«

»


Print this Post

ஞாநி பற்றி…


gnani

 

அஞ்சலி ஞாநி

வணக்கத்திற்குரிய ஜெ,
அன்புடன் கோ எழுதுவது.

 

2011 இளநிலை மூன்றாம் ஆண்ட படித்துக் கொண்டிருந்தேன்.அப்போது தான் முதன்முதலில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் ஞாநியைப் பார்த்தேன்.தன் கருத்துக்களை ஆழமாகவும் மிக அழுத்தமாகவும் எடுத்துவைத்தார்.
 

அது முதல் தொடர்ந்து பல விவாதங்களில் அவரை பார்த்து வழக்கமாகிவிட்டது.ஞாநியின் கருத்துக்கள் சில என்னை கவர்ந்தன;சில என் கவனத்தை ஈர்த்தன.பின்னர் படிப்படியாக அவரது கருத்துக்களை ஆராய துவங்கினேன்.ஆனால்,அவரோடு எனக்கு எந்த நேரடி தொடர்பும் இல்லை.ஊடகங்கள் மூலமாகவே அறிமுகம்.
 

இந்நிலையில் கடந்த செப்டம்பரில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.”ஹலோ!” என்றவுடன் “வணக்கம்! கோவர்தனாவா?.நான் ஞாநி பேசுறேன்”.தொலைக்காட்சியில் கேட்ட அதே கரகரப்பு.என் ஐயத்தை புரிந்துக்கொண்டு அவராகவே விஷயத்தை சொன்னார்.அசோகமித்திரன் நினைவு சிறுகதைப் போட்டியில் உங்கள் கதை பாராட்டிற்குரிய சிறுகதை என்ற பரிசு பெறுகிறது என்றவர் பரிசளிப்பு விழா செப்டம்பர் 22-ம் தேதி அசோகமித்திரன் பிறந்தநாளன்று சென்னையில் நடைபெறும்.அசோகமித்திரன் மனைவி தான் பரிசு வழங்குறாங்க.S.இராமகிருஷ்ணன் வரார் என்று கூறிவிட்டு கட்டாயம் கலந்துக்கணும் என்று முடித்துவிட்டார்.
 

அதுமுதல் கடந்த செப்டம்பர் 22 வரை 4,5 தடவை போனில் அழைத்து விழா குறித்து பேசினார்.அவரோடு பரஸ்பரம் பழக்கம் ஏற்பட்டது.விழாவில் பேசிய ஞாநி அசோகமித்திரன் குறித்த நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.ஞாநிக்கும் அவர் குடும்பத்திற்கும் அசோகமித்திரன் எவ்வளவு முக்கியமானவர்/நெருக்கமானவர் என்பதை அவர் பேச்சில் அறிய முடிந்தது.
 

பேச்சை அப்படியே சிறுகதைகள் பக்கம் திருப்பிய ஞாநி இன்றைய பத்திரிக்கைகள் சிறுகதலக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.முன்பெல்லாம் பிரசுரமாகும் ஒவ்வொரு இதழிலும் சிறுகதை இடம்பெறும்.ஆனால் தற்போது சிறுகதைகளுக்கான இடமானது கேள்விக் குறியாகியுள்ளது என்றார்.மேலும் அவர் அவ்விழாவிற்கு வந்திருந்த ஊடக நண்பர்களிடம் சிறுகதைகளுக்கான போதிய இடம் ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தார்.
 

அக்கருத்து மிக உண்மை.என்னிடம் மைக்கை கொடுத்திருந்தால் நானும் அதையே பதிவு செய்திருப்பேன்.இதையெல்லாம் கடந்து ஞாநியிடம் அன்று நான் கண்டது தடையற்ற நட்பு.சுமார் 60 வயது கடந்த ஞாநி 25 வயதே ஆகும் என்னிடம் மிக எளிமையாகவும் பறந்த மனதோடும் பேசினார்.இவ்வாறே அவர் அங்கு வந்திருந்த எல்லோரிடமும் பழகுவதை பார்க்க முடிந்தது.மகிழ்வோடு அவரிடம் விடைப்பெற்று வீடு திரும்பினேன்.
 

அதன் பிறகு அவ்வப்போது அவர் எண்ணிற்கு WhatsApp-ல் செய்தி அனுப்பி வந்தேன்.இப்படியே சென்று கொண்டிருக்க கடந்த 15-ம் தேதி காலை ஞாநி மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்தேன் அதே தொலைபேசி வாயிலாக.அன்று நான் கேரளத்தில் நண்பர்களோடு இருந்ததால் உடனடியாக எதுவும் செய்ய இயலவில்லை.குறைந்தபட்சம் தொலைக்காட்சியில் செய்தி பார்க்கலாம் என்றால் நாங்கள் தங்கி இருந்த விடுதி தொலைக்காட்சியில் தமிழ் செய்தி சேனல்களே காணும்.
 

மறுநாள் தான் தமிழகம் திரும்பினேன்.எப்படியாவது ஞாநிப் பற்றி எழுதிவிட வேண்டும் என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது.அவர் என்னுடன் கைக்குலுக்கிய நிமிடங்கள்,உரையாடிய சொற்கள் இனனும் மனதில் அழியாமல் இருக்கின்றன.
 

ஞாநியின் தடையற்ற நட்பின் மீதும் நேர்மையின் மீதும் நீங்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளதை அறிவேன்.ஆகவே எப்படியும் அஞ்சலி எழுதியிருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் உங்கள் இணைய தளத்தை அணுகினேன்.என் நம்பிக்கை வீண் போகவில்லை.
நன்றி!

– கோவர்தனா

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/106037