அஞ்சலி : ஞாநி

gnani

ஞாநியைப்பற்றி  நான் முதலில் அறிந்தது எழுபதுகளின் இறுதியில். தமிழ்நாடகம் என்னநிலையில் இருக்கிறது என்று குமுதம் நாளிதழ் எழுபதுகளில் பலரிடம் பேட்டி எடுத்துப்போட்டிருந்தது. அதில் ஞாநி ‘ருத்ராட்சப்பூனைகளே’ என ஆக்ரோஷமாக பேட்டிகொடுத்திருந்தார். அந்த தோரணையும், சொல்லாட்சியும், கூடவே வெளியான ஹிப்பி ஸ்டைல் புகைப்படமும் என்னைக் கவர்ந்தது. எனக்கு அப்போது பதினைந்து வயது என நினைக்கிறேன்.

நெடுநாட்களுக்குப்பின் ஞாநியைச் சந்தித்தபோது குமுதத்தின் அந்தப்பக்கம் நினைவில் இருக்கிறது என்றேன். அவர் அந்தப்பேட்டிதான் அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனை என்று சொன்னார். அவர் பாதல்சர்க்காரின் பாதிப்பால் சுதந்திர நாடகங்கள் போட ஆரம்பித்திருந்த காலம். பரீக்‌ஷா அமைப்பு பயில்வோர்க் குழுவாக உருவாகி நாடகங்களைப் போட்டுக்கொண்டிருந்தது. அவர் அன்றைய நாடக நட்சத்திரங்களை எதிர்த்துக் கொடுத்த பேட்டியை அவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திற்கு முறையீடாகக் கொண்டுசென்றனர். அனுமதியின்றி இன்னொரு ஊடகத்திற்கு பேட்டியளித்த குற்றத்திற்காக ஞாநி வேலைநீக்கம் செய்யப்பட்டார். அதற்கு எதிராகச் சட்டப்போராட்டம் நடத்தி பல ஆண்டுகளுக்குப்பின் வென்று இழப்பீடுபெற்றார் என்று சொன்னார்.

அதன்பின் பல இதழ்களில் அவர் இதழாளராகப் பணியாற்றியிருக்கிறார்.தீம்தரிகிட என்னும் சிற்றிதழை பல இடைவெளிகளுடன் தொடர்ந்து நடத்தியிருக்கிறார்.  பரீக்ஷா நாடகக்குழுவை தொடர்ந்து கடைசிவரை நடத்தினார். என் நண்பர்கள் பலர் அவ்வியக்கத்திலிருந்து வந்தவர். அவர்களுக்கு ஞாநி ஓர் ஆசிரியர், தலைவர், கூடவே தடைகளே இல்லாத நண்பர்.

ஞாநி காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியை எடுத்த பேட்டி துளக்கில் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டபோது அவருக்கு நான் ஒரு வாசகர் கடிதம் அனுப்பியிருந்தேன், அப்பேட்டியைப் பாராட்டி. அவரை முதலில் சந்தித்தபோது அதைப்பற்றி அவரிடம் சொன்னேன். முதல்சந்திப்பு இப்போது மூடப்பட்டுவிட்ட உட்லண்ட்ஸ் டிரைவ் இன்னில் நிகழ்ந்தது. என் கைகளைப்பற்றிக்கொண்டு ஆவேசமாக நிறையப்பேசிக்கொண்டிருந்தார். பேசும்போது நம்மை தொட்டுக்கொண்டே இருப்பதும், நட்பார்ந்த சிரிப்புடன் முகத்தை நம் முகம் அருகே கொண்டுவந்து அடித்தொண்டையில் உரக்கப்பேசுவதும் அவருடைய பாணி. பேச்சில் அடிக்கடி ‘என்ன? என்ன?’ என்பார், அன்று அவரைச் சந்தித்தபோது அப்பேச்சு முறை எனக்கு விந்தையாக இருந்தது. மறுநாள் அவர் டிரைவ் இன் வர நானும் அவரும் அசோகமித்திரனைச் சந்திக்கச் சென்றோம்.

1992- ல் அவரும் நானும் சாகித்ய அக்காதமி கருத்தரங்கு ஒன்றுக்குச் சேர்ந்து சென்றோம். அதற்குமுன் அவருடைய இல்லத்தில் ஒருநாள் தங்கியிருந்தேன். அப்போது அரசுத் தொலைக்காட்சியில் தொடர்கள் தயாரிப்பதில் பெரும் ஈடுபாட்டுடன் இருந்தார். திரைத்துறையில் நுழைந்து இயக்குநர் ஆகவேண்டும் என்ற திட்டமிருந்தது. சில திரைக்கதைகளைப்பற்றி பேசினார். பிறிதொருமுறை அவருடைய ஒரு நாடகவிழாவின்போது அவருடன் தங்கியிருந்தேன். கடைசியாக அவர் தன் இல்லத்தில் நடத்தும் கேணி இலக்கியச் சந்திப்புக்குச் சென்றபோது அவருடன் ஒருநாள் தங்கியிருந்தேன். மறுநாள் அசோகமித்திரனைச் சந்திக்கச் சென்றோம்.

தொடர்ந்து அவருடன் எனக்கு தொடர்பிருந்தது. அவருடன் பலமுறை நீண்ட உரையாடல்களில் ஈடுபட்டிருக்கிறேன். அவருடைய கருத்துக்கள் எளிமையான இடதுசாரி- திராவிட இயக்க அரசியல்நிலைபாடுகள் சார்ந்தவை. அந்த அரசியல்நிலைபாடுகளுடன் சமகால அரசியல்செய்திகளை விமர்சனம் செய்வதுதான் அவருடைய அறிவியக்கச் செயல்பாடு. ஆகவே அவர் முதன்மையாக ஓர் அரசியல்விமர்சகர் மட்டுமே. அவருடைய நாடகங்களும் மேடையில் நிகழும் அரசியல் விமர்சனங்கள்தான்.

பொதுவாக அவருடைய கலை, இலக்கிய ஆர்வங்கள் எளிய நிலையிலானவை. அரசியல்விமர்சகர் என்றாலும் அரசியலுக்குப்பின்புலமாக அமையும் வரலாறு, தத்துவம் ஆகியவற்றில் பெரிய ஆர்வமோ பயிற்சியோ அற்றவர். இதழாளராகவே தன்னை வரையறை செய்துகொண்டவர்.  நாவலும் நாடகங்களும் எழுதியிருக்கிறார். அவையும் சமகால அரசியல் உள்ளடக்கம் கொண்டவை மட்டுமே.

எனக்கு ஞாநியின் அரசியல்நிலைபாடுகள் பலசமயம் ஒத்துப்போவதில்லை, அவருடைய பொதுவான அறநிலைபாடுகளில் உடன்பாடுகள் உண்டு. ஆனால் அவர் தன் அரசியல்நிலைபாடுகளில் நேர்மையான ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதும், அவருடைய அரசியல் முழுக்கமுழுக்க அவருடைய கொள்கைகள் சார்ந்ததே என்பதிலும் முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தேன். சுயநல அரசியல், நம் அன்றாடக் கயமைகள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவர் அவர். பழைய கம்யூனிஸ்டுத் தோழர்களின் அதே தீவிரமனநிலையும்,அர்ப்பணிப்புள்ள வாழ்க்கையும் கொண்டவர். அவர்களைப்போலவே அரசியல்எதிரி என உருவகித்துக்கொண்டவர்கள் மேல் தீவிரமான வெறுப்பும் அவரிடம் எழுவதுண்டு. அதில் அதிக தர்க்கநியாயம் பார்க்க மாட்டார், எல்லாக்கோணங்களிலும் தாக்குவார்.

அதேசமயம் ஞாநியின் இயல்புகளில் முதன்மையானது அவருடைய திறந்தமனம். எனக்கும் அவருக்கும் கருத்துமோதல்கள் உருவானாலும் நான் அவர் மேல் எனக்குள்ள மதிப்பை எப்போதும் பதிவுசெய்துவந்திருக்கிறேன். அவருக்கு என் நூல் ஒன்றை சமர்ப்பணம் செய்திருக்கிறேன், அவரை பெரும்பாலும் மறுக்கும் அரசியல்கருத்துக்கள் கொண்ட நூல் அது. அரிதாகவே அவரிடம் மனக்கசப்பு கொள்ளுமளவுக்குப் பூசல்கள் நிகழ்ந்துள்ளன. சிலநாட்களிலேயே தொலைபேசியில் அழைத்து சமாதானம் செய்துகொள்வேன். “நீ கூப்பிடுவேன்னு தெரியும்” என்று சிரிப்பார். அவரைப்பொறுத்தவரை தனிமனிதர்கள் எவர் மேலும் நீடித்த பகைமை கொள்பவர் அல்ல. சந்தித்ததுமே அனைத்தையும் மறந்து தழுவிக்கொள்ளக்கூடியவர்.

இறுதிநாட்களில் உடல்நிலை சரியில்லாமலிருந்தபோது நலம் விசாரிப்பதற்காகச் சென்றிருந்தேன். நான் நோய் விசாரிக்கச் சென்றால் அதைப்பற்றிப் பேசவேண்டாம் என நினைப்பவன். அவரிடம் நானும் நண்பர்களும் முற்றிலும் வேடிக்கையாகவே பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவரை தொலைக்காட்சியில் இருந்து ஏதோ கருத்து கேட்க அழைத்தார்கள். அவர் அதன்பொருட்டு பேரார்வத்துடன் நாற்காலியில் அமர்ந்து பேசுவதைக் கண்டேன். தொலைக்காட்சி விவாதங்களில் மிகுந்த நம்பிக்கையுடன் அவர் கலந்துகொண்டார் என்றும் அவருக்கு வாழ்க்கை குறித்த நம்பிக்கையையும் பிடிமானத்தையும் அவை அளித்தன என்றும் தோன்றியது.

அன்று மருத்துவக் காப்பீடு செய்வதைப்பற்றி என்னிடமும் என்னுடன் வந்த என் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தார் ஞாநி. என்னிடமும் நண்பர்களிடம் அதை திரும்பத்திரும்ப வலியுறுத்தினார். நான் திரும்பவந்தபின் சில மாதங்கள் கழித்து தொலைபேசியில் அழைத்து “செய்துவிட்டீர்களா?” என விசாரித்தார். உண்மையில் நான் அதன்பின்னரே தனிப்பட்டமுறையில் மருத்துவக்காப்பீடு செய்துகொண்டேன்

அனைத்துவகையிலும் நம் காலகட்டத்தின் அரிதான ஆளுமைகளில் ஒருவர் ஞாநி. ’கருத்தியல்வாழ்க்கை’ என ஒன்று உண்டு. தனிப்பட்ட மகிழ்ச்சிகள், இலக்குகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தான் நம்பும் கருத்தியல் ஒன்றுக்காக வாழ்தல், அதில் நிறைவடைதல். ஆனால் அது வெறுப்பில் எழும் எதிர்நிலைபாடு அல்ல, நேர்நிலையான நம்பிக்கையிலிருந்து எழுவது. அதேபோல அது வெறும் வாய்வெளிப்பாடு அல்ல, சலிக்காத செயல்பாடு வழியாக நீள்வது .இன்று முகநூலில் மட்டுமே கருத்தியல்சார்பாளர் என முகம் காட்டும் உலகியல்வாதிகளே மிகுதி. சென்ற யுகத்தில் அப்படி கருத்தியல்வாழ்க்கை வாழ்ந்தவர்கள் பலர் நம்மிடையே இருந்தனர். காந்தியர்கள், இடதுசாரிகள். ஞாநி அவர்களில் ஒருவர். அவரை அதன்பொருட்டு நாம் நீண்டகாலம் நினைவில்கொண்டிருப்போம் என நினைக்கிறேன்.

ஞாநி இணையதளம்

ஞாநி

அண்ணா ஹசாரே, ஞாநி, சோ

ஞாநி பற்றி…

ஜோ- ஞாநி-விமர்சனங்கள்

ஞாநியும் ஆம் ஆத்மியும்

ஞாநி ஒரு கடிதம்

ஞாநி எழுதியவை…

***

முந்தைய கட்டுரைஇதழாளர்கள்!
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–31