வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–44

பகுதி ஏழு : அலைகளில் திரள்வது – 2

bl-e1513402911361அசலை வந்திருப்பதை அறிவிக்க லதை வந்து வாயிலில் நின்றாள். கையிலிருந்த பீலியை பேழைக்குள் வைத்தபடி உள்ளே அனுப்பும்படி பானுமதி தலையசைத்தாள். அவள் பீடத்தில் அமர்ந்தபோது அசலை உள்ளே வந்தாள். அமரும்படி பானுமதி கைகாட்ட அசலை அமர்ந்து ஆடையை கால்கள் நடுவே அமைத்தாள். பானுமதி “அரசரின் சேடி வந்திருந்தாள்” என்றாள். “வல்லபையா? அவள் வந்தால் அது அரசரின் செய்தி அல்ல, கணிகர் அனுப்பியது” என்றாள் அசலை. “ஆம், அறிவேன்” என்றாள் பானுமதி. “நாம் கோட்டைமுகப்புக்குச் சென்று இளைய யாதவர் நகர்புகுகையில் வரவேற்கவேண்டும்.”

அசலை சில கணங்கள் நோக்கிக்கொண்டிருந்தாள். “நான் அரசமுறைப்படி அது வழக்கமில்லையே என்றேன். அரசரின் ஆணை அது என்றும் அதற்குரிய முன்முறைமை உள்ளது என்றும் சொன்னாள்.” அசலை “எளிதில் தோன்றுவது ஒன்றே. ஏற்கெனவே இளைய யாதவர்மேல் ஷத்ரியர்களுக்கு சினம் உள்ளது. நான்காம் குலத்தவர் நிலம்வென்று அரசமர்ந்ததில் தொடங்குகிறது. சில அவைமுறைமைகளை கோரிபெற்றதில் வளர்வது. சிசுபாலரின் குரல் ஷத்ரியர் அனைவருக்கும் உரியது. இங்கே அவரை அரசரென நாம் வரவேற்பதை அவர்களால் தாளவியலாது. அவர்மேல் சினம் பெருகுவது அவர் கொண்டுவரும் தூதை அழிக்கக்கூடும்” என்றாள்.

“ஆனால் அச்சினம் நம்மீதும் எழும் அல்லவா? ஷத்ரியத்தலைமை கோரும் நாம் எப்படி அவரை அரசரென வரவேற்றோம் என?” என்றாள் பானுமதி. “ஆம், அதுதான் என்னை குழப்புகிறது. ஒருவேளை அந்த எதிர்ப்பை ஏதேனும் வழியில் கணிகர் சீரமைக்கக்கூடும். அல்லது இளைய யாதவர் இங்கே அரசமுறைப்படி மட்டுமே பேசமுடியும், இறங்கிக்கோர முடியாது என அவருக்கு உணர்த்தும் நோக்கம் இருக்கலாம். அல்லது அவரை வெறுமனே உளம்குழம்ப வைப்பதற்காக இருக்கலாம். பாண்டவர் உள்ளத்தில் நம்பிக்கையின்மையை உருவாக்கும் திட்டமிருக்கலாம்… ஆனால் எதை எண்ணினாலும் எங்கோ அது பொருந்தவில்லை” என்று அசலை சொன்னாள்.

“ஏன் நம்மை நோக்குவதற்காக இருக்கலாம் அல்லவா?” என்றாள் பானுமதி. அசலை திடுக்கிட்டு “ஏன்?” என்றாள். “நம் உள்ளம் எங்கிருக்கிறது என” என்றாள் பானுமதி. “அது மாறுமா என்ன?” என்றாள் அசலை. “இல்லை, நாம் வாழும் உலகு வேறு” என்றாள் பானுமதி. “ஆனால் இன்றிருக்கும் நிலையில் நாம் எதையாவது பிழையாக பேசக்கூடும். எங்கோ சில முடிச்சுகள் விழக்கூடும். அவர்கள் எண்ணுவது எதுவென அறியா நிலையில் நம் ஒவ்வொரு சொல்லும் செயற்கையாகவே ஒலிக்கும்.” அசலை தாழ்ந்த குரலில் “அக்கை, நம் அனைவர் குரலும் செயற்கையாகவே ஒலிப்பவை” என்றாள். சில கணங்களுக்குப்பின் பானுமதி “ஆம்” என்றாள்.

அசலை “நாம் அஞ்சவேண்டியதில்லை. அஞ்சுவதற்குரிய எதையும் நாம் ஆற்றவும்போவதில்லை” என்றாள். “நாம் நம்மியல்புப்படி இருப்போம். அவரை எதிர்கொண்டழைப்பதும் அரண்மனை அமர்த்துவதும் நமக்கமையும் நல்வாய்ப்பென்றே கருதுவோம்.” பானுமதி “நானும் இறுதியில் அதையே எண்ணினேன்” என்றாள். “நான் சற்றுமுன் அத்தையை எண்ணிக்கொண்டிருந்தேன்.” அசலை முகம் மலர்ந்து “ஆம், எவ்வகையிலோ அத்தை இவையனைத்துடனும் தொடர்புகொண்டிருக்கிறார்” என்றாள். “எப்படி?” என்றாள் பானுமதி. “தெரியவில்லை, அப்படி சொல்லத் தோன்றியது” என்றாள் அசலை. அவர்கள் தங்கள் நெஞ்சு சென்றடைந்த அப்பொருளின்மையில் திளைத்தபடி விழிசரித்து அசைவற்று அமர்ந்திருந்தார்கள்.

பானுமதி பெருமூச்சுடன் விழித்துக்கொண்டு “இளைய யாதவர் காசிக்கு வந்ததை நினைவுறுகிறாயா?” என்றாள். “ஆம், அப்போது சிறுமிபோல் உளம் கொண்டிருந்தேன். ஆனால் அவர் இருந்த ஏழு நாட்களின் ஒவ்வொரு கணமும் என் நெஞ்சில் உள்ளது” என்றாள். “அவர் சொன்னவையும் செய்தவையும் பொருள்பெருகிச் செல்கின்றன, அக்கையே. ஆனால் மிக எளிய ஒன்று நாளுக்கொருமுறையேனும் எண்ணத்தில் எழுகிறது. மரமல்லி மலரை இரு விரலால் சுழற்றி காற்றில் பறக்கவிடுவார். அது அவர் உயிரின் நீட்சியை பெற்றுக்கொண்டதுபோல சிறகுகொண்டு காற்றில் மிதந்து சென்று மீண்டுவரும். அவருடைய நீட்டிய சுட்டுவிரல்மேல் வந்து அமையும்.”

முகம் மலர அந்நிகழ்வை நோக்குபவள்போல அசலை அமர்ந்திருந்தாள். அவளை பானுமதி சில கணங்கள் நோக்கியபின் “அவர் என்னிடம் வேழம் எனை மணம்கொள்ளும் என்று உரைத்தபோது இவையனைத்தையும் அறிந்திருப்பாரா?” என்றாள். அசலை முதலில் அதை செவிகொள்ளவில்லை. பின்னர் உணர்ந்து திரும்பி நோக்கி “உணராமலிருக்க வாய்ப்பில்லை…” என்றாள். பானுமதி ஒன்றும் சொல்லவில்லை. அசலை “வேழமே அல்லவா?” என மீண்டும் சொன்னாள். “ஆம்” என்று பானுமதி பெருமூச்சுவிட்டாள். அசலை அவள் பேசப்போவதென்ன என்பதுபோல நோக்கி அமர்ந்திருந்தாள். பானுமதி ஒன்றும் சொல்லாமல் கைகள் ஒன்றையொன்று துழாவ அமர்ந்திருந்தாள். அசலை அவ்விரல்களை நோக்கினாள். அவை தேடித் தவிப்பது எதை?

பானுமதி பெருமூச்சுடன் “நன்று, பொழுதாகிறது” என எழுந்தாள். “உன்னிடம் நான் கேட்க விழைந்தது இதைத்தானடி. நான் இப்போதுகூட இதை ஒழிய முடியும். உடல்நலமில்லை என்று படுத்தால் போதும்” என்றாள். “அதை செய்யலாகாது, அரசி. இது ஒரு நல்வாய்ப்பென்றே நாம் எண்ணவேண்டும். நாம் அவரிடம் சொல்ல ஒன்றுமில்லை. ஒருவேளை அவர் நம்மிடம் சொல்ல ஏதேனுமிருக்கலாம்.” பானுமதி திகைப்பு தெரியும் விழிகளுடன் “எதை?” என்றாள். “ஏதேனும்…” என்றாள் அசலை. “அவர் சொல்லப்போவதை நாம் அறியமுடியுமா என்ன?” பானுமதி “நீ என்ன கேட்டாய்?” என்றாள். “என்ன?” என்றாள் அசலை. “வேழமே அல்லவா என்றாய்” என்றாள் பானுமதி. அசலை “ஆம்” என்றாள். “ஆம், வேழம்தான். வேழத்தை எவரும் எந்நிலையிலும் வெறுக்கவியலாது” என்றாள் பானுமதி. அசலை புரியா விழிகளுடன் நோக்கி பின் மெல்ல நகைப்பு ஒளிரப்பெற்றாள்.

ஆனால் பானுமதி பதைப்புடன் “ஆமடி. இந்தப் பெருஞ்சுழியிலிருந்து எனக்கு இப்பிறவியில் மீட்பில்லை. வெறுக்க விழைந்ததுண்டு. மெய்யாகவே விரும்புகிறேனா என மீள மீள கேட்டுக்கொண்டதுண்டு. வடக்குநோக்கிப்பொறிபோல எத்தனை அலையினும் அங்கு சென்றே நிலைகொள்கிறது உள்ளம். என்னால் இவரை வெறுக்கவியலாது. ஆம், நானும் அவரே என்று கூவி எழுந்து ஓடிச்சென்று உடன் நிற்கவே அகம் எழுகிறது. அவர் உண்ட அந்நஞ்சின் பாதியே எனக்கு அமுதாகுமென சற்றுமுன் எண்ணினேன்” என்றாள். அவள் இமைகளில் நீர்த்துளிகள் நின்றன. “காதல்கொண்ட பெண்ணென்று பேதையாகி நிற்பதில் உள்ள உவகையும் நிறைவும் வேறெதிலும் எனக்கு கூடவில்லையடி.”

“நீயும் தாரையும் பேரரசியும் துச்சளையும் போர் தவிர்க்கும்பொருட்டு கொண்ட அத்தனை முயற்சிகளையும் என் சித்தம் ஆம் அதுவே வழி என ஏற்றுக்கொண்டது. ஆழம் அவருக்கு எதிரானவை என வெருண்டு விலகிக்கொண்டது. இரு நிலையே என் இயல்பென்று எப்போதும் இருந்துள்ளேன். இப்போதும் அவ்வண்ணமே உணர்கிறேன்” என்றாள் பானுமதி. “இரு நிலை இதில் எங்கிருந்து வருகிறது, அக்கையே? நீங்கள் அவரிடம்தான் இருந்துகொண்டிருக்கிறீர்கள்” என்றாள் அசலை. “ஆம், ஒருகணமும் என் ஆழம் விலகியதில்லை என இன்று அறிந்தேன். சற்று முன்னர்… வல்லபை வந்து தூதுரைத்தபோது.”

“ஏன்?” என்றாள் அசலை. “அது எனக்கு அளிக்கப்பட்ட தேர்வு” என்றாள் பானுமதி. “நான் என் கரவறையில் வைத்திருக்கும் பீலியைத் துறக்காமல் அவரை இனி அணுகவியலாது. இரண்டிலொன்று தேர்க என்று எனக்கு உரைக்கப்படுகிறது.” அசலை முகம் சுளித்து “எவர் கூறுவது?” என்றாள். “அவரல்ல. வேழம் சிறுமையறியாதது. அது இங்குள்ள அனைவரின் சிறுமையுமென்றாகி நின்றிருக்கும் கணிகரின் செய்தி.” அசலை “ஆம்” என்றாள். “அனைத்தையும் உதறிச்சென்று அவருக்கு இடம் அமரவே நான் விழைகிறேன். நேற்றுவரை என்னை சற்றேனும் தடுத்தது மைந்தருக்கு அன்னை எனும் நிலை. இப்போது அதுவும் சுருங்கி அப்பால் சென்றுவிட்டது” என்றாள் பானுமதி.

குரல் இடற சற்று பொறுத்து உளம் எழ குரல் ஓங்கி “இம்மாமதத்தோனை அடைந்தமையால் என்னுள் நின்று தருக்கிய ஒரு பெண் இன்றும் அவ்வண்ணமே இருந்துகொண்டிருக்கிறாள். பிறிதொன்று என இங்கே நான் எதையும் உணரவில்லை. இவையனைத்திற்கும் அப்பால் என ஏங்கும் ஆழமொன்றின் துளி அப்பீலி. வானோக்கிய விழி அது. அதைத் துறந்தால் மட்டுமே இது எனக்கு கைகூடுமென்றால் அவ்வாறே ஆகுக!” என்றாள். அவள் கைவிரல்கள் குளிர்நீரில் அளைவனபோல நடுநடுங்கின. உதடுகள் துடித்தன. நெஞ்சு எழுந்தமைய தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அசலை அவள் கைகளை பற்றினாள். அவை சிறுபரல்மீன்கள் என ஈரமும் தண்மையுமாக துடித்தன.

“அக்கை, நெஞ்சு சொல்லும் வழி அதுவே எனில் அதையே தேர்க! அஞ்சியோ தயங்கியோ அகம்நிறையும் அன்பை தவிர்த்தால் பிழை செய்தவர்களாவோம்” என்றாள். “அவ்வண்ணமென்றால் நான் இளைய யாதவரை எதிரேற்கவேண்டுமா என்ன?” என்றாள் பானுமதி. “ஆம், அவ்வண்ணமென்றால்தான் எதிரேற்கவேண்டும். முற்றிலும் அரசி என. பிறிதொரு துளியும் அல்ல என. உங்கள் விழிநோக்கி அவர் அதை அறியட்டும்.” பானுமதி தலையசைத்தாள். “இத்தருணத்தை கணிகர் அமைத்தளித்தது அதன்பொருட்டே போலும். அறுத்து எழுக!” என்றாள் அசலை. “ஆம்” என பானுமதி தலையசைத்தாள். பின்னர் பெருமூச்சுவிட்டாள். அசலையும் பெருமூச்சுவிட்டு அமைந்தாள்.

சற்றுநேரம் கழித்து பானுமதி புன்னகையுடன் “நீ சொன்ன காட்சியே என்னில் எழுந்தது, இளையோளே. ஆழியெனச் சுழலும் சிறுவெண்மலர். நான் கலிநஞ்சு உண்டு கருமையடைந்தால் எனை நோக்கி எழுவது அது அல்லவா?” என்றாள். அசலை சிரித்து “அப்போதும் அது மலர்தான், அக்கை” என்றாள்.

bl-e1513402911361கதவை எவரும் திறக்கும் ஒலி கேட்கவில்லை, ஆனால் அவள் உள்ளே வந்துவிட்டிருந்தாள். பானுமதி எழுந்து “அத்தை!” என்றாள். அத்தை அவளை முற்றிலும் புதியவளை பார்ப்பதுபோல விழிசெலுத்தினாள். அவ்விழிகளை சந்தித்ததுமே அவள் அறிந்தாள், அது அத்தை அல்ல என. “யார் நீங்கள்? எவ்வாறு உள்ளே வந்தீர்கள்?” என்றாள். கதவு மூடப்பட்டிருப்பதை அப்போதுதான் அவள் நோக்கினாள். அது ஏதேனும் தெய்வமா? தேவமகளா? விண்ணேறாத மூச்சுடலா? இல்லை, இது கனவு. நான் என் மஞ்சத்தில் படுத்து கனவு கண்டுகொண்டிருக்கிறேன்.

“யார்?” என்று அவள் உரக்க கேட்டாள். “நான் உன்னைப் பார்க்க வந்தேன்” என்றாள் அவள். “ஏன்?” என்று பானுமதி கேட்டாள். அச்சம் எழுந்து நெஞ்சை பற்றியது. அறையிலிருந்து வெளியே ஓட வழியுண்டா என சித்தம் பதறியது. “நான் உன்னை வந்தடைந்தேன்” என்றாள் அவள். “நீங்கள் யார்?” என்றாள் பானுமதி. “நான் நீ வரும்வரை காத்திருந்தேன்” என்று அவள் சொன்னாள். அவளிடம் சொன்னதுபோல் அச்சொற்கள் எழவில்லை. தன்முன் பானுமதி நின்றிருப்பதையே அறியாமல் வேறேதோ வெளியில் நின்று சொல்லிக்கொண்டிருந்தாள். “நான் காத்திருந்தேன்… அது நீ என அறிந்தேன்.” பானுமதி “அத்தை!” என்றாள். “அத்தை, நீங்களா இது?” அவள் புன்னகைத்தாள். வாயின் இரு மூலையிலும் கோரைப்பற்கள் வளைந்திருந்தன. அப்போதுதான் அவள் கூந்தலை பானுமதி கண்டாள். அது அலையலையாக இறங்கி நிலத்தில் விழுந்து கதவை அடைந்து வெளியே சென்றிருந்தது. “வானின் தனிமையில்” என்றாள் அவள். “அத்தை… என்ன சொல்கிறீர்கள்?”

அச்சொல்லை அவளே கேட்டு அவள் விழித்துக்கொண்டாள். மேற்கூரையின் பலகையடுக்குகளை நோக்கியபடி உடல்ஓய்ந்து படுத்திருந்தாள். எங்கோ இரவு ரீங்கரித்துக்கொண்டிருந்தது. ஒரு பறவையின் ஒலியில் அவள் உடல் விதிர்த்தது. விடாயை உணர்ந்து எழ முயன்றாள். எழுந்து சென்று நீர் அருந்த விழைந்தாலும் உடலை இயக்க இயலவில்லை. உள்ளத்தைக் குவித்து கையை மட்டும் உடலில் இருந்து மீட்டு சேக்கைமேல் அறைந்தாள். மீண்டும் மீண்டும் அறைந்தபோது லதை வந்து வணங்கி நின்றாள். “நீர்” என்றாள். அவள் புரிந்துகொண்டு குவளையில் நீர் கொண்டுவந்து தந்தாள். கையூன்றி எழுந்து அமர்ந்து நீரை அருந்தினாள்.

நீரின் குளிர்ந்த தொடுகை உடலுக்குள் பரவியிருந்த பல்லாயிரம் இலைநுனித் துடிப்புகளை அடங்கச் செய்தது. பெருமூச்சுடன் கண்களை மூடிக்கொண்டு லதையிடம் செல்லலாம் என கைகாட்டினாள். உடலுக்குள் குருதிநுரைக் குமிழிகள் விசையழிந்தன. கண்களுக்குள் சுழன்று சுழன்று இறுதிக் குமிழியும் மறைந்தபோது விழித்துக்கொண்டு அறைக்குள் சிறுசுடர் அகல் விரித்திருந்த நிழல்களை நோக்கிக்கொண்டிருந்தாள். பின்னர் மீண்டும் கண்களை மூடிக்கொண்டு அக்கனவை ஆழத்திலிருந்து இழுத்து மேலே எடுத்தாள்.

அதற்குள் அதன் பெரும்பகுதி கரைந்து உருமாறிவிட்டிருந்தது. தெளிவற்ற ஓவியமாக அத்தையின் முகம் தெரிந்தது. அவள் அந்த முகத்தை வெவ்வேறு கோணங்களில் சென்று நோக்கிக்கொண்டிருந்தாள். ஒரு கணத்தில் அக்கண்களை அருகே என கண்டாள். பிறிதெவரோ அல்ல. அத்தைதான். அக்கண்களை அவள் முன்னர் கண்டிருந்தாள். முதிரா இளமையில் ஒரு பலிச்சடங்கில். குருதியை நோக்கி நின்றிருந்த முகம் அது. ஒரு நுண்ணிய உளச்சொடுக்கலுடன் அவள் அனைத்தையும் தெளிவுற உணர்ந்தாள்.

காசியை ஆண்ட அரசர் பீமதேவரின் மகள் அம்பையையும் இளையவர்கள் அம்பிகையையும் அம்பாலிகையையும் அஸ்தினபுரியின் மூத்தவராகிய பீஷ்மர் கவர்ந்து சென்றதும் அவ்விளவரசியர் மூவருமே அந்நகரில் துயருற்று இறந்ததும் சூதர் கதைகளாக எப்போதும் உலவின. இல்லங்கள்தோறும் பெண்கள் அம்பையின் கதையைப் பாடி விழிநீர் சிந்தினர். காசித் துறைமேடையின் அருகே கங்கையின் வாய் எனப்பட்ட ஊர்த்வபிந்து எனப்படும் பெருஞ்சுழிக்கு அருகே அம்பையன்னைக்கு சிறு ஆலயம் ஒன்று அமைந்திருந்தது. பொன்னிறமான சுவர்ணை, செந்நிறமான சோபை, பச்சைநிறமான விருஷ்டி என்னும் மூன்று தேவியர் சூழ அங்கு அன்னை அமர்ந்திருந்தாள்.

இளவேனில், வேனில், மழைக்காலம் என மூன்று காலங்களிலாக மூன்று பூசனைகள் அங்கே நிகழ்ந்தன. இளவேனிலுக்குரிய அன்னையாகிய சுவர்ணைக்கு கொன்றைமலர்களும் கோடையின் பெருந்தேவியாகிய சோபைக்கு செங்காந்தளும் விருஷ்டியன்னைக்கு மழைக்குப்பின் எழும் புது அருகம்புல் மாலையும் சூட்டப்பட்டு வணங்கப்பட்டனர். குளிர்காலத்தின் இறுதியில் கருநிலவுநாளில் அம்பையன்னைக்கு நீலமலர்களால் பூசெய்கை இயற்றி குருதிபலி அளிப்பார்கள். துறைமேடைக்கு படகிலேறச் செல்லும் ஒவ்வொருமுறையும் அம்பையன்னையை நோக்குவது அவள் விழிப்பழக்கம். கருங்கல்லில் வடித்த அச்சிலை வலக்கையில் தாமரையும் இடக்கையில் அனலும் கொண்டிருந்தது.

அவள் தன் அத்தையின் சுட்டுவிரல் பற்றி அவ்வாலயத்திற்கு முதல்முறையாக சென்றபோது அத்தையை அனுபநாட்டு அரசர் மணந்திருக்கவில்லை. ஷத்ரிய நாடுகளிலிருந்து அவளுக்கான மணத்தூதுகள் அன்று வந்துகொண்டிருந்தன. ஆலயத்தில் நின்றிருந்த அம்பை அன்னையின் முன் கைகூப்பி விழிமூடி நின்ற அத்தையை ஒருமுறை அண்ணாந்து பார்த்தபின் அவள் கருவறைக்குள் இருந்த சிறிய சிலையை அருகிலென கண்டாள். இரண்டுமுழ உயரமுள்ள கற்சிலையின் முகத்தில் இரு வெள்ளிக் கண்கள் பொருத்தப்பட்டிருந்தன. முதலில் கருவறை இருளுக்குள் இருண்ட நீரில் இரு வெள்ளிப்பரல்மீன்கள்போல் அவை மட்டும் தோன்றின. பின்னர் நிழலுருவாக முகம் அவற்றுக்குப் பின்னால் எழுந்து வந்தது. பரல்கள் விழிகளென்றானபோது நோக்கு கூர்கொண்டது. சில கணங்களுக்குள் மிக அருகிலென எழுந்து வந்து உறுத்தியது.

அவள் அஞ்சி அத்தையின் ஆடையை பற்றிக்கொண்டாள். அவள் முழங்காலில் முகம் புதைத்து அந்நோக்கை தவிர்த்தாள். மீண்டும் விழிதிருப்பியபோது கன்னங்கரிய கல்லுடலுடன், மீன்செதிலென ஒளிரும் விழிகளுடன் அவளுக்கு மிக அருகே அம்பையன்னை நின்றிருந்தாள். அலறியபடி அத்தையின் கால்களை பற்றிக்கொண்டு அவள் உடல் நடுங்கினாள். குனிந்து அவளை இடையில் தூக்கி வைத்து “என்னடி?” என்றாள் அத்தை. “அங்கே…” என்று அவள் கைசுட்டினாள். “அது அன்னை. நம் குடியின் மூதன்னை அவள்” என்றாள் அத்தை.

“வேண்டாம்! வேண்டாம்! போய்விடுவோம்!” என்று அவள் கைகால்களை உதறி அத்தையின் உடலில் படிந்து துடித்தாள். “இருடி, பூசனை முடிந்தபின் செல்வோம்” என்றாள் அத்தை. “வேண்டாம்! வேண்டாம்!” என்று அவள் பதறி கீழிறங்க முயன்றாள். அத்தை திரும்பி செவிலியிடம் “அஞ்சிவிட்டாள், ஏனென்று தெரியவில்லை. தேருக்கு கொண்டு செல்க!” என்று அவளை அளித்தாள். செவிலி அவளைத் தூக்கி மூடுதிரையிட்ட தேரில் கொண்டுவந்து அமர்த்தி அருகமர்ந்து அவள் தலையைப்பற்றி தன் உடலுடன் சேர்த்துக்கொண்டு ”அஞ்சவேண்டாம், இளவரசி… நான் அருகிருக்கிறேன்” என்றாள். அவள் செவிலியின் மடியில் ஒண்டிக்கொண்டாள்.

அவள் குழல் வருடி “என்ன ஆயிற்று?” என்றாள் செவிலி. “அங்கே… அங்கே கண்கள்” என்றாள் அவள். “அது தங்கள் மூதன்னை. உலகு புரக்கும் அன்னைநிரையில் ஒருத்தி” என்றாள் செவிலி. “அஞ்சவேண்டாம், இளவரசி. அவளிடம் வேண்டிக்கொள்க!” என்று அவள் குழலைத் தடவி ஆற்றுப்படுத்தினாள். அவள் விசும்பியபடி மெல்ல துயின்றாள். ஆலயமுகப்பில் உடுக்கும் முழவும் ஒலிக்கத்தொடங்கின. கொம்புகள் பிளிறின. அவள் தன் கனவுக்குள் எழுந்த பெருவேழம் ஒன்றை கண்டாள். வெண்தந்தங்கள் இரு பிறைகள் என எழுந்த கருங்குவை.

அவள் குறட்டையோசையை கேட்டபின் ஓசையின்றி செவிலி கீழிறங்கிச் சென்றாள். அவள் வேழத்தின் இருளுடல் அருகே திரைச்சீலையென அசைவதை கண்டாள். அப்பரப்பில் ஒரு கருவண்டின் ஒளி. அது நீர்த்துளி. அல்ல, விழி என உணர்ந்ததும் அலறியபடி விழித்துக்கொண்டாள். யானைகள் பிளிறுவது போலவும் ஓநாய்கள் குரைப்பது போலவும் நடுவே புலி உறுமுவது போலவும் தாளக்கருவிகளின் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. கொலை விலங்குகள் செறிந்த பெருங்காடெனத் தோன்றியது அந்த இருள்சூழ்கை. தேரின் திரைகளுக்குள் அமர்ந்திருப்பது காப்பென்று தோன்றியது. முழங்காலில் முகம் புதைத்து கண்களை மூடி அமர்ந்தாள்.

ஆனால் சற்று நேரத்திலேயே சலிப்புற்றாள். எழுந்து திரைவிலக்கி வெளியே பார்த்தபோது மூன்று ஆடுகளை சூதர்கள் இழுத்துச் செல்வதை கண்டாள். முன்னால் காட்டப்பட்ட பச்சை இலைகளை நோக்கி வாய் நீட்டியபடி அவை அவற்றின் பின்னால் சென்றன. இடையில் செம்பட்டுக் கச்சை இறுக்கி, செவ்வரளி மாலை அணிந்து, குடுமியில் காந்தள் அணிந்த சூதர்கள். அறியாமல் படிகளினூடாக இறங்கி அவள் அவற்றை தொடர்ந்தாள்.

அவர்கள் அம்பையன்னையின் ஆலயத்தின் முன் அந்த ஆடுகளை கொண்டுசென்றனர். அவள் கால் தயங்கி அங்கிருந்த மரத்தினருகே நின்றாள். அனைத்து விழிகளும் ஆடுகளை நோக்கிக்கொண்டிருந்தமையால் எவரும் அவளை நோக்கவில்லை. அவள் தன்னை நன்றாக அந்த மரத்தின் வேர்ப்புடைப்புக்குள் ஒடுக்கிக்கொண்டாள். முகத்தை மட்டும் நீக்கி அங்கு நிகழ்வனவற்றை நோக்கிக்கொண்டிருந்தாள்.

ஆடுகளை இழுத்துச் சென்றவர்கள் ஆலயத்தின் முன் அவற்றை ஒன்றன்பின் ஒன்றென நிறுத்தினார்கள். உடுக்கோசையும் கொம்போசையும் முழவோசையும் நிறைந்த பேரொலி ஆடுகளை நீர்த்துளியென ததும்பி நடுங்கவைப்பதாகத் தோன்றியது. தழை முன்னால் நீட்டப்பட்டபோது அவற்றில் ஒன்று முன்னால் சென்று பலிபீடத்திற்குக் குறுக்காக கழுத்தை நீட்டியது. மேலிருந்து விழுந்ததுபோல் எடை மிக்க வாளொன்று சரிந்து அதன் தலையை துண்டித்து அப்பால் இட்டது. திறந்த குடத்திலிருந்தென குருதி பீறிட்டுக் கசிய நான்கு கால்களும் உதைத்து விசைகொள்ள ஆடு தலையின்றி துள்ளி எழுந்து அப்பால் சென்று அம்பை அன்னையின் ஆலய முகப்பில் விழுந்து புரண்டு குளம்புகளை காற்றில் உதைத்தது.

அவள் அதன் பின்னரே குருதி தெறித்த உடலுடன் கையில் பள்ளிவாளேந்தி நின்ற பூசகரை பார்த்தாள். அம்பையின் அதே வெள்ளிவிழிகளை அவரது கரிய முகத்திலும் கண்டாள். நரைத்த குழல்திரிகள் தோளில் விழுந்து கிடந்தன. ஆட்டின் வால் என பருத்த நரைமீசைக்குக் கீழே தடித்த உதடுகளுக்குமேல் நான்கு பற்கள் நீண்டு பதிந்திருந்தன. பள்ளிவாளை மூன்று முறை சுழற்றி “அம்பையே, வெல்க! அன்னையே, பேரரசியே, வெல்க! விண்ணரசியே, வெல்க! பெருவஞ்சத்தோளே, வெல்க! அணையா எரியே, வெல்க!” என்று அவர் கூவ கூடி நின்றவர்கள் ஏற்று முழக்கமிட்டனர்.

கனவிலென இரண்டாவது ஆடு சென்று பீடத்திற்குக் குறுக்கே கழுத்தை நீட்டியது. வாள் அதை வெட்டி அமைந்தபோது தயங்கி பின்னால் விழுந்து மேலும் ஒரு காலெடுத்து வைத்து பின்னால் வந்து தப்பி ஓட முயல்வதுபோல கைகூப்பி நின்றிருந்த கூட்டத்திற்கு இடையே புகுந்து பக்கவாட்டில் சரிந்து விழுந்து உதைத்துக்கொண்டது. அவள் திரும்பி ஓடி தேரை அடைந்தாள். அவள் விழிகளுக்குள் ஆட்டின் துள்ளல் அப்போதும் எஞ்சியிருந்தது. “இளவரசி, இளவரசி” என்று அழைத்தபடி இரு சேடியர் அவளுக்குப் பின்னால் வந்தனர். வீறிட்டு அலறியபடி உதறிக்கொண்ட கால்களுடன் தேருக்குள் நுழைந்து பீடத்தில் விழுந்தாள். முழங்கால்களில் முகம் புதைத்து உடலை இறுக்கிக்கொண்டாள். பிறிதொரு ஓசை எழுந்தபோது அடுத்த ஆடு வெட்டப்பட்டதை அவள் உளக்கண்ணில் கண்டாள்.

திரும்பி வருகையில் தேர்த்தட்டில் உதடுகள் உலர்ந்து விழிகள் வெறித்திருக்க, கைகள் இறுகி நகங்கள் உள்ளங்கையில் பதிய, கால்விரல்கள் நீண்டு நாண்கொண்ட வில்லென நின்றிருக்க படுத்திருந்தபோதே உடல் வெம்மைகொள்ளத் தொடங்கியிருந்தது. “குருதி! குருதி!” என்று அவள் புலம்பிக்கொண்டிருந்தாள். அவள் தலையை மடியில் எடுத்து வைத்து நெற்றிக்குழலை வருடியபடி அத்தை ஒரு சொல்லும் எழாது அமர்ந்திருந்தாள். அரண்மனையை அடைந்து அவளை சேடியர் உள்ளே தூக்கிச்சென்றபோது அன்னை ஓடிவந்து “என்ன ஆயிற்று? என்ன ஆயிற்று?” என்றாள். “சற்று அஞ்சிவிட்டாள்” என்றாள் அத்தை.

அன்னை முன்னரே எச்சரித்திருந்தாள். “முதிராச் சிறுமி. அவளை எதற்கு இக்கொடுவிழவுக்கு அழைத்துச் சென்றாய்? மூத்தோர் சொல்லுக்கு இங்கு எந்த மதிப்பும் இல்லையா?” என்றாள் உரத்த குரலில். “அரசியாகப் போகிறவள். அவள் குருதி கண்டு வளரட்டும். குருதிமேல் நடக்கும் கால்கள் கொண்டவர்கள்தான் மணிமுடி சூடும் தகுதி அடைகிறார்கள்” என்று அத்தை சொன்னாள். அன்னை சொல்லடங்கி வெறுமனே நின்றிருக்க “இந்த அழலில் அவள் வென்று மீண்டுவந்தால் அவள் சொல்லில் வாழும் அரசி. இல்லையேல் அவளும் தன் அன்னையை போலத்தான். பிறகு எனக்கும் அவளுக்கும் சொல்லில்லை” என்றபின் அத்தை தன் தனியறைக்கு சென்றாள்.

ஏழு நாட்கள் அவள் காய்ச்சலில் நடுங்கிக்கொண்டிருந்தபோது ஒருமுறையேனும் அத்தை வந்து பார்க்கவில்லை. ஏழாவது நாள் வாய்க் கசப்புடன், உடல் ஓய்ச்சலுடன், மெலிந்து ஒடுங்கிய விலாவுடன் அவள் மஞ்சத்தில் படுத்திருந்தபோது அத்தை அவள் அருகே வந்தமர்ந்தாள். புன்னகையுடன் அவள் கைகளை பற்றிக்கொண்டு “எப்படி இருக்கிறாய்?” என்றாள். ஒளியற்ற புன்னகை காட்டி அவள் உதடுகளை நாவால் ஈரப்படுத்திக்கொண்டாள். “கனவுகள் கண்டாயா?” என்று அத்தை கேட்டாள். “ஆம்” என்றாள். “என்ன கனவு?” என்றாள். “குருதி” என்று அவள் சொன்னாள். “யாருடைய குருதி?” என்று கேட்டாள். “மனிதர்கள்… அறியா முகங்கள்…”

அவள் முகத்தை கூர்ந்து நோக்கியபின் “நீ என்ன செய்தாய்?” என்றாள் அத்தை. “நான் அதில் கால் அளைந்து நடந்தேன்… இளவெம்மை கொண்டிருந்தது. மென்சேற்றுக் கதுப்பென மிதிபட்டது. அதில் குமிழிகள் என விழிகள். மீன்களென வெட்டுண்ட காதுகளும் விரல்களும்…” என்றாள். அத்தை புன்னகையுடன் அவள் கையைப் பற்றி ஒரு மயிற்பீலியை வைத்தாள். அவள் கைவிரித்துநோக்கி “இது என்ன?” என்றாள். “மென்பீலி… இதை வைத்துக்கொள்.” அவள் அதை திருப்பி அது எருமைவிழி என நிறம் மாறுவதை நோக்கினாள். “அடுக்கு குலையாத ஒரு மயிற்பீலி நம் கையில் இருந்தாகவேண்டும்” என்றாள் அத்தை. “அம்பைஅன்னையும் ஒரு பீலியை வைத்திருந்தாள் என்கின்றன நூல்கள்.”

முந்தைய கட்டுரைபத்மாவதியும் வரலாறும்
அடுத்த கட்டுரைவிஷால்ராஜா கதைகள் பற்றி அனோஜன்