மறவோம்- கடிதம்

siva kiru

மறவாமை என்னும் போர்

 

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

 

இந்த வாரம் மகிழ்ச்சியும் சோர்வுமாக சென்றது. சிறுகதை விவாதம் மகிழ்ச்சியும் உற்சாகமும் தந்தது; பாதியில் நின்றது சோர்வளித்தது.

 

இன்று காலை தளத்தில் வாசித்த ‘’மறவாதே’’ சிறுகதை சோர்வை தூர ஓடச் செய்தது. திரு. சிவா கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 

ஒரு முழு நூற்றாண்டை சிறுகதைக்கான பின்புலமாகக் கொண்டு மனிதர்கள் குறித்தும் மனித வாழ்க்கை குறித்தும் வாழ்க்கையின் பிரும்மாண்டம் முன் மனிதன் தூசி என நிற்கும் தருணங்கள் குறித்தும் தீவிரமான கேள்விகளை எழுப்பக்கூடிய கதை. ’’குருதிச்சாரல்’’ போர் உருவாகும் சூழலைக் காட்டி வரும் தருணத்தில் ‘’மறவாதே’’ வாசிப்பில் அது பல தருணங்களைத் துலக்கமாக்கி உதவியது.

 

இருபதாம் நூற்றாண்டில் மக்களும் இதழ்களும் போர்களைக் கொண்டாடுகின்றன. புகைப்படங்கள், இதழியல் செய்திகள், கவிதைகளின் மூலம் போர் மனநிலையை யூகிக்க முயல்கின்றனர். எந்த பொருளும் இல்லை என்ற உண்மையின் மீதே எந்த பொருளும் இல்லையென்றாலும் அநேகமாக எல்லாரும் விரும்புகின்றனர் என்ற உண்மையும் அமர்ந்திருக்கிறது. நிஜத்தையும் நிழலையும் போல.

 

பிரிவு, வலி, துயரம்,மரணம் அனைத்தும் நிகழ்வது மகத்தான ஒன்றுக்காக என நம்ப வைக்கப்படுகின்றனர். நம்புபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதே பரப்புரையை இன்னும் தீவிரமாக்குகிறது.

 

போர் வீரர்கள் இயற்கையை அவதானிப்பதும் வீட்டுக்கு எழுதும் கடிதங்களில் காலநிலையைத் துல்லியமாக வர்ணிப்பதும் நெருக்கடிக்குள்ளாகும் பயிற்றுவிக்கப்பட்ட திரளின் மனம் இயங்கும் சாத்தியத்தின் நூதனமான பகுதிகளை எடுத்துக் காட்டியது.

 

ஆஸ்பர்ன் விரும்பியது என்ன? ஜெர்மன் இளைஞனால் கொல்லாமல் விடப்பட்டதை ஆஸ்பர்ன் எப்படி உணர்ந்தார்? அவன் நேசப் படையால் கைதியாக்கப்பட்ட போது அவன் சாவதை ஆஸ்பர்ன் விரும்பினாரா? அல்லது அவன் சாகாமல் இருப்பதை விரும்பினாரா? அவன் கொல்லப்பட்ட போது என்ன நினைத்திருப்பான்?

 

ஆஸ்பர்ன் மறவாதது எதை? இளைஞன் மறவாதது எதை?

 

ஆஸ்பர்னின் இன்னொரு வடிவம் தான் ஆடமா? ஜெர்மன் இளைஞரின் இன்னொரு வடிவம் தான் இளைஞன் வருணா?

 

பல கேள்விகளையும் அவற்றின் சாத்தியமான பல்வேறு வெவ்வேறு பதில்களையும் சிறுகதை உருவாக்கியது. இக்கதை ஏதோ ஒரு இடத்தில் என் மனதில் பத்ம வியூகத்துடன் இணைந்து கொண்டது. எப்படி என புரியவில்லை.

 

இக்கதையை வாசித்து விட்டு திரு. சிவா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மற்ற சொல்வனம் கட்டுரை இணைப்புகளைப் பார்த்தேன். அதில் கம்பராமாயணம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகளை சொல்வனம் இதழில் வெளியான போதே வாசித்தது நினைவுக்கு வந்தது.

 

’’மறவோம்’’ நினைவை விட்டு அகலாத கதை. மீண்டும் வாழ்த்துக்கள்.

 

அன்புடன்,

பிரபு மயிலாடுதுறை

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–38
அடுத்த கட்டுரைபேலியோ கடிதங்கள்