«

»


Print this Post

பத்மாவதி – கடிதங்கள்


padmavati

பத்மாவதியும் வரலாறும்

அன்பின் ஜெ..

 

உங்கள் கட்டுரையின் இறுதி இரண்டு வரிகளைப் படித்த்தும், புரைக்கேறி விட்ட்து. பத்திரமாக, இந்துத்துவத்தை, தமிழ் தேசிய, இஸ்லாமிய, திராவிட, கம்யூனிஸ அடிப்படை வாதங்களுக்குள் பொதிந்து வைத்தமை பாராட்டுக்குரியது.

 

வரலாறு எவ்வாறு திரித்திருக்கப் பட்டிருக்கிறது என்பதை எழுதியிருக்கிறீர்கள். ஒரு குடிமகனாக,  அப்படி வரலாற்றைத் திரித்த கொள்கைவாதிகள், அரசாள்கையில் என்ன செய்கிறார்கள் என்று நான் பார்க்கிறேன்.

 

கம்யூனிஸ்டுகள், 60கள் துவங்கி 90 வரை, இந்தியத் தொழில் வளர்ச்சியில் தேக்கத்தை அதிகரித்த ஒரு சக்தியாக இருந்தாலும், ஒரு அழிவு சக்தியாக இருந்த்தில்லை.  வாய்ச்சொல் வீர்ர்களாகிய திராவிட இயக்கங்கள், தமிழ்நாட்டின் சமூக நலத்திட்டங்களாலும், தொழிலுக்குச் சாதகமான அரசியல் நிலைகளைப் பேணியதாலும், இன்று நாட்டின் மிக முன்னேறிய மாநிலமாக இருக்கிறது என்பதே, கசப்பாக இருந்தாலும், உண்மை.  திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்து, தமிழகத்தை எந்தப் பிரச்சினையிலும்,  எதிரித்தரப்பை / மாநிலத்தை எரித்துக் கொண்டாடியதாகத் தெரியவில்லை.

 

தமிழ்த் தேசியத்தின் பெருமகர் சீமார் (எங்கள் ஊரில், இதற்கு இன்னொரு பொருளுண்டு) ஆர்.கே நகரில் பெற்ற அமோக வாக்குகள் தமிழ்த் தேசியர்களின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றும்.. ஈழப் பிரச்சினையைத் தமிழ் மக்கள் என்றுமே ஆதரிக்க மாட்டார்கள் என  தமிழ்நாட்டின், இந்திய தேசியக் குல குரு சோ.ராமாசாமி மொழிந்திருக்கிறார்.. வைகோ வை எடுத்துக் காட்டி.. சோ சொல்லும் ஒரு வாக்கியத்தோடு ஒத்துப் போவது, மிக மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.

 

இப்போது சினிமாவுக்கு வருவோம்.. அதற்கான எரிப்புகளின் போது,  கர்ணி சேனா இயக்க வீரர்கள், அவர்களின் ஆதரவாளர் ஒருவரின் காரையே கொளுத்தியதாகச் செய்தி கண்டேன்.. வியப்பளிக்கவில்லை.. பத்மாவதியின் ட்ரெயிலர்கள் மற்று பன்ஸாலியின் பேட்டி முதலியவற்றைப் படித்திருந்தாலே தெரிந்திருக்கும்.. அந்தப் படத்தின் போக்கு எப்படி இருந்திருக்கும் என. அதைத் தாண்டியும் எரிப்புப் போராட்டம் நடத்த ஒன்றிரண்டு அறிவுகள் குறைவாக இருந்தாலே போதும்.

 

நாளந்தாப் பல்கலையை இடித்த, கோவில்களை இடித்த அலாவுதீன் கில்ஜி தான்,  மங்கோலியப் படையெடுப்பை தடுத்திருக்கிறார் என்பதை எழுதியதற்கு நன்றி. அவர் செய்த இன்னும் சில முக்கிய நடவடிக்கைகளையும் சொல்ல்லாம் என நினைக்கிறேன் – தலைநகரில், வேளாண் பொருட்கள், உடைகள் மற்றும் குதிரைகளுக்கு எனத் தனிச் சந்தைகளை ஏற்படுத்தினார்.  விற்கும் பொருட்களின் எடைகளில் ஏமாற்றும் வணிகர்களுக்கு, மிக கடுமையான தண்டனைகளை விதித்தார்.. வேளான் பொருட்கள் மற்றும் ஆடைகளுக்கான முறையான, மையப்படுத்தப் பட்ட சந்தை என்பது, அன்றைய காலகட்டத்தின் மிக முக்கியமான முயற்சி.

 

ஒரு வணிகனாக, Net-Net analysis என்பது ஒரு முக்கியமான கருதுகோளாகக் கருதுகிறேன்.  மிகை நாடி மிக்க கொளல் என்று அய்யன் அன்றேசொன்னார். அந்தக் குறிக்கோளில் அலாவுதீன் கில்ஜி மட்டுமல்ல, அனைவரும் அளக்கப் பட வேண்டிய்வர்கள்.. ஒரு வணிகனாக, இன்னொரு கருதுகோளும் கொண்டிருக்கிறேன்.  ஒரு முயற்சி / தொழில் தோற்று விட்டால், அதனால், மிகப் பெரும் நஷ்டம் வந்தாலும், அதனால், சில காலம் வாழ்க்கை நின்றிருந்தாலும், துக்க காலம் தாண்டி, தோளில் துண்டைப் போட்டுக் கொண்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போவது.

 

இன்று 6-7 மாநிலங்களில் கலவரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. மாட்டைக் கடித்த கலவரங்கள், தில்லியில் பள்ளிக் குழந்தைகள் செல்லும் பேருந்தைக் கொளுத்துவது வரை வந்திருக்கின்றன.. பெரும் சமூக சேவகியும், ஒத்திசைவு ராமசாமியின் ஆதர்ச பெண்மணியுமான மது கிஷ்வர், அந்த எரிப்பின் பின்னால் இருப்பதாக சில இஸ்லாமியப் பெயர்களை ட்வீட்டி, இந்துத்துவத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். பாரத ரத்தினம்.

 

திரும்பத் திரும்ப, இந்த இந்துத்துவ குழுக்கள் fringe எனச் சொல்லப்படுகின்றன.  இது போன்ற வன்முறையில் ஈடுபடுவர்கள் எப்போழுதுமே ஒரு குறுங்குழு தான்.. அவர்கள் பெரும்பான்மையாக இருந்தால், சமூகம் என்னும் ஒரு கட்டமைப்பே இல்லாமல் அழிந்திருக்கும். அந்தக் குறுங்குழு அல்ல பிரச்சினை. அந்தக் குறுங்குழுக்கள் பெரும் பொருளாதார அழிவுகளை, நாட்டின் பெருமையைக் குலைக்கும் நிகழ்வுகளில் ஈடுபட்டிருக்கும் போது, தலைப்பா கட்டிக் கொண்டு, அமைதியாக, பேரரசின் விழாக்களை நடத்திக் கொண்டிருக்கும் அரசின் மௌனம் தான் பிரச்சினை. அதைக் கட்டுப்படுத்த முடியாது எனச் சொல்லும் மாநில அரசுகள் தான் பிரட்சினை. அவை பல விஷயங்களை உரத்துப் பேசுகின்றன.

 

அன்புடன்

 

பாலா

 

பி.கு: வழக்கம் போல் இதுவும் மோதி வெறுப்புதான் என வகைப்படுத்தப்படலாம் எனத் தெரிந்தே எழுதுகிறேன். சில காலம் முன்னர், இத்தாலிய மாஃபியா, சோனியாவின் சமையல் அறை ஊழியர், 2 லட்சம் கோடி ஊழல் எனச் சொல்வதெல்லாம், தேசத் தொண்டாகக் கருதப்பட்டது என்பதை நினைவூட்டி விடுகிறேன் ஒருமுறை.

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

 

தாங்கள் மங்கோலிய படையெடுப்பை  அலாவுதீன் கில்ஜி இருந்ததால் இந்தியா சமாளித்து என்று எழுதியிருக்கிறீர்கள் , மங்கோலியா ஆட்சி இஸ்லாமிய சுல்தான் ஆட்சி அளவிற்கு கொடுமையான ஆட்சி அல்ல , முதல் படையெடுப்பின் பொது அவர்கள் உயிர்கொலைகள் செய்வார்கள் ஆனால் அதன் பின் மக்களை அவர்கள் கொடுமை செய்யவில்லை அவர்கள் சமய நம்பிக்கைகளில் தலையிடுவதில்லை

 

இதை பற்றி பீட்டர் பிரான்கோபன்  எழுதிய தி  சில்க் ரோடு (https://www.goodreads.com/book/show/25812847-the-silk-roads) புத்தகத்தில் படிக்கலாம் மேலும் இதை பற்றி ஸ்வராஜிய தளத்தில் வந்த கட்டுரை https://swarajyamag.com/politics/the-myth-of-the-cruel-mongol

 

நமது பண்பாட்டையும் உயிர்களையும் அழிக்க வந்த ஆக்ரமிப்பாளர்களை நாம் எப்படி சிறந்த பண்பாடு உள்ளவர்களாக காணமுடியும் நம் மனதின் அவர்களை பற்றிய பிம்பம் காட்டுமிராண்டிகளே . ஒரு இலங்கை படுகொலை பற்றிய திரைப்படத்தில் சிங்கள இராணுவத்தை கட்டுக்கோப்பான பயிற்சியுள்ள ஒரு professional ராணுவம் என்று சித்தரிப்பாளர்களா அல்லது மூர்க்கத்தனமாக காட்டுமிராண்டி செயல்களில் ஈடுபடும் ராணுவம் என்று சித்தரிப்பாளர்களா அதேபோல போரைத்தூண்டும் பௌத்த பிக்குகளை இனவெறிகொண்ட பிக்குகள் என்று சித்தரிப்பார்களா அல்லது  புத்தர் அமைதியை போதித்தார் அவர் வழி வந்த சிறந்த தவசீலர்கள் என்று சித்தரிப்பாளர்களா ?

 

ராம்குமரன்

 

அன்புள்ள பாலா, ராம் குமரன்

 

இருவருக்கும் சேர்த்து ஒரே பதில்தான். சிந்தனையில் வடக்குநோக்கியந்திரம் அமைந்துவிட்டால் அதிலிருந்து அவர்களே உடைத்துக்கொண்டு மீண்டுவந்தால்தான் உண்டு. பிறர் ஒன்றுமே செய்யமுடியாது. எனக்கு உங்கள் இருசாராரிடமும் பேச ஒரு வரிகூட இல்லை

 

நான் கட்டுரையில் சொல்லியிருப்பதுபோல நான் பேசிக்கொண்டிருப்பது மிகச்சிறுபான்மையினரான ஒரு தரப்பினரிடம். அவர்களுக்கு சொந்த நம்பிக்கைகள், சொந்தக் காழ்ப்புகள் பற்றுகளை விட மேலான சில இப்புவியில் உள்ளன என்று தெரியும்.

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/106265