காலம் செல்வம் வேளாங்கண்ணியில்…

1அன்பின் ஜெ,

வணக்கம்.

கடலூர் சீனு வீட்டில் கடைசியாய் குடித்த சுக்குகாபி சிறு ஏப்பமாய் வெளியேறுகையில் நாகப்பட்டினத்தை கடந்திருந்தேன். இரவு உணவிற்க்கு வேளாங்கண்ணியில் “காலம்” செல்வம் அவர்களுடன் அமர்வதாக ஏற்ப்பாடு.

“தம்பதி சமேதரா வந்திருக்காங்க, கியூபா புரட்சி பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு கேட்டு பீதிய கிளப்பிடாத என்று கதிரேசனிடம் ஏற்கனவே சத்தியம் வாங்கியிருந்தாலும் ” நீங்க வந்து சேர இன்னும் எவ்வளவு நேரமாகும்?” ந்னு செல்வம் போனில் அழைத்து  கேட்க, ஆக்ஹா…. நம்ம ஆளு ஏழரைய இழுத்துட்டான்போல என்ற நினைத்தபடி “இதோ இன்னும் பத்து மைல்தான்… இல்லல்ல….. கிலோமீட்டர்…. பத்து கிலோமீட்டர், ஆறு ஆறேகால் மைல்தான் இருக்கும், பத்து நிமிசத்துல வந்திருவேன்னு” பதறியபடி “கிளிண்டன் பார்க் இன்” ஓட்டலை சென்று சேர்கையில் ரிசப்ஷன் சோபாவில் ஒய்யாரமாக உட்கார்ந்தபடி சீரியஸாக பேசிக்கொண்டிருந்த கதிரேசனை முழங்கை முட்டிகளை பற்றியபடி பவ்யமாய் கேட்டுக்கொண்டிருந்தார் செல்வம்.

குறுக்கேயிருந்த கண்ணாடி கதவை பாய்ந்து திறக்க முயற்ச்சிக்கையில் விருட்டென்று அகன்ற இருமுனைகளை திகைப்போடு கண்இமைத்து, அவசரமாய் அணுகி செல்வத்தின் கைப்பற்றியபடியே “சமாளிக்க கொஞ்சம் சிரமப்பட்டீங்களோ?” என்று கேட்க,  கண்களால் சிரித்தப்படி “அதெல்லாம் இல்லை, ஜெயமோகன் சிஷ்யபுள்ளன்னு பேச ஆரம்பிச்ச உடனே தெரிஞ்சிது” என்றார்.

திருமதி செல்வத்தை பார்க்க அறைக்கு சென்றேன். வணக்கம் சொல்லி கையிலிருந்த சால்வையை கொடுத்து செல்வத்திற்க்கு அணிவிக்க சொல்ல, கூச்சம் கலந்த புன்னகையுடன் போர்த்தினார். “அண்ணே, இப்ப நீங்க..” என்று மற்றொன்றை அவரிடம் நீட்ட சால்வையை போர்த்தி சிரிப்புடன் இணைந்துகொண்டார்.

முதல் இந்திய பயணம். “எப்படி உணர்கிறீர்கள்?”  என்ற வழமையான கேள்விக்கு “எனக்கொண்ணும் பெரிசா வித்தியாசம் தெரியல்ல” என்று பதிலளித்தபடி இலகுவாகி சகஜமாக உரையாட ஆரம்பித்தார் திருமதி செல்வம். உணவுமேஜையில் உரையாடலை தொடர்ந்த நாங்கள் சற்றைக்கெல்லாம் நானும் – திருமதி செல்வமும், கதிரேசனும் – செல்வமும் என இரு தனி உரையாடல்களுக்குள் சென்றுவிட்டிருந்தோம்.

2

இப்பயணம் குறித்தான “வெளியில போகும்போது கைப்பைய கெட்டியமா புடிச்சிக்கனும்” போன்ற முன்ஜாக்கிரதை உபதேசங்கள், நேர்மாறாக அவர் சந்தித்த நெகிழ்வு நினைவுகள் பலவற்றை விவரித்தார்.முந்தைய நாட்களிலிருந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் பொழுதாக வேளாங்கண்ணியில் இருக்கும் இருநாட்கள் அமைந்திருப்பதை அவர் முகத்திலிருந்து அறியமுடிந்தது.

மண்கலத்தில் வைக்கப்பட்ட இறால் பிரியாணியை சாப்பிட்டபடி ஈழ வாழ்க்கையை பேச ஆரம்பித்தோம்.
“அடுத்த பாகம் எப்பண்ணே?” என்ற என்கேள்விக்கு முள்கரண்டியை செல்வத்தை நோக்கி திருப்பினார் திருமதி. “ஆக்சுவலா இந்த புத்தகத்துக்கு இப்படி ஒரு வரவேற்ப்பு இருக்கும்னு நான் எதிர்பார்க்கல..” என்றபடி “எழுதித்தீரா பக்கங்கள்” புத்தகத்தில் உள்ள சம்பவங்களை அவர் விவரிக்க ஆரம்பிக்கையில் எங்கள் உணவுமேஜை அமைந்த பகுதி  சிரிப்பலைகளால் அதிர்ந்தது.

ஈழத்தின் சென்ற தலைமுறை வாழ்க்கையில் ஆரம்பித்து சமகாலம் வரை செல்வமும், அவரின் மனைவியும் பேச பேச நானும் கதிரும் கண்ணிமைக்காது கேட்டுக்கொண்டிருந்தோம்.முதல்காட்சி சினிமாவுக்கு தமிழகம் வந்துவிட்டு திரும்பிசெல்வார்கள் என்று நான் கேள்விபட்ட செய்தியை உறுதிபடுத்தினார். அவர் வீட்டின் பனையோலை கூரை அமைக்கும்போது செல்வத்தின் மாமா ஒருவர் கொடுக்கும் சலம்பலை அவர் விவரிக்க, புரையேரும் வரை சிரித்துக்கொண்டிருந்தோம்.

நேரம் பதினொன்றரையை நெருங்குகையில் நால்வரும் நிகழ்காலத்திற்க்கு மீண்டு மறுநாளுக்கான பயணத்திட்டங்களை தெளிவுபடுத்திக்கொண்டு அறை மீண்டோம். எடுத்து சென்றிருந்த எ.தீ.பக்கங்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டேன். திருமதி செல்வத்திடம் விடைபெற்றுக்கொண்டு கீழே செல்ல முற்படுகையில் எங்களை வழியனுப்ப அவர் படியிறங்க ஆரம்பித்தார்.

3

தரைதளத்தில்  இருவரிடமும் விடைபெற்று கடைசி படிக்கட்டை கடக்கையில் “தம்பி… மீண்டுமொருமுறை நாம் சந்திப்போமா என்று தெரியலை, ஆனா எனக்கொரு தம்பி தமிழ்நாட்டிலுண்டு என்று நான் கட்டாயம் நினைத்திருப்பேன்” என்றபடி உறவைப் பிரியும் பாசத்துடன் கட்டியணைத்து கன்னம் சேர்த்து விடைகொடுத்தார்.

சிலவருட முன்பான அலுவலக பயணமொன்றில் டொரண்டோவின் சியென் டவரில் உள்ள ரிவால்விங் ரெஸ்டாரண்டில்  அமர்ந்து கீழே தெரியும் வெளிச்ச வெள்ளங்களை   பார்த்தபடி தனியே  உணவுண்டது நினைவில் வருகிறது.

அனைத்தையும் பேச அங்கொரு அண்ணன் உண்டு என்றுணர்த்தும் செல்வத்தின் பரிவு. அடுத்த முறை அங்கு தங்க தமக்கை வீடொன்றுண்டு  என்றுணர்த்தும் தேவராணி செல்வம் வாங்கிதந்த பனங்கிழக்கின் சிறு வேர்.

நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்

முந்தைய கட்டுரைபாண்டி,கடலூர் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவானம்