நாளிதழ்களும் செய்திகளும்

news

 

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

 

வணக்கம்.

 

நீங்கள் அன்றாட நிகழ்வுகளுக்கு உடன் வினையாற்றுவதில்லை என்று தெரிந்தும், நமது பெரும்பாலான ஊடகங்களின் மீதான எனது ஆதங்கத்தை இந்த சுட்டிகளை உங்கள் பார்வைக்கு வைப்பதன் மூலம் ஆற்றி கொள்கிறேன்.

 

பிரபல ஹிந்தி சினிமா நட்சத்திரம்  கரீனா கபூரின் குழந்தை தைமூரின் ‘அரையாடையை’ யார் மாற்றுகிறார்கள்(!),மற்றும் தேசத்துரோக வழக்கில் தண்டிக்கப்பட்டு,தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் மகன் 12 வது வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றதை பற்றிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை(!)  பிரதான செய்திகளாக வெளியிடும்  பிரபல ஊடகங்கள் (தி ஹிந்து உள்பட) மேதகு.அம்பேத்கார் முன்பு லண்டனில்

வசித்த கட்டிடத்தை மஹாராஷ்டிர அரசு விலை கொடுத்து வாங்கி நினைவிடமாக மாற்றி  கடந்த 2015 ஜனவரி – 13 ம் தேதி பிரதமர் மோதி அவர்களால் திறக்கப்பட்ட நினைவிடத்திற்கு இந்த ஆண்டும் சென்று வழிபட்ட மத்திய அமைசர்களை பற்றிய செய்திகளை (ஒரு ஊடகமும்) வெளியிடவில்லை என்று வலது சாரி ஊடகமான “Satya Vijay ‘ தெரிவித்துள்ளது.

 

அது சரிதானா என்று ‘கூகுள் தேடலில்’  பார்த்தபோது ‘Financial Express’ ல் மட்டும் அந்த நிகழ்வு பற்றி ஒரு வரி வந்திருக்கிறது.

 

Kiren Rijiju and Suresh Prabhu: A significant visit that went unreported

Suresh Prabhu, Kiren Rijiju hail Indian diaspora as partners in India’s growth

 

அன்புடன்,

 

அ .சேஷகிரி

 

 

அன்புள்ள சேஷகிரி

 

 

நாளிதழ்களை வாசித்துக் கொந்தளிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் வயதானவராக ஆகிக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். நாளிதழ்கள் உலகமெங்கும் இப்படித்தான். அவை தொடங்கிய காலம் முதலே இருந்துள்ளன.

 

சின்னப்பேச்சு என எங்களூரில் சொல்லப்படும் விஷயங்கள் மீது மனிதர்களுக்கு இருக்கும் ஆர்வம் சாதாரணமான ஒன்று அல்ல. ஏனென்றால் மிகப்பெரும்பாலான மனிதர்கள் மிகச்சிறியவர்கள். உண்மையிலேயே பெரிய விஷயங்கள் மேல் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. ஐயமிருந்தால் ஒரு டீக்கடையில் நின்றுகொண்டு ஒரு சில்லறைச்செய்தியையும் ஒரு சர்வதேச முக்கியத்துவம் உடைய செய்தியையும் பேசிப்பாருங்கள், எதற்குச் செவிசாய்க்கிறார்கள் என்று.

 

விழித்திருக்கும் நேரம் முழுக்க மனிதர்கள் ஒருவரோடொருவர் மிகச்சிறிய விஷயங்களைத்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவற்றுடன் தான் தங்களை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். அவற்றை பேசும்போதே நிறைவடைகிறார்கள். பெரியவிஷயங்கள் அவர்களுக்கு விலக்கத்தை அளிக்கின்றன. மிரள்கிறார்கள், ஏனென்றால் அவை மேலும் சிறியவர்களாக அவர்களை அவர்களுக்கே காட்டுகின்றன.

 

எளிய மக்கள் மிகமிக முக்கியமான செய்திகளைக்கூட நினைவில் வைத்திருப்பதில்லை. சாதாரணமாக ஒருசிலரிடம் சென்ற ஆண்டு அவர்கள் மிகக்கொந்தளிப்பாகப் பேசிய சிலவற்றைப்பற்றி இப்போது பேசிப்பாருங்கள் தோராயமாகவே நினைவிலிருந்து எடுப்பார்கள்.

 

ஆகவேதான் நாளிதழ்கள் உருவானதுமே பெரும்பாலும் மிகச்சிறிய விஷயங்களைப்பற்றி அதிகமாகப்பேச ஆரம்பித்தன. அவை அதற்கு முன்னால் செய்தி ஊடகங்களாக இருந்த சிறுவணிகர்களின் வம்புப்பேச்சின் நீட்சியாக தங்களை அமைத்துக்கொண்டன. செய்தி ஊடகங்கள் மக்களை  திசைதிருப்பவோ சிறுமைசெய்யவோ இல்லை, மக்கள் தொடர்ச்சியாக அவற்றை சிறுமைசெய்கிறார்கள். ஏனென்றால் எல்லா வணிக ஊடகங்களும் மக்களின் எதிர்வினைகள் வழியாக மெல்லமெல்ல உருவாகி வருபவை

 

நிற்க, அப்சல் குருவின் மகன் தந்தையின் வழியிலிருந்து விலகி கல்வியில் ஆர்வம் காட்டுவான் என்றால் அது முக்கியமான செய்தியாகவே எனக்குப்படுகிறது

 

ஜெ

 

 

முந்தைய கட்டுரைஞாநி பற்றி…
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–38