பகுதி ஆறு : பொற்பன்றி – 7
துச்சளை அணிகொண்டு இடைநாழிக்கு வந்தபோது தாரையும் அசலையும் அவளுக்காகக் காத்து நின்றிருந்தனர். தாரை அவளை அணுகி வணங்கி “சற்று முன்னர்தான் தாங்கள் கிளம்பிச்செல்லும் செய்தியை அறிந்தேன், அரசி. பட்டத்தரசிக்கு அறிவித்துவிட்டு ஓடிவந்தேன்” என்றாள். துச்சளை “நான் விதுரருக்கும் அன்னைக்கும் அறிவித்துவிட்டேன். பிறருக்கு முறைப்படி தெரிவிக்கப்படட்டும்” என்றாள். தாரை “சைந்தவர் இங்கிருக்கிறார். உடனிருப்பீர்கள் என்று எண்ணினேன்” என்றாள். “ஆம், அதன்பொருட்டே வந்தேன். இனி என்னால் இங்கிருக்க இயலாது. இருந்து ஆவதும் ஒன்றுமில்லை” என்றாள்.
அசலை ஒன்றும் சொல்லாமல் நின்றிருந்தாள். துச்சளை அவள் கைகளைத் தொட்டு புன்னகை செய்தாள். தாரை விசும்பும் ஒலி கேட்டு துச்சளை திரும்பி நோக்கினாள். அவள் கண்ணீர் வழிய முகம் குனித்திருப்பதைக் கண்டும் ஒன்றும் சொல்லவில்லை. அவளுடைய அணுக்கச்சேடி சாரிகை அருகே வந்து “தேர்கள் ஒருங்கிவிட்டன, அரசி. அகம்படியர் நிரைகொண்டுவிட்டனர்” என்றாள். துச்சளை “நான் கிளம்புவதற்கான ஆணையை விதுரர் அளித்துள்ளாரா?” என்றாள். சாரிகை தயங்கி “அதை நான் அறியேன்… சூர்யை அறிந்திருக்கக் கூடும்” என்றாள். “எவ்வண்ணமாயினும் நாம் கிளம்புவோம். அரச ஒப்புதல் இல்லையேல் கோட்டைவாயிலை அடைவதற்குள் நமக்கு சொல்லப்படவேண்டும்” என்றபின் மீண்டும் அசலையின் தோளைத் தொட்டபின் நடந்தாள்.
தாரையும் அசலையும் அவளுக்குப் பின்னால் ஒன்றும் சொல்லாமல் நடந்தனர். ஈரம் நிறைந்த காற்று வந்து சாளரக்கதவுகளை அறைந்து சுழன்றது. குளிரில் உடல் மெய்ப்புகொள்ள தாரை தோள்களை ஒடுக்கி கைகளை மார்பின்மேல் கட்டிக்கொண்டாள். படிகளில் மெல்ல காலெடுத்து வைத்து இறங்கி முகப்புக்கூடத்திற்கு வந்த துச்சளை நின்று இளைப்பாறி மேலே நோக்கினாள். அங்கே விழியறியா எவரோ நிற்பதைப்போல முகம் சுருங்கி உயிர்த்தபின் செல்லலாம் என சாரிகையிடம் கைகாட்டிவிட்டு முற்றம் நோக்கி சென்றாள். அங்கே காவல்நின்ற வீரர்கள் தலைவணங்கினர்.
முற்றத்தில் இளஞ்சாரல் திரைபோல காற்றிலாடியபடி நின்றிருந்தது. நனைந்து ஒளிகொண்டிருந்த மென்மயிர் உடல்களுடன் கரிய புரவிகள் தேர்நுகத்தில் நின்றிருந்தன. வெள்விழி கொண்டிருந்த வலக்குதிரை அவள் அணுகுவதை கண்ணுருட்டி நோக்கி பெருமூச்சுவிட்டு முன்கால் வைத்து தேரை மெல்ல அசைத்தது. தேர்த்தட்டிலிருந்த பாகன் அதன் முதுகில் கோலை வைத்து வருடி ஆறுதல்படுத்தினான். இடக்குதிரை பிடரியும் புட்டமும் சிலிர்க்க வால்சுழற்றியது. மழைத்திரைக்கு அப்பால் தோல்கவசமும் வேல்முனைகளும் நனைந்து மின்ன புரவிகளில் அமர்ந்தபடி அகம்படிப்படைவீரர் மூன்று நிரைகளாக அணிகொண்டிருந்தனர். அவர்களின் தலைவன் சிந்துநாட்டின் கரடிக்கொடியுடன் நின்றிருந்தான். அவனுக்குப் பின்னால் இரு அறிவிப்பாளர்கள் கொம்பும் எரியம்பு செலுத்தும் வில்லுமாக நின்றனர்.
பின்காலை ஆகியும் வெயிலெழவில்லை. நீர்த்தாரைகளினூடாக வானிலிருந்து வழிந்திறங்கிய ஊமைவெளிச்சம் நகர்மேல் படிந்திருந்தது. நனைந்த அரண்மனைக்கோட்டை கருமைகொண்டிருந்தது. காவல்மாடங்களின் குவைமுகடுகளும் கரிபடிந்திருந்தன. தேரின் பித்தளைமுகடு மட்டும் வானின் ஒளியில் மின்னியது. சூர்யை அருகணைந்து “அனைத்துப் பொருட்களையும் எடுத்து வைத்துவிட்டேன், அரசி” என்றாள். துச்சளை தலையசைத்தாள். தலைமைக்காவலன் அவளுடைய ஆணைக்காக காத்திருந்தான். அவள் மீண்டும் அசலையையும் தாரையையும் நோக்கி “சென்றுவருகிறேனடி… ஊழை தெய்வங்களே ஆள்கின்றன என்று மட்டும் நம்புக! நாம் செய்வதற்கு பிறிதொன்றுமில்லை” என்றாள்.
அசலைக்குப் பின்னால் பாதியுடல் மறைய நின்றிருந்த தாரை தலைகுனிந்து அழுதுகொண்டிருந்தாள். அவள் தலைமேல் கைவைத்து மெல்ல அழுத்தி புன்னகைத்த பின் துச்சளை தேர் கிளம்பலாம் என தலைமைவீரனுக்கு கைகாட்டினாள். அவன் கைதூக்க கொம்பூதி மும்முறை பிளிறலோசை எழுப்பினான். அகம்படிக் குதிரைகளில் சில காலெடுத்துவைத்து அசைவெழுப்பின. அவன் உரத்த குரலில் “அஸ்தினபுரியின் இளவரசி, காந்தாரக்குடித்தோன்றல், சைந்தவி, துச்சளை எழுந்தருள்கை!” என அறிவித்தான். துச்சளை மேலும் சில கணங்கள் தயங்கினாள். அவள் விழியோட்டுவதைக் கண்ட அசலை “என்ன தேடுகிறீர்கள், அரசி?” என்றாள். இல்லை என அவள் தலையாட்டினாள். பானுமதியின் அணுக்கச்சேடி சத்யை அப்பால் விரைந்து அணுகுவதைக் கண்டதும்தான் துச்சளை அவளுக்காகவே காத்திருக்கிறாள் என்று உணர்ந்தாள். சத்யை அருகணைந்து தலைவணங்கி மூச்சிரைக்க “அரசியின் செய்தியுடன் வந்தேன், அரசி” என்றாள். “சொல்க!” என்றாள் துச்சளை.
“விரைவில் அஸ்தினபுரியின் இளவரசர்களுக்கான மணநிகழ்வு இங்கு ஒருங்கும். அனைத்தும் இன்னும் இரு நாட்களில் முடிவுசெய்யப்படும். அப்போது மைந்தரின் அத்தை உடனிருக்கவேண்டும் என்பது முறைமை என்றார்கள், அரசி” என்றாள் சத்யை. மேலும் சொல்லப்படுவதற்காக விழியிமைக்காமல் துச்சளை காத்திருந்தாள். “ஆனால் அவை வாள்மாலை சடங்காக நிகழுமென்றால் அத்தையின் வாழ்த்து வாளினூடாகவே அளிக்கப்படலாம் என்றார்” என்றாள் சத்யை. துச்சளை பெருமூச்சுவிட்டு “நன்று, நான் அரசியை வணங்கி விடைகொண்டேன் என்று அவர்களிடம் சொல்க! என் கைகள் இங்கு தேவையாக இருக்கும்போது வருவேன் என்று கூறுக!” என்றபின் அசலையையும் தாரையையும் நோக்காமல் தேர்நோக்கி சென்றாள்.
சூதன் படிப்பலகையை வைக்க சாரிகையையும் சூர்யையையும் இரு கைகளாலும் பற்றிக்கொண்டு மெல்ல ஏறி அவர்களின் தோள்களிலிருந்து கைதூக்கி தேரின் தூணை பற்றிக்கொண்டு உடலை உந்தி மேலெழுந்து உள்ளே சென்று பீடத்தில் அமர்ந்தாள். அதற்குள் அவள் உடல் சற்று நனைந்துவிட்டிருந்தது. அந்தச் சிறுமுயற்சியிலேயே அவளுக்கு மூச்சிரைத்தது. சூர்யையும் சாரிகையும் உடன் ஏறிக்கொள்ள பாகன் தேர்ப்புரவிகளைத் தட்டி சகடம் கிளம்பச்செய்தான். கொடிவீரனும் அறிவிப்பாளர்களும் முதலில் செல்ல பன்னிரு புரவிவீரர் தொடர்ந்து சென்றனர். அதன்பின் அவளுடைய தேர் சென்றது. தொடர்ந்து பிற அகம்படிப்புரவியர் சென்றனர்.
காவலரணைக் கடந்து செல்லும்போதுதான் அவள் கோட்டைமேல் படிந்திருந்த கரிய படலத்தை கண்டாள். “என்னடி அது?” என்றாள். சாரிகை “அரசி, இரண்டுநாட்களுக்குள் நகரெங்கும் இந்தக் கரும்பாசிப்பரப்பு படர்ந்துவிட்டது. இது முன்னரும் இங்கிருந்திருக்கிறது என்கிறார்கள். இதன் விதை இந்த மண்ணில் மறைந்துள்ளது, இந்த மழை அதை முளைக்கச் செய்துவிட்டது என்று விறலி சொன்னாள்” என்றாள். “இதன் பெயர் மகாகலியம் என்று ஒரு முதுசெவிலி சொன்னாள்” என்றாள் சூர்யை.
துச்சளை பதற்றத்துடன் திரைவிலக்கி நகரை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். “அத்தனை சுவர்களிலும் படர்ந்திருக்கிறது…” என்றாள். “ஆம் அரசி, அந்தி கவிழ்வதுபோல வந்தமைந்துவிட்டது என்கிறார்கள்” என்றாள் சூர்யை. சாரிகை “நகரெங்கும் எலிகள் பெருகிவிட்டிருக்கின்றன. எங்கிருந்து கிளம்பிவந்தன என்று தெரியவில்லை. மண்ணுக்கு அடியிலிருந்து கரிய நீரூற்றுக்கள்போல வந்துகொண்டே இருக்கின்றன. இல்லங்களில் சுவர்களின் ஓரமாக கட்டெறும்பு நிரைகள்போல செல்கின்றன என்கிறார்கள்” என்றாள். சூர்யை “அவற்றைப் பிடிக்க நாகங்கள் வந்து சேர்கின்றன. அரண்மனையின் கீழ்த்தளம் முழுக்க நாகங்கள் என்றனர் சேடியர். நேற்று அடுகலங்களின் அறையைத் திறந்தபோது வைக்கோல்சுருட்கள் போல நாகக்குழவிகளை கோலால் அள்ளி அள்ளி வெளியே போட்டார்கள்” என்றாள்.
துச்சளை சாலையை நோக்கிக்கொண்டே வந்தாள். அத்தனை சுவர் விளிம்புகளிலும் கரிய கோடென நனைந்த காகங்கள் செறிந்து அமர்ந்திருந்தன. மரக்கிளைகள் காகங்களால் கருமைகொண்டிருந்தன. “அதோ…” என்றாள் சாரிகை. சாலையோரத்தில் இரு நாகங்கள் வால்சொடுக்கி சிறு சுவரிடுக்கு ஒன்றுக்குள் நுழைந்தன. “ஆனால் எவரும் அஞ்சுவதுபோல் தெரியவில்லை” என்றாள் துச்சளை. “ஆம் அரசி, நகர்மக்கள் நாகங்களை கொண்டாடுகிறார்கள். இந்திரவிழா எழுந்ததுபோல் அனைவரும் களிவெறி கொண்டிருக்கிறார்கள்” என்றாள் சாரிகை.
துச்சளை சாலைகளில் சென்றவர்களை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். மழையில் நனைந்த ஆடைகள் உடலோடு ஒட்டியிருக்க தலைமயிரிலும் மீசையிலும் தாடியிலும் நீர்த்துளிகள் மின்ன அவர்கள் உள்ளிருந்து எழுந்த உவகையில் சிரித்துக்கொண்டிருந்தனர். நடைகளில் துள்ளலும் கைவீச்சுகளில் விசையும் தெரிந்தது. பெண்டிரும் சிறியோரும் களிகொண்டு உரக்க கையசைத்துப் பேசினர். ஒருவரை ஒருவர் நோக்கி கூச்சலிட்டனர். நகரின் நடுவே அவர்களின் தேர் சென்றதை எவரும் ஒரு பொருட்டென கருதவில்லை. நடைததும்ப தெருவின்மேல் எழுந்து வழிமறித்தவர்களை முன்னால் சென்ற வீரர்கள் அதட்டியும் வேலால் உந்தியும் விலக்கினார்கள். “நாகங்களைக் கண்டு விழிபழகியபின் அவை மட்டுமே தெரிகின்றன. அத்தனை இடுக்குகளிலும் நிழல்களே நாகங்களாகிவிட்டிருக்கின்றன” என்றாள் சாரிகை. “நம் சித்தம்தான் மயங்கிவிட்டதா? இவை நம் உளமயக்குகளா?” என்றாள் சூர்யை.
துச்சளை அதை ஒரு கொடுங்கனவென்றே உணர்ந்தாள். மேற்குக்காட்டிலிருந்து கிளம்பி திரும்பி வரும்போதே அவள் கால்தளர்ந்து மயங்கி விழுந்தாள். கரிய நதிப்பெருக்கு ஒன்றில் மிதந்துசெல்வதாக கனவுகண்டாள். வழுப்புடல் கொண்ட மீன்களும் நெளியும் தேரட்டைகளும் உடலை தொட்டுச்சென்றன. குமிழிகளெல்லாம் புழுக்கள் என்று உணர்ந்தாள். பெரிய குமிழிகள் எருமை விழிகள், கழுதைகளின் விழிகள், பன்றிகளின் விழிகள். செவ்வொளி கொண்டிருந்தன. அது கெட்டு நிறம் மாறிய குருதியின் பெருக்கு. இழிமணம் கொண்ட சீழ். துயிலிலேயே உடல் உலுக்க வாயுமிழ்ந்தாள். மீண்டும் மீண்டும் கழுத்திறுகிய விலங்கென ஒலியெழ குமட்டிக்கொண்டிருந்தாள்.
தன் அறையில் மஞ்சத்தில் விழிப்புகொண்டபோது மூச்சுத்திணற நதியின் அடிச்சேற்றில் காலுதைத்து குளிர்ந்த நீர்ப்பரப்பை பிளந்து எழுவதுபோல் உணர்ந்தாள். உடல் நனைந்து ஆடைகள் ஒட்டியிருந்தன. இடமுணர்ந்ததும் “விடாய்! விடாய்!” என்றாள். சாரிகை கொண்டுவந்த குளிர்நீரை நான்குமிடறு உண்டதும் குமட்டி ஓசையுடன் வாயுமிழ்ந்தாள். உடல் நடுங்க கண்களில் நீர் வழிய மீண்டும் மஞ்சத்தில் படுத்திருந்தாள். அன்று முழுக்க காயும் உடலுடன் கனவிலும் நனவிலுமாக ஊசலாடிய சித்தத்துடன் மஞ்சத்தில் கிடந்தாள். முழு விழிப்பு எழுந்ததுமே கையூன்றி எழுந்தமர்ந்து “சாரிகை! சாரிகை!” என்றாள். ஓடிவந்த சாரிகையிடம் “நாம் கிளம்புகிறோம்!” என்றாள். “அரசி!” என அவள் வியக்க “இப்போதே, உடனே” என்றாள் துச்சளை.
கோட்டைமுகப்பை தேர்கள் சென்றடைந்தபோது அங்கே மனோதரர் புரவியில் அவர்களுக்காகக் காத்து நின்றிருந்தார். நனைந்த மண்ணில் புரவிக்குளம்புகள் எழுத்தாணி பொறிக்கும் எழுத்துக்கள் என பதிய ஓசையிலாது அருகணைந்து தலைவணங்கி “தங்களுக்கு விதுரரின் செய்தி உள்ளது, அரசி” என்றாள். “சொல்க!” என அவள் உணர்ச்சியேதுமின்றி சொன்னாள். “தாங்கள் நகர்நீங்குவதை அமைச்சர் விதுரர் ஏற்கிறார். சிந்துவில் நலமுடனிருக்கும்படி வாழ்த்துகிறார். தங்களுடன் வந்து கங்கையில் படகிலேற்றி அனுப்பும்படி எனக்கு ஆணை” என்றார் மனோதரர். துச்சளை “நன்று, தங்கள் துணை எனக்கு உதவும்” என முகமன் உரைத்தாள்.
மனோதரர் தலைவணங்கி விலக பின்னிருந்து துச்சளை “மானு, என்ன நிகழ்கிறது இங்கே?” என்றாள். அவர் ஒருகணம் நின்றபின் அவள் முகத்தை ஏறிட்டு நோக்கி “இது முன்பும் இங்கு நிகழ்ந்துள்ளது அரசி, இம்முறை இது நீங்கா கொடுநோய் எனத் தோன்றுகிறது” என்றார். “நகரை நஞ்சு மூடியிருக்கிறது” என்றாள் துச்சளை. “ஆம், இங்கு என்றுமிருந்ததுதான் அது. இன்னும் சில நாட்களில் இங்கு எவரும் எஞ்சப்போவதில்லை” என்றார் மனோதரர். துச்சளை பெருமூச்சுவிட்டு நிலத்தை நோக்கிக்கொண்டிருந்தாள். ஈரமண்ணிலிருந்த வளைந்த கோடுகள் நாகம் வழிந்துசென்ற தடங்கள் என உணர்ந்ததும் அவள் உடல் மெய்ப்புகொண்டது. அதை உணர்ந்த மனோதரர் “அவை இந்நகரை எடுத்துக்கொண்டுவிட்டன, அரசி” என்றாள்.
“விதுரர் எங்கே?” என்று துச்சளை கேட்டாள். “இந்நகரின் முதிய வைதிகரான தீப்தர் நேற்றுமுன்னாள் மறைந்தார். அவருடைய இல்லத்திற்கு அரசமுறைமையாக பட்டும் வரிசையும் கொண்டுசென்றிருக்கிறார்” என்றார் மனோதரர். “கர்க்க முனிவரின் குருமரபில் வந்தவர் தீப்தர் என்று அறிந்திருப்பீர்கள், அரசி. முன்பொருமுறை இந்நகர் காகவஞ்சத்தால் சூழப்பட்டபோது இமயமலையில் இருக்கும் காகதீர்த்தத்தில் இருந்து நீர் கொண்டுவந்து அரசரை நீராட்டி இதை விடுவித்தவர் அவர். அன்றுமுதல் இந்நகரில்தான் தங்கியிருந்தார். அவருக்கு வைதிகர் அவையில் முதன்மையிடம் இருந்தது.”
துச்சளை உளநடுக்குடன் “அவர் எப்போது மறைந்தார்?” என்றாள். “அரசர் கலிச்சுனை ஆடிய அதே பொழுதில்… அவர் இல்லத்தை காகங்கள் சூழ்ந்துகொண்டு பெருங்குரலெழுப்பின. ஓசைகேட்டு அவர் மைந்தர் எழுந்துவந்து நோக்கியபோது இல்லம் கரும்புகை என காகங்களால் மூடப்பட்டிருந்தது. முனகலோசை கேட்டு அவர் சென்று நோக்கியபோது தீப்தர் உயிர்துறந்திருந்தார்.” துச்சளை பெருமூச்சுடன் செல்வோம் என கைகாட்டினாள். மனோதரர் தலைவணங்கி கைகாட்ட தேர் முனகலோசையுடன் கிளம்பியது.
தேர் செல்லத் தொடங்கியதும் துச்சளை “கர்க்கரின் கதை என்னடி?” என்றாள். சூர்யை அக்கதையை சொல்லத் தொடங்கினாள். “கலாவதி கேட்ட அச்சொல் மறைந்த ஆசுரமொழிகளில் ஒன்றில் அமைந்தது. அதை சொல்லித்திரிவன இக்கரிய பறவைகள் என்பதனால் அவை அப்பெயரையே சூடிக்கொண்டன” என்றாள். சாரிகை “தாசார்கனின் ஒவ்வொரு கசப்பும் காழ்ப்பும் வஞ்சமும் தனிமையும் வெறுமையும் காகங்களாக எழுந்து விண்ணில் நிறைந்தன என்கிறது பராசரரின் புராணமாலிகை. அவை மானுடரை ஐயத்துடன், நட்புடன் எப்போதும் நோக்கிக்கொண்டிருக்கின்றன” என்றாள்.
துச்சளை “அது எவ்வண்ணம் கலியின் கொடியென்றாகியது?” என்றாள். சாரிகை சூர்யையை நோக்கிவிட்டு “அறியோம்” என்றாள். சில கணங்களுக்குப்பின் துச்சளை “அறியமுடியாமை ஒன்றால்தான் அவ்வண்ணம் அமையமுடியும்” என்றாள். எழுந்து அமைந்த காகம் ஒன்று “ஏன்?” என வினவியது. அவள் அதை நோக்கிவிட்டு விழிவிலக்கிக்கொண்டாள்.
கலிவனத்தின் தலைமைநரியான அகாபிலன் மூன்று நாட்களாக காட்டுக்குள் குவிக்கப்பட்டிருந்த பலிவிலங்குகளின் ஊனை இளையோரான கிகிகன், லோமசன், கிருங்கன், சிருகாலிகன் ஆகியோருடன் இணைந்து தின்றுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்து அக்காட்டிலிருந்த அத்தனை நரிகளும் ஓநாய்களும் கழுதைப்புலிகளும் செந்நாய்களும் கழுகுகளும் கூடி ஊனுண்டன. அவையனைத்துக்கும் பல நாட்கள் உண்பதற்கான ஊனிருந்தமையால் பூசல்கள் குறைவாகவே நிகழ்ந்தன. அவை கூடியுண்ணும் ஒலி காட்டின் உறுமலென இரவும் பகலும் ஒலித்துக்கொண்டிருந்தது.
தொடக்கத்தில் காட்டுக்குள் இருந்து மெல்லிய காலடிகளும் ஒளிரும் விழிகளுமாக வந்த புலிகளும் புதர்களுக்குள் வாலசைவாகத் தோன்றி முழவோசையுடன் தலைதூக்கிய சிறுத்தைகளும் தங்களுக்கு உகந்த விலங்குகளைக் கவ்வி இழுத்துக்கொண்டு புதர்களுக்குள் சென்று மறைந்தன. அவை செல்வதற்காகக் காத்திருந்த கழுதைப்புலிகள் எக்காளமிட்டன. மரக்கிளைகளிலும் புதர்களின் மேலும் அமர்ந்திருந்த கழுகுகள் புதைந்திருந்த வெண்தலை நாகமென மேலெழ சிறகடித்து எழுந்து சுழன்றன. அகாபிலன் “என் குடியினரே, பிரிந்துசெல்லாதீர். ஒன்றாக இணைந்து ஒற்றை ஊன்குவையை அணுகுக! பிறரை அருகணைய விடாதீர்கள்” என்றான். அவன் இளையவனாகிய கிகிகன் “இந்த எருமை சுவையானது” என்றான். “ஆம், சில நாட்களில் சற்றே அழுகி மென்மையாகும். அப்போது மேலும் இனியது” என்றான் அகாபிலன்.
அவர்கள் உறுமியபடி கால்களை விரித்து ஊன்றி ஊனைக் கடித்து இழுத்து உண்டனர். நீண்ட குடல்களைக் கவ்வியபடி ஓடிய கிருங்கன் “இத்தனை நீளம்… இது முழுமையும் எனக்கு!” என மகிழ்ந்து வால்சுழற்றி குதித்தான். “ஊன்மலை! ஊன்மலை!” என தன்னைத்தானே சுற்றிவந்தபின் பெரிய துண்டுகளாக கவ்வி உண்ட லோமசன் தொண்டையில் ஊன் சிக்க விக்கலோசை எழுப்பி கக்கி மீண்டும் உண்டான். கிகிகன் இரு முன்னங்கால்களாலும் தொடை ஒன்றைப் பற்றியபடி நெஞ்சு மண்ணில் பதிய படுத்து கண்களை மூடியபடி மென்று விழுங்கிக்கொண்டிருந்தான்.
உண்டு நிறைந்ததும் அவர்கள் சற்றே விலகி அமர்ந்தனர். உண்டவற்றை கக்கி சிறிதாக அள்ளி மீண்டும் மென்று விழுங்கினர். அப்படியே விழிசொக்க விழுந்து கால்பரப்பி துயின்றனர். அவர்களின் கண்ணிமைகளும் காதுகளும் அசைந்துகொண்டிருந்தன. அவ்வப்போது வால் சுழன்றமைந்தது. ஏதோ அகவிளி பெற்ற லோமசன் எழுந்து அமர்ந்து முகத்தை வானோக்கித் தூக்கி உரக்க கூவினான். மேலும் இரு நரிகள் எழுந்து ஊளையிட்டன. படுத்திருந்தவை தலைதூக்காமலேயே ஊளையிட்டு மெல்ல ஓய்ந்து வாய் சப்பிக்கொண்டு மீண்டும் துயின்றன. கனவில் மேலும் பெரிய ஊன்மலைகளைக் கண்டு வாய் விளிம்பு ஊறி வழிய விழித்தெழுந்து உடலில் மொய்த்த ஈக்களை கடித்துத் துரத்தின. சற்றே வயிறு ஓய்ந்ததும் மெல்ல எழுந்து தவழ்ந்து சென்று மீண்டும் ஊன்குவையில் ஏறி உண்ணத் தொடங்கின.
சிருகாலிகன் மிக இளையோன். ஊனைவிட குருதிகலந்த சுனைநீரை நக்கி உண்பதில் அவன் ஆர்வம் கொண்டிருந்தான். அவனை நோக்கி அகாபிலன் “மூடா, அங்கே என்ன செய்கிறாய்? உன் வயிறு நிறைந்தால் ஊனை எப்படி உண்பாய்?” என்றான். சிருகாலிகன் துள்ளிக் குதித்து வாலைச் சுழற்றி “சுவையானது!” என்றான். “மூடன், அவனை இழுத்து வாருங்கள்” என்றான் அகாபிலன். இரு நரிகள் சென்று அவனை கவ்வி தூக்கி இழுத்து வந்தன. “உண்க, நீ வளர்வாய்!” என்று மூத்தவன் இளையவனை வாழ்த்தினான். “நான் குருதியை அருந்துவேன்” என்றான் சிருகாலிகன். “அறிவிலி, அது குருதி அல்ல, வெறும்நீர்” என்றான் அகாபிலன். “இதோ, இந்தக் கரிய பசையே குருதி. ஆற்றல் அளிக்கும் அமுது. இதை உண்க!” சிருகாலிகன் மூத்தவன் அளித்த குருதிக்குழம்பை நக்கி உண்டான். அவர்கள் மீண்டும் உண்ணத் தொடங்கியபோது திரும்பி சேற்றிலிறங்கி சுனைநீரை குடிக்கலானான்.
அவர்கள் உண்ண உண்ண ஊன் மிகுந்துகொண்டே இருப்பதுபோலிருந்தது. எரி என கொள்ளும்தோறும் விழைவுகொண்டது வயிறு. வானிலிருந்து மேலும் மேலும் கழுகுகள் வந்திறங்கின. புதிய செந்நாய்க்கூட்டங்கள் பசியோலத்துடன் வந்து ஊன்மேல் பாய்ந்தன. மெல்ல ஊன்குவை மறைந்தது. வெண்ணிற எலும்புகளும் மட்கிய தோல்களும் வால்மயிர்களுமாக அப்பகுதி எஞ்சியது. எலும்புகளை நாவால் நக்கியும் கடித்து உடைத்து மென்றும் கழுதைப்புலிகள் அங்கேயே கிடந்தன. அகாபிலன் “நாம் உண்பதற்கு இனி இங்கே ஏதுமில்லை. வருக!” என்றான்.
அவர்கள் அவனைத் தொடர்ந்து சென்றனர். செல்லும் வழியெங்கும் மோப்பம் பிடித்தபடியே நடந்த அகாபிலன் “அயலார்… கெடுமணம் கொண்டவர்கள்” என்றான். சர்ப்பன் என்னும் நரி “இங்கு எரியூட்டப்பட்டுள்ளது” என்றான். “நோக்குக, சாம்பலுக்குள் அனல் இருக்கலாம்” என்றான் அகாபிலன். அவன் தயங்கி முகர்ந்து “இல்லை முற்றணைந்துவிட்டது” என்றான். சிருகாலிகன் ஊளையிட்டபடி ஓடி வந்து வால்சுழற்றியபடி தன்னைத்தானே சுற்றினான். “என்ன அது?” என்றான் அகாபிலன். “அது மயிர்… அறிவிலி… துப்பு அதை…” சிருகாலிகன் அவனைத் தவிர்த்து அப்பால் ஓடி வாயில் முடியுடன் நின்றான். “அதை உண்ணமுடியாது, மூடா” என்றான் அகாபிலன்.
கிருங்கன் கலியின் ஆலய முகப்பில் சென்று நின்று “காகத்தின் இறகு. மட்கிவிட்டிருக்கிறது” என்றான். கிகிகன் அங்கே இருந்த நெய்விளக்குகளில் எஞ்சியிருந்த துளிகளை நக்கி பெருமூச்சுவிட்டான். அணைந்த பந்தங்களுக்குக் கீழே சொட்டியிருந்த மீன்நெய்யை லோமசன் முகர்ந்து நக்கிப்பார்த்தான். தன்னை எவரும் நோக்கவில்லை என உணர்ந்ததும் சிருகாலிகன் அருகணைந்து “உண்பதற்குரியதா?” என்றான். கிருங்கன் “நெய்…” என்றான். சிருகாலிகன் அதை நக்கி உண்ண “அவனைத் தடு… மண்ணை உண்ணப்போகிறான்” என்றான் அகாபிலன். லோமசன் “துப்பு” என்றான். சிருகாலிகன் துப்பிவிட்டு “இங்கே ஊன் மணம் வீசுகிறது” என்றான்.
கிருங்கன் ஓசைகேட்டு திரும்பி நோக்க இரு கழுதைப்புலிகள் சுனைக்குள் இருந்து அழுகிய எருமைத்தலை ஒன்றைக் கவ்வி இழுத்து சேற்றினூடாக மேலே கொண்டுசெல்வதை கண்டான். அகாபிலன் “அவர்களுடன் நாம் பூசலிட முடியாது. மேலும் நீருக்குள் அழுகியதை நாம் உண்பதில்லை” என்றான். சிருகாலிகன் “ஆகவேதான் அந்நீர் சுவையுடன் இருந்தது” என்றான். சிறிய பறவைகள் மரக்கிளைகளிலிருந்து இறங்கி ஊன்கிடந்த மண்ணைக் கிளறியும் கொத்தியும் உண்ணத் தொடங்கின. பெரிய பறவைகள் சிறகடித்ததும் அவை ஒரே அலையென எழுந்து காற்றில் சுழன்று மீண்டும் அமைந்தன.
சிருகாலிகன் “நான் சென்று அவற்றுடன் விளையாட விரும்புகிறேன், மூத்தவரே” என ஆர்வத்துடன் சொன்னான். “அவற்றை நம்மால் பிடிக்க முடியாது” என்றான் அகாபிலன். “ஆம், ஆனால் நாம் அவற்றுடன் விளையாடலாம்” என்றான் சிருகாலிகன். இரு கழுதைப்புலிகள் சுனைக்குள் இறங்கி மேலும் ஒரு எருமைத்தலையை கவ்வி கொண்டுசென்றன. கரையில் நின்றிருந்தவை இளித்தபடி குரலெழுப்பின. “அவற்றுக்கு ஒன்றும் ஆவதில்லை. அவற்றின் வயிற்றுக்குள் காட்டெரியை ஆளும் அனலை குடிகொள்கிறாள்” என்றான் லோமசன்.
எரிச்சலுடன் தன் உடலில் மொய்த்த ஈக்களை விரட்டியபின் “நம் இடத்துக்கு ஏன் இந்த மானுடர் வருகிறார்கள்?” என்றான் கிருங்கன். “அவர்கள் வந்தமையால் அல்லவா இந்த உணவு?” என்றான் லோமசன். அகாபிலன் “நாம் எவரையும் நம்பி இல்லை. நமக்கு இங்கு ஒருபோதும் உணவு குறைந்ததில்லை” என்றான். சிருகாலிகன் மெல்ல அருகணைந்து சிறுபறவைகளை வால்சுழற்றி துள்ளி பிடிக்கமுயல அவை எழுந்து பறந்தன. சிறிய உவகை ஓசை எழுப்பியபடி சிருகாலிகன் துள்ளித்துள்ளிச் சுழன்றான். மகிழ்ச்சியுடன் அவனை நோக்கிய அகாபிலன் “அழகன். நம் அன்னை அவனில் மகிழ்ந்திருந்தாள்” என்றான்.
நெய்யை முகர்ந்துகொண்டிருந்த லோமசன் “அன்னை இப்போது எங்கிருப்பாள்?” என்றான். “வேறெங்கோ அதே பெயரில் அதே வடிவில் இருப்பாள்” என்றான் அகாபிலன். “நாம் இறந்து மீண்டும் அவ்வண்ணமே பிறக்கிறோம். இதோ, இந்தப் பறவைகள், கழுதைப்புலிகள், செந்நாய்கள், கழுகுகள் அனைத்தும் அவ்வடிவில் அப்பெயரில் மீண்டும் நிகழ்கின்றன. உதிர்ந்த இலைகள் மீண்டு வருகின்றன. அலைகள் சென்று மடிந்தெழுகின்றன.” லோமசன் செவிகளை சொடுக்கியபடி கூர்ந்து நோக்கிவிட்டு திரும்பி கிருங்கனை நோக்கினான். “என்றுமிருப்போம் என்று உணர்ந்திருப்பதனால் நமக்கு இறப்பு அச்சமூட்டுவதில்லை. தெய்வங்களை நாம் வழிபடுவதுமில்லை” என்றான் அகாபிலன்.
கிகிகன் “உள்ளே எவரோ இருக்கிறார்கள்” என்றான். லோமசன் “எவர்?” என திரும்பினான். அவன் மூச்சிழுத்து பிடரி சிலிர்த்து நிற்பதைக் கண்டு “இந்த இடம் நம்முடையது அல்லவா?” என்று சொன்ன கிருங்கனும் மெய்ப்பு கொண்டு தலைதாழ்த்தினான். அப்பால் இளையவனை நோக்கி மகிழ்ந்திருந்த அகாபிலன் “என்ன செய்கிறீர்கள்?” என்றபடி திரும்பி நோக்கினான். உடன்பிறந்தார் மூவரும் நோக்கி நின்றிருப்பதைக் கண்டு “யார்?” என்றான். எதிரிகளின் மணம் எழவில்லையே என எண்ணியபோதே அவனும் கண்டுவிட்டிருந்தான். மூச்சிழுத்துவிட்டு மெல்ல காலடி வைத்து அவன் கருவறையை அணுகினான். கலிதேவன் என அமைந்த கல்லுருளையின் விழிகள் உயிரொளியுடன் திறந்திருப்பதை அவன் கண்டான்.