சிலுவைராஜ் சரித்திரத்தை மதிப்பிடுதல்

sr

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சிலுவைராஜ் சரித்திரம் குறித்த என்னுடைய கட்டுரை ஆம்னிபஸ் தளத்தில் வெளியாகி உள்ளது

http://www.omnibusonline.in/2018/01/blog-post_14.html

கட்டுரை குறித்து ,தங்கள் கருத்துக்களை அறிய ஆவல்

வி மணிகண்டன்

***

ராஜ்-கௌதமன்

அன்புள்ள மணிகண்டன்

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

புத்தக மதிப்புரை என்பது பொதுவாக அந்த நூலைப்பற்றிய உங்கள் அப்போதைய மதிப்பீட்டை பதிவுசெய்வது. இது மதிப்புரை

விமர்சனம் என்பது சற்று மேம்பட்ட ஒன்று. அது பிறிதொரு பெரிய அறிவுப்புலத்தில் ஒரு புத்தகத்தை நிறுத்தி ஆராய்கிறது. உதாரணமாக இந்தியாவில் எழுதப்பட்ட தலித் நாவல்கள் கணிசமானவை தன்வரலாற்றுத்தன்மை கொண்டவை. தலித் இலக்கியத்திலேயே தன் வரலாற்றுநூல்கள் மிகுதி. ஏன்?

இந்தவினாவுடன் இந்நாவலை வாசித்தால் மேலதிக கேள்விகளுக்குச் செல்லவேண்டியிருக்கும். புனைவு என்றால் வராத ஒரு நம்பிக்கைத்தன்மை தன் வரலாறு என்றால் வருகிறது. அது ஆழமான பாதிப்பை உருவாக்குகிறது. என்று ஒரு பதில் சொல்லலாம்

அல்லது தலித் நாம் அறிந்த சமூக, அரசியல் வரலாற்றில் தான் இல்லை என உணர்கிறார். அவர் தன் வரலாற்றுக்குள் மட்டுமே தன்னைப்பார்க்கிறார் என்று கொள்ளலாம்

அல்லது வரலாற்றில் தன்னை நிலைநிறுத்திக்கொள்வது அவருக்குத் தேவையாக இருக்கிறது என எடுத்துக்கொள்ளலாம். இதெல்லாமே நாம் எழுப்பும் வினாக்களும் சாத்தியங்களும். தலித் நூல்களை ஒட்டுமொத்தமாக நோக்கி வினாக்களை விரிவுபடுத்திக்கொள்வதும் வாசகர்களை அங்கே அழைத்துச்செல்வதுமே விமர்சனம் என்பது

தமிழ் தலித் இலக்கியப்படைப்புகளான சிவகாமியின் பழையன கழிதலும், பாமாவின் கருக்கு கே.ஏ.குணசேகரனின் வடு போன்றவைகூட தன்வரலாற்றுத்தன்மை கொண்ட நாவல்களே. இந்திய அளவில் தலித் இலக்கிய முன்னோடி ஆக்கங்களான தயா பவாரின் சுயசரிதை நாவலான பலுதா,  அரவிந்த மாகளகத்தியின் தன்வரலாறான கவர்மெண்ட் பிராமணன் [தமிழில் பாவண்ணன்] போன்றவற்றுடன் இந்நாவலை ஒப்பிடலாம். அதனூடாக இந்நாவலை மேலும் அணுகி அறியமுடியும்

அதேசமயம் எந்தப்படைப்பையும் இவ்வாறு புற அடையாளம் கொண்டு சுருக்கமுடியாது. சிவகாமியோ ராஜ்கௌதமனோ இமையமோ தலித் எழுத்தாளர்கள் என்று மட்டுமே பார்க்கப்பட்டால் நம் வாசிப்பு குறுகிவிடும். அவை மானுடநிலைமையை ஓர் எல்லைவரை நகர்த்திச்சென்று அடிப்படைக் கேள்விகளை உசாவிக்கொள்ளும் புனைகதைகள்தான். அப்படிப்பார்த்தால் தலித் வாழ்க்கை, தன்வரலாற்றுத்தன்மை ஆகியவைகூட புனைவின் பாவனைகளே. ஆசிரியரை முழுமையாக அகற்றி இந்தப்பிரதிகளை வெறுமே புனைவுகள் என்று மட்டுமே பார்த்து வாசிப்பதும் நன்று

அப்படி வாசிக்கையில் இவை எவ்வாறு ஒரு தன்வரலாற்றை கட்டி எழுப்புகின்றன, இவை எதை நோக்கி விரிகின்றன, எதை ஏற்கின்றன என்று பார்க்கலாம். பிச்சைப்புகினும் கற்கைநன்றே என்ற அடிப்படையைக் கொண்ட நாவலாக சிலுவைராஜ் சரித்திரத்தைக் காணலாம். அனைத்தையும் எள்ளிச்செல்லும் அதன் புனைவு கல்வியை புனிதமாகவே காண்கிறது

ராஜ் கௌதமனின் நாவலை தமிழின் புகழ்பெற்ற தன் வரலாறுகளான உ.வே.சாமிநாதய்யரின் என் சரித்திரம், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளையின் என்கதை ஆகியவற்றுடன் பொருத்திப்பார்க்கலாம். அவற்றிலுள்ள இலட்சியவேகம் இவற்றில் இல்லை, வாழ்வதற்கான முயற்சியும் சுய எள்ளலும் மட்டுமே உள்ளன என்பதை காணலாம்.  அது ஏன் என்ற வினா ஒரு நல்ல தொடக்கம்

தமிழில் தன்வரலாற்றுநாவல்கள் பெரும்பாலும் இல்லை. அது ஏன் என்பது இன்னொரு கேள்வி. இலக்கியத்தில் புகழ்பெற்ற எவருமே தன்வரலாற்றுநாவல்களை எழுதாமல்போனமைக்கு என்ன காரணம்? அந்தக்காரணம்தான் ராஜ் கௌதமனை எழுதவைக்கிறதா?

இவ்வாறு ஒருபடைப்பை மேலும் மேலும் விரிவாக்கிக்கொள்வதே விமர்சனம். அத்தகைய விமர்சனங்கள் வழியாகவே ஒரு சமூகத்தின் கூட்டுவாசிப்பில் படைப்புகள் பேருருவம் கொள்கின்றன. ராஜ் கௌதமனின் நாவல் மூலத்தன்மை கொண்ட படைப்பு.

ஜெ

***

விளக்கு விருதுகள் ராஜ் கௌதமன், சமயவேல்

ராஜ்கௌதமனின் இரு நூல்கள்

ராஜ் கௌதமன் -கடிதங்கள்

***

 

முந்தைய கட்டுரைபேலியோ -ஓர் அனுபவக் கடிதம்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–33