சிறுகதை விவாதம் -கடிதங்கள்

siva kiru

 

அன்புள்ள ஜெ,

 

சிவா கிருஷ்ணமூர்த்தியின் “மறவோம்” குறித்து தாங்கள் எழுதிய பதிவை வாசித்தேன். உண்மையிலேயே மிக நல்ல கதை. இந்தக் கதையை சென்னையின் வாசாகசாலை அமைப்பின் “கதையாடல்” நிகழ்வில் மிக விரிவாகப் பேசினேன் (கதை வெளியான மாதம்). நினைவுகள் எழுகின்றன.

 

 

இப்போது உங்களுடைய “பனி மனிதன்” வாசித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் மற்றைய புனைவுகளில் இருந்து வித்தியாசமாக இருக்கிறது. முழுதும் முடித்து அனுபவம் பகிர்வேன்.

 

 

அன்புடன்,

தீனதயாளன்

 

 

அன்புள்ள ஜெ

 

மறவோம் ஒரு சிறந்த கதை. இருமுறை வாசித்தபின்னர்தான் அதன் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ளமுடிந்தது. ஒரு கொடூரநிகழ்வு நினைவு ஆக மாறும்போதே கொஞ்சம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக ஆகிவிடுகிறது. அதிலுள்ள துன்பம் இன்பமாக ஆகிவிடுகிறது. அதை கதை கவிதையாக ஆக்கும்போது இன்னும் கூட அது இனிமையானதாக ஆகிவிடுகிறது. ஆனால் உண்மையான கொடூரம் வேறு. இந்தக்கதை கவிதைகளிலிருந்து அங்கே செல்லமுடியாது. அந்தக்கொடூரத்தை பலவகையான எடிட்டிங்குகள் செய்துதான் மடித்து ஒடித்துத்தான் கவிதைக்குள் அமைக்கிறார்கள். சிறந்த கதை

 

ஜெயராமன்

 

அன்புள்ள ஜெ

 

மறவோம் ஒரு நல்ல சிறுகதை. போர் [லூகி பிராண்டெல்லோ]வும் நல்ல கதை. இரண்டுமே போர் என்ற வீரகதைக்கும் போர் என்ற உண்மையான யதார்த்ததிற்கும் இடையே உள்ள முரண்பாட்டைச் சொல்கின்றன. இரண்டிலுமே மனிதமனம் கொள்ளும் துயரம் உள்ளது

 

இத்தகைய கதைகளும் கூடவே வாசிப்புகளும் வருவது எவ்வளவு பெரிய பயிற்சி என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். எங்களுக்கெல்லாம் இலக்கியவாசிப்பு பயிற்சி கிடைக்கவே வாய்ப்பில்லை. பேசக்கூட ஆளில்லை. ஒரு கதையை வாசிக்கும்போது ஒரு சித்திரம் கிடைக்கும். அதைப்பற்றி கடிதங்கள் வர வர அக்கதை பெரிதாகிக்கொண்டே செல்லும். அப்படித்தான் வாசிப்புப் பயிற்சியையே அடைந்தேன். தமிழ்நாட்டில் இன்றைக்கு இதற்கு வேறு இடமே இல்லை.

 

அதை வம்புப்பேச்சு மட்டுமே அறிந்த நாலுபேர் நினைத்தால் நிறுத்திவிடலாம் என்பதை நினைத்தால்தான் நெஞ்சு எரிகிறது. அவர்கள் இப்போது வெற்றியைக் கொண்டாடிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் தோற்கடித்தது எங்களைப்போன்ற எளிமையான வாசகர்களை. உங்களுக்கு இதிலே இழப்பு ஏதுமில்லை

 

ராஜ்குமார்

 

 

 

இனிய ஜெயன்,

 

 

மிகுந்த யோசனைக்குப் பிறகே, கிளிக்காலம் தொடங்கி தங்கள் எழுத்தின் வழி பின் தொடர்பவன் என்ற தகுதியில்  இக்கடிதம்.

 

புதிய எழுத்தாளர்களுக்கான தளம் என்பது அவர்களுக்கு கிடைக்கும் வரம்.  அதனை சாத்தியமாக்கியவர் நீங்கள்.. எழுத்து பிரசுரம் ஆவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாய் இருந்தக் காலத்தில் எழுத ஆரம்பித்தவர்கள் இதனை நன்கு அறிவர்.இத்தளம் மீண்டும் துளிர்ப்பதற்கானச் சாத்தியமுண்டா?

 

ஏனெனில் இப்புதியச் சிறுகதைகள், அதற்கான வாசக மற்றும் சக எழுத்தாளர்களின் அபிப்ப்ராயங்களை விட அக்கதைகளைத் தொகுத்து நீங்கள் எழுதும் விமர்சனத்தை இழந்ததையே பேரிழப்பாக நான் கருதுகிறேன்.

 

கீழ்மைகளுக்காய் ,மேன்மைகள் தம்மை முகமூடியிட்டு மறைத்துக் கொள்ளத்தான் வேண்டுமா?

எழுத்தாளன்  like minded  மத்தியில் மட்டும் தான் புழங்க வேண்டுமா?

 

அன்புடன்

 

சந்தானகிருஷ்ணன்.

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–40
அடுத்த கட்டுரைகாந்தி, இளையராஜா