நந்தி சிலை நம் சிற்ப மரபின் முக்கியமான சாதனைகளில் ஒன்று. தமிழகத்தில் பிரம்மாண்டமான மாக்காளைகளை சுதைவடிவில்செய்து வைத்திருக்கிறார்கள். கல்லில் வடித்த அழகிய காளைகளும் உண்டு. சில ஆலயங்களில் வெண்கலச்சிலைகளையும் காணலாம். கர்நாடகத்தில் பல ஆலயங்களில் பிரம்மாண்டமான நந்தி சிலைகள் உண்டு. மைசூர் சாமுண்டி குன்றில் உள்ள நந்திதான் கர்நாடக மாநிலத்தின் இலச்சினையாக இருக்கிறது.
ஆனால் ஆந்திர மாநிலம்தான் நந்திகளின் நிலம். குறிப்பாக வட ஆந்திரத்தில் காகதீய பேரரசு ஆண்ட இடங்களில் உள்ள கோயில்களில் கண்ணிலிருந்து ஒருபோதும் அழியாத அற்புதமான நந்திச்சிலைகள் உள்ளன. பெரும்பாலும் கன்னங்கரிய சலவைக்கல்லில் செய்யபப்பட்டவை. இரும்பில் வடித்தவையா என்ற ஐயம் ஏற்படும் படியான வழவழப்பு.. நந்தியின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மணிக்கயிற்றில் உள்ள முறுக்குகளின் ஒவ்வொரு நாரும் தெரியும்படியன சிற்ப நுட்பம். சட்டென்று எழுந்துவிடும் என பிரமையளிக்கும் உயிர்த்தோற்றம். என்னைப்போல வேளாண் பின்னணி கொண்ட ஒருவனுக்கு கால்நடைகளைக் கண்டாலே உள்ளம் நிறைந்துவிடும். எத்தனை பார்த்தாலும் கண்களின் தாகம் அடங்காது.
மாக்காளை உண்மையில் எதைக்குறிக்கிறது? காளையின் ஆற்றல் அளப்பரியது. ஆனால் அத்தனை ஆற்றலும் அழுந்திச் செறிந்து சாந்தமாக உருவான உருவம் அது. நிதானம் மிக்க அசைவுகள். வால் சுழற்றல் கொம்பு குலுக்குதல் தலை திருப்பி விலாவை நக்குதல் அசைபோடுதல் என ஒவ்வொரு சிறு அசைவிலும் நளினம். பெரும் வலிமை உள்ளுறையாக இருப்பதனாலேயே அதன் எல்லா அசைவிலும் ஏன் அசைவின்மையிலும்கூட ஆழ்ந்த கம்பீரம்.
பெரும்பாலும் நந்திகள் முன்காலை தூக்கி வைத்து மறு கணம் எழப்போகும் பாவனையில் இருக்கும். விழித்தெழும் கணத்தில் அளவிலா பெரும் சக்தி — அதுவே நந்தி.
சாங்கிய யோகத்தில் கண்ணன் அர்ஜ்ஜுனனிடம் பேசும் லௌகீகவாதம் முழுக்க அவனுள் எழப்போகும் மேலும் ஆழ்ந்த கேள்விகளை உசுப்பும் முகாந்தரம்தானா என்ற எண்ணம் நமக்கு உருவாகும். கீதையின் இப்பகுதியில் பார்த்தன் ஆற்றல் திரண்டெழும் கணத்த்தில் நிறைந்து ததும்பி நிற்கிறான். ஆகவே மிக விரைவிலேயே கண்ணன் சாங்கியத்திலிருந்து முன்னகர்ந்துசென்றுவிடுகிறான்.
39 . பார்த்தா
இதுவரை சொல்லப்பட்டது
சாங்கிய அறிவு.
எதனுடன் இணைந்தால்
செயல்களில் உழல்தலை
நீ துறப்பாயோ
அத்தகைய
யோக அறிவை
இனிக் கேட்ப்பாயாக!
40. இவ்வழியில்
பெறப்பட்டவை
அழிவதேயில்லை.
இதை அடைவதற்குத்
தடைகளுமில்லை.
வாழ்வில் இதை
துளியேனும் கடைப்பிடித்தால்
பெரும் அச்சங்களும்
அகல்கின்றன.
41. குருலம்சத்திற்கு பிரியமானவனே
இதில்
நிலைத்த ஞானம் ஒருமை கொண்டது.
நிலைத்த ஞானம் இல்லாதவர்கள்
அறிவோ
கிளைபிரிந்து
முடிவிலாது விரிகின்றது.
42. பார்த்தனே
வேதங்களுக்காக வாதிட்டு
அதைவிட மேலாக ஏதுமில்லை
என்று கூறும்
மலர்போன்ற சொற்களுக்கு
உரியவர்கள்
43. உலக இன்பங்களில் திளைத்து
விண்ணுலகத்தை விழைந்து
பிறவிச்சுழலில் உழற்றும்
செயல்களில் அமிழ்ந்ததும்
சொற்களையே பேசுவர்.
போகங்களையும் செல்வங்களையும்
மட்டுமே நாடுவர்.
44. இவர்கள்
அறிவை இழந்தவர்கள்
சொற்கத்துக்கும்
போகத்துக்கும் மட்டுமே
ஆசைகொள்கிறார்கள்
இவர்களின் புத்தி
ஒரு நிலைப்பட்டு
அமைதி கொள்வதில்லை
45. அர்ஜுனா
வேதங்கள்
முக்குணங்களைப் பேசுபவை
நீ
முக்குணங்களை வென்று
இருமையறுத்து
யோகத்தையும் சுயநலத்தையும்
பிரித்து நோக்காதவனாக
ஆத்மாவில் நிலைபெற்றவனாக
இருப்பாயாக.
46. எங்கும் நீர் பரந்தொழுகும்போது
கிணறுகளால் என்ன பயன்?
அதுவே
வேதங்களைக் கற்றறிந்த
வைதிகன் நிலையும்.
47. செயலாற்றவே
கடமைப்பட்டுள்ளாய்
விளைவுகளில்
மனம் வைக்காதே
செயலின் விளைவுகளில்
கருத்துன்றி
செயல்பட எண்ணாதே
செயல்படாதிருக்கும்
இச்சையும் கொள்ளாதே.
48. தனஞ்சயனே
நீ
யோகத்திலமர்ந்து
பற்றுகளை விட்டு
வெற்றியிலும் தோல்வியிலும்
சமநிலையுடன்
செயலாற்றுக
சமநிலையே யோகம்
எனப்படும்.
49. தனஞ்சயனே
அறிவுசார் யோகத்தைவிட
செயல்
தாழ்ந்தது.
ஆகவே
அறிவைச் சரணடைக!
பயன் விழைந்து பணியாற்வோர்
இழிந்தோர்.
50. ஞானத்தில் நின்றவன்
நல்வினைகளையும் தீவினைகளையும்
இங்கேயே கைவிடுகிறான்
ஆகவே
யோகத்திற்காக இணைத்தறிக
செயல் திறனே யோகம்.
51. ஏனெனில்
யாருடைய மனம்
யோக அறிவில் உள்ளதோ
அவர்கள்
செயலின் விளைவை உதறி
அறிவர் ஆகி
பிறவிப் பற்றுகள் களைந்து
துயர் அறுத்து
உயர்நிலை அடைகிறார்கள்.
52. எப்போது
உன் அறிவு
விருப்பால் கறைபடுதலை
கடக்குமோ
அப்போது
கேட்டதிலும் கேட்கவேண்டியதிலும்
மேலான உறுதியை
நீ அடைவாய்
53. வேதங்களின்
பொருள்வய நோக்கால்
குழம்பிய
உன் அறிவு
அசைவற்று
ஆழ்ந்த அமைதியில்
நிலைக்கும்போது
நீ
யோகத்தை அடைவாய்.
இந்தப்பகுதியில் செயலாற்றுவதன் மிகச்சிறந்த நடைமுறையே கிருஷ்ணன் கூறுகிறார். சாங்கிய யோகத்தை நடைமுறைத் தத்துவம் என்றால் இதை தத்துவத்தின் நடைமுறை எனலாம். ஏன் செயலாற்ற வேண்டும் என்பது முதல்பகுதி என்றால் எப்படிச் செயலாற்ற வேண்டும் என்பது இப்பகுதி.
பொதுவாக பல உரைகளில் சாங்கிய யோகம் என்ற தலைப்பு குறித்த ஒரு தடுமாற்றம் இந்த இடத்தில் வரக்காணலாம். கீதையின் தலைப்புகளில் கடைசித் தொகுப்புரையிலும் வரும் ‘யோகம்’ என்பது முரணியக்க அணுகுமுறையை குறிக்கிறது. ஆனால் இங்குள்ள யோகம் என்பது யோகம் என்னும் நடைமுறையைச் சுட்டுகிறது. அதாவது தியானத்தை உள்ளடக்கிய ஒரு யோகசாதனையைக் குறிக்கிறது. இப்பகுதியின் தலைப்பு இருபொருள் சுட்டும்படி இருக்கிறது என்று வேண்டுமானால் கொள்ளலாம்.
யோகத்தில் அமைதல்
சாங்கிய தரிசனத்தின் ஒரு வளர்ச்சி நிலையாகக் கருதப்படும் யோக தரிசனம் பதஞ்சலியின் ‘யோக சூத்திரம்’ என்றும் மூலநூலால் வரையறை செய்யப்பட்டது. பல்வேறு வகையில் பதஞ்சலி யோக சூத்திரம் கூறும் யோகதரிசனம் அதற்கு பலநூற்றாண்டுகளுக்கு முன்னரே உருவாகி படிப்படியாக வளர்ந்து வந்த ஒன்று என்பது அறிஞர் கருத்து.
மிகச் சுருக்கமாக யோகத்தை இவ்வாறு வரையறை செய்யலாம். ஆதி இயற்கை அல்லது மூலப்பிரகிருதி தன் முக்குணங்களும் சமநிலை இழந்து பன்மையாகி இப்போது நாமறியும் பிரபஞ்சமாக உள்ளது. (இப்பிரபஞ்சத்தின் தொடக்கம் பற்றிய சாங்கிய தரிசனம் நவீன பெருவெடிப்புக் கோட்பாட்டை நெருங்கி வரக்கூடிய ஒன்று.) இதை பார்ப்பவனாகிய புருஷனும் இதன் விளைவாக தன் முக்குண சமநிலையை இழந்து பன்மை வடிவமாக இருக்கிறான். அவன் முக்குணங்களின் இணைப்புகளின் விளையாட்டில் அலைக்கழிக்கப்படுகிறான். அவனுக்கு மீட்பு எப்படி வரும்?
அன்றைய தரிசனங்கள் அனைத்திடமும் அன்றைய தத்துவச் சூழல் அவை சொல்லும் முக்திக்கான வழி (விடுதலை நெறி) என்ன என்னும் வினாவை முன்வைக்கும்.மதற்குச் சொல்லும் பதிலை வைத்தே அது முன்வைக்கும் வாதங்களை பரிசீலனை செய்வார்கள். சாங்கியத்தைப் பொருத்தவரை துக்க நிவாரணமே முக்தியாகும். துக்கம் என்பது அறியாமையின் விளைவு. முக்குணங்களின் சமநிலை இழந்த தன்மையே அறியாமையாகும். (இக்கருத்தைப் பிற்பாடு பெளத்தம் விரிவாக எடுத்தாண்டது. கபிலருக்கும் பெளத்ததுக்கும் இடையேயான உறவு ஆழமானது. கபிலர் புத்தரின் ஊரான கபிலவாஸ்துவில்தான் பிறந்தார் என்றும் அப்பெயர் அவரால்தான் அவ்வூருக்கு வந்தது என்றும் கூறப்படுகிறது.) இவ்வாறு அறியாமை அகற்றி முக்திபெற சாங்கியம் உருவாக்கிய நெறியே யோகம். பிற்பாடு யோகம் வேறுசில தனித்த கருதுகோள்களையும் உருவாக்கிக் கொண்டது.
யோகம் புருஷனின் இடைவிடாத முக்குணங்களின் சமநிலைக்கான தத்தளிப்பை இல்லாமல் ஆக்க முயல்கிறது. ‘யோகம் என்பது உளச் செயல் நிறுத்தல்’ என்று தொடங்கும் பதஞ்சலி யோக சூத்திரம் அதற்கான நடைமுறைப் பயிற்சிகளை முன்வைக்கிறது. உளச்செயல் என்ற ஓயாத அலைமூலம் தன்னை பிரகிருதியுடன் இணைத்து பலவாகப் பார்க்கும் புருஷன் உளச்செயல் ஓயும்போது தூயநிலையில் தூய பிரகிருதி¨யுயம் தூய தன்னிலையையும் அறிந்து அதனுடன் ஒன்றாகிறான். இப்படி ஒன்றாகும் நிலையே யோகம் ஆகும். யோகம் என்றால் இணைதல் என்றுதான் சொற்பொருள்.
இங்கு கிருஷ்ணன் பேசும் யோகம் முழுமையான யோகம் அல்ல. படிப்படியாகவே அது விரிவடைகிறது. இது சாங்கிய யோகம் மட்டுமே. அதாவது நடைமுறைத் தளத்தில் உள்ள யோகம் இது. யோகத்தைச் செய்வதன் மூலம் நடைமுறை வாழ்வை எத்தனை சிறப்பாக அமைக்க முடியும் என்பது குறித்த சிந்தனைகள்தான் இங்கே முன் வைக்கப்படுகின்றன. இங்கு கூறப்படும் யோகம் பதஞ்சலி யோக சூத்திரம் முன் வைக்கும் யோகத்துடன் மிக மேலோட்டமாக மட்டுமே ஒத்துப் போகிறது.
பதஞ்சலி முனிவர் யோகத்தை ஒரு குறிப்பிட்ட வகையான செயல்பாடாகக் குறிப்பிடும்போது கிருஷ்ணன் கூறும் யோகம் ஒவ்வொரு செயலிலும் உள்ளுறைந்திருக்கும் ஒரு மனநிலையாக உள்ளது என்பதை தெளிவாக நாம் மனதில் நிறுத்தியாக வேண்டும்.
இதை எடுத்துக் கூறும் டாக்டர் ராதாகிருஷ்ணன் இது முந்தைய சாங்கியம், யோகம் இரண்டையும் நிராகரித்து கீதையால் முன்வைக்கப்படும் ஒரு தனித்த அறிவுத்தரப்பு என்றும், இது ஒரு இறையியல் மதம் (Theistic Religion) என்றும் கூறமுற்படுகிறார். இது மேலோட்டமான ஒரு நோக்கு. கீதை இந்து மதத்திற்குள் தனிமதம் எதையும் உருவாக்கவில்லை. அத்வைதம், விசிஷ்டாத்வைதம் போல தனித்த கருத்து நிலையாகக் கூட எக்காலமும் அது நிலைகொள்ளவில்லை அது வேதாந்தத்தின் தலைநூலாகவும், உபநிடதங்களின் வழி நூலாகாவும், அனைத்து இந்து ஞான வழிகளுக்கும் பொதுவான வழிகாட்டி நூலாகவும் மட்டுமே விளங்கி வந்தது.
மேலும் இறையியல் (Theism) போன்ற மேலைநாட்டு சொற்களை இந்து ஞான மரபில் கையாளும் போது உருவாகும் பொருட்குழப்பம் எளியதல்ல. ஒரு எளிய மேலைநாட்டு வாசகன் — ஏன் நமது கல்விப்புல வாசகனும் அதில் ஒருவனே – இதை அவர்களின் ஒரிறைக் கோட்பாட்டுடன் குழப்பிக் கொள்ளக்கூடும். அப்படிக் குழப்பிக் கொண்டு எழுதப்பட்ட உரைகளையும் நாம் காணலாம்.
உதாரணமாக பல தெய்வ வழிபாட்டில் ஊறிக்கிடந்த இந்து மதத்திற்கு கீதை ஒரிறைக் கோட்பாட்டை உணர்த்த முற்பட்டது என்று பலர் கூறியிருக்கிறார்கள். இது தவறான புரிதல் என்று கூற வேண்டியதில்லை. ‘ஓன்று மட்டுமேயான அதுவே பற்பலவான இவையனைத்தும்’ என்ற ரிக்வேத தரிசனம் இன்றுவரை இந்து ஞானமரபின் எல்லா கிளைகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு இறைக்கோட்பாடாகும். அதை கீதை புதிதாகச் சொல்லவில்லை.
அச்சமின்மையும் யோகமும்
யோகத்தின் பயனை விளக்கும் இங்குள்ள தொடக்கப் பாடல்களில் 40ஆவது பாடலைப்பற்றி பொதுவாக விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. யோகத்தின் முதற்பயனாக கிருஷ்ணன் கூறுவது, ‘அது நம்மை அச்சத்தில் இருந்து விடுவிக்கிறது’ என்பதே. சுவாமி. விவேவகானந்தர் அவரது உரைகளில் மிக விரிவாக விவாதித்துள்ள ஒரு விஷயம் இது. மனிதனை அவனுடைய அனைத்து நல்லியல்புகளில் இருந்தும் வழுவச் செய்து, அவன் இயல்புக்கு மாறானவற்றை செய்ய வைத்து, அவனை ஆன்மிகமாக கீழிறக்கும் முக்கியமான காரணம் அச்சமே என்று விவேகானந்தர் குறிப்பிடுகிறார்.
அச்சம் பலவகைப்படுகிறது. உயிர்மேலான அச்சம், எதிர்காலம் குறித்த அச்சம், சமூகம் பற்றிய அச்சம் என்று இவற்றை பலவகையில் குறிப்பிட்டு வருகிறோம். தத்துவார்த்தமாகச் சுருக்கினால் அச்சம் மூன்றுதான். 1. மரணத்திற்கான அச்சம் 2. தன்னிலை அழிவு குறித்த அச்சம் 3. காலத்தின் தற்செயல் தன்மை அல்லது ஊகிக்க முடியாமை குறித்த அச்சம். [மேலைநாட்டு இருத்தலியல் சிந்தனைகளில் இது Angst என்று சொல்லபப்டுகிறது. இருத்தலியலின்படி தீர்வே இல்லாத ஆழ்ந்த மனத்தத்தளிப்பு இது. தமிழில் பறதி என்ற கலைச்சொல்லால் இது சுடப்படுகிறது]
உயிர் தன் உடலில் நீங்காது இருக்கும் விருப்பு கொண்டது. உயிரை இழக்காது இருக்க உடல் கொள்ளும் முயற்சியே உடலின் முழு ஆற்றலும் வெளிப்படும் தருணம் என்னும் போது அதுவே உடலின் முதன்மை விழைவு என்று புரிகிறது. உயிரச்சம் என்பது உயிர்கள் அனைத்திற்கும் இயல்பானது ஆனால் விவேகம் மூலமும் மனப்பயிற்சி மூலமும் உயிர்ச்சத்தை மனிதர்கள் கடக்க முடியும். உயிரச்சத்தைக் கடந்தவனே வீரன் எனப்படுகிறான்.
ஆனால் அவனும் கடக்க முடியாத அச்சம் என்பது தன்னிலை அழிவு குறித்தது. தன் அகங்காரம் அழிவுபடுவதை, இழிபெயர் சூழ்வதை, தீராத அவமானங்களுக்கு ஆளாவதை மரணத்தைவிடக் கொடியதாக எண்ணுவது மனித இயல்பு. கீதையிலேயே அர்ஜுன விஷாத யோகத்தில் அர்ஜுனன் மிக அஞ்சி குறிப்பிடுவது அதையே. அவனுக்கு சாங்கிய யோகத்தில் பதில் கூறும் கிருஷ்ணன் அவன் போரை நடத்தாவிட்டால் அவனுக்கு வரும் தீங்காகக் குறிப்பிடுவதும் அதையே.
மூன்றாவதாக மனிதனை ஆட்கொள்ளும் அச்சம் பிரம்மாண்டமான வடிவில் காலத்தைக் காணும்போது ஏற்படுவது. அவன் இருப்பை துளியினும் துளியாக மாற்றி இன்மை வரை கொண்டு போவது முடிவிலாக் காலவெளி. அதுவோ அவனால் ஒரு போதும் அறிய முடியததாக உள்ளது. அடுத்தக் கணம் என்ன நிகழும் என்று இக்கணம் ஊகிக்க இயலாததாக உள்ளது. அந்த திகைப்பூட்டும் முடிவிலி முன் மனிதன் அஞ்சி நிற்கிறான்.
இன்னும் சுருக்கமாக இம்மூன்று அச்சங்களையும் பார்த்தால் ‘தன்னிலையழிவு’ என்று ஒரே அச்சமாகச் சுருக்கி விட இயலும். நான் இருக்கிறேன், நான் இப்படிப்பட்டவன், இவை என்னவை- இந்த மூன்று நிலைபாடுகளின் அழிவையே மேலே சொன்ன மூன்று அச்சங்களும் குறிக்கின்றன. அச்சத்திற்கு ஆளானவனின் சுயத்துவம் முதலில் அழிகிறது. நீரில் விழுந்தவனின் அசைவுகள் ஒத்திசைவை இழப்பது போல அவன் சிந்தனையில் தர்க்கமும் ஒழுங்கும் இல்லாமலாகின்றன. பிறகு அவன் எதையும் செய்வான்.
உலகின் ஆற்றப்படும் மாபெரும் பாவங்கள், மகத்தான கொடுமைகள் அச்சம் கொண்ட மானுடர்களால் ஆற்றப்படுவனவே. ஹிட்லர், ஸ்டாலின், போல்பாட் என்று நாம் மாபெரும் சர்வாதிகாரிகளின் வரலாற்றை எடுத்துப் பார்க்கும்போது இந்த அச்சத்தையே காண்கிறோம். அச்சம் கொண்ட எளிய மனிதர்கள் தங்கள் ஆளுமைத் தனித்தன்மைகளை உதறி பெரும் கும்பலாகத் திரள்கிறார்கள். அச்சத்தினால் திரட்டப்படும் இந்தக் கும்பல் எதையும் செய்யத் துணிந்தாக மாறிவிடுகிறது.
கீதையின் முக்கியமான இயல்பாக பல இடங்களில் விவேகானந்தர் குறிப்பிடுவது அது அச்சத்தை விரட்டும் என்பதே. மனிதர்களை ஒன்றாகத்திரட்டி பொதுவான மூர்க்கமான நம்பிக்கையை உருவாக்கி அவர்களை வெறிகொண்ட கும்பலாக மாற்றுவதன் மூலம் உருவாக்கப்படும் ஒற்றைப்படையான வேகமல்ல இந்த அச்சமின்மை. தன்னை உணர்ந்தவனிடம் ஏற்படும் நிதானம் மூலம் உருவாகும் அச்சமின்மை இதைக் குறிப்பிடும் இந்த வரியை ஒரு தியான மந்திரமாகவும் குறிக்கிறார்கள்.
நிலைபெறு மனமும் யோகமும்
41வது பாடலை யோகத்தின் முக்கியமான விளைவைச் சுட்டக் கூடிய ஒன்று என்று பொருளாக உரையாசிரியர் கூறுவதுண்டு. யோகத்தில் ஒருங்கிணைபவனுடைய மனம் என்பது ஒரே திசையில் பயணம் செய்வது. ஏனெனில் அது தன் நிலையை அறிந்தது. யோகபுத்தி அற்றவர்களின் மனம் கிளைகளாகப் பிரிந்து முடிவில்லாது பெருகுவது. ஆறு எப்போதெல்லாம் வேகத்தை இழக்கிறதோ அங்கெல்லாம் அது பல கிளைகளாக பிரிந்து பற்பல திசைகள் நோக்கிச் செல்ல ஆரம்பிக்கிறது. ஆற்றின் வேகம் என்பது கடலை நோக்கிய விழைவேயாகும். கடலின் திசையில் இருந்து தயங்கி விலகும் போதுதான் ஆறு வேகமிழந்து கிளை பிரிகிறது. யோக புத்தி என்பது சிந்தனையின் இறுதி நிலையயைக் கண்டு விட்ட ஒன்று. அதற்கு திசைத்தடுமாற்றங்கள் இல்லை.
நாம் அறியும் மனம் என்பது கிளை பிரிதலையே தன் இயல்பாக உடையது. ஒரு நிமிடம் தன் இயல்பில் மனதை ஓடவிட்டு கவனித்தோமெனில் அது அதற்குள் பல நூறு கிளைகளாகப் பிரிந்திருப்பதைக் காணலாம். அப்படி பிரிபயும் கிளைகளை கவனித்தால் அதில் ஒரு வியப்புக்குரிய விஷயம் உள்ளது. ”இன்று அலுவலகத்தைவிட்டு முன்னரே போகவேண்டும். திரைப்படம் ஆறுமணிக்கு, சாப்பிடவில்லை, இட்டிலி உப்புமா பண்ணியிருந்தால் வீட்டில் ரகளைதான் இன்று, பாவம் மனைவிதான் என்ன செய்வாள் அவளுக்கும் வேலை, அவளுக்கு ஐஸ்கிரிம் வாங்கிக் கொடுக்கவேண்டும். சிறுவயதில் ஐஸ்கிரீம் இல்லை குச்சி ஐஸ்தான். குல்லாய் வைத்த ஒரு பாய்தான் ஐஸ் விற்பார். அம்மா ஒரு ஐஸ் வாங்கத்தான் பணம் தருவார்கள், நேரமாகிறது” என்று பாயும் மனதை பதிவு செய்து கூர்ந்து பார்த்தால் அப்படி பிரியும் ஒவ்வொரு கிளையும் ஒர் ஆசையையே தேடிச் செல்கிறது என்று தெரியும்.
வெளிப்படையான ஆசை. மறைத்து வைக்கப்பட்டு ஆசை. நாமே அறியாத ஆசை! எறும்புகள் உணவைத் தேடிச் செல்வது போல ஒவ்வொரு எண்ணமும் நமது ஆசைகளின் ஒரு துணுக்கையே முகர்ந்து துழாவி அலைகின்றன. ஆற்றை தன்னை நோக்கி இழுக்கும் கடல் எனும் பெரும்பள்ளத்தின் ஈர்ப்பு சற்றே வலு குறைகையில் அதைவிட சிறிய பல பள்ளங்களை நோக்கி ஆறு பிரிகிறது. இக்காரணத்தாலேயே பக்தி மரபில் இந்தச் சின்னஞ்சிறு ஆசைகள் அனைத்தையுமே இறைவன் மீதான ஆசையாக உருமாற்றம் கொள்ளச் செய்தனர். ‘உண்ணும் பெற்றிலை உடுக்கும் உடை’ முதல் அனைத்தையும் இறைவனின் சுவையாக மாற்றிக் கொள்ளும் மனநிலையே பக்தி என்கிறோம். நம் ஆலயங்கள் பூசைகள் அனைத்தும் இந்த நோக்கத்தையே உடையவை. சுவை, நறுமணம். அழகிய காட்சிகள், இசை, இனிய சூழல் என அனைத்து பொறிகளுக்கும் இறைவனின் வழிபாடு உகந்ததாக இருக்கச் செய்தனர். இங்கு திசை திரும்புதல் கூட இறைவனை நோக்கி இட்டுச் செல்கிறது.
பயன்கருதா செயல்
யோகம் என்பது குவிந்த நிலை, நிலை கொண்ட நிலை, அந்நிலையில் அலைபாய்தல் இல்லை, உளவல்லமை சிதறுவதில்லை என்று கூறும் கிருஷ்ணர் அதை யோகத்தின் பயனாகவும் யோகத்திற்கான வழிமுறையாகவும் கூறுகிறார் என்பதை பிற பாடல்கள் மூலமாக அறியலாம். இது சாங்கிய யோகமாதலால் கிருஷ்ணன் இப்பகுதியில் அன்றாட நடைமுறை வாழ்வின் செயல்களை எப்படி யோகமாக ஆக்குவது என்றுதான் பேசுகிறார்.
47வது பாடல் பெரும்புகழ் பெற்ற ஒன்று. ‘உனக்கு செயல் செய்வதற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. செயலின் விளைவுகளில் உளம் செலுத்தாதே. செயல்களைச் செய்யாமலும் இருக்காதே’ என்ற புகழ்பெற்ற ஆணை இங்குதான் கூறப்படுகிறது. பலதளங்களில் ஒரு மாபெரும் தியான மந்திரமாகக் கொள்ளப்படும் இவ்வரி அதன் சூழலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு வேறு பலவாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணவேதாந்த்ததை சற்றும் அறியாதவர்கள் இதை மட்டும் தங்கள் போக்கில் விவாதித்து அதிபுத்திசாலித்தனமாக ஏதாவது சொல்ல முனைவதை நாம் எங்கும் காணலாம்
முதலில், கிருஷ்ணன் இவ்வரியை அன்றாட வாழ்வை மிகத்திறமையாகச் செய்து அதை ஒரு யோகமாக ஆக்குவதற்கான வழி முறையாகவே கூறுகிறார். ஒருசெயலின் விளைவைப்பற்றி செயலாற்றும்போதே எண்ணுபவன் ஒருபோதும் அதை சரியாகச்செய்ய முடியது. வெற்றிகரமான செயல் என்பது செய்யும் கணத்தில் அச்செயல் தரும் நிறைவை மட்டுமே கருத்தில் கொண்டு செயலைத்தவிர வேறு நினைப்பே இல்லாமல் முழுமையாக ஒன்றி செய்யக்கூடியதாகும்.
இரண்டாவதாக, மனம் கிளைபிரிதல் என்பது யோகத்திற்கு எதிரானது என்றும் யோகம் ஒருமித்த மனம் கொண்ட செயல் என்றும் கூறி அதற்கான வழியாக இதைக் குறிப்பிடுகிறார். செயலை கிருஷ்ணன் யோகம் என்கிறார். யோகம் என்பது மனம் குவிதல். செயலின் விளைவுகள் என்பவை ஆசைகள் சார்ந்தவை. அங்கே கிளைபிரியும் மனம் செயல் என்ற யோகத்தை இழந்துவிடுகிறது
மூன்றாவதாக 43, 44, 45, 46 ஆம் பாடல்களில் இன்ன வேள்விக்கு இன்ன பயன் என்று வகுத்துக் கூறி வேள்விச் செயலில் ஈடுபடுத்தும் வேதங்களை நிராகரித்து செயலாற்ற தூண்டும் கிருஷ்ணன் அதன் சாரமாகவே இந்த வரியைச் சொல்கிறார். வேதங்களின் கர்ம காண்டம் முழுக்க முழுக்க இதைச்செய் இன்ன பயன் கிடைக்கும் என்று சொல்கிறது. செய்த செயலின் பயன் ஒரு பொருள் போல அழியாகமல் காலவெளியில் நின்று கொண்டிருக்கும் என்று சொல்லி அதை ‘அபூர்வம் ‘ [முன்பு இல்லாதிருந்தது] என்று வகுக்கிறது. அந்த கருத்தை ஒட்டுமொத்தமாகவே நிராகரித்து 51,52,53 ஆம் பாடல்களில் அதை மீண்டும் கூறி வலியுறுத்தி முடிக்கிறார் கிருஷ்ணன். ஆகவே பயன்கருதாமல் செயலாற்று என்பதை ஒரு தொடர் கூற்றாகவே நாம் அணுகவேண்டும்.
முதலில் நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இது. இதே சாங்கிய யோகத்தில்தான் கிருஷ்ணன் செயலாற்றுக, அச்செல் மூலம் உனக்கு புகழும் விண்ணுலகும் மண்ணின் போகங்களும் கிடைக்கும் என்று கூறினார். இப்பாடலில் விளைவை எதிர்பாராது செயலாற்றுக என்றார். இந்த முரண்பாடு ஏன்?
இதுவே கீதையின் முரணியக்கம். ஒரு நடைமுறை வாதியாக முதலில் பேச ஆரம்பிக்கிறார். கிருஷ்ணன் செயலின் நல்விளைவுகளைக் கூறி ஆசைகாட்டியும் ,தீய விளைவுகளைக் கூறி அச்சுறுத்தியும், செயலாற்றத் தூண்டுகிறார். இது முதல்கட்டம். இப்பகுதியில் இருந்து இன்னும் அடுத்த நுண்தளத்திற்கு நகர்ந்து செயலின் அறிவார்ந்த உட்கிடக்கைகளைப் பற்றிப் பேசுகிறார். ஒரு தளத்தில் நின்று கூறியதை முரணியக்கம் மூலம் தாண்டிச் சென்று அடுத்த தளத்தில் இன்னொரு கோணத்தில் பேச ஆரம்பிப்பது கீதையின் இயல்பாக இறுதி வரை வருவதை வாசகர் கவனிக்க வேண்டும்.
யோகத்தில் ஈடுபட்டு செயலாற்றுபவன் அல்லது செயலையே யோகமாக ஆக்கிக் கொண்டவன், அச்சமின்றி இருக்கிறான். அச்சமின்மை மூலமே அவன் செயலை மேலும் மேலும் திறம்படச் செய்கிறான். யோகத்திலமர்ந்து செயலாற்றுபவன் சிதறாத உள்ளத்துடன் செயலாற்றுகிறான். அவ்வண்ணம் செயலாற்றுவதற்கு அவசியமானதே விளைவுகள் மீதான பற்றை விலக்குதல். செயலில் அச்சத்தை உருவாக்குவது விளைவு நோக்குதான் செயலில் குவிவதைத் தடுப்பதும் அதுதான். எனவே அவ்விரண்டுக்கும் அடுத்தபடியாக கிருஷ்ணன் ‘பயன்கருதா செயல்’ என்பதை முன்வைக்கிறார்.
சுவாமி சித்பவானந்தர் அவரது உரையில் சிறந்த ஒர் உவமையைக் கூறுகிறார். அறுவை சிகிச்சை மேடையில் கிடப்பது தன் ஒரே மகன் என்று கண்ட பிறகு அதைச் செய்து முடிக்க மருத்துவர் துணிவாரா? மாட்டார். அவரது கை நடுங்கும். காரணம் பற்று. பற்றில் இருந்து விளைவுகளைப் பற்றிய எதிர்பார்ப்பு அதில் இருந்த அச்சம். அச்சத்தில் இருந்து மன ஒருமை இல்லாமல் போதல். ஆகவே செயல் சிதறியழிகிறது. கிருஷ்ணன் இங்கு கூறுவது இந்த எளிய, அடிப்படையான விஷயத்தையே.
பற்றில்லாமல் பலன் கருதாமல் செயலை ஏன் செய்ய வேண்டும் என்பதற்கான காரணம் கீதையிலேயே தொடர்ந்து மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. வெற்றியிலும் தோல்வியிலும் நிலை குலையாத சமநிலைக்காகவே. இங்கே வரும் ‘விருப்பத்தால் கறைபடிந்த அறிவு’ என்ற சொல்லாட்சி தத்துவார்த்தமாகச் சிந்திக்கும் பழக்கம் உள்ளவர்களை வெகு தொலைவுக்கு இட்டுச் செல்லக் கூடியதாகும். வெறுப்பால் கறைபடிந்த அறிவு இழிந்தது. ஏனெனில் அது ஒரம் சார்ந்தது. நடுநிலை இல்லாததனாலேயே அது அதிதமான உணர்ச்சி வேகத்தையும் தீவிரத்தையும் கொண்டிருக்கும். அது அழிவுச்சக்தி. இதை ஒவ்வொருவரும் அறிவர்.
ஆனால் விருப்புடன் இணைந்த அறிவும் கறை படிந்ததே. அது இன்னும் இழிந்தது. இன்னும் ஒரம் சார்ந்தது. இன்னும் தீவிரமானதும் இன்னும் அழிவு தருவதுமாகும். காரணம் வெறுப்பில் திளைக்கும் அறிவுக்கு உள்ளூர ஒன்று தெரியும். தன்னிடம் வெறுப்பு உள்ளது, வெறுப்பு தீங்கானது, ஆகவே தன் ஞானம் கறைபடிந்தது என்று மாறாக விருப்புடன் கூறிய அறிவு அத்தகைய தன்னுணர்வுக்கு இடமற்றது. விருப்பை அது ஒரு சிறப்பாகவே எண்ணிக் கொள்கிறது.
இங்கு பொதுவாக எழும் வினா ஒன்று உண்டு ‘மோகம்’ என்று கூறப்படுவது ஏன் ஒரு உயர்ந்த விருப்பமாக இருக்கலாகாது? உலகம் மகிழ்வுடன் இருக்க வேண்டும், நாடு செழிக்க வேண்டும் என்பதும் மோகம் தானே? அது ஒருவனுக்குச் செயலாற்றும்போது இருக்கலாகாதா? இங்கு மோகம் என்ற சொல் மிகக் கவனமாகவே கீதையில் போடப்பட்டுள்ளது என்று காணலாம். மோகம் என்றால் ‘விருப்பம்’ என்றல்ல, கச்சிதமாகச் சொன்னால் ‘அடைவதற்கான விருப்பம்’ என்றே பொருள்படும். சரிதுல்லியமான தமிழ்ச் சொல் ‘விழைவு’ என்பதே. மானுட மனதைப் பீடிக்கும் அழுக்குகளாக காமம், குரோதம், மோகம் ஆகிய மூன்றும் குறிப்பிடப்படுகின்றன. இங்குள்ள மோகம் எனும் சொல் இம்மூன்றில் ஒன்றுதான்.
செயலாற்றும் ஒருவனுக்கு உண்மையிலேயே பெரும் இலட்சியங்கள் இருக்குமெனில் அதை அவன் தன்னுடைய நோக்கமாக வரையறுக்காமல் தன்னிலிருந்து வேறுபடுத்திக் கொள்வது சற்றும் சிரமமானதல்ல. ஒருவன் தன்னுடைய விழைவையே தன்னில் இருந்து வேறுபடுத்த இயலாது ‘நாடு நலம் பெற வேண்டும்’ என்பது ஒரு இலட்சியம். ‘என்னால் என் நாடு நலம் பெற வேண்டும்’ என்பது விழைவு. விழைவில் இருந்து தன்முனைப்பும் அதிலிருந்து இயல்பாகவே விளைவுகளை எண்ணி பதற்றமும் உருவாகி விடுகின்றன. ஆகவேதான் கிருஷ்ணன் மீண்டும் ‘பலனை விழைகிறார்கள் இழிந்தோர்’ என்று கூறுகிறார்.
வேதங்களும் கருமங்களும்
இப்பகுதியில் வேதங்களுக்கு கீதை அளிக்கும் மறுப்பு இந்து ஞான மரபில் கடந்த இருபது நூற்றாண்டுகளாக தத்தளிப்பை உருவாக்கிவருவதாகும். நித்ய சைதன்ய யதி ஒர் உரையாடலில் இவ்வண்ணம் குறிப்பிட்டார். ”வாளை அதன் எதிரே வரும் ஒவ்வொன்றும் மழுங்கடிக்க முயல்கின்றன. வேதாந்தத்தை அத்துடன் உரையாடும், அதற்கு உரையளிக்கும், அதை விரித்துப் பேசும் ஒவ்வொரு தரப்பும் ஏதோ ஒருவகையில் மழுங்கடிக்கவே முயல்கின்றன.” நான் ‘சங்கரர் கூடவா?’ என்று கேட்டேன். “ஆம், சங்கரரும் நாராயண குருவும் கூடத்தான்” என்றார் நித்யா. நான் வியப்பில் பேச்சிழந்தேன்.
நித்யா விளக்கினார். வேதாந்தம் என்பது அதிதூய அறிவுவாதம். அறிவின் சமரசமில்லாத தீவிரம்தான் அதன் இயக்கம். அடுத்த படியாக வேதாந்தம் முழுமுற்றான ஒருமைவாதம். ‘இருப்பது ஒன்றே, அதுவே இவையெல்லாம்’ என்ற நிலைபாடு வேதாந்தத்தின் உள்ளே உள்ள சக்திமையம். ஆனால் வேதாந்தத்தை நடைமுறை உலகுக்குள் கொண்டுவர அதை மழுங்கடித்தே ஆகவேண்டியுள்ளது. கூரிய வாளை எடுத்துக் கொண்டு சந்தை நெரிசலில் நடப்பது போன்றது வேதாந்தத்துடன் உலகியலில் ஈடுபடுவது. வேதாந்தத்தை அணுகும் ஒவ்வொருவரும் அதை பயன்படுத்திக் கொள்ள விழைபவர்கள். அந்த நோக்கமே வேதாந்தத்தை மழுங்கடிக்க ஆரம்பித்து விடுகிறது.
வேதாந்தம் வேள்விகள், கோயில்கள், இறைவேதங்கள், புராணங்கள், சடங்குகள், மற்றும் நம்பிக்கைகள் அனைத்திற்கும் முழுமுற்றாக எதிராகத்தான் இருக்க இயலும். ஆனால் சங்கரருக்குக் கூட வேதங்களை முற்றாகக் கைவிட முடியவில்லை. அவர் ஒருங்கிணைக்க முயன்ற பல அறிவுத்தரப்புகள் வேதங்களை ஆதார நூல்களாகக் கொண்டவை. ஆகவே பற்பல விளக்கங்கள் மூலம் அவர் அத்வைத வேதாந்தத்தை வேதங்களையும் ஒரமாகத் தொட்டுக் கொள்ளும் ஒரு அறிவுத்தரப்பாக நிலை நாட்டுகிறார். தேவையானபோது வேதாந்தத்தை வேதங்களிலேயே கண்டடைகிறார்.
அதேபோல நாராயணகுருவுக்கு சமூக நோக்கம் இருந்தது. அதற்கான சமரசங்கள் தேவையாயின. வேதாந்தியான நாராயண குருதான் கோயில்களை நிறுவினார், ‘தெய்வதசகம்’ எழுதினார். ‘தெய்வமே காத்துக் கொள்க’ என்று தொடங்கும் பிரபலமான பிரார்த்தனைப் பாடல் நாராயண குருவின் தத்துவ சமரசத்திற்கு உதாரணம். ‘அறிவும் அறிபடு பொருளும் அறிபவனும் ஒன்றாகும்’ நிலையையே அதன் கடைசிச் சரணங்களில் நாராயண குரு வேண்டுகிறார். ‘அறிவில் தேர’ வேண்டுமென்று பிரார்த்தனை செய்யும் அப்பாடல் ‘ஆழணும் ஆழணும் சுபம்’ என்று முடிகிறது. முற்றிலும் வேதாந்தப்பாடல்! ஆனால் தெய்வத்திடம் வேதாந்தப் பிரார்தனையை நடத்துகிறது அது. எந்த தெய்வம்? அறிவும் அறிபடு பொருளும் அறிபவனும் வேறிலாத ஒரு நிலை! கேரளத்தில் கோடிக்கணக்கான மக்களுக்கு சந்நிதியில் விளக்கேற்றிவைத்து கும்பிட்டு பாடுவதற்கு ஒரு பிரார்த்தனைப் பாடல் வேண்டும் என்று குருவிடம் கேட்கப்பட்ட போது மிக எளிய ‘நாட்டு மலையாள’ மொழியில் இதை அவர் எழுதி அளித்தார்.
ஆனால் இத்தகைய சமரசங்கள் வழியாக வேதாந்தம் பிற அனைத்து சிந்தனைகளிலும் ஊடுருவியது என்பதும் உண்மையே. சபரிமலை ஐயப்பனை, நெய்தீபமும் நிலைபறையும் சூழ அமர்ந்திருக்கும் தூலமான மூர்த்தியை ‘வேதாந்த சொரூபனே’ என்று விளித்து ‘சரணம் அய்யப்பா’ என்று வணங்குகிறோம் அல்லவா? நாராயணகுரு செய்ததும் அதுவே. எளிய இறையுருவகங்கள் மீது வேதாந்தத்தின் முதல் முழுமை (The Absolute) என்ற இறையுருவத்தை ஏற்றிவிடுகிறார். நித்யா கூறி முடித்தார்.
நடைமுறைத்தளத்தில் வேதாந்தத்தை சற்று ‘வீரியம் குறைத்த’ பிறகே பயன்படுத்த முடியும். ஆகவே அத்தகைய முயற்சிகள் இயல்பானவை. நம் கவனத்தை பெரிதும் கவர்பவை வேதம் குறித்த மழுங்கடித்தல்கள்தான். வேதங்கள் இரண்டாக பிரிக்கத்தக்கவை. அதாவது உட்கருத்தின் அடிப்படையில். ஒரு தேவைக்காக நிகழ்த்தப்படும் தர்க்கபூர்வமான பிரிவினை இது. நடைமுறையில் பார்த்தால் ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தைத் தவிர பிறவற்றை இவ்வாறு ஒரு பொது அமைப்பில் இருந்து பிரித்தெடுக்க இயலாது.
உலகியல் நலன்களுக்காக பிரார்த்தனை செய்வதும், உலகியல் நலன்கள் பொருட்டு வேள்விக் கருமங்களில் ஈடுபடச் செய்வதும், வேள்விக் கருமங்களுக்கு விதிமுறைகளை அளிப்பதுமான வேத வாக்கியங்களை ‘கர்ம காண்டம்’ சார்ந்தவை எனலாம். மெய்ஞானம் சார்ந்த தரிசனங்கள் கொண்ட பகுதிகளை வேதங்களில் உள்ள ‘ஞானகாண்டம்’ எனலாம். இதன் உச்சமே ரிக்வேதத்தில் உள்ள புகழ்பெற்ற ‘சிருஷ்டி கீதம்’ என்ற பாடல். இன்றுவரை இந்து ஞானமரபு எதிர்கொள்வதும் மையமான வினாவும் அதற்கான உச்சகட்டமான பதிலும் இப்பாடலில் உள்ளன.
வேதாந்தம் என்பது வேத இறுதி. (வேத+அந்தம்.) அது ஞானகாண்டத்தில் இருந்து தொடங்கி முன்னகர்கிறது. உபநிடதங்கள், கீதை, பிரம்ம சூத்திரம் மூன்றும் வேதாந்த நூல்கள் என்று கண்டோம். ஆகவே அவற்றின் தொடக்கம் வேதத்தில் உள்ள ஞான காண்டமே. ஆகவே அவை இயல்பாகவே வேதங்களில் உள்ள கர்மகாண்டத்தை நிராகரிக்கின்றன.
கீதை வேதங்களை 42, 43, 44, 45, 46ஆம் பாடல்களில் தெளிவாக எடுத்துக்கூறி நிராகரிக்கிறது. கர்ம காண்டத்தை வேதமாகக் கண்டு அதைப் பின்பற்றுபவர்களை உலகியல் நாட்டம் உடையவர்கள், அதன் நீட்சியாக இறந்த பிறகு சொற்கத்தை விரும்புவார்கள், பிறவிச் சுழலில் உழல்பவர்கள் என்று கிருஷ்ணன் குறிப்பிடுகிறார். உலக இன்பத்தையே ஆளுமை நிறைவாக எண்ணும் இவர்கள் அந்த நிலையின் இழிவை உணர்ந்தவர்கள். ஆதலால் மலர் போல மென்மையான சொற்களைப் பேசி அந்த உலகியல் நாட்டத்திற்கு ஒரு ஆன்மீக முகம் அளிக்க விரும்புவார்கள்.
(இங்கு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட பக்திமதங்களை வாசகர் கருத்தில் கொள்ளலாம். அவற்றில் மண்ணில் உள்ள போகங்களே எப்போதும் விழையப்படுகின்றன. அதே போகங்கள் தட்டில்லாமல் கிடைக்கும் இடமே அவர்களுக்கு சொர்க்கம். அதாவது அவர்களைப்பொறுத்தவரை ஒரு ஆளுமையானது போகங்கள் மூலமே நிறைவு அடைய முடியும். அந்த போகங்கள் மண்ணில் டஹ்டைசெய்யப்பட்டிருப்பதனால் விண்ணில் தடையில்லாமல் கிடைக்கின்றன. அவர்களின் ஆன்மீகம் என்பது இப்போகங்களுக்காக வேண்டுவதும், அவற்றுக்கான நிபந்தனைகளை நிறைவேற்றுவதும் மட்டும்தான்.)
வேதங்கள் முக்குணங்களைப் பற்றிப் பேசுபவை என்கிறார் கிருஷ்ணன். இங்கு உத்தேசிக்கப்படுவது சத்வ, ராஜோ, தமோ, குணங்களை ஒருவனின் முக்தி என்பது முக்ககுணங்களை வென்று யோகத்தில் நிலைபெற்று ‘ஆத்மவானாக’ இருப்பது. நாராயண குருவின் சொற்களில் ‘தன்னில் தான் முழ்கி தானாக’வே இருப்பது. அதற்கு வேதங்கள் தேவை இல்லை. வேதங்கள் கிணறுகள் போல. ஞானமே பொங்கிப் பெருகி நிலம் மூடி திசை நிறைக்கும் பெருவெள்ளம். அந்தப் பெருவெள்ளத்தைக் கண்டவனுக்கு நீர் நிலைகளால் என்ன பயன்? முதலில், நீர்நிலைகளே இருக்காதே, அவை பெருவெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டிருக்குமே…?
இங்கு கவனிக்க வேண்டிய ஒரு கருத்து உண்டு. இது சில உரையாசிரியர்களால் கூறப்பட்டுள்ளது. நீர்தான் பெருவெள்ளமாக பொங்கிப் பரப்பதும், கிணற்றில் ஊறுவதும். கிணற்றில் ஊறும்போது அது எல்லைக்குட்பட்டது. சிறியது. ஆனால் தாகம் தீர்ப்பது. பெருவெள்ளம் வரும்வரை அதுவே போதுமானது. பெருவெள்ளம் வரும்போது இந்த நீர் இயல்பாகவே பொருளிழந்து போகிறது. பக்தியிலும் கருமங்களிலும் உள்ளதும் ஆன்மிக ஞானமே. ஆனால் அவை எல்லைக்குட்பட்டவை. ஞானம் வரும்வரை பக்தி தேவை, ஞானம் கிடைத்தபின் பக்தி பொருளிழந்துபொகும் என சில உரையாசிரியர் விளக்குகிறார்கள். கிரிதாரி பிரசாத் தன் உரைகளில் இந்த வரிகளைச் சொல்வதுண்டு.
வேதங்களை நிராகரித்த பிறகுதான் அதன் தொடர்ச்சியாக கிருஷ்ணன், செயலாற்றுவதே கடமை, பலனை எதிர்பார்பது அல்ல என்கிறார். ஆகவே இன்னும் ஒரு நுண்ணிய பொருள் இங்கு வருகிறது. மீமாம்சகர்களைப் பொருத்தவரை வேதமும் வேள்வியும் தான் மாறாத உண்மையும் அழியா நெறியும் ஆனவை, வேதங்கள் என்றும் உள்ளவை-அழியாத ஒலிகள். அவற்றை ரிஷிகள் கேட்டு பிறருக்காக அளித்தனர். அவை மீறவோ மறுபரிசீலனை செய்யவோ முடியாத மூலவிதிகள். இந்த தரப்பே பூர்வ மீமாம்சம்.
வேதங்கள் கூறும் வேள்விச்சடங்குகளின் அடிப்படையில் பூர்வமீமாம்சகர்கள் ஒரு கர்ம சித்தாந்தத்தை உருவாக்கியளித்தனர். மானுடர் கருமங்களைச் செய்ய கடமைப்பட்டவர்கள். நான்கு வருணமும் தத்தம் கடமைகளைச் செய்தல்தான் கருமம். பிராமணர் செய்யும் கருமமே வேள்விகள். ஒவ்வொரு செயலுக்கும் அதற்கான விளைவு உள்ளது. விளைவு இல்லாத கருமமே இல்லை. சிறந்த விளைவை நாடியே கருமங்களைச் செய்ய வேண்டும். வேதங்கள் ஒவ்வொரு வேள்விச் சடங்குக்கும் இன்னின்ன பயன்கள் உண்டு என்று கூறுகின்றன. அவை பெரும்பாலும் உலகியல் நலன்களே ஒருவன் ஆற்றும் வேள்விக்கான பயன் என்பது இறைவனால் அல்லது வேதியர்களால் இரங்கி அருளப்படுவதல்ல. அந்த வேள்விக்ககான விளைவு அது என்பது பிரபஞ்ச விதி. அந்த விதிக்கு தேவர்களும் இறைவனும் கூட கட்டுப்பட்டவர்கள்.
இவ்வாறு விளைவை ஒரு முன் நிபந்தனையாகவே செயலுக்கு விதிக்கும் மீமாம்சத்ததைத்தான் கிருஷ்ணன் இங்கு தீவிரமாக நிராகரிக்கிறார். கீதையின் பல பகுதிகள் மிகவும் தொன்மையானவை என்பதற்கு இதையும் சான்றாகக் கூறலாம். மிகவும் தொடக்கால உபநிடதங்களிலேயே இப்படி வேதங்களுக்கு எதிரான வேதாந்தத்தின் நிலைப்பாடு சமரசமற்றதாக உள்ளது. பிற்காலத்தில் உபநிடதங்கள் வேதங்களை தக்க வைத்துக் கொண்டு பேசவேண்டிய நிலைக்கு வந்தன. பலர் கூறுவதுபோல குப்தர் காலத்திய (கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு) நூலாக கீதை இருக்கும்பட்சத்தில் இத்தகைய நேரடியான வேத எதிர்ப்பை அதில் கண்டிப்பாக காணச் சாத்தியமாகியிருந்திராது. அந்த நூலுக்கு விரிவான அங்கீகாரமும் கிடைத்திருக்காது.
மேலும் கீதையில் சில பாடல்களுக்கு முன்னால்தான் ‘உனக்கு சொர்க்கமும் போகமும் கிடைக்கும்’ என்று கிருஷ்ணர் கூறுகிறார். அப்பகுதி பிற்காலத்தில் கீதை இன்றைய வடிவில் ஆக்கப்பட்ட போது உருவாக்கப்பட்டது. அதைத்தாண்டி வேதங்களையும் பிற பலன்கருதும் செயல்களையும் நிராகரிக்கும் இப்பகுதி தொன்மையானது. கீதையின் முரணியக்க அணுகுமுறை இந்த வரலாறு சார்ந்த முரண்பாட்டை அல்லது வடிவ முரண்பாட்டை சரிசெய்து கொண்டு முன்னால் செல்கிறது.
ஆத்மா அறிவியல் ஆன்மீகம்:கடிதங்கள்
தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம்