நாகர்கோயிலில் புத்தகக் கண்காட்சி

TamilNews_6784631609917

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,

 

 

தமிழ் நாடெங்கும் புத்தக திருவிழாக்கள் விமர்சையாக நடந்து கொண்டிருக்கின்றன.  நம் கன்னியாகுமாரி மாவட்டத்தில், 2014 ம் ஆண்டிற்கு பிறகு இதுவரை புத்தக திருவிழாவை அரசு நடத்தவில்லை.  சென்னை புத்தக திருவிழாவை பத்திரிகைகளில் படிக்கும் போது பொறாமையாக இருக்கிறது.  இது போல் அறிவுசார் விழாக்களை இரண்டு வருடத்திற்கு ஒருமுறையாவது நடத்தலாமே.  இது நமது மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமா ?  பக்கத்துக்கு மாவட்டக்களில் எல்லாம் (திருநெல்வேலி , தூத்துக்குடி ) சிறப்பாக நடத்துகிறார்கள். இதை நடத்த அருமையான எஸ்.எல்.பி . பள்ளி மைதானம் உள்ளது.

 

 

இதை தங்களது வலைத்தளத்தில் வெளியாவதன் மூலமாவது, ஏதாவது நல்லது நடக்கட்டும்.

 

 

அன்புடன்

 

பா. சரவணகுமார்

கோட்டார் , நாகர்கோவில்

 

 

அன்புள்ள சரவணக்குமார்,

சென்ற ஆண்டும்கூட நாகர்கோயிலில் புத்தகக் கண்காட்சி நடந்தது. கோட்டாறு பயனியர் திருமணமண்டபத்தில். அதில் பவா செல்லத்துரை மனோஜ் குறூரின் நீலம் மலர்ந்த நாட்களைப்பற்றிப் பேசினார். நானும் அருண்மொழியும் அஜிதனும் சென்றிருந்தோம். நினைவில் நிற்பதற்குக் காரணம் பவா செல்லத்துரை பேசமுயன்றார் என்பதுதான் நடந்தது என்பதனால்தான். வரவேற்புரை ஆற்றிய இளைஞரான ராம் தங்கம் உணர்வுமிகுதியால் அதை ஒன்றரை மணிநேரம் நீட்டித்து முதன்மைப்பேச்சாளருக்கு பேச மூன்றுநிமிடங்களே எஞ்சியிருந்தன. பவாவுக்கு மூன்று நிமிடம் என்பது ஆனையை ஆட்டோவில் ஏற்றுவதுபோல.

 

பொதுவாக நாகர்கோயில், நெல்லை பகுதிகளில் புத்தகவிழாக்கள் சோபிப்பதில்லை. சென்ற புத்தகக் கண்காட்சியில்கூட அரங்குகள் மிகக்குறைவு. விற்பனை அதைவிடக்குறைவு. சம்பந்தப்பட்டவர்களால் பலகாரணங்கள் சொல்லப்படுகின்றன. மதுரை புத்தகவிழா வெல்வதற்குக் காரணம் தேனி, கம்பம், சின்னமனூர், நத்தம் என பல துணைநகர்களிலிருந்தும் வாசகர்கள் வருவதனால். அத்துடன் எழுத்தாளர்களுக்குத்தெரியும், வாசகர் கடிதங்கள் அதிகம் வரும் பகுதிகளில் ஒன்று தேனி மாவட்டம். நாகர்கோயிலுக்கு அந்த பின்புலம் இல்லை.

 

இன்னொன்று நெல்லை குமரியில் பெருவாரியாக வாழும் கிறித்தவர்கள் பெரும்பாலானவர்கள் சி.எஸ்.ஐ, பெந்தெகொஸ்தே சபையைச்சேர்ந்தவர்கள். பைபிள் அன்றி வேறுநூல்களை வாசிப்பதற்கு அவர்களுக்கு மதம்சார்ந்த மனத்தடை உள்ளது. புத்தகக் கண்காட்சிகளில் அவர்களை பார்ப்பது மிக அரிது, வேறெந்த கண்காட்சிகளிலும் அவர்களே நிறைந்திருப்பார்கள். இஸ்லாமியர் பொதுவாக இப்பகுதிக்கே வருவதில்லை. எஞ்சியவர்கள் சிலரே.

 

மூன்றாவதாக இந்நகர்களில் கல்விவெறி மிகுதி. இன்றைய கல்வியில் தீவிரமாக ஈடுபடுவது வேறு வகை வாசிப்புகள் அனைத்தையும் முற்றாக நிறுத்திவிடுகிறது. இவை எந்த அளவுக்கு உண்மை எனத்தெரியவில்லை.

 

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–42
அடுத்த கட்டுரைபத்ம விருதுகள் -கடிதங்கள்