காந்தி, இளையராஜா

gan

அன்புள்ள ஜெயமோகன்,

காந்தியின் வரிகளுக்கு இளையராஜா இசையமைத்த இந்த அற்புதம் இன்று காணக் கிடைத்தது https://www.youtube.com/watch?v=Z86LscyJhNY

நம் தளத்திலுள்ள காந்தி பற்றிய கட்டுரைகளாலும் உங்கள் உரைகளாலும் நானடைந்த மக்களுக்கும் காந்திக்குமான உறவைக் குறித்த சித்திரத்தின் ஒரு பகுதி அழகாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.

துவக்கத்தில், தன் வீட்டின்முன் நடந்து வரும் காந்தியைக் கண்ட முதிய பெண்மணி கடவுளைக் கண்டவர்போல் அதிர்ந்து வணங்குகிறார். தெருவில் நிற்கும் முதியவரோ தெய்வ சந்நிதியில்போல் பணிந்து நிற்கிறார்.

வீட்டினுள்ளிருந்து ஓடிவந்து கைகூப்பும் இளம்தாயின் விழிகளும் நடந்தலையும் அப்பாதங்களையே சேர்கிறது – தாய்மை மட்டுமே கொள்ளக்கூடிய துயரத்துடன். தன்னால் இயன்ற ஒற்றைவளையை அளிக்கும்போதும் அவள் விழிகளில் கரிசனம்ததும்பும் அத்துயரே.

துயிலெழுந்து காலைச்சூரியனையே தன் கோலியின் மூலமே காணுகிறான் அச்சிறுவன்; தன் பெருஞ்செல்வமாக அதையே சேர்க்கிறான். இறுதியில்அதையே அளிக்கிறான்.

காந்தியின் வெற்றி – துவக்கத்தில் தனியாளாகவும் பின் நால்வருடனும் தோன்றும் அவரின்பின் திரளும் மக்கள் கூட்டம், தன்னிடமுள்ள சிறுசெல்வத்தையும் அளிக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துவது – என அழகாகத் தொகுக்கப்பட்டுள்ளது

கண்ணீரில்லாமல் இதைப் பார்க்கக் கூடவில்லை – பதினான்கு முறை முயன்று தோற்றேன்.

பொன்பொருட்களுக்கிடையில் தானளித்ததைக் குறித்து நாணி நிற்கும் அம்முகத்தை உயர்த்தும் அக்கரங்களைப் புரிந்துகொள்ள உதவிய உங்களிடம் இதைப் பகிரத்தோன்றியது. நன்றி ஜெயமோகன்.

முழுப்பாடலுக்கு: https://www.youtube.com/watch?v=6pxi9lh7nf4

இப்பாடலுக்கு இசையமைத்தது குறித்த இளையராஜா அவர்களின் பேச்சு: https://www.youtube.com/watch?v=tEJw2O6KRf8

என்றென்றும் அன்புடன்,

மூர்த்தி

டாலஸ்

முந்தைய கட்டுரைசிறுகதை விவாதம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–41