பேலியோ -ஓர் அனுபவக் கடிதம்
பேலியோ
அன்புள்ள ஜெ,
எனக்கு முன்பு எப்போதும் ஒரு விஷயம் உறுத்திக்கொண்டே இருந்தது. வேலைக்குச் சேர்ந்தபின் உடல் சார்ந்த பயிற்சி எதையும் செய்வதில்லை என. ஆனால் வாசிப்பு பழக்கம் தொடர்ந்து இருந்தது. அபுனைவு புனைவு என்று வாசித்துக்கொண்டுதான் இருந்திருக்கிறேன்.
நித்யா அருமையான சமையல்காரி. கல்யாணத்திற்குப் பின் 68 கிலோ மூட்டையில் 85 கிலோவை அடைத்தாள். ஒடுங்கிய கன்னங்கள் பம் என்று ஆனது. வயிறு முட்டியது. பம் இன்னும் பம் ஆனது. இடுப்பைச்சுற்றி பாதுகாப்பு வளையம் உருவானது. நான் மீடியம் பில்ட் உள்ள ஆள். 85 கிலோ என்பது அதிக எடையில்லைதான்.
இருந்தாலும் உடல் தன் சமநிலையை வலுவை மெதுவாக இழக்கிறது என்ற எண்ணம் மட்டும் அவ்வப்போது எழுந்தது. ஏனெனில் நான் என்பதுகளில் வளர்ந்தவன். என்பது தொன்னூறுகளில் சிறுவர்கள் விளையாடிய அத்தனை விளையாட்டுகளையும் விளையாண்டிருப்பேன். கொஞ்சம் மிதமிஞ்சிய அளவுக்கே.
எடை ஒருபுறம் கூடினாலும் அவ்வப்போது ஒரு முடக்கும் எண்ணம் வேறு. நான் இலக்கியம், அறிவியல் என வாசிப்பவன். அறிவாளி. என் பயிற்சி மூளைக்குத்தான். உடலுக்கு என நேரம் ஒதுக்கத்தேவையில்லை. மனம் பயின்றால் போதும். இப்போது யோசிக்கும்போது மிக மிக அபாயகரமான எண்ணம் அது என்று தோன்றுகிறது.
எடையை குறைப்பது என்று ஒரு வருடத்திற்கு முன் முடிவெடுத்தேன். அதன் பின்தான் பண்டோரா பெட்டி திறந்து பல எடைகுறைப்பு பூதங்கள் கண்ணெதிர் தோன்றின.
GM போன்ற கிரேஷ் டயட் எடுத்து 7 நாட்களில் இடையை குறைப்பதா? அல்லது ஜிம்மில் சேர்ந்து எடை குறைந்த உடலில் உள்ளாடையுடன் நின்று ஒருபுற மார்பு தசையை மட்டும் மேலும் கீழும் வேகமாக அசைப்பதா? அல்லது யோகா செய்து எடையையும் மனதையும் பஞ்சு போல ஆக்கி பறப்பதா என்று புரியவில்லை.
வாசிக்கும் வர்க்கத்திற்கு குழப்பங்கள் ஏற்பட்டால் புத்தகம் வாங்கி மேலும் குழம்புவதுதானே தீர்வு! வாங்கினேன். இந்திய வழக்கப்படி அமெரிக்காவில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஓரிரு புத்தகங்கள். பிரபலமான இந்திய டயட்டிசீயன்கள் யார் என்று கண்டுபிடித்து சில புத்தங்கள்கள் வாங்கி வாசித்துப் பார்த்தேன்.
சில விஷயங்களைப் புரிந்துகொண்டேன். நான் எந்த கிரேஷ் டயட்டையும் பின்தொடரப்போவதில்லை. பேலியோ டயட் போன்று இதுவரை நான் உண்ட உணவுகளை வெளித்தள்ளும் எந்த உணவுமுறையையும் மேற்கொள்ளப்போவதில்லை. காரணம் நீங்களும் அ.முத்துலிங்கம் அவர்களும் சொன்ன அவதானிப்புதான்.
மேலும் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மேலை நாடுகளில் Superfood என்று எதையாவது அறிமுகம் செய்கிறார்கள். அதன்பின் அது இங்கும் வணிகமயமாக்கப்படுகிறது. பின் நாம் அதன்பின் ஓட ஆரம்பிக்கிறோம்.
சாமானியர்களுக்கான பொதுவான விதி ஒன்றுதான். நாம் பழகிய உணவை தள்ளிவிட்டு நாம் திடீரென்று மேற்கொள்ளும் உணவுமுறை அனைத்தும் பெரும் தண்டனைகளே. பின்பு நாம் பழகிய உணவை கனவிலும் கற்பனையிலும் உண்டுகொண்டேதான் இருப்போம். எப்போதாவது ஊஞ்சல் ஆடி நிற்கும் போது வெறி எடுத்தது போல் நமக்கு பிடிக்கும் உணவை அதிகமாகவே உண்போம். மீண்டும் எடை வட்டியுடன் திரும்ப ஏறும்.
இனிய காலையில் தோசையும் தக்காளி சட்னியும் ருசித்த நாக்கு ஓட்ஸ் கஞ்சி என்ற depressing ஆன ஒன்றை ஏற்றுக்கொள்ளுமா? ஏற்றுக்கொண்டாலும் எவ்வளவு நாள்?
ஆக நான் என் உடலுடன் செய்துகொண்ட உடன்பாடு ஒன்றே ஒன்றுதான். அருகில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் கடந்த வருடம் சேர்ந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். ஒரு மூன்று மாத இடைவெளி. பின் ஊஞ்சல் ஆட ஆரம்பித்துவிட்டது. ஊஞ்சலை ஆட்டுவிக்கும் மாயக்கரங்களை நம்பித்தானே தினமும் கண்விழிக்கிறோம்.
அன்புடன்,
ராஜா.
இனிய ஜெயம் ,
எனது கொந்தளிப்பு காலங்களில் என் உடலை வைத்து வித விதமான சோதனைகளில் ஈடுபட்டிருக்கிறேன் . [ ஒரு முறை நான்கு நாட்கள் எச்சில் கூட விழுங்காமல் ,இந்த குடலுக்குள் எதையுமே அனுப்பாமல் ,அதை காலி செய்து , உடல் முழுமையும் தேவையில் தவிக்க தவிக்க , நா முனையில் தேன் தடவி ,உடலில் எங்கெங்கு ரசாயனங்கள் ஊறும் என்பதை அவதானித்தேன்] . இப்படி பல கோரஷ்டை சோதனைகள் வழியே என் ஆழம் அறிந்த உண்மை ஒன்று உண்டு .
இந்த உடல் ஒரு இயந்திரம் .
அந்த இயந்திரத்தை குறித்து, அதன் ஆற்றல்கள் ,எல்லைகள் குறித்து நாம் அறிந்து வைத்திருப்பதெல்லாம் ஐம்பது சதவீதத்துக்கும் குறைவே .
இந்த உடல் ,இங்கே தங்கி வாழும் வகையில் , ”தகவமைத்து” கொள்ள வந்தது . அரோக்கியம் அதற்க்கு இரண்டாம் பட்சமே . இங்கே நாம் ஆரோக்கிய குறை என
மதிப்பிடும் பல விஷயங்கள் ,அந்த குறிப்பிட்ட உடல் இங்கே ”தகவமைந்திருக்கும் ” நிலை ஒன்றின் வெளிப்பாடே .
அடுத்து மரபணு . நமது ஏழாவது முப்பாட்டனார் பெயரை நாம் அறிய மாட்டோம் .ஆனால் அவரது குண்டான உடலை நாமும் கொண்டிருப்போம் .
இந்த இரண்டையும் உணவை மாற்றுவதன் வழியே மாற்றிவிட முடியாது . நிற்க .
பேலியோ மேற்கொள்வோர் பக்கத்திலிருக்கும் பிழை என்ன ? உண்மையில் பலருக்கு ,உடலுழைப்பு நல்கவோ ,இரண்டு மணி நேரம் ஓடி ஆடி விளையாடவோ , ஒரு மணி நேரம் நீந்தித் திளைக்கவோ நேரம் இல்லை . குளிர்பதன அரை ,குளிர் பதன வாகனங்கள் ,கணிப்பொறி முன் இருபது மணி நேர வேலை ,இரண்டு மணி நேர உறக்கம் , தொழில் தொடர்புகளின் சந்திப்பு அளிக்கும் வெட்டித் தீவனம் . இவை உருவாக்கிய உடல் வீக்கத்தை , இந்த முறையைக்கொண்டு மீண்டு வர முயலும் ஒரு சாரர் .
இவர்கள் அறியாதது உணவு முறை நெறி என்பது தனிப்பட்ட நெறி அல்ல .ஒரு நாளின் அன்றாடம் அத்தனையும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் ,நெறியில் நிற்க வேண்டும் .அதன் ஒரு பகுதியாகவே உணவு நெறியும் அமைய முடியும் . இந்த முழுமை நெறி இல்லாவிட்டால் பிரதி திங்கள் மட்டுமே பேலியோ மேற்கொள்ள இயலும் .
இரண்டாம் சாரர் ஆரோக்கியம் நோக்கி மேற்கொள்வோர் . அவர்கள் அறியாதது அவர்களின் உடல் எடை அவர்களின் சிக்கல் அல்ல . அந்த உடலை அவர்களால் ”கையாள ”முடியவில்லை என்பதே அவர்களின் சிக்கல் .
ஹாங் காங் நடிகர் சாமோ ஹாங் அன்றும் .இன்றும் அதிக எடை கொண்டவரே . ஆனால் அவரால் மிக இலகுவாக [இந்த முதிய வயதிலும் ] அவரது உடலை கையாள முடிகிறது . அவரை போன்றவர் உணவு முறை குறித்து அஞ்ச வேண்டியது இல்லை .ஆக முதல் தேவை இந்த உடலை கையாளும் லாவகம் .இரண்டாவதே உணவு முறை . லாரலாக உங்களால் சமாளிக்க முடியா விட்டால் ஹார்டியாக மட்டும் சமாளித்து விட முடியுமா என்ன ?
பேலியோவை பரிந்துரைப்போர் செய்யும் பிழை என்ன ?
இந்த உடலை ,அது இயங்கும் முறையை , அதன் உள்ளே சுரக்கும் அமிலக் கணக்குகளை , ஒன் ப்ளஸ் ஒன் டூ அம்புடுதான் எனும் வகையில் எளிமையாக்குவது . [இதயம் துடிப்பை நிறுத்தி விட்டது என்பதை மட்டுமே அறிவியல் புலம் அறிவிக்கும் .அந்த குறிப்பிட்ட உடலுக்குள் ,அந்த இதயத்தின் முதல் துடிப்பு நிகழ்ந்த கணம் குறித்து .என்றும் அறிவியல் புலம் அறிய இயலாது ]. .
அறிவியல் பார்வை என்பது . கொண்ட ஒன்று ,அதை முற்றிலும் மறுக்கும் ஒன்றுக்கான பாதையை தன்னுள் மூடாமல் வைத்திருக்கும் ஒன்றாகவே அமையும் .
மாறாக இன்றைய பேலியோ பரிந்துரையாளர்கள் வசம் விடை அளிக்கப்படாத வினாக்களே இல்லை . முற்றிலும் பரிசோத்தித்து நிறுவப்பட்டு கதவு சாத்தப்பட்டது . பேஷண்டுகள் அதை எடுத்துக்கொள்ள வேண்டியது மட்டுமே பாக்கி .
ஒரு குறிப்பிட்ட சூழலில் ,குறிப்பிட்ட உணவு வகை மட்டுமே தொடர்ந்து எடுத்துக்கொண்டால் அதன் நீண்ட கால தாக்கம் என்னவாக இருக்கும் ?
உதாரணமாக ஐம்பது வயதுக்கு மேல் ? ஐம்பது வயது வரை உடல் அணுக்களில் வளர் சிதை மாற்றம் நிகழ்கிறது .இதில் வளர்ச்சி நின்று சிதைவு மட்டுமே நடைபெறும் நிலையே மூப்பு என்கிறோம் . இங்கே இந்த உடலில் ”நிகழ்ந்து கொண்டிருக்கும் ” இதில் இந்த உணவு முறை உருவாக்கும் நன்மை தீமை என்ன ?
இந்த அறிவியல் பார்வை அற்ற அணுகுமுறையும் , நீண்ட கால அவதானம் வழியே மட்டும் தெரிய வரும் விளைவுகள் மீதான அசிரத்தையும், பேலியோ பரிந்துரைப்பாளர்களை நம்பகம் அற்றவர்கள் ஆக்குகிறது .
இறுதியாக
ஒன்று . பேலியோ மேற்கொள்வோர் முற்ற முழுதாக ”உங்களின் ”சுய தேர்வின் படியே அதை மேற்கொள்ள வேண்டுமே அன்றி , தோ அவரே சொல்லிட்டாரே , இந்தா என் பக்கத்து வீட்டு மாமியே என் கண்முன்னாலே இளசுட்டாளே என்றெல்லாம் அதில் குதிக்கக் கூடாது .
இரண்டு . எந்த வயதானாலும் ,எந்த உடலுக்குள் இருந்தாலும் உங்களால் வேக நடையில் ,மூச்சு சிக்காமல் ,எங்கும் நிற்காமல் இரண்டு கிலோமீட்டர் நடக்க முடிகிறதா உங்களுக்கு பேலியோ தேவையில்லை என்பதை அறிக .
மூன்று . ஆண்டுக்கணக்காக பெலியோவில் இருந்து உடல் இளைத்து , ஒரு கிலோ மீட்டர் வேகமாக நடக்க ,மூன்று இடங்களில் நின்று , நாக்கு தள்ளி மூச்சு வாங்கினீர்கள் என்றால் . பேலியோவுக்கு நீங்கள் தேவை இல்லை என்பதை அறிக .
கடலூர் சீனு