வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–46

பகுதி ஏழு : அலைகளில் திரள்வது – 4

bl-e1513402911361அஸ்தினபுரியின் தென்கிழக்கில் அமைந்திருந்த இந்திரமுற்றத்தில் மரப்பட்டைகளாலும், முடைந்த ஈச்சைஓலைகளாலும், மூங்கில்களாலும் நீள்வட்டமான மாபெரும் பொதுப்பேரவை அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரம் தூண்களின் அவை என்று அதை ஏவலர் சொன்னார்கள். செவ்வரக்கு பூசப்பட்ட ஆயிரத்தெட்டு பெருமரத்தடிகள் ஆழ நிலைநிறுத்தப்பட்டு அவற்றை கால்களாகக்கொண்டு அந்த அவைக்கூடம் எழுப்பப்பட்டிருந்தது. இரண்டு வாரை உயரத்தில் பன்னிரண்டு மரப்படிகளுக்குமேல் நிரந்த மரத்தாலான அடித்தளத் தரையின்மேல் மூன்றடுக்கு மரவுரி பரப்பப்பட்டு ஓசையழிவு செய்யப்பட்டிருந்தது. அவைக்குள் தூண்கள் ஏதும் இல்லாமலிருக்கும்பொருட்டு வட்டவிளிம்பில் நின்றிருந்த பெருந்தூண்களிலிருந்து கிளம்பி மையத்தில் குவிந்த மூங்கில் உத்தரங்களால் கூரை அமைக்கப்பட்டிருந்தது. கூரைமூங்கில்கள் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு இலைநரம்புகள் என பின்னிப்பரவியிருந்தன.

மரத்தாலான வளைவுச்சட்டமும் செம்பட்டுத்திரைச்சீலையும் கொண்ட நூற்றுஎட்டு வாயில்கள் கொண்டிருந்தது அவை. ஒவ்வொரு வாயிலும் ஒரு சிறு நுழைவுக்கூடத்தை நோக்கி திறந்தது. அக்கூடத்தின் இருமருங்கிலும் அரசர்கள் அமர்ந்து காத்திருப்பதற்காக பீடங்கள் போடப்பட்ட சிற்றறைகள் இருந்தன. கூடத்திலிருந்து படிகள் இறங்கி தேர்கள் அணையும் அரைவட்ட முற்றத்தை சென்றடைந்தன. நூற்றெட்டு முற்றங்களில் இருந்தும் மண்மேல் பலகை பரப்பப்பட்ட நூற்றெட்டு தேர்ப்பாதைகள் கிளம்பி வளைந்து மையப்பெருஞ்சாலையை சென்றடைந்தன. வருவதற்கும் போவதற்கும் வெவ்வேறு பாதைகள். அவை வழிகாட்டும் கொடிகளாலும் தோரண வளைவுகளாலும் அணிசெய்யப்பட்டிருந்தன.

ஷத்ரிய அரசர்கள் நகருக்குள் அமைந்த அரண்மனைகளிலும் வடக்கே புராணகங்கைக்குள் அமைந்த காந்தாரநகரியின் புது மாளிகைகளிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் நகரின் கிழக்குக் கோட்டைமுகப்பு முற்றத்திற்கு வந்து அங்கிருந்து பெருஞ்சாலையினூடாக தேர்களில் வந்து அவர்களுக்குரிய தேர்முற்றங்களில் இறங்கினர். ஒவ்வொரு அரசரும் முற்றத்திற்கு வந்துசேர்வதற்கு முன்னரே அவர்களின் கொடி அங்கிருந்த மூங்கில் கொடிக்கம்பங்களில் ஏறியது. அவர்களை வரவேற்று முரசுகள் ஆர்த்தன. காவல்மாடங்களில் எழுந்த கொம்பூதிகள் வரவேற்பொலி எழுப்பினர்.

ஒவ்வொரு அரசரும் தங்கள் படைத்துணையுடனும் அவைத்துணையுடனும் அகம்படியினருடனும் குலக்கொடி பறக்கும் தேர்களில் வந்திறங்கினர். கொடிகள் பறப்பதை நோக்கி முன்னரே வந்துவிட்டிருந்த அரசர்கள் எவர் என அறிந்தனர். அவர்களின் குலமுறைகளை கிளத்தி வாழ்த்தொலி எழுப்பும்பொருட்டு முதுசூதர்களால் தலைமைதாங்கப்பட்ட சூதர்குழுக்கள் முற்றங்களில் நின்றிருந்தனர். உடன் மங்கலத்தாலங்கள் ஏந்திய சேடியரும் இசைக்கலங்களுடன் சூதர்களும் நின்றனர். வாழ்த்தொலியும் இசையும் எழ, கைதொழுதபடி இறங்கிய அரசர்கள் முற்றத்து முகப்பில் காத்துநின்ற கௌரவர்களாலும் அமைச்சர்களாலும் படைத்தலைவர்களாலும் முறைப்படி வரவேற்கப்பட்டு சிற்றறைகளில் அமரச்செய்யப்பட்டனர்.

அவைக்குள் அவர்கள் தங்களுக்கான பீடங்களை நோக்கி செல்லும் வழியில் வேறு அரசர்கள் ஊடுசெல்லவில்லை என்று உறுதிசெய்தபின் அஸ்தினபுரியின் சிற்றமைச்சர்கள் அவர்களை வழிகாட்டி அழைத்துச்சென்றனர். ஒவ்வொரு அரசரும் முறைமைப்படி நிமித்திகர்களால் அவைநுழைவு அறிவிக்கப்பட்டு அவைக்குள் கொண்டுசென்று அமரவைக்கப்பட்டனர். இளஞ்சிவப்பு நிறமான பட்டுத்துணியால் மூடப்பட்டிருந்த பீடங்கள் சிறிய குழுக்களாக அமைந்திருந்தன. ஒவ்வொருவரின் வலப்பக்கம் அமைச்சர்களும் இடப்பக்கம் படைத்தலைவர்களும் நேர் பின்னால் அணுக்கச்சேவகர்களும் அமர்ந்திருக்கும்படி அமைக்கப்பட்டிருந்தது. அவர்களின் அரியணைக்குப்பின் அவர்களின் கொடி பறந்துகொண்டிருந்தது.

அரசர்கள் கூறுவதை பிறருக்கு ஏற்றுக் கூவுவதற்காக கேட்டுச்சொல்லிகள் நிற்பதற்கான பன்னிரண்டு சிறு மேடைகள் அவைக்குள் அமைக்கப்பட்டிருந்தன. ஏவலர்கள் நீருடனும் வாய்மணத்துடனும் அவர்களை அணுகும்பொருட்டு ஒவ்வொரு நிரைக்கு நடுவிலும் இடையளவு ஆழம் கொண்ட பாதைகள் அமைந்திருந்தன. அதனூடாக குனிந்த உடலுடன் எலிகளென ஏவலர்கள் அவைமுழுக்க உலவிக்கொண்டிருந்தனர். அரசர்கள் நுழையும் பெருவாயில்களுக்கு அடியிலேயே விழிக்கு எளிதில் தென்படாதபடி ஏவலர் நுழைந்து உள்ளே வந்து வெளியேறுவதற்கான சிறுவாயில்கள் அமைந்திருந்தன. அவை முற்றங்களுக்குச் செல்லாமல் அவையின் தரைக்கு அடியில் நுழைந்து மண்ணுக்குள் அமைந்திருந்த கரவுப்பாதையினூடாக அடுமனைகளுக்கும் பொருளறைகளுக்கும் ஏவலர்கொட்டகைக்கும் சென்றன.

அரசர்களுக்கான ஒன்பது விருந்து மாளிகைகள் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்தன. தொல்குடி ஷத்ரியர் பிறருடன் நிகராக உணவருந்துவதில்லை என்பதனால் அவர்களுக்கு மூன்று விருந்துமாளிகைகளும் அடுமனைகளும் தனியாக கிழக்குவாயிலினூடாகச் செல்லும் பாதையின் அருகே இருந்தன. யாதவருக்கும் பிறருக்கும் இரு விருந்துமாளிகைகள் தெற்கே அமைந்திருந்தன. சிறுகுடி ஷத்ரியர்களுக்கான நான்கு விருந்துமாளிகைகள் வடக்குச்சாலைகளின் அருகே அமைந்திருந்தன. அவற்றுக்கு பொருட்களை கொண்டுவரும் வண்டிகள் வந்துசெல்வதற்கான சாலைகள் தனியாக அமைக்கப்பட்டிருந்தன. அங்கே அடுமனைக்குரிய அன்னக்கொடிகள் பறந்தன.

அரசர்கள் ஒவ்வொருவரும் அங்கே நுழைந்த பின்னர்தான் அந்த அவை எத்தனை பெரியது என்று உணர்ந்தனர். அதில் ஒருவராக அமர்வது அவர்களை முதற்கணம் குன்றச்செய்தது. அணிகளும் ஆடைகளும் குலமுத்திரைகளும் பொருளற்றுப்போயின என உணர்ந்து அமைதியாக அமர்ந்தனர். நீரில் மூழ்கி மறைவதுபோல் மூச்சுத்திணறி வெற்றுச்சொல்லுரைத்து வெறுமனே நகைத்தனர். ஆனால் மெல்ல மெல்ல அவ்விரிவே தான் என உணர்ந்து எழுந்தமர்ந்தனர். விழியோட்டி தாங்கள் அறிந்த ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு கையசைத்தும் தலையாட்டியும் வணங்கினர்.

அவை பெருகப்பெருக அரசர்கள் உவகை கொண்டு தங்களை இழக்கலாயினர். தாங்கள் மையமென்று அமர்ந்திருக்கும் அவைகளில் எப்போதும் உடனிருக்கும் நோக்குவுணர்வால் அவர்கள் கட்டப்பட்டிருந்தனர். திரளில் ஒருவராவதென்பது அவர்கள் இளமைக்குப்பின் எப்போதும் அறிந்திராதது. அது பெருகுநீரிலிறங்கி நீந்தித்திளைப்பதுபோல் அவர்களுக்கு களிப்பூட்டியது. சொல்லெண்ணிப் பேசவேண்டியதில்லை. சீரான உடல்மொழி தேவையில்லை. ஆடையையும் அணியையும் திருத்திக்கொண்டே இருக்கவேண்டியதுமில்லை. பெருந்திரளில் ஒருவராயினும் அரசர்கள் அல்லாமலாவதில்லை. அவர்களிடம் வந்த மாற்றங்கள் அகம்படியரையும் அமைச்சர்களையும் குழப்பின. பின்னர் அவர்களும் தெளிந்து புன்னகைகொண்டனர்.

அவைக்கூடத்தின் இருநூற்றுப்பதினாறு சாளரங்களிலும் இளஞ்செந்நிற கலிங்கப்பட்டுத் திரைச்சீலைகள் காற்றில் துவண்டன. கூடையை கவிழ்த்ததுபோல் மூங்கில்கள் வளைந்து மேலேறி நடுவே இணைந்து அமைந்த கூரையிலிருந்து நூறு பட்டுப்பெருவிசிறிகள் தொங்கி வெளியே இருந்து சகடங்களினூடாக வந்த கயிறுகளால் இழுத்து அசைக்கப்பட்டன. மாபெரும் பட்டாம்பூச்சிச் சிறகுகள் என அவை கூடியிருந்தவர்களின்மேல் அசைந்துகொண்டிருந்தன.

அரசர்கள் வந்தமரும்தோறும் அவை வண்ணம் மாறிக்கொண்டே இருந்தது. மணிமுடிகளாலும் கவசங்களாலும் பொன்வண்டுகள் வந்து செறிந்த இலைபோல் மின்னத்தொடங்கியது. மன்னர்கள் அனைவரும் தங்கள் அரசணிக்கோலத்தில் வந்திருந்தனர். பொற்கவசம், பட்டுத்தலைப்பாகைகளில் அருமணிகள், சிலிர்த்தசைந்த வண்ண இறகுகள், ஒளிர்குண்டலங்கள், மணியாரங்கள், சரப்பொளிகள், தோள்செறிகள், வளைகள், கங்கணங்கள். பெருகி விழிநிறையும்தோறும் அவை நகைத்தன்மையை இழந்து மீண்டும் வெறும் பொன்னென்று ஆகி அலைகொண்டன. படைத்தலைவர்கள் வெள்ளிக்கவசங்களும், தோள்காப்புகளும், அணிச்செதுக்கு உடைவாள்களும் கொண்டிருந்தனர். அமைச்சர்கள் வெண்ணிற தலைப்பாகையும் வெண்பட்டு மேலாடையும் அணிந்து முத்தாரமோ மணிமாலையோ கழுத்திலிட்டிருந்தனர். சொற்கள் இணைந்து இணைந்து முழக்கமென்றாகி மீட்டலென்று மருவி கார்வையென்று கூரைக்குவையில் நிறைந்தன.

ஒவ்வொரு அரசரும் எவர் அருகே அமரவேண்டும் எவரெவரை சந்திக்கவேண்டுமென்பது அவையின் அமைப்பிலேயே முடிவு செய்யப்பட்டிருந்தது. கணிகரும் சகுனியும் கனகருடனும் பதினெட்டு அமைச்சர்களுடனும் நூற்றியெட்டு சிற்றமைச்சர்களுடனும் அமர்ந்து ஷத்ரிய அரசர்களின் பட்டியலை அமைத்து அவர்களை வெவ்வேறு குழுக்களாகப் பிரித்து அந்த அரங்கை அமைத்த கலிங்கச் சிற்பி சந்தீபருக்கு அளித்தனர். அவர் அதை எண்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் கலிங்க மன்னர் ஜோதிவர்மன் செய்த ராஜசூயத்திற்கு போடப்பட்ட பந்தலின் வடிவில் உரிய மாற்றங்களுடன் அமைத்தார்.

தொல்குடி ஷத்ரிய மன்னர்கள் கிழக்குமுகம் கொண்ட இருபத்துநான்கு வாயில்களினூடாக அவைநுழைந்தனர். சிறுகுடி ஷத்ரிய மன்னர்கள் வடக்கு நோக்கிய இருபத்துநான்கு வாயில்களில் வந்திறங்கினர். மலைநாட்டு ஷத்ரியர்களுக்கு தெற்குநோக்கிய இருபத்துநான்கு வாயில்கள் அளிக்கப்பட்டிருந்தன. பன்னிரு வாயில்கள் யாதவர் உள்ளிட்ட பிறருக்கு ஒதுக்கப்பட்டன. மேற்குநோக்கிய பன்னிரு வாயில்கள் அஸ்தினபுரியின் அரசகுடியினருக்கு ஒருக்கப்பட்டிருந்தன. நான்கு தனிவாயில்களில் ஒன்று அரசருக்கும் பிறிதொன்று அரசிக்கும் என வகுக்கப்பட்டிருந்தது. இரண்டு தனிவாயில்கள் அந்தணர் அவைபுகும்பொருட்டு அளிக்கப்பட்டிருந்தன.

bl-e1513402911361கிழக்கு முதல்முற்றத்தில் நின்றிருந்த துர்முகனும் சிற்றமைச்சர் மனோதரரும் தேர்களில் வந்திறங்கிய சாரஸ்வத நாட்டரசர் உலூகரை வரவேற்று அழைத்துச்சென்று அமரச்செய்தனர். தனக்கு முன்னரே வந்திருந்த அரசர்களின் கொடிகளில் சௌவீர நாட்டரசருடையதும் இருப்பதை அவர் இறங்கியதுமே நோக்கினார். முகமன் உரைத்து தலைவணங்கிய துர்முகனிடம் இயல்பான குரலில் “சௌவீரர் சத்ருஞ்சயர் இவ்வழியே சென்றார் என எண்ணுகிறேன்” என்றார். “ஆம் அரசே, சற்றுமுன் அவையமர்ந்தார்” என்றான் துர்முகன். “இந்த வழி தொல்குடி ஷத்ரியர்களுக்குரியது அல்லவா?” என்றார் உலூகர். “ஆம் அரசே, இங்குள்ள இருபத்துநான்கு வாயில்களும் முதன்மை ஷத்ரியர்கள் நுழைவதற்கானவை” என்றான் துர்முகன்.

உலூகரின் அமைச்சர் சதஹஸ்தர் “இளவரசே, தொன்மையான ஆரிய ஜனபதங்கள் பதினாறு என அறிந்திருப்பீர்கள். அங்கம், ஆஸ்மகம், சேதி, அவந்தி, காந்தாரம், காசி, காம்போஜம், கோசலம், குரு, மகதம், மல்லம், மச்சம், பாஞ்சாலம், சூரசேனம், விருஜம், வத்ஸம். இவற்றில் இருந்து எழுந்தவை ஐம்பத்தாறு ஷத்ரிய நாடுகள். முதல் பதினாறில் அமைந்த நாடுதான் ஐம்பத்தாறில் முதன்மை கொண்டது. அவற்றின் கொடிவழியில் எழுந்த நாடு இரண்டாம் இடம் பெறுகிறது. பிறநாடுகளுக்கு மூன்றாமிடமே என நூல்கள் நெறிவகுக்கின்றன” என்றார். துர்முகன் திகைக்க மனோதரர் “ஆம் அமைச்சரே, அது சபாக்ரமசங்கிரகம் நூலில் உள்ளது” என்றார்.

“கௌடசாரஸ்வதம் என்னும் நூலின்படி தொல்குடியாகிய காந்தாரத்தின் கொடிவழியினர் சாரஸ்வதர்களாகிய நாங்கள். சைந்தவர்களும் சைப்யர்களும் கூர்ஜரர்களும் எங்கள் பங்காளிகள். இந்நிரையில் சௌவீரர் எங்கு வருகிறார்கள்?” என்றார் சதஹஸ்தர். “அவர்கள் தொல்குடிகள்” என்றார் மனோதரர். “ஆம், அதில் மறுப்பில்லை. ஆனால் ஷத்ரிய முதற்குடிகளா என்பதே வினா. அசுரகுடிகளும் நிஷாதகுடிகளும்கூடத்தான் தொல்குடிகள். வேதத்தில் குறிப்பிடப்படுதல், தவமுனிவராகிய பிரஜாபதியை கொண்டிருத்தல், அஸ்வமேதமும் ராஜசூயமும் இயற்றி மும்முடிசூடிய முன்னோரை கொண்டிருத்தல் என்னும் மூன்று தகுதிகளில் ஒன்றேனும் இல்லையேல் அவர்கள் முதற்குடி ஷத்ரியர் ஆவதெங்கனம்?” என்றார் சதஹஸ்தர்.

துர்முகன் அப்பொறுப்பை அப்படியே மனோதரரிடம் விட்டுவிட்டு பின்னால் சென்று நின்றான். உலூகர் “நன்று, உங்களுக்கு பால்ஹிகர்கள் இன்று உற்றவர்கள். மத்ரம் துணைவந்துவிட்டது. மலைக்குடிகளின் வில்திறன் போரில் தேவையாகிறது. ஆனால் அவையில் அவர்களின் இடத்தை மாற்றியமைக்க உங்களுக்கு உரிமையில்லை. அதை செய்ய வேதத்திற்கே ஆணையுள்ளது” என்றார். பின்னால் வந்து நின்ற ஜலகந்தன் துர்முகனிடம் “விதேகமன்னர் அணுகிக்கொண்டிருக்கிறார், மூத்தவரே” என்றான்.

அதை செவிகொண்டதுமே மனோதரர் “மாமன்னர் நிமியின் குருதிவழி வந்தவரும் அரசமுனிவர் ஜனகரின் வழித்தோன்றலுமாகிய நிமி அவைபுகவிருக்கிறார். சாரஸ்வதரே, தாங்களும் அவரும் இணைந்து அவைபுகுவது சிறப்பாக அமையும்” என்றார். உலூகர் முகம் மலர்ந்து “ஆம், தொல்புகழ்கொண்ட வைதேகருடன் அவைபுகுவதற்கு சாரஸ்வதமே தகுதியானது” என்றார். “சற்று பொறுங்கள். அவரை அழைத்துவருகிறேன்” என்று மனோதரர் வணங்கி வெளியேற துர்முகனும் ஜலகந்தனும் அவருடன் வெளியே விரைந்தனர்.

துர்முகன் “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணக்கு… வைதேகர் என்ன சொல்லப்போகிறார் என்று தெரியவில்லையே” என்றான். “அவருக்கு ஜானகியின் பெயரே எந்த அவையிலும் முதலிடத்தை அளிக்கும். ஆகவே அவர் எந்தக் கணக்கும் நோக்காதவராகவே இருப்பார்… வருக!” என்று கூறியபடி மனோதரர் முற்றம்நோக்கி சென்றார். செல்கையிலேயே “பிரமதர், அப்ரமாதி, தீர்க்கரோமர், சுவீரியவான் ஆகியோருக்கு செய்தி செல்க! அவர்கள் மணந்த விதேகநாட்டு இளவரசியரும் உடனே இங்கு வரவேண்டும்” என்றார். ஏவலன் ஒருவன் ஓடி சிறிய வாயிலினூடாக அவைமண்டபத்தின் அடிப்பக்கத்திற்குள் நுழைந்து அங்குள்ள குறுக்கு வழியினூடாக விரைந்தான்.

மேழிக்கொடி பறக்கும் விதேகநாட்டு தேர்கள் வந்து நிற்க அதிலிருந்து அரசர் நிமி இறங்கி கைகூப்பினார். வாழ்த்துரைகளும் இசைமங்கலமும் சூழ துர்முகனும் ஜலகந்தனும் மனோதரரும் அவரை வரவேற்றனர். அவர்கள் தாலமுழியப்பட்டு முகமனுரைக்கப்பட்டு கூடத்திற்குச் செல்வதற்குள் விதேகநாட்டு இளவரசியரான துஷ்டி, வபுஸ், சாந்தி, ஸித்தி ஆகியோர் தங்களை மணந்த கௌரவர்களான பிரமதன், அப்ரமாதி, தீர்க்கரோமன், சுவீரியவான் ஆகியோருடன் வந்தனர். அவர்கள் குறுக்குவழியாக விரைந்து வந்தமையால் மூச்சிரைத்துக்கொண்டிருந்தனர். அரசியர் தந்தையின் கால்தொட்டு வணங்கினர். கௌரவர்களும் வணங்கி வாழ்த்துபெற்றனர்.

மனோதரர் சிற்றறைக்குள் புகுந்து சாரஸ்வதராகிய உலூகரிடம் “அரசே, தாங்களும் எழுந்து விதேகநாட்டரசருடன் இணைந்து அவைபுகவேண்டும்” என்றார். “ஆம், அதற்காகவே காத்திருந்தேன்” என்றபடி உலூகர் எழுந்து நிற்க ஏவலர் அவருடைய ஆடைகளை சீரமைத்தனர். அவர் கைகூப்பி வணங்கியபடி மெல்ல நடந்து வெளிவந்து கூடத்தில் மறுமைந்தரும் மகள்களும் சூழ இன்சொல் எடுத்து நின்றிருந்த நிமியை அணுகி கைகூப்பினார். அவரைக் கண்டதும் வைதேகர் இரு கைகளையும் விரித்து முகம்மலர கூவியபடி அருகணைந்து தழுவிக்கொண்டு “என்ன தவம் செய்தேன்! தொல்புகழ் சாரஸ்வதரை அணுகி சந்திக்கும் நல்லூழ் அமைந்ததே!” என்றார். முகம்மலர்ந்து அமைச்சரை திரும்பி நோக்கிய உலூகர் “ஆம், இது நன்னாள். சாரஸ்வதம் தன் இணைப்பெருமைகொண்ட விதேகத்தை தழுவிக்கொள்கிறது. மகிழ்க முன்னோர்!” என்றார்.

மனோதரர் “அவைபுகலாம், அரசே” என்றார். “ஆம், செல்வோம்” என்றார் நிமி. மனோதரர் பிரமதனிடம் திரும்பி அழைத்துச்செல்லும்படி கைகாட்டினார். அவர்கள் இரு அரசர்களையும் பெருவாயிலினூடாக அவைக்குள் கொண்டுசென்றனர். மனோதரர் பெருமூச்சுவிட்டு தளர்ந்து “ஒவ்வொன்றும் ஒரு போர்க்களம்” என்றார். துர்முகன் “உண்மையில் இந்தப் பதினாறு ஜனபதம் ஐம்பத்தாறு நாடுகள் என்பவை எல்லாம் நன்கு வகுக்கப்பட்டவையா?” என்றான். “அந்தப் பதினாறிலும் ஐம்பத்தாறிலும் அஸ்தினபுரி பெரும்பாலும் இருப்பதில்லை” என்றார் மனோதரர். “ஒவ்வொரு தொல்நூலும் ஒவ்வொருமுறையில் அதை வகுத்தளிக்கிறது. வேதம் வளர்ந்த காடுகள் ஒவ்வொன்றிலும் பிறநூலை சந்திக்காத நூல்கள் விளங்குகின்றன.”

“அப்படியென்றால் நமது மரபுவழி என்ன?” என்றான் ஜலகந்தன். “முதல் பதினாறில் ஒன்று குருநாடு. இன்று அது சிறுத்து ஒரு சிற்றூராக அஸ்தினபுரியின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ளது. குருநாட்டை ஆண்ட யயாதியின் கொடிவழியினர் அஸ்தினபுரியின் அரசர்கள் என்பது பராசரரின் புராணமாலிகையினூடாக நிறுவப்பட்டது. அவ்வகையில் அஸ்தினபுரியே குருநாடு எனப்படுகிறது” என்றார் மனோதரர். “இங்கே கொடிவழிகளையும் குலமரபையும் குறித்து ஒரு பூசல் எழுமென்றால் இங்கிருந்தே பெரும்போர் ஒன்று எழுந்து ஷத்ரியக் குருதி பெருகத் தொடங்கும். ஷத்ரியர் அரக்குமுற்றி உலர்ந்து அனல்காத்துக் கிடக்கும் பெருங்காடு என்பார்கள்.”

தெற்கு அவைவாயிலில் சித்ரன், உபசித்திரன், சித்திராங்கன், சாருசித்ரன் நால்வரும் சிற்றமைச்சர்களுடன் நின்று யாதவ அரசர்களை வரவேற்றனர். போஜர்களும், குங்குரர்களும், அந்தகர்களும், விருஷ்ணிகளும் வந்திறங்கி முறைப்படி வரவேற்கப்பட்டனர். தங்களுக்கு தனி வாயில் என்பதும் அங்கே சிறுகுடி ஷத்ரியர்கள்கூட வரவில்லை என்பதும் சாலை திரும்பியதுமே அவர்களுக்கு தெரியவந்திருந்தது. ஆகவே சிறிய முகச்சுளிப்புடன்தான் அவர்கள் அவைமாளிகையின் முற்றத்தை அடைந்தனர். ஆனால் அவர்களின் குலக்கொடிகள் பட்டுத்துணியில் எழுந்தமையும், பெருமுரசுகள் முழங்கியமையும், ஒளிரும் படைக்கலங்களுடன் வீரர்கள் வணங்கியமையும் அவர்களை முகம் மலரச் செய்தது.

அவர்கள் இறங்கியதுமே கௌரவர் சென்று வணங்கி வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றனர். அவர்கள் மிகையான உடல்நிமிர்வும் எதையும் பொருட்படுத்தவில்லை என்னும் நடிப்பும் கொண்டவர்களாக மெல்ல தங்களுக்குள் பேசியபடி நடந்தனர். சிற்றறையில் காத்திருக்கையில் அளிக்கப்பட்ட இன்னீரை சுட்டுவிரலசைத்து மறுத்தனர். முகத்தை சற்றே தூக்கி பாதிவிழிகளை மூடி கழுத்தை இறுக்கி நிமிர்வுறுதியை காட்டிக்கொண்டனர். ஆனால் முறைமைகள் குறித்த ஐயம் அவர்களுக்கிருந்தது. எனவே ஒருவரை ஒருவர் ஓரக்கண்ணால் அடிக்கடி நோக்கிக்கொண்டனர். அது அவர்களின் அகத் தயக்கத்தை வெளிக்காட்டி அனைத்தையும் பொருந்தா நடிப்பென்றாக்கியது.

போஜர்குடியின் கொம்புக்குறி பொறித்த தேரில் கிருதவர்மன் வந்து இறங்கினான். “போஜர் குடியின் தலைவர், ஹ்ருதீகரின் மைந்தர், உத்தர யாதவநிலத்தின் அரசர் கிருதவர்மர் வருகை” என்று நிமித்திகர் அறிவிக்க கௌரவர்களாகிய நந்தன் உபநந்தன் இருவரும் அவனை எதிரேற்று அழைத்துச்சென்றனர். அவனைக் கண்டதும் எழுந்து வணங்கவேண்டுமா என ஐயுற்ற பிற யாதவர்தலைவர்கள் ஒருவரை ஒருவர் அரைக்கண்ணால் நோக்கி அமர்ந்திருந்தனர். ஆனால் நந்தனும் உபநந்தனும் இருபக்கமும் தொடர அவன் அறைக்குள் நுழைந்ததுமே அறியாமல் எழுந்து நின்று தலைவணங்கினர். சித்ரன் ஆணையிட சிற்றமைச்சர் பர்வதர் யாதவர்களை அவர்களுக்கான அவையிருக்கைகளுக்கு அழைத்துச்சென்றார்.

அமைச்சர் பிரமோதர் கையில் நீட்டோலையுடன் உடல்குலுங்க கீழ்வழியினூடாக மேலெழுந்து மூச்சிளைத்தபடி “எங்கே மனோதரர்? மனோதரர் எங்கு சென்றார்?” என்றார். ஊர்ணநாபன் “கிழக்குமுற்றத்தில் நின்றிருக்கிறார், அமைச்சரே” என்றபின் அவைக்குள் சென்றான். பிரமோதர் கிழக்குமுற்றத்திற்குச் சென்றபோது வத்சநாட்டு அரசர் உதயணர் வந்திறங்கிக்கொண்டிருந்தார். மனோதரரும் துர்முகனும் அவரை வரவேற்று அவைக்கு கொண்டுசென்றனர். மனோதரர் பிரமோதரை பார்த்துவிட்டார். அவைக்குள் உதயணர் சென்றதும் திரும்பி பிரமோதரின் அருகே வந்தார்.

“இது நம் தரப்புக்கு வந்துள்ள அரசர்களின் பெயர்நிரை. இன்னமும் பலர் அணையக்கூடும். சிறுகுடி ஷத்ரிய அரசர்களில் சிலர் உளமுறுதி கொள்ளாதவர்களாகவே உள்ளனர் என்கிறார் கணிகர்” என்றார் பிரமோதர் பெயரை நீட்டியபடி. “இதிலுள்ளவர்களில் அனைவரும் வந்து அவை அமைந்துவிட்டனரா என்று உறுதிசெய்த பின்னர் கணிகரைச் சென்று சந்திக்கவேண்டும்.” மனோதரர் “இங்கு வருபவர்களை அழைத்து அமரச்செய்யவே எனக்கு பொழுதில்லை” என்றார். “அதை நான் அறியேன். என்னிடம் பிற வேலைகள் அளிக்கப்பட்டுள்ளன. எவரேனும் ஒற்றரிடம் பொறுப்பை அளியுங்கள்” என்றபின் பிரமோதர் திரும்பி ஓடினார்.

மனோதரர் பெயர்நிரையை படித்தார். அவந்தியர், கோசலர், காம்போஜர், திரிகர்த்தர், மாளவர், சால்வர், சைந்தவர், சௌவீரர் என பெரிய அரசுகளின் பெயர்கள் முதலில் விழியில் நின்றன. மீண்டுமொருமுறை படித்தபோதுதான் ஆந்திரர், ஆபிசாரர், அம்பஸ்தர், அஸ்வாடகர், அஜநேயர், ஆபிரர், அரட்டர், ஆரிவேகர், கர்ணப்பிரவர்ணர், கிதவர், குந்தலர், குலூதர், கசுத்ரகர், காசர், கோவாசனர், சிச்சிலர், சீனர், சுச்சுபர், துஷாரர், துண்டிகேரர், தார்விகர், தசமேயர், நாராயர், பஞ்சநதர், பல்லவர், பானிபத்ரகர், பாரதகர், புளிந்தர், பிரஸ்தலர், மாகிஷ்மதர், முண்டர், மேகலர், லலித்தர், வங்கர், வனாயர், வசாதியர், வடாதனர், விக்ரமர், விகுஞ்சர், வேனிகர், சூரர், சுரசேனர், சம்ஸ்தானர், சிங்களர், சுரஸ்திரர், ஹம்சமார்கர் போன்ற சிறுகுடி ஷத்ரியர்களின் பெயர்கள் விழியில் நின்றன.

அதை என்ன செய்வதென்று அவருக்கு தெரியவில்லை. தத்தளித்துக் கொண்டிருந்தபோது சித்ரகுண்டலன் ஓடிவந்து “துஷார மன்னர் வீரசேனர்” என்றான். “ஆம், முந்திச்சென்று வரவேற்கவேண்டும்…” என்றார் மனோதரர். “ஆனால்…” என்று சித்ரகுண்டலன் தயங்கினான். “சொல்க!” என்றார் மனோதரர். “அமைச்சரே, அவர் தன் நண்பர் காரூஷ நாட்டு அரசர் க்‌ஷேமதூர்த்தியையும் அழைத்து வருகிறார். அவர் சிறுகுடி ஷத்ரியர். அவருக்குரிய முற்றமோ வாயிலோ அல்ல இது.” மனோதரர் அறியாமல் தலையில் கைவைத்தபின் “நன்று, ஒன்றுசெய்க! இங்கே நுழைவுக்கூடத்திலோ அறையிலோ இருக்கும் அரசர்கள் அனைவரையும் அவைக்கு கொண்டுசெல்க! அவர்களின் அகம்படியினரும் இங்கே இருக்கக்கூடாது” என்றார். “ஆம், அவ்வாறே” என்றான் சித்ரகுண்டலன்.

மனோதரர் முற்றம் நோக்கி ஓடியபடியே தன்னுடன் வந்த காவலர்தலைவனிடம் “வாழ்த்தில் காரூஷநாட்டரசரின் பெயர் முதல்முறை மட்டும் ஓங்கி ஒலிக்கட்டும், அவர் மண்ணில் கால்வைக்கும் கணத்தில். அவர் முகம்மலர்ந்த பின்னர் துஷாரரின் பெயர்சொல்லி மட்டும் வாழ்த்துரைத்தால்போதும்… எவர் செவியிலும் விழாமல் அவரை அவைக்கு கொண்டுசெல்க! செல்லும் வழியிலேயே இருவரையும் இயல்பாக பிரித்துவிடலாம்…” என்றார். தன் கையிலிருந்த ஓலையை அப்போதுதான் உணர்ந்து அதை அருகே நின்றிருந்த காவலனிடம் நீட்டி “இது உன்னிடம் இருக்கட்டும்” என்றபடி முன்னால் சென்றார். கூடத்திலிருந்தவர்களுக்கு ஆணையிட்டுவிட்டு அவருடன் ஓடிவந்தபடி சித்ரகுண்டலன் “அவர்களை எப்படி பிரிப்பது?” என்றான். “காரூஷரின் தோழராகிய அரசர் ஒருவரைக்கொண்டு அவரை மகிழ்வுடன் அணைக்கச்செய்து அழைத்துச்சென்றுவிடலாம்… அனைத்துக்கும் வழி என ஒன்று எங்கோ இருக்கும்” என்றார் மனோதரர்.

அவைமுற்றத்தில் சென்று நின்றபோது அவர் உடல் களைத்திருந்தார். ஒருகணம் கண்ணுக்குள் இருள் நுழைவதைப்போல் தோன்றியது. உடல் வியர்த்து நெஞ்சு படபடத்தது. பின்னர் விழித்துக்கொண்டு அருகே நின்ற ஏவலனிடம் “சற்று நீர் கொணர்க!” என்றார். அவன் “ஆணை” என விலகி விரைய அதற்குள் துஷாரநாட்டு தேர்கள் முற்றத்தை வந்தடைந்தன. மனோதரர் சித்ரகுண்டலனும் துர்முகனும் இருபுறமும் நின்றிருக்க முகமன் உரைத்து வீரசேனரை வரவேற்றார். தொடர்ந்து வந்து நின்ற காரூஷநாட்டுத் தேரிலிருந்து இறங்கிய க்‌ஷேமதூர்த்தியை நோக்கி அவர்கள் செல்ல சற்று பிந்தியது. அவர் பெயர் ஒலிக்கும் வாழ்த்துரைகள் எழுந்தாலும் க்‌ஷேமதூர்த்தியின் முகம் சுருங்கியது.

சித்ரகுண்டலனுடன் வீரசேனரை அனுப்பிவிட்டு மனோதரர் க்‌ஷேமதூர்த்தியை அணுகி தலைவணங்கி முகமன் உரைத்தார். தொண்டையிலிருந்து ஓசையே எழவில்லை. உடல் நீர் நீர் என தவித்தது. அத்தருணத்தை கடக்கமுடியுமா என்றே உள்ளம் ஐயம்கொண்டது. க்‌ஷேமதூர்த்தி மறுமுகமன் உரைக்காமல் “இது முதன்மை ஷத்ரிய அரசர்களுக்குரிய வாயில்தானே?” என்றார். “ஆம், அரசே” என்றார் மனோதரர். “அப்படியென்றால் இங்கே எப்படி சாரஸ்வதரின் கொடி பறக்கிறது?” என்றார் க்‌ஷேமதூர்த்தி.

மனோதரரின் உள்ளம் ஒருகணம் சொல்லின்றி நிலைத்தது. மறுகணம் அவரை அறியாமல் புன்னகை எழுந்தது. அதை அடக்கிக்கொண்டு முகமனை மீண்டும் ஒருமுறை உரைத்து “தங்களுக்காக தொல்குடி ஷத்ரியர் எழுவர் காத்திருக்கிறார்கள், அரசே. சற்றுமுன் விதேக அரசர் நிமி தங்களைப்பற்றி கேட்டார்” என்றார். முகம்மலர மீசையை நீவியபடி “ஆம், நாங்கள் பழைய நண்பர்கள். எங்களுக்கிடையே ஒருவகையில் குருதியுறவும் உண்டு” என்றபடி க்‌ஷேமதூர்த்தி முன்னால் நடந்தார்.

முந்தைய கட்டுரைசொல்லப்படாத அத்தைகள்
அடுத்த கட்டுரைஉப்புவேலி, இலக்கிய முன்னோடிகள் -கடிதங்கள்