பாண்டி,கடலூர் -கடிதங்கள்

19.01.2018 மாலை பாண்டி சென்று ஷிவாத்மாவை சந்தித்தபோதுதான் ஹரி கிருஷ்ணனை முதல் முதலில் பார்த்தேன்.பாண்டி வெண்முரசு நிகழ்வுகளை முன்னத்தி ஏர்,உடன் மணிமாறன்,பேராசிரியர் நாகராஜன் போன்றவர்களின் பக்கபலத்தோடு ஒரு வருடமாக இந்நிகழ்வை நடத்தி வருவதையும் அதற்கு சென்னை நண்பர்களின் கருத்துதவிகளையும் பற்றி விளாவரியாக கூறினார்கள்.கடலூர் சீனு மற்றும் ஷிவாத்மா போன்றோரின் கூட்டு வலு சேர்த்ததைபற்றியும் சொன்னார்கள். இரவு இனிமையான பேச்சுகளால் நிறைந்தது.

 
மறுநாள் காலை ஷிவாத்மா வீட்டில் ராகியின் பில்டர் காபியை  ரசித்து குடித்துவிட்டு ஆஸ்த்ரேலியா கார்த்தியுடன் அரவிந்தர் சமாதியையும்,மணக்குள விநாயகரையும் தரிசித்து விட்டு பாரதி நினைவு இல்லத்துக்கு வந்தோம்.வீட்டை பழைமை மாறாமல் புணருத்தாரணம் செய்து வைத்திருந்தது சிறப்பு.

 
முன் திண்ணை பகுதியை கடந்ததும் ஒரு ஒரு சிறிய ஆளோடியை தாண்டி சூரிய வெளிச்சம் படும் முற்றம் அல்லது ரேழி,மேலே கம்பி போடப்பட்டு தாழ்வாரத்தைவிட ஒரு அறையடி இறக்கி போடப்பட்ட தரைப்பகுதியில் கை கால் கழுவிக்கொள்ளலாம்.  இங்குதான் முண்டாசுக்காரன் , செல்லம்மா  கடன் வாங்கி வந்திருந்த அரிசியை ,காக்கை குருவிகளுக்கு உணவளித்து மகிழ்ந்த இடமாம். அந்த இடத்தை தொட்டுவணங்கிக்கோண்டோம்.அந்த நினைவிடத்தை நிர்வகித்துவந்த திருமதி.செங்கமலத்தாயார் என்ற அம்மையார் பாரதிக்குவந்த விமர்சனங்களை தொகுத்து ஒரு ஆய்வு புத்தகமாக வெளியிட்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவருடன் பேசி நினைவுகளை மீட்டிக்கொண்டோம்.

 

 

மாலை திரு. அரி கிருஷ்ணனின் கூடுகையில் நண்பர்கள் முதற்கனலின் கடைசி அத்யாயத்தை பற்றி பேசினார்கள்.முத்தாய்ப்பாக ராஜகோபாலன்  ஒரு நிகழ் காவியத்தை  படிக்கும் போது ஏன் பல விதமான குற்றங்களையும்,குறைபாடுகளையும் நமது போதாமைகளால் நாம் காண்கிறோம், அதை படிக்க தேவையான டூல்ஸ் எனும் உபகரணங்கள் யாவை என பிரமிட் அமைப்பை வரைந்து

 

கீழ்ப் பகுதியில்நாட்டார் பாடல் மரபும்

அதற்கு மேலே
புராண கதை சொல்மரபும்
அதற்கு மேலே
தர்க்க இயல்பு வகைமை
அதற்கு மேல்
சரித்திர சான்றுகள்
என சொல்லி இதன் ஊடு பாவுகளாக பொருளாதார காலக்கட்டம்,பூகோள நிலை,அக்கால அரசியல் சூழல் போன்ற வற்றையும் கணக்கில் எடுத்து கொண்டு படிக்கும்போது விவரிப்பின் இயல்பிற்கேற்ப அந்தந்த வகைமைகளுக்கு நம்மை ஒப்பு கொடுத்து படித்தால் குழப்பமே வராது.ஒரு  Holistic approach கைகூடும் என கார்ப்பொரேட் ஸ்டைலில் விளக்கி கூட்டத்தை கொள்ளைகொண்டார்.

ஜெ பேசும்போது காவிய இலக்கணங்களை தண்டி எழுதியுள்ளதை சொல்லி, எழுதுவதன்றி வேறெதெப்பற்றியும் கவலைப்படபோவதில்லை. ஏனென்றால் ஜாஜா போன்றோர் அந்த எழுத்தை எப்படி படிக்கவேண்டும் என வாசகர்களுக்கு கொண்டு சேர்த்து விடுவார்கள் என சொன்னபோது மிக மகிழ்வாக இருந்தது.

மறு நாள் காலை சென்னை நண்பர்கள் விடை பெற்று கொள்ள நாங்கள் கடலூரில் நடைபெறும் நற்றிணை இலக்கிய கூட்டத்தில் பங்கு கொள்ள சென்றோம்.இது சீனு முன்னெடுத்து நடத்துவது.
சிறுகதை,கவிதை,கட்டுரைகள் ஆகியவற்றை படித்து தங்களுக்குள் விவாதித்து மகிழும் அமைப்பு.
இதில் ஜெ ஒரு இலக்கிய ஆக்கத்தை எப்படி படித்து உள்வாங்கி கொள்வது என்பதை பற்றி பேசிய பின் கலந்துரையாடல் நடந்தது.

நிகழ்வு முடிவிற்கு பின் எல்லோரும் சீனுவின் அம்மா அளித்த அன்பான மதிய உணவை உண்டு முடித்துவிட்டு அங்கே முகமது பஷீரின் கதைகளத்தைபற்றியும் அவரது ஆளுமையை பற்றியும் ஜெ சொல்லக்கேட்டு மகிழ்ந்தோம்.

அங்கிருந்து ரமேஷ் பிரேதனின் இருப்பிடத்திற்கு வந்தோம்.மிகவும் உணர்ச்சிகரமாகவும், இருத்தலின் துயரத்தையும் ரமேஷ், ஜெவிடம் விவரித்தது கலங்கடித்தது.பார்த்துவிட்டு வெளிவந்தபோது ஜெ வும் இறுகியிருந்தார்.அப்போது அவர்,குரு நித்யா சொன்னதாக சொன்னார்.
Don’t worship negative Gods,
they will bless you.

மிகவும் மனச்சோர்வாக உணர்ந்தேன்.
1

அங்கிருந்து லாஸ்பேட்டுக்கு போய் கி.ரா வீடு போய் சேர்ந்தோம். ஜெ வின்வருகையை தெரிவித்திருந்ததால் நைனா எதிர்பார்த்து ஈஸி சேரில் அமர்ந்திருந்தார். எல்லோரும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டோம்.95 வயது போல் தெரியவில்லை. களுக்கென சிரிக்கும் Boyish laugh நைனாவுக்கு பாந்தமாக இருக்கிறது.ஜெ. இடைச்செவல் ஞாபகங்கள் வருகின்றனவா?என கேட்க
இப்போதெல்லாம் பிரயாணம் போகமுடிவதில்லை ஆனால் நினைத்துகொள்வேன் என்றார்.

மூப்பின் மறப்பு என்பது அவரிடம் காண முடியவில்லை.இப்போதும் படிப்பதற்க்காக அவரது அணுக்கர்கள் பெரிய எழுத்தில் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்துள்ள தொகுப்பாக
1.பரதநாட்டிய நடனமணிகள்

2.இசை வித்வான்களின் காலக்கிரம வரிசையும் தொகுப்புமான நூல்.

3.கர்நாடக இசை நட்டுவாங்கனார்களின் தொகுப்பு

ஆகிய தொகுப்புகளை படித்து வருவதாக சொல்லி வீணை தனம்மா பற்றியும் அவரது மகள் ஜெயாம்மா பற்றியும் அவர்களது வித்வத் கீழ் ஸ்தாயியில் சுநாதமாக சஞ்சாரிப்பு செய்யும்போது ஒரு அபஸ்வரம்கூட வராது எனவும்   சொன்னார்.
விளாத்திகுளம் சுவாமிகளின் இசை ஞானத்தை பற்றி சொல்லுங்கள் என கேட்டேன்.
அதற்கு ஸ்வாமிகளுக்கு ஸ்வரம் சற்று பிடிபடாததுதான்.ஆனால் ராகங்களில் அவரது ஞானம் அபாரம்.மற்ற வித்வான்கள் எங்கு கானடாவோ அல்லது கல்யாணியோ பாடினால் அது ஒன்று போல இருக்கும்.ஆனால் ஸ்வாமிகள் பாடினால் அந்த ராகத்தின் விஸ்தரிப்பு அவரது கற்பனையில் விரிந்து ஒவ்வொருமுறையும் புதியதாக இருக்கும்.பார்க்கவரும் இந்துஸ்த்தானி கலைஞர்கள் இவர் முன் பாடினால் கேட்டுவிட்டு அப்படியே அதை விஸ்தரித்து பாடிக்காட்டுவார் என்றார்.
நைனாப்பிள்ளை என்ற மகாவித்வானின் பாடலை வெள்ளைக்கார HMV இசைத்தட்டுகாரர்கள் ரெக்கார்டு செய்ய போய் அவரிடம்  ஆலாபனை ஒரு மூன்று நிமிடத்திலும்,பல்லவி   ஒரு ஆறு நிமிடத்திலும்,ராகத்தை ஒரு ஆறு நிமிடத்திலும் பாட கேட்கபோய் அவர் செருப்பாலடிப்பேன் ஓடிப்போய்விடுங்கள் என்றாராம்.விஸ்தாரமான இசை சஞ்சாரியை கூண்டிலடைக்கும் முயற்சிக்கான எதிர்வினை.

அந்த காலத்தில் பெண்கள் பூப்பெய்திய விஷேஷத்தில் அப்பெண்ணையும் அவளது சம்பந்தகார முறை சிறுபெண்ணை ஆண் போல் அலங்கரித்து ஊஞ்சலில் அமரவைத்து சிருங்கார ரசமூறிய பாடல்களை பாடுவார்கள்கல்யாண முதல்ராத்திரிக்கு பெண்ணை அனுப்பும் முன் கதவுக்கு முன்நின்று காமரசமுள்ள பாடல்களை பாடி உள் அனுப்புவார்கள்,இதெல்லாம் அருகிபோயிற்று என பெருமூச்செறிந்தார் நைனா.

அவரது கதைகளில் வந்த லம்பாடி பெண் பனைத்தொடையழகி அண்டரண்டபட்சி மற்றும் அவள் சார்ந்த லம்பாடி இனம் கிராமங்களுக்கு வருகை செய்ததை பற்றிய நினைவுகளை கேட்டேன்.
அதற்கு சிரித்துவிட்டு அவர், அந்த காலக்கட்டங்களில் குழுவான கொள்ளைகூட்டங்கள்,தீவட்டி கொள்ளையர்கள் இருந்தகாலமாக்கும்.இந்த லம்பாடிகள் நமது கிராமத்தில் கொள்ளையடிப்பார்கள் என எதிர்பார்த்து ஜாக்கிரதையாக இருந்தால் அவர்கள் பக்கத்து கிராமத்தில் கைவைத்திருப்பார்கள் அதனால் டாணாக்காரர்கள் எனும் அக்கால போலீஸ் ஒவ்வொரு ஊர் போலீஸிடமும் இவர்கள் இடம்பெயர்கையில் ஒப்படைப்பார்கள் ஆனாலும் திருடு நடந்துவிடும்.

2
இது போல நடந்த திருட்டுத்தான் கட்டபொம்முவின் ஆளான தானாவதிபிள்ளை ஆங்கிலேய கிட்டங்கியில் கல்யாண பலகாரத்துக்கு தேவையான நெல்லை கொள்ளையடிக்க அது பொம்முவை தூக்கில் போடும்வரை போய்சேர்ந்தது என கைத்தடிகளால் ஆளுமைகளுக்கு வந்து சேரும் துயரத்தின் வெளிச்சம்படாத கோணத்தை எடுத்து சொன்னார்.

பேச்சு பாரதியை பற்றி வந்தபோது அவரைபற்றி அரவிந்தர் எதுவும் எழுதாததைபற்றியும் தாகூரின் நூற்றாண்டு விழாவை பாரதிநினைவில்லத்தில் நடத்தியபோது அதை பாண்டியில் உள்ள வங்கத்தவர்களுக்கு நினைவுபடுத்த தவறிய அலுவலர்களை பற்றி சொல்லி சிரித்தார்.

ஐந்து மணிக்கு போனவர்கள் ஏழேமுக்கால் மணிவரை  அவரது நினைவாற்றலில் திளைத்தோம்.ஜெ வெளியே வரும் போது சொன்னார்,’சராசரி முதியவராக இருந்தால் சலிப்பில் நினைவுகள் மங்கி மறதி வந்துவிடும்.
முதுமையிலும் உயிர்ப்போடு மூளையை வைத்திருக்கும்போது மறதி அண்டாது என்றார்.
எல்லோரும் கிளம்பும்போது மீண்டும் ஆசீர்வாதம் பெற்று கொண்டார்கள்.நான் கால்களில்விழுந்து ஆசீர்வாதம் பெறும்போது, ஐயா,எனக்கு திருமணமாகி 26 ஆண்டாகிறது ,உங்களின் “கனிவு “சிறுகதையை எனது முதலிரவு அன்று என் மனைவிக்கு படிக்க கொடுத்து அவள் படித்தபின்பே எங்கள் வாழ்வை வாழஆரம்பித்தோம், என்றேன்.களுக்கென சிரித்துவிட்டு ,’என்ன மறுநாள் காலைல கொடுத்திருக்கலாம்,வெறும் பய, ஆளும் இவனும்ன்னு நெனைச்சிருப்பாளே’
என்றார்.

 

விஜயராகவன்

ஈரோடு

Seenu.jpg

 

இனிய ஜெயம்

 

மீண்டும் சந்தோசம் அளிக்கும் ஒரு நண்பர்கள் கூடுகை . வெள்ளி அன்று இரவே ஈரோடு கிருஷ்ணன் ,அந்தியூர் மணி ,பாரி ,விஜயராகவன் ஆகிய நண்பர்கள் வந்து விட்டனர் . இரவு நெடுநேரம் வரை நமது தளத்தில் வெளியான சமீப  கதைகள் குறித்து பேசிக்கொண்டிருந்தோம் .  விமர்சன சூழலின் அந்திமம் குறித்து பேச்சு திரும்பியது .

 

இணையம் வந்த பிறகு இலக்கியத்தில் ஒரு ஜனநாயக புரட்சி வெடிக்கப் போகிறது என எதிர்பார்க்கப் பட்டது . ஒரு புகையிலை வியாபாரி , ஒரு வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர் என சகலரின் வாழ்வும் பேசப்படும் என எதிர் பார்ப்பு நிலவியது . அப்படி எல்லாம் இல்லை .அவர்களின் வாழ்வையும் ஒரு எழுத்தாளன்தான் எழுதியாக வேண்டும் என தெளிவானது .

 

முகநூல் வந்த பிறகு தீவிரமாக  வாசிக்க  எழுத  சோம்பல் கொண்ட சோம்பேறிகள்  கூட்டத்தால் வலைப்பூக்கள் வாடி வதங்கின . எழுத்தாளர்கள்  முக நூலுக்கு வந்து  சேர்ந்தனர் .மீண்டும் வெடிக்கப்போகும் ஒரு புரட்சி குறித்து எதிர்பார்ப்பு எழுந்தது . இறுதியில் மடையர்களுடன்  மட மொழியில் உரையாடி எல்லாமே இலக்கியம்தான் எனும் பின் நவீன தரிசனத்தை எழுத்தாளர்கள் முன் வைத்தனர் .

 

ஜியோ புரட்சி வந்த பிறகு நிலவரம் இன்னும் கலவரம் ஆனது . கழுதை  விட்டையில் முன் விட்டை எது பின் விட்டை எது என பேதம் அறிய இயலா நிலை .

 

இப்போது நிலவரம் அபத்தத்தின் உச்சம் . சூழ சூழ  சராசரிகள் .எழுத்தாளனோ முந்தய கால எழுத்தாளர்கள் போல் ,அவன் கண்டறியா வாசகனை நோக்கி எழுதிக்கொண்டு இருக்கிறான் .

b

உண்மையில் இது மீண்டும் தீவிர இலக்கியம் தனிக் களம் காண வேண்டிய காலம் . க நா சு போன்ற முன்னோடிகள் செய்த முன்னெடுப்பு இங்கே மீண்டும் துவங்க வேண்டும் .

விமர்சன மரபின் மரணம் இதைத்தான் சுட்டுகிறது . [எங்கள் உரையாடல் கொண்டு நான் சிந்தித்து தொகுத்து கொண்டது இது ].

 

அதிகாலை எழுந்து நண்பர்களுடன் கடற்கரையில் ஒரு காலை உலா . துய்மா சிலை அருகே அமர்ந்து மெல்ல கடல் வெளியின் தொடுவான் கோட்டில் மேக அடர்த்திக்குப் பின் ஒளி மட்டுமே ஆகி   மெல்ல புலரும் வானை  கண்டு ,உதயத்தின் சன்னதியில் அமைதியாக அமர்ந்திருந்தோம் .

 

அதிகாலை பின்புலத்தில் ,காக்கை கூட  ”அந்தப் பறவையாக ”தெரிந்து பரவசத்தை உயர்த்தியது . கடல் நோக்கு  உணவகம் ஒன்றனில்  பொன் விலை அளித்து , மண் சுவை காப்பியை சகித்து மீண்டோம் .  தலைமை செயலகம் பின் புறம் அமைந்த , ஜிப்பு பிரியும் ஓசை எழுப்பும் பிரெஞ்சு  பெயர்களை தாங்கிய , பிரெஞ்சு பாரம்பரிய கட்டிட வரிசை கொண்ட தெருக்களில் சுற்றி நடந்தோம் .  பொதுவாக இந்த நேரம் ,இந்த அழகிய வீதிகளில் ஏதேனும் ஷூட்டிங் நடக்கும் ,  அதிகாலை நடை பெரும்பாலும் இந்த தெருவில் சாத்தியம் இல்லை எனும் நிலை இன்று .அன்று ஷூட்டிங் ஏதும் இல்லை . உலா முடித்து அரை மீண்டோம் .

 

பதினோரு மணி துவங்கி மறுநாள் இரவு கோவை பேருந்தில் ஜெயமோகன் ஏறி படுக்கையை விரிக்கும் வரை , நிகழும் ஒவ் ஒன்றும் எங்கே துவங்கி எங்கே நிறைய வேண்டும் என முன்பே பேசி தயாரிக்கப்பட்ட அட்டவணை நேரம் சார்ந்தே இரண்டு நாளும் அனைத்து நிகழ்வுகளும் நடந்து முடிந்தது . திட்டமிடுதல் என்பது அளிக்கும் விடுதலை , என்ன என்பதை நிகழ்ச்சி ஒருங்கு நண்பர்கள் தனித்தனியே உணர்ந்தனர் .

 

ஜெயமோகன் ,சுரேஷ் பிரதீப் என எழுத்தாளர்களை உள்ளிட்ட நண்பர்கள் அனைவரும் எங்கள் இல்லம் வந்தது மிகப் பெரிய மரியாதை .அம்மா இரண்டு நாளாக இன்னும் அந்த மகிழ்வில் இருந்து இறங்க வில்லை .

 

கிரா அவர்களை சந்தித்தது மிகப் பெரும் சந்தோசம் அளித்தது .

 

கிரா – எல்லோரும் நிக்கிறேளே

 

ஜெ -இவங்க எல்லாம் பாண்டி சேரிதான் .

 

கிரா -அதனால  நிக்கட்டும் பரவா இல்லன்னு சொல்றீங்களா …

 

வெடி சிரிப்புடன் துவங்கிய உரையாடல் , பாரதியார் ,அரவிந்தர் , தாகூர் ,புஷ்கின் , விளாத்திகுளம் சுவாமிகள் ,  இன்றைய கோவில் பட்டி நிலை , என  தொட்டு தொட்டு புதிய புதிய செய்திகள் வழியே ,இரண்டு மணி நேரம் விரிந்து  பரவி சென்றது .

 

பேருந்து ஏறும் வரை ,இசை கவிதைகள் என்று இனிய உரையாடல்  தாவி தாவி வெவ்வேறு வெவ்வேறு எல்லைகளுக்கு சென்று மீண்டது .

 

இனிமையான சரஸ்வதி கடாக்ஷம் நிறைந்த ,ஆசிரியர்கள் காலடியில் அமர்ந்து, நண்பர்கள் சூழ ,  இலக்கியம் கற்ற , மறக்க இயலா இரு தினங்கள்

 

கடலூர் சீனு

 

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–41
அடுத்த கட்டுரைகாலம் செல்வம் வேளாங்கண்ணியில்…