சிறுகதை குறித்து, விஷால்ராஜா

vishaal

 

அன்புள்ள ஜெ,

இந்த சிறுகதை விவாதத்தை நான் மிகுந்த ஆர்வத்துடன் பின் தொடர்ந்துக் கொண்டிருந்தேன். முதல் கதையை வாசித்து அதுக் குறித்த அபிப்ராயங்களை உருவாக்கி பின்னர் அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து விவாதித்தபொழுதே இதன் பயனை என்னால் துல்லியமாக உணர முடிந்தது. (இத்தனைக்கும் நான் நவீனின் “போயாக்” கதையில் ஒரு முக்கியமான இழையை தவறவிட்டிருந்தேன்). இவ்விவாதத்தின் உடனடி பயன் என்று ஒரு விஷயத்தை குறிப்பாக சொல்ல வேண்டும்.

ஒரு எழுத்தாளனாக என் கதைகளில் நான் செய்கிற தவறுகளை நானே கண்டுபிடிப்பதும் திருத்துவதும் மிகக் கடினம். இயல்பாகவே சொந்த படைப்புகளின் மேல் ஒரு சார்பு நிலை உருவாகிவிடுகிறது என்பதே காரணம். ஆனால் மற்றவர்களின் கதைகளில் அதே தவறுகளை காணும்போது எளிதாக அவற்றுடன் என் கதைகளை முடிச்சிட்டு தெளிவடைய முடிந்தது. உதாரணமாக, ஒரு யதார்த்த கதையை எழுதும்போது அதில் தேவையை மீறி சாதாரணத் தகவல்களாக கொட்டி நிரப்பினால் அது மிகவும் சலிப்பூட்டக் கூடியதாக மாறிவிடும். இது புதிய கண்டுபிடிப்பு அல்ல. எனக்கு தெரிந்தே இதை நீங்கள் பலமுறை சொல்லியிருக்கிறீர்கள். “கணையாழி பாணி” என்று இதை நீங்கள் அடையாளப்படுத்துவதை கவனித்திருக்கிறேன். விஷ்ணுபுரம் விருது நிகழ்விலும் இதை குறிப்பிட்டீர்கள். அசோகமித்திரன் சாதாரணமானவற்றின் வழியே அசாதாரணத்தை எட்டினார்; ஆனால் அவரை தவறாக பின்பற்றிய பலரும் சாதாரணங்களை எழுதுவதோடு நின்றுவிட்டார்கள் என நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் இது வெறும் கருத்தாக (opinion) மட்டுமே என்னில் பதிவாகியிருந்திருக்கிறதேத் தவிர என் சுய உணர்தலாக (realisation) மாறவில்லை என்பதை இப்போதுதான் அறிந்தேன்.

“தேவைக்கு அதிகம்” என்கிற தொடர் இந்த விவாதம் முழுக்க மீள மீள பிரயோகிக்கப்பட்டது. அது ஏன் என்று யோசிக்கையில் எனக்கு சாத்தியமாகத் தோன்றிய ஒரு நடைமுறை விடை.  அன்றாடத்தில் நாம் வெவ்வேறு வேலைகளில் இருக்கும்போது சுற்றி நிகழ்கிறவற்றை கவனிப்பதே இல்லை. மிக அரிதாக, எதற்காகவோ எங்கேயோ காத்திருக்க நேரும்போதுதான் எதையாவது பார்க்கவே செய்கிறோம்.  அத்தகைய தருணங்கள் அபூர்வமாக நமக்கு நடப்பதனாலேயே அதை அபூர்வமான நிகழ்வு என்றும் நம்புவிடுகிறோம் போல. அதன் ஒவ்வொரு பொறுமையான அசைவையும் அதே பொறுமையோடு கதையில் எழுத அவை கதைக்கே பாரமாகிவிடுகின்றன. சுரேஷ் பிரதீப்பின் “எஞ்சும் சொற்கள்” கதையை படிக்கையில் நான் இக்குறைப்பாட்டையே முதன்மையாக உணர்ந்தேன். தமிழின் அனேக சிறுகதைகளில் காத்திருப்பும் வாளாவிருப்பதும் அடிக்கடி நிகழ்வதன் பின்னாலும் இதே காரணத்தை பொருத்த முடியும். முன்னோடி எழுத்தாளர்கள் தங்கள் விழிப்பு நிலையால் – அவசியமானவற்றுக்கு மட்டும் கண்களின் வெளிச்சத்தை அளிப்பதன் மூலமாக அதை வெற்றிகரமாக கடந்திருக்கிறார்கள். அவர்களது கதைகளில் தோல்விப் பாடம் கிடைக்காது. எழுதி எழுதி அதை கற்றுக் கொள்வது ஒரு முறை. விமர்சனக் கட்டுரைகளின் வழியாகவும் இத்தகையை விவாதங்களின் வழியாகவும் கற்றுக் கொள்வது இன்னொருமுறை. அவ்வகையிலேயே இவ்விவாதம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. நான் இனி என் அடுத்த கதையை எழுதும்போது இந்த இடத்தில் கவனமாக இருக்கவேண்டும் என்கிற குறைந்தபட்சம் தன்னுணர்வாவது இருக்கும் என நம்புகிறேன். இப்படி பலரும் கணிக்க முடியாத கோணங்களில் பல விஷயங்களை கற்றிருக்கக்கூடும். ஏ.வி.மணிகண்டன், ராமச்சந்திரன், அரவிந்த், சுசித்ரா, ராஜாராமன் சுந்தரராஜன் – இவர்களின் கடிதங்களும் அர்த்தச் செறிவோடு யோசிக்கச் செய்யும்படி இருந்தன.

கறாராகக் கூறினால் ஒரு வாசகன் (என்னையும் சேர்த்தே சொல்கிறேன்),  விவாதத்தின் பொருட்டு என்றில்லாமல் எப்போதும் தன் சொந்த வாசிப்பையே கவனக் குறைவற்று கூர்மையாகத்தான் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்குரிய பயிற்சியை இத்தகைய விவாதங்கள் வழங்குகின்றன. வாசக பயிற்சி மட்டுமில்லை; எழுத்து நுணுக்கங்கள் பற்றிய பயிற்சியும்கூட. அதிலும் ஒரே படிநிலையில் உள்ள புது எழுத்தாளர்கள் எனும்போது அது வெறும் வாசக எதிர்வினைகளின் தொகுப்பு என்றில்லாமல் ஒரு பட்டறையாக மாறுகிறது. இப்படி ஒரு நல்ல வாய்ப்பாக இருந்த சிறுகதை பட்டறை இலக்கியத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு காரணத்தினால் பாதியிலேயே நிறுத்தப்படுவது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது. உங்களை தொடர்ந்து வாசித்துவருகிறவன் என்கிற முறையில் மனச் சோர்வோ அல்லது எதிர்மறை உணர்வோ நிச்சயமாக உங்களது குணங்கள் அல்ல என்று எனக்கு தெரியும். தயக்கத்தையும் அச்சத்தையுமே விசேஷ குணங்களாகக் கொண்ட எனக்கு உங்களது அதீத சுறுசுறுப்பும் நேர்மறை சக்தியும் சமயங்களில் அச்சமூட்டவே செய்திருக்கின்றன. இந்நிலையில் உங்களது முடிவை நான் முழுமையாக புரிந்துகொள்ளவே விரும்புகிறேன். எனினும் அது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

இளம் எழுத்தாளர்கள் தங்கள் விவாதங்களை தனிச்சூழலில் வைத்துக்கொள்ள வேண்டும் என நீங்கள் கூறியிருக்கும் அறிவுரை அவசியமானது. ஆனால் அதில் நான் என் அனுபவம் வழியே எதிர்கொண்ட ஒரு  தடை உள்ளது- வழிகாட்டிகள் இல்லாத நிலை. இங்கே நான் வழிகாட்டி என்று சொல்வது வெறும் இலக்கிய அறிவு சார்ந்தது மட்டும் அல்ல. தர்க்கத்திறனையும் ஆளுமைப் பண்பையும் சேர்த்தே குறிப்பிடுகிறேன். வழிகாட்டியற்றச் சூழலில் மணிக்கணக்காக விவாதித்தும் இறுதியில் யாரும் எந்த முடிவையும் எட்டாமல், கருத்தளவில் ஒரு அடிக்கூட முன்னே செல்லாமல் ஆரம்பத்தில் கொண்டிருந்த அதே புரிதலோடும் முன்முடிவுகளோடும் திரும்புவது முற்றிலுமாக பயனற்றது. உடைத்து திருத்துகிற வழிகாட்டிகள் அங்கே அவசியம் இருக்கவேண்டும். என்னை அப்படி ஒரேடியாக பேச்சிலேயே உடைத்த ஆளுமைகள் என்று உங்களையும், நண்பர் ஏ.வி.மணிகண்டனையும் தயங்காமல் சொல்வேன். ஆனால் எல்லா விவாதச் சூழலிலும் அப்படியான வழிகாட்டிகள் இருப்பதில்லை. ஊட்டிப் பட்டறையில் ஒவ்வொரு விவாதமும் உங்களது தொகைப் பதிலுடனே முழுமையடைந்தது என்பதை நினைத்துக் கொள்கிறேன். அதேப் போல் இவ்விவாதத்தின் முடிவிலும் நீங்கள் நிச்சயம் அனைத்துப் பார்வைகளையும் தொகுத்து ஒரு இறுதிக் குறிப்பு எழுதியிருப்பீர்கள். அதுவே எல்லாக் கருத்துக்களையும் உதிரித் தெறிப்புகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்திருக்கும்.  நான் ரொம்பவும் எதிர்பார்த்து காத்திருந்த பதிவு அது. அதனாலேயே இத்தகைய விவாதங்கள் இனி உங்கள் தளத்தில் நிகழாது என்று நீங்களும் சொல்லும்போது பதற்றமாகிறது. அதை பரிசீலிக்க சொல்கிற இடத்தில் நான் இல்லை. எனவே என் வருத்தத்தை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன்,

விஷால்ராஜா

 

அன்புள்ள விஷால்,

 

கோபமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. அப்படி என்னை பிறர் சீண்டி முடிவெடுக்க அனுமதிப்பதில்லை – தமிழில் அந்தத் தகுதிகொண்டவர்கள் சிலரே. அவர்கள் அதைச்செய்வதில்லை.

ஆனால் பயனின்மையைச் சட்டென்று உணர்ந்தேன். அதைவிட தேவையில்லாத வன்மங்கள் பெருகி தீங்கு நிகழ்ந்துவிடுமோ என்னும் ஐயம். எனக்கு வந்தக் கடிதங்களிலிருந்த சாதிசார்ந்த விமர்சனங்கள் அவ்வெண்ணத்தை உருவாக்கின.

இந்த விவாதத்தை தொடங்கக் காரணம் நவீன் எழுதிய கடிதம். தன் கதை வாசிக்கப்பட்டது, உரிய எதிர்வினை எழவில்லை என்று சொல்லியிருந்தார். ஆகவே கதைகளை முன்னிலைப்படுத்த எண்ணினேன். முக்கியமான நோக்கம் அதுவே. ஆகவேதான் திரும்பத்திரும்ப ஆசிரியர் படங்களை வெளியிட்டேன்.

முன்பு விஷ்ணுபுரம் விருது சமயத்தில் காழ்ப்புடனும் நக்கலுடனும் ஆசிரியர் படங்களை வெளியிடுவதைப்பற்றி சில கடிதங்கள் வந்தன. ஆசிரியர்களின் முகங்கள் முக்கியமானவை. வாசகன் அவற்றுடன் ஓர் உரையாடலை மேற்கொள்கிறான். அவன் அவருடைய அனைத்துக்கதைகளையும் அதைக்கொண்டே கோத்து அவருடைய பார்வையை வகுக்கிறான். ஆகவேதான் படங்கள்.

முதல்விமர்சனத் தொகையிலேயே சங்கர் என்பவர் நவீனின் கதையை கடுமையாக எதிர்விமர்சனம் செய்திருந்தார். அது வெளியானதும் அத்தகைய கடிதங்கள் வெளிவந்தன. நான் எழுத தொடங்கியபோது அத்தகைய விமர்சனங்கள் எனக்கு தூண்டுதலாகவே இருந்தன. சொல்லப்போனால் அவற்றை நானே உருவாக்கிப் பெற்றுக்கொண்டேன். அவை என்னைச் சீண்டி எழுதவைத்தன

எழுத்துக்கு எதிர்விசையாக கடுமையான வாசக எதிர்வினைகள் சில அமையாதவரை ஆரம்பகட்ட எழுத்தாளன் முன்னகரவே முடியாது. மொத்தையான பாராட்டுக்கள் போல அவனை அழிப்பவையும் கிடையாது. எழுத்தின்பின் ஓர் ஆணவம் உள்ளது, அது இல்லையேல் எவரும் எழுதமாட்டார்கள். அந்த ஆணவம் சீண்டப்படவேண்டும். துயிலில்லாமல் சிலநாட்கள் செல்லவேண்டும். இங்கே எதுவும் எளிதல்ல என்று தோன்றவேண்டும். எழுதிக் காட்டுகிறேன் என்று ஒரு நாகம் உள்ளே சீறி எழவும் வேண்டும். இல்லையேல் ஓரமாக ஒன்றையே திரும்பத்திரும்ப எழுதிக்கொண்டிருக்கவேண்டியதுதான். ஆகவேதான் எதிர்வினைகள் வெளியாயின.

அதற்கு கட்டில்லாத எதிர்வினைகள் தேவை. அவற்றை சிரமேற்கொள்ளவும் தேவையில்லை. எழுதுபவனுக்கு உண்மையில் அவனுடைய எழுத்தின் சாரம் தெரியும். எவர் அங்குவரை வந்து கருத்துச்சொல்கிறார்கள் என்று தெரியும். அவர்களைப் பொருட்படுத்தினால்போதும்.

இளம் எழுத்தாளர்களைப்பற்றி எழுதுபவர்கள், குறிப்பாக சக எழுத்தாளர்கள் கறாராகவே இருப்பார்கள். ’இதைவிடநானே எழுதுவேனே’ என்பதுதான் அவர்களின் மனநிலை. அவர்களே நாளை எழுதவும் வருவார்கள்.

ஆனால் எதிர்வினைகளை உள்நோக்கம் கற்பிக்க ஆரம்பித்தால், எழுத்தாளர்களைச் சூழ்ந்து சாதி, மதக் கணக்குகளுடன் நிலைகொண்டு வம்புபேச ஆரம்பித்தால் அதன்பின்னர் விவாதம் ஒவ்வொன்றும் கசப்புகளையே உருவாக்கும். அக்கசப்புகளில் மாட்டி மாறிமாறி வேவுபார்க்க ஆரம்பித்தால் இலக்கியம் படைக்கும் மனநிலை அழியும். வம்பர்களுக்கு வேறு வேலை இல்லை. எழுத்தாளன் அந்தச் சுழலில் சிக்கிக்கொள்ளக்கூடாது. ஆகவேதான் இதை நிறுத்த முடிவெடுத்தேன்

உண்மைதான், ஏதோ ஒருவகையில் முந்தைய தலைமுறையில் படைப்புக்களை எழுதி தன்னை நிறுவிக்கொண்ட எவரேனும் வழிநடத்தாமல் அடுத்த தலைமுறை தன்னை மதிப்பிட்டுக்கொள்ள முடியாது. அது சுந்தர ராமசாமியானாலும் சரி. க.நா.சுவானாலும் சரி, டி.எஸ்.சொக்கலிங்கமானாலும் சரி, எப்போதும் அப்படிச் சிலர் இருந்துள்ளனர். ஆனால் இன்றைய இணையவம்பர்களின் யுகத்தில் அது இயல்வதல்ல என்றுதான் படுகிறது

ஜெ

 

பிகு :முடிவின்மையில் நிகழ்பவை கதையையும் வைத்திருந்தேன், பத்தாவதாக. நல்ல கதை. முற்றிலும் புதிய ஓர் உல்க்குக்குச் சென்றுவிட்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

 

பதிமூன்று வயதில் மித்ரன் முதன்முதலாக கடலில் பயணம் செய்தான். அவனுடைய முதல் கடல் பயணமே விபத்தில்தான் முடிந்தது. நொறுங்கிய கப்பல் மேடையில் திசை தெரியாமல் அமர்ந்தபடி இரு இரவுகள் பசியில் உள்ளிழுத்த வயிறுடனும் கடல் தண்ணீர் அறைந்து உப்புப் படிந்த முகத்துடனும் காற்றோடு பயணித்து அருகாமை தீவில் அவன் கரை சேர்ந்தபோது தனக்கு முன்னரே தன்னுடன் கப்பலில் வந்த மற்ற எல்லோரும் உப்பிய பிணங்களாக மணலில் புதைந்திருப்ப்தை கண்டான்.

lmokn-23

விஷால் ராஜாவின் முடிவின்மையில் நிகழ்பவை

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–35
அடுத்த கட்டுரைநாவல் – ஒரு சமையல்குறிப்பு