விஷ்ணுபுரம் வாசிப்பது பற்றி…

16230948_1362163807175524_4278692290525921280_n

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு
உங்களுடைய
கதையோ கட்டுரையோ அல்லது விமர்சனமோ எதை படித்தாலும் உங்களுக்கு உடனே கடிதம் எழுத தோன்றும். ஆனால் எழுதுவதில்லை. காரணம் சிலாகிக்கிறேன் என்ற பெயரிலோ அல்லது விமர்சிக்கிறேன் என்ற பெயரிலோ உளறி கொட்டி நான் வெளிப்பட்டுவிடக்கூடாதே என்ற அச்சத்தினால் தான். மேலும் ஒருசில காரணங்கள் உண்டு  அவையும் காரணங்கள்தாம்.

வெள்ளிக்கிழமை விகடனை காத்திருந்து வாங்குவதற்கு காரணமாயிருந்தது ஞாநியின் ஓ பக்கங்கள்தாம். விகடனில் ஓ பக்கங்கள் நிறுத்தப்பட்ட பிறகு சுமார் இரண்டாண்டுகள் நான் விகடன் வாசிப்பதேயில்லை .பிறகு தொடர்ந்தேன் அது வேற விசயம். அடுத்து குமுதத்திலும் சிறிதுநாள் எழுதினார். அதிலும் நிறுத்தியபிறகு இணையத்தில் வாசித்ததுதான். அவர் எழுதிய புத்தகங்களோ அல்லது நாடகங்களோ எதையும் நான் பார்த்ததில்லை. ஆனால் நான் அவரை நெருக்கமானவராகவே உணர்ந்து கொண்டிருந்தேன். இத்தனைக்கும் அவருக்கு ஒரு கடிதம் கூட எழுதியதில்லை. ஆனால் அவரை தொடர்ந்து கொண்டே இருந்தேன்.இன்னும்….

மேலும்….

சமீபத்தில் ஊடகங்கள் ஊதிப்பெரிதாக்கிய ஒரு சில சம்பவங்களுக்கு உங்களிடமிருந்து தோதான கட்டுரை வருமென்று காத்திருந்து பார்த்து பூத்தபிறகும் பலனில்லை.இன்னும் காத்திருப்பேன்..

விஷ்ணுபுரம் நேற்றுதான் படித்து முடித்தேன் . கிட்டத்தட்ட இருபது நாட்களானது. காடு நாவலை ஒன்றரை நாளில் படித்து முடித்தேன். அதேமாதிரி வெண்முரசின் முதற்கனலை மூன்று முறை படித்திருக்கிறேன். ஒரு முறை இணையத்திலும் இருமுறை புத்தகம் வடிவிலும்.அதில் ஒரு முறை ஒரே நாளில் வாசித்து முடித்தேன். ஆனால் விஷ்ணுபுரத்தை என்னால் தொடர்ச்சியாக வாசிக்க முடியவில்லை. அல்லது அதன் கனம் என்னால் தாங்க முடியவில்லை. அத்தனை பிரம்மாண்டம்.பிரமிக்க மட்டுமே முடிகிறது. ரசிக்க முடியவில்லை.எனக்கான தகுதியாய் இருக்கும்.சுமார் இருபது வருடங்களுக்கு முன்னரே உங்களால் இப்படி சிந்திக்க முடிந்திருக்கிறதென்றால் இப்போது நீங்கள் விஷ்ணுபுரம் எழுதினால் வெண்முரசைவிட இரண்டு புத்தகம் அதிகமாயிருக்கும் போலையே. நூறு வருடம் கழித்து காவியங்கள் வரிசையில் விஷ்ணுபுரமும் இயல்பாக வந்தமரும் என உறுதியாக காண்கிறேன்….

நன்றி….

பிரின்ஸ்

***

 prince

அன்புள்ள பிரின்ஸ்

எதை எழுதவேண்டும் என நானே முடிவெடுக்கவேண்டும், சூழல் காரணமாக முடிவெடுக்கவேண்டாம் என இருக்கிறேன். ஏனென்றால் மூன்று நாட்களுக்கு ஒரு எரியும் பிரச்சினை இங்கே எழுந்தபடியே இருக்கிறது. அதற்கெல்லாம் பின்னால் அன்றாடம் செல்வதற்கென்றே ஒரு பெருந்திரளும் இருக்கிறது. ஆனால் மீண்டும் மீண்டும் அனைத்திலும் எழுதுபவர்களின் சார்புகள் மட்டுமே வெளிப்படுகின்றன. அவை அவர்களின் சாதி, மத, அரசியல் பற்றுகளில் இருந்து எழுபவை. வெறும் காழ்ப்புகள். சிந்தனைகள் சார்ந்த தரப்புகள் அரிதினும் அரிது.

*

விஷ்ணுபுரம் போன்ற நாவல்களுக்கு உள்ள சிக்கல் நம் கல்விச்சூழல் மற்றும் பண்பாட்டுச்சூழல் சார்ந்தது.எந்த புனைவிலக்கியமும் வாழ்க்கைப்புலம், படிமப்புலம் சார்ந்து எழுவது. அவற்றின் சிந்தனைப்புலமும் உணர்வுதளமும் நமக்கு அயலாக இருக்கையில் படைப்புகள் பொருள்சூடித் திறந்து விரிவதில்லை.  மூடுண்டவையாகவே எஞ்சிவிடுகின்றன.

உண்மையில் தேர்ந்த இலக்கிய வாசகனுக்கு இது ஒரு சிக்கலே அல்ல. இலக்கியம் காட்டும் வாழ்க்கையுடன் தொடர்பு கொள்ளுதலும் அடையாளப்படுத்திக் கொள்ளுதலும் அவனுக்கு ஒரு பிரச்சினையே அல்ல. அவனால் எங்கும் தன்னை கற்பனையால் நிறுத்தி விரித்துக்கொள்ள இயலும். என்னால் இயலும் என்பதனால் இதைச் சொல்கிறேன்

ஆனால் எளியவாசகன், தொடக்கநிலை வாசகன், தேங்கிநின்ற வாசகன் மூவரும் வாசிப்பவை தங்கள் வாழ்க்கைக்குள் வந்து பொருள் அளிக்கவேண்டும் என விரும்புகிறார்கள். தொடர்புறுத்திக்கொள்ள புள்ளிகளைத் தேடி அலைகிறார்கள். கிடைக்காதபோது தவிக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை அன்றாடத்தின் குறுகல் கொண்டது. ஆகவே அவர்கள் செல்லும் தொலைவு குறுகியது

வரலாற்றுடனும் பண்பாட்டுடனும் இணைத்து தங்களை திறந்துகொள்பவனே நல்ல வாசகன். மானுட உள்ளத்தின் விரிவை உணர்ந்திருந்தான் என்றால் அவனுக்கு எதுவும் அயலெனத் தெரியாது. பிறன் வாழ்வை அறிவதற்கே, பிறனாகி நடித்து வாழ்வதற்கே இலக்கியவாசிப்பு உண்மையில் தேவையாகிறது.

தொடக்க வாசிப்பில் அயல்தன்மை கொண்ட பிரதிகள் உருவாக்கும் சிக்கல்கள் பல. வாழ்க்கைப்புலத்தைப் பொறுத்தவரை புனைவு காட்டும் அயல்வாழ்க்கையை நாம் நம் சொந்த வாழ்க்கைப்புலத்தை விரித்துக்கொண்டு அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பு உண்டு. ஆனால் படிமங்கள் அக்கணமே கற்பனையில் திறந்துகொள்ளவேண்டும். நம் ஆழ்மனதில் ஏற்கனவே சற்றேனும் வேர் இல்லாத  படிமங்கள் அவ்வாறு திறப்பதில்லை

இன்று நம் பாரம்பரியக் கலைமரபு, தொன்மையான மதக்குறியீடுகள், தொன்மங்கள் போன்றவை நமக்கு முழுக்க முழுக்க அன்னியமாக உள்ளன. நம் கல்விமுறை மதச்சார்பற்றதாக இருக்கவேண்டும் என்னும் எண்ணம் காரணமாக அவ்வாறு அமைக்கப்பட்டது. மாபெரும் கலைச்செல்வமாகிய ஓர் ஆலயத்திற்குள் நுழைந்தால்கூட வெறும் கல்பொம்மைகளாகவே அங்குள்ள சிலைகள் நமக்குத்தென்படும். அந்த அளவுக்கு நாம் அன்னியமாகிவிட்டோம்

முன்பு ஒரு கவிதைவிவாத அரங்கில் ஒரு மலையாள வாசகர் கேட்டார், தமிழ்க்கவிதையில் திரும்பத்திரும்ப சாத்தான், கடவுள் என்னும் உருவகம் வருகிறது. சிசிஃபஸும் ஹெர்குலிஸும் வருகிறார்கள். ஏன் கரியுரித்தெழுந்த பெருமான் வருவதில்லை? காலபைரவன் எழுவதில்லை?

நம் கவிதைகளைப் பாருங்கள். படிமங்களினூடாகவே செயல்பட்டாகவேண்டிய கலை அது. அதில் மிகப்பெரும்பாலும் அன்றாடவாழ்க்கையின் எளிய படிமங்கள். மேலும் ஆழமாகச் செல்லவேண்டும் என்றால் செவிப்பழக்கமான ஐரோப்பியப் படிமங்கள். இந்திய மெய்யியல் மரபிலிருந்து, நாட்டார் மரபிலிருந்து ஒரு படிமம் கூட இருக்காது. அதற்கான அறிவுப்பயிற்சியும் இல்லை, அகப்பழக்கமும் இல்லை.

இக்காரணத்தால்தான் நாம் நமது எளிய அன்றாடவாழ்க்கையுடன் ஏதேனும் வகையில் தொடர்புறுத்திக்கொள்ளும் படைப்புகளை மட்டும் ரசிக்க ஆரம்பிக்கிறோம். அதிலும் ஆண்பெண் உறவு சார்ந்த ஆக்கங்களில் மட்டுமே நம் மனம் ஈடுபடுகிறது. அதற்கு எந்தப்பயிற்சியும் தேவையில்லை என்பதனால். அவையும் இப்போது சலிக்க தொடங்கியிருப்பதனால் கொடூரங்களை, அருவருப்புகளை நோக்கிச் செல்கிறோம்.

ஓர் ஆலயம் நமக்கு ஆழமாக அணுக முடியாத ஒன்றாக இருந்தால் விஷ்ணுபுரம் நாவலும் அப்படியே இருக்கும். அதை அணுக நாம் ஒரு முயற்சி எடுத்துக்கொண்டு அதன் குறியீட்டுப்பரப்புக்குள் நாம் சென்றாகவேண்டும். அது பல ஆயிரம் நூற்றாண்டுகளாக இங்கே பேசிப்பேசி உருவாக்கப்பட்டது. அதை நாம் கற்று உணர்ந்துகொள்லவேண்டும். அதற்கு மேலதிகத் தேடல், தன்னை ஈடுபடுத்திக்கொள்ளல் தேவை.

நம் கல்விமுறைக்கு அப்பால்சென்று ஏதேனும் வகையில் மரபுடன் ஈடுபாடு கொண்டு சற்றே படிமப்பயிற்சி அடைந்த உள்ளம் கொண்டவர்களுக்கு விஷ்ணுபுரம் அன்னியமாக இருப்பதில்லை.அவர்களுக்கு பல இடங்கள் இயல்பாகவே கவித்துவமான உச்சங்களைக் காட்டுகின்றன.

வெண்முரசுக்கும் இப்பிரச்சினை உண்டு. ஆனால்  தன் நீண்ட அளவு காரணமாக வாசகர்களுக்கு அதுவே கொஞ்சம் கொஞ்சமாக அப்பயிற்சியை அளிக்கும். வெண்முரசின் நாலைந்து நாவல்களை வாசித்தவர்கள் விஷ்ணுபுரத்தை எளிதில்கடந்துசெல்லமுடியும். விஷ்ணுபுரத்தின் அறிவுத்தளத்தைப் புரிந்துகொள்ள தத்துவ அறிமுகநூல்கள் உதவலாம். படிமவெளியை கொஞ்சமேனும் மரபிலக்கியம், மரபுக்கலைகள், மரபான தொன்மங்களில் பயிற்சியுடன் மட்டுமே அணுகமுடியும். கொற்றவைக்கும் இப்பிரச்சினை உண்டு.

நவீன இலக்கியம் என நாம் தமிழில் அடைந்தது நவீனத்துவ இலக்கியத்தைத்தான். அதன் வாசிப்புப் பயிற்சி நம்மிடையே ஆழமாக உள்ளது. அதை எந்த அளவுக்கு உதறமுடியுமோ அந்த அளவுக்கே விஷ்ணுபுரம் போன்றவற்றை அணுகமுடியும். அல்லாவிடில் அந்த எல்லைக்குள் என்ன சிக்குமோ அதுவே எஞ்சும். நவீனத்துவத்திற்குப் பழகிய சென்ற தலைமுறை வாசகர்களைவிட நவீனத்துவத்தை அறியாத இன்றைய இளைஞர்கள் இந்நாவல்களை எளிதில் அணுகமுடிவதைக் காண்கிறேன்

நவீனத்துவம் உலகளாவியது. அது நவீன அறிவியலின் சிருஷ்டி. நவீன தத்துவம், தர்க்கவியலின் நீட்சி. அது எத்தனை எழுந்தாலும் புறவயவாதம், யதார்த்தவாதம் விட்டு எழமுடியாது. அதற்கு அப்பால் ஒவ்வொரு நாட்டுக்கும் அதற்கான இலக்கிய அடையாளம் உண்டு. கையுறைக்கு அடியிலிருக்கும் கைரேகை போல. அதுதான் அந்தப் பண்பாட்டின் ஆழம். நனவிலி. அதைநோக்கியே அந்நாட்டு இலக்கியங்கள் செல்லமுடியும். கடன்வாங்கிய படிமங்களினூடாக அங்கே செல்லமுடியாது

விஷ்ணுபுரமும் வெண்முரசும் முழுமையாகவே இந்தியத்தன்மை கொண்டவை. அவை வெளிப்பாட்டு மொழி, வடிவம் ஆகியவற்றை நவீன இலக்கியமரபிலிருந்து எடுத்துக்கொண்டவை. மெய்காண்முறையும் படிமவெளியும் மொழியமைப்பும் இந்திய மரபு சார்ந்து எழுந்து இன்றைய சூழலுக்காக வளர்ந்தவை. அவை இந்திய உள்ளம் கொண்ட வாசகர்களுக்குரியவை, இன்று எழுபவர்கள், நாளை பெருகவிருப்பவர்கள் அவர்கள். இந்தியாவை அணுகியறிய விரும்பும் பிறருக்கும் அவையே மேலும் உவப்பானவையாக இருக்கும், தங்கள் பண்பாட்டின் மூன்றாம்நகல்களைவிட. அதை பலமுறை அனுபவமாகவே உணர்ந்திருக்கிறேன்

ஜெ

***

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–67
அடுத்த கட்டுரைஓர் இலக்கிய வாசகனின் ஒப்புதல் வாக்குமூலம்