விஜி வரையும் கோலங்கள்

laks

பெண் சிங்கங்களை வேட்டையாட அனுப்பிவிட்டு படுத்திருக்கும் ஆண்சிங்கம் போல இருக்கிறீர்கள் என்று சொல்லியிருக்கலாம், ஆனால் நண்பர் சீடர்களை நாலுதெருவுக்கு திருவோட்டுடன் அனுப்பிவிட்டு சாவடியில் படுத்திருக்கும் சாமியார் போலிருக்கிறீர்கள் என்றார். நண்பர்கள் அவர்கள் வாசித்தவற்றை என்னுடன் தொடர்ந்து பகிர்வதுண்டு. ஆகவே அனேகமாக எந்த இதழையும் நேரடியாக வாசிக்காமலேயே எப்படியோ நல்லன அனைத்தையும் வாசித்துவிடுகிறேன். குறிப்பாக கவிதைகள் தவறுவதே இல்லை

லட்சுமி மணிவண்ணனின் இக்கவிதை சமீபத்தில் வாசித்த அசாதாரணமான படைப்புகளில் ஒன்று. லட்சுமி மணிவண்ணன் கொண்டுள்ள கவிதைமுறை என்பது கவிதைக்குரிய இசைமையும் இசைவும்  கொண்ட மொழியை உதறி நேரடியான பேச்சுபோல எழுதுவது. அது உண்மையில் கவிதையை ஒரு உளநிலை, கருத்துநிலை என்று மட்டுமே நிறுத்துகிறது. ஆகவே அணிகள், சொல்லழகு என  கவிதை கொண்டுள்ள பிற வசதிகளை துறந்துவிடுகிறது. ஆகவே வென்றால்மட்டுமே பொருட்படுத்தும்தன்மை கொண்டிருக்கிறது. முழுமையாக அமையாவிட்டால் வெற்றுக்கூற்றாக நின்றுவிடும்.அரிதாகவே அது நிகழவும்கூடும்.

ஆனால் அந்தமுறையைத் தேர்வதில் ஒரு துணிவு இருக்கிறது.சொல்லப்போனால் எழுதி எழுதிக் கைதேர்ந்து, எப்போதும் விழிப்புடன் கணங்களுக்காகக் காத்திருக்கையில் மட்டுமே அமையும். அமைகையில் முற்றிலும் தனித்துவம் கொண்டிருக்கும்.

இக்கவிதையும் அப்படித்தான். வழக்கமாக கோலம்போடும் பெண்ணைப்பற்றி நம் கவிஞர்கள் எழுதுகையில் வரும் எந்த கற்பனாவாத அம்சமும் நெகிழ்ச்சியும் இதில் இல்லை. ஒரு சம்பவ விவரணை போலவே உள்ளது. ஆனால் மிகச்சிறிய –அதனாலேயே மிகநுட்பமான –ஒரு புள்ளியை இக்கவிதை தொடுகிறது – அப்பெண் இடும் கோலத்திலுள்ள மீறலை. அந்த எல்லை மீறல் ஒரு வளைவாக, அலையின் அடிக்குவை போல கண்கூடாக வெளிப்படுகிறது. அதில் அமர்ந்திருக்கின்றன அவளுக்குரிய தெய்வங்கள். யானைத்தடமும் உறுமல்சத்தமும் காட்டுவிலங்கின் வாசனையும் கொண்டவை

திரும்பத்திரும்ப அந்த மீறலின் வளைவிலேயே சென்றமைந்தது என் உள்ளம். வீட்டிலிருந்து சாலைக்கு. அகத்திலிருந்து புறத்துக்கு. சாலைகள் சென்றமையும் தொலைதூர நிலங்களுக்கு, மலைகளுக்கு, மிருகங்களும் காட்டுத்தெய்வங்களும் வாழும் அடர்கானகத்திற்கு. காட்டுத் தீயை அணைப்பதற்குத்தான்  விஜி முதலில் தண்ணீர் தெளிகிறாள் என்ற வரியில் கவிதைஅடையும் உச்சம் அரிதாகவே கவிஞன் சொல்லில் நிகழ்வது

kolam

விஜி வரையும் கோலங்கள் 

விஜி வரையும் கோலங்கள்
மையத்தில் நான்கு மலர்கள் கொண்டவை
வண்ணங்கள் இருக்கும்

இல்லாமல் இருக்கும் போதும்
வண்ணங்களை கோலத்தில் அமரச் செய்யும் வித்தை
விஜி மட்டுமே அறிந்தது

நீர் தெளிக்கும் நேரம் மனதில்
வரையவிருக்கும் கோலம் நிழலாடும்
தியானத்தில் இருக்கும்
தெய்வம்

விஜி வரையும் கோலங்களின்
சிறப்பு யாவரும் அறிந்ததே

எப்போதும் சாலையில் மேலேறி இறங்கும்
ஒரு நாசூக்கான சுற்றில்
விஜி ஒளிந்து கொள்கிறாள்
அல்லது வெளிப்படுகிறாள்

அதில் எனது நாசிக்கு
காட்டு விலங்கின் உறுமல் சப்தம்
மிருக வாசம்
கண்களில்
யானைத் தடம்

அதனை மட்டும் அவள்
தன்தசை கொண்டு
வரைகிறாள்

தெய்வங்கள் அந்த வளைவில்
வந்தமர்ந்து கொள்கின்றன
அவற்றுக்கு அவ்விடம் தாங்கள் அமர வேண்டியது
என்பது கச்சிதமாக
தெரிந்திருக்கிறது

காட்டுத் தீயை அணைப்பதற்குத்தான்
விஜி முதலில் தண்ணீர்
தெளிகிறாள்

லக்ஷ்மி மணிவண்ணன்

முந்தைய கட்டுரைசிறுகதை 7 , எஞ்சும் சொற்கள் -சுரேஷ் பிரதீப்
அடுத்த கட்டுரைசிறுகதை விவாதம் முடிவு