அன்புள்ள ஜெயமோகன்,
விஷால் ராஜா எழுதிய ‘முடிவின்மையில் நிகழ்பவை’ ஏற்கனவே வாசித்தாலும் நீங்கள் குறிப்பிட்டதைத் தொடர்ந்து மீண்டும் இக்கதையை வாசித்தேன். அதையொட்டி அவர் தளத்தில் இருந்த வேறு சில கதைகளையும் ஒருசேரமீண்டும் வாசித்தேன். என் அபிப்பிராயத்தை பகிர்ந்துகொள்ளத் தோன்றியது. ஆகவே இப்பதிவு.
“முடிவின்மையில் நிகழ்பவை”
காலங்கள் மாறுவது போல உணர்வுகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. சிவப்பு, மஞ்சள், நீலம் என்று மூன்றாகஉறவின் நிலைகள் பிரிக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் உணர்தலிலும் பகிர்தலிலும் இருக்கும் அன்பு சற்றுக்காலம்செ ல்ல வடிகிறது, சந்தர்ப்பவசமாக நீர்ந்து போகிறது. பின்பு துளிர்க்கும் அன்பு சொல்லப்படாமலோ ஏற்றுக்கொள்ளப்படாமலோ போவதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்கின்றது. இதுதான் அதீத பிரிவையும்வேதனையும் தருகிறது. இதற்குள் தோய்ந்து எழுதல்தான் கடினமானதாக இருக்கிறது.
உண்மையில் இந்த உறவின் உணர்வுகள் எல்லாம் தனித்தனியே மூன்று பிரிவாக நிகழ்கின்றனவா என்றால் இல்லைஎன்றே தோன்றுகின்றது. எல்லா நேரத்தில் மூன்று வர்ணங்களும் உள்ளுக்குள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இதில்மிகப்பிடித்த ஓர் இடத்தில் மாத்திரம் நிற்பது சாத்தியம் அற்றதுதான் மனித வாழ்கையில்.
மித்திரனுக்குள் பிரகதி வர்ணங்களால் மாறியவாறே இருக்கிறாள், இருந்தும் ஒரு தடவையேனும் அவளை தன்னிலிருந்து அவனால் விலக்கிப் பார்க்க முடியவில்லை. அனைத்து உணர்வு மாற்றங்களைத் தாண்டி அவள்அவ வனுடன் இருந்தவாறே இருக்கிறாள். இதை இரண்டு சார்பாக பிரிக்கலாம் மித்திரன் சார்பாக, மற்றையது பிரகதி சார்பாக. மித்திரனிடம் இதேபோல் மாற்றங்க ள் வரும்போது பிரகதியினாலும் மித்திரனை விலக்க முடியாது.
இந்த மாற்றங்களை ஒரு இடத்தில் நிறுத்தி ஒருகணத்தில் உறையச்செய்யும் போது அங்கு என்ன நிகழும் என்பதைக்கற்பனையாக இக்கதை இட்டுச்செல்கிறது. இந்தக் கதையில் ஒரு கனவுத்தன்மை இருக்கின்றது. ஒரு புதிர்ச் சூழலைஉருவாக்கி அதில் சில முடிச்சுக்களை அவிழ்க்க முனைகிறது. வாசகக் கற்பனைக்கும் நிறையவே வேலை கொடுக்கிறது. வாசித்த விஷாலின் கதைகளில் இருந்து இக்கதை நிரம்பவே மாறுபட்டது.
……………..
“குளிர்”
நம்மால் தீங்குக்கு உள்ளாகப்பட்டவர்கள், அந்தக் காரணத்தினாலேயே உரிமையுடன் வந்து ‘எனக்கு இப்படியானதற்குக் காரணம் நீதான்; அதனால் இந்த உதவியைச் செய்து தா” என்று மறைமுகமாக கேட்பதுதான்இக்கதையின் மையமாகத் தெரிகிறது. போலீசாக இருப்பவரால் தன்னால் முடமாகப்பட்டவனின் கோரிக்கையைபுறம் தள்ள முடியவில்லை. அவனுக்கு இருபது ரூபாயைக் கொடுத்துவிட்டு அவருக்குள் எழுந்த அகங்கார இழப்பைச்சட்டென்று அருகிலிருப்பவரிடம் அவனைப்பற்றி தானாகச் சொல்லிக்காட்டி சமன் செய்கிறார் . மிக முக்கியமான தருணத்தை விஷால் இதில் கதையாக மாற்றி இருப்பதாகத் தோன்றுகின்றது. நல்ல கதை.
……………
“பரிசு எண்கள்”
மிக எளிமையான கதை. திருவிழாவைச் சுற்றி நிகழும் புறவய அவதானங்களைக் கொண்டு எ ழுதப்பட்ட கதை. சிலஅதிஷ்டங்களை பலவீனமான இடங்களில் மனம் எதிர்பார்க்கச் செய்கிறது. சிலருக்கு அதிஷ்டத்தை தேடுதல் குதூகலவிளையாட்டாக இருக்கிறது. சிலருக்கு அனைத்தும் தளர்ந்த நிலையில் இதில் ஏதும் தேறுகின்றதா என்ற எண்ணத்தைசலிப்பாக ஊட்டும் ஒன்றாக இருக்கிறது. மீண்டும் இக்கதையை வாசித்துப்பார்க்க சாதாரண கதையாகவே தெரிகிறது. குறிப்பிட்டுச் சொல்லும் படியாக அதிகம் இல்லை, ஆசிரியரின் புறவய அவதானங்களைத் தவிர.
……………
“விலகி செல்லும் தூரம்”
“விலகிச்செல்லும் தூரம்” பொருட்படுத்தத்தக்க நல்ல கதைதான். சரளமாக எழுதப்பட்டுள்ளது. எங்கே காட்சிப்பூர்வ சித்தரிப்பைச் சிருஷ்டிப்பது, எங்கே தவிர்ப்பது என்கிற விகிதம் இயல்பாகவே வருகிற து. விஷாலின் கதைகளில்மனதின் நுட்பத்தைத் தெளிவாக எழுதும் திறனை இக்கதையே நுட்பமா கக் காட்டுகிறது. தன்னிரக்கம், கழிவிரக்கம்பொங்கி வரும் இடங்கள் மிகைப்படாமல் கச்சிதமான கூர்மையுடன் வருகிறது.
ஜேக்கப்பின் பாத்திர வார்பைப் புரிந்துகொள்ள இயலுகிறது. ஆனால், ஜானின் மீதான புரிதலை வலுவாக நிறுவிக்கொள்ள இயலவில்லை. ஜேக்கப்பின் சித்தரிப்புக்கு நேர் எதிரான சித்தரிப்பாக ஜானின் பாத்திரம் வலுவாகவிரிந்திருக்க முடியும் என்று தோன்றுகிறது.
ஹர்ஷத்தின் தன்னிரக்கத்தின் அடியாழத்தில் புதைந்திருக்கும் வன்மம் கரைந்து செல்லும் தருணங்களை விரிவாக்கி இருந்திருக்கலாம்.
உண்மையில் தன்னிரக்கம் ஒரு போதை அதை ரசிக்கத் தெரிந்துவிட்டால் தன்னைத் தாழ்த்தி தாழ்த்தி உருகிமகிழலாம் . அந்தப்புள்ளிகள் கதையில் மின்னி மின்னித் தெரிகின்றன.
//வெளிச்சத்தில் தென்னை ம ரத்தினடியே குவிந்திருந்த சிரட்டைகள் பிடுங்கி வைத்த மனித கண்கள் போல் கோரமாகதெரிந்தன.// இந்த உவமை நிரம்பவே கவர்ந்தது.
………………
“மகிழ்ச்சிக்கான இரத்தப் புரட்சி”
இன்றைய தலைமுறைக்கு இருக்கக்கூடிய பிரச்சினை இதுவாகத்தான் இருக்கமுடியும் என்று அனுமானித்துஎழுதப்பட்ட கதை. சேர்ந்து வாழ்தல் என்பது கானல்நீர் போல் இருக்கிறது. வெளிப்படையாக அவ்வாறு தோன்றினாலும் எல்லோரும் தனித்தே இருக்கிறார்கள். கைவிடலை உணர்கிறார்கள், தன்னிரக்கத்தில்தவி விக்கிறார்கள். யாராவது புனிததேவன் வந்து மீட்க மாட்டானா என்று தங்களை அறியாமலே எதிர்பார்க்கிறார்கள். வர்க்க வேறுபாடு இல்லாமல் சாப்ட்வேர் எஞ்சினியரில் இருந்து பால் கொதிக்கவைக்கும் கன்டீன் பையன்வரை அனைவருக்கும் இந்த அகப்பிரச்சினை இருக்கிறது.
இந்த உணர்வுகள் பொங்கி நுரைத்துத் ததும்பும் போது ஏற்படும் பிரஞ்சை தடுமாற்றம் தான் இக்கதையாகஇருக்கிறது. “மிஸ்டர்.நோ ஐடியை” ஒரு படிமமாக பார்க்க முடிகிறது. ஒரு கட்டத்தில் விரத்தியில் ஏற்படும் ஆழ்ந்தகசப்பாக பார்க்கலாம், அது இந்தத் தலைமுறை எல்லா யுவன், யுவதிளிடையும் உள்ளது. அதற்கான காரணங்கள்பு றவயமான சொல்லப்படுகிறது. சொல்லப்படுகிறதே தவிர உணர்த்தப்படவில்லை.
மீண்டும் மீண்டும் வளாகத்தின் அழிவு விவரிக்கப்படுகிறது. அதுவே பல பக்கங்களை நிரப்புகிறது. ஒவ்வொருபாத்திரங்களின் பார்வையில் அவை மீண்டும் அதிக விவரிப்புடன் வரும்போது அங்கிருக்கும் அக உணர்வுகள் மங்கி, புறவய சித்தரிப்புகளே வாசிப்பில் வெறுமே எஞ்சுகிறது.
ஒரு தலைமுறைக்கு இருக்கும் தன்னிரக்கம் நிறைந்த அகத்தடுமாற்றம், அதன் எதிர்மறையான எழுச்சி அதன் மீள்தல்என்று செல்லும்போது கதையின் முடிவு இதுவாகத்தான் இருக்கும் என்று முன்னமே ஊகிக்க முடிகிறது. அ துபிரச்சினையாக இல்லை, ஆனால் அதன் ஊடாக புதிதாக என்னால் எதையும் கண்டடைய இயவில்லை. விலகிச்செல்லும் தூரம் கதையில் ஒரு மேதைமை தனம் இருந்தது. இதில் அப்படி ஏதும் எனக்குத் தோன்றவில்லை.
………………
“அந்தரச் செடி”
ஓர் இளம் பெண். அவளைச் சுற்றி இருக்கக்கூடிய சில கதைகள். கதை செல்லியின் புறவய அவதானிப்புகள் ஊடககதை நிகழ்கிறது. தந்தையின் இயல்பான பதற்றம், மகள் மீதான பிரியம் போன்றவை மற்றொரு கோணத்தில்வந்தாலும் , பாசத்தைத் தாண்டி தன் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மனித மனதை ஒரு மெல்லிய கீறலாக இக்கதைகாட்டிவிடுகிறது.
………………
ஒட்டுமொத்தமாக ஒருசேர இக்கதைகளை வாசித்து முடிய “விலகி செல்லும் தூரம், குளிர், முடிவின்மையில்நிகழ்பவை போன்ற கதைகள் நல்ல கதைகளாகத் தோன்றின.
முடிவின்மையில் நிகழ்பவையில் மாறுபட்ட புனைவு மொழியில் எழுதிப்பார்த்த கதையாகத் தோன்றினாலும் , இன்னும் பு னைவு மொழியை விஷால் கூர்மைப்படுத்தலாம்எ ன்றே தோன்றுகின்றது வர்ணனைகளைச்சொற்பமாகவே உபயோகிக்கிறார். நேரிடையாகச் சொல்லிவிடும் தன்மை இருக்கிறது. அது அவர் அழகியலாகஇருப்பினும் இக்கதைகளை இன்னும் தேர்ந்த அழகியல் மொழியுடன் எழுதினால் இன்னுமொரு கட்டத்தை எட்டும்என்றே நினைக்கிறேன். முடிவின்மையில் நிகழ்பவையில் அது ஓரளவுக்குச் சாத்தியமாகியிருக்கிறது. அவர்தொகுப்பை இன்னும் வாசிக்கவில்லை, வாசித்தால் அவரின் படைப்புலகம் என்னவாக இருக்கிறது என்பதைத்தெளிவாக ஆராயலாம் என்று நினைக்கின்றேன்.
அன்புடன்
அனோஜன் பாலகிருஷ்ணன்