மறவாமை என்னும் போர்

200px-Luigi_Pirandello_1932

லூகி பிராண்டெல்லோவை இப்போதைய தலைமுறையில் எவருக்கேனும் நினைவிருக்குமா எனத் தெரியவில்லை. இத்தாலிய நாடக ஆசிரியர். 1934 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றவர்.

அவருடைய ஆசிரியரைத் தேடிவந்த ஆறு கதாபாத்திரங்கள் [Six Characters In Search of an Author] என்ற நாடகம் அக்காலத்தைய வாசகர்கள் பலரைப் பாதித்தது. பலரும் அதேபோல கதைகளை எழுதியிருக்கிறார்கள். க.நா.சுகூட ஒரு கதை எழுதியிருக்கிறார். சுஜாதா எழுதிய முதல்கதைகூட அந்தப்பாதிப்பு கொண்டதுதான். அவருடைய போர் [war ] என்ற சிறுகதையை முப்பதாண்டுகளுக்கு முன்பு நான் மஞ்சரியிலோ அல்லது வேறு ஏதோ சிற்றிதழிலோ மொழியாக்கம் செய்திருக்கிறேன்.

போர் அரிய சிறுகதை. சமூகம் ஒட்டுமொத்தமாக போருக்கு ஆதரவானது, தனிமனிதர்கள் போரின் இழப்புகளை மட்டுமே அறிபவர்கள். ஒவ்வொரு தனிமனிதனும் இவ்விருநிலைகளில் நின்றும் போரைப் பார்க்கிறான். தனக்கு இழப்பு ஏற்படாதவரை பெரும்பாலும் போரை ஆதரிப்பவனாகவே அவன் இருக்கிறான். இழப்பு ஏற்படும்போதுகூட அவன் அதை மேல் மனதால் கொண்டாடுகிறான். உள்ளே துயர் நொதித்துக்கொண்டிருக்கும்

சிவா கிருஷ்ணமூர்த்தியின் மறவோம் எனக்கு அக்கதையை நினைவூட்டியது. போர் என்னும் மாபெரும் கூட்டுப்பாவனையைப் பற்றிய கதை அது. போர் என்னுமிடத்தில் நாம் எதை வேண்டுமென்றாலும் இன்று வைத்துக்கொள்ளலாம். கருத்தியல்சார்ந்த இயக்கங்கள், போராட்டங்கள். பெரும்பாலும் இவை பாவுமட்டுமே கொண்ட நெசவுகள். ஊடுகளை நம் உள்ளங்கை உணரும், விழிகளால் நோக்க இயலாது.

சிவா கிருஷ்ணமூர்த்தியின் இக்கதையில் வரும் வரிகளை நான் கடைசியாகக் கண்டது கோகிமாவில் உலகப்போர் வீரர்களுக்கான நினைவிடத்தி. மறவோம் மறவோம் என அனைத்து கல்லறைவரிகளும் ஆர்ப்பரித்தன. மறந்துவிடாதே என அவற்றைப் பொறித்தவர்கள் தங்கள் ஆன்மாக்களை நோக்கி ஆணையிட்டிருப்பார்கள் என நினைத்துக்கொண்டேன்

சிவா கிருஷ்ணமூர்த்திக்கு என் வாழ்த்துக்கள்

siva kiru


சிவா கிருஷ்ணமூர்த்தி எழுதிய மறவோம்

முந்தைய கட்டுரைஇலக்கிய விவாதம் -நவீன்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–35