சிறுகதை விவாதம் முடிவு

download (1)

இத்தளத்தில் நிகழ்ந்த சிறுகதைகள் குறித்த விவாதத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். இன்னும் இரண்டு கதைகளும் பதினெட்டு தொகுதி கடிதங்களும் இருந்தன. அவை வெளியாகாது.இனிமேல் இத்தளத்தில் இவ்வாறு ஏதும் நிகழாது. அருண்மொழியின் ஆலோசனை, இம்முறை அவள் சொல்வதைக் கேட்கலாமென நினைக்கிறேன்.

இதை தமிழ்ச்சிற்றிதழ்ச்சூழலில் அரைநூற்றாண்டாக நிகழ்ந்துவந்த கறாரான இலக்கிய விமர்சனங்களின் நீட்சியாகவே நான் எண்ணினேன். இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் மிகக்கடுமையாக விமர்சித்துக்கொண்ட எழுத்தாளர்கள் இன்றும் எழுதுகிறோம், நட்புடனும் இருக்கிறோம். எங்கள் விமர்சனக் கடிதங்களை இன்றுவாசிக்கையில் ஆச்சரியமாக உள்ளது, அதிலுள்ள சமரசமின்மை. அது இப்போதும் நிகழட்டுமென நினைத்தேன்

என் கதைகளுக்கு மிகக்கடுமையான விமர்சனங்கள் வந்துள்ளன. கிளிக்காலம் கணையாழியில் வெளியானபோது அந்த ஆண்டு தமிழில் வெளிவந்த சிறுகதைகளில் ஆகமோசமானது அது என வாசகர்களால் அது தெரிவுசெய்யப்பட்ட செய்தி அதில் வெளியானது.

அந்தக் கடிதங்களை தெரிவுசெய்து வெளியிட்ட அசோகமித்திரன் டி.எச்.லாரன்ஸின் கதைகளுக்கு அவ்வாறு எதிர்ப்பு வந்ததைச் சுட்டிக்காட்டி ”உன் எழுத்துமேலே நம்பிக்கை இருந்தால் சரி. அந்தக்கதையின் ஆன்மாவை புரிந்துகொண்டவன் மட்டுமே உன் வாசகன்” என எழுதியிருந்தார்.அதேசமயம் அன்று வாசகராக இருந்த எஸ்.ராமகிருஷ்ணன் அது எனது நல்ல கதை என கடிதம் எழுதியிருந்தார். சுந்தர ராமசாமி “இதைத்தான் எழுதப்போறேள்னா எழுதவே வேணாம்” என்று தொலைபேசியில் அழைத்து கருத்து சொன்னார்.எனக்கு அக்கதைமேல் நம்பிக்கை இருந்தது

என் கதைகளில் அதேயளவு எதிர்மறை விமர்சனம் பெற்றகதை படுகை. ஆனால் அதன் அழகியல் புதிது என்றும் அன்றிருந்த கணையாழி பாணி அழகியலுக்கு அது மாற்று என்றும் நான் நம்பினேன். ஆகவே அந்த விமர்சனங்களைப் பொருட்படுத்தவில்லை. அதேசமயம் என் ஆரம்பகாலக் கதைகளில் கிட்டத்தட்ட 12 கதைகளை நான் எந்த தொகுப்பிலும் சேர்க்கவில்லை. இன்று அவற்றில் பெரும்பாலும் எவையும் கிடைப்பதுமில்லை. ஏனென்றால் விமர்சனங்கள் வழியாக அவை சரியாக அமையவில்லை என நான் புரிந்துகொண்டேன்.

நான் எண்ணியது அந்தவகையான எதிர்வினையை.உரையாடலை. எழுத்தாளனுக்கு என ஒரு திமிர்வேண்டும். தன் எழுத்தின் மீதான, தன் மீதான விமர்சனங்களை எதிர்கொள்வதற்கான நிமிர்வு அது.தன் படைப்பின் நுட்பத்தைப் புரிந்துகொண்டவன் என அவன் எண்ணும் விமர்சகனின் கருத்தை மட்டும் அவன் பொருட்படுத்தினால்போதும். ஆனால் படைப்பு எந்தெந்த வகையிலெல்லாம் வாசிக்கப்படுகிறது, சமூகமனம் எப்படி புரிந்துகொள்கிறது என்பதை எதிர்வினைகளின் வழியாக அவதானிப்பது அவனை மேலும் கூர்மையாக்கும். அதற்கு நட்பற்ற, கட்டுப்பாடுகளற்ற பொது எதிர்வினைகள் முக்கியமானவை.

ஆனால் இந்தத் தலைமுறையில் அச்சூழல் இல்லை எனத் தெரிகிறது. சமூக ஊடகங்கள் வழியாக உருவான உச்சகட்ட துருவப்படுத்தல்கள், மிகையுணர்ச்சிகளால் ஆனது இன்றைய கருத்துலகு. ஒரு விமர்சனம் வந்ததுமே எழுத்தாளனைச் சார்ந்தவர்கள் கொதிக்கிறார்கள். சூழலில் உள்ள வெறுப்பாளர்கள், வம்பாளர்கள் அனைவரும் உள்ளே நுழைந்து எதையுமே பேசமுடியாமலாக்குகிறார்கள். ஒவ்வொரு வரியையும் திரிக்கிறார்கள். அதன்பின் விவாதங்களுக்கு இடமே இல்லை. கருத்து சொல்பவன் தன் நேர்மையை ஒவ்வொருமுறையும் வாதிட்டு நிரூபிக்கவேண்டும் என்றால் இலக்கியமதிப்பீட்டுக்கே இடமில்லை

இந்த வெறுப்பும் காழ்ப்பும் திரிபும் மிகையாக எழுந்து சூழ்கையில் எழுத்தாளனே அந்த உணர்வுகளால் அடித்துச்செல்லப்படுகிறான். அவனுக்கே இவ்வெதிர்வினைகளின் சாராம்சம் என்பது என்ன என்று புரிவதில்லை. எந்த வாசகனும் எழுத்தாளனிடம் இல்லாத ஒரு கருத்தியல், அழகியல் வளையம் கொண்டவனே. அதில் ஒரு புதியகதை உருவாக்குவது அதிர்வை. பலசமயம் அது எதிர்மறை அதிர்வை. அவன் எதிர்வினையாற்றுவது அதற்கே. ஆனால் இலக்கியம் என்பதே அத்தகைய உரையாடல்தான்

இலக்கியத்தில் கருத்தியல்குழுக்கள் இங்கே இருந்தன. இன்றிருப்பதுபோல சாதிசார்ந்த, மதம்சார்ந்த குழுசேரல்கள் நவீனத்தமிழிலக்கியச் சூழலில் முன்பு இருந்ததில்லை.அவை முன்னே ஒலிப்பதுவரை பொதுவெளியில் இலக்கியவிவாதம் சாத்தியமே இல்லை. இன்றுகாலை முதல் வந்த கடிதங்கள் எனக்கு முற்றிலும் புதியவை.

தன் கலையில் நம்பிக்கை கொண்ட எழுத்தாளன் ஒருபோதும் இத்தகைய குழுக்களைச் சார்ந்து இயங்கலாகாது. ஏதோ ஒருவகையில் அவன் மானுடம்நோக்கியே பேசவேண்டும். என்ன இருந்தாலும் இலக்கியம் ஓர் இலட்சியவாதச் செயல்பாடு. குறுங்குழுமனநிலை அதற்கு உதவாது.

இளம் எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள், அவர்கள் தங்கள் விவாதங்களை கூடுமானவரை பொதுநோக்குக்கு வராமல் தனிச்சூழலில் வைத்துக்கொள்ளும்படி கோருகிறேன்.

முந்தைய கட்டுரைவிஜி வரையும் கோலங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–32