ஞாநி,முகநூல் -கடிதங்கள்

 

gnani

அன்புள்ள ஜெ..

 

ஞாநி என்றால் அன்பு… அவர் வீடு என்பது ஒரு வேடந்தாங்கல்… அவரது வாழ்க்கை என்பது சமரசமற்ற நேர்மையான கறாரான பார்வை கொண்டது..உங்கள் அஞ்சலிக் கட்டுரை அவரது மிகப் பெரிய ரசிகன் என்ற முறையில் எனக்கு நெகிழ்ச்சி அளித்தது..

 

ஏதாவது நிகழச்சி என்றால் தனக்கே உரித்தான கரகர குரலில் கண்டிப்பா வந்துருங்க , என்ன என்பார்..  நான் இருக்கிறேனா என தெரிந்து கொண்டு  எப்ப வேணும்னாலும் வீட்டுக்கு வாங்க என்பார்…  நேரில் மிக நெருக்கமாக பேசுவார்…நான் என்னை அவரது ரசிகன் என நினைத்தாலும் அவர் என்னை மட்டுமல்ல அனைவரையும் நண்பனாக நினைத்தே பேசுவார்.

 

அவரது இந்த அன்பை இணைய மொண்ணைகள் எதிர் கொண்ட விதம் மிகுந்த வருத்தமளிக்க கூடியது..
அவர் யார் அவர் அனுபவம் என்ன என தெரியாமல் அவருடன் பாமரத்தன்மையுடன் வாதிடுவது  அவர் பிறப்பினடிப்பையில் சாதியை சொல்லி திட்டுவது  தேர்தல் தோல்வியை கிண்டல் செய்வது என உரையாடல் சுதந்திரம் என்பதை மோசமாக பயன்படுத்தி இணைய உரையாடலில் ஈடுபடுவதில் பல அனுபவதஸ்தர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தினர்..

 

உங்களைப் போன்ற சாரு நிவேதிதாவைப் போன்ற சிலர் அவருடன் கருத்து மோதலில் ஈடுபடும் போது மட்டுமே அவர் தனக்கு சமமான ஒருவருடன் பேசுகிறார் என்ற ஆறுதல் கிடைக்கும்..மற்றபடி அவர் யாருக்காக உழைத்தாரோ அந்த சமூகம் அவரை புரிந்து கொள்ளவே இல்லை.நல்லவேளையாக அவரை புரிந்து கொண்ட பலரும் அவரைச் சுற்றி எப்போதுமே இருந்தனர்.. அவர் மீதான மரியாதையை எப்போதும் வெளிப்படுத்திக கொண்டே இருந்தனர்

 

அவர் சொத்து குறித்த கேலிகள்  தேர்தல் தோல்வி  இணைய மொண்ணைகளின் தரமற்ற தாக்குதல்கள் போன்ற பல பிரச்சனைகளில் அவரின் சார்பாக நீங்களே முன் வந்து எழுதிய பல கட்டுரைகள் எழுதப்பட்ட காலத்திலேயே ஞாநியின் ரசிகனாக எனக்கு மகிழ்ச்சி அளித்தது… அவர் வாழும்போதே அவரை இன்னும் நன்றாக புரிந்து கொள்ள அந்த கட்டுரைகள் உதவின…

 

 

அன்புடன்
பிச்சை

 

அன்புள்ள பிச்சைக்காரன்,

 

அவர் இதழாளர். ஆகவே சராசரிகளுடன் பேசியாகவேண்டிய இடத்தில் இருந்தார். அவர் புழங்கியாகவேண்டிய உலகம் அது. அந்த உரையாடல்கள் உண்மையில் அவர் எவருடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்னும் தன்னுணர்வை அளித்திருக்குமென நம்புகிறேன். அந்த சராசரிகளுக்குள் பேச்சினூடாக ஒருவராக ஆகும் அபாயமே அதில் பெரிய இடர். அதை அவரால் போதிய அளவுக்குத் தவிர்க்கமுடியவில்லை. அது சமூக ஊடகங்கள் அளிக்கும் சிக்கல்.

 

ஜெ

 

ஜெ ,

 

15 வயதில் இருந்தே ஏதாவது ஒருவிதத்தில் என்னை பாதித்துக்கொண்டே இருந்தவர் ஞாநி,20 வயதில் பின் தொடரும் நிழலின் குரல் வழியாக நீங்கள் எனக்கு அறிமுகமாகவும் ஞாநியே காரணம் ,

 

பலமுறை அவருடன் சண்டையிட்டு -கடுமையாகவே  – விலகியிருக்கிறேன் ,ஆனால் என்றும் அவரை விரும்பாமல் இருக்க முடிந்ததேயில்லை , சிங்கப்பூர் சரண் போல நெருங்கி  என் பிரியத்தை சொன்ன சந்தர்ப்பங்கள் மிகக்குறைவு .

 

நான் பார்த்த அளவில் மிக நிஜமான லட்சியவாதி , தன் வீட்டை விற்க அவர்போட்ட நிபந்தனை, அவற்றை நிறைவேற அவர்பட்ட பாடு இதெல்லாம் அவர் பாதம் பணிந்து  வணங்க வைத்தவை .

 

ஆனால்

 

இறுதியாக அவர் விட்டுச்சென்றது என்ன ஜெ ? வசைகளும் வெறுப்பும் மட்டுமா ? அவரது லட்சியவாதம் அவரை எந்த பாஸிடிவையும் பார்க்க இயலாத , கண்ணைக்கட்டி திரிந்தவராகத்தானே மாற்றியது ?

 

இன்றைய பேஸ்புக் உலகம் பல ‘லட்சியவாதத்தை நடிக்கும்’  நடிகர்களை  உருவாக்கியுள்ளது , ஆனால் நிஜமாகவே உயரிய லட்சியத்தால் உந்தப்பட்டு – ஆனால் அதை வெறுப்பின் மொழியில் வைக்கும் பலபேருக்கு ஞாநி ஒரு  முன்னுதாரணம்.

அரங்கா

 

 

அன்புள்ள அரங்கா,

 

இது உண்மையிலேயே பெரிய சவால். இன்றைய சூழல் எதிர்மறைக்குரல்களையே கவனிக்கிறது. அதை நோக்கியே எதிர்வினையாற்றுகிறது. நண்பர் ஒருவர் சொன்னார், பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் கணிப்பொறியின் மூலையில் முகநூல் பக்கம் அல்லது பாலியல் பக்கம் ஒன்றைத் திறந்து வைத்திருக்கிறார்கள் என. 20 நிமிட மூளையுழைப்பின் சலிப்பைத் தீர்க்க அங்கே ஐந்துநிமிடம் செலவிட்டுத் திரும்புகிறார்கள். ஒருவகையான மூளைத்தூண்டி. அதற்கு உகந்தது வசைகள், வெறுப்புரைகள், எதிர்மறைக்கூற்றுக்கள். அதிக நீளமில்லாதவை, கூர்மையானவை. கிண்டல்கள் அடுத்தபடியாக.

 

இந்தத்தேவையை நிறைவேற்றுபவர்களாகச் சிந்தனையாளர்களும், செயல்பாட்டாளர்களும் ஆகிவிடக்கூடாது. ஆனால் இணைய ஊடகத்தில் வாசக எண்ணிக்கை கிடைக்கவேண்டும் என்றால் வேறுவழி இல்லை. அர்த்தமும் ஆழமும் உள்ளவற்றுக்கு அவற்றில் ஐம்பதில் , நூறில் ஒரு பங்குகூட வாசகர்கள் அமைவதில்லை. இந்தப்பொறியில் சிக்கிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

 

எனக்கே இந்த அபாயம் உண்டு. என் தளத்திலுள்ள கட்டுரைகளில் 99 சதவீதம் கட்டுரைகள் நீண்டவை, அமர்ந்து வாசிக்கவேண்டியவை, யோசித்து தெளியவேண்டியவை. தொடர்ந்து சுருக்கமாக, சீண்டும் விதத்தில் எழுதும்படி எனக்குக் கடிதங்களில் கோரிக்கைகள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றை காணும்தோறும் எச்சரிக்கை அடைந்து மீண்டும் ஆர அமர எழுதுகிறேன். அதற்கான வாசகர்கள் உள்ளனர். அவர்கள் போதும் என்பது என் முடிவு.

 

அவ்வப்போது கட்டுரைகளில் ஒருவரி இரண்டுவரிச் செய்திகளை இணையவெளியில் உடைத்துப்போட்டு வம்புகளை உருவாக்குகிறார்கள். அவற்றுக்கும் விரிவான எதிர்வினைகளையே அளிக்கிறேன்.அவ்வப்போது நானே கருத்துக்களில், விமர்சனங்களில்  மிகையான தீவிரத்தை வெளிப்படுத்திவிடுகிறேன்.  எந்த விவாதமும் ஒரு வசைபாடலாக முடியாமல் ஒரு நீண்ட அறிவார்ந்த அலசலில் முடியும்படி செய்கிறேன். இது இச்சூழலை நான் எதிர்கொள்ளும் வழி

 

ஜெ

முந்தைய கட்டுரைபுதுச்சேரி,கடலூர் கூடுகை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைசென்னை,பாண்டிச்சேரி,கடலூர், கோவை -முகங்களின் அலை