வானம்

26731626_10215314658843009_3408227954025808120_n

நினைவுநாள் என ஒரு குறிப்பு எழுதினால் அது சம்பிரதாயமாக ஆகிவிடும். எனவே அப்படி எழுதும் வழக்கம் எனக்கில்லை. ஆனால் இறப்புகள் அலைக்கழிக்கின்றன. சென்னைக்கு பத்தொன்பதாம் தேதி ரயில் ஏறும்போது வானவன் மாதேவி நினைவு வந்தது. முழு முயற்சி கொண்டு அந்நினைவைத் தள்ளி வைத்தேன். இரவில் மீண்டும் அவர் நினைவு. இறந்தவர்கள் விண்மீன்களாக ஆகிறார்கள் என்பது ஒரு சிறுவயது நம்பிக்கை. அத்தகைய நம்பிக்கைகளை இப்போதும் இறுக்கி வைத்துக்கொள்ள முடியும் என்றால் எத்தனை நன்று.

ஊழ் என எதையோ நம் முன்னோர் உணர்ந்திருக்கிறார்கள். அது முன்னைவினை பின்னைநிகழும் துலாவாக அல்லாமலிருக்கலாம். சுழற்சியாக அல்லாமலிருக்கலாம். ஆனால் முன்வகுக்கப்பட்ட களத்தில் நாம் ஆடுகிறோம் என்னும் நம்பிக்கை நடுஅகவைக்குமேல் மெல்ல உறுதிகொள்ளத் தொடங்குகிறது. வானவன் மாதேவியின் உடலுக்குள் ஊழ் அவர் வாழ்க்கையைப் பொறித்து வைத்திருந்தது. அதனுடன் அவர் போராடினார், தன் துயரை பிறருக்கான மகிழ்ச்சியாக ஆக்கிக்கொண்டார், பெருங்கனவுகளால் சிறிய வாழ்நாளை நிறைத்துக்கொண்டார். ஆயினும் அதுவும்கூட அவருடைய ஊழேதான் போலும்

பெரியவாழ்க்கைகள் நினைவில் நிறுத்தப்படவேண்டும். அன்றாடமென வந்துசூழும் சிறுமைகளுடன் போரிட அவையே படைக்கலமென்றாகின்றன

முந்தைய கட்டுரைகாலம் செல்வம் வேளாங்கண்ணியில்…
அடுத்த கட்டுரைஇளையராஜா, ரோமுலஸ் விட்டேகர் – பத்ம விருதுகள்