வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–48

பகுதி ஏழு : அலைகளில் திரள்வது – 6

bl-e1513402911361

“பிரம்மா, அத்ரி, சந்திரன், புதன், புரூரவஸ், ஆயுஷ், அனேனஸ், பிரதிக்‌ஷத்ரர், சஞ்சயர், ஜயர், விஜயர், கிருதி, ஹரியஸ்வர், சகதேவர், நதீனர், ஜயசேனர், சம்கிருதி, க்‌ஷத்ரதர்மா, சுமஹோத்ரர், சலர், ஆர்ஷ்டிஷேணர், காசர், தீர்க்கதமஸ், தன்வந்திரி, கேதுமான், பீமரதர், திவோதாசர், ஜயசேனர், சஞ்சயர், சுருதசேனர், பீமகர், சஞ்சயர், பீமதேவர், ஜயர், விஜயர் என நீளும் காசிநாட்டுக் கொடிவழியில் பிறந்தவர் விருஷதர்பர். விருஷதர்பரின் மகளும் காசிநாட்டு இளவரசியும் அஸ்தினபுரியின் அரசியும் குருகுலத்து அரசர் தார்த்தராஷ்டிரர் துரியோதனரின் அரசியுமாகிய பானுமதி தேவி இந்த அவையை அணிசெய்கிறார். அவர் வெல்க!” என்று நிமித்திகன் அறிவிக்க பானுமதி வெண்பட்டுத்திரைக்குள் தன் பீடத்தில் எழுந்து கைகூப்பி தலைவணங்கி அமர்ந்தாள். அவைக்குள் வாழ்த்தொலிகள் எழுந்து அமைந்தன.

அவையில் அமர்ந்திருந்த ஒவ்வொரு அரசரையாக குலமுறை கிளத்தி வாழ்த்தி வந்த நிமித்திகன் அச்சடங்கை நிறைவுசெய்யும் முகமாக வெள்ளிக்கோலை மும்முறை சுழற்றி தலைவணங்கி பின்னடி எடுத்துவைத்து விலகிச்சென்றான். அசலை “அவையமர்ந்தவர்களில் பெண் என நீங்கள் மட்டுமே, அரசி” என்றாள். பானுமதி “ஆம், அத்துடன் இந்த அவையில் பெண்களுக்கு சொல்லுரிமை மட்டுமே உள்ளது, முடிவுரைக்க உரிமை இல்லை” என்றாள். அசலை இளைய யாதவரை நோக்கி “அவர்தான் இந்த அவையையும் நடத்தப்போகிறார்” என்றாள். தாரை “அவரும் கணிகரும்… அதை மற்றவர்களும் அறிவர். அவர்கள் எதிர்நோக்கியிருக்கிறார்கள்” என்றாள்.

விதுரர் எழுந்து அவைமேடைக்கு வந்து தலைவணங்கினார். “பாரதவர்ஷத்தின் ஷத்ரியக்குடிகள் அமர்ந்திருக்கும் இந்த அவை இந்நிலத்தின் ஆயிரமாண்டு வரலாற்றை கண்முன் நோக்குவதற்கு இணையானது. மண்மறைந்த மூதாதையர் அனைவரின் முகங்களும் அணிநிரந்தது. இதன் பெருமையை தேவர்கள் உணர்க!” என்றார். அவை மெல்லிய சலிப்புடன் அந்த முறைமைச்சொற்களைக் கேட்டு அமர்ந்திருந்தது. ஜயத்ரதன் கைகளை மார்பில் கட்டியபடி நேர்நோக்குடன் அமர்ந்திருக்க கிருதவர்மன் அருகே அமர்ந்திருந்த அஸ்வத்தாமனிடம் மெல்லிய உதடசைவால் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான்.

விதுரர் “இந்த அவையில் பாரதவர்ஷத்தின் பெரும்படைக்கூட்டு ஒன்றுக்கு நாம் கூடியிருக்கிறோம். இதன் இலக்கையும் அமைப்பையும் குறித்து நாம் இங்கு முடிவுசெய்யவேண்டும். இங்கு அமர்ந்துள்ள அரசர்கள் அனைவரும் தங்கள் எண்ணங்களை முன்வைத்து ஒருகுரலாக பாரதவர்ஷத்திற்கு அறைகூவல் ஒன்றை முன்வைக்கவேண்டும். அவ்வறிவிப்பு முறையாக ஓலையில் பொறிக்கப்பட்டு அரசர்களின் முத்திரைச் சாத்துடன் வெளியிடப்படும். நிகழும் எதுவும் அறம் நிலைகொள்ளவும் இங்கு வாழும் குடிகள் நலம்பெறவும் மூதாதையரும் தெய்வங்களும் உளம் மகிழவும் உகந்ததாக அமையட்டும். இதன் முறைமைகளை அமைச்சர் கனகர் அறிவிப்பார்” என்றார்.

அவரை கையமர்த்தியபடி துரியோதனன் எழுந்தான். அந்த மீறல் அவையெங்கும் அதிர்வொன்றை எழுப்பியதை கண்ணாலும் செவியாலும் அறியமுடிந்தது. கையை தூக்கியபடி அவைமேடையின் முகப்பில் வந்து நின்ற துரியோதனன் “அவையமர்ந்த பிதாமகருக்கும் ஆசிரியர்களுக்கும் அரசர்களுக்கும் சான்றோர்களுக்கும் தலைவணங்குகிறேன்” என்றான். அவன் குரல் அன்றுவரை பானுமதி கேட்டிருக்காததாக கார்வையும் தெளிவும் கொண்டிருந்தது. “தொல்காலத்தில் முதிய ரிஷியாகிய வசிட்டரிடம் மிதிலையின் அரசர் ஜனகர் கேட்டார், தவத்தோரே எது மண்ணை உயிருள்ளதாக்குகிறது என்று. வசிட்டர் நீர் என மறுமொழி சொன்னார்.”

“நீரே மண்ணை அன்னமாக ஆக்குகிறது. அன்னத்தை உண்டு புல் எழுகிறது. புல் காடாகிறது. காடு நுண்ணுயிர்களும் புழுக்களும் பூச்சிகளும் பறவைகளும் விலங்குகளும் மானுடரும் வாழும் தொன்மையான இல்லம். நீரே உயிர். ஆகவே அதுவே உள்ளம். அதுவே அறமும் ஆற்றலும் அறிவும். அதை வணங்குக என்றார் வசிட்டர்” என்றான் துரியோதனன். “வசிட்டரிடம் ஜனகர் கேட்ட அவ்வினா ஞானவாசிட்டம் என்னும் தொல்நூலில் உள்ளது. அதற்கு அடுத்த வினாவைவும் மறுமொழியையுமே இங்கு நான் சொல்லவிழைகிறேன்.”

“ஜனகர் கேட்டார், நுண்ணறிவரே சொல்க. எது நிலத்தை நாடென்று ஆக்குகிறது? சொல் என வசிட்டர் உரைத்தார். மானுடனை விலங்கல்லாமல் ஆக்குவது சொல். சொல் திரண்டு மொழியாகும்போதே திரள் பொருள்கொண்டு மக்கள் என்றாகிறது. மக்கள் வாழுமிடமே நாடு எனப்படும்.” அசலை “அவர் பேசுவதுதானா இது?” என்றாள். “ஆம், அவர் மொழியில் ஒருபோதும் இத்தனை கல்வியும் தெளிவும் அமைந்ததில்லை” என்றாள் தாரை. பானுமதி உதடுகளை அழுத்தி நெஞ்சுமீறி எழுந்த அழுகையை அடக்கியபடி அமர்ந்திருந்தாள்.

“அவையோரே, அந்நூலில் இருந்து எழும் அடுத்த வினா ஒன்றுண்டு. மொழியை உருவாக்குவது எது? மொழியென்று உள்ளமைந்து எண்ணமும் கனவும் ஆகின்றன தெய்வங்கள். செவியில் வந்து கேட்கின்றன. நாவில் வந்து உரைக்கின்றன அவை. ஆனால் மொழிக்குப் பொருளென்றாவது எது?” துரியோதனன் கேட்டான். கூர்ந்த கண்களுடன் அங்கிருந்த ஒவ்வொருவரையும் விழிதொட்டு உளம்புகுந்து வினவுபவன்போல அவைமேடையில் நின்றான். “அறிக, மொழியின் அத்தனை சொற்களுக்கும் பொருள் என்றாவது நிலம். நிலத்தில் ஒரு துளியைச் சுட்டும் ஒலியையே சொல் என்கிறோம்.”

“குலம் என்றமைந்த நால்வரில் நிலத்திலிருந்து அன்னத்தை உருவாக்குபவர் நான்காமவர். அன்னத்தை அன்னத்துடன் நிகரிட்டு பகிர்ந்து செல்வமென்றாக்குபவர் மூன்றாமவர். நிலத்திலிருந்தும் செல்வத்திலிருந்தும் சொல்லெழுப்பி நிறுத்துபவர் முதலாமவர். அவையோரே, அந்நிலத்தைக் காப்பவர் நாம்!” ஷத்ரியர் அவை கைதூக்கி “ஆம்! ஆம்!” என்றது. அச்சொற்களின் செறிவிலும் கூரிலும் அவர்கள் முற்றாக ஆட்பட்டனர். விழிகள் ஒளிகொள்ள முகங்கள் அனல்பட்டவையென்றாக அவர்களனைவரும் அவனே என்றாயினர்.

“சொல்லால் அந்தணனும் கணக்கால் வைசியனும் உழைப்பால் சூத்திரனும் அடையாளம் பெறுகிறார்கள். அறிக, நிலத்தால் ஷத்ரியன் மண்ணில் நிறுத்தப்படுகிறான். நிலம் வெல்லுதலும் நிலத்தை ஆளுதலும் அவன் கடன்கள் என வகுத்தது அழியா நால்வேதமரபு. அது வாழ்க!” அவையினர் கைகளைத் தூக்கி “வாழ்க! வாழ்க!” என்றனர். “ஆகவே பிற மூன்று குலத்தையும் தாங்குபவர் ஷத்ரியர். ஐந்தாம் குலத்தையும் அப்பாலுள்ள குலங்களையும் அவர்களே ஆள்கிறார்கள்” என துரியோதனன் தொடர்ந்தான்.

“மூன்று ஆற்றல்களால் நாம் ஷத்ரியர்கள் என நிலைநிறுத்தப்படுகிறோம். குலத்தால், வாளால், வேதத்தால். நமக்குரிய நிலத்தை வகுத்தளிக்கிறது குலம். நாம் எய்தவேண்டிய நிலம் வாளால் நாட்டப்படுகிறது. ஷத்ரியர்களே, நாம் பொறுப்பேற்கவேண்டிய நிலத்தை நமக்கு வேதமே ஆணையிடுகிறது என்றுணர்க!” அறைகூவல் என அவன் இரு கைகளையும் தூக்கினான். “நான் அடைந்தது மட்டுமல்ல நம் நிலம். நாம் வென்று கைக்கொள்வது மட்டுமல்ல இந்நிலம். வேதம் நம்மிடம் பாரதவர்ஷத்தை வெல்லும்படி ஆணையிடுகிறது. அவையோரே, இப்புவியை வெல்ல ஆணையிடுகிறது வேதம்!”

அவை பெருங்கூச்சலெழுப்பியது. பல ஷத்ரியர்கள் தங்களை அறியாமலே எழுந்துவிட்டனர். விதுரர் கையசைத்து அவர்களை அமைதிப்படுத்தினார். “நம் குடிகளுக்கு பிரஜாபதிகள் பலர் உண்டு. ஷத்ரியர்களாகிய நாம் அனைவருக்கும் முதன்மைப் பிரஜாபதியென்று அமைந்தவர் தொல்வேந்தர் வேனனின் பெயர்மைந்தராகிய பிருது. சினந்து இருளாழத்தில் ஓடியொளித்த புவியெனும் பசுவை முக்கண்ணன் கழுத்திலிருந்து எடுத்த பைநாகத்தை அஜகவம் என்னும் வில்லென்றாக்கி துரத்தித் தொடுத்து பற்றிக்கட்டி இழுத்துக்கொண்டு வந்து இங்கு இவ்வண்ணம் அமைத்தவர் அவர் என்கின்றது வேதம்.”

“அப்பசுவை முதலில் இங்கு நின்றிருக்கும் மரங்கள் கறந்து அமுதுண்டன. மலர்த்தேனும் கனிச்சாறும் இலைநீரும் ஆக்கிக்கொண்டன. பின்னர் மலைகள் அதை கறந்தன. தூயநீர் ஒழுகும் அருவிகளை சூடிக்கொண்டன. தேவர்கள் பின்னர் கறந்தனர். மழையென்று அவ்வமுதை அவர்கள் கொண்டனர். அசுரர்கள் அப்பசுவை கறந்தனர். அவர்கள் அடைந்ததே மது. நாகர்கள் அவளைக் கறந்து நஞ்சை அடைந்தனர். மானுடர் அதைக் கறந்து அன்னத்தை அடைந்தனர். முலைகளில் பாலாகவும் பயிர்களில் மணியாகவும் அவர்களிடம் பெருகியது அவ்வமுது.”

“கந்தர்வர் நறுமணங்களையும் வித்யாதரர் இன்னிசையையும் கறந்தெடுத்தனர். யட்சர்கள் வண்ணங்களை கறந்தெடுத்தனர். குபேரன் தங்கத்தை கறந்தெடுத்தான். ஷத்ரியர்களே, தவம்கனிந்த முனிவர் எழுவர் அப்பசுவைக் கறந்து எடுத்த அமுதே வேதம் என்கின்றன நூல்கள்” என்றான் துரியோதனன். “சோமனை கன்றாக்கி அதன் முன் நிறுத்தினர். அனலோன் அதன் நாவென எழுந்து நக்கி கனிய சந்தஸை கலமாக்கி நுரையெழ அமுதைக் கறந்தார் பிரகஸ்பதி. ஆம், வேதம் முதற்றாய அனைத்தும் ஷத்ரியருக்கு உரிமைகொண்டதே. அவர்கள் அமைத்தவையும் அவர்களால் காக்கப்படுவனவுமே இங்குள அனைத்தும்.”

“தொல்நூல்களை நோக்குக! மாமன்னர் பிருதுவின் நிலம் எல்லைகளால் பிரிக்கப்படவில்லை என்கின்றன அவை. அவர் சென்ற தேரின் கொடிமரத்தை மண்ணிலுள்ள எதுவும் தடுக்கவில்லை என்று கூறுகின்றன. மரங்களும் விலங்குகளும் மலைகளும் தேவர்களும் அசுரர்களும் நாகர்களும் மானுடரும் முனிவரும் மூதாதையரும் அவரைப் பணிந்து நீயே எங்கள் பேரரசன், எங்கள் காவலன் நீ என்றனர். அவனருகே குழவியரென்றாகி நின்று எங்கள் தந்தை நீ என்றனர் என்கின்றது தொல்வேதம். ஷத்ரியர்களே, கொடியும் முடியும் கோலும் கொண்டு அரியணை அமர்ந்து ஆளும் நாம் அனைவருக்கும் காவலரும் தந்தையும் ஆவோம்.”

அவையினரிடமிருந்து மூச்சொலிகளே வெளிவந்தன. முகங்கள் அழுகைக்கு முந்தைய கணம் என முழுத்திருந்தன. பானுமதி தன் முகத்தை கைகளில் தாங்கி கன்னங்களில் உலர்ந்த விழிநீர்த்தடங்களுடன் அமர்ந்திருந்தாள். தாரை கண்ணீர் வடித்தபடி முகத்தை மூடி உடல்வளைத்து முழங்கால்மேல் படிந்திருந்தாள். அசலை பெருமூச்சுடன் தன் மேலாடையை முகத்தின்மேல் இழுத்து விட்டபடி அவையை நோக்கினாள்.

துரியோதனன் மெல்ல குரல்விசை குறைந்தான். அழுத்தமேறிய குரலில் அவர்கள் ஒவ்வொருவரிடமும் என சொன்னான். “எது ஷத்ரியனுக்கு வேதத்தால் ஆணையிடப்பட்டுள்ளதோ அதையே நான் செய்கிறேன். என் தந்தையிடமிருந்து எனக்கு உரிமையுள்ள நிலத்தை முழுமையாக பெற்றேன். அதை பிளவுபடாது ஆள்கிறேன். நிலம் செழிக்க, குடிபெருக, செல்வம் பொலிய, அறம் நிலைக்க கோல்நாட்டி ஆள்கிறேன். என் வாளால் இந்நிலத்தை நான்கு திசையிலும் பெருகவைக்க முயல்கிறேன். ஷத்ரியர்களே, பாரதவர்ஷத்தை வென்று மும்முடி சூடி அமரவிழைகிறேன். அது என் உரிமையும் கடமையுமாகும் என ஆணையிட்ட வேதம் வெல்க!”

“தெய்வங்களும் முன்னோரும் மானுடகுலமும் அறிக, ஒரு சொல்லும் ஐயமில்லை. ஒரு கணமும் தயக்கமில்லை. கடல்சூழ்ந்த இப்புவியையே முழுதாளும் வரை ஒரு கணமும் மண்விழைவை குன்றவிடலாகாது என எனக்கு அறிவுறுத்தும் வேதமெய்மையே என் நெறி. உங்கள் ஒவ்வொருவருக்கும் இதுவே வேதம் அளிக்கும் அறைகூவல். உங்கள் நெஞ்சங்களில் இவ்வனல் விளங்குக! உங்கள் மைந்தரில் பரவுக! கொடிவழிகளில் என்றும் அணையாது திகழ்க! ஆம், அவ்வாறே ஆகுக!” அவையினர் கைகளைத் தூக்கி ஒற்றை முழக்கமாக “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றனர். பெருமுரசின் குடத்திற்குள் என அவைக்குள் கார்வை நிறைந்தது.

துரியோதனன் கைகள் தாழ்த்தி அவையை நோக்கியபடி நின்றான். உருகும் உலோகத்தாலான சிலை எனத் தோன்றியது அவன் முகம். அங்கே அவனன்றி பிறர் இல்லை என்பதுபோல. “இன்று என்னிடம் கோரப்படுகிறது, என் நிலம் பகிரப்படவேண்டும் என. பிருதுவின் நிலம் பகிரப்படவில்லை என்பதே என் மறுமொழி. பிருதுவின் தேர் இப்புவியிலெங்கும் தடுக்கப்படவில்லை என்பதே என் விளக்கம். நான் சொல்ல பிறிதொன்றுமில்லை” என்று தணிந்த குரலில் அவன் சொன்னான். “ஆம், ஒரு பிடி மண்ணும் அளிக்கப்படலாகாது! ஆம்! அதுவே மறுமொழி” என்று ஷத்ரியர்கள் சிலர் கூச்சலிட்டனர்.

துரியோதனன் அவர்களை கையமர்த்தி மீண்டும் குரலெழுப்பினான் “ஷத்ரியர்களே, வேதநெறி நில்லாதவர்கள் திரண்டு படைகொண்டு அங்கே நின்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே நிலத்தைத்தான் உரிமைகொண்டாடுகிறார்கள். அவர்கள் வாழும் நிலம் அவர்களுக்குரியது என்கிறார்கள். மண்ணுக்குள் வேர் என பரவியிருக்கும் தங்கள் மூதாதையரால் அளிக்கப்பட்ட பிறவியுரிமை அது என்கிறார்கள். பாண்டவர்களின் நிலவுரிமையை ஏற்போம் என்றால் அவர்கள் அனைவரின் உரிமையையும் ஏற்றாகவேண்டும். ஏற்பவர்கள் இங்கு எவர்?”

ஷத்ரியர்கள் அனைவரும் ஒரே குரலில் “இயலாது… எந்நிலையிலும் ஏற்கவியலாது! சிறுமை! வாளால் மறுமொழி சொல்வோம்! போர்!” என்று பலவாறாக கூவினர். வெவ்வேறு சொற்கள் இணைந்து சொல்லற்ற பெருமொழி ஒன்றின் முழக்கமாகவே அவையின் ஓசை எழுந்தது. ஆனால் அது தெளிவாகவே பொருள்கொண்டிருந்தது. அவை அடங்குவதற்காக துரியோதனன் காத்து நின்றிருந்தான். ஆனால் அலையலையாக அவை ஓசையிட்டுக்கொண்டே இருந்தது. அது மெல்ல அடங்கும் வரை அவன் அருவிவிழும் குளிர்பாறைபோல அசைவற்று நின்றான்.

பின்னர் மீண்டும் தொடங்கினான். “அரசர்களே, ஒவ்வொரு கணமும் கிளைவிரித்துக்கொண்டிருக்கின்றன மரங்கள். விரியத் தயங்கும் மரம் வீழத் தொடங்குகிறது. நம் முன்னோர் அளித்த நிலங்களுக்குள் நாம் இனிமேலும் அமைய இயலாது. அசுரநிலமும் நிஷாதநிலமும் நம்முடையதென்றாகவேண்டும். வடக்கே கின்னரநாடும் தெற்கே கடல்களுக்கு அப்பாலுள்ள தீவுகளும் மேற்கே யவனர்நிலங்களும் கிழக்கே மணிபூரகத்திற்கும் மேருவுக்கும் அப்பாலுள்ள மண்ணும் நமக்கு வேண்டும். நாம் விரியவேண்டும் என்றால் இன்று நம் முன் திரண்டு நின்றிருக்கும் இந்தக் குடியிலிகளை வென்றாகவேண்டும். நமக்கு வேறுவழியில்லை.”

ஷத்ரியர்கள் கைகளைத் தூக்கி மீண்டும் “ஆம்! ஆம்!” என ஆர்ப்பரித்தனர். “இன்று வரை நாம் தனித்தனியாக இவர்களுடன் போரிட்டோம். தனியர்கள் என்பதனால் அவ்வப்போது இவர்களிடம் தோற்றோம். இந்திரனே விருத்திரனிடம் தோற்றிருக்கிறான் என்ற கதை அறிந்தமையால் பெரும்பாலும் தயங்கினோம். இன்று நமக்கு ஒரு வாய்ப்பை ஊழ் வழங்கியுள்ளது. அவர்களனைவரும் ஒன்று திரண்டுள்ளனர். தம் நிலத்தை காப்பதற்காக மட்டும் அல்ல, நாம் கொண்டுள்ள நிலத்தை தாம் வெல்லும் பொருட்டும் படைக்கலம் தூக்கியிருக்கின்றனர். இனியும் நாம் வாளாவிருந்தால் நம் மூதாதையர் நம்மை பழிப்பார்கள். நம் கொடிவழியினர் எள்ளி நகைப்பார்கள். தீரா இழிவுகொண்டு நூல்களில் கறையாக படிந்திருப்போம்.”

அவையினரின் கொந்தளிப்பு அடங்கியதும் துரியோதனன் தொடர்ந்தான் “நாம் இன்று ஒருங்கிணைந்துள்ளோம். பாரதவர்ஷத்தில் இதைப்போல இதற்குமுன் அத்தனை ஷத்ரியர்களும் ஒரு வாளின்கீழ் திரண்டதில்லை. இப்போரில் நம்முடன் நம் குலதெய்வங்களும் மூதாதையரும் அணிவகுக்கின்றனர். அரசர்களே, நம் படைக்கலமாக வேதம் உள்ளது. வெல்லற்கரியது. விண்ணவரால் புரக்கப்படுவது. நாம் வெல்வோம்.” அவையினர் எழுந்து நின்று போர்க்குரலெழுப்பினர். சொல்லற்ற முழக்கத்தில் மரச்சுவர்கள் தோற்பரப்புகளென ஓசையிட்டன.

“எவர் தலைமைகொள்வது, எவர் படைமுதல் செல்வது என்று தனியாக முடிவெடுப்போம். எவரெவர் படைகள் பங்குகொள்கின்றன என்றும் எந்நிலங்களை எவ்வண்ணம் பகிர்ந்துகொள்வது என்றும் அதன்பின் கணக்கிடுவோம். இங்கு சொல்தேர்ந்த அமைச்சர்கள் உள்ளனர். மாதுலர் சகுனி அவர்களை ஒருங்கிணைப்பார். ஒன்று சூழ்க, ஒவ்வொருவருக்கும் இதனால் நலனே நிகழும். புகழும் செல்வமும் நிலமும் பெருகும். ஐயம் வேண்டியதில்லை. மாமன்னர் ஹஸ்தியின் கோலை ஏந்தி இந்த அவையில் நின்று சூளுரைக்கிறேன், நம் கொடிகள் பாரதவர்ஷத்தில் மலைமுடிகளைப்போல் என்றுமென நின்றிருக்கும்.”

ஷத்ரியர்கள் தங்கள் அரசநிலையை, அவைமுறைமையை, அகவையை, ஆடையணிகளை மறந்து வெறிகொண்டவர்களாக கூச்சலிட்டனர். கைக்கோல்களைத் தூக்கி ஆட்டினர். அசலை பெருமூச்சுடன் பின்னால் சாய்ந்து அமர்ந்தாள். தாரை “அரசர்கள் இப்படி ஆர்த்துக் கொந்தளிப்பார்கள் என்று எவர் எண்ணியிருக்கக்கூடும்! விந்தை!” என்றாள். “இந்நகரில் நாலைந்து நாட்களாக இருக்கிறார்கள். நகரைச் சூழ்ந்த நஞ்சு அவர்களுக்குள்ளும் புகுந்திருக்கும்” என்றாள் அசலை. “அவர்களின் விழிகளை நோக்கு. பலிகொள்ள அமர்ந்திருக்கும் கொலைத்தெய்வங்களுக்குரிய பார்வை கொண்டிருக்கின்றன.” தாரை “ஆம், அவர்கள் நரம்புகள் நீலம்கொண்டிருக்கின்றன. முகங்கள் காய்ச்சல்கொண்டு சிவந்திருக்கின்றன” என்றாள்.

“ஆயிரம் நாகொண்ட அனந்தன் என நின்றிருக்கிறார் அரசர்” என்றாள் அசலை. “நஞ்சிருந்தால் மட்டுமே ஆயிரம் நாவும் அமையும். நஞ்சு நஞ்சை அறிகிறது.” தாரை “அவர் கொண்ட ஒளியில் இளைய யாதவர் மறைந்துவிட்டார். அவர் அங்கிருப்பதையே நான் மறந்துவிட்டேன். கண்முன் அவர் இருக்கையில் நான் பிறிதொன்றை எண்ணுவது இதுவே முதல்முறை” என்றாள். அசலை திரும்பி பானுமதியை நோக்கினாள். கைகளை மார்பில் கோத்து விழிகளை துரியோதனன் மேல் நிறுத்தி அவள் அமர்ந்திருந்தாள். அவள் நோக்குவதைக் கண்ட தாரையும் பானுமதியை நோக்கிவிட்டு விழிதாழ்த்திக்கொண்டாள்.

அவை மீண்டும் அமைந்தபோது துரியோதனன் கைகூப்பி “இத்தருணம் நிறைவுறுக! நாம் ஒத்த எண்ணம் கொண்டவர்களானோம். இணைந்தமர்ந்து பகிர்ந்துண்ணும்போதும் பெருநதியை கைகள் பற்றிக் கடக்கும்போதும் சொல்லொருமை கொண்டு நூலாய்கையிலும் தெய்வங்கள் உடனிருக்கின்றன என்பது வேதச்சொல். இங்கு வேதநீர் விளைக! தெய்வங்கள் கிளையும் இலையும் தளிரும் மலருமெனப் பெருகுக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று சொல்லி தன் இருக்கையில் அமர்ந்தான். “ஆம்! ஆம்! ஆம்!” என அவை முழங்கியது.

அந்தக் கார்வை முடிவதற்குள் ஜயத்ரதன் எழுந்து “அரசர்களே, இந்த அவையிலேயே ஒன்று முடிவுசெய்வோம். இப்படைத்திரளின் முதன்மையரசர் குருகுலத் தோன்றலும் தார்த்தராஷ்டிரருமான துரியோதனரே” என்றான். அவையினர் அதை ஏற்று கைதூக்கி “வாழ்க! வாழ்க! வாழ்க!” என்றனர். ஜயத்ரதன் “நம் ஒருமையின் அறிவிப்பென கங்கையில் நீராட்டி இங்கிருக்கும் அத்தனை அரசர்களாலும் தொட்டு வாழ்த்தப்படும் வன்னிமரக்கிளையை மூதரசர் சல்யர் அரசர் துரியோதனருக்கு அளிக்கட்டும்” என்றான். அவை “ஆம்! அரசர் வெல்க! குருகுலத்தோன் வாழ்க!” என வாழ்த்துரைத்தது.

அரசர்களின் நிரையினூடாக ஏவலர் அரிமலர்த் தாலங்களுடன் சென்று ஒவ்வொருவருக்கும் அளித்தனர். இறுதி நிரையிலிருந்து கிளம்பிய இலையுடன்கூடிய வன்னிமரக்கிளை அரசர்களின் கைகளினூடாக வந்தது. நீரோடை ஒன்றில் மிதந்து வருவதுபோலத் தோன்றியது. பால்ஹிகரான சோமதத்தர் அதை சல்யரிடம் அளிக்க அவர் அதை வாங்கி தன் தலைமேல் வைத்து வணங்கினார். வலப்பக்கம் சோமதத்தரும் இடப்பக்கம் காந்தார மன்னர் சுபலரும் துணைவர படிகளில் ஏறி துரியோதனனின் அருகே சென்று அதை அவனுக்கு அளித்தார். மேடையில் உடன் சென்று விதுரர் அவர்களை நடத்தினார்.

துரியோதனன் எழுந்து நின்று கைகூப்பி தலைவணங்கி அதை பெற்றுக்கொண்டான். கனகர் கைகாட்ட மங்கல இசைக்கலங்களும் அவைமுரசுகளும் கொம்புகளும் முழங்கின. அதைக் கேட்டு நகரமெங்கும் முரசுகள் முழங்கத் தொடங்கின. அவையினர் அரிமலர் தூவி வாழ்த்தொலி எழுப்பினர். அதன் நடுவே நின்று துரியோதனன் அந்தக் கோலை தலைக்குமேல் தூக்கி ஆட்டினான். அதை தன் பீடத்தின் அருகே வைத்துவிட்டு கைகூப்பி அமர்ந்தான்.

ஜயத்ரதன் கைகளை விரித்து அவையை அமைதிப்படுத்திவிட்டு “இந்த அவை இரண்டாவது முடிவையும் எடுக்கட்டும். நாம் கொண்டுள்ள இந்தப் படைக்கூட்டு இந்தப் போருக்கானது மட்டும் அல்ல. இது பெருகி முன்செல்லவேண்டும். பாண்டவர்களையும் உடன் எழுந்துவந்துள்ள கீழ்க்குடிகளையும் வெல்வது நம் படைக்கோளின் முதல்படி மட்டுமே. பாரதவர்ஷத்தை முற்றாக நம் கொடிக்குள் கொண்டு வந்தாகவேண்டும். இங்குள்ள குலங்கள் அனைத்தும் அடிபணிந்து நம்மை ஏற்கும்வரை, இந்நிலம் முழுக்க ஷத்ரியக்குடியினரால் ஆளப்படும் வரை இப்படை வாளேந்தியிருக்கவேண்டும். குருதிவிடாய் மிகுந்திருக்கவேண்டும்” என்றான். அவை “ஆம்! பாரதவர்ஷம் முழுமையும்! நிலமனைத்தும்! ஒவ்வொரு பரு மண்ணும்!” என்று கூச்சலிட்டது. ஜயத்ரதன் கைகூப்பி அமர்ந்த பின்னரும் அவ்வோசை நீடித்தது.

விதுரர் அவைமேடையில் வந்து கைகூப்பியதும் மீண்டும் அவை அமைதிகொண்டது. “அரசர்களே, இந்த அவை தன் படைக்கூட்டின் தலைவராக அஸ்தினபுரியின் அரசரை தெரிவுசெய்து முதல் பெரும்முடிவை எடுத்துள்ளது. நிகழ்வுகள் தொடரவேண்டும். இங்கு எடுக்கப்பட்டுள்ள முடிவுகளில் அவையமர்ந்திருப்பவர்கள் எவருக்கேனும் மாற்றோ நீட்சியோ இருக்குமென்றால் உரைப்பதற்கான தருணம் இது” என்றார்.

கணிகர் எழுந்து நின்று அவையை வணங்கினார். “சொல்க, அந்தணரே!” என்றார் விதுரர். “ஆம், அவை நிகழ்வுகள் தொடரட்டும். ஆனால் அதற்கு முன் நம் படைகளை தலைமைகொண்டு நடத்துபவர்களின் பெயர்களை அவையில் அறிவித்துவிடலாமே” என்றார். “அது பின்னர் பேசி முடிவெடுக்கப்படவேண்டியது என்றார் அரசர்” என்றார் விதுரர். “ஆம், பின்னர் பேசலாம். ஆனால் எவரெவர் இங்கு அதற்குரியவர்களாக உள்ளனர் என்று சொல்லிவிடலாம். பிற பேச்சுகள் நிகழ்கையில் அவையினர் அதைக் குறித்தும் எண்ணி முடிவெடுக்க இயலும் அல்லவா?” என்றார் கணிகர்.

விதுரர் எழுந்த சினத்தை அடக்கி “இங்கே இளைய யாதவரின் தூது எழவுள்ளது” என்றார். “ஆம், அதன்பொருட்டே சொன்னேன்” என்று கணிகர் புன்னகை செய்தார். அவையினர் நகைக்கும் ஒலி மெல்லிய முழக்கமாக எழுந்தது. ஜயத்ரதன் “படைத்தலை நிற்பவர்களின் பெயர்களை சொல்வதற்கென்ன? அரசர் அறிவிக்கட்டும். அதன்மேல் மாற்று எண்ணம் உடையவர்கள் தங்கள் சொற்களை தொகுத்துக்கொண்டு ஆதரவுதிரட்டி பேச வாய்ப்பமையும்” என்றான். விதுரர் பெருமூச்சுடன் “ஆம்” என்றார்.

துரியோதனன் “அவையினர் அறிந்த பெயர்கள் மட்டுமே. பிதாமகர் பீஷ்மரும், ஆசிரியர்களான துரோணரும் கிருபரும், மத்ரநாட்டரசர் சல்யரும் முதனிலை தலைவர்கள். சைந்தவராகிய ஜயத்ரதரும், உத்தர பாஞ்சாலரான அஸ்வத்தாமரும், யாதவராகிய கிருதவர்மரும், காந்தாரராகிய மாதுலர் சகுனியும் இரண்டாம் நிலையில். எப்போதும் நானும் இளையோரும் உடனிருப்போம்” என்றான் துரியோதனன்.

கணிகர் “அரசே, அவையோர் அறியவிரும்புவது அங்கநாட்டரசராகிய கர்ணன் படைத்தலைமை கொள்ளவிருக்கிறாரா இல்லையா என்றுதான்” என்றார். துரியோதனன் “அவர் படைத்தலைமை கொள்வதனால் நாம் இருமடங்கு ஆற்றல்கொண்டவராவோம். அது என் விருப்பம். ஆனால் அவை அதை முடிவுசெய்யட்டும்” என்றான். “ஆம், அவையோர் எண்ணிமுடிவெடுக்கட்டும்” என்று கணிகர் கைகூப்பி அமர்ந்தார். அதுவரை இருந்த ஒருமை முழுமையாக மறைய அவை கலைந்து தங்களுக்குள் பேசிக்கொள்ளத் தொடங்கியது. ஒவ்வொருவரும் மேலும் மேலுமென உளவிசை கொண்டு முகம் சிவந்து கைகளை வீசிப் பேச பூசலோசை வலுத்து இரைச்சலாகியது.

சகுனி “விதுரரே, இளைய யாதவர் தன் தரப்பை சொல்லலாமே” என்றார். விதுரர் கைவிரித்து “அமைதி! அமைதி!” என்றார். அவையின் ஓசை சற்று அமைந்து மீண்டும் எழுந்தது. விதுரர் இளைய யாதவரை நோக்கி “தங்கள் சொற்களை அவை நிறுத்தலாம், யாதவரே” என்றார். இளைய யாதவர் புன்னகையுடன் எழுந்து நின்றபோதும் அவை கலைந்து பேசிக்கொண்டே இருந்தது. அலையடிக்கும் கைகளுக்கும் உடல்களுக்கும் நடுவே அவர் கைகூப்பியபடி மாறா மென்நகையுடன் நின்றார்.

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைமனோன்மணியம் பல்கலையில்…