ஒப்பிலக்கியம்

பல்கலை சார்ந்த தமிழ் இலக்கிய ஆய்வுகளின் தொண்ணூறு விழுக்காடு ஒப்பிலக்கிய [Comparative Literature] ஆய்வுகளே. இந்தியா பன்முகப் பண்பாடும் பல மொழிச்சூழலும் கொண்ட ஒரு தேசம் என்பதனால் ஒப்பிலக்கியம் இந்தியாவின் சிந்தனைச் சாராம்சத்தை கண்டறியவும் முன்னெடுக்கவும் மிகவும் உதவியானது என்ற எண்ணம் அறுபதுகளில் மத்திய சாகித்ய அக்காதமியால் முன்வைக்கப்பட்டது. இந்தியப் பல்கலைகளில் ஒப்பிலக்கியத்துக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது

இந்திய இலக்கியங்களை ஒட்டுமொத்தமாக ஆராய்ந்த முன்னோடியாகிய டாக்டர் கெ.எம்.ஜார்ஜ் ஒப்பிலக்கியத்திற்கு இன்றளவும் உதவும் மாபெரும் தொகைநூல்களை உருவாக்கியிருக்கிறார். கோபிசந்த் நாரங்க் இந்திய மொழி இலக்கியங்களைப்பற்றி பல ஒப்பிலக்கிய நூல்களை உருவாக்கியிருக்கிறார்.

இந்தியாவின் முதன்மையான படைப்பாளிகள் அனைவருமே ஒருவரோடொருவர் ஒப்பிடப்பட்டிருக்கிறார்கள். பாரதி வள்ளத்தோள், ஆசான், பாரதி, குவெம்பு வள்ளத்தோள் என பலவகையான ஒப்பீட்டாய்வுகளை நாம் ஆய்வேட்டுத்தொகைகளில் காணலாம். ஆனால் இவற்றில் பொருட்படுத்தத்தக்கவை மிகக் குறைவு என்பதே உண்மை. பெரும்பாலான ஆய்வுகள் இலக்கிய ஆக்கங்களில் வெளிப்படையாகப் பேசப்படும் பொருட்களை மட்டுமே கணக்கில் கொண்டு மேலோட்டமான தகவல் ஒப்புமைகளைச் செய்வதுடன் நின்றுவிட்டன. கெ.எம்.ஜார்ஜின் தொகைநூல்களும் அப்படிப்பட்டவையே

ஏனென்றால் இங்கே ஒப்பிலக்கிய ஆய்வுகளைச் செய்தவர்கள் பல்கலைகழக ஆய்வாளர்கள் என்பதுதான். அவர்களுக்கு இலக்கியம் என்ற துறைமேல் தனி ஈடுபாடோ அதை உணரும் நுண்ணுணர்வோ பொதுவாக இருப்பதில்லை. சுந்தர ராமசாமியின் சொற்களில் இவர்களின் ஆய்வுகளை ‘குமாஸ்தாயிசம்’ என்று சொல்லலாம்.  பட்டியல்போடுதல், அவ்வளவுதான்

ஆனால் உண்மையில் ஒப்பிலக்கியம் உலக அளவில் மிகமுக்கியமான ஆய்வுக்கருவியாக இன்றும் உள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டில் உலக இலக்கியங்கள் ஐரோப்பிய மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட காலம் முதல் இது ஆரம்பித்தது. கிழக்கின் இலக்கியங்களும் மேலை இலக்கியங்களும் அக்காலத்திலேயே மிக விரிவான ஒப்பீட்டுக்கு ஆளாகி உள்ளன. அவை பல முக்கியமான கருத்தியல் திறப்புகளுக்குக் காரணமாகி இருக்கின்றன. இன்றும் அந்த ஆய்வு தொடர்கிறது.

படைப்புகளை நாம் அகவயமாகவே அறிகிறோம். அந்த அகவய அறிதலை விமர்சனத்தில் புறவயமாகச் சொல்லவேண்டியிருக்கிறது. அதற்காக இலக்கிய விமர்சனம் பலவகையான வெளிப்பாட்டுக்கருவிகளை உருவாக்கியிருக்கிறது. ஓர் இலக்கிய ஆக்கத்தை இன்னொன்றுடன் , ஓர் இலக்கியச் சூழலை இன்னொன்றுடன் ஒப்பிடுவது அதில் மிக முக்கியமானது. அது இரு ஆக்கங்களிலும் உள்ளுறைந்துள்ள அகவய அம்சங்களை ஒன்றை இன்னொன்றில் பிரதிபலிப்பதன் வழியாக வெளிப்படுத்தக்கூடியது.

உதாரணமாக, தல்ஸ்தோயின் நிதானமே அவரது அழகு என்று சொல்லும்போது தஸ்தயேவ்ஸ்கியின் கட்டற்ற மனப்பாய்ச்சல்களுடன் அதை ஒப்பிட்டுக்காட்டலாம். இது எல்லா திறனாய்வாளர்களும் இயல்பாகவே செய்வது. எல்லா வாசகர்களும் சாதாரணமாகச் செய்துகொண்டிருப்பது. ஆகவே ஒப்பிலக்கிய ஆய்வை ஓர் இயல்பான இலக்கிய ஆய்வுமுறை என்றே சொல்லலாம்.

*

உலக இலக்கியங்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டு இலக்கியத் திறனை நிறுவுதலும் வெளிப்பாட்டமைதியை ஆராய்தலும் தனித்தன்மைகளையும் பொதுக்கூறுகளையும் அடையாளம் காணுதலும் ஆகிய பணிகளை ஆற்றும் இலக்கிய ஆய்வு மரபு.

1892ல் பிரெஞ்சு ஆய்வாளர் ஆபேல் வில்லேமான் (Abel-Francois Villemain) என்பவரால் இந்தச் சொல் உருவாக்கப்பட்டு பயிலப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட உலக இலக்கியங்களை ஒப்பிட்டு ஆராய்வது ஒரு பெரிய அலையாக இருந்தது. அந்த ஆய்வுமுறையை வில்லேமான் இவ்வாறு வரையறை செய்தார்.

இருபதாம் நூற்றாண்டில் மொழிபெயர்ப்புகள் தகவல் தொடர்பு ஊடகங்கள் ஆகியவை பெருகியதன் விளைவாக பெரும்பாலான வாழும் மொழிகளில் பிற உலக மொழிகளில் இருந்து முக்கியப் படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு எல்லா மொழிகளிலும் உலக இலக்கியங்களுக்கு ஒரு மாதிரிக் கட்டுமானம் உருவாயிற்று.  இந்த நூல்தொகை உலக இலக்கியம் எனப்பட்டது. ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மொழிகளில் உலக இலக்கியம் பிரம்மாண்டமான அளவில் உருவாகியது. இதன் விளைவாக இவ்வாக்கியங்களை ஒப்பிட்டு ஆராயவும் ஆய்வுமுறை வளர்ச்சியடைந்தது. பெரும்பாலும் இது கல்வித்துறை சார்ந்துதான் நடந்து வருகிறது. ஒப்பிலக்கியம் என்பது பொதுப் பெயராலும் நடைமுறையில் வெவ்வேறு மொழிகளைச் சேர்ந்த படைப்புகளையும் படைப்பாளிகளையும், படைப்புப் போக்குகளையும் ஒப்பிட்டு ஆராய்வதே ஒப்பிலக்கியம் என்று கூறப்படுகிறது.

ஒப்பிலக்கியம் அமெரிக்கக் கல்வித்துறையில் 1950களில் பெரும் ஆர்வத்தை உருவாக்கியது. உலக மொழிகளின் இலக்கியங்களை ஒப்பிட்டு ஆராய்வதன் மூலம் உலகளாவிய இலக்கியப் போக்குகளை மட்டுமல்ல பண்பாட்டுக் கூறுகளையும் உளவியல் கூறுகளையும், சமூகவியல் கூறுகளையும் அடையாளம் காணமுடியும் என்று கண்டடையப்பட்டதும்; இந்தக் கண்டடைதல்களை வணிகம், அரசியல் மேலாதிக்கம் ஆகியவற்றின் கருவிகளாகப் பயன்படுத்தலாம் என்று பெறும் வணிக நிறுவனங்களும் அரசியல் நிறுவனங்களும் உணர்ந்து இவ்வாய்வுகளுக்கு விரிவான நிதியுதவி செய்யத் தலைப்பட்டதும் ஒப்பிலக்கியம் திடீரென்று பெருவளர்ச்சி அடையக் காரணமாயிற்று. ஒப்பிலக்கிய ஆய்வுகள் திரட்டிய தகவல்களில் இருந்தே அடுத்தகட்டத்தில் உலகளாவிய செல்வாக்குப் பெற்ற கலையிலக்கியக் கோட்பாடுகளும் மொழியியல், குறியியல் போன்ற துறைகளின் புதிய வளர்ச்சிப் போக்குகளும் உருவாயின.

இந்தியா பலதரப்பட்ட மக்களும் அவர்களுடைய மாறுபட்ட மொழிகளும் புழங்கும் தேசமாகையால் ஒப்பிலக்கியம் இங்கு மிக முக்கியமான பங்கை ஆற்ற முடியும் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே உணரப்பட்டுவிட்டது. குறைவான மொழிபெயர்ப்புகளும் நூல் வெளியீடுகளும் குறையாக இருந்த அக்காலத்திலேயே பலமொழி அறிஞர்கள் முக்கியமான ஒப்பாய்வுகளை நிகழ்த்தியுள்ளனர். கால்டுவெல் எழுதிய ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூல் தென்னிந்திய மொழிகளின் பொதுவான அடித்தளத்தை வெளிக்கொணர்ந்தது. இப்போக்குகளுக்கு ஊக்கம் ஏற்றியது.

இந்திய விடுதலைக்குப் பிறகு இந்திய மொழிகளுக்கு இடையேயான ஒப்பிலக்கிய ஆய்வுகளுக்கு அரசு ஊக்கம் அளித்தது. பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஒப்பிலக்கியத் திணைக்களங்கள் உருவாக்கப்பட்டன. ஒப்பிலக்கிய ஆய்வு மூலம் இந்திய மொழி இலக்கியங்களுக்குள் உள்ள பொதுக்கூறுகளை கண்டடையவும் அதன்மூலம் இந்திய இலக்கியம் என்ற கருதுகோளை வலுப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

முனைவர் கைலாசபதி ஒப்பியல் இலக்கியம் என்ற நூலை 1969ல் எழுதினார். இன்றும் தமிழ் ஒப்பியல் ஆய்வுக்கு இதுவே வழிகாட்டி நூலாகும். ‘ ஒப்பியல் ஆய்வின் மூலமாகவே ஒரு பொருளின் தனிப்பண்புகளை திடமாகக் கூறமுடியும். ஒற்றுமைகளுக்கு மத்தியிலும் நுண்ணிய வேறுபாடுகள் காணப்படும். அவற்றினை ஆதாரமாகக் கொண்டே ஒரு பொருளின் தனிச்சிறப்பினை அறிதல்கூடும். அதாவது இரு இலக்கியங்களை ஒப்பிடும்போது அவற்றின் பொதுப்பண்புகள் யாவை சிறப்புப் பண்புகள் யாவை என்பது தெளிவாகிறது. இத்தெளிவு வரலாற்றடிப்படையிலான இலக்கிய ஆரய்ச்சிக்கு ஏதுவாக அமைகிறது’ என்கிறார் கைலாசபதி

ஆனால் ஒப்பியல் ஆய்வு படைப்பின் உள்ளுறைகளுக்குச் செல்லும் நுண் வாசிப்பாக அமையாது போனால் அது படைப்பை அவமதிப்பதாக ஆகலாம். படைப்பின் மேலோட்டமான அம்சங்களை முன்னிறுத்துவதாக அமையலாம். ஆரம்பகாலத்தில் இருந்தே தமிழில் ஒப்பீட்டாய்வுகள் நிகழ்ந்துள்ளன. வவெசு அய்யர் கம்பனையும் ஷேக்ஸ்பியரையும் ஒப்பிட்டிருக்கிறார். ஆனால் வ.ரா போன்றவர்கள் ‘மானாங்காணியாக’ ஒப்பிடப்போக கடுப்பான புதுமைப்பித்தன் இவ்வாறு எழுதினார்

ஏன் அது மேல்நாட்டுடன் ஒப்பிடவேண்டிய காரியமோ தெரியவில்லை. நம்மூர் நாயர் ஓட்டல் இட்லியையும் பரமசிவம்பிள்ளை ஓட்டல் தோசையையும் ஹட்ஸின் பாமர்ஸ் பிஸ்கோத்துடன் ஒப்பிட்டு எளிவரும் கருத்துக்களைக் காணப்பெறும் பாக்கியம் எனக்கு இதுவரை சித்திக்கவில்லை’

தமிழில் டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘கம்பனும் மில்டனும் – ஒரு புதியபார்வை [1978]’ ஒப்பிலக்கிய ஆய்வுகளில் ஒரு பேரிலக்கியம் என்று கருதப்படுகிறது. [மீனாட்சி புத்தக நிலையம்]

 

 

முதற்பிரசுரம் Dec 15, 2010 மறுபிரசுரம்

முந்தைய கட்டுரைலாரிபேக்கர் – வாழ்க்கைப்படம்
அடுத்த கட்டுரைஜிப்மர்தினங்கள் -கடலூர் சீனு