வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–35

பகுதி ஐந்து : நிலநஞ்சு – 4

bl-e1513402911361கரேணுமதியின் அருகே மஞ்சத்தில் அமர்ந்திருந்த பிந்துமதி காலடியோசை கேட்டு எழுந்தாள். அவளுக்கு நன்கு தெரிந்த இரட்டைக்காலடியோசை. மாலதி உள்ளே வந்து ”அரசர்கள் வந்திருக்கிறார்கள், அரசி” என்றாள். அவள் ஒன்றும் சொல்லாமல் தலையசைத்தாள். நகுலனும் சகதேவனும் உள்ளே வந்ததும் பொதுவாக தலைவணங்கி சுவர் ஓரமாக விலகி நின்றாள். நகுலன் கரேணுமதியின் அருகே குறுபீடத்தில் அமர்ந்து அவள் கைகளை தன் கைகளுக்குள் எடுத்துக்கொண்டான். சகதேவன் பிந்துமதியிடம் “எப்படி இருக்கிறார்கள்?” என்றான். “துயில்கிறார்கள். உளக்கொந்தளிப்பு என்று மருத்துவச்சி சொன்னாள். அகிபீனா அளிக்கப்பட்டிருக்கிறது” என்றாள் பிந்துமதி.

சகதேவன் தலையசைத்த பின் வெளியே செல்ல பிந்துமதி அவனைத் தொடர்ந்து வெளியே நடந்தாள். அங்கே நின்றிருந்த பீமனைக் கண்டு கால் தளர்ந்து சுவர் சாய்ந்து நின்றாள். சகதேவன் விலகிச்சென்று நிற்க பீமன் அவளை நோக்காமல் தாழ்ந்த குரலில் “என்ன ஆயிற்று அவர்களுக்கு?” என்றான். பிந்துமதி “எனக்கெப்படி தெரியும்?” என்றாள். அவளுடைய அந்த எரிச்சல் அவனிடமும் உடனே எரிச்சலை உருவாக்கியது. திரும்பி தன் சிறிய கண்களால் அவளை நோக்கி “அவையிலெழுந்து அவர்கள் பேசியவை எந்த அரசியும் பேசாதவை. தான் வந்த குலத்தை இழித்துரைப்பதில்லை குலமகள்கள்” என்றான்.

“ஆம், மலையில் எலி பிடித்துண்ணும் குலமகள்கள் நாவடங்கிக் கிடப்பார்கள்” என்றாள் பிந்துமதி. அவளிடம் என்ன பேசுவது என்னும் திகைப்பு பீமன் முகத்திலெழுந்தது. எதிர்ச்சொல் எடுக்கையில் மட்டுமே தன் உள்ளம் கூர்மைகொள்வதை அவள் உணர்வாள். அவன் சொல்லப்போவதை நோக்கி அவள் செவிகொடுத்து விழிசரித்து உதடுகளைச் சுழித்தபடி நின்றாள். “நான் மேலும் எதுவும் சொல்ல விழையவில்லை… சேதிநாட்டு அரசியின் உளக்கொதிப்பு எதுவானாலும் அன்னையிடமோ பிறரிடமோ உரைக்கட்டும். அவர்களுக்கு உகந்த எதையும் ஆற்றவே இங்கே நாங்கள் உள்ளோம்” என்றான்.

“சிறைப்பட்டிருப்பவர்களுக்கு நல்லுணவும் ஆடையும் கவரியும் மஞ்சமும் எதற்கு?” என்றாள் பிந்துமதி. “சிறைப்பட்டிருக்கிறோம் என்பதைத்தான் அவை நாளும்பொழுதும் நினைவூட்டும்.” பீமன் “சிறைப்பட்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்கள் விடுதலை என்ன என்று கூறுக, நான் அதை அளிக்கும்படி சொல்கிறேன்” என்றான். அவள் தலைதிருப்பிக்கொண்டாள். “என்ன வேண்டும் உங்களுக்கு? சேதிநாட்டுக்கு திரும்பிச்செல்ல விழைகிறீர்களா?” என்றான் பீமன் மீண்டும். “அங்கே எங்களுக்கு முடியுரிமை இல்லை” என்றாள் பிந்துமதி.

அவன் பற்களைக் கடித்தபடி “சரி, முடிகொண்ட மன்னர் எவரையேனும் மணக்க விருப்பம் என்றால் அதையும் அறிவிக்கலாம். சேதிநாட்டில் அது இயல்வதுதான்” என்றான். அவள் சினத்துடன் ஏறிட்டுநோக்கி உதடுகள் வஞ்சத்துடன் சுருங்க “நாங்கள் இன்று பொருளற்ற உடல்கொண்டவர்களாகிவிட்டோம். அதை உங்கள் விழி சுட்டிக்காட்டுகிறது” என்றாள். “நாடுநர் உண்டு நலமழிந்த மலர்கள் பாதையில் மிதிபடும் என்பார்கள் சூதர்.”

பீமன் தன்னை அடக்கி “நீ வீணே சொல்பெருக்கிக் கொள்கிறாய்” என்றான். “ஆம், இந்த உள்ளத்தை வைத்துக்கொண்டு என்னதான் செய்வது?” என்றாள். அவன் அவள் முகத்தை நோக்க அவள் விழிதிருப்பிக்கொண்டாள். அவனை புண்படுத்தவேண்டும் என்று அவள் உள்ளம் மேலும் எழுந்தது. பீமன் மிகைசினம் கொள்ளாமல் மெல்லிய ஏளனம் கலந்த குரலில் “இது உளச்சீர்குலைவு கொண்டவர்களின் வழக்கம். எத்தனை சுழற்றினாலும் இந்த திசைநோக்கியின் முள் வடக்கேதான் சென்று நிற்கும். பேசிப்பயனில்லை, நீயும் முதுமருத்துவச்சியரிடம் பேசிப்பார்” என்றான் பீமன்.

“ஆக, எங்களை உளம்சிதைந்தவர்கள் என்று சிறையிலடைக்க எண்ணுகிறீர்கள்!” என்றாள் பிந்துமதி. “அங்கே அஸ்தினபுரியின் புகழ்மிக்க சாளரம் உள்ளதே, இந்திரப்பிரஸ்தத்திலும் அப்படி சில சாளரங்களை உருவாக்குக!” சொன்னது போதவில்லை என்று உளம் விம்ம “சாளரங்களில் அமர்ந்தவர்கள் பேறுபெற்றோர். நேராக சிதைமேடை. பிற துயர்களேதுமில்லை அவர்களுக்கு” என்றபோது அவள் குரல் உடைந்தது. மெல்லிய விம்மலோசை எழுந்தது.

பீமன் தணிந்து “இதோ பார், உன்னை எவ்வகையிலும் துன்புறுத்த நான் இங்கு வரவில்லை. உங்கள் அவைக்குரல்களால் சினம்கொண்டேன், ஆனால் அவை கலைந்ததுமே அந்த உணர்வுகளை புரிந்துகொண்டேன். எங்கள்மேல் பிழைகள் உண்டு, எங்களுக்குக் கற்பிக்கப்பட்டவற்றை செய்தமையால் எழுந்த பிழைகள். ஆண் என்றும் அரசகுடி என்றும் நாங்கள் கொண்ட ஆணவத்தால் ஆற்றப்பட்ட பிழைகள். அறியாப் பிழைகள். அவையனைத்துக்கும் உன்னிடம் பொறுத்தருள்கையை கோரவேண்டுமென்றே வந்தேன்” என்றான்.

அவளை நோக்கி தன் பெரிய கைகளை நீட்டி தலைக்குமேல் குனிந்து “நான் உன் முன் பணிந்து இதை கோருவதாகக் கொள். எவரும் கடந்தகாலத்தை திருத்திக்கொள்ள இயலாது. சூழ நிகழ்வனவற்றின்மேல் எவருக்கும் எக்கட்டுப்பாடும் இல்லை. இயன்றவரை உனக்கு உண்மையுடன் இருக்கவும் உன்மேல் அன்புகொண்டிருக்கவுமே முயன்றேன். அதிலமைந்த குறைகள் அனைத்திற்கும் பெண் என்றும் அன்னையென்றும் நின்று கனிக!” என்றான்.

அவளுக்குள் ஒரு நெகிழ்வு ஏற்பட்டது. அதை சொல்லி அக்கணத்தில் அதுவரை அறிந்திருக்காத புதிய ஓர் உலகுக்குச் செல்லமுடியும் என்று அவள் அகம் அறிந்திருந்தது. ஆனால் அதை எப்படி சொல்வடிவாக்குவதென அவள் அறிந்திருக்கவில்லை. அவள் முகத்தசைகள் பயின்றிருந்த நிறைவின்மையும் கசப்பும் காட்டும் தோற்றத்தை மாற்றிக்கொள்ளவும் இயலவில்லை. அவள் எண்ணியிராமலேயே பிந்துமதி உதட்டை மட்டும் மெல்ல சுழித்தாள்.

அந்தச் சிறுசெயல் அவன் கொண்ட அனைத்து நெகிழ்வுகளையும் அழித்தது. அவனுள் அனல் பற்றி எரியச் செய்தது. தன்னுள் எழுந்த புதிய உணர்வுநிலையை விந்தையுடன் நோக்கிக்கொண்டிருந்தமையால் அவள் அதை அறியவில்லை. அத்தருணம் மிகத் தெளிவாக அவளுக்குத் தெரிந்தது. செய்யவேண்டியதெல்லாம் ஒரு கனிவுச்சொல் எடுத்தல். அல்லது ஒரு மென்தொடுகை. அல்லது ஒரு விழிநீர்த்துளி. ஆனால் அவளுள் இருந்த ஒன்று மேலும் ஒரு அடி முன்னகர ஏங்கியது. அவனிடமிருந்து இன்னொருமொரு துளி கண்ணீரை நாடியது.

“அடிமைகளுக்கு அன்பு காட்டும் உரிமை அளிக்கப்படுவதுண்டா என்ன?” என்றாள். விழிதூக்கியபோது அவன் விழிகளில் தெரிந்த துணுக்குறலையும் சீற்றத்தையும் கண்டபோது அது ஏன் என்று அவளுக்குப் புரியவில்லை. ஆனால் உள்ளம் எச்சரிக்கை கொண்டது. அதை மீறி அவள் நா அடுத்த சொற்றொடரை உரைத்தது. “ஆணையிட்டால் கனிவையும் காட்டுகிறோம். பிறகென்ன?”

பீமன் பேரொலியுடன் தன் கைகளை ஓங்கி அறைந்துகொண்டான். அவள் அவ்வோசையில் திடுக்கிட்டாள். இறுகக் கிட்டித்த தாடையுடன் “சில மானுட உள்ளங்கள் அடிப்படையில் இருள்நிறைந்தவை. நன்மையும் அன்பும் அறமும் அவற்றுக்கு மெய்யாகவே புரிவதில்லை. ஆம், நூல்கள் திரும்பத் திரும்ப அதை சொல்கின்றன. வாழ்வறிதல் அதன்மேல் மீளமீள முட்டிக்கொள்ளச் செய்கிறது. ஆயினும் அகம் நம்ப மறுக்கிறது” என்றான். வெறுப்புடன் பற்களை நெரித்து “உன்னை சந்தித்த முதல் நாளே நான் உணர்ந்தது அது. நீ பிறப்பிலேயே மானுடனின் நல்லியல்பை புரிந்துகொள்ள இயலாத உள அமைப்பு கொண்டவள்” என்றான்.

“பிறப்பைப் பற்றி நீங்கள் பேசுவது முறை. ஷத்ரியர் என்பீர்கள். யாதவர் என பிறர் சொல்வார்கள். பெற்ற அன்னைக்கு அதுவும் உறுதியாகத் தெரியாது” என்றாள். மிகப் பெரிய படைக்கலத்தை எடுத்துவிட்டோம் என்று அவளுக்கே தோன்றியது. ஆனால் அந்தக் கணத்தில் அவனை நொறுக்கி மிகவும் முன்னே செல்லாவிட்டால் அவன் தன்னை நொறுக்கிவிடுவான் என அவள் அறிந்தாள். அவன் முகத்தில் இகழ்ச்சிப்புன்னகை எழுந்ததும் அவள் மேலும் சினம்கொண்டாள். “நாங்கள் பிறந்த குடியில் குருதியென குருதியையே சொல்கிறோம். உமிழ்நீரையும் சிறுநீரையும் சேர்த்தல்ல” என்றாள். கடுமையான சொல் ஒன்றை எடுத்ததுமே அவள் உள்ளம் மேலும் மேலுமெனத் தாவியது. “அங்கநாட்டரசரை வீரர் அவையில் குலம்சொல்லி எள்ளியவர் நீங்கள் என்று அறிவேன். எது உன் குலம் என அவர் கேட்கமாட்டார் என்று நம்பி எடுத்த சொல் அது. நான் கேட்கிறேன், என்ன குலம் நீங்கள்?”

ஆனால் அவன் மேலும் நிலைமீண்டு விரிந்த சிரிப்புடன் “அதற்கு முன் நீ கூறு. நீ என்ன குலம்? ஷத்ரியர்களா நீங்கள்?” என்றான். அவள் “ஏன், ஐயமா?” என்றாள். “எவ்வகையில்?” என்று அவன் கேட்டான். அவள் அவன் செல்லவிருக்கும் திசையை உய்த்துக்கொள்ளாமல் “உபரிசிரவசுவின் குடியில் பிறந்த எங்கள் தந்தை யாதவ அரசியை பட்டத்திலமர்த்தியிருக்கலாம், எங்கள் அன்னையர் கலிங்கத்தின் தூய ஷத்ரியர்கள்” என்றாள். அவன் என்ன எண்ணுகிறான் என அவள் உள்ளம் ஐயம்கொள்ள அவன் முகம் நோக்கி அவள் விழிகள் உருண்டன. “உன் அன்னையரின் அன்னையர் எவர்? எக்குடி?” என்றான் பீமன்.

“ஏன்?” என்று கேட்டபோது அவள் குரல் தழைந்திருந்தது. “உத்தரகலிங்கத்தின் மன்னர் அருணதேவர் மகாநிஷாதகுடியிலிருந்து கொண்ட சிற்றரசிக்குப் பிறந்தவர் உங்கள் மூதன்னை” என்றான் பீமன். இளிவரலுடன் முகம் விரிய “நிஷாதகுடியின் அடங்காமை உங்கள் இருவரில் வெளிப்படுவது அதனால்தான்” எனத் தொடர்ந்தான். அவள் “இல்லை!” என்று வீறிட்டாள். “சிறுமைசெய்ய எதையும் சொல்லலாம்…” அவன் “நீ சொன்னாயே அங்கனை அவையில் நிறுத்தி உசாவியவன் நான் என, அதே நாவுதான் இது” என்றபின் அப்பால் நின்றிருந்த சகதேவனை நோக்கி கைதட்டி அழைத்து “இளையோனே, கலிங்கத்தின் குலக்கதையைச் சொல்லும் நூல் எது?” என்றான்.

சகதேவன் அருகே வந்து “எதற்காக?” என்றான். “சொல்க!” என்றான் பீமன். “அர்க்ககுலவைபவம்” என்றான் சகதேவன். பிந்துமதி “இல்லை, இல்லை” என சொன்னபடி மீண்டும் அறைக்குள் செல்ல முயன்றாள். “நில், துணிவிருந்தால் நின்று கேட்டுவிட்டுச் செல்” என்றான் பீமன். “நான் எதையும் அஞ்சவில்லை” என்றாள் பிந்துமதி. “அவ்வாறென்றால் நில், கேட்டுவிட்டுச் செல்” என்றான். சகதேவனிடம் “அங்கே விறலி என எவளேனும் இருக்கிறாளா பார். இருந்தால் அழைத்து வா” என்றான். பிந்துமதி வஞ்சம் தெரிந்த முகத்துடன் “குலமிலிகள் குலத்தையே உள்ளூர தவம் செய்கிறார்கள்” என்றாள். “ஆம், நான் சொல்வதும் அதையே… பொறு” என்றான் பீமன்.

சகதேவன் சென்று ஓர் ஏவலனுடன் விறலியை அனுப்பினான். பின்னால் ஆடையை முதுகில் முடிச்சிட்டுக் கட்டிய விறலி வந்து வணங்கினாள். ஏவலன் “அரண்மனையில் இன்று கொற்றவைப் பூசனை. அதற்கு பாடவந்திருக்கிறாள். இவள் பெயர் கராளி” என்றான் ஏவலன். கராளி தலைவணங்கி நின்றாள். “உனக்கு அர்க்ககுலவைபவம் உளப்பதிவாகத் தெரியுமா?” என்றான் பீமன். “ஆம். அதை அறியாத விறலியர் அரிது. கலிங்கச்சிற்பிகள் கேட்க விழைவதும் பொருள் அருள்வதும் அதற்கே” என்றாள் கராளி. “அதில் இறுதியாக உத்தரகலிங்கத்தின் அருணதேவர் குறித்த சர்க்கத்தை நினைவுகூர்கிறாயா?” விறலி “ஆம் அரசே, அரசர் அருணதேவர் கொண்ட மகாநிஷாத குடியின் அரசியைப்பற்றி அதில் சொல்லப்பட்டிருக்கும்” என்றாள். ”அதுவே இறுதிப்பகுதி. அதைமட்டும் பாடிக்கேட்பவர்களுண்டு.”

பீமன் புன்னகைத்து “சொல்க, அந்த அரசி யார்?” என்றான். “மகாநிஷாதகுடியின் அரசர் காரகரின் மகளாகிய அவருடைய இயற்பெயர் மராளிகை. மகாநிஷாதம் கலிங்கத்தின் சார்புநாடென்று முத்திரையிட்டு முரசறைந்த நாளில் அரசருக்கு தன் மகளை கொடையளித்தார் மகாநிஷாதர். அவளை தன் எட்டு அரசியரில் ஒருத்தியாக்கி அருணை என்று பெயரிட்டு அரண்மனை சேர்த்தார் அருணதேவர்” என்றாள் விறலி. “அவர்களுக்கு இரு மகள்கள். மூத்தவர் சுனிதை, இரண்டாமவர் சுனந்தை. அவர்களையே சேதிநாட்டரசர் தமகோஷர் மணம்கொண்டார்.”

பிந்துமதி கைகள் நடுங்க நெஞ்சில் அவற்றை வைத்து அழுத்திக்கொண்டாள். பீமன் புன்னகைத்து தன் இடையிலிருந்து பொன்நாணயத்தை எடுத்தான். அவள் அதைக் கண்டதுமே முகம் மலர்ந்து “காவியத்தில் இல்லாத செய்தியொன்றுண்டு அரசே, அது செவிவழிப் பாடல். அருணதேவரின் அரசி அருணையுடன் அவர் குலத்து தெய்வமாகிய நக்னை உடன் வந்துவிட்டது. கலிங்கத்தின் அரண்மனைக்குள் முதற்கால் வைத்து நுழைந்ததுமே நக்னை அவரை பிடரியில் அறைந்து குப்புற வீழ்த்தியது. வலிப்பு வந்து மருத்துவநிலைக்கு கொண்டுசெல்லப்பட்ட அரசி எட்டு நாட்களுக்குப் பின்னரே நிலைமீண்டார்” என்றாள்.

“அதன் பின்னர் அன்னை நக்னை எப்போதும் அரசியுடன் இருந்தாள். நக்னை அடர்காடுகளில் ஆடையின்றி அலையும் கரிய உடலும் நீள்குழலும் அனல்விழிகளும் கொண்ட தெய்வம். அவளுக்கு அரசி அணிந்த அணியாடைகள் உகக்கவில்லை. அருணை அணிந்திருக்கும் ஆடைகளையும் பூண்களையும் அவைநிகழ்வுகள் முடிந்த மறுகணமே கழற்றி வீசவிரும்புவார். எளிய மரவுரியையே அவர் அணிந்திருந்தார். மெல்ல மெல்ல நக்னை அவரை முழுதாட்கொண்டாள். அரசியின் விரல்களை அவள் எடுத்துக்கொண்டாள். நூல்பயில்கையிலும் உரையாடுகையிலும் ஆழ்ந்துறங்குகையிலும்கூட அரசியின் கைகள் மிகுவிரைவில் இயங்கிக்கொண்டிருக்கும். அவை அவர் அணிந்திருக்கும் ஆடையை நூல்நூலாகப் பிரித்து உதிர்க்கும்.”

“ஒரு நாழிகைக்குள் ஒரு பட்டாடை நூல்குவியலாக கீழே கிடக்கும். ஆடையற்று நின்றிருக்கும் அரசி அதை அறிவதுமில்லை. சேடியர் அவருக்கு ஆடைகளை மாற்றி மாற்றி அணிவிப்பார்கள். பின்னர் அவ்வண்ணமே விட்டுவிட்டார்கள். ஆடையில்லாது அலைந்த அவர் ஒருநாள் எவரும் காணாமல் மறைந்தார். கலிங்கத்தின் காடுகளுக்குள் வேட்டையாடச் சென்றவர்கள் அவர் ஆடையில்லாமல் கானிருளில் உலவுவதை கண்டனர். காட்டுக்குள் சிற்றாலயம் ஒன்று அமைத்து அங்கே ஆடையிலா கரிய சிலை வடிவில் அவரை நிறுவினர். அங்கே அவருக்கு ஆண்டுக்கொருமுறை கரும்பன்றியை பலிகொடுத்து வணங்குகிறார்கள்.”

அவள் தலைவணங்க பீமன் பரிசிலை அளித்து அவளை அனுப்பிவிட்டு பிந்துமதியை நோக்கி திரும்பினான். முகம்வெளுத்து உடல்நடுங்க சுவரில் சாய்ந்து அவள் நின்றாள். அவன் அவள் நிலையைக் கண்டதுமே சினம் அழிந்து மீண்டும் உளம் கனிந்தான். “என்ன செய்கிறது உனக்கு? நோய்கொண்டிருக்கிறாயா?” என்றான். அவள் ஒரு கையும் காலும் மெல்ல விதிர்த்தன. “இதோ பார், நான் உன் ஆணவப்பேச்சுக்கு மறுமொழி சொன்னேன். குலம் குறித்த எந்தச் சொல்லும் என் அன்னையை நோக்கி எழுவது. அதை மட்டும் என்னால் தாளமுடிவதில்லை” என்றான். அவள் பற்கள் கிட்டித்திருக்க தலையை அசைத்தாள். தாளவியலா வலிகொண்டது போலிருந்தது அவள் முகம்.

“இளமையில் கௌரவரின் குலத்தூய்மை எங்களுக்கில்லை என்ற பேச்சே என்னைச் சூழ்ந்திருந்தது. ஆகவே குலம் குறித்தே எண்ணிக்கொண்டிருந்தேன். அதைப் பற்றியே கேட்டறிந்தேன். ஆனால் பதினான்காண்டு கானேகலில் நான் கண்டது ஒன்றே. பாரதவர்ஷத்தில் எக்குலமும் தூயதல்ல. அதை புரிந்துகொண்ட பின்னரே நான் உளம் விலகினேன்” என்றான் பீமன். “இது எளிய வஞ்சவிளையாட்டு. நீ உமிழ்ந்ததும் நஞ்சு. நான் உமிழ்ந்ததும் அதுவே. அதற்கு அடியில் உன்மேல் அன்புகொண்டிருக்கிறேன். அதை ஐயமறச் சொல்வேன்.”

அவள் விழிகள் அவனை அறியவே இல்லை என்று தோன்றியது. “இதை மறந்துவிடு… நான் சொன்னவை மறைக! நான் அவற்றின்பொருட்டு உன்னிடம் பொறுத்தருளக் கோருகிறேன்” என்றான் பீமன். “இது ஆண்களின் சிறுமை. அதைக் கடப்பது பெண்களின் இயல்பு… பெரிதாக எண்ணாதே” என அவன் அவள் தோளை தொடவந்தான். அவன் கைபடுவதற்குள்ளாகவே அவள் தோள் புரவித்தோல் என விதிர்த்தது. அவன் கைகளை விலக்கிக்கொண்டான். சில கணங்கள் அவளை கூர்ந்து நோக்கிவிட்டு பெருமூச்சுடன் விலகி வேறெங்கோ நோக்கி நின்றான். அவள் சுவரில் ஓவியமெனப் பதிந்து அசைவற்று நின்றாள்.

நகுலன் கதவைத் திறந்து வெளிவந்தான். ”செல்வோம்” என்றான். “எப்படி இருக்கிறார்கள்?” என்றான் பீமன். “உடல்நிலை சீரடைந்துவிட்டது. ஆனால் உளம் எங்கோ இருக்கிறது… என்ன பேசிக்கொண்டிருக்கிறாள் என்று புரியவில்லை. ஏதோ அறியா மொழி” என்றான். அருகணைந்து “சேதிநாட்டு மொழியா?” என்றான் சகதேவன். “அல்ல, கலிங்க மொழியும் அல்ல” என்றான் நகுலன். “ஓய்வெடுக்கட்டும்… வா” என்று சகதேவனின் தோளை தொட்டான். பிந்துமதியிடம் “நோக்குக, அரசி. எதுவென்றாலும் எங்களுக்கு தெரிவியுங்கள்” என்றபின் நடந்தான். பீமன் அவளை திரும்பி நோக்காமல் கைகளை வீசியபடி பின்னால் நடந்துசென்றான்.

பிந்துமதி அவர்கள் செல்வதை நோக்கியபடி நின்றாள். அவள் உள்ளம் அடங்கி சொல்லின்றி இருந்தது. ஆனால் உடல் துள்ளிக்கொண்டிருந்தது. இடைக்குக் கீழே கால்கள் குளிர்ந்து உயிரிழந்தவை போலிருந்தன. தன்னை நூறுமுறை உந்தியும் உடல் கிளம்பவில்லை. பின்னர் அவள் விழப்போனாள். சுவரைப் பற்றிக்கொண்டதும் உடல் உள்ளத்துடன் தொடர்பை மீட்டுக்கொண்டது. சுவரையும் நிலையையும் பற்றியபடி மெல்ல உள்ளே சென்றாள்.

அங்கே மஞ்சத்தில் வெளிறி சற்றே உலர்ந்ததுபோலிருந்த முகத்துடன் ஒட்டிய உதடுகளுடன் கைகள் தளர்ந்து படுத்திருந்த கரேணுமதியின் கைவிரல்களையே நோக்கிக் கொண்டிருந்தாள். அவை அசைவற்றிருந்தன என்பது அவளுக்கு ஏமாற்றம் அளித்தது. அவை அசையவேண்டும் என்றும் ஆடையின் நூல்களை பிரிக்கவேண்டும் என்றும் அவள் விழைந்தாள். “எழுக! எழுக!” என அவ்விரல்களிடம் சொன்னாள். அவை மெழுகாலானவைபோலத் தெரிந்தன.

நீள்மூச்சுடன் அவள் விழிதிருப்பியபோது அச்சொல்லை கேட்டாள். அதை முன்னரும் பலமுறை கேட்டிருந்தாள். திடுக்கிட்டு கரேணுமதியின் வாயை பார்த்தாள். அதில் சொல்லெழுந்திருப்பது மெல்லிய அசைவு எஞ்சியிருப்பதிலிருந்து தெரிந்தது. அந்த வாயையே நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் உடல் உலுக்கி அசைய உதடுகள் குவிந்து இன்னொரு சொல்லை சொல்லின. அதையும் அவள் பலமுறை கேட்டிருந்தாள். அது ஒரு சொல் என்று தோன்றியதே இல்லை. அன்னை சொல்லியிருக்கிறாளா அதை? சிற்றன்னையா? அவள் பெருமூச்சுடன் விழிதிருப்பவிருக்கையில் அவ்விரல்கள் அசைவுகொள்வதை கண்டாள். அப்போது அது அவளை மிகவும் ஆறுதல்படுத்துவதாக இருந்தது.

bl-e1513402911361கரேணுமதியுடன் பிந்துமதி தேரிலேறிக்கொண்டபோது அரண்மனை முற்றத்தில் தேவிகையும் விஜயையும் வந்திருந்தார்கள். அவர்கள் வருவார்கள் என பிந்துமதி எதிர்பார்க்கவில்லை. அவர்கள் சேதிநாட்டுக்கே திரும்பிச்செல்லவிருப்பதை மாலதியின் வழியாக குந்திக்கு மட்டும் சொல்லி அனுப்பியிருந்தாள். குந்தி “அங்கிருப்பதும் நன்றே. அரசுசூழ்தல்களில் கலந்துகொள்ள வேண்டியதில்லை” என்று சொல்லி அனுப்பியிருந்தாள். சுரேசர் தேரையும் காவல்படைகளையும் ஒருங்கமைத்து செய்தி சொல்லியிருந்தார்.

புலரிக்கு முன் கருக்கிருளிலேயே கிளம்பிவிடலாம் என்று பிந்துமதி எண்ணியிருந்தாள். ஆனால் கரேணுமதியை ஒருக்கி இறக்குவதற்கு நெடுநேரமாகியது. அவள் காலையில் வெற்றுடலுடன் மஞ்சத்தில் கிடந்தாள். நாவில் அந்த அறியாச் சொற்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. அவளை நீராட்டறைக்கு கொண்டுசென்றபின் பிரிக்கமுடியாத கெட்டியான கரையுள்ள ஆடைகளை கொண்டுவரச்சொல்லி அணிவித்தாள். மேலும் இருபது ஆடைகளை எடுத்துக் கொண்டுசென்று தேரில் வைக்கச் சொன்னாள். கரேணுமதி அவளிடம் சொல்லப்பட்ட அனைத்தையும் பாவை எனச் செய்தாள். ஆனால் அவள் நாவில் அச்சொற்கள் அவ்வப்போது எழுந்தன. பதற்றத்துடனும் கிளர்ச்சியுடனும் அச்சொற்களைச் சொல்லி உடனே தளர்ந்து அமைதிகொண்டாள்.

தேர் வந்து நின்றபோது “வருக, அக்கையே!” என்று பிந்துமதி சொன்னாள். கரேணுமதி அவளுடன் நடந்தாள். மரப்படிகள் ஒவ்வொன்றிலும் நின்று நின்று இறங்கி அவர்கள் முற்றத்திற்கு வந்தபோது அங்கே தேவிகையும் விஜயையும் வந்திருந்தார்கள். முதல் நோக்கில் அவர்கள் பிந்துமதியிடம் கடும்வஞ்சத்தை எழுப்பினர். பின்னர் அவள் தன்னை மெல்ல தணிவித்துக்கொண்டாள். கரேணுமதியின் நிலை அவர்களில் உவகையை உருவாக்குகிறதா என அவள் விழிமுனை அவர்களின் விழிகளை தொட்டுத் தேடியது. ஆனால் அவர்கள் இருவரும் துயர்கொண்டவர்கள் போலிருந்தார்கள். உவகையை திறம்பட மறைக்கிறார்கள் என அவள் எண்ணிக்கொண்டாள்.

தேவிகை அருகே வந்து முகமன் உரைத்து “அன்னை சொன்னார்கள், நீங்கள் கிளம்பவிருப்பதாக. அங்கே அனைத்தும் மேலும் நன்றாக அமையுமென்றால் அதுவே நன்று” என்றாள். “ஆம், அங்கே மருத்துவர்கள் உண்டு. பெருநகரம், ஷத்ரியர்களின் தொல்நிலம் என்பதனால் அனைத்தும் அங்கே முதிர்வுகொண்டுள்ளன” என்றாள் பிந்துமதி. விஜயை “ஆம், அவ்வாறுதான் கேட்டோம்” என்றாள். பிந்துமதி “எங்கள் மைந்தன் வந்தானென்றால் மட்டும் செய்தி சொல்க! அவனை ஒருமுறை நோக்க நாங்கள் விரும்புகிறோம். அவன் போருக்குச் செல்வான் என்றால் அதற்கு முன் எங்களிடம் வந்து வாழ்த்துபெற்றுச் செல்லவேண்டும்” என்றாள். “அவ்வாறே” என்றாள் தேவிகை.

அவள் கரேணுமதியிடம் தேரிலேறும்படி சொல்ல அவள் அச்சொல்லை உரைத்தபடி மேலேறி அமர்ந்தாள். பிந்துமதி விஜயையிடமும் தேவிகையிடமும் விடைபெற்றுக்கொள்ளாமல் விழிவிலக்கிக்கொண்டு தேரின் படி ஏறி உள்ளே அமர்ந்து “செல்க!” என்றாள். மூங்கில் கூடையுடன் மாலதி பாய்ந்து ஏறிக்கொண்டாள். “என்ன செய்கிறாய், இழிமகளே? தேரைக் கவிழ்க்கப் பார்க்கிறாயா?” என்றாள் பிந்துமதி. அவள் மூலையில் அமர்ந்தபடி “சிற்றாடைகள்” என்றாள். “பிணம், உன்னை சிதையேற்றும் நாள் அணுகுகிறது” என்றாள்.

தேர் சீர்ச்செலவு கொண்டதும் பெருமூச்சுவிட்டு கைகளை விரித்து அமர்ந்தபடி “சேதிநாட்டு எல்லைக்குச் செல்ல எத்தனை நாளாகும்?” என்று பிந்துமதி கேட்டாள். “எட்டு நாட்கள் என்றனர், அரசி” என்றாள் மாலதி. அவள் பெருமூச்சுவிட்டு பின்னால் சென்றுமறைந்த அரண்மனையை நோக்கினாள். “அவரிடம் செய்தி சொன்னாயா?” என்றாள். மாலதி “இல்லையே, என்னிடம் அவ்வாறு பணிக்கப்படவில்லை” என்றாள். “அறிவிலி, நான் அன்னையிடம் சொல்லச் சொன்னேன். அவர் சொல்லியிருப்பார்” என்றாள். மாலதி “ஆம்” என்றாள். அவள் மாலதியை சினத்துடன் நோக்கிவிட்டு விழிகளை விலக்கிக் கொண்டாள்.

பீமன் முற்றத்திற்கு வர வாய்ப்பில்லை என்று அறிந்திருந்தாலும் சகதேவனும் நகுலனும் முற்றத்திற்கு வருவார்கள் என அவள் எதிர்பார்த்தாள். ஒருவேளை பீமனே கூட வரக்கூடும். வருபவன்தான் அவன். அவனுள் எளிதில் கனியும் பெண்ணுள்ளம் இருப்பதை அவள் உள்ளறிந்திருந்தாள். அவன் ஓரிரு நற்சொற்கள் சொன்னால்கூட உளம்குழைந்து அங்கேயே அழுதுவிட்டிருக்கக்கூடும். அவன் நெஞ்சில் முகம்பதித்து விம்மியழுதிருக்கக்கூடும். ஆனால் அதுவும் ஐயமாகவே இருந்தது. அந்த நாடகம் உள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்க வஞ்சமும் ஆணவமும் நிறைந்த சொற்களை அவள் நா உரைத்திருக்கும். இன்னுமொரு வெறுப்புரையின் தருணம்தான் நடிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் ஒருவேளை அவனை மீளமுடியாதபடி நெஞ்சில் தாக்கிவிட்டு அவள் கிளம்பியிருக்க இயலும். அது எஞ்சிய வாழ்நாளெல்லாம் அவள் எண்ணி மகிழும் ஓர் இனிமையாக உடன்வந்திருக்கக்கூடும். எஞ்சிய வாழ்நாளா? அப்படியென்றால் இனி வரப்போவதே இல்லையா? இல்லை என அவள் உள்ளம் நன்கறிந்திருந்தது. அம்முடிவை எண்ணி எடுக்கவில்லை, அம்முடிவு அவளுள் எப்போதும் இருந்தது என்பதை கண்டடைந்தாள்.

அவர்கள் புரவியில் தொடர்ந்து வருவார்கள் என்ற எண்ணத்துடன் அவள் ஒழுகிமறையும் சாலையை நோக்கிக் கொண்டிருந்தாள். காலையொளி எழத்தொடங்கியிருந்தது. வணிகர்கள் கடைகளை திறந்துகொண்டிருந்தனர். ஆலயம் சென்று மீளும் பெண்கள் சாலையெங்கும் நடந்துகொண்டிருந்தனர். காலையா மழையிருளா என ஐயம் வந்தது. ஒரு யானை குளித்த கருமையுடன் எதிரே வந்தது. அந்தணர்குழு ஒன்று வெண்ணிற ஆடையுடன் கடந்துசென்றது.

கோட்டையைக் கடந்து பெருஞ்சாலையை அடைந்து இரண்டு காவல்கோட்டங்களை தாண்டுவது வரை அவள் சாலையையே நோக்கிக்கொண்டிருந்தாள். பின்னர் நீள்மூச்சுடன் தளர்ந்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டாள். எரிச்சல் ஊறத்தொடங்கியது. அவள் தேரில் அமர்ந்து விழியோட்டித் தேடுவாள் என்று அவனுக்குத் தெரியும். தெரிந்தமையால்தான் வராதிருந்தான். அவன் அவளிடம் சொல்கிறான், அவள் அவனுக்கொரு பொருட்டு அல்ல என்று. அவள் வந்தநாள் முதல் அவன் சொன்னதெல்லாம் அதுவே. அவள் அவனிடம் அதற்கான மறுமொழியைத்தான் சொல்லிக்கொண்டிருந்தாள்.

திரும்பிச்செல்ல ஆணையிடவேண்டும் என ஒருகணம் உளமெழுந்தது. அவனை நேரில்கண்டு அம்முகத்தில் உமிழ்ந்தபின் திரும்பி தேரிலேறவேண்டும். அல்லது அவன் முன் சங்கறுத்துச் செத்துவிழவேண்டும். கூரிய சொல்கூட எடுக்காமல் இப்படி கிளம்பியது அறிவின்மை. இது ஒளிந்தோடுதல். அதைக் காணவே அந்த இழிகுலத்துப் பெண்கள் முற்றத்திற்கு வந்தனர். இந்நேரம் அவர்கள் அந்நிகழ்வை தங்கள் கொழுநர்களிடம் சொல்லி சிரித்துக்கொண்டிருப்பார்கள்.

அவள் திரும்பிநோக்கியபோது கரேணுமதி கீழாடை இல்லாமல் அமர்ந்திருந்தாள். “என்னடி செய்கிறாய்? உன்னைத்தான்” என்று கூவியபடி அவள் மாலதியை எட்டி உதைத்தாள். மாலதி வெளியே நோக்கிக்கொண்டிருந்த விழிகளைத் திருப்பி கரேணுமதியை நோக்கியபின் எழுந்து கூடையிலிருந்து ஆடையை எடுத்து கரேணுமதிக்கு அணிவித்தாள். பிந்துமதி தன் காலில் நூல்கள் இடறுவதை உணர்ந்து கீழே நோக்கினாள். வெண்புழுக்கள். அவை எங்கிருந்து எழுகின்றன. இவள் உடலுக்குள் இருந்தா?

“விரைவில்” என்று மாலதியை சினந்தாள். “ஆணை” என்று சொல்லி மாலதி புன்னகைத்தாள். அப்புன்னகை பிந்துமதியை நடுக்குற வைத்தது. ஏதோ சொல்ல வாயெடுத்தாள். சொல் திரளாமல் மெல்ல உளம் ஓய்ந்து விழிகளை மூடிக்கொண்டாள்.

முந்தைய கட்டுரைமறவாமை என்னும் போர்
அடுத்த கட்டுரைசிறுகதை குறித்து, விஷால்ராஜா