புத்தகக் கண்காட்சிப் பரிந்துரைகள் – கடலூர் சீனு

download

இனிய ஜெயம், கடந்த வாரம் ஒரு நண்பர், இலக்கிய ஆர்வம் கொண்டவர், பதினோராம் வகுப்பில் இருக்கும் அவரது மகன் [அவருக்கும் வாசிப்பில் விருப்பம் உண்டு] வாசிப்புக்குள் நுழையும் வகையில் சில நூல்களை பரிந்துரை செய்ய சொன்னார்.

இந்த நூல்களை பரிந்துரைத்தேன் அதற்கான காரணங்களையும் சொன்னேன்.

முதலில் பள்ளி கல்வி ஒரு மாணவனுக்கு அளிப்பது, இங்கே பிழைத்து இருக்க என்ன தேவையோ அதை. பள்ளி கல்விக்கு வெளியே உள்ள நூல்கள் வழங்குவது ஒரு நிறைவை. என்றும் துணை நிற்கும் ஒரு விவேக ஞானத்தை. ஒரு தந்தையின் வழிகாட்டல் மகனுக்கு எவ்வளவு ஊக்கமோ, அதற்கு பலமடங்கு கூடுதல் பள்ளிக்கு வெளியே கிடைக்கும் கல்வி. இங்கே நூறு நூறு அறிவார்ந்த ஆசிரியர்கள், ஒரு போதும் கைவிடாத ஆயிரமாயிரம் தந்தையர்கள் அளிக்கும் செல்வம் இருக்கிறது.

தமிழில் வெளியே எங்கே எதை வாசிக்கத் துவங்குவது என்பது சரியான கேள்வி. பிழையான தொடக்கம், இந்த பயணத்தை துவங்கும் முன்பே நிறுத்தி விட வாய்ப்புகள் அதிகம்.

இந்த பரிந்துரை ஒரு அறிமுக வாசகனின், அவன் செல்ல தேர்ந்தெடுக்கும் திசை வழிகளின் மீது காத்திரமான முதல் அடியை அவன் எடுத்து வைக்க சரியான நூல்களை உள்ளடக்கியது.

வரலாறு, பயணம், சூழலியல், மூளை நரம்பியல், தொன்மம், இலக்கியம், தத்துவம் என ஒரு இளம் மனம் செல்ல விரும்பும் திசைகளின் சரியான வழிகாட்டி இந்த நூல்கள்.

மேலை தத்துவத்தின் ஒரு சுருக்கமான செறிவான வரலாற்றினை, சோபியின் உலகம் நாவலில் வரும் தத்துவ பாட பகுதிகள் வழியே அறியலாம்.

அதை தொடர்ந்து இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் வழியே இந்து ஞான மரபின் தத்துவ தேட்டத்தை அறியலாம்

அரவிந்தன் நீலகண்டன் வழியே, இந்திய தத்துவங்களும், அறிதல் முறைகளும், ”இன்று ”என்னவாக உலக சிந்தனை மரபு, மற்றும் அறிவியல் புலத்துடன் தொடர்பில் உள்ளது என்பதை அறியலாம்.

எனது இந்தியா நூல்கள் வழியே, இந்த இந்திய நிலத்தின் படப்பகுதிக்கு வெளியில் அமையும் வரலாற்றை அறியலாம்.

அதை தொடர்ந்து குகாவின் இந்தியா காந்திக்குப் பிறகு நூல் வழியே இன்று நாம் நிற்கும் இந்தியா குறித்த சித்திரத்தை அறியலாம்.

சூழலியலையும், மூளை நரம்பியல் சார்ந்தும் அறிந்துகொள்ள தியோடர் பாஸ்கரன், ராமச்சந்திரன் இருவருமே இணையற்ற ஆசிரியர்கள்.

நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் வழியே, இலக்கியம் எனும் கலையின் அனைத்து அலகுகளையும் ஒரே நூல் வழி அணுகி அறிந்து கொள்ள இயலும்.

பாடதிட்டத்தில் எதை செத்து நான்கு நாள் ஆன பிணமாக மாணவனுக்கு கிடைக்கிறதோ, அது எத்தனை உயிரோட்டம் கொண்ட மலராக இலக்கிய வாசகனுக்கு கிடைக்கிறது என்பதை அறிவதன் வழியே, ஒருவர் இலக்கிய உலகுக்குள் அடி எடுத்து வைப்பதை காட்டிலும் சிறந்த பாதை வேறில்லை.

அதிலிருந்து நிலம் பூத்து மலர்ந்த நாள் அளிப்பது வேறு ஒரு கனவு உலகை. நமது இலக்கிய வளர்ச்சி நமது வேர்களில் இருந்து துவங்கி நின்று வளர சரியான துவக்க நூல்.

வனவாசி நாவல் அதற்கு அடுத்த நிலையில் நின்று, ஒரு கனவு போல, ஒரு சூழல் பின்வாங்கும் சித்திரத்தை அளிக்கிறது.

கி ராஜநாராயணின் நாவல் ஒரு வாழ்வை தொகுத்துக்காட்டி அதனூடே ஒரு முழுமை நோக்கை தரிசனத்தை முன்வைக்கும் இலக்கியத்தின் அடிப்படை நோக்கை ஒரு இளம் வாசகன் அணுகி, உணர சரியான துவக்கமாக அமையும்.

சோபியின் உலகம் ஒரு புனைவாக இன்று உலக அளவில் நாவல் கலை, அதன் வடிவம், உள்ளடக்கம், கூறு முறை, என அவை சென்று தொட்ட தூரத்தை ஒரு வீச்சில் காட்டக்கூடிய நாவல்.

இந்த நூல்கள், ஒரு அறிமுக வாசகரை நோக்கி இறங்கி வருவன அல்ல, உங்களை அதை நோக்கி உயர்ந்து வர வேண்டும் எனும் சவாலை முன்வைப்பன.

அதே சமயம் சுவாரஸ்யமான [இந்த எல்லா நூலுமே] கூறு முறையில் தன்னை முன்வைப்பன.

அந்த இயலும், அந்த இயல் சார்ந்த வல்லுனரால், அவரது நூலைக் கொண்டு அறிமுகம் நிகழ்கிறது.

உரைநடை, தத்துவம், புனைவு, சங்கக் கவிதைகள். அனுபவத் தொகை. பயண நில விவரணை மொழிபெயர்ப்பு, என மொழி செயல்படும் அனைத்து பாதைகளும், சுவாரஸ்யம் குன்றாத சரியான நூல்கள் வழியே அறிமுகம் ஆகின்றன.

இங்கே துவங்கி, ஒரு இளம் வாசகர், அவரது வாசிப்பின் வழி தனது செல்திசையை தீர்மானிக்கலாம். தனது வாசிப்பில் குறுக்கே வரும் பிழையான நூல்களை, இங்கு பரிந்துரைத்த நூல்களை, மீண்டும் வாசித்து துய்ப்பதன் வழியே, தன்னுள் சீர் தூக்கி உரையாடி, மதிப்பிட்டு விலக்கலாம்.

அனைத்துக்கும் மேல் ஒரு வாசகன், தன்னைத்தானே கொண்டாடிக்கொள்ளும் ”ஞானச் செருக்கு ” அதை நல்க வல்ல பரிந்துரை இவை.

Books

வரலாறு.

விகடன் வெளியீடான, எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய எனது இந்தியா இரண்டு பாகங்கள்.

கிழக்கு பதிப்பகம் வெளியீடான, ராமச்சந்திர குகா எழுதிய இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு இரண்டு பாகங்கள்.

பயணம்.

கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட, ஜெயமோகன் எழுதிய இந்தியப் பயணம், அருகர்களின் பாதை, உள்ளிட்ட பிற பயண நூல்கள்.

சூரியன் பதிப்பகம் வெளியீடான, ஜெயமோகன் எழுதிய முகங்களின் தேசம்.

மூளை நரம்பியல்.

பாரதி புத்தகாலயம் வெளியீடான, விளையனூர் ராமச்சந்திரன் எழுதிய உருவாகிவரும் உள்ளம்.

சூழலியல்.

உயிர்மை வெளியீடான, தியோடர் பாஸ்கரன் எழுதிய சூழலியல் கட்டுரைகளின் முழு தொகுப்பு.

தொன்மம்.

நியு செஞ்சுரி புக் ஹவ்ஸ் வெளியீடான, செந்தீ நடராஜன் எழுதிய சிற்பமும் தொன்மமும்.

இலக்கியம்.

கிழக்கு பதிப்பகம் வெளியீடான, ஜெயமோகன் எழுதிய நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்.

நற்றிணை பதிப்பகம் வெளியீடான, ஜெயமோகன் எழுதிய சங்க சித்திரங்கள்.

பிறமொழி இலக்கியம்.

வம்சி பதிப்பகம் வெளியீடான, மனோஜ் கரூர் எழுதிய மலையாள நாவல் நிலம் பூத்து மலர்ந்த நாள்.

விடியல் பதிப்பகம் வெளியீடான, விபூதி பூஷன் பந்தோபாத்யாய் எழுதிய வங்க நாவலான வனவாசி.

தமிழ் இலக்கியம்.

அன்னம் பதிப்பகம் வெளியீடான, கி ராஜநாராயணன் எழுதிய, கோபல்ல கிராமம், துவங்கி அந்தமான் நாயக்கர், வரையிலான மூன்று நாவல் தொகுதி.

உலக இலக்கியம்.

காலச்சுவடு வெளியீடான, யோஸ்டைன் கார்டர் எழுதிய, சோபியின் உலகம்.

தத்துவம்.

கிழக்கு பதிப்பகம் வெளியீடான, ஜெயமோகன் எழுதிய இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்.

கிழக்கு பதிப்பகம் வெளியீடான, அரவிந்தன் நீலகண்டன் எழுதிய இந்திய அறிதல் முறைகள்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–32
அடுத்த கட்டுரைபேலியோ -ஓர் அனுபவக் கடிதம்