்” என்றபின் கனகர் திரும்பி ஓடினார்.

கனகர் வாயிற்சேடியின் ஒப்புதல்பெற்று அரசியின் சிற்றறைக்குள் சென்று தலைவணங்கி “தாங்கள் எழுந்தருளலாம், அரசி” என்றார். அவருக்காகக் காத்திருந்த பானுமதியும் அசலையும் தாரையும் எழுந்தனர். அசலை “பேரரசி அவைக்கு வருகிறார்களா?” என்றாள். “இல்லை அரசி, மும்முறை அழைப்பு சென்றபோதும் மறுத்துவிட்டார்” என்றார் கனகர். “விதுரர்?” என்று அசலை கேட்டாள். கனகரின் முகத்தில் ஓர் உணர்வு மாற்றம் தோன்றியது “அவர் அஸ்தினபுரியின் அமைச்சர்” என்றார். பானுமதி திரும்பி சேடியரைப்பார்க்க அவர்கள் அவளுடைய ஆடை மடிப்புகளையும் கூந்தலையும் சீரமைத்தனர். தாரை அவள் மார்பிலும் கைகளிலும் இருந்த அணிகளை ஒழுங்கமைத்தாள்.

கனகர் திரும்பி கைகாட்ட மங்கலச் சேடியரும் இசைச்சூதரும் ஒழுங்கு கொண்டனர். நிமித்தச்சேடி கொம்பு ஊதி அரசியின் எழுந்தருள்கையை அறிவித்தாள். கனகர் “இனி தாங்கள் அவையமர்வது மட்டுமே எஞ்சியுள்ளது, அரசி. அரசர் மறுபுறம் அவைபுகுந்துவிட்டார்” என்றபின் தலைவணங்கி உடல் குலுங்க விரைந்தார். கொம்பூதி வரவறித்தபடி முன்னால் செல்ல இசைச்சூதரும் மங்கலச் சேடியரும் மூன்று நிரைகளாக தொடர்ந்து சென்றனர். பானுமதியின் இருபுறமும் அசலையும் தாரையும் செல்ல லதை அவர்களுக்குப் பின்னால் நடந்தாள். தாலங்களும் கூடைகளுமாக அகம்படியினர் பின்னால் சென்றனர்.

முந்தைய கட்டுரைஅணையாவிளக்கு
அடுத்த கட்டுரைகடிதங்கள்