வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–36

 பகுதி ஆறு : பொற்பன்றி – 1

bl-e1513402911361மாலைவெயில் மஞ்சள் கொள்ளத்தொடங்கியபோது அணிப்படகில் சிந்துநாட்டிலிருந்து துச்சளை அஸ்தினபுரியின் எல்லைக்காவலரணான ஹம்ஸதீர்த்தத்திற்கு வந்தாள். அவளுக்குப் பின்னால் சற்று தொலைவில் ஜயத்ரதனின் அரசப்படகு வந்து ஒருநாழிகைக்குப் பின் கரையணைந்தது. சிந்துநாட்டின் காவல்படையும் ஏழு அகம்படியர் குழுக்களும் அவர்களுடன் வந்தன. அவர்கள் சிந்துவழியாக வடக்கே சென்று அங்கிருந்து தேர்களில் வாரணவதம் வந்து பெரும்படகுகளில் கங்கைப்பெருக்கினூடாக ஹம்சதீர்த்தத்திற்கு வந்தனர்.

ஹம்சதீர்த்தத்தில் அரசகுடியினருக்கு மட்டும் உரிய படித்துறையில் அவர்களை எதிரேற்க அஸ்தினபுரியின் அமைச்சர் மனோதரர் சிறிய காவல்படையினருடன் வந்திருந்தார். அவருடன் வந்திருந்த அணிச்சேடியர் எழுவர் ஐந்து நிலமங்கலங்கள் அமைந்த தாலங்களுடன் அவளை எதிர்கொண்டனர். இசைச்சூதர் மங்கலம் முழங்கினர். வாழ்த்தொலிகளும் குரவையோசையும் எழுந்தன.

சிந்துநாட்டுக்குரிய கரடிக்கொடி பறந்த பெரும்படகிலிருந்து கையில் நெல்மணிகள் நிறைந்த சிறுநாழியுடன் இறங்கி வந்த துச்சளையை வணங்கி “தங்கள் நிலத்திற்கு மீண்டும் வந்துள்ளீர்கள் அரசி, இந்நாளை திருமகள் வாழ்த்துக!” என்றார் மனோதரர். மறைந்த அமைச்சர் லிகிதரின் மைந்தராகிய அவரை இளமையிலேயே துச்சளை அறிந்திருந்தாள். அவளுடைய களித்தோழரும்கூட. புன்னகைத்து “அம்பையும் மைந்தரும் நலம் அல்லவா, மானு?” என்றாள். அந்த முறைமைமீறிய சொல்லால் சற்று திகைத்து உடனே மலர்ந்து “ஆம் அரசி, நன்றாக இருக்கிறார்கள். இங்கு வரப்போவதை சொன்னபோது மகிழ்ந்தனர்” என்றார்.

“இளையவள் சமுத்ரைக்கு இப்போது பதினான்கு அகவை அல்லவா? ஏதாவது பார்க்கிறீர்களா?” என்று மெல்ல நடந்தபடி துச்சளை கேட்டாள். “நிமித்திகர் அவளுக்கு இன்னும் இரண்டு அகவை கடந்தபின்னரே மங்கலநாண் ஏறும் என்றனர். ஆகவே பொறுத்திருக்கிறோம்” என்ற மனோதரர் “சாம்யகன் சென்ற ஆண்டே குருநிலையிலிருந்து வந்துவிட்டான். அரண்மனையில் அமைச்சுத்தொழில் பழகும்பொருட்டு அமைச்சர் கனகரின் கீழே சேர்த்துவிட்டிருக்கிறேன்” என்றார். “நன்று, கனகர் என்றால் விதுரரின் நிழல்” என்றபடி துச்சளை தன் பெரிய உடலை மெல்ல அசைத்து நடந்தாள்.

அவள் கைகள் இரு கரிய குழந்தைகள்போல தோளுக்குக் கீழே தெரிந்தன. கழுத்து இடுங்க தலை நெஞ்சின்மேல் அமர்ந்திருந்தது. கழுத்துக்களின் மடிப்பில் தோல் உரசி வடுக்கொண்டு பாறைவெடிப்புபோல தோன்றியது. உடலுக்கு ஒவ்வாமல் அவள் முகம் கைக்குழந்தைகளுக்குரிய செழுமையும் மலர்வும் கொண்டிருந்தது. சிரிப்பொழியா விழிகளும் சிறிய பற்கள்கொண்ட வாயும் குவிந்த முகவாயும் அவளை நோக்கியவர்களின் முகங்களை அக்கணமே மலரச்செய்தன. அவளை வரவேற்க வந்திருந்த அணிச்சேடியரும் சூதரும் அவள் முகத்தையே நோக்கியபடி நின்றிருந்தனர். அப்பால் படகின் வடங்களை இழுத்த குகர்களும் துலாமேடைகளில் நின்றிருந்த ஏவலரும் அவள் முகத்திலிருந்து விழியகற்றவில்லை.

நடைபலகையை கடந்து வந்து அஸ்தினபுரியின் மண்ணில் கால் வைத்ததும் நிறைநாழியை அருகே நின்றிருந்த சேடியிடம் அளித்துவிட்டு குனிந்து அஸ்தினபுரியின் மண்ணைத் தொட்டு நெற்றியிலும் வகிட்டிலும் இட்டாள். “அன்னையே, தெய்வங்களே” என வணங்கிய பின் “தேர் வந்துள்ளதல்லவா?” என்றாள். “ஆம், முடிந்தவரை படித்துறையின் அருகிலேயே வரவேண்டும் என்று ஆணையிட்டேன்” என்றார் மனோதரர். “அரசி நெடுந்தொலைவு நடக்கவியலாது என்றேன்” என்று சொல்லி உதடுகளுக்குள் புன்னகைத்தார்.

துச்சளை வாய்விட்டு நகைத்து “நான் இதே நிலத்தில் பலமுறை அங்குமிங்கும் ஓடியவள்தான்… அங்கே சிந்துநாட்டில் வெளியே செல்வதே இல்லை. எப்போதும் அரசமர்தல். அரசருக்கு வேட்டையிலும் நதியில் விரைவுப்படகோட்டுவதிலும் மட்டுமே ஈடுபாடு. உடல் பருக்காமல் என்ன செய்யும்?” என்றாள். “மேலும் என் தந்தையும் தாயும் பேருடலர்கள்.” மனோதரர் “ஆம், அதைத்தானே நானும் சொன்னேன்” என்றார். “நீர் எதை எண்ணிச் சொல்வீர் என எனக்கு நன்றாகவே தெரியும், மானு” என்றாள் துச்சளை. “மெய்யாகவே நடக்கமுடியவில்லை… களைப்புற்றுவிட்டேன். எத்தனை நீண்ட பயணம். இங்கு வரவேண்டுமென நினைப்பேன், இந்தத் தொலைவை எண்ணியதுமே கைவிடுவேன். எட்டாண்டுகள் அப்படியே ஓடிச்சென்றன… தந்தை எப்படி இருக்கிறார்?”

மனோதரர் “அரசர் சற்று உடல்நலம் குன்றித்தான் இருக்கிறார். மைந்தர்களின் சொல்கேளாமை அவரை துயருறச் செய்துள்ளது” என்றார். துச்சளை “ஆம், அது இயல்பே” என்றபின் “அன்னை?” என்றாள். “அவர்கள் எப்போதுமே நிலைபெயர்வதில்லை” என்றார் மனோதரர். “ஆம், தன்னந்தனியாக நிற்கும் கலையறிந்தது தாலிப்பனை” என்றாள் துச்சளை. மூச்சிரைக்க நின்று திரும்பிநோக்க அருகே நின்ற சேடி ஒரு மென்துகிலை அளித்தாள். அதை வாங்கி தன் நெற்றியையும் கழுத்தையும் துடைத்துக்கொண்டாள். “மெய்யாகக் கேட்கிறேன் மானு, மிகையாக பருத்திருக்கிறேனா?”

மனோதரர் “மிகையாக எல்லாம் இல்லை…” என்றார். “உண்மையை சொல்க!” என்றாள் துச்சளை. “உண்மையை சொல்வதானால் ஆம்” என்றார் மனோதரர். “பின் நீர் முன்னால் சொன்னது என்ன?” என்றாள் துச்சளை சிறுசினத்துடன். “அதை நாங்கள் அவையுண்மை என்போம்” என்றார் மனோதரர் புன்னகைத்தபடி. துச்சளை சிரித்து “அந்தணர் நாவுகள் மீன்செவிள்கள்போல. அவர்களை ஏந்திச்செல்பவை அவை” என்றாள். தேரை அணுகியதும் நின்று “என்ன வெயில்… உச்சிப்பொழுதுபோல் காய்கிறது” என்றாள். “தேர் ஓடத்தொடங்கினால் காட்டுத்தென்றல் குளிராக இருக்கும், அரசி” என்றார் மனோதரர்.

தேரிலேறிக்கொண்டதும் உடலை மெல்ல எளிதாக்கி சாய்ந்துகொண்ட துச்சளை அருகே அமர்ந்த சேடியிடம் “நான் சற்று ஓய்வெடுக்கிறேன், சாரிகை” என்றாள். “மாளிகை மிக அருகில்தான் என்றார்கள், அரசி. கங்கைக்கரையில் நின்றாலே தெரியும் என்று காவலன் சொன்னான்” என்றாள். “சரி, எனக்கு களைப்பாக இருக்கிறது” என்றாள் துச்சளை. அவள் உடனே துயின்று மெல்லிய குறட்டையோசை எழுப்பத் தொடங்கினாள். எங்கு எப்போது அமர்ந்தாலும் துயிலும் வழக்கம் அவளுக்குண்டு என்பதை சாரிகை அறிந்திருந்தாள். துச்சளை இரவில் முழுமையாக துயில்வதில்லை. படுக்கையில் புரண்டும் அவ்வப்போது எழுந்து அமர்ந்தும் நீர் அருந்தியும் இரவை கழிப்பாள். துயில்கையில் அவளுடைய நீள்குறட்டை அறியாத விலங்கொன்றின் குரல் என ஒலிக்கும்.

அவள் காலடியில் சிறுமஞ்சத்தில் சாரிகை இரவுறங்குவாள். இரவெல்லாம் எழுந்து எழுந்து அவளுக்கு பணிவிடை செய்யவேண்டியிருக்கும். ஆகவே பிற்பகலில் இன்னொரு சேடி ஏவல் செய்ய அவள் சென்று அடுமனை அருகே உள்ள சிற்றறையின் இருளில் துயின்று மாலையில்தான் எழுந்து வருவாள். துச்சளை “நல்லுறக்கமா?” என்பாள். “நீங்கள் ஏன் ஆழ்ந்துறங்குவதில்லை, அரசி?” என்று சாரிகை ஒருமுறை கேட்டாள். “தெரியவில்லை. உள்ளம் ஓய்ந்து துயிலெழுந்ததுமே நெஞ்சின்மேல் ஒரு யானை மிதித்து அழுத்துவதுபோல் உணர்வேன்” என்றாள் துச்சளை. “இச்சிக்கல் என் அன்னைக்கும் உள்ளது. அவர்களும் ஆழ்ந்துறங்குவதில்லை. பகலெல்லாம் சிறுதுயில்களில் ஆழ்ந்து பொழுதுநீக்குவார்.”

மாளிகை முகப்பை அடைந்ததும் சாரிகை எழுப்புவதற்குள்ளாகவே துச்சளை விழித்துக்கொண்டாள். “மாளிகையா?” என்றபின் “என் பேழையை கையிலேயே எடுத்துக்கொள்ளடி” என்றபடி இருக்கையில் கையூன்றி உடலை உந்தி எழுந்தாள். தேர்த்தூணைப் பற்றியபடி நின்று ஆடையை இடையில் செருகிக்கொண்டு பெருமூச்சுவிட்டாள். “சென்றுகொண்டே இருப்பதுபோலிருக்கிறது… எவ்வளவு தொலைவு வந்துவிட்டோம்” என்றாள். “நாளை நாம் அரண்மனைக்குச் சென்றுவிடுவோம்” என்றாள் சாரிகை.

“ஆம், அங்கே முறையான அரசவரவேற்பு இல்லாமல் சைந்தவர் நகர்புகமாட்டார் என்றார்” என்றாள் துச்சளை. “ஏனென்றால் இப்போது இவர்கள் அளிக்கும் வரவேற்பைக் காண அங்கே ஏராளமான ஷத்ரிய அரசர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் அறியவேண்டும், அஸ்தினபுரிக்கு சைந்தவர் எவர் என. அதையொட்டியே நாளை நிகழும் போரில் படைமுதன்மையும் போருக்குப் பின் அவைமுதன்மையும் அமையும்” என்ற துச்சளை “பெண்களின் ஆணவம் சிறுமதியால் எழுவது. ஆண்களின் ஆணவம் பெரும்போக்கால் எழுவது. முந்தையதை விட பிந்தையது மேலும் கெடுமணம் கொண்டது” என்றாள்.

சாரிகை புன்னகைத்து “மெல்ல, அரசி” என்றாள். தேருக்குக் கீழே மரத்தாலான படி அமைக்கப்பட்டது. துச்சளை அதில் மெல்ல காலெடுத்து வைத்து இறங்கிநின்று மாளிகையை நோக்கினாள். காவலர்தலைவன் “ஹம்சதீர்த்தத்தின் காவல்மாளிகைக்கு நல்வரவு, அரசி” என்றான். “இது புதியதா என்ன?” என்றாள். காவலர்தலைவன் தலைவணங்கி “ஆம், அரசி. இதை அமைத்து ஏழு ஆண்டுகளே ஆகின்றன. இந்த காவலரண் அதற்கு ஓராண்டுக்கு முன் அமைக்கப்பட்டது. இதேபோன்று எல்லை முழுக்க நாநூறு காவலரண்களும் மாளிகைகளும் உள்ளன” என்றான்.

மாளிகைக்குள் இருந்து மூன்று அணிச்சேடியர் மங்கலத்தாலங்களுடன் வந்து அரசியை எதிரேற்றனர். அவள் தாலச்சுடரை தொட்டு விழியொற்றி வணங்கி “இங்கே சேடியர் உள்ளனரா?” என்றாள். “தங்கள் வருகைக்காக அமர்த்தப்பட்டவர்கள், அரசி” என்றான் காவலர்தலைவன். “உன் பெயர் என்ன?” என்றபடி துச்சளை கல்படிகளில் ஏறினாள். “வக்த்ரன், அரசி” என்றான் அவன். “இப்போதுதான் நூற்றுவர்தலைவனாக ஆனாயோ?” என்றாள். “ஆம் அரசி, எட்டுமாதமே ஆகிறது.” துச்சளை “உன் துணைவி பெயர் என்ன? மைந்தர்கள் உள்ளனரா?” என்றாள். அவன் முகம்மலர்ந்து “சாந்தை என்று பெயர். நான் கிருஷ்ணை என அழைப்பது. ஒரு மைந்தன், ஓராண்டு அகவையன். சுதன் என்று அழைக்கிறேன்” என்றான்.

அவள் கைநீட்ட சாரிகை ஒரு பேழையிலிருந்து ஒரு பொன்நாணயத்தை எடுத்து அளித்தாள். அவள் அதை வக்த்ரனிடம் அளித்து “இதைக்கொண்டு அவனுக்கொரு சிறு கணையாழி செய்துகொள்க… நான் வாழ்த்தியதாக அவன் அன்னையிடம் கூறுக!” என்றாள். வக்த்ரன் அதை வாங்கி கண்களிலும் தலையிலும் வைத்துக்கொண்டு “என் மைந்தன் நற்பேறு கொண்டவன் என்று நிமித்திகர் சொன்னார்கள். இப்போது அறிகிறேன், அரசி” என்றான். “நலம் சூழ்க!” என வாழ்த்திவிட்டு பெருமூச்சுடன் கூடத்தில் நின்று இடையில் கைவைத்து “பெரிய கூடம்… மறு எல்லையை அடையவே நீள்தொலைவு செல்லவேண்டும் போலுள்ளது” என்றாள்.

“வருக, அரசி” என்று சேடி ஒருத்தி வணங்கி அவளை உள்ளே அழைத்துச்சென்றாள். அவள் திரும்பி வக்த்ரனிடம் “சைந்தவர் கரையிறங்கி இந்த மாளிகைக்குத்தான் வருவாரா?” என்றாள். “இல்லை அரசி, அவர் இந்த மாளிகைக்கு அப்பாலிருக்கும் சற்றுபெரிய மாளிகைக்கு செல்வார். காலையில் கிளம்புகையில்தான் அனைவரும் ஒன்றாக நகர்புகவிருக்கிறீர்கள்” என்றான். “நன்று, அவர் அரண்மனை அமைந்ததும் மனோதரரை நான் காணவிழைவதாக அவரிடம் சொல்” என்றாள்.

உடலை அசைத்தபடி நடந்து கூடத்தின் மறு எல்லையை அடைந்து இடையில் கையூன்றி நின்று “என்னடி இது, நடக்க நடக்க வந்துகொண்டே இருக்கிறது!” என்றாள். “இன்னும் சற்றுதொலைவுதான், இந்த அறை மட்டுமே பெரிது, அரசி” என்றாள் சேடி. மேலும் நடந்து மூச்சுவாங்க சுவர் மடிப்பை பற்றிக்கொண்டு நின்றாள். “நான் நீராடவேண்டுமடி… வியர்வையில் நனைந்துள்ளது உடல்” என்றாள். சாரிகை “இங்கே சிறிய நீராட்டறை உள்ளது, அரசி” என்றாள்.

bl-e1513402911361நீராடி தூக்குகட்டிலில் போடப்பட்ட மெத்தைமேல் பெரிய தலையணைகளில் உடல்சாய்த்து துச்சளை படுத்திருந்தாள். சாரிகை துயில்கொள்ளப்போயிருந்தாள். இன்னொரு சேடியான சூர்யை அவளை மெல்ல ஆட்டிக்கொண்டிருந்தாள். துச்சளையின் குறட்டை ஓங்கிச்சென்று முட்டி நின்றது. அவள் உடல் ஒருமுறை உலுக்கிக்கொண்டது. விழித்து எழுந்து சிவந்த விழிகளால் நோக்கி “என்னடி?” என்றாள். “ஒன்றுமில்லை, அரசி” என்றாள் சூர்யை. மீண்டும் துச்சளையின் விழிகள் மூடிக்கொண்டன. குறட்டை ஓசை எழத்தொடங்கியது. காவலன் வந்து அமைச்சரின் வருகையை அறிவித்தான். சூர்யை “அரசி” என்றாள். சிறு ஒலிக்கும் துச்சளை எழுந்துவிடுவாள். “என்னடி?” என்றாள். “அமைச்சர் வருகிறார், அரசி” என்றாள். “நன்று” என்று சொல்லி காவலனிடம் “அவரை வரச்சொல்க!” என்று சொல்லி புன்னகைத்தபின் சூர்யையிடம் கைநீட்டினாள். அவள் நீட்டிய மர யானத்தில் இருந்த நீரில் முகத்தைக் கழுவி மரவுரியில் துடைத்துக்கொண்டாள். மனோதரர் விரைந்த காலடிகளுடன் வந்து வணங்கி “சற்று பிந்திவிட்டேன், அரசி” என்றார். “அமர்க, அமைச்சரே!” என்றாள் துச்சளை.

மனோதரர் அமர்ந்துகொண்டு “அரசருக்குரிய அனைத்தையும் இயற்றிவிட்டு கிளம்பினேன். நாளை முதலிருளிலேயே இங்கிருந்து கிளம்புகிறோம். புலரியில் நகர்நுழைவு. அங்கே கோட்டைமுகப்பிலேயே துச்சாதனர் உடன்பிறந்தாருடன் வந்து வரவேற்பார். பட்டத்து யானையும் புரவியும் வரவேண்டுமென்று ஆணையிடப்பட்டுள்ளது” என்றார். துச்சளை “நன்று, அங்கே என்ன நிகழ்கிறது? நான் ஒற்றர்களிடமிருந்து அறிந்திருக்கிறேன். உங்கள் மதிப்பீட்டை கேட்க விழைகிறேன்” என்றாள்.

“அரசி, இன்னும் நான்கு நாட்களில் அஸ்தினபுரியில் ஷத்ரியர் பேரவை கூடவிருக்கிறது. பெரும்பாலான அரசர்கள் முன்னரே நகருக்குள் வந்துவிட்டனர். முறையான அவை கூடவில்லை என்றாலும் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அரசர் அவைகளில் கூடிப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஷத்ரியப் பேரவையில் போர் அறிவிப்பு எழும் என்று சொல்லப்படுகிறது. அதில் முழுப் படைத்தலைமை கொள்ளவேண்டியவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். பீஷ்மபிதாமகர், துரோணர், கிருபர், சல்யர், சைந்தவர், அஸ்வத்தாமர் ஆகியோர் முன்னிறுத்தப்படுவார்கள் என்கிறார்கள்.”

“அங்கர்?” என்றாள் துச்சளை. “அவரை இப்போது முன்னிறுத்த இயலாது. அதை பீஷ்மர் விரும்பவில்லை. அத்துடன் அவருக்குக் கீழே அணிதிரள ஷத்ரியர் ஒப்பமாட்டார்கள்” என்றார் மனோதரர். “அத்துடன் அவருடைய உடல்நிலையும் உளநிலையும் உகந்ததாகவுமில்லை. சென்ற பதினான்காண்டுகளாக அவர் மதுவிலேயே வாழ்கிறார். வில்லை கைதொட்டே நெடுநாட்களாகின்றன என்கிறார்கள். விராடபுரியை வெல்லும்பொருட்டு படைகொண்டு சென்றபோது அவருடைய அம்புகளில் பல குறிதவறியதை படைவீரர்கள் இளிவரலுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.”

“ஆம், அறிந்தேன்” என்று துச்சளை பெருமூச்சுடன் சொன்னாள். “ஒவ்வொரு அரசரும் போருக்குக் கொண்டுவரும் படைகளின் அளவும் ஆற்றலும் எண்ணி வகுக்கப்படும். அவை குறிக்கப்பட்ட பொதுநீட்டு அனைவருக்கும் எழுதியளிக்கப்பட்டு முத்திரைச்சாத்து பெறப்படும். ஏனென்றால் போருக்குப்பின் அதனடிப்படையிலேயே நிலமும் கப்பமும் பகிர்ந்துகொள்ளப்படவேண்டும்” என்றார் மனோதரர். “அவையில் போருக்குரிய அனைத்து அடிப்படைகளும் பேசி முடிக்கப்படும். போர் முறையாக அறிவிக்கப்பட்டு செம்முரசு கொட்டப்பட்டுவிட்டதென்றால் போர் தொடங்கிவிட்டதென்றே பொருள். வெற்றியோ தோல்வியோ உடம்பாடோ இல்லாமல் பின்னர் அதை நிறுத்தமுடியாது.”

“ஆம், ஆகவேதான் உடனே போரை அறிவித்தாகவேண்டும் என சைந்தவர் துடிக்கிறார். சிந்துநாடு நிலமில்லாமல் சேற்றுக்குள் சிக்கிய யானைபோலிருக்கிறது என எண்ணுகிறார். சைந்தவப் படைகளை நன்கு பழக்கிவிட்டார் என நம்புகிறார். கூர்தீட்டப்பட்ட பின் வாள் நெடுங்காலம் காத்திருக்கவியலாது என்று அடிக்கடி சொல்கிறார்” என்றாள் துச்சளை. “அவ்வாறு ஒவ்வொருவருக்கும் கணக்குகள் உள்ளன. கூர்ஜரரும் மாளவரும் சைந்தவரும் யாதவர்களின் நிலங்களில் பெரும்பகுதியை தாங்கள் கொள்ளவேண்டுமென கணக்கிடுகிறார்கள்.”

“கணக்குகள் இல்லாதவர்களே இல்லை, அரசி” என மனோதரர் சொன்னார். “சேதிநாடு மச்சர்நிலங்களை நோக்குகிறது. பால்ஹிகர்கள் பாணாசுரரின் ஆசுரம் முழுக்கவே தங்களுக்கென எண்ணுகிறார்கள். திரிகர்த்தர்கள் பாஞ்சாலத்தை எண்ணமிட அஸ்வத்தாமர் பாஞ்சாலத்தின் ஒருங்கிணைந்த அரசராக ஆவதே துரோணரின் இலக்காக உள்ளது… போருக்குப் பின் மீண்டுமொரு போர் நிகழ்ந்தாலும் வியப்பதற்கில்லை.” துச்சளை புன்னகைத்து “போருக்குப் பின் போரிட இவர்கள் எவரும் இருக்கப்போவதில்லை” என்றாள்.

மனோதரர் “அரசி, சூதர்களின் சொல்லை நம்பவேண்டியதில்லை. இன்றிருக்கும் படைக்கூட்டுபோல ஒன்று இதற்கு முன் பாரதவர்ஷத்தில் அமைந்ததே இல்லை. இதை வெல்ல எவராலும் இயலாது. உண்மையில் இன்றைய இடர்பாடே அத்தனை அரசர்களும் இப்பக்கம் வந்துவிட்டனர் என்பதும் வென்றபின் அவர்கள் பங்கிட்டுக்கொள்ள போதிய நிலம் இல்லை என்பதும்தான்” என்றார். துச்சளை “இதற்கு முன் இளைய யாதவரைப்போன்ற ஒருவர் எழுந்ததில்லை” என்றாள்.

மனோதரர் “நான் இதை விந்தையுடன் பார்க்கிறேன். எந்தப் பெண்ணும் இளைய யாதவரை வெல்லமுடியுமென்பதை நம்புவதில்லை” என்றார். “ஏனென்றால் அவர்கள் அவரை அணுகியறிவார்கள்…” என்றாள் துச்சளை. “அவர் இங்கு வருகிறார் என்றார்கள்.” மனோதரர் “ஆம், சென்றமுறை வந்தபோதே இங்கு பேரவையில் அரசர் முற்றறிவித்துவிட்டார். ஒரு பிடிமண்ணோ ஒரு கழஞ்சுப்பொன்னோ அளிக்கப்படமாட்டாது என. அவர் மீண்டும் ஒரு கோரிக்கையுடன் வருவதாகத் தெரிகிறது. சற்று குறைவாக அளிக்கவியலுமா என்று கோரவிருக்கிறார் என்கிறார்கள். அரசர் அளிக்க வாய்ப்பே இல்லை… ” என்றார்.

“ஆனால் அவருக்கான கணக்குகள் உள்ளன. வேதநெறியை பேணுபவர்கள் என படைக்கலம் தூக்கியிருக்கும் ஷத்ரியர் குலநெறியையும் சொல்நெறியையும் மீறிய ஒருவரை எப்படி தலைமையென ஏற்கிறார்கள் என ஷத்ரிய அவையிலெழுந்து கேட்கும்பொருட்டே வருகிறார். அவர்களை அது இக்கட்டுக்குள்ளாக்கும் என்றும் அதை அஞ்சி அரசர் நிலமும் செல்வமும் அளிக்க ஒப்பக்கூடும் என்றும் அவர் கணக்கிடுகிறார்.” துச்சளை இயல்பான முகத்துடன் “ஏன் அதற்கு வாய்ப்பில்லையா?” என்றாள்.

“அரசி, இங்கே அரசர்கள் கூடியிருப்பது வேதம் காப்பதற்கா என்ன? வேதத்தில் எவருக்கு அக்கறை? வேதமென்றால் என்னவென்று எவருக்குத் தெரியும்? வேதநெறியோ ஆயிரம் கிளைகளும் விழுதுகளும் கொண்ட பேராலமரம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நெறியை சொல்வார்கள். இவர்கள் இணைவது மண்ணுக்காக. இங்கே ஒவ்வொரு ஷத்ரியநாடும் கலத்திற்குள் வளர்ந்த பூசணிபோல பிதுங்கிக்கொண்டிருக்கின்றது. பிற நிலங்களில் காலும்கையும் நீட்டி பூசலிடுகின்றது. போர் நிகழவிருப்பது அதற்கே. இது போரே அல்ல, ஒரு மாபெரும் கூட்டுவேட்டை” என்றார் மனோதரர்.

“இன்று ஷத்ரியர்கள் வென்று விரியவேண்டிய நிலத்தின் மக்களான அசுரரும் நிஷாதரும் கிராதரும் முன்புபோல படை கண்டாலே அஞ்சி ஓடுபவர்கள் அல்ல. அவர்களும் மெல்ல மெல்ல நாடுகளாக திரண்டிருக்கிறார்கள். நீர்வழியும் நிலவழியுமான வணிகப் பாதைகள் அவர்கள் அனைவரையும் இணைக்கின்றன. அடர்காடுகளுக்குக்கூட பொன் சென்றுசேர்கிறது. இரும்பின் காலம் முடிந்துவிட்டது, பொன்னின் யுகம் எழுந்துவிட்டது என்கிறார்கள். சிற்றரசுகள்கூட இன்று சுங்கம் கொண்டு கருவூலம் நிறைக்கின்றன. யவன, பீதர்நாட்டுப் படைக்கலங்களை வாங்கி கைகள் பெருக்குகின்றன.”

“எந்த ஷத்ரிய அரசும் தனித்து அவர்களை வெல்லும் ஆற்றல்கொண்டது அல்ல. அனைத்தையும்விட சென்ற ஐம்பதாண்டுகளில் யாதவர்கொண்ட எழுச்சி அத்தனை ஷத்ரியர்களையும் அச்சுறுத்துகிறது. அவர்கள் பேரரசென திரண்டுவிட்டனர். பாண்டவர் மும்முடி சூடி அரியணை அமர்ந்ததென்பது நாளை இளைய யாதவரோ அவர் மைந்தரோ மும்முடி சூடுவதற்கான முற்பாதையேதான். யாதவர் நிலைகொண்டால் பின்னர் கிராதரும் நிஷாதரும் அசுரரும் பேரரசுகளை அமைப்பார்கள். இப்போதே அதற்கான தொடக்கங்கள் உள்ளன. விராடமே அச்சுறுத்தும் முற்காட்சிதான்.”

“கடல்வணிகம் நிகழும் நாடுகள் அனைத்தும் இன்றுவரை ஷத்ரியர்களால் ஆளப்படுகின்றன. வங்கமும் கலிங்கமும் மாளவமும் கூர்ஜரமும். ஒன்றுமட்டும் விதிவிலக்கு, துவாரகை. அதைப்போல மேலுமிரு நாடுகள் எழுமென்றால் அதன்பின் இங்கே ஷத்ரியர் ஆட்சியே இல்லை. அதையறிந்தே குடிப்பெருமையும் குலமேன்மையும் சொல்லி ஆயிரமாண்டுகள் பூசலிட்ட ஷத்ரியர்கள் இன்று ஒருகுடைக்கீழ் திரள்கிறார்கள். அவர்கள் திரள்வது நிலத்துக்காகவே என அவர்களிடமிருந்தே மறைக்கவே வேதநெறி என்று பேசுகிறார்கள்” என்றார் மனோதரர்.

துச்சளை புன்னகைத்து “ஒருவேளை அதை அவர்களுக்கே தெளிவுறக் காட்டும் பொருட்டுதான் வருகிறாரா என்ன?” என்றாள். “அரசி, வேதம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல என்று ஏன் சொல்கிறேன் என்றால் சின்னாட்களுக்கு முன் நம் அரசர் தன்னை தன் தெய்வமாகிய கலிதேவனுக்கு முற்றளிப்பதாக அவையில் அறிவித்தார். கலிதேவன் வேதமறுப்பு மரபிலிருந்து எழுந்த தெய்வமென்று அறியாத எவருமில்லை. அன்று அவைமுடிந்து எழுந்தபோது அமைச்சர் அனைவரும் கூடி அதைக் குறித்தே பேசிக்கொண்டார்கள்.”

“வேதமுதல்கொண்ட ஷத்ரியர் நம் அரசரை தலைவரென ஏற்கமாட்டார்கள் என்று கனகர் சொன்னார். நான் அவ்வாறு எண்ணவில்லை, ஷத்ரியர்களுக்கு வேறுவழியில்லை என்றேன். பீஷ்மரும் கிருபரும் துரோணரும் நம் பக்கமிருக்கையில் நம்மை முன்னிறுத்தியே அவர்கள் படைதிரளமுடியும், அசுரர்களையும் நிஷாதர்களையும் கிராதர்களையும் வெல்ல முடியும் என்றேன். கனகர் அவர்கள் ஏற்பார்கள் என எப்படி சொல்கிறாய் என என்னை நோக்கி எகிறினார். பிதாமகர் பீஷ்மர் ஏற்றாரல்லவா அதனால் என்றேன். அப்போதுதான் அச்சொல்லை எண்ணி அவர்கள் திகைத்தனர். ஆம், துரோணரும் மாற்றுரைக்கவில்லை என்றார் கனகர்.”

“அவ்வாறே ஷத்ரியர் எவரும் மறுப்புரைக்கவில்லை. அதை அறியாதவர் போலிருக்கிறார்கள்” என்று மனோதரர் சொன்னார். துச்சளை “மூத்தவர் அதை செய்துவிட்டாரா?” என்றாள். மனோதரர் “இல்லை அரசி, அவர் நாளை மறுநாள் கலிங்கப்பூசகர் நெறிகாட்ட மேற்குக்காட்டில் கலியின் ஆலயத்தில் முற்றளிப்புச் சடங்கு செய்யப்போவதாக சொல்கிறார்கள். ஆனால் அது அரண்மனையில் அமைச்சர் நடுவே மந்தணச்சொல்லாகவே புழங்குகிறது. கலிங்கப்பூசகர் வந்துள்ளது உண்மை. முறையான அறிவிப்பேதும் இல்லை. அச்சடங்கு நிகழ்ந்த பின்னரே அது வெளியிடப்படுமென எண்ணுகிறேன்” என்றார்.

துச்சளை பெருமூச்சுவிட்டு “தந்தையால் அதை ஒப்பமுடியாது” என்றாள். “ஆம், அவர் நோயுற்றிருப்பதே அதனால்தான் என்கிறார்கள்” என்றார் மனோதரர். “அனைவரும் சொல்லி அறிந்த கதை. தன் மைந்தர் பிறந்தபோதே அது கலியின் குழவி என அவருக்கு சொல்லப்பட்டது. தொப்புள்சரடை வெட்டியதுமே கொண்டுசென்று ஓநாய்களுக்கு உணவாக காட்டில் வீசிவிடும்படி நிமித்திகர் சொன்னார்கள். பேரரசர் குழவியை அள்ளி தன் தலைமேல் வைத்து கண்ணீருடன் தன்னைப்போலவே வெறுக்கப்பட்டது அக்குழவி, ஆகவே தானிருக்கும்வரை அக்குழவி தன் தலைமேல்தான் இருக்கும் என அறிவித்தார். இத்தனை ஆண்டுகள் தன் மைந்தர் கலிதேவனுக்குரியவர் அல்ல என்று நம்பவும் நிறுவவுமே அவர் முயன்றார். தன் மைந்தர் தன்னைப்போன்றவர் என்று எண்ணி எண்ணி தன்னுள்ளத்தில் நிறுவிக்கொண்டார். இன்று இதோ, அவர் காண மைந்தர் தந்தையை முற்றுதறி கலியை சென்றடைகிறார்” என்றார்.

“ஆம், அது ஊழென்றால் எவரால் தடுக்கமுடியும்? மானுடர் தெய்வங்களின் களிப்பாவைகள்” என்றாள் துச்சளை. மெல்ல எழுந்தபடி “நன்று மானு, நான் ஓய்வெடுக்கிறேன். நாளை சென்றதுமே தந்தையைத்தான் காணவிழைகிறேன்” என்றாள். “நலம் சூழ்க, அரசி!” என எழுந்து மனோதரர் தலைவணங்கினார்.

முந்தைய கட்டுரைநாவல் – ஒரு சமையல்குறிப்பு
அடுத்த கட்டுரைசிறுகதைகள் – கடிதங்கள்