இலக்கிய விவாதம் -நவீன்

navin

அன்பான ஜெ. ‘சிறுகதை விவாதம் முடிவு’ வாசித்தேன். என்ன நடந்திருக்கும் என ஓரளவு ஊகிக்க முடிகிறது. வருத்தமாக இருந்தது. நீங்கள் இரண்டாவது முறையாக மலேசியா வந்தபோது எனது முதல் கவிதை தொகுதியை வழங்கினேன். வாசித்துவிட்டு “நவீன் எப்ப கவிதை நூல் வெளியிடப்போறீங்க?” என்றீர்கள். இரண்டாவது வருகையில் என் சிறுகதை ஒன்றை வாசிக்கக் கொடுத்தேன். அதை வாசித்து மீண்டும் என் கைகளில் கொடுக்கும்போது தவறி கீழே விழுந்துவிட்டது. அங்கே மழை நீர் தேங்கியிருந்தது. அந்த சிறுகதை மெல்ல மெல்ல நீரில் மூழ்கியபோது நீங்கள் “புனல் வாதம் கேள்விப்பட்டுள்ளீர்களா? மூழ்கிப்போகாமல், கரை ஒதுங்கி வந்தால் அது தரமானது” எனக்கூறினீர்கள். இவை விமர்சனங்கள் அல்ல. அதைவிட கடுமையான புறக்கணிப்பு. இருமுறையுமே நண்பர்கள் உடனிருந்தனர். இருமுறையும் கேலிக்கும் சிரிப்புக்கும் பஞ்சமில்லை. நான் அதனாலெல்லாம் மனச்சோர்வு அடையவில்லை. அதற்குக்காரணம் உண்டு.

வாசிப்புக்கு எப்போதும் ஓர் ஆசிரியர் தேவைப்படுகிறார். எப்படி வாசிப்பது என அவர் மூலமே நாம் அறிகிறோம். என் நவீன இலக்கிய வாசிப்புக்கான ஆசிரியர் என்றே நான் பல சமயங்களில் உங்கள் குறித்து எழுதியுள்ளேன். ஒரு படைப்பிலக்கிய வாசிப்பில் செலுத்த வேண்டிய கவனத்தை உங்கள் கட்டுரைகள், நூல்கள், பேச்சுகள் வழி ஓரளவு கற்றிருக்கிறேன். அப்பயிற்சி என் வாசிப்பின் மீது பெரும் நம்பிக்கையைக் கொடுக்கிறது. எந்தப்பிரதியையும் வாசித்து அதை எனக்கானதாக அடையாளம் காணும் நுணுக்கம் கிடைக்கிறது. அதன் உள்மடிப்புகளுள் நுழைந்து செல்லும் சூட்சுமம் புரிகிறது. அவ்வாசிப்பு பொழுதுபோக்கிற்கான வாசிப்பு அல்ல. ஒரு நாவலை எழுதிய எழுத்தாளன் அடையும் களைப்பையும், வெறுமையையும் அதே அளவுக்கான உளவெழுச்சியையும் அடையும் வாசிப்பு. எனவே அந்த நம்பிக்கையைப் புகட்டிய ஆசிரியரிடம்தான் மீண்டும் மீண்டும் ஒரு படைப்பை அனுப்பவேண்டியுள்ளது.

கால ஓட்டத்தில் நாம் அவ்வாறு சில வாசகர்களைக் கண்டடைகிறோம். நான் ஒரு கதையை எழுதியப்பின் அப்படி இரண்டு மூன்று பேரிடம் அனுப்புவேன். அவர்கள் அந்த மௌன இடைவெளியை வந்தடைகின்றார்களா என்பது எனக்கு முக்கியம். அவர்கள் கூறும் கருத்துகள் எனக்கு முக்கியம். அதன் பின்னரே கதையைப் பிரசுரிக்கிறேன். தரமில்லை என்றால் பிரசுரிப்பதில்லை. பிரசுரத்துக்குப் பின் இரண்டு மூன்று நண்பர்களை அழைத்து அவர்கள் விமர்சனங்களைக் கேட்பதுண்டு. கதை சொல்லும் முறையில், சொல்லாட்சியில் என எந்த விமர்சனம் வந்தாலும் நான் மறுப்பு தெரிவிப்பதில்லை. தொழில்நுட்ப கோளாறுகளைப் பயிற்சிகள் மூலம்தான் சரிசெய்ய முடியும். ஆனால் நான் அறிய விரும்புவது ஒன்றிருக்கும். அவர்கள் கதைக்குள் நுழைந்துள்ளனரா என்பதுதான். கருவை மையப்படுத்தியும், ஒரு தகவலைச் சொல்லவும், திடீர் திருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் பழகிய மலேசிய வாசகர்கள் மத்தியில் கவனமான வாசிப்பு இல்லையென்றால் என் சிறுகதையின் மையத்தை அவர்களால் அறிய முடியாது என எழுதிதான் நிரூபிக்க வேண்டியுள்ளது. அந்த மௌனமான இடைவெளியை அறியாமல் யார் சொல்லும் விமர்சனங்களுக்கும் நான் முக்கியத்துவம் தருவதில்லை. அவர்கள் இலக்கிய வாசகர்கள் அல்ல. அல்லது இளம் படைப்பாளிகளை நுணுகி வாசிக்க அவசியம் இல்லை என எண்ணம் கொண்ட வாசகர்கள்.

இந்த நிலையில்தான் நீங்கள் உங்கள் தளத்தில் ‘போயாக்’ உள்ளிட்ட இளம் தலைமுறை எழுத்தாளர்களின் சிறுகதைகளைப் பிரசுரித்தீர்கள். ஆயிரத்துக்கும் அதிகமான வாசகர்கள் அக்கதையை வாசித்துள்ளதாக என் வலைத்தள கணக்கு கூறியது. வந்திருந்த ஒவ்வொரு கடிதங்களையும் மிகுந்த ஆர்வத்துடன் வாசித்தேன். அவர்கள் நீங்கள் எழுதி எழுதி உருவாக்கிய வாசகர்கள். பலர் அக்கதையில் மையத்தை அடைந்தனர். அது மகிழ்ச்சியைக் கொடுத்தது. பொருட்படுத்தும்படியான விமர்சனங்களும் வந்தன. அடுத்தக் கதைகளில் கவனம் கொள்ளவேண்டிய குறிப்புகள் அவை. எனக்குத் தெரிந்து வேறு எந்த இணைய அல்லது சிற்றிதழிலும் இவ்வாறு தொடர் விவாதங்கள் நடக்கவில்லை என்றே நினைக்கிறேன். இவ்வளவு பொறுப்புடன் வாசித்து எழுதும் வாசகர் பரப்பை பார்க்க ஆச்சரியமாக உள்ளது. அப்படியிருக்க இதுபோன்ற முயற்சிகளை விடுவதென்பது இலக்கியச்சூழலுக்குக்கு இழப்புதான்.

கதையை விமர்சிக்கும்போது இளம் எழுத்தாளர்கள் ஏன் மனச்சோர்வு அடையவேண்டும் என தெரியவில்லை. ஒரு கலைத்துறையில் இயங்கும்போது அதற்கு முன்பு அந்தத் துறையின் சாதனையாளர்களைப் பார்த்தப்பின்பே நம்மை அதில் இணைக்கிறோம். எந்த நேரமும் அந்த நெடிய வரலாற்றின் சிறுபுள்ளியாய் நாம் இருப்பது நமக்கே தெரியும். இதற்கு முன் நிகழ்ந்த சாதனைகளுக்கு முன் நமது இடம் என்ன என்று ஒவ்வொரு இளம் படைப்பாளியும் அறிவார்கள். அதுவும் நவீனத் தமிழ்ச் சிறுகதை எனும் நீண்ட வரிசையில்.  அந்த வரலாற்றின் முன் ஒரு இளம் படைப்பாளி தன்னை நிறுத்தி வைத்துப்பார்ப்பதே இவ்வாறான சோர்வுகளை நீக்கும். அதே சமயம் அந்த நெடிய வரிசையில் முந்திச்செல்லும் பேராசையும் பிறக்கும்.

என்னளவில் உங்களது இந்த முயற்சியால் நான் பலனடைந்துள்ளேன். மூன்று வகையான வாசகர்களை அடையாளம் காண முடிந்தது.

முதலாவது திட்டவட்டமான அளவீடுகளைக் கையில் வைத்துக்கொண்டு அந்த அளவீட்டுக்குள் வராத படைப்புகளை விமர்சிப்பவர்கள். இவர்களில் பெரும்பாலோர் உங்கள் சொற்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இன்னும் சொல்லப்போனால் நவீன இலக்கியம் குறித்த உங்கள் விமர்சன முறைகளை வாசித்து அதன் சாரத்தை உள்வாங்கி ஒரு படைப்பை அணுகுகின்றனர். நீங்கள் ஜெயகாந்தன் படைப்புகளை மீள் மதிப்பீடு செய்த கட்டுரைகளை வாசிக்கும்போது இவர்கள் அதிர்ச்சியடையலாம். எல்லா படைப்பையும் உள்வாங்க திட்டவட்டமான வரையறை இல்லை என்பதும் ஒரு படைப்பே தனக்கான கலையை வைத்துள்ளதையும் அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

இரண்டாவது தொழில் நுட்பத்தில் அதிக கவனம் செலுத்துபவர்கள். இவர்கள் ஆலோசனைகளை வாசித்தப்பின் வேறு எப்படியெல்லாம் இக்கதையைச் சொல்லியிருக்கலாம் என சிந்தித்துக்கொண்டேன். மொத்த கதையையும் வேறு மாதிரி எழுதிப்பார்க்கும் உந்துதலை இவர்கள் கொடுத்தார்கள்.

மூன்றாவது வாசகர்களுக்கு வாசிப்பில் முன் முடிவுகள் இல்லை. ஆனால் நுணுக்கமானவர்கள். இவர்கள்தான் கதையை பல்வேறு கோணங்களில் உள்வாங்கினர். இவர்கள்தான் அதன் மையத்தை விவாதித்தனர். அறிவின் வன்முறை பற்றியும், மானுடத்தின் புராதன மனம் பற்றியும், அறத்தின் அப்பழுக்கற்ற தன்மையில் அறிவு செய்யும் ஆதிக்கம் பற்றியும் பேசியது இவர்கள்தான். இவர்களால்தான் ஏன் கதைச்சொல்லி ஆங்கில ஆசிரியர் என்றும், ஏன் அவன் ஷெக்ஸ்பியர் படித்தான் என்றும், ஏன் அவனுக்கு ஆங்கில பட காட்சிகள்தான் நினைவுக்கு வருகின்றன என்றும், ஏன் அவன் மன்னிப்புக் கேட்க வில்லை என்றும், ஏன் அவன் முதலை கறிக்கு வாந்தி எடுத்தான் என்றும் கூற முடிகிறது. சிலர் நான் நினைக்காத வழிகளில் எல்லாம் கதையை வந்து அடைந்திருந்தனர்.

இந்த வாசகர்களின் கடிதம் இவ்வகையில் எனக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளன. அவர்களில் யார் எனக்கானவர் என அறிவேன். அவர்கள் பாராட்டுகளோடு விமர்சனங்களையும் வைத்துள்ளனர். அது எனது போதாமைகளைத் திருத்தவும் வாசகனின் புரிதலின்மேல் ஆழமான நம்பிக்கை வைக்கவும் கற்றுத்தந்துள்ளது. அதற்கு நன்றி.

 

அன்புள்ள நவீன்,

வழக்கம்போல பாராட்டும் மறுப்புமாக இருந்தன எதிர்வினைகள். மறுப்புகள் உங்களைச் சோர்வடையச்செய்யவில்லை என்பதும் மேலும் ஊக்கமே கொண்டீர்கள் என்பதும் எப்போதும் உங்கள் மேல் எனக்கிருக்கும் நம்பிக்கையை வலுப்படுத்தின.

 

உங்கள் கதையை நான் விரும்பினேன். அதை வாசித்தபோது ஒன்று தோன்றியது, உங்களுக்கான வடிவம் நாவலோ என. சும்மா தோன்றுவதுதான். நாவலுக்கான சிறப்பான தொடக்கம் அது. நாவலாசிரியன் அறிவார்ந்த தளம் ஒன்றும் கொண்டிருக்கவேண்டும் என்பார்கள். [நல்ல கட்டுரைகள் எழுதமுடியாதவன் நாவலாசிரியனாக முடியாது என்று ஃபாஸ்டர் சொல்லியிருக்கிறார்  என ஞாபகம்] நாவலுக்கும் நீங்கள் முயலலாம். இப்போது அமைந்திருக்கும் வாசகக் கவனம் நீடிக்கட்டும்.

 

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–34
அடுத்த கட்டுரைமறவாமை என்னும் போர்