படைப்பூக்கம்

புகைப்படம் இளவெனில் புதுவை
புகைப்படம் இளவெனில் புதுவை

அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

ஒரு முறை உங்கள் சந்திப்பில், இன்றைய சூழலில்  படைப்பு மனம் என்பது, கண்ணாடிக் குடுவையில் திறந்து வைத்திருக்கும், புகை உமிழும் அடர்த்தியான நைட்ரஜன் அமிலம்போன்றது. வெளியில் உள்ள‍ அனைத்தும், அந்த கொதிநிலையையை  உறிஞ்சி நீர்த்துப்போக்கும் வேலையை  மட்டும்  செய்கின்றன என்றிருந்தீர்கள்.

இலக்கியம்  என்னும் மாபெரும் சொற்களனில், ஆரம்ப நிலை  பங்கேற்பாளனாக,   முழு அர்பணிப்புடன், அண்மைக்கால பயன் எதையும்  எதிர்பார்க்காமல், தினந்தோறும் தொடர்ந்து செயலாற்ற வேண்டும்  என்கிற புரிதல்  எனக்குண்டு. ஆனால்  நான் எதிர்பார்க்கும்  சில இலக்குகளை அடையும் அளவிற்கு   ஆழமாக,விரிவாக இயங்க முடியவில்லையோ என்கிற அயர்ச்சி என்னை சிலமுறை எதிர்மறை சிந்தனைக்கு இட்டுச் செல்கிறது. உதாரணமாக சென்றஆண்டு இறுதிக்குள் 5 சிறுகதைகள் எழுதி முடிக்க வேண்டும், 5 மொழியாக்கங்கள் முடிக்க வேண்டும் என்பது.  ஆனால்  ஒன்று மட்டுமே செய்ய முடிந்தது. வாசிப்பிலும் நினைத்த  அளவிற்கு முடிக்கவில்லை.

செய்து முடித்த  செயல்களில் நிறைவில்லாமல் போகையில்,  சோர்விற்கு  இடங்கொடுக்காமல்  தொடர்ந்து  இயங்கியபடி இருப்பது எவ்வாறு? அந்த நைட்ரஜன்  அமிலக் குடுவையின் மூடி  என்ன?

என்றும் அன்புடன்,

உங்கள் வாசகன்

சிவமணியன்

***

அன்புள்ள சிவமணியன்

இதற்கென பொதுவழிமுறைகள் உள்ளனவா என்ன? சொல்வதனால் பிறர் கடைப்பிடிக்கமுடியுமா?

நான் செய்வதை வேண்டுமென்றால் சொல்லலாம்

அ . உலகியல் விஷயங்களில் பெரிதாக மனம் ஈடுபடாமலிருத்தல். அதற்கு அவற்றை முறையாகச் செய்துவிடுதலே ஒரே வழி. அவற்றை புறக்கணித்தால் பெரிதாக எழுந்து நம்மைச்சூழ்ந்துகொள்கின்றன. முடிந்தவரை குறைவான உழைப்பில் நேரத்தில் அவற்றை முடித்துவிடவேண்டும். பொருளியல் ரீதியாகத் தேவையை ஓர் எல்லைவரை வரையறுத்துவிட்டு அதற்குரியவற்றை முழுமூச்சாகச் செய்துவிடுவது என் வழக்கம். அவற்றில் கொஞ்சத்தை குறையுடையதாக விட்டுவைத்தாலும்கூட அதுவே அனைத்தையும் சிதைத்துவிடும் என்பதை அனுபவரீதியாக உணர்ந்திருக்கிறேன்.

ஆ.இலக்கியப்படைப்பாளிகள் மட்டும் அல்ல, நுண்ணுணர்வுடன் வாழவிரும்புகிறவர்கள் அனைவரும் உழைத்து  ‘ஈட்ட’ வேண்டியது நேரமே. பணம் கூட நேரத்தை ஈட்டுவதற்கானதுதான். ஆகவே எந்தச்செயலையும் இது எந்த அளவுக்கு நேரத்தை ஈட்டித்தரும், எந்த அளவுக்கு நேரத்தை செலவுவைக்கும் என்றே நான் பார்ப்பேன். என் ரசனைக்கும் மகிழ்ச்சிக்குமாக நான் ஈட்டிக்கொள்ளும் நேரமே என் வாழ்க்கையை அமைக்கிறது. என்னிடமிருந்து பிறரும் பிறவும் கவர்ந்துகொள்ளும் நேரத்தை எந்த அளவுக்கு குறைக்க முடியுமோ அந்த அளவுக்கு நான் படைப்பூக்கத்துடன், மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்

இ. எப்போதும் படைப்புசார்ந்த பெரிய கனவுகளில் இருக்கவேண்டும். அது சில்லறைவம்புகள் சச்சரவுகளிலிருந்து நம்மை காக்கும். அதோடு அவ்வப்போது வரும் ஆழ்ந்த மனச்சோர்வுகளிலிருந்து வெளியே கொண்டுசெல்லும். வலுவான ஒழுக்கில் குதிப்பதே விரைந்துசெல்வதற்கான வழி. பெரிய வேலைகளுக்கு நம்மை முழுமையாக மூழ்கடித்துவைக்கும் ஆற்றல் உண்டு.

ஈ. நம்மை ஊக்கப்படுத்தும், நம் படைப்பூச்சூழலுக்குள் வாழும் நண்பர்களுடன் இருக்கவேண்டும். இன்றைய சூழலில் இது மிக முக்கியம். எதிர்மறையான உளநிலைகள் கொண்ட நண்பர்களை தவிர்த்துவிடவேண்டும். அவர்கள் அளிக்கும் அதிர்வுகள் மிக மிக பாதிப்பளிப்பவை. அவை அன்றாட வாழ்க்கையில் வெளித்தெரிவதில்லை. ஆனால் இலக்கிய ஆக்கம், ரசனை போன்ற நுண்ணிய விஷயங்களில் உடனடியாகத் தெரியவரும் என்பதைக் காணலாம்.நேர்நிலை உள்ளம் கொண்ட நண்பர்கள் பெரிய சொத்து. அவர்களை ஈட்டிக்கொள்க. ஆணவம், பொறாமை, சாதிமதப் பற்றுகள், தனிமனிதக் காழ்ப்புகள் கொண்டவர்கள் நம்மை நாம் எத்தனை தடுத்தாலும் எதிர்மனநிலை நோக்கி ஈர்க்கிறார்கள். ஆனால் அதைவிட அதிகமாக நம்மை எதிர்மனநிலை நோக்கிக் கொண்டுசெல்பவர்கள் சிறியவிஷயங்களில் உளம்தோய்ந்தவர்கள்.

ஊ. உளமும் உடலும் நேரக்கணிப்புள்ளவை. ஆகவே சரியான நேரப்பகுப்பு இருந்தால் அந்தந்த வேளை அமைந்தால் எழுதமுடியும், வாசிக்கமுடியும். ஒரு குறிப்பிட்ட நேரம் எழுத்துக்கானது, வாசிப்புக்கானது என்றல் அதை கறாராக கடைப்பிடித்தாலே போதும் ஆழ்ந்த மனநிலை உருவாகிவிடும்.

ஊ. ஒரு பெருஞ்செயலில் இருந்து இடைவெளி எடுப்பது இன்னொரு பெரிய விஷயத்திலாகவே இருக்கவேண்டுமென நான் கண்டுகொண்டேன். வெண்முரசிலிருந்து இடைவெளி என்றால் ஒரு அற்புதமான பயணமாகவே இருக்கமுடியும். அது மீண்டும் ஊக்கத்துடன் இங்கே வரச்செய்யும். நான்கு குடிகாரர்களுடன் ‘ஜாலியாக’ இருப்பதற்காகக் கிளம்பி நேரத்தை வீணடித்து தன்வெறுப்புடன் திரும்பிவந்தால் வெண்முரசுக்குள் நுழைய முடியாது. இன்னொரு ஊக்கமூட்டும் நிகழ்வு உருவாகி வரவேண்டியிருக்கும்.

இதை எவரேனும் அப்படியே கடைப்பிடிக்கமுடியுமா? முடியாது, ஏனென்றால் தன் வழிகளை தானே கண்டுபிடிக்கவேண்டியதுதான். ஆனால் பிறர் தங்கள் வழிகளை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்பது நம்வழியை நாமே கண்டுபிடிக்க உதவலாம்.

ஜெ

முந்தைய கட்டுரைகலையில் மடிதல்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–72