அருந்ததி ராய்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

அருந்ததி ராய் பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்தேன். 2000த்தில் இண்டியன் எக்ஸ்பிரஸில் நீங்கள் இதையே எழுதியிருந்தீர்கள் என்று ஞாபகம். அப்போது நான் உங்களை சந்தித்திருக்கிறேன். இதைப்பற்றி பேசியும் இருக்கிறேன்.

அருந்ததி ராய் பற்றிய உங்கள் கடைசி வரி கொஞ்சம் அதீதமானது. அவரை ஐந்தாம்படை என்றெல்லாம் ஒரு கோபத்தில்தான் சொல்லியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். சமீபத்தில் ஊடகங்கள் அவரை ஏற்றி வைக்கும் உயரமும் அவர் அங்கே செய்யும் அரசியல் தந்திரங்களும் எல்லாரையும்தான் ஆத்திரபப்ட வைத்திருக்கின்றன. சமீபத்தில் நான் சந்தித்த எல்லா கன்னட எழுத்தாளர்களும் அதைத்தான் வெளிப்படுத்தினார்கள்.

அருந்ததி ராயை தூக்கி நிறுத்தியதில் இந்து என்.ராமுக்கு இருக்கும் பங்கும் ராமுக்கு இருக்கும் சீன உறவுகளும் எல்லாருக்கும் தெரிந்த விஷயங்கள்தான். ஆனால் அருந்ததியின் அரசியலை நான் சீன அரசியல் என்று சொல்லமாட்டேன். அந்த அளவுக்கெல்லாம் அவருக்கு முக்கியத்துவம் இல்லை. இந்திய உயர்மட்ட முற்போக்குவாதத்தின் ஒரு குரல். அதை நான் ஸ்டார்ஹோட்டல் முற்போக்கு என்று சொல்வேன். பெக்குக்கு நாலாயிரம் ரூபாய் கேட்கும் ஓட்டல்களில் முற்போக்கு பொங்குவதை கண்டிருக்கிறேன். அருந்ததியின் வாசகர்கள் அவர்களே. அவர்களுக்காகவே அவர் இந்த வேஷங்களை எடுக்கிறார்.

ஜெயமோகன், நீங்கள் ஒன்று கவனிக்கலாம். இன்று ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஓர் இந்திய வெறுப்பு உள்ளது. அதை இந்திய இளக்காரம் என்றும் சொல்லலாம். அதற்கு காரணம் இந்துமதம் என்றும் இந்துமதத்தின் மீது மிஷனரிகள் உருவாக்கிய வெறுப்பின் நீட்சி என்றும் சிலர் சொல்லலாம். அதைக்காட்டிலும் இந்தியாவின் வலிமை பற்றிய [மிகைப்படுத்தப்பட்ட] அச்சம் தான் காரணம் என்று சொல்வேன்

மிகச்சில இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் தவிர பிறர் இந்த இந்தியவெறுப்பின் மீது ஏறி பயணம் செய்யத்தான் முயல்கிறார்கள். அதை அருந்ததி ராய் இன்னும் கொஞ்சம் ஆவேசமாக செய்கிறார். இந்திய அரசை எதிர்ப்பது என்றபேரில் அவர் இந்தியப்பண்பாட்டை ஒட்டுமொத்தமாக இழிவுபடுத்துகிறார். இந்தியா அநீதியின்மீது மட்டுமே செயல்படும் அமைப்பு என்று காட்டமுயல்கிறார். அதற்கு உலகளாவிய ஒரு சந்தை உள்ளது

இதெல்லாம்தான் அருந்ததியின் அரசியல். அவருடையது ஊடகங்களுடன் கொள்ளும் ஒரு வகையான சல்லாபம்[ Flirting ] தான். ஒரு கொடுக்கல் வாங்கல். ஊடகங்களுக்கு நீங்கள் நினைப்பதுபோல உள் அரசியல் ஏதும் பெரிதாக இல்லை. அருந்ததியைப்போல வேறு யாராவது ஊடகங்களுக்கு தீனி போட்டாலும் அவர்களையும் அவை தூக்கிப்பிடிக்கும். காரணம் இந்த ஆங்கில ஊடகங்களை வாசிப்பவர்களுக்கும் போலியான முற்போக்கு முகம் தேவைப்படுகிறது.இந்த வணிக நாடகம் தேசத்தின் தன்னம்பிக்கையையும் மக்களின் தார்மீக நம்பிக்கையையும் அழிக்கிறது என்பதுதான் சோகம் [மொழியாக்கம்]

சி

பெங்களூர்

அன்புள்ள சி,

என்னுடைய கோபம் இப்படி ஒரு கருத்துத் தரப்பு இருப்பதைப் பற்றியது அல்ல. இப்படி பல தரப்புகள் இருக்கலாம். ஜனநாயகம் என்பதே கருத்துக்களினால் ஆனதே. என் கோபம் அருந்ததி இந்தியாவின் குரலாக எப்படி ஆக்கப் பட்டார் என்பதைப்பற்றியதே. எப்படி இந்திய இலக்கிய மேதைகளுக்கு மேலாக அவர் மேலைநாட்டு/ இந்திய ஆங்கில ஊடகங்களால் முன் வைக்கப் படுகிறார் என்பதைப் பற்றியதே.

இன்று அவர் மெல்ல மெல்ல ஒரு முற்போக்குப் புனித பசுவாக ஆக்கப் பட்டு விட்டார். யோசித்துப்பாருங்கள், தமிழில் நான் எழுதிய கட்டுரையை எந்த சிற்றிதழேனும் போடுமா? எல்லா சிற்றிதழ்களும் ஒரே நிலை பாடு எடுத்திருக்கின்றன. ஒரே குரலில் பேசுகின்றன. ஒரே தரப்பாக ஒலிக்கின்றன. ஒரு எளிய மாற்றுத் தரப்பைச் சொன்னால்கூட நாம் இந்துத்துவ வெறியனாக முத்திரை குத்தப் பட்டு விடுவோம். அதை அத்தனை பேரும் அஞ்சுகிறார்கள், அவ்வளவுதான்.

ஆச்சரியம்தான், தான் வாழும் நாடு ஒன்றாக இருக்கவேண்டும் அமைதியாக இருக்க வேண்டும் என விரும்புபவன் அடிப்படைவாதியாக முத்திரை குத்தப்படும் நிலை. அவன் குரலுக்கு வெளிவரும் வழிகளே இல்லாமலாகும் நிலை. அழிவை, பிளவை பேசும் குரல்கள் முற்போக்காக, சமூகத்தின் ஒரே குரலாக, கேள்விக்கப்பாற்பட்ட இலட்சியவாதமாக முன்வைக்கப்படுதல்.

இன்றைய இந்திய சூழல் வேறெந்த நாட்டிலாவது எப்போதாவது வந்திருக்கிறதா என்றே தெரியவில்லை.

ஜெ

அன்புள்ள ஜெமோ,

வழக்கம் போல தங்களின் கருத்துக்களை மிக தெளிவாகவும், நேரடியாகவும் முன் வைத்துள்ளீர்.

இதே போல தாஜ்மஹால் இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகங்களாலே இந்தியாவின் / இந்திய கலையின் முகமாக முன்வைக்கபடுகிறது. தாரசுரமும், சோம்னாத்பூரும் (மற்றும் இதுபோல எண்ணற்ற கட்டிட / கலை உச்சங்கள்) இருக்கும் நாட்டில் தாஜ் மஹால் இந்தியாவின் / இந்திய கட்டடக்கலையின் முகமாக முன்னிருத்தபடுவது நமக்கெல்லாம் அவமானந்தானே? (தாஜ் மஹால் அழகான ஒரு கட்டிடம்தான். ஆனால் எந்த ஒரு திராவிட கட்டிட கலையுடனும் அதை சாதரணமாக கூட ஒப்பிடமுடியாது.) ஆனால் அது உலக அதிசயங்களில் ஒன்றாக அதை மேலை நாட்டினர் ஏற்றுக்கொண்டு, அதை நாமும் நம்புகிறோம். இதை பற்றிய தங்களின் கருத்துகளை எதிர்பார்கிறேன்.

-சிற்றோடை

அன்புள்ள சிற்றோடை,

கலை, இலக்கிய ரசனைகளில் [எல்லாவகையான சுவைகளிலும் அப்படியே] ஒரு குறிப்பிட்ட இயல்பு உண்டு. நாம் எதற்குப் பழக்கப்பட்டிருக்கிறோமோ அதுவே நன்றாகத் தெரியும். சரியானதாக தோன்றும்.

ஆரம்ப காலத்தில் இந்தியாவுக்கு வந்த வெள்ளையர்களுக்கு இங்குள்ள கருங்கல் கோயில்களும் கரிய சிலைகளும் அழகாகவே படவில்லை. கருப்பில் அழகைப்பார்க்கும் கண் அவர்களுக்கு இல்லை. ஆரம்பகால ஜெசூட் பாதிரிகள் நம் கோயில்சிலைகளையும் கோபுரங்களையும் பற்றி மிகுந்த அருவருப்புடன் எழுதியிருக்கிறார்கள். கால்டுவெல், மீட் துரை போன்றவர்கள் இந்தியச் சிற்பங்கள் ஆபாசமானவை என்று எழுதினார்கள்

அவர்கள் கண்ணுக்கு ஆக்ரா மற்றும் டெல்லியின் சிவந்த கட்டிடங்கள் அழகாக தெரிந்தன. தாஜ்மகால் பேரழகாக. காரணம் அந்த கட்டிடக்கலை அவர்களுக்கு ஏற்கனவே பழக்கமான ஒன்று. இஸ்லாமியக்கட்டிடக் கலை துருக்கி வழியாக ஸ்பெயின் சென்று ஐரோப்பாவில் பரவி இருந்தது. ஆகவே தாஜ்மகால் அவர்களுக்கு அழகாக பட்டது. தஞ்சை பெரியகோயில் அசிங்கமாக. இதற்கு விதிவிலக்கு லார்ட் சீவெல் போல சிலர். அவர்களும் பின்னால் வந்தவர்கள்

இந்திய சிற்பக்கலை, கட்டிடக்கலை ஆகியவற்றின் கலைத்திறனும் தத்துவ உட்கிடக்கையும் பின்னர் ஆனந்த குமாரசாமி போன்றவர்கள் வழியாகவே மேல்நாட்டு ரசனைக்கு புரியவைக்கப்பட்டது. ஆனால் இன்றும்கூட சாதாரண வெளைய பயணிகளுக்கு மதுரை மீனாட்சியம்மன் கோயில் போன்றவை கலையனுபவத்தை அளிப்பதில்லை என்பதை பல முறை கவனித்திருக்கிறேன். ‘மலைக்குகைக்குள் சென்ற அனுபவம்’ என என்னிடம் சிலர் சொல்லியிருக்கிறார்கள். வீரபத்ரனையும் காளியையும் ‘டெமென்’ என்று சொல்லியிருக்கிறார்கள்

நம் கலையை, நம் இலக்கியத்தை அவர்களுக்கு நாம் பழக்கப்படுத்தலாம். ஜப்பானியர் அதைத்தான் செய்தார்கள். சீனர்கள் அதைத்தான் செய்கிறார்கள். ஆனால் நம்முடைய படித்த உயர்வர்க்கத்துக்கும் வெள்ளையர்களுக்கு இருக்கும் அதே அன்னியத்தன்மை நம் மரபுமேல் இருக்கிறது. அவர்கள் வெள்ளையர்கள் நம்மிடம் காணும் சிறப்புகளை மட்டுமே தாங்களும் சிறப்பாக ஒத்துக்கொள்கிறார்கள். ஆகவேதான் தாஜ்மகால் இவர்களுக்கும் முதன்மையானதாக தோன்றுகிறது

தாஜ்மகால் இந்தியாவின் மகத்தான கலைப்பாரம்பரியச் சொத்துதான் என்பதில் ஐயமில்லை. ஆனால் அது ஒரு தனி மரபைச் சேர்ந்தது. இந்திய கட்டிடக்கலையில் நான்கு வழிகள். பௌத்த கட்டிடக்கலை, முகலாயக் கட்டிடக்கலை இரண்டு. இந்து கட்டிடக்கலையில் தெற்கு வடக்கு என இரு பிரிவுகள். அஜந்தாகுகைகளும் சாஞ்சியும் முதல் மரபுக்கும், தாஜ்மகாலும் கோல்கும்பாஸும் இரண்டாம் மரபுக்கும், கஜுராஹோவும் கொனார்க்கும் மூன்றாம் மரபுக்கும் தஞ்சைபெரிய கோயிலும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலும் நான்காம் மரபுக்கும் உதாரணங்கள்

நாம் நம்மை பீடித்திருக்கும் அடிமைத்தன்மையை விலக்கி நம் சுயத்தை அறிந்து பெருமிதம் கொள்ளும்போதே நம்மைப்பற்றிய மதிப்பை பிறரிடம் உருவாக்குகிறோம். நம் கலைகளையும் இலக்கியத்தையும் நாம் அடையாளம் காணும்போதே பிறர் அதை காண ஆரம்பிக்கிறார்கள். இல்லையேல் பிறர் அவர்களின் ரசனையை நம் மேல் சுமத்துவார்கள். அடிமைகள் பொதி சுமந்தேயாகவேண்டும்

ஜெ

=====================================

அன்புள்ள ஜெ.,

இங்கே அருந்ததி ராயை காக்கா பிடிக்க நடக்கும் போட்டிகளைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். சோப்பு முதல் இசை, இலக்கியம் வரை சகலமும் இந்தியர்கள் மீது ஒருவித அடிமைத்தனத்தைக் கட்டமைத்து அதன் மூலமே விற்பனை செய்யப்படுவது வேதனையான விஷயம்.

இது எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு நிரந்தரத் தீர்வு தான் இருக்க முடியும்… அது நாம் நம் பண்பாட்டை, கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை அதன் பெருமைகளை உணர வேண்டும்… அமெரிக்கனும், அவன் ஆங்கிலமும் கடந்த சில நூற்றாண்டுகளின் கால ஓட்டத்தில் ராட்டினத்தின் மேல் உயர்ந்திருக்கும் இருக்கைகளே அன்றி வேறில்லை; அந்த ராட்டினம் சுற்றிக்கொண்டே இருக்கும் என்பது நமக்கு உறைக்க வேண்டும். இதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கு இல்லை…

நன்றி
ரத்தன்

அன்புள்ள ரத்தன்

ஆம், கண்ணெதிரே சீனாவின் அழகியலை அமெரிக்கா ஏற்றுக்கொள்வதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். வென்றவனின் ரசனையே சாமானியர்களுக்கு உவப்பானதாக படுகிறது. நாமும் வெல்லக்கூடும்

அப்போது நம் கலையும் இலக்கியமும் அங்கீகாரம் பெறவும்கூடும்

ஜெ

===================================

ஜெ,

அருந்ததி ராயையும் அவர் கருத்தியலையும் துல்லியமாகப் பகுப்பாய்வு செய்து எழுதியிருக்கிறீர்கள். மேற்கத்திய நுகர்வு கலாசாரத்தின் முகமாகப் பார்க்கப் படவேண்டியவர், அறச்சீற்றத்தின் முகமாக, ஒடுக்கப் பட்டவர்களுக்கான போராளியாக ஊடகங்களில் தொடர்ந்து முன்வைக்கப் படும் அவலம் இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஆங்கில ஊடகங்களை விடுங்கள். தமிழில் வெகுஜன ஊடகங்களும் சரி, “மாற்று” ஊடகங்களும் சரி, எங்கும் அருந்ததி ராயின் அபத்தக் கருத்துக்கள் எதிர்க்கவோ விமர்சிக்கப் படவோ இல்லை. மாறாக, துதி பாடப் படுகிறது. ”காஷ்மீர், ஈழம், மாவோயிஸ்ட்டுகள்… என அனலடிக்கும் பிரச்னைகள் அனைத்திலும் நேர்மையின் பக்கம் நிற்கும் எழுத்துப் போராளி! ” – சமீபத்திய ஆனந்த விகடனில் அருந்ததி ராய் பற்றிய ஒரு பக்கக் கட்டுரையின் தலைப்பு இது. ஆனால் அதில் எங்கும் அவர் காஷ்மீர்/மாவோயிசம் பற்றி என்ன சொல்கிறார் என்ற தகவல் இல்லை. நடிகர் சூர்யா தனக்குப் பிடித்த பத்து பெண்களில் ஒருவர் என்று “நெருப்பு” அருந்ததி ராயைச் சிலாகிக்கிறார் (விகடன் தீபாவளி மலர்). திருமாவளவனும், காலச்சுவடும், உயிர்மையும் சளைக்காமல் அருந்ததி ராயின் புகழ் பாடுகிறார்கள். இத்தனைக்கும் இந்திய தேசியம் என்கிற அரசியல், சமூக யதார்த்தத்தின் செழுமையால் கொழுத்து வளர்ந்தவர்கள் இவர்கள் எல்லாரும். அந்த வேரையே கெல்லி எறிவதற்குத் துணைபோகிறார்கள்.

இந்தக் கொடுமையான சூழலில், உங்கள் குரல் நல்வாழ்வும், அமைதியும், வளர்ச்சியும் விழையும், பண்பாட்டுணர்வு கொண்ட தமிழனின் மனச்சாட்சியின் குரலாகவே வெளிப்பட்டுள்ளது. மிக்க நன்றி.

அன்புடன்,
ஜடாயு

http://www.tamilhindu.com/author/jatayu/

அன்புள்ள ஜடாயு,

இந்திய ஊடகங்களில் சுயமான பார்வை உள்ளவை அனேகமாக ஏதும் இல்லை. எங்கோ ஒருவர் ஏதோ ஒன்றை சொல்லிவிட்டால் சில நாட்களிலேயே அதை அத்தனைபேரும் எதிரொலிப்பார்கள். சொல்பவர்கள் எவர் எனபதே முக்கியமானது

இரு உதாரணங்கள். டேவிட் டாவிதார் இங்கே பெங்குயின் இந்தியா பதிப்பகத்தில் தலைமை பொறுப்பில் இருந்தபோது அவரது The House of Blue Mangoes என் ற மிகச்சுமாரான நாவலை ஒரு மாபெரும் காவியம் என இங்குள்ள ஊடகங்கள் தூக்கிப்பிடித்தன. பின்னர் பேச்சே இல்லை

சிலவருடங்கள் முன்பு விக்ரம் சந்திரா என்பவர் எழுதிய Red Earth and Pouring Rain என்ற அபத்தமான குப்பையை இந்திய ஆங்கில ஊடகங்கள் முழுப்பக்க கட்டுரைகளைப் போட்டு கொண்டாடின.

உழைத்துச்சேர்த்த காசை கொடுத்து இந்நூல்களை வாங்கிய நான் கசந்துபோனேன். விக்ரம் சந்திராவின் நாவலை கிழித்து வெளியே வீசினேன்.

காரணம், இந்நூல்களுக்கு மேலை ஊடகங்களில் பெரிய அளவில் சாதக மதிப்புரைகள் வந்தன என்பதே. டேவிட் டாவிதார் பிரசுர அமைப்பில் இருப்பவர். விக்ரம் சந்திரா பெர்க்லி போன்ற புகழ்பெற்ற பல்கலைகளில் படைப்பிலக்கியம் கற்பிப்பவர்

அங்கே என்ன எழுதுகிறார்களோ அதையே இங்கே எழுதுகிறார்கள். நம் ஆங்கில ஊடகங்களில் இதழாளர்களே இலக்கியத்தை தீர்மானிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆங்கில இதழ்கள் என்ன எழுதுகின்றனவோ அதை, மூலங்களைக்கூட வாசிக்காமல், நம் சிற்றிதழ்களில் எழுதுகிறார்கள்

ஜெ

முந்தைய கட்டுரைகடிதங்கள், இணைப்புகள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா பதிவுகள்