கடிதங்கள்

22

மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு
புதுவைக்கு இதன் பொருட்டு கிளம்பும்போதுகூட  மிகத் தயக்கமாகவே இருந்தது.பொதுவாகவே நான் இருமுறை  கலந்துகொண்ட சென்னை விவாதக் கூடுகையிலேயே சில புரிதல்கள் உருவாகி யிருந்தன. முதலில்  கூடுகையின்போது என்னைப் போன்ற புதியவர்கள் ஆர்வ கோளாறில் பேசி முடித்தால் தெரியவருவது இங்கிருப்பவர்கள் நுட்பமான வாசிப்பனுபவம் உடையவர்கள் மட்டுமல்ல அடுத்த தலைமுறை இலக்கிய எழுத்தாளர்களும்கூட….என்பதே.ஆனால் அதையும் தாண்டி இந்த அறியாமையை சுலபமாகத் தாண்டிச் சென்று நாமும் அவர்களில் ஒருவரே என்று உணரச்செய்யவும் தெரிந்தவர்கள்.குறிப்பாக,நண்பர்கள் ராஜகோபாலனும் காளிப்பிரசாதும் (எனக்குத் தெரிந்த இரண்டு கூடுகை வரை).

 
புதுவையில் தங்களை சந்திப்பதே முதல் நோக்கமாக இருந்தது.சென்னை வருகையை தவறவிட்டது மிகப்பெரிய வருத்தம்.ஹாலில் அமர்ந்திருந்த உங்களைப் பார்த்தவுடன் அம்மையப்பம் சிறுகதையில் வரும் சிறுவன் நினைவு ஏனோ வந்தது.அதில் வருவது போலவே ஏதோ நடப்பதை உற்றுப்பார்த்துக்கொண்டு எட்டி இருப்பதைப் போன்ற முகபாவம்.”சார்,நிஜமாகவே புகைப்படங்களில் பார்ப்பதற்கு நீங்கள் ஏதோ எட்டாத தூரத்தில் இருக்கும் மிகப்பெரிய ஆசானாகத் தெரிந்தீர்கள்.
ஆனால் நேரில்….
மிக நெருக்கமான நம் குடும்பத்தில் உள்ள சுலபமாக அணுக முடிந்த மூத்தவர்போல் உள்ளீர்கள்.தங்கள் சமூக அந்தஸ்த்தோ வேறு எதுவோ உங்களையும் உங்கள் வாசகர்களையும் ஒருபோதும் பிரித்துவிட முடியாது எனத் தோன்றியது.
உங்களைச் சுற்றி ஒரு அறிவார்ந்த , எதையும் நுணுக்கமாகவும் தெளிவாகவும் அணுகக்கூடிய,எங்களைப்போன்ற ஆரம்பக்கட்ட வாசிப்பில் இருப்பவர்களுக்கு கூட இலக்கிய வாசிப்பை சாத்தியமாக்க கூடிய ஒரு மிகச்சிறந்த வாசகர் வட்டம் உருவாகிவிட்டது.அடுத்த தலைமுறை வாசகர்கள் அதைத்தேடி கண்டடைவர்.
உங்கள் பயணம் எதை நோக்கியது என்பது கடலூர் சீனு,ராஜகோபாலன் ஆகியோர் பேசும்போது தெரிகிறது.”வலுவான இலக்கிய வட்டத்தை உருவாக்கிவிட்டேன்.” என்பது உங்கள் பதிலில் தெரிந்தது.
வெண்முரசு வாசிப்பனுபவ சிக்கலுக்கானத் தீர்வை எங்களுடைய பதிலில் இருந்து தொடங்கி தெளிவை உருவாக்கிய ராஜகோபாலனின் விளக்கம் மிக அழகானது.இவர்களுடன் அமைதியாக ஒரு கூடுகையில் அமர்வதற்க்கு கூட இன்னும் நிறைய வாசிக்கவேண்டும் என்ற முனைப்பை புதுச்சேரிக் கூடுகை ஏற்படுத்தி தந்தது.வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த புதுவை கூடுகை நண்பர்களுக்கு நன்றி.

குறிப்பு:-
நேரமின்மையின் போது கூட எனது கணவரிடமும் குழந்தையிடமும் கனிவாக பேசிய தங்கள் பெருந்தன்மைக்கு நன்றிகள்.

 
இப்படிக்கு
தங்கள் வாசகி,

 
விஜயலஷ்மி
சென்னை.

 

அன்புள்ள விஜயலட்சுமி

 

நான் பொதுவாக நண்பர்கூடுகையில் உற்சாகமாக இருப்பேன். ஆனால் சமயங்களில் உள்வாங்கிச் செல்வதுமுண்டு. புதுவைக்கூடுகை உற்சாகமான ஒன்றாக இருந்தது. உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. இங்கே இலக்கியவாசிப்புக்கான பயிற்சி என்பது நண்பர் சந்திப்புகளினூடாக மட்டுமே நிகழமுடியும். நமக்கு அலுவலகத்தில், இல்லங்களில் எங்கும் அதற்கான வாய்ப்புகள் இல்லை

 

சென்னையில் மீண்டும் சந்திப்போம்.

 

ஜெ

 

 

 

அன்புள்ள ஜெயமோகன்

 

தங்களுடைய இணையதள செய்திகள் மற்றும் கதைகளை கடந்த சில வருடங்களாக படித்து வருகின்றேன்.

 

எளிய அறிமுகம் – கல்யாண். அரசியல் மற்றும் ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளது. சென்னையில் வசித்தபோது வலதுசாரி இயக்கத்தில் தொடர்புண்டு. எனது தந்தையின் மூலம்

ஆன்மிகத்தில் ஆழ்த்தப்பட்டேன். லண்டன் க்ரோய்டன் பகுதியில் ஒரு சிறிய தமிழ் பள்ளியை நண்பர்களுடன் நடத்திவருகின்றேன். வேலை கணினி மென்பொருள் எழுதுவது.

 

வெண்முரசு – ஒரு வித்தியாசமான முயற்சி. ஆரம்பம் முதல் பாண்டவர்கள் காட்டிற்கு செல்லும் வரை படித்துவந்தேன். பிறகு வந்த கதாபாத்திரங்களில் பிடிப்பு இல்லாததனால்

தொடர முடியவில்லை. ஒருநாள் படிக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளது.

 

அனற்காற்று – ஒவ்வொரு மனிதனிடமும் உள்ள காமத்தை தெள்ளத் தெளிவாக காட்டியது. இருமுறை படித்து உள்ளேன்.

 

காமத்தை சமரசம் அல்லது சமம் செய்து கொள்வது என்பது ஒரு சிறிய போராட்டம். ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில்  தங்களுடைய வழிகளில்  சரி செய்துகொள்கிறார்கள். இது ஒரு இயற்கை. ஆனால் நம்மால் சரியாக புரிந்துகொள்ளமுடியவில்லை.

 

இரவு – நேற்று படித்துமுடித்தேன். மிகவும் வித்தியாசமான தளத்திற்கு மனதை கொண்டு சென்றது.

 

இந்தியா – பயண கட்டுரைகள் பல தரப்பு மக்களை இடங்களை தெரிந்து கொள்ள மிகவும் பயனாக உள்ளது.

 

ஆன்மிகம் – தொடர்பான செய்திகள் மிகவும் தெளிவாக உள்ளன. வருத்தம் என்னவென்றால் இந்த செய்திகள் மிகவும் குறைவான நபர்களையே சென்று அடைகின்றது.

குறிப்பாக வலதுசாரி இயக்க நண்பர்கள் படிக்கவேண்டும். தற்போது அவர்களுடைய அதிகாரம் பரவலாக இருப்பதனால், அவர்கள் இந்து மதம் தன்னை முற்றிலும் உணருவதற்கும்

தேடலுக்கும் எவ்வாறு பல பாதைகளை வகுத்து கொடுத்துள்ளது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

 

இவ்வாறு பல செய்திகளை பற்றி எழுதுவதற்கு அதிகம் படிக்க வேண்டும், மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும். பிறகு சமயம் வரும்பொழுது

எழுதவேண்டும். தங்களுக்கு எவ்வாறு நேரம் உள்ளது.

 

தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

 

நன்றி

கல்யாண்

 

அன்புள்ள கல்யாண்

நேரம் என்பது நேரப்பகுப்பில் உள்ளது. செலவு என்பது கணக்குவைப்பதில் உள்ளதைப்போல

 

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–47
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–48