பகுதி ஏழு : அலைகளில் திரள்வது – 7
இளைய யாதவர் அவையை நோக்கியபடி அசையாமல் நின்றிருந்தார், காற்றிலா இடத்தில் நின்றிருக்கும் சுடர் என. பானுமதி அசலையிடம் “மீண்டும் ஒருமுறை அறிவிக்க சொல்… அவர்கள் அவர் குரலை செவிமடுக்காமலிருக்கிறார்கள்” என்றாள். அசலை “அதைத்தான் கணிகர் விரும்பியிருக்கிறார். அவர்களுக்கு சூதன் கீழ் படைகொண்டு நிற்பதைப்பற்றி மட்டுமே இப்போது கவலை” என்றாள். பானுமதி “ஆனால் அவர் மேலும் முதன்மையான தூதுடன் வந்திருக்கலாம் அல்லவா?” என்றாள். அசலை புன்னகைத்தாள்.
இளைய யாதவர் அவைமேடையின் வலப்பக்கம் நின்றிருந்த அந்தணர்களின் தலைவரை நோக்கி “உத்தமரே, நீங்கள் உடனடியாக அவையிலிருந்து வெளியேறவேண்டும்” என்றார். அவர் திடுக்கிட்டு “என்ன சொல்கிறீர்கள்?” என்றார். “நீங்கள் வேதமறிந்த அந்தணர் என்றால் இனி இந்த அவையில் நின்றிருக்கலாகாது. வெளியேறுக… இக்கணமே வெளியேறுக!” என்றார் இளைய யாதவர். அவருடன் நின்றிருந்த முதிய அந்தணர் உரத்த குரலில் “நீ யார்? அந்தணரை வெளியே செல்ல ஆணையிட உனக்கென்ன உரிமை?” என்றார். இன்னொருவர் “சூத்திரரின் ஆணைப்படி அந்தணர் நின்றிருக்க வேண்டுமென எவர் சொன்னது உன்னிடம்?” என்றார்.
கலைந்து ஒலித்துக்கொண்டிருந்த ஷத்ரியப்பேரவை மெல்ல அமைதியடைந்தது. ஜயத்ரதன் எழுந்து “என்ன நிகழ்ந்தது? என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றான். சல்யர் “அவர்களிடம் ஆணையிட உங்களுக்கேது உரிமை, யாதவரே?” என்றார். அஸ்வத்தாமன் “இது அத்துமீறல்” என்றான். ஷத்ரியர் பலர் எழுந்து நின்றனர். அவந்தி நாட்டரசர் ஜயசேனரும் அவர் மைந்தர்கள் விந்தனும் அனுவிந்தனும் எழுந்து “அவனை வெளியேற்றுக, முதலில் அவன் வெளியேறட்டும்” என்று கூச்சலிட்டனர்.
ஜயசேனர் “முதலில் ஷத்ரிய அவையில் அரசனென்று அமர இவனை அழைத்ததே பிழை… அந்தப் பிழையே இப்போது மும்மடங்கென பெருகியிருக்கிறது” என்றார். “உங்கள் மகள் மித்ரவிந்தையின் கணவர் அவர், அவந்தியரே” என ஒரு குரல் எழ ஜயசேனர் திரும்பி “ஆம், நாம் ஒற்றுமை இன்றி ஆற்றலிழந்து முறைமை மறந்து குலம்துறந்து வாழ்வதனால் நம் மகளிரை அசுரரும் சூத்திரரும் நிஷாதரும் கிராதரும் கொள்கிறார்கள்…” என்றார். அபிசார மன்னர் சுபத்ரரும் அரேவாக மன்னர் சிம்மவக்த்ரரும் குந்தல மன்னர் காளகேசியும் எழுந்து “ஆம், வெளியேற்றுக… இக்கணமே வெளியேற்றுக!” என்று கூவினர்.
விதுரர் கைகாட்டி “அமைதி… அமைதி” என்றார். அவை மேலும் மேலும் கூச்சலிடவே துரோணர் எழுந்து “அமைதிகொள்க… நாம் அந்தணர் என்ன சொல்கிறார் என்று கேட்போம்” என்றார். அவை அமைதியடைந்தது. சில அரசர்கள் சினத்துடன் மூச்செறிந்தபடி நோக்கி நின்றனர். “அந்தணர்களே, உங்கள் எண்ணம் என்ன?” என்றார் விதுரர். “அவரை வெளியேற்றுவதென்றால் அவ்வாறே ஆகுக! ஷத்ரியர் அவையில் அந்தணர் குரலே முதன்மையானதென்கின்றன நூல்கள்.”
அந்தணர்தலைவராகிய தவள கௌசிகர் “நாங்கள் சொல்வதற்கொன்றுமில்லை, அமைச்சரே. அவர் எங்களை ஏன் வெளியேறச் சொன்னார் என்பதை இந்த அவையில் வெளிப்படுத்தி அதில் பொருளில்லை என்று நிறுவாமல் நாங்களோ அவரோ வெளியேற முடியாது. அவ்வாறு வெளியேறினால் நாங்கள் நெறியழிந்து பழிகொண்டோம் என்றே அலர் உருவாகும். அதை அவரும் அறிவார் என்பதனால்தான் புன்னகையுடன் நின்றிருக்கிறார்” என்றார்.
அவையினர் திகைப்புடன் இளைய யாதவரை நோக்கினர். விந்தன் “அவன் சொல்வதை அவை கேட்கவேண்டும் என்பதற்காகவே இந்த நாடகத்தை ஆடியிருக்கிறான், மாயன், பழிகாரன், வீணன்” என்று கூவினான். “ஆம், அதற்காகவே. நீங்கள் விழையவில்லை என்றால் ஒரு சொல்லும் உரைக்காமல் அவை நீங்குகிறேன். எனக்கு மாற்று எண்ணமேதுமில்லை” என்றார் இளைய யாதவர்.
தவள கௌசிகர் “எங்களுக்கு மாற்று வழியில்லை, யாதவரே. சொல்க, ஏன் எங்களை வெளியேறச் சொன்னீர்கள்?” என்றார். “நான் உரைக்கலாமா? அவை செவிகொள்ளுமா?” என்றார் இளைய யாதவர். “சொல்க!” என்றான் ஜயத்ரதன். அவை கலைந்து ஓசையிட்டது. “நான் பேசும்போது அவையிலிருந்து ஒரு சொல் ஊடே எழுமென்றால் அங்கேயே பேச்சை நிறுத்திவிட்டு அவைநீங்குவேன். அந்தணர்மேல் நான் சொல்லவந்தது என்னவென்று இந்த அவைக்கு வெளியே ஒருபோதும் சொல்லமாட்டேன். அது ஊரவர் உய்த்தலுக்கும் சூதர்களின் கற்பனைக்குமே விடப்படும்” என்றார்.
“இது சூழ்ச்சி. இது எண்ணவொண்ணா கீழ்மை” என்று அனுவிந்தன் கூவினான். “அரசே, அமர்க! அரசர்களே, அமர்க! பழி நீங்காது இந்த அவையிலிருந்து நாங்கள் விலகமாட்டோம். அவை முழுமை அடையவில்லை என்றால் இங்கேயே உண்ணாநோன்பிருந்து உயிர்விடுவோம்” என்றார் தவள கௌசிகர். அரசர்கள் மெல்ல ஆங்காங்கே அமர்ந்தனர். அவையில் ஆழ்ந்த அமைதி உருவாகியது. இருமல்களும் மூச்சொலிகளும் கங்கணமும் வாளுறையும் குலுங்கும் ஓசையும் மட்டும் எழுந்தன.
“சொல்க, யாதவரே!” என்றார் விதுரர். இளைய யாதவர் தவள கௌசிகரை நோக்கி “அந்தணரே, பிரம்மனுக்கு நிகராக பிறிதொரு உலகை உருவாக்கி நிறுத்திய மாமுனிவர் விஸ்வாமித்திரரின் கௌசிக குருமரபில் வந்த அந்தணர் நீங்கள் என்று நான் அறிவேன். உங்கள் நெறிமீறாமை மீதும் சொல்திறம்பாமை மீதும் இந்த அவையில் எவருக்கும் ஐயமில்லை. நானும் அந்த ஐயமின்மையுடனேயே இங்கே வந்தேன். உங்கள் வாழ்த்துக்களால்தான் இந்த அவையில் எழும் சொற்கள் தெய்வங்கள் செவிகொள்ளும் தகுதிகொள்கின்றன. உங்களை பழிக்கும்படி சொல்லெடுத்தமைக்கு பொறுத்தருள்க!” என்றார்.
தவள கௌசிகர் “தங்கள் குற்றச்சாட்டு என்ன என்று சொல்லுங்கள்” என அடக்கப்பட்ட சினத்துடன் சொன்னார். பானுமதி அசலையை நோக்க அவள் புன்னகைத்து “இந்த அவை வெறும் களம், அரசி. கணிகரும் யாதவரும் ஆடுகிறார்கள்” என்றாள். பானுமதி கணிகரை நோக்கினாள். அவர் கண்களை மூடி புன்னகையுடன் அமர்ந்திருந்தார். சகுனி முகத்தில் கசப்பும் சீற்றமுமாக தாடியை நீவிக்கொண்டிருந்தார். “அப்படியென்றால் அரசர்?” என்றாள் தாரை. “அவர் இந்த அவையிலேயே இல்லை. அப்பால் நின்று அனைத்தையும் மானுடச் சிறுவிளையாடல் என நோக்கிக்கொண்டிருக்கிறார்.” அவையில் கற்சிலையென அமர்ந்திருந்த துரியோதனனை நோக்கியபின் பானுமதி “ஆம்” என்றாள்.
“தவள கௌசிகரே, இந்த அவை கேட்கும்படி சொல்லுங்கள்! இந்தப் பெருங்கூடம் மரத்தாலும் துணியாலும் தோலாலும் ஆன ஒரு கட்டடம் மட்டுமே. இதை அவையென்றாக்குவது எது?” என்றார் இளைய யாதவர். தவள கௌசிகர் அவர் என்ன கேட்கிறார் என விளங்காதவர்போல நோக்கி அமர்ந்திருந்தார். “சொல்க, இங்கு அமர்ந்திருக்கும் அரசர்களா? அவர் சூடிய மணிமுடிகளும் செங்கோல்களுமா? அவர்களின் குலக்கொடிகளா? அவர்களால் இங்கு சொல்லப்படும் சொற்களா? எது?” அவையினரும் அவர் கேட்கவருவது என்ன என்று புரியாமல் நோக்கினர்.
தவள கௌசிகர் “எவையுமல்ல, இந்த அவையில் கங்கைநீர் தெளித்து ஓதப்பட்ட வேதச்சொல்” என்றார். “அந்தச் சொல் என்ன?” என்றார் இளைய யாதவர். “அனைத்து அவைகளையும் நிறுவும் சொல் அது. ஓம் வாங்மே மானசி பிரதிஷ்டிதா எனத் தொடங்கும் பாடல்.” இளைய யாதவர் “அந்தணரே, இங்கிருக்கும் மலைகள் தோன்றியபோது உடன்தோன்றிய பாடல் அது எனப்படுகிறது. அச்சொல்லை உரைத்தபடிதான் பிரம்மன் இப்புவியை படைத்தான் என்கின்றன நூல்கள். நால்வருக்குமேல் கூடி அமர்ந்து நெறியோ நூலோ ஆயும் இடங்களிலெல்லாம் நின்றிருக்கும் சொல் அது. இந்த பாரதவர்ஷத்தில் நாவில் மொழிதிகழும் வரை இங்கிருக்கும். அந்தத் தூய நன்மொழியின் பொருளை இங்கு உரையுங்கள்” என்றார்.
தவள கௌசிகர் விழிகாட்ட அவர் அருகே நின்ற இளம்வைதிகர் கைகூப்பி அந்தப் பாடலின் பொருளை எழுமொழியில் பொருள்மாற்றி பாடினார். தீட்டப்பட்ட தொண்டையிலிருந்து சங்கொலி என எழுந்த பாடல் அவையில் தெய்வமெழுந்ததுபோல் ஒலித்தது.
ஓம்! என் சொற்கள் உள்ளத்தில் நிலைகொள்க!
என் உள்ளம் சொல்லில் அமைக!
தன்னை தான் விளங்கச்செய்யும் அது
என்னுள் வளர்க! ஆம் அது என்றும் வளர்க!
என் உள்ளமும் சொல்லும் வேதமெய்மையை விளங்கச்செய்க!
நான் கேட்பவை அனைத்தும் வெறுமையென்று ஆகாதொழிக!
நாளும் இரவும் நான் நவில்பவையே என்னுள் திகழ்க!
நான் நிகழும் உண்மையையே அறிவேனாகுக!
நான் அழியா மெய்மையையே உணர்வேனாகுக!
அது என்னை காத்தருள்க!
என் ஆசிரியர்களைக் காப்பது
என்னையும் காத்தருள்க!
என்னைக் காத்தருள்வது
என் ஆசிரியர்களையும் காத்தருள்க!
அமைதி! அமைதி! அமைதி!
இளைய யாதவர் “அந்தணர்களே, நாம் அச்சொல்லால் இங்கு அமைக்கப்பட்டிருக்கிறோம். அச்சொல்லை இங்கு அமைத்தவர்கள் நீங்கள். எளியோனாகிய நான் வேதமெய்மையைக் குறித்து ஒரு வினாவை இங்கு எழுப்பலாம் அல்லவா?” என்றார். தவள கௌசிகர் “தாங்கள் எளியவர் அல்ல என்பதும் சாந்தீபனி குருநிலையின் முதன்மையாசிரியர் தாங்களே என்பதும் வேதமறிந்தோர் எவரும் அறிந்ததே. நான் தங்களைப்போல வேதமெய்மை நோக்கி செல்பவன் அல்ல. வேதமோதும் எளிய அந்தணன். என் அறிவுக்குகந்ததை இங்கு உரைப்பேன்” என்றார்.
“எனக்கல்ல, இந்த அவைக்கு உரையுங்கள், வைதிகரே. அது என்னைக் காத்தருள்க, என் ஆசிரியர்களைக் காப்பது என்னையும் காத்தருள்க, என்னைக் காத்தருள்வது என் ஆசிரியர்களையும் காத்தருள்க என வேதம் இறைஞ்சுகிறது. அது என இங்கு சுட்டப்படுவது எது?” என்றார் இளைய யாதவர். “பிரம்மம். அச்சொல்லால் சுட்டப்படுவது எதுவோ அது” என்றார் தவள கௌசிகர். “ஆம், எங்கும் எப்படியும் சுட்டப்படுவன அனைத்தும் அதையே சுட்டுகின்றன. இங்கு இப்பாடலில் அது எவ்வடிவில் சுட்டப்படுகிறது?”
தவள கௌசிகர் தயங்கியபின் தன் மாணவர்களை பார்க்க அவர்களில் இளையவன் “யாதவரே, அதற்கான மறுமொழிதான் முந்தைய வரிகளில் உள்ளது. இது சொல்நவில்வதைக் குறித்த பாடல். சொல்லே இங்கு பிரம்மத்தின் வெளிப்பாட்டு வடிவமென நின்றுள்ளது” என்றான். “நன்று, அந்தணரே. உங்கள் பெயர் சூக்ஷ்மர் என்று அறிவேன். சொல் உங்களில் நிலைகொள்க! உங்களில் எரிந்து உங்களை நிறைவடையச் செய்க!” என்றார் இளைய யாதவர். “இதற்கப்பால் ஒரு நற்சொல்லும் இப்புவியில் வேண்டேன், ஆசிரியரே” என்றான் சூக்ஷ்மன். இளைய யாதவர் “தவள கௌசிகரே, இங்கே நீங்கள் பிரம்மம் என நாட்டியது சொல். சொல்லே இதை அவையென்றாக்குகிறது” என்றார்.
“ஆம், இங்கு முழுமுதல் தெய்வம் சொல்லே” என்றார் தவள கௌசிகர். “ஆகவே இங்கு சொல்லப்படும் ஒரு சொல்லும் வீணென்றாகக் கூடாது. சொல்லுக்குப் பின்னால் உள்ளமும் உள்ளத்தை தன்னிலேந்திய ஆத்மனும் ஆத்மனின் அடையாளங்களாகிய அனைத்தும் ஆத்மன் சென்றடையும் முழுமையும் சேர்த்தே இங்கே சொல் எனப்படுகிறது” என்று இளைய யாதவர் சொன்னார். “ஆம், மெய்” என்றார் தவள கௌசிகர். “சொல்க அந்தணரே, இந்த அவையில் சொல் நின்றிருக்கிறதா? இங்கே ஒரு சொல் தன் பொருளை இழந்தால் இந்த அவை மறுதலிக்கப்படுகிறது. வேதம் மும்முறை மறுதலிக்கப்படுகிறது. பிரம்மம் முப்பத்துமூவாயிரம்கோடி முறை மறுதலிக்கப்படுகிறது.”
இளைய யாதவர் குரல் ஓங்கி எழுந்தது. “வேதியரே, அவையீரே, உங்கள் வேதம் சிறுமை செய்யப்பட்ட இந்த அவையில் பேசப்படும் சொற்களுக்குமேல் நீங்கள் தெளித்த கங்கை நீர் எங்கு செல்கிறது? சொல்க, உங்கள் கைகளால் அதை திரும்ப எடுத்துக்கொள்ள முடியுமா?” தவள கௌசிகர் திகைப்புடன் விதுரரையும் பிறரையும் நோக்கினார். “சொல்க, நீங்கள் தெளித்த கங்கைநீரை மீட்டுக்கொள்ள வழியிருக்கிறதா?” தவள கௌசிகர் “அறியேன், அவ்வண்ணம் ஒன்றும் இதுவரை நிகழ்ந்ததில்லை” என்றார். அவர் குரல் இடறியது. “அதை நான் எண்ணியதே இல்லை. பாரதவர்ஷத்து ஷத்ரியர் அவையில் வேதம் மறுதலிக்கப்பட்டதை நான் கேட்டதும் இல்லை.”
“சொல்க சூக்ஷ்மரே, நீங்கள் அறிவீரா வழியை?” என்றார் இளைய யாதவர். “ஆம், இந்த அவையை வேதமறுப்பு உரைத்தது எனச் சொல்லி தீச்சொல்லிட்டு தர்ப்பையால் கங்கைநீரைத் தெளித்து பூர்ணமிதம் பூர்ணமதம் என்னும் நிறைவுச்சொல் உரைத்து பின்னடி எடுத்துவைத்து அவை நீங்கினால் போதும். ஆனால் அக்கணமே இங்குள்ள அத்தனை அரசர்களும் ஷத்ரியர் அல்லாதாவார்கள்” என்றான் சூக்ஷ்மன். அவையிலிருந்து திகைப்பொலி எழுந்தது. ஆங்காங்கே அரசர்கள் எழுந்து நின்றுவிட்டனர்.
தவள கௌசிகர் “ஆனால் அது எவ்வாறு?” என திகைக்க “எளிய வழியும் உள்ளது, ஆசிரியரே. நாம் வேதமுரைத்து வாழ்த்தியது இந்த அவையை அல்ல என்னும் பொருள்வரும்படி சொல்சேர்த்து மேலுமொரு வேதப்பாடலை ஓதி நிறைவுரைத்து வெளியேறலாம். ஆனால் அதன்பின் இந்த அவையிலெடுக்கப்படும் எச்சொல்லுக்கும் அந்தணர் ஆட்பட மாட்டார்கள். இம்முடிவை தலைமேற்கொண்ட எந்த அரசருக்கும் கங்கைநீர் தெளித்து வேதம் ஓதப்படமாட்டாது. அவர்கள் அரியணை அமர்ந்து முடிசூடவோ வேள்விக்காவலர் என அமரவோ முடியாது. வேதத்தின்பொருட்டு வாளேந்தும் உரிமையை அவர்கள் இழப்பார்கள்”என்றான் சூக்ஷ்மன்.
திகைத்தவர்களாக சொல் கைகளிலும் முகத்திலும் நிலைக்க ஷத்ரியர் நின்றும் அமர்ந்தும் அசைவிழந்திருந்தனர். தவள கௌசிகர் “ஆனால் இன்னமும் இந்த அவை எங்கே சொல்பிழைத்தது என்று யாதவர் சொல்லவில்லை” என்றார். ஷத்ரியர் அந்தக் கூற்றில் உயிர்கொண்டு “ஆம்! அதை சொல்க!’ வெறும் மாயம்!” என்று கலவையாக குரலெழுப்பினர். கோசலமன்னன் “இது வெறும் வீணுரை… அவையை சிறுமைப்படுத்தும் வெற்றுச்சொல்” என்று கூவினான். விதுரர் “ஆம் யாதவரே, இந்த அவையில் எங்கே சொல் முறிந்தது என்று கூறி நிறுவும் பொறுப்பு உங்களுடையது” என்றார்.
“நான் சொல்லவிருப்பது எவரும் அறிந்ததே” என்றார் இளைய யாதவர். “தவள கௌசிகரே, பதின்மூன்றாண்டுகளுக்கு முன்பு பன்னிரு படைக்களம் நிகழ்ந்தபின் கூடிய அரசவையில் கங்கை நீர்தெளித்து வேதமோதி அஸ்தினபுரியின் அரசருக்கு அரியணை ஒருக்கியவர் நீங்கள் அல்லவா?” தவள கௌசிகர் “ஆம்” என்றார். “அன்று ஓதப்பட்ட வேதச்சொல்லும் இதுவே அல்லவா?” தவள கௌசிகர் குரல் தாழ “ஆம்” என்றார். “சொல்க, அன்று அந்த அவையில் சொல்லப்பட்டவை வேதத்தால் ஏற்கப்பட்டவை அல்லவா?” தவள கௌசிகர் “ஆம், வேதம் நிறுவப்பட்ட அவையில் அரசரால் உரைக்கப்பட்ட சொல் வேதச்சொல் என்றே கருதப்படும். அவராலோ பிறராலோ அது மறுதலிக்கப்படுமென்றால் வேதமறுப்பென்றே கொள்ளப்படும்” என்றார்.
“நான் பிறிதென்ன சொல்லவேண்டும், அந்தணரே?” என்றார் இளைய யாதவர். “நீங்களே அறிவீர்கள், அரியணையில் அஸ்தினபுரியின் முடிசூடி குருகுலத்தவராகிய தார்த்தராஷ்டிரர் துரியோதனர் அமர்ந்திருந்த அந்த அவையில் உரைக்கப்பட்ட சொல் என்ன என்று. பன்னிரண்டாண்டுகள் கானுறைவும் ஓராண்டு விழிமறைவும் இயற்றி மீண்டு வந்தால் அஸ்தினபுரியின் பாண்டுவின் மைந்தர் நாடுநீங்குகையில் அவர்கள் விட்டுச்சென்றவை அவ்வண்ணமே திரும்ப அளிக்கப்படும் என்று கூறப்பட்டபோது அந்த அவையில் நீங்களும் இருந்தீர்கள். அந்த அவை அந்தணராலும் மூத்த குடித்தலைவராலும் கற்றறிந்த புலவராலும் நிறைந்திருந்தது. பேரரசரும் அரசரும் பிதாமகரும் ஆசிரியர்களும் பீடம்கொண்டிருந்தார்கள்.”
தவள கௌசிகர் “ஆம்” என்றார். “அந்தச் சொல் பேணப்பட்டதா? இனிமேலாவது பேணப்படுமா? இல்லை அச்சொல் முறிக்கப்படும் என்றால் அதை ஏற்கிறதா நீங்கள் அங்கும் இங்கும் ஓதிய வேதம்?” என்றார் இளைய யாதவர். “அதை நான் உசாவியதில்லை” என்றார் தவள கௌசிகர். “உங்கள் வேதத்தின்மேல் உங்களுக்கு பொறுப்புள்ளது என்றால் இப்போது உசாவுக! அச்சொல் பேணப்படாதென்றால் வேதம் மறுக்கப்பட்டதென்று அறிவித்துவிட்டு அவைநீங்குக!” என அவரை உறுத்துநோக்கி காலடி எடுத்துவைத்து அணுகியபடி இளைய யாதவர் சொன்னார். “அல்லது வேதம்பேணும் பொறுப்பை துறந்துவிட்டேன் என்று கூறி நீங்குக!”
தவள கௌசிகர் நடுங்கிக்கொண்டிருந்தார். “அந்தணரே, இந்த அவையில் நீங்கள் நெறிமீறிவிட்டீர்கள் என நான் உரைத்தது இதுவே. இவையிலொன்றை நீங்கள் செய்து உங்கள் நெறியை இங்கே நாட்டிவிட்டு என்னை புறம்செல்ல ஆணையிடுங்கள்” என்றார் இளைய யாதவர். அதே விசையில் அவைநோக்கி திரும்பி “அன்றேல் இந்த அவை கூறட்டும், இது அந்தணர் சொல்லால் அமையவில்லை, வேதத்தால் நிறுவப்படவில்லை என்று. குலத்திரளாலும் ஆணவங்களாலும் பெருவிழைவுகளாலும் ஆனதே இது என. சொல்லால் அல்ல படைக்கலங்களாலேயே இதன் ஆற்றல் நிலைகொள்கிறது என” என்றார்.
“அதன் பின் எவரும் வேதம் காக்க எழுந்தோம் என்று சொல்லவேண்டியதில்லை. இது வேதங்களுக்கிடையேயான போர் என்று நம்பவேண்டியதுமில்லை. இது தசைநார்களுக்கும் தசைநார்களுக்கும் இரும்புக்கும் இரும்புக்கும் இடையேயான போர் மட்டுமே. அதை அறிவித்துவிட்டீர்கள் என்றால் வெறும் தசைகளாக இரும்புகளாக அவர்களும் வருவார்கள். குருதியின் அளவைக்கொண்டு அறத்தை முடிவுசெய்வோம்…” என்றார் இளைய யாதவர். அவை சொல்லடங்கி விழிகள் மட்டுமாக அமர்ந்திருந்தது. “சொல்க, தொல்குடி ஷத்ரியர்களின் பேரவையில் வேதச்சொல்லுக்கு என்ன மதிப்பென்று நானும் உணர்கிறேன்” என்றார் இளைய யாதவர்.
பெருமூச்சுடன் தவள கௌசிகர் மெல்ல அசைந்தார். “நான் தங்களுக்கு நன்றி உரைத்தாகவேண்டும், இளைய யாதவரே” என அவர் தாழ்ந்த குரலில் சொன்னது அவை முழுக்க கேட்டது. “என் பொறுப்பென்ன என்று எனக்கு காட்டினீர்கள். என் முதுதந்தையின் காலத்திலிருந்து அரசவையில் அவைமங்கலம் இயற்றும் எளிய அந்தணர்களாகவே எங்களை உணர்ந்துள்ளோம். உண்மையில் இதோ, மங்கலத்தாலமேந்தும் அணிச்சேடியருக்கும் நல்லிசை முழக்கும் சூதருக்கும் எங்களுக்கும் குலமன்றி தொழிலில் என்ன வேறுபாடு என்று உணர்ந்ததே இல்லை. மலைகள் திரண்டெழும் காலத்திற்கு முன்பிருந்து தொடர்ந்துவரும் அழியா மரபொன்றின் பேணுநர் நான் என்று எனக்கு உணர்த்தினீர்கள். இதன்பொருட்டு நானும் என் குடியும் உங்களுக்கு கடன்பட்டிருக்கிறோம். ஆசிரியர் என்றமைந்து எங்களை வாழ்த்துக!”
இளைய யாதவர் “அறிந்து உண்டாலும் அறியாமலுண்டாலும் மருந்து நோய் தீர்க்கும். நீங்கள் ஓதிய வேதம் மெய்மையென்றாகும். வாழ்க!” என்றார். கைகூப்பி வணங்கியபின் தவள கௌசிகர் சொன்னார் “இந்த அவையில் வேதச்சொல் வாழ்கிறதா என்று நோக்கும் பொறுப்பு எனக்குண்டு என உணர்ந்தேன். இதை அரசரிடம் உசாவுகிறேன். வேதத்தூய்மை செய்யப்பட்ட அவையில் உரைக்கப்பட்ட சொல் பேணப்படுகிறதா? ஆமென்றால் இந்த அவையில் இப்போதே ஆணை எழவேண்டும். மறுப்பார் என்றால் என் வேதச்சொல்லை மீட்டெடுத்து இந்த அவையை முற்றிலும் மறுதலித்து ஏழு பின்னடி எடுத்துவைத்து நான் அவைநீங்குவேன். என் மூதாதையர் அறிக! என் நாவிலெரியும் வேதம் அறிக! ஆம், அவ்வாறே ஆகுக!”
ஷத்ரியர் உறைந்தவர்களாக அமர்ந்திருந்தனர். முதியவராகிய சோமதத்தர் “பொறுங்கள், அந்தணரே. பெரிய முடிவை சொல்கிறீர்கள். எரியை காட்டில் வைப்பதற்கு நிகர் உங்கள் செயல். அதன் விளைவுகளை நீங்களோ நானோ கட்டுப்படுத்தவியலாது” என்றார். காம்போஜ நாட்டரசனாகிய சுதக்ஷிணன் “அவர் தன் சொல்லை முன்வைத்துவிட்டார். அவர் கடமை அது. அஸ்தினபுரியின் அரசர் தன் முடிவை சொல்லட்டும்” என்றான். ஜயத்ரதன் எழுந்து சினத்துடன் கைநீட்டி “எவரும் அரசரை ஆள்பவர்களாக தங்களை எண்ணிக்கொள்ள வேண்டியதில்லை. நாவடக்கி சொல்லெடுத்தல் நன்று” என்றான்.
சுதக்ஷிணன் “சைந்தவரே, எந்த நெறியின்படி நீங்கள் அங்கே அமர்ந்திருக்க இங்கே பின்னிரையில் நான் அமர்ந்திருக்கிறேன்? வேதம் வகுத்த மூப்பிளமை மரபு அது. யானைமேல் அமர்ந்து யானையை மறுதலிக்கும் அறிவின்மையை நான் செய்வதில்லை. அரசர் சொல்லட்டும், அவர் அவையுரைத்த சொல்லுக்கு என்ன மதிப்பு என்று” என்றான். தார்விக நாட்டரசன் சசாங்கனும் திரிகர்த்த நாட்டரசன் ஷேமங்கரனும் எழுந்து “ஆம், அவர் சொல்லட்டும். அதுவே மெய்” என்று கூச்சலிட்டனர். சௌவீர நாட்டரசர் சுமித்ரர் “ஆம், அவர் சொல்வதே முறை. எது எங்களை இங்கு அமரச்செய்திருக்கிறதோ அது பேணப்பட்டாகவேண்டும். அதை முடிவு செய்தபின் அவைநீளுமென்றால் அதுவே நிகழ்க!” என்றார்.
சகுனி “ஒருபொழுது பொறுங்கள்… ஒரு சொல் மட்டும் கேளுங்கள். இளைய யாதவர் கோருவதை இப்போது அரசர் ஆணையென்று விடுப்பாரென்றால் இந்தப் படைக்கூட்டுக்கு பொருளில்லாதாகும். போருக்கும் வெற்றிக்கும் வாய்ப்பில்லை. நீங்கள் விழையும் நிலமும் செல்வமும் புகழும் அகன்று செல்லும். அதை எண்ணி சொல்லெடுங்கள்” என்றார். புளிந்த நாட்டு அரசன் சுகுமாரனும் அவன் இளையோன் சுமித்ரனும் எழுந்து ஒரே குரலில் “என்ன அறிவின்மை!” என்று சீறினர். சுகுமாரன் “ஆம். நாங்கள் மண்ணையும் செல்வத்தையும் புகழையும் விழைகிறோம். ஆனால் பசுவைக் கொன்று உண்டபின் அதன் நெய்கொண்டு வேள்வி செய்யும் அறிவிலிகள் அல்ல” என்றான். “வேதம் பிழைக்குமென்றால் பின்னர் நாங்கள் ஏந்தியுள்ள கோலுக்கும் பொருளில்லை.”
பூரிசிரவஸ் “நாம் இங்கே கூடிக் கூச்சலிடுவதில் பொருளில்லை. இந்த அவையின் மூத்தவர்கள் சொல்லுரைக்கட்டும். பிதாமகர் பீஷ்மரோ ஆசிரியர்கள் துரோணரோ கிருபரோ மறுமொழி கூறுக! இங்கு நிகழவேண்டியது என்ன?” என்றான். அனைவரும் அவ்வாறு பொறுப்பை அகற்ற விழைந்தவர்கள்போல அமைதியானார்கள். பீஷ்மர் “நான் ஒன்றும் சொல்ல விழையவில்லை. என் சொற்கள் தீர்ந்துவிட்டன” என்றார். பூரிசிரவஸ் “ஆசிரியரே, நீங்கள் சொல்க! அவையில் எழவேண்டிய முடிவு என்ன?” என்றான்.
துரோணர் கைகூப்பி “வேதமே இந்த அவையை அமைக்கிறது. வேதச்சொல் முறியுமென்றால் இங்கு அவையே இல்லை. பிறகென்ன அவைமுடிவு? வேதம் நிலைகொள்ள வேண்டுமென்றால் அரசன் அதைத் தொட்டு உரைத்த சொல்லை காக்கவேண்டும். அதை அவர் மறுப்பாரென்றால் அந்தணர் முதல்வர் வேதத்தை மீட்டுக்கொண்டு வெளியேறலாம். அக்கணமே இங்குளோரெல்லாம் ஷத்ரியர் அல்லவென்றாகிறோம். பின்னர் அசுரரும் நிஷாதரும்போல நாமும் வெறுந்திரளே. அவ்வாறே சென்று நிலம் கொண்டு முடிசூடவும் மண்ணாளவும் செய்யலாம். முடிவெடுக்கவேண்டியவர் அரசரே” என்றார்.
மேகலநாட்டரசன் சுதர்மனும் விகுஞ்ச நாட்டரசன் ஸ்ரீமுகனும் எழுந்து கூச்சலிட்டனர். “அவ்வாறென்றால் அவ்வாறே” என்றான் சுதர்மன். “நாம் வெல்வோம். வெற்றியைத் தொடர்ந்து வேதம் வரும் என்பதே வரலாறு.” ஸ்ரீமுகன் “வென்றபின் அதற்கான வேதியரை தேடுவோம். அவர்கள் எந்த அடர்காட்டிலிருந்தாலும் கொண்டுவருவோம்” என்றான். சிறுகுடி ஷத்ரிய மன்னர்கள் பலர் “ஆம், அது நிகழ்க! அதுவே வழி!” என்று கூவினர். அஸ்வத்தாமன் எழுந்து “அமைதி… கூச்சலிட்டு நாம் இயற்றக்கூடுவது ஏதுமில்லை. அரசர் முடிவெடுக்கட்டும். அதுவரை பொறுப்போம்” என்றான்.
அசலை பானுமதியின் கைகளை பற்றியிருந்தாள். அது நடுங்கிக்கொண்டிருந்தது. பானுமதி அசலையின் கையின்மேல் தன் கையை வைத்தாள். தன் நெஞ்சத்துடிப்பை உடலெங்கும் கேட்டாள். உடலே உடைந்து திறந்துவிடுமென்று தோன்றியது. கண்களை மூடி உதடுகளைக் கடித்து தன்னை அடக்கிக்கொண்டாள். சகுனி எழுந்து “அரசர் முடிவெடுக்கும் முன் தன் உடன்பிறந்தாரிடம் சொல்தேரட்டும். அவர்களுக்கும் உரியது இந்நிலம்” என்றார். சுபலரும் சோமதத்தரும் “ஆம், அவையை ஒத்திவைப்போம். அரசருக்கு பொழுதளிப்போம்…” என்றனர்.
சகுனி “அந்தணரே, அரசர் தன் சொல்பேணுவார். அம்முடிவை அறிவிக்க அவருக்கு பொழுதளிக்க உளம் கனியுங்கள்” என்றார். தவள கௌசிகர் “அவர் எத்தனை பொழுதை வேண்டுமென்றாலும் கொள்க! நாங்கள் இந்த அவையில் இவ்வண்ணமே நின்றிருப்போம்” என்றார். சகுனி மேலும் சொல்ல நாவெடுப்பதற்குள் துரியோதனன் அவரை கைகாட்டி அமர்த்திவிட்டு எழுந்து அவைமுன் நின்றான். அவை உடனே அமைதியாகி அவன் முகத்தில் ஊன்றியது. இரு கைகளையும் விரித்து “அமைக! என் சொல் செவிகொள்க!” என்றான் துரியோதனன்.