ஜெ,
சினிமா மிக வலிமையான அதிகப் பெரும்பான்மையான மக்கள் பாவிக்கும் ஊடகம். ஆனால் தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும்படி அரசியல் படங்கள் வந்ததில்லை என்பது குறித்து மிகுந்த வருத்தமாக இருக்கிறது. இப்போதுள்ள மோசமான அரசியல் சூழலைக் கூட பிரதிபலிக்ககூடிய / விமர்சிக்கூடிய / அரசியல் எதார்த்தத்தை மக்கள் மனதில் தோற்றுவிக்கக்கூடிய அரசியல் திரைப்படங்கள் தமிழில் வரவில்லை. 21ம் நூற்றாண்டில் தமிழ் சினிமாவில் அரசியல் சினிமாவின் நிலை சற்றுக்கவலைக்கிடமாகவே இருக்கிறது.
தியோடர் பாஸ்கரன் பிபிசி இணையத்தில் எழுதிய கட்டுரையில் திராவிட இயக்கம் அரசியல் பிரவேசத்திற்கும் தங்களை ஸ்திரப்படுத்திக்கொள்ளவும் சினிமா ஊடகத்தைப் பயன்படுத்திய அளவிற்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றதும் அதனைப் பயன்படுத்தவில்லை என்று குறிப்பிடுகிறார். எனக்கு திராவிட அலை படங்களுக்குப் பிறகு தமிழ் திரைப்படங்களில் (எல்லா படங்களிலும் எதோ ஒரு அரசியல் இருந்தாலும்) ஒரு முழுமுற்றான அரசியல் படமே தமிழில் வரவேயில்லை என்று தோன்றுகிறது. இந்த விசயத்தில் மலையாள மக்கள் பொறாமைப்பட வைக்கிறார்கள். வருடத்திற்கு நான்கு அரசியல் படங்கள் வந்துவிடுகின்றன. அதற்குக் காரணம் என்ன என்று இரு மாநிலத்தையும் ஒப்பீட்டு ஓரளவு புரிந்துகொள்ள முடிறது. திராவிட அலை அரசியல் திரைப்படங்கள் குறித்து நிறைய ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கக்கிடைக்கின்றன. கார்த்திகேசு சிவத்தம்பி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (the image trap), வெங்கடேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீநிவாசன், மாதவ பிரசாத் போன்றோரின் கல்விப்புலக் கட்டுரைகளும் முக்கியமானவை. ஆனால் ஏன் திராவிட அலை சினிமாவிற்குப் பிறகு தமிழில் அரசியல் சினிமா அலை உருவாகவில்லை என்றொரு பதிவு இங்கில்லை. Death of political wave in cinema என்று மட்டையடியாக சொல்லமுடியாது எனினும் (இங்கு growth of political renaissance என்று சொல்வதே சற்று பலவீனமானதுதான்) தமிழ் சினிமாவின் சூழலைப் பார்த்தால் சற்று அச்சமாகத்தான் இருக்கிறது. ஏன் அரசியல் அலை சினிமா உருவாகவில்லை என்று யோசித்தால்:
1) அரசியல் அமைப்புகளின் பின்புலங்களிலிருந்து இயக்குனர்கள் வராதது ஒரு காரணமாக இருக்கலாம். அதாவது திராவிட அலை சினிமாவிற்குப் பிறகு. அரசியலும் கலையும், (குறிப்பாக சினிமா) தமிழகத்தில் பின்னிப்பிணைந்தது. இன்னும் சற்று கூர்மையாகச் சொல்லப்போனால் தெளிவான அரசியல் பார்வையுடைய இயக்குனர்கள் வராமல் போனது தான்.
2) இயக்குனர்களின் கையில் சிக்கிக்கொண்டு கம்யூனிசம் (இட்லி வசனம்), இறைவி (பெண்ணியம்) போன்ற படங்களில் குறிப்பிட்ட கருத்தாக்கம் பட்ட அவஸ்தையை பற்றி சொல்ல வேண்டியதில்லை.
3) தலித் அரசியல் படங்களுக்கும் இதே நிலை தான். 21ம் நூற்றாண்டுக்கு முன்பு எத்தனை தலித் அரசியல் படங்கள் வந்துள்ளன? தலித் மக்களின் இயல்பான வாழ்க்கையைக் கூட திரைப்படங்கள் பிரதிபலிக்கவில்லை என்பதே உண்மை’. தலித்துகளுக்கு நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய அரசியல் அநீதியை பதிவு செய்த கமட்டிப்பாடம் மிக முக்கியமான திரைப்படமாக இருக்கிறது.
4) மக்களின் இரசனை எப்போதும் ‘உள்ளடக்கத்திற்கு’ முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்ததில்லை. மிகச்சில உதாரணங்கள் மட்டுமே இருக்கின்றன. அவைகளும் வணிகரீதியாக தோல்வியடைவதால் பெரும்பான்மை மக்களைச் சென்றுசேராமல் போய்விடுகிறது. மக்கள் எப்போதும் பிம்பங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அப்படியாக நம் தமிழ் சினிமா பிம்பச் சிறையில் வீழ்ந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம் தான்.
5) தமிழ் சினிமா என்பது ஆரம்ப காலம் தொட்டு பெரிய கதநாயகர்களான எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல், அஜித் – விஜய், தனுஷ் – சிம்பு, விஜய் சேதுபதி – சிவகர்த்திகேயன் போன்றோரால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருவது ஒரு காரணம் பிம்பங்களுக்கே இங்கு கதைகள் எழுதப்படுகின்றன. நம் தமிழர்கள் காலம்காலமாக இந்தக் ‘கதாநாயக வழிபாட்டில்’ ஊறித் திளைத்தவர்கள். நம் தமிழக அரசியலையும் சினிமாவையும் இவர்களின் கதாநாயக வழிபாடே தீர்மானித்து வருகின்றது. தெளிவான அரசியல் பார்வையுடன் எடுக்கப்படும் (!) படங்கள் மக்களிடம் வரவேற்பு பெறுவதில்லை. அப்படியே ‘மதுபானக்கடை’ போன்ற படங்கள் வந்தாலும் பெரு நடிகர்களின் வணிகப்படங்கள் எழுப்பும் கூச்சலுக்கிடையே இவற்றின் குரல் மட்டுப்பட்டு விடுகின்றன. இப்படியொரு அரசியல் பேரழிவு நடந்துகொண்டிருக்கும் சமயத்தில், தமிழகத்தில் ஊசலாடும் ஆட்சி நிலவும் சமயத்தில் சினிமா ஊடகம் அமைதிகாத்து வருவது அக்கலையின் தோல்வியல்ல, மாறாக இயக்குனர்களின் இயலாமை, சிந்தனையினமை, அரசியல் தெளிவின்மை, சமூக பொறுப்பின்மை, தைரியமின்மை ஆகியவற்றை மட்டுமே காரணமாக சொல்வேன். Subversive என்கிறோமே அப்படியொரு political rebel சினிமா என்று ஒன்றுமே தமிழில் வந்ததில்லை.
அவ்வகையில் தைரியமாக நேரடியாக இவற்றைப் பகடி செய்யும் YouTube சேனல்கள் பாராட்டத்தக்கவை. ஆனால் வெறும் பகடியால் என்ன நிகழ்ந்துவிடும்? நாம் ஆற்ற முடியாத எதிர்வினையை ஒரு YouTube சேனல் செய்கையில் அவற்றைப் பார்த்து சிரிப்பதைத் தவிர. அந்த வீடியோக்களை யார் பார்க்கிறார்கள்? அது எப்படி ஒரு முழுமையான / தமிழக மக்கள் அனைவரிடமும் ஒரு ‘அரசியல் எதார்த்தத்தைக் கட்டமைக்கும்’ என்ற பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
இன்றைய டிஜிடல் கலாச்சாரத்தில் புற்றீசல்கள் போல பல YouTube சேனல்கள் முளைத்துள்ளன. வரும் காலங்களில் இவற்றில் எத்தனை தன்னை தக்கவைத்துக்கொள்ளும் எனத் தெரியவில்லை. Madras Central, Temple Monkeys, சும்மனாச்சிக்கி இப்போது நக்கலைட்ஸ், Smile Settai, Muttal Punnagai போன்றவை நான் கவனிக்கும் YouTube பக்கங்கள். அரசியல் பகடிகள் குறிப்பிட்ட ஒரு அரசியல் அமைப்பின் அல்லது அந்த அரசியல் அமைப்பின் செயல்பாடுகளை பகடி செய்வதுடன் தங்கள் பணியினை முடித்துக்கொள்கின்றன. அதாவது ‘அரசியல்’ யதார்த்தை மக்களுக்கு கடத்துவதுடன்’ இவற்றின் பணி முடிந்துவிடுகிறது. இந்த சேனல்கள் உருவாக்கும் ‘அரசியல் எதார்த்தம்’ இதுவரை நம் தமிழ் சினிமா செய்யத் தவறியது என்பதனை நாம் மறுக்கவே முடியாது. தமிழ் சினிமாவில் திராவிட அலை சினிமாவிற்குப்பின் எத்தனை அரசியல் படங்கள் வெளிவந்துள்ளன? அவற்றில் எத்தனை படங்கள் பொதுமக்களிடம் ‘அரசியல் எதார்த்தத்தை’ உருவாக்கின? அவர்கள் சிந்தனையை மாற்றின? மொத்தம் எத்தனை அரசியல் பகடி திரைப்படங்கள் வெளிவந்துள்ளன என்று சில கேள்விகளை நமக்குள்ளாகக் கேட்டுக்கொள்ளும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்தியா போன்ற மூன்றாம் நாடுகளில் அரசியல் படங்கள், குறிப்பாக அரசியல் பகடி திரைப்படங்கள் வருவதற்குத் தோதான சூழல் நிலவுகிறது. வறுமை, ஊழல் அரசியல், வேலைவாய்ப்பின்மை என மூன்றாம் நாடுகள் / வளரும் நாடுகளுக்கே உரிய பல பிரச்சினைகள் நம்மிடம் இருக்கின்றன. ஆனால் இவற்றிற்கு நாம் தமிழில் கலை ரீதியாக என்ன எதிர்வினை செய்கிறோம்? அரசியல் சிந்தனையும், புத்தக வாசிப்பும் இதில் முக்கியபங்கு வகிக்கின்றன என்பதனையும் உணரமுடிகிறது.
தமிழில் வந்துள்ள அரசியல் படங்கள் என்று ஒரு பட்டியல் தாயரிக்க முற்படும்போது மிகுந்த ஏமாற்றம் தான் மிஞ்சியது. இதுகுறித்து உங்கள் தரப்பினை அறிய ஆவலாக இருக்கிறேன். ஏற்கனவே பேசும்பொழுது தமிழில் வந்த சில அரசியல் படங்கள் ‘போலியான அரசியல் எதார்த்தத்தைக் கட்டமைக்கிறது’ என்று கூறினீர்கள். எனக்கு என்னவோ இப்போதுள்ள சினிமாக்கள் போலியான எதார்த்ததைக் கூட கட்டமைப்பதில்லை என்று தோன்றுகிறது. எனக்குத்தெரிந்த நண்பர்கள் குழாமில் தெளிவான அரசியல் பார்வையுடையவர்கள் இருக்கிறர்கள். அவர்கள்மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பார்க்கலாம். இதனைக்குறித்தே எனது ஆய்வின் பார்வையை திருப்பியுள்ளேன்.
யமுனை செல்வன்
அன்புள்ள யமுனைச்செல்வன்,
அரசியல் படங்கள் என்றால் என்ன? பொதுவாக இத்தகைய விவாதங்களில் பேசப்படும் அச்சொல்லை முதலில் தெளிவாக வரையறுத்துக்கொள்ள வேண்டும். கல்வித்துறை சார்ந்த விவாதங்களில் அவ்வாறு பேசப்படும் சொல்லை வரையறை செய்துகொள்வது இன்னும் முக்கியமானது. ஆனால் அவ்வாறு வரையறுத்த உடனேயே துணைப்பிரிவுகள் வழியாக அவற்றை மீண்டும் பிரித்து வரையறை செய்வதனூடாக அந்த முதல் வரையறையை நெகிழ்வானதாகவும் விரிவானதாகவும் ஆக்கிக்கொள்ளவேண்டும். இல்லையேல் நடைமுறைக்கு பொருத்தமில்லாத மூர்க்கமான ஒற்றை நிலைபாடையே சென்றடைவோம்.
‘அரசியல்படங்கள்’ என்னும் வரையறையை என்னைப்பொறுத்தவரை இதுவரை எடுக்கப்பட்ட திரைப்படங்களிலிருந்தோ அவற்றின் செவ்வியல் படைப்புகளில் இருந்தோ உருவாக்கிக்கொள்ள விரும்பவில்லை. இலக்கியம் என்னும்போது முழுக்க முழுக்க அவற்றின் செவ்வியலாக்கங்களை ஒட்டியே அனைத்து வரையறைகளையும் உருவாக்கிக்கொண்டவன் நான். ஆனால் இங்கு நாம் பேசிக்கொண்டிருப்பது அரசியல்படங்களைப்பற்றி. அதன் முதற்பகுதி அரசியல். அதில் பெரும்பகுதி நடைமுறை சார்ந்தது. ஆகவே நடைமுறையிலிருந்து அந்த வரையறையை சென்றடையலாம் என்று நினைக்கிறேன்.
அரசியல் நடைமுறை சார்ந்து திரைப்படங்கள் மூன்று வகையான முன்னிலையாளர்களைக் கொண்டுள்ளன.
ஒன்று: அரசியல் கோட்பாடுகளில் ஆர்வம் கொண்ட, அவற்றின் நுட்பங்களையும் சாத்தியங்களையும் ஆராயக்கூடிய தேர்ந்த சிலர்.
இரண்டு: அரசியல் களப்பணியாளர்கள் மற்றும் அரசியல் படுத்தப்பட்ட மக்கள் .
மூன்று: எவ்வகையிலும் அரசியல் படுத்தப்படாதவர்கள் பல்வேறு அடையாளங்களுடன் பிரிந்து விரிந்துகிடப்பவர்களுக்குமான மக்கள்.
இந்த மூன்று தரப்பினருக்கும் ஒரே வகையான அரசியல் படங்கள் எடுக்கப்படுவது சாத்தியமே அல்ல. உலக அளவில் கொண்டாடப்படும் அரசியல் படங்கள் அதாவது செவ்வியல் ஆக்கங்கள் என்று நாம் நம்பும் படங்கள் முழுக்க முதல்வகை முன்னிலையாளர்களுக்காக எடுக்கப்பட்டவை அந்த அரசியல்படத்தை மிக விரிந்த ஒரு அரசியல்பின்புலத்தில் வைத்துப்பார்க்க அவர்களால் முடியும். அதன் கருத்தியல் உள்ளடக்கத்தையும் காட்சிக் குறியீடுகளையும் நுண்ணிய உணர்வு நிலைக்ளையும் அவர்கள் தொட்டு விரித்துக்கொள்ள முடியும். அதாவது அவர்கள் படைப்பின் ஆசிரியனுக்கு நிகராக ஏற்பாளனாக நின்று கொண்டு அப்படைப்பை உருவாக்குபவர்கள். ஒருமுறை மலையாள அரசியல் படங்களின் இயக்குநரான பி.ஏ.பக்கர் [ அவர் இயக்கிய கபனி நதி சுவந்நப்போள் போன்றவை மலையாள அரசியல்படங்களில் செவ்வியல் படைப்புகள் எனப்படுகின்றன] கேலியாகச் சொன்னதுபோல, நுணுக்கமும் அழகும் கொண்ட சிறந்த அரசியல்படைப்பு அந்த அரசியல் சென்றடையவேண்டிய மக்களை முழுமையாக தவித்துவிட்டு உயர்மட்ட ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டு அவர்களால் பாராட்டப்படுவது
அத்தகைய படைப்புகளை வைத்து பிறவகையான படைப்புகளை நிராகரிப்பது என்பது அரசியல் படங்கள் குறித்த விவாதத்தில் சரியானதல்ல. உண்மையில் இந்த முதல் வகைப்படங்கள் மட்டுமே காலத்தில் தாக்குப்பிடிக்கின்றன .ஒரு தலைமுறைக்குப் பின்னரும் தங்கள் அழகையும் குரலையும் இழக்காமல் இருக்கின்றன. ஏனெனில் அவை எப்போதைக்குமான சில பிரச்னைகளை தொட்டுவிடுகின்றன. அடிப்படையான வினாக்களை கொண்டுள்ளன. என்றும் வாழும் உருவகங்களை படிமங்களை சென்றடைந்துவிடுகின்றன. பொதுவாக அச்சமூகத்தில் நிகழும் பண்பாட்டு உரையாடலின் ஒரு பகுதியாக ஆகிவிடுகின்றன
திரைப்படமோ இலக்கியமோ நாடகமோ மானுட அறிவுப்பெருக்கில் தங்களது பங்களிப்பை ஆற்றுவதனூடாகவே நிரந்தரத்தன்மை கொண்டுள்ளன. முதல்வகைப் படங்களுக்கு மட்டுமே அந்த பங்களிப்பு உள்ளது. ஒரு தலைமுறை தாண்டி நம்மிடம் வந்து சேரும் அந்தப் படைப்புகளை வைத்துக்கொண்டு அடுத்தடுத்த வகைமையின் அனைத்து படைப்புகளையும் முழுமையாக நிராகரிப்பதும் சரி, அவை தோற்றுப்போன முயற்சிகள் அல்லது போலியானவை என்று மதிப்பிடுவதும் சரி அவற்றுக்கு நியாயம் செய்வதாகாது.
நான் திரைப்படங்கள் பார்க்க ஆரம்பித்த காலத்தில் அரசியல்ப் படங்கள் என எண்ணிக் கூர்ந்து நோக்கியவை முதல் இரண்டு வகையான படங்களே. அன்று ருமேனியா, ஹங்கேரி, செக்கோஸ்லேவேகியா போன்ற கம்யூனிஸ ஐரோப்பிய நாடுகளிலிருந்து வலுவான அரசியல் படங்கள் வந்து கொண்டிருந்தன. அவற்றில் பெரும்பகுதி இரண்டாம்வகை அரசியல் படங்கள். வெவ்வேறு வகையில் அன்று இடதுசாரிகள் உலகளாவிய வணிக ஆதிக்கத்திற்கு எதிராக, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, கூடவே புரட்சிகர அரசு என்ற பெயரில் உருவாக்கப்பட்ட சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உணர்வுகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தும் படங்கள் அவை.
அன்று மைக்கேல் ஆஞ்சலோ ஆண்டனியோனி எனக்கு மிக பிடித்தமான இயக்குநராக இருந்தார். அன்றைய திரைப்படச் சங்கங்களின் ‘சூப்பர் ஸ்டார்’ அவர். இன்று அவரை எவரேனும் நினைவுகூர்கிறார்களா என்றே ஐயமாக இருக்கிறது .தமிழில் எவரும் அவர் படங்களைப்பற்றி எழுதி நான் வாசித்ததில்லை. நான் ஓரளவுக்கு மேல் சினிமா ஆர்வம் கொண்டவன் அல்ல. ஆனால் அன்றிருந்த என் இடதுசாரி நண்பர்கள் கிழக்குஐரோப்பியப் படங்கள் மேல் வெறிகொண்டிருந்தனர். உலகசினிமாவில் ஒரு பெருந்திரள் அவை. ஆனால் அப்படியே அவை காலத்தில் மறைந்து வெறும் வரலாற்றுப்புள்ளிகளாக எஞ்சுகின்றன. அப்படங்கள் எல்லாமே தீவிரமான அரசியல் உள்ளடக்கம் கொண்டவை, கூடவே நேரடியான களச்ச்செயல்பாட்டு நோக்கம் கொண்டவை. அவற்றின் வரலாற்றுப் பங்களிப்பு முடிந்ததுமே அவை மறைந்துவிட்டன..
காலத்தை கடந்து வந்து சேர்ந்திருக்கும் அரசியல் படங்கள் வேறு வகையானவை அவை அரசியலையும் கூடவே தத்துவத்தையும் தொட்டுப்பேசக்கூடியவை. அரசியல் சிக்கல்களுக்கு அப்பாற்பட்டு மானுடஇக்கட்டுகளையும் ஆன்மிக உச்சங்களையும் பேசுபவை. அத்தகைய படங்களுக்குச் சிறந்த உதாரணமாக தர்கோவ்ஸ்கியின் படங்களைச் சொல்லலாம்.
இன்னொரு உதாரணம் என என் உள்ளத்தில் உடனடியாகத் தோன்றுவது Francesco Rosi இயக்கிய Christ Stopped at Eboli என்னும் படம். Carlo Levi எழுதிய அதே பேரிலான சுயசரிதை அக்காலத்தில் புகழ்பெற்றது. அந்தப்படம் எண்பதுகளில் கேரளத்தில் ஓர் சிறிய அலையை உருவாக்கியது. அது ஒடுக்கப்பட்ட நக்சலைட் இயக்கத்தின் நினைவுகள் ஒலித்துக்கொண்டிருந்த காலம். ஆனால் இன்று அப்படம் மேலும் உயிர்ப்புடன் உள்ளது. அதிலுள்ள ஃபாஸிஸ எதிர்ப்பு அரசியலால் அல்ல. சலிப்பு என்பது எப்படி மாபெரும் ஒடுக்குமுறைக்கருவியாக ஆகக்கூடும் என்பதைக் காட்டும் சினிமா அது.
இந்த வகைமையில் போலி அரசியல்படம் என்று ஒன்று உண்டு அரசியல் படங்களின் அதே அழகியலை, அதே கருத்தியல் வெளிப்பாட்டு முறையையும் நகல் செய்து ஏகாதிபத்தியத்தாலோ சர்வாதிகாரத்தாலோ எடுக்கப்படும் படங்கள் அவை. சரியாக உதாரணம் சொன்னால் மிகையில் கலடஸோவ் [ Mikhail Kalatozov] இயக்கிய .ஐயாம் கூபா படத்தை சொல்வேன் மிகுந்த பொருட்செலவில் சோவியத் ரஷ்யாவால் எடுக்கப்பட்ட அந்த படம் கியுபப் புரட்சிக்கான அறைகூவல். மிகச்சிறந்த திரைத்தொழில்நுட்பம் கொண்டது. இன்று சினிமாக்களில் பரவலாகிவிட்ட ஆள்கூட்டங்களை, இண்டு இடுக்குகளைக் காட்டும் காமிரா நகர்வுகள், பரோக் பாணி ஓவியங்களை நினைவுறுத்தும் காட்சிச் சட்டகங்கள் என அது அன்று உள்ளத்தை பிரமிக்கச் செய்யும் படமாக இருந்தது. கேரளத்தில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியால் பரவலாகக் கொண்டுசெல்லப்பட்டது அது.ஆனால் ஒரு ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட பிரச்சாரப்படம் அது.
அரசியல் எப்போதுமே வலுவான தரப்புகளாக திரண்டிருக்கிறது. பிரம்மாண்டமான பிரச்சார அமைப்பை கொண்டிருக்கிறது. நமக்கு சுற்றும் பேரொலியுடன் எழுகிறது ஆகவே அதில் சரியான படம் எது போலிப்படம் என்று கண்டுபிடிப்பதே மிகக்கடினம். ஐம்பதாண்டுகளுக்கு பின் இன்றிருந்து அது போலியான புரட்சிப்படம் என்று சொல்லலாம். ஆனால் அது வெளிவந்த நாட்களில் உண்மையிலேயே அதற்கும் மைக்கேல் ஏஞ்சலோ அன்டோனியோனியின் படங்களுக்குமான வேறுபாடை புரிந்துகொள்வதும் சரி, மிகச்சிறிய ஒரு அவையில் அதை விளக்குவதும் சரி, மிகக்கடினமானது. முப்பது ஆண்டுகளுக்கு முன் மலையாளத்திரைவிமர்சகராகிய சானந்தராஜ் அந்த விளக்கத்தை அளிப்பதற்கு ஒரு மேடையில் முயன்று சிறுமைப்பட்டு முகம் சுருங்கி இறங்கி, நான் உட்பட்ட இடதுசாரிகளின் வசைகளைக் கேட்டு கண்ணீர் மல்க நின்றுகொண்டிருந்ததை நினைவு கூர்கிறேன்.
அன்று கூட மூன்றாவது வகையான படங்களை அரசியல் படங்களென நாங்கள் எண்ணியதே இல்லை. அவை அரசியலை வணிகக் கேளிக்கைக்கு பயன்படுத்திக்கொள்ளும் படங்கள் என்றே எண்ணினோம். அவற்றுக்கு எதிர்மறைப் பங்களிப்பு உண்டென்பது எங்கள் எண்ணம். மெய்யான அரசியல் படங்களை மக்களிடம் சென்று சேராமல் அவை தடுத்துவிடுகின்றன என்று கருதினோம். அவற்றை மூர்க்கமாக எதிர்த்து தோற்கடித்து மக்களிடம் உண்மையான படங்களைப்பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதே செய்யவேண்டியது என்று கருதினோம் . எண்பதுகளின் திரைப்படச் சங்க முயற்சிகள் அந்நோக்கம் கொண்டவை.
பி.ஏ.பக்கர் போன்றவர்களின் சினிமாக்களை மக்களிடையே கொண்டுசெல்ல முயன்று மக்களிடமிருந்து வந்த ஏளனத்தால் சுருண்டு அமர்ந்திருந்த நண்பர்களை நினைவுகூர்கிறேன். “விடுடா, இந்த நாய்களுக்கெல்லாம் ஐ.வி.சசியின் அங்காடி தான் லாயக்கு’ என ஒருவர் சொன்னார். ஆனால் உண்மை அதுதான், தொழிலாளி என்றால் அதற்காகவே ஒருவன் திமிர் அடையலாம் என்று அங்காடி என்னும் வணிகச் சினிமா தொழிலாளர்களிடையே நிறுவியது. மக்ஸீம் கார்க்கியின் தாய்நாவலின் பல காட்சிகளை மேலும் நாடகத்தனமாக ஆக்கிக்கொண்டது அந்து. அந்தச் சினிமா உருவாக்கிய அரசியலுணர்வை இன்றைக்கு அளவிட்டால் பி.ஏ.பக்கரின் படங்களை ஊமை முயற்சிகள் என்றுதான் சொல்லமுடியும்.
ஊடகங்களையும் அவை உருவாக்கும் பாதிப்புகளையும் பற்றிய மேலதிக ஆய்வுகள் பூக்கோவிலிருந்து டெல்யூஸ்- கத்தாரி வரைக்கும் உருவாகி வந்த பிறகே வணிகசினிமா குறித்த பார்வைகள் மாறுபடத்தொடங்கின. இன்றெழுந்துள்ள அனைத்து குரல்களும் 90களுக்குப்பிறகு தமிழ்ச்சூழலிலும் மலையாளச்சூழலிலும் ஐரோப்பிய ஆய்வாளர்களிடமிருந்து வந்தவை. தமிழ் சிற்றிதழ்ச்சூழலில் வணிகசினிமாக்களை கருத்தியல் செல்வாக்குள்ள ஆக்கங்கள் என்ற கோணத்தில் எழுதத் தொடங்கியவர்களில் தியடோர் பாஸ்கரன் முக்கியமானவர் – அவர் கோயில்பிச்சை என்னும் பெயரில் எழுதினார். அ.ராமசாமியின் ஆய்வுகள் அடுத்தபடியாக. இவை அனைத்தும் ஐரோப்பியக் கோட்பாடுகளிலிருந்து எழுந்த நோக்கு கொண்டவை. திராவிட இயக்கத்தின் போலிமேட்டிமைவாதம், போலி அறிவுஜீவித்தனம் கொண்டு எழுதப்பட்ட எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் பிம்பச்சிறை போன்ற நூல்கள் இந்த ஆய்வுகளுக்கு நேர் எதிரான மனநிலைகொண்டவை.
இன்று வெகுஜன அரசியல் படங்களை பார்க்கும் பார்வை ஓரளவு மேம்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். எந்த வகையிலும் அரசியல் பயிற்சியற்ற, ஊடகத் தேர்ச்சியற்ற, அடிப்படையில் அறிவுச்சலிப்பு கொண்ட பெருந்திரளுக்கு ஒரு அரசியல் கருத்தை எடுத்துச் செல்லும் திரைப்படம் எப்படிப்பட்டதாக இருக்க முடியும்? அவர்கள்தான் அரசியல்படுத்தப்படவேண்டியவர்கள். முற்றிலும் புதிய ஒரு கலைவடிவை அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். .அந்தக் கலை வடிவில் அவர்களுக்குப் பயிற்சியளித்த பிறகுதான் அரசியல் செய்தியை எடுத்துச் செல்லவேண்டுமென்றால் அதை எந்த அரசியலாளனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஏனெனில் ஒரு கலைவடிவில் பயிற்சி என்பது ஒரு தலைமுறைக்கால இடைவெளியின் விளைவாகவே நிகழக்கூடியது. அரசியல் அத்தனை காத்திருக்க முடியாது .மெய்யான அரசியல் அதன் விரைவு காரணமாக இசை காரணமாகவே சாத்தியமான அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்திக்கொண்டு விரியத்தான் வேண்டும்
அப்படியிருக்கையில் அது நாட்டுப்புறகலைகளை, அனுஷ்டான கலைகளை வணிக கலைகளை,அரசியல் தன்னுடையதாக ஆக்கிக்கொள்வதில் பிழையேதும் இல்லை. கேரளத்தில் வணிக நாடகம் , வணிக கதாப்பிரசங்கமென வணிக ஊடகம் வணிக சினிமா ஆகியவற்றை பயன்படுத்திக்கொண்டுதான் இடதுசாரி இயக்கம் தன்னுடைய அரசியல் விரிவாக்கத்தை நிகழ்த்தியது. குறிப்பாக கதாபிரசங்கமெனும் கலைவடிவம் கேரள இடது சாரி அரசியலில் ஆற்றிய பங்கு மிக முக்கியமானது. வர்க்கல ராதாகிருஷ்ணன் கே.சாம்பவசிவன் போன்ற பெரு நட்சத்திரங்கள் அதில் இருந்தார்கள். மிகக்குறைவான செலவில் நிகழ்த்தப்படும் ஒரு கலை ஒரு தபலா மற்ற ஆர்மோனியத்தோடுவரும் ஒருவர் மக்களை நோக்கி நேரடியாக கதை சொல்கிறார். கதையை நடிக்கிறார். ஒரு நபர் நடிப்பும் கதை சொல்லலும் இணைந்த அப்பாணி கேரளம் முழுக்க மிக விரைவிலேயே பிரபலமாயிற்று சாம்பசிவன் போன்றவர்கள் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று செவ்வியல் படைப்புக்ளையும் அறிமுகம் செய்தனர். அன்னா கரினீனாவையும் குற்றமும் தண்டனையும் நான் சாம்பசிவனிடம் தான் முதலில் கதையாகக்கேட்டேன். அப்போது எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
இவ்வாறு ஆலயக்கலைகளை இடதுசாரி இயக்கம் கையில் எடுத்துக்கொண்டதும் கேரளத்தில் நிகழ்ந்தது தெய்யம் எனும் கலைவடிவம் நாட்டார் மரபைச் சார்ந்தது. போரில் இறந்த வீரர்களை தெய்வமாக்கி மானுடர் அவர் வேடத்தை கட்டி முன்வர அவர்களுக்கு பலியும் பூசையும் செய்யும் சடங்கிலிருந்து உருவான கலை அது. மந்தப்பன் தெய்யம் போன்றவர்கள் அடித்தள மக்களிலிருந்து எழுந்துவந்த வீரத்திருவுக்கள். இந்த ஒரு அம்சத்திலிருந்து தொடங்கி மொத்த தெய்யம் கலையும் இடதுசாரிக்கருத்துக்களை ஆதிக்கத்திற்கு எதிரான உணர்வுகளை மக்களிடம் எடுத்துச் சொல்லும் கலை வடிவமாக மாற்றப்பட்டது.
அவ்வாறுதான் வணிக சினிமாவும் கேரளத்தில் இடதுசாரி இயக்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெரும்பாலான கேரள இடதுசாரி திரைப்படங்கள் நவீன நாடகங்களிலிருந்து உருவானவை. நவீன நாடகம் என்பது முற்போக்கான கருத்துக்களை சொல்லும்பொருட்டு அதற்கு முந்தைய வணிக மேடைநாடகத்திலிருந்து உருவானது. 20ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட நாடகம் என்றாலே ‘சங்கீத- சமூகசீர்திருத்த’ நாடகம் என்று விளம்பரம் செய்யும் வழக்கமிருந்தது கேபிஏசி போன்ற நாடக குழுக்கள் உருவாக்கிய வெற்றிகரமான நாடகங்களே பின்னர் திரைவடிவங்களாயின .ஆகவே அவற்றுக்கு நாடகத்தன்மை மிகுந்திருந்தது. திரைப்படத்தின் இலக்கணங்கள் நோக்கி அவை செல்லவில்லை. திரைக்கலை என்றவகையில் அவை மிகப்பின்தங்கியவையே ஆனால் இன்று ஒரு காலகட்டத்தின் குரலாக அவை உள்ளன .இன்று திரும்பி அந்த படங்களைப்பார்க்கையில் அவற்றின் அரசியல் பங்களிப்பென்ன என்பது தெளிவாகவே வரையறுத்துக்கொள்ளக்க்கூடிய ஒன்றாகவே உள்ளது.
சத்யன் போன்ற ஒருவரை எப்படி பொதுமக்கள் கதாநாயகனாக ஏற்றுக்கொண்டார்கள் என்பது இன்று மிக ஆச்சரியகரமான ஒன்று. திக்குறிச்சி சுகுமாரன் நாயர் போன்ற அழகர்கள் கோலோச்சிய திரைப்படத்தில் கரிய, குள்ளமான, அடித்தளச் சாதியை சேர்ந்த ஒருவர் நுழைந்து கதாநாயகனாகலாம் என்னும் நிலை எப்படி உருவானது? அவர் நடித்த கதாபாத்திரங்கள் என்ன என்பது அதற்கான விடை. எளிய ,உழைப்பாளி வர்க்கத்தைச் சேர்ந்த ,கதாநாயகன். வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு துண்டுபீடியை ஆழ இழுத்து புகைவிட்டு திமிருடனும் நிமிர்வுடனும் ஆதிக்கங்களின் முகத்தை நோக்கி அழுத்தமான குரலில் தன் எதிர்ப்பை பேசுவதே அவர் பெரும்பாலும் நடித்த கதாபாத்திரங்கள். அக்கதாபாத்திரங்கள் கே.பி.ஏ.சி நாடகங்களில் இருந்து வந்தவை. அத்தகைய கதாபாத்திரம் ஒன்றை வணிகசினிமாவின் ‘மாதிரிக்கதாநாயகன்’ ஆக கொண்டுவருவது ஒருவகை அரசியல்புரட்சி அல்லவா?
ஒருகட்டத்தில் அது ஒரு மாதிரி கதாபாத்திரம் ஆகியது சோமனும் சுகுமாரனும் ஜெயனும் மம்முட்டியும் மோகன்லாலும் அக்கதாபாத்திரத்தை தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தார்கள் ஆனால் அக்கதாபாத்திரம் உருவாகி வந்தது ஒரு மாபெரும் அரசியல் விழிப்புணர்வின் பகுதியென்று நான் நினைக்கிறேன். இன்றுவரை கேரளத்தின் உழைப்பாளர்களிடம் உள்ள உடல்மொழி என்பது சத்யனுடையது. உளநிலை அந்த சினிமாக்களால் உருவாக்கப்பட்டது. கதாநாயகன் என்பவன் மேலிருந்து கீழிறங்கி வருபவன் அல்ல, தேவதூதன் அல்ல, அசாதாரணமான கல்வியோ ஆற்றலோ கொண்டவன் அல்ல, நம்மில் ஒருவன் விழிப்பு பெற்ற நானே என்று அடித்தள மக்கள் உணர்வது அப்படங்களின் வழியாகவே. அந்தப்படங்களை அரசியல்படங்கள் என்றல்லாமம் எப்படி வரையறுக்கமுடியும்?
இதே கண்ணோட்டத்துடன் தமிழில் பார்க்கும்போது இத்தகைய அரசியல் செல்வாக்கை உருவாக்கியத் திரைப்படங்கள் இல்லை என்பது உண்மை ஏனெனில் தமிழ்த்திரையில் இடதுசாரிகளின் தாக்கம் மிகக்குறைவு. அடித்தள மக்களின் ஒரு கதாநாயகன் என்பது இடதுசாரி உருவாக்கிய கனவென்றால் அடித்தள மக்களை நோக்கி இரக்கத்துடன் மேலிருந்து இறங்கும் கதாநாயகன் என்பதுதான் இங்கு திராவிட இயக்கம் உருவாக்கிய உருவகம். எம்.ஜி.ஆர் அதன் முகம். பெரும்பாலும் அவர் பெரிய முதலாளி. தொடக்கத்திலேயே மக்களால் கொண்டாடப்படுபவர். அல்லது தொழிலாளராக இருந்தாலும் அசாதாரணமான திறமை கொண்டவர், அழகர், மக்களில் ஒருவராக எழுந்து நீதிகேட்பவர் அல்ல. மக்களுக்கு நீதிவழங்குபவர். உழைப்பாளிகளில் அவர் ஒருவராக இருந்தாலும் கூட அவர் அவர்களில் ஒருவர் அல்ல. அவர்களே அவரை தங்களில் நிகழ்ந்த ஒரு அற்புதம் என்று நினைப்பார்கள். மக்களிடமிருந்து வெகுவாக விலகி உயர நின்று ஒரு தேவதூதனின் பரிவுடன் மக்களிடம் அணுகி கனிந்து இரங்கி அவர்களுக்கு கைதூக்கி விடுபவர் அவர் .சுமை தூக்கி தொழிலாளி ஒருவர் முதலாளியால் அடிக்கப்பட்டு தூக்கி வீசப்படும்போது எம் ஜி ஆரின் கைவந்து அவரைப்பற்றிதூக்கும் ஒரு காட்சி திரையில் தோன்ற திரையரங்கில் மக்கள் எழுந்து கூச்சலிட்டு கொண்டாடுவதை நான் பார்த்திருக்கிறேன்.
பொதுநோக்கில் ஒரு அசட்டு அரசியலை முன்வைப்பது என்று அதை சொல்லலாம். அல்லது அரசியலை எம்.ஜி.ஆரின் பிரபலத்திற்கு பயன்படுத்திக்கொள்வது என்று தோன்றலாம் .ஆனால் ஒட்டுமொத்தமாக இத்திரைப்படங்கள் தமிழகத்துக்கு அளித்த பங்களிப்பென்ன என்பதை மிக விரிந்த பார்வையில் தான் அணுக வேண்டும். அதைச் செய்ய வேண்டியவர்கள் ஆய்வாளர்கள். உடனடிப்பார்வை எனக்குத் தோன்றுவது இந்தியச் சுதந்திரத்திற்கு பிறகு உருவான மனநிலை மாற்றத்தை அவை விரைவுபடுத்தின என்பதுதான். இந்தியச் சுதந்திரபோராட்டத்தின்போது தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் எதுவும் நிகழவில்லை என்பதுதான் உண்மை. திருநெல்வேலிக் கிளர்ச்சி மிக விரைவில் அடக்கப்பட்டுவிட்டபின் ஆங்காங்கேநிகழ்ந்த காந்தியப் போராட்டங்கள் மட்டுமே தமிழகத்தின் பங்களிப்பாக இருந்தது அதுவும் நேரடியாக வெள்ளையர் ஆட்சி நிகழ்ந்த பகுதிகளில் மட்டுமே. மன்னராட்சியும் ஜமீன்தார் ஆட்சியும் நிகழ்ந்த இடங்களில் மன்னராட்சிக்கான மனநிலைகளும் அரச வழிபாட்டு மனநிலையுமே நீடித்தது. ஆகவே தான் காங்கிரஸ் வாய்ப்புள்ளவர்களுக்கு வாய்ப்பு என்னும் கோஷத்துடன் அந்தந்த பகுதிகளில் மக்கள் செல்வாக்கு உள்ளவர்களை காங்கிரசுக்குள் இழுத்து நிறுத்தி வைத்த போது மன்னர்களும் நிலப்பிரபுக்களும் காங்கிரசில் நுழைந்து தேர்தலில் வெற்றி பெற்றார்கள். அன்று வரை நீடித்திருந்த நிலப்பிரபுத்துவ ஆதிக்கதிற்கு எதிரான சாமானிய மக்களின் கோபம் திரளவும் ,அதற்கெதிரான அடிப்படைப் படிமங்கள் உருவாகிவரவும் எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் உதவின என்று சொல்லலாம். அன்று நிகழ்ந்திருக்கும் வெவ்வேறு வகையான சுரண்டல்களை திரையில் காட்டி பிறிதொரு சமூகம் அமைப்பு உருவாவதற்கான ஆசையைமக்களிடம் அந்த சினிமாக்கள் உருவாக்கின என்று ஊகிக்கலாம்.
அதேசமயம் இவை நேரடியாக இங்குள்ள யதார்த்தம் நோக்கி வரவில்லை. மாறாக ஒருவகை போலியதார்த்ததை உருவாக்கி அவற்றுக்குள் அவை தீர்வுகளை முன்வைத்தன. இன்றுவரை இதுதான் இங்குள்ள உண்மை. இங்கே கிராமங்களில் உள்ள சாதிய ஆதிக்கத்தைப்பற்றி அவை பேசவில்லை. வில்லன் என ஒருவனை உருவகித்தாலே அவன் சொல்லும், செய்யும் அனைத்துத் தீமைகளும் அவனுடைய கெட்டகுணம் என ஆகிவிடுகின்றன. நான் பலமுறை சினிமாவில் கெட்டவன் அல்லாத, ஆனால் இங்குள்ள சமூகத்தீமை ஒன்றை பிரதிநிதித்துவம் செய்யும் எதிர்மறைக் கதாபாத்திரத்தை உருவாக்க முயன்றிருக்கிறேன். வணிகசினிமாவின் விவாதங்களில் அது உடனடியாக மறுக்கப்பட்டுவிடும். இவ்வாறு நூற்றுக்கணக்கான சமரசங்கள் வழியாகவே சினிமா இங்கே செயல்படுகிறது.
வெகுஜன சினிமா இவ்வாறு தான் இயங்க முடியும். அவ்வாறன்றி வேறுவகையான சினிமா உருவாகியிருக்கலாமா என்று கேட்டால் அதற்கான வாய்ப்புகள் உண்டுதான். ஆனால் இங்குள்ள வரலாற்றுச்சூழலில் இப்படி உருவானது என்பதே யதார்த்தம். அதன் ஊற்றுமுகங்கள் என்ன ,சூழல் என்ன என்பதே நாம் ஆராயவேண்டியது. அதற்கு சினிமா எப்படி இயங்குவதென்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். சினிமா எப்போதுமே எதிர்வினையின் அடிப்படையில் தன்னை தகவமைத்துக்கொள்கிறது. எம்.ஜி.ஆர் நடித்த ஒரு படத்தில் அவர் இறந்து போனால் அந்தப்படம் முழுத்தோல்வி அடையும்போது மறுபடியும் அவர் படங்களில் இறப்பது வாய்ப்பில்லை. எம்.ஜி.ஆர் அழுதுபுலம்பினால் அந்தப்படம் ஓடாதென்றால் மறுபடியும் எந்தப்படத்திலும் அவர் கண்ணீர் விடுவதில்லை. அவருடைய படங்களில் தோல்வி சோர்வு ஆகிய உணர்வுகள் இல்லாமல் இருப்பதற்கு காரணம் அன்றைய அவருடையரசிகர்களான பெருந்திரள் மக்கள் தங்கள் நாயகன் தோற்பதை விரும்பவில்லை. அவை பகற்கனவில் நடப்பதாக எண்ணலாம் ஆனால் பெரிய இலட்சியங்கள் பகற்கனவுகளில் தான் தோன்றுகின்றன. அவற்றை நோக்கியே மனிதர்கள் உந்தப்படுகிறார்கள்.
புரட்சிகரம் என்ற ஒன்று இவ்வாறு திரிபு பட்டு பலவகையிலும் மாறுபட்டுதான் தமிழகத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பதனால் அது அதன் முக்கியத்துவத்தை எவ்வகையிலும் இழப்பதில்லை .வேறுவகையிலும் நிகழ்ந்திருக்கலாம் என்றால் அது வரலாற்றின் வாய்ப்புகளில் ஒன்றுதான். ஆகவே எம்ஜிஆர் படங்களிலும் சரி, அதற்கு பின்னர் வந்த பெருங்கதாநாயகர்களின் படங்களும் சரி, அரசியல் படங்கள் அல்ல என்று வரையறுக்க வேண்டியதில்லை. அவை வெகுஜனமக்களுக்கான அரசியல் படங்க்ள் என்று சொல்வது பொருத்தமானதாகும். அவை பேசும் அரசியல் வெகுஜனங்களின் ரசனைக்கும் அறிதிறனுக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டது.
மெல்ல அது மாறுவதை நாம் பார்க்கலாம். அப்பழுக்கற்ற பொதுசேவையாளன், மக்களிலிருந்து மேலே நிற்கும் ஒரு கதாநாயகன், லட்சியவாதி கதாநாயகனாக முன்வைக்கப்பட்ட காலத்திலிருந்து ம்க்களில் ஒருவரும் சேரிகளில் பிறந்தவனும் சேரி வாழ்க்கையினுடைய அனைத்து கெட்ட பழக்கங்களும் தீய இயல்புகளும் கொண்டவனும் ஆகிய கதாநாயகன் ரஜினிகாந்த் வழியாக உருவாகி வந்தான். முரட்டுத்தனமான ரஜினிகாந்துக்கும் சத்யனின் கதாபாத்திரத்துக்குமான ஒப்புமை முக்கியமானது. சத்யனின் கதாபாத்திரம் அடித்தள மக்களிலிருந்து எழும் லட்சியவாதி, அரசியல் பிரக்ஞை கொண்டவன். ரஜினிகாந்துடைய கதாபாத்திரம் அடித்தள மக்களிலிருந்து எழுந்தவன், அவர்களில் ஒருவன், ஆனால் லட்சியவாதமோ அரசியல் பிரக்ஞையோ அற்றவன், தனக்கு ஒரு தீங்கு நிகழும்போது மட்டும் சீறி எழுந்து எதிர்வினை ஆற்றக்கூடியவன். சினத்தால் ஆற்றல் பெறுபவன். சத்யனைப் போன்ற ஒரு கதாபாத்திரத்திலிருந்து ரஜினிகாந்தைப்போன்ற ஒரு கதாபாத்திரத்திற்கான இடைவெளி இங்கு நிகழ்ந்த அரசியலை சுட்டுவதேயாகும். இடதுசாரிகளின் தோல்வி, திராவிட இயக்கத்தின் தேக்கநிலை ஆகியவற்றிலிருந்துதான் ரஜினிகாந்த மாதிரியான கதாபாத்திரம் எழுந்து வருகிறது.
இன்னும் நுட்பமான ஒருபார்வை உண்டு சினம் கொண்ட இளைஞன் என்ற ரஜினிகாந்தின் கதாபாத்திரம் தொண்ணூறுகளை ஒட்டி கேலிக்குரியதாகவும் மாறத்தொடங்கியது. அவரே ஒருபடத்தின் முற்பகுதியில் கோமாளியாகவும் பின்னர் சினங்கொண்டவராகவும் நடிக்கிறார் .அல்லது இரட்டைக்கதாபாத்திரங்களில் ஒன்று கோமாளியாக இருக்கிறது. 70களில் 80களில் இருந்த சினம் கொண்ட இளைஞன் எப்படி கேலிக்குரியவனாக மாறினான் என்பது ஒரு முக்கியமான அரசியல் கேள்வி. இதேமாற்றம் அமிதாப் பச்சன் நடித்த கதைமாந்தரிலும் நிகழ்கிறது என்பது ஆச்சரியமானது.
அரசியல் படங்க்ள் என்றால் ’ஏதேனும் அரசியல் உள்ளடக்கம் கொண்டவை, எவ்வகையிலேனும் அரசியல் மாற்றத்திற்கு வழிகோலுபவை’ என்ற விரிவான பொருளில் நாம் எடுத்துக்கொள்வோம் என்றால் தமிழகத்தின் கணிசமான பெருங்கதாநாயகர்களின் படங்கள் ஒருவகை அரசியல் படங்கள்தான். அவற்றின் அரசியல் வெகுஜனங்களுக்கும் அவற்றை உருவாக்கியவர்களுக்கும் இடையில் ஒர் உரையாடலில் இருந்து உருவானது. அவர்கள் கேட்பதே கொடுக்கப்படுகிறது. கொடுக்கப்படுவதில் எது அதிகமாக விரும்பப்படுகிறதோ அது மேலதிகமாக கொடுக்கப்படுகிறது. அதன் விளைவாக கதாநாயகர்கள் உருவாகி எழுகிறார்கள். வெள்ளையான கதாநாயகர்கள் வெற்றி பெற முடியாது என்ற நிலை அப்படித்தான் உருவானது. அந்த அலைநடுவே கருப்பான ஒருவர் எப்படி மையக்கதாபாத்திரத்திற்கு வந்தார் என்ற கேள்வியிலிருந்து அவர் படங்களின் அரசியல் உள்ளடக்கம் என்ன என்ற வினாவிற்கு செல்லலாம். தமிழில் வெளிவந்த அரசியல் படங்கள் மூன்றாம்வகைப்பட்டவை மட்டுமே. முதலிருவகையான படங்களுக்கு இங்கே களமில்லை, ஒருவேளை தேவையும் இல்லாமலிருக்கலாம்.
இவை ஆய்வாளர்களுக்குரிய வினாக்களே ஒழிய என்னுடைய விடைகள் அல்ல பொதுவாக சினிமாக்களை பார்க்கும் ஒருவர் சென்றடையக்கூடிய பொதுவான வினாக்களையே சொன்னேன். உரிய தரவுகளுடனும் அடிப்படையான ஆய்வு முறைமைகளுடனும் இந்த விவாதத்தை முன்னெடுத்தால் அது சரியானதொரு அறிவு உசாவலாக அமையக்கூடும். ஆய்வாளனுக்குரிய இடம் என்பது இவை இவ்வாறு இங்கு ஏன் நிகழ்ந்தன, எவ்வாறு செயல்படுகின்றன என்னும் வினாவை அவன் எழுப்பிக்கொள்ளவேண்டும் என்பது மட்டுமே. அவன் தன்னை அறிவார்ந்த மேல்தட்டில் நிறுத்திக்கொண்டால், தீர்ப்புகளையும் வழிகாட்டல்களையும் அளிக்கத் தொடங்கினால் ஆய்வு குறைபட்டதாகவே ஆகும். வெவ்வேறுவகையில் வகைப்படுத்திக்கொண்டு அரசியல்படங்களின் செயல்பாடுகளை அவனால் அணுக்கமாகப் புரிந்துகொள்ளமுடியும்.
ஜெ