பகுதி ஐந்து : நிலநஞ்சு – 3
அவை முன்னரே நடந்துகொண்டிருந்தமையால் அவர்கள் உள்ளே நுழைந்த அறிவிப்பு காற்றில் சருகென சிறிய சலசலப்பை உருவாக்கி அலையமைந்தது. அனைவரும் பிறிதொன்றுக்காக காத்திருந்தனர். அவர்களை எவரும் பொருட்படுத்தவில்லை என்று உணர்ந்த கரேணுமதி நீள்மூச்செறிந்து “காற்றோட்டம் இல்லாத இடுங்கலான இடத்தில் இந்த பீடங்களைப் போட முடிவெடுத்தவன் எவன்?” என்றாள். பிந்துமதி குந்தியை நோக்கினாள். அவைக்கு விழியளித்திருந்த குந்தி அவர்களை திரும்பிப் பார்க்கவில்லை. தேவிகையும் விஜயையும் மட்டும் திரும்பிப்பார்த்து தலைவணங்கினர். கரேணுமதி அவ்வணக்கத்தை ஏற்றதாக தலையசைத்த பின் நோக்கை திருப்பிக்கொண்டாள்.
பிந்துமதி “அவை நிகழ்வுகள் சிறந்த முறையில் நடிக்கப்படுகின்றன என்று தோன்றுகிறது, மூத்தவளே” என்றாள். கரேணுமதி புன்னகைத்து “என்ன?” என்றாள். “அரசர் அந்தணருக்கும் பாவலருக்கும் சூதருக்கும் கொடைகள் அளிக்கிறார்” என்றாள். கரேணுமதி அவை மேடையை நோக்க மூவர் மூவராக மேடையேறி சூதர்கள் யுதிஷ்டிரரிடமிருந்து பொன், வெள்ளி நாணயங்களை பரிசெனப் பெற்று தலைவணங்கி புறம்காட்டாது இறங்கினர். “அந்த நாணயங்களைக்கொண்டு அவர்கள் மொந்தைக் கள் வாங்கி அருந்தலாம். இந்நகரில் அதுவே நன்றல்லவா?” என்றாள் கரேணுமதி.
பிந்துமதி அவையை விழிதுழாவியபின் “இளைய யாதவர் அவையமர்ந்திருக்கிறார். பார்த்தீர்களல்லவா?” என்றாள். கரேணுமதி விழி அலைய தேடி இளைய யாதவரை நோக்கு தொட்டு “ஆம், ஏன் அங்கே அமர்ந்திருக்கிறார்?” என்றாள். “அவர் அரசர் அல்ல என்பதனால்” என்றாள் பிந்துமதி. மீண்டும் நோக்கிவிட்டு “அருகே சாத்யகியும் இல்லை” என்றாள் கரேணுமதி. “அவர் தன்னை இளையவரின் அணுக்கக்காவலர் என்றே அமைத்துக்கொண்டிருக்கிறார். ஆகவே அவையமர்வதில்லை போலும்” என்றாள் பிந்துமதி. கரேணுமதி “நன்று, முடியிலா யாதவரின் முதற்காவலர் பணியின்பொருட்டு சத்யகரின் மைந்தர் என்னும் நிலையை துறந்துவிட்டாரா?” என்றாள்.
“அவ்வாறுதான் சொன்னார்கள். யாதவபுரியின் இளவரசுப் பட்டத்தை அவர் துறந்தபோது தன் குடிமூத்தாரிடம் தான் சூடிய அனைத்தையும் தன் உடலிலிருந்து விலக்க முடியும் என்றும் தோளிலும் நெஞ்சிலும் பொறிக்கப்பட்ட ஐந்து அடிமை முத்திரைகளை தன் உடலிலிருந்து சிதையன்று மட்டுமே அகற்ற முடியும் என்றும் சொன்னாராம்.” கரேணுமதி புன்னகைத்து “எங்கிருந்தாலும் தங்கள் இடமென்னவென்று உள்ளிருந்தெழும் ஆணையால் மானுடர் முடிவெடுக்கிறார்கள். முன்பொருமுறை அந்தணர் அவையில் மாற்றுருக்கொண்டு சூத்திரன் ஒருவன் அமர்ந்தான். அன்னமிட்டு நெய்யூற்றுகையிலேயே அவன் தன்னை காட்டிவிட்டான். நெய்நிறை ஏனத்தின் அடியில் கைவைத்து தள்ளி மொத்த நெய்யையும் தன் இலையில் கவிழ்த்துக்கொண்டான். அக்கணமே அவன் தோளைப்பற்றி காவலர் உசாவியபோது உண்மை தெரிந்தது” என்றாள்.
குந்தி திரும்பி தேவிகையிடம் ஏதோ சொல்ல தேவிகை அதை விஜயையிடம் சொன்னாள். விஜயை கரேணுமதியிடம் சற்று சரிந்து “மகளிர் அவையில் இருக்கையில் தனியுரையாடல் தேவையில்லையென்று பேரரசி ஆணையிடுகிறார்” என்றாள். கரேணுமதி முகம் சிறுத்து “நன்று” என்று பற்களைக் கடித்தபடி சொன்னாள். விஜயை மறுபக்கம் திரும்பியதும் கரேணுமதி திரும்பி பிந்துமதியின் விழிகளை பார்த்தாள். பிந்துமதி மெல்ல தலையசைத்தாள். கரேணுமதி மெல்லிய சீறலாக “இதை ஓர் அரசவையென்று எண்ணுகிறாள் முதுமகள், நன்று” என்றாள். பிந்துமதி அவள் கையை பார்த்தாள். நெஞ்சு அதிர நோக்கை விலக்கிக்கொண்டாள். அவள் விரல்கள் ஆடையின் விளிம்பிலிருந்த பொன்னூலை பிரித்து எடுத்துக்கொண்டிருந்தன.
அரசமுறைமைகள் அனைத்தும் முடிவடைந்ததும் சௌனகர் கைகாட்ட நிமித்திகன் வெள்ளிக்கோலைத் தூக்கி மும்முறை சுழற்றியபடி அவை மேடையிலேறி தலைக்கு மேல் கோலைத் தூக்கிக் காட்டினான். அவை கலைவடங்கி அமைதியடைந்தது வந்தமைந்த பறவை சிறகுகளை கலைத்தடுக்கி வெண்சங்கென்றாவதுபோல என பிந்துமதி நினைத்தாள். ஏன் அந்த ஒப்புமை உள்ளத்திலெழுந்தது என வியந்துகொண்டாள். யுதிஷ்டிரர் தாடியை நீவியபடி தொய்ந்த தோள்களுடன் அமர்ந்திருந்தார். பீமன் கைகளை மார்பில் கட்டியபடி நிமிர்ந்து அமர்ந்து தன் காலடிகளை நோக்கி விழிதழைத்திருந்தான். அவனருகே மேலிருந்து உதிர்ந்தவன்போல அர்ஜுனன்.
நிமித்திகன் உரத்த குரலில் “அவையீரே, சான்றோரே, குடிமூத்தோரே, அரசரின் குரல் என்று இந்த அவை நின்று இதை அறிவிக்கிறேன். நம் அவையின் சொல்கொண்டு அஸ்தினபுரிக்குச் சென்று தூதுரைத்து அவர்களின் செய்தியுடன் மீண்டுவந்த இளைய யாதவர் இங்கு அவையமர்ந்திருக்கிறார். அங்கு நிகழ்ந்தவற்றையும் இனி இங்கு ஆவனவற்றையும் குறித்து அவர் உரைப்பார். அவையினரின் எண்ணம் உசாவி மூத்தோர் விழைவறிந்து நீத்தோருக்கும் தெய்வங்களுக்கும் உகக்கும் முடிவை அரசர் இந்த அவையில் அறிவிப்பார். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றபின் மீண்டும் வெள்ளிக்கோலை மும்முறை சுழற்றி தலைவணங்கி அகன்றான்.
இளைய யாதவர் தன் மீது அனைத்து நோட்டங்களும் அமைந்திருப்பதை உணர்ந்தவராக புன்னகையுடன் எழுந்தார். மூச்சொலியாக “கொலைப் புன்னகை!” என்றாள் கரேணுமதி. ஆனால் அத்தருணம் பிந்துமதி அச்சொல்லை வெறுத்தாள். மறுகணம் அப்போது தானும் ஒரு வசைச்சொல்லையே கூறியிருப்போமோ என்னும் எண்ணம் எழுந்தது. இளைய யாதவர் யுதிஷ்டிரரை நோக்கி தலைவணங்கிவிட்டு “அவை வெல்க! அமர்ந்த மூத்தோர் வாழ்க! அரசரின் முடி பொலிக! அவையோரே, நான் அரசரின் ஆணைபெற்று அஸ்தினபுரிக்கு கிளம்பினேன். அங்கு சென்று தூதுரைத்து மீண்டதையும் அதன் விளைவென திரண்டதையும் சொல்லும்படி பணிக்கப்பட்டிருக்கிறேன்” என்றார்.
“அவையீரே, உபப்பிலாவ்யத்திலிருந்து கிளம்பி அஸ்தினபுரிநாட்டின் எல்லையை நான் கடந்ததுமே கௌரவர்களின் அமைச்சர்களும் ஒற்றர் தலைவர்களும் என்னை அணுகி அரச விருந்தினராக அமையும்படி கோரினர். தங்கள் காவல்மாளிகையில் தங்கி இளைப்பாறி அவர்கள் அளித்த பெருந்தேரில் நகர்நுழையும்படி வற்புறுத்தினர். அரசரின் ஆணையென்றும், பின்னர் பேரரசரின் மன்றாட்டென்றும் அது முன்வைக்கப்பட்டது. நான் முடிகொண்ட அரசன் அல்ல என்பதனால் எளிய யாதவனாக அந்நகர் புகவிருப்பதாகச் சொல்லி அதை முற்றிலும் மறுத்தேன். மரத்தடிகளில் பகல் தங்கியும் சாவடிகளில் இரவுறங்கியும் அஸ்தினபுரிக்குச் சென்றேன்.”
அவர் ஏன் அத்தனை விரிவாகச் சொல்கிறார் என பிந்துமதி எண்ணினாள். “நகர் வாயிலில் எனக்காக விகர்ணனும் யுயுத்ஸுவும் காத்து நின்றிருந்தனர். நகரினூடாக நான் சென்றபோது அஸ்தினபுரியின் குடிகள் என்னை அயலவன்போல பகைவிழிகொண்டு நோக்கினர். என் அகல்வுக்குப் பின் என் வருகைநோக்கம் குறித்து அலர் எழுவதை கேட்டுக்கொண்டே சென்றேன். அவையோரே, அஸ்தினபுரியின் யாதவரும் என்னை விலக்கிநோக்குவதையே உணர்ந்தேன். அவர்கள் விலக்குவதோடு விலக்குவதை பிறருக்குக் காட்டவும் வேண்டும் என்னும் நிலையில் இருப்பவர்கள்.”
“அரண்மனை முகப்பில் என்னை விதுரர் வரவேற்றார். யாதவருக்குரிய எளிய முகமனை சொன்னார். என்னை அரச விருந்தினருக்குரிய மாளிகைக்கு அழைத்துச்செல்ல யுயுத்ஸு முற்பட்டபோது அதை மறுத்து அரசதூதருக்குரிய எளிய தங்குமிடத்தை கோரிப் பெற்றேன். என் சொற்கள் மீது எந்தத் திரையும் விழ ஒப்பமாட்டேன் என்பதை அதனூடாக தெளிவுபடுத்தினேன். அன்று உச்சிப்பொழுதில் விதுரரின் இல்லத்திற்குச் சென்று உணவருந்தினேன். அங்கே நாங்கள் ஒரு சொல்லேனும் அரசுசூழ்தல் சார்ந்து பேசிக்கொள்ளவில்லை. விதுரர் சோர்ந்திருந்தார். சொல்லில் நம்பிக்கை இழந்திருந்தார். நீர்நிலைகள்மேல் இரவு என முதுமை விரைந்து அவர்மேல் படர்ந்துகொண்டிருப்பதைக் கண்டேன்.”
“மாலை என்னை சந்திக்க விகர்ணனும் அவன் துணைவியும் வந்தனர். அறத்தில் நிற்போம் என்றும் எந்த அவையிலும் அதையே உரைப்போம் என்றும் அவர்கள் எனக்கு சொல்லளித்தனர்” என்று இளைய யாதவர் தொடர்ந்தார். அவர் அவர்களுடனான சந்திப்பை விரித்துரைத்தார். மச்சகுலத்தவளான தாரையின் எளிமையான அழகை விரித்துரைத்தார். விகர்ணன் அறம்நிற்பதன்பொருட்டு கொண்டிருக்கும் துயரைக் குறித்து சொன்னார். வேண்டுமென்றே அவையின் உளக்குவிப்பை தளரச்செய்கிறார் என பிந்துமதி புரிந்துகொண்டாள். அவர்கள் அவர் சொல்வனவற்றின்மேல் சொல்லாடல் நிகழ்த்தும் எண்ணத்திலிருந்தனர். மெல்ல மெல்ல அவர்களின் உடல்கள் தளர்வுற்றன. அவர்கள் கூர்ந்து செவிகொள்ளாதவர்களானதை விழிகள் காட்டின.
“மறுநாள் பேரவையில் அமர்ந்து அங்கு நிகழ்வதை கூர்ந்து நோக்கினேன். பீஷ்மரும் துரோணரும் கிருபரும் அறுதிநிலை கொண்டுவிட்டனர் என்பதை அவர்களின் உடல்களிலிருந்து அறிந்தேன். முற்றிலும் இறுகி பிறிதொன்றிலா நிலையில் துரியோதனர் இருப்பதை கண்டேன். அவர் இளையோர் அவரது விரிந்த உடலென்றே தெரிந்தனர். ஒருபோதும் ஒன்றும் பிழைபடப் போவதில்லை என்றுணர்ந்த நிறைவமைதியுடனிருந்தனர் சகுனியும் கணிகரும்” என்று இளைய யாதவர் தொடர்ந்தார். அவையின் உளநிலையில் இருந்த பதற்றத்தை, அவர்களின் உடல்களில் குடிகொண்டு விம்மிய குருதிவிடாய்கொண்ட போர்த்தெய்வங்களைப்பற்றி கூறினார்.
“அவையோரே, நான் அஸ்தினபுரியின் அவையில் எழுந்து சஞ்சயன் இங்கு வந்து உரைத்ததை கூறினேன்” என்று அவர் தொடர்ந்தபோது அவையில் ஆர்வம் மிகவில்லை. விழிகள் வெறுமனே மலைத்துத் திறந்து இலைகளிலமர்ந்த மின்மினிகள்போல போதிய ஒளியில்லாத சிற்றவையின் வெளியை நிறைத்திருந்தன. “பாண்டவராகிய யுதிஷ்டிரர் தந்தையின் ஆணையை தலைமேற்கொண்டு பிறிதொன்றும் கோராது போர்ஒழிந்ததை அவர்களுக்கு உரைத்தேன். இனி பாண்டவர்கள் அறியா நிலம் சென்று குலமிலிகளாக வாழ்வார்கள் என்றும், தங்கள் கொடிவழியினருக்கு தங்கள் தோளாலும் அம்பாலும் ஈட்டும் நிலத்தையும் செல்வத்தையுமே விட்டுச்செல்வார்கள் என்றும் கூறினேன். வேடர்களாகவும் மச்சர்களாகவும் பாண்டுவின் குருதி பரவும் என்றும் அதுவே தந்தையின் ஆணையென்றால் அவ்வாறே ஆகுக என்றும் யுதிஷ்டிரர் கூறியதாக சொன்னேன்.”
“அப்போதுதான் விகர்ணன் எழுந்து உரத்த குரலில் திருதராஷ்டிரர் தன் மைந்தர்களான கௌரவருக்கு ஆணையிடாது இளையோர் மைந்தருக்கு ஆணையிட்டது ஏன் என்றான். தன் குருதியை நம்பினால் முதற்சொல்லை நேர்மைந்தருக்கு அல்லவா அளித்திருப்பார் என்றான். என் அன்னையின் கற்பை அவர் அவையில் மறுக்கிறார் என்றே பொருள் என்றான்.” மிக இயல்பான ஒழுக்கில் அவர் அதை சொல்லிச்சென்றமையால் அவையில் உணர்வெதிரொலிகள் ஏதும் எழவில்லை. அவர்கள் அந்நிகழ்வை புரிந்துகொள்ளவேயில்லை என்று பிந்துமதிக்கு தோன்றியது. அவருடைய எண்ணமும் அதுதானா என்று ஐயமெழுந்தது.
“அன்னை காந்தாரி ஆண்களின் அவையில் கற்பை நிறுவும் பொறுப்பு காந்தாரப் பெண்டிருக்கில்லை என்று சொல்லிவிட்டார். அச்சொல் திருதராஷ்டிரரை கிளர்த்தியது. அவையெழுந்து இரு கைகளையும் நீட்டி விழிநீர் மார்பில் வழிய தன் மைந்தர்களிடம் மன்றாடினார். குலநெறி பேணவேண்டும் என்றும் அறத்தில் நிற்க வேண்டுமென்றும் கூறினார். பாதி நாட்டையும் கருவூலத்தில் உகந்ததையும் இந்திரப்பிரஸ்தத்தையும் தன் இளையோன் மைந்தர்களுக்கு அளிக்க வேண்டுமென்றும் சொன்னார். தந்தையென்றும், துயர்கொண்ட முதியோன் என்றும் நின்று கோருவதாகச் சொல்லி விம்மியழுதார்.”
“அவருடைய சொற்களை ஏற்று யுதிஷ்டிரரின் அனைத்துரிமைகளையும் அளித்து உடன்குருதியினர் என தோள்தழுவி ஒற்றுமை கொள்வதே கௌரவருக்கு உகந்தது என்றார் பீஷ்மர். துரோணரும் கிருபரும் அவ்வாறே உரைத்தனர்” என்றார் இளைய யாதவர். அதே ஒழுக்கில் இயல்பான சொற்களில் “ஆனால் துரியோதனர் அவையிலெழுந்து ஒரு பிடி மண்ணும் ஒரு துளிப் பொன்னும் பாண்டவருக்கு அளிக்கப்பட முடியாதென்றும் அதன்பொருட்டு தந்தையைத் துறப்பதற்கு ஒருக்கமென்றும் அறிவித்தார்” என்றார்.
“அவை அதற்கு என்ன மறுமொழி சொல்கிறதென்று நான் நோக்கினேன். துரியோதனரே அஸ்தினபுரியின் குடிகளுக்கு அவ்வுரிமையை அளித்தார். அவ்வவை விரும்பினால் தன்னை முடிநீக்கம் செய்யலாம் என்றும் விழைபவர்கள் எழுந்து கோல்தூக்குமாறும் அறைகூவினார். அவை அவரைப் போற்றி பேரொலி எழுப்பியது. அங்கிருந்த குடித்தலைவர்கள் அனைவரும் துரியோதனரின் கூற்றை முழுதேற்றுக்கொண்டனர். அம்முடிவுக்கு முழுதும் கட்டுப்படுவதாக பீஷ்மர் முன்னரே அறிவித்திருந்தமையால் அவரும் அதை ஏற்றார். பீஷ்மரின் வழிநிற்பவர்களாகிய கிருபரும் துரோணரும் அதை ஏற்றனர்.”
“மறுநாள் அவையின் இறுதி முடிவு விதுரரால் அவையில் என்னிடம் அறிவிக்கப்பட்டது” என்றார் இளைய யாதவர். “அவர்கள் நம்மிடம் எந்த பேச்சுக்கும் சித்தமாக இல்லை. நிலமோ செல்வமோ நமக்கு அளிக்கமாட்டோம் என்பதே அஸ்தினபுரியின் அரசர் உபப்பிலாவ்யம் அமர்ந்த யுதிஷ்டிரருக்கு அளிக்கும் செய்தி.” அவை குழப்பத்திலாழ்ந்ததுபோல அமர்ந்திருந்தது. யுதிஷ்டிரர் தன் கைநகங்களை நோக்கிக்கொண்டிருந்தார். அவர் அருகே திரௌபதி சிலையென்று அமர்ந்திருந்தாள். சௌனகர் மட்டும் அவையில் அமர்ந்திருந்தவர்களை மாறிமாறி முகம்நோக்கிக்கொண்டிருந்தார்.
“இந்த அவை என்ன முடிவு எடுக்கப்போகிறது?” என்று பீமன் அமர்ந்தபடியே கேட்டான். சௌனகர் “அவை கூட்டாக முடிவெடுத்து…” என்று சொல்லத்தொடங்க “அனைத்தையும் கைவிட்டு நினைத்த திசை நோக்கி செல்வதற்கு எதற்கு அவைசூழ்தல்? விலங்குகளும் அதைத்தான் செய்கின்றன” என்றான் பீமன். இளைய யாதவர் “அவ்வாறு நாம் நிலமொழிந்து சென்றாலும் நம்மை படைமுகத்தில் வென்று அழித்தாகவேண்டும் என்று சகுனி துரியோதனரிடம் சொல்லியிருப்பதாக விதுரர் சொன்னார்” என்றார். யுதிஷ்டிரர் “அது என்ன முறை?” என்றார்.
“அரசே, நானாக இருப்பினும் அதையே செய்வேன். ஏனென்றால் நாம் படைதிரட்டிவிட்டோம். நேற்றுவரை பாரதவர்ஷத்தில் இல்லாதிருந்த படை இது. நிஷாதர்களும் கிராதர்களும் அரக்கர்களும் அசுரர்களும் கொண்டது. நாம் ஒழிந்தாலும் இந்தப் படை இங்கே இருக்கும். இப்போது இதை கலைத்தாலும் பாலில் நெய் என நுண்வடிவில் இந்நிலத்தில் இருந்துகொண்டிருக்கும். இதை முற்றாக வென்று அடக்காமல் இங்கே இனி ஷத்ரியர் கோல் நிலைகொள்ளாது” என்றார் இளைய யாதவர்.
யுதிஷ்டிரர் துயருடன் தலையை அசைத்தபடி “பிறிதொன்றை நான் துரியோதனனிடமிருந்து எதிர்பார்க்கவும் இல்லை, யாதவனே” என்றார். பீமன் “பிறகென்ன? தூது முடிந்துவிட்டது. நன்று. இனி ஆவதை பார்ப்போம். என்ன செய்யப்போகிறோம்? உபப்பிலாவ்யத்தைத் துறந்து நம்முடன் வரத்துணியும் குடிகளையும் மைந்தரையும் மனைவியரையும் அழைத்துக்கொண்டு எத்திசைக்கு ஏகப்போகிறோம்? தக்கணமா, காமரூபமா, அன்றி வடக்கே கின்னர நாடுகளா?” என்றான். யுதிஷ்டிரர் முகம்சுளித்து “பொறு, மந்தா” என்றபின் “யாதவனே, நீ அங்கு எதை உரைத்து மீண்டாய்? இந்த அவையில் மீண்டும் என்ன கூற விழைகிறாய்?” என்றார்.
“நான் அவையிலெழுந்து அங்கு நிகழ்ந்தவற்றை தங்களிடம் வந்து சொல்லி மீள்கிறேன்” என்றேன். “மீள்கிறேன் என்றா?” என்றார் யுதிஷ்டிரர். “நாடோ செல்வமோ அளிக்கஇயலாதென்று அவன் கூறிவிட்ட பிறகென்ன?” என்று பீமன் கேட்டான். “அஸ்தினபுரியின் ஊட்டுபுரையில் உணவுண்ணும் உரிமையை பெற்றுவரப்போகிறோமா?” யுதிஷ்டிரர் “பொறு மந்தா, சினம் பரிமாறுவதற்குரியதல்ல அவை” என்றார். இளைய யாதவரிடம் “நீ எண்ணுவதென்ன யாதவனே?” என்று கேட்டார்.
இளைய யாதவர் “மீண்டுமொரு தூதுடன் செல்லலாம் என்று நினைக்கிறேன். அன்றிரவு விதுரரின் தனியறையில் சென்று அமர்ந்து அதை பேசி முடிவுசெய்துவிட்டே அங்கிருந்து கிளம்பினேன்” என்றார். யுதிஷ்டிரர் “கூறுக, எதுவாயினும் உன் ஆணை” என்றார். “இன்னும் சில நாட்களில் அஸ்தினபுரியில் ஷத்ரியப்பேரவை கூடப்போகிறது. ஜயத்ரதன், அஸ்வத்தாமன், சல்யர், ஷத்ரிய மன்னர்கள் அனைவரும் அங்கு அவையமர்ந்திருப்பார்கள். அங்கு சென்று மீண்டும் ஒரு தூது உரைப்பேன். தந்தையின் ஆணையை தான் மீறிவிட்டதை அந்த அவையில் எப்படி துரியோதனர் நிறுவுகிறார் என்று பார்க்கிறேன். அத்துடன் நமது கோரிக்கையை இன்னும் ஒரு படி கீழிறக்க சித்தமாகிறேன்” என்றார்.
“என்ன கோரப்போகிறோம்?” என்று பீமன் கேட்டான். அவனை பொறுத்திருக்கும்படி கைகாட்டிய பின் யுதிஷ்டிரர் “நீயே கூறுக, யாதவனே. நாங்கள் இனி எதை கோரமுடியும்?” என்றார். இளைய யாதவர் “இன்றைய அஸ்தினபுரி நாட்டின் வடகிழக்கெல்லைக் காட்டின் அருகே ஐந்து ஊர்களை கோரிப்பெறுகிறேன்” என்றார். “ஐந்து ஊர்களா? எவருக்கு? எனக்கு எவரும் ஊரளிக்க வேண்டியதில்லை” என்று பீமன் சொன்னான். “பொறு, மந்தா” என்று சீற்றத்துடன் யுதிஷ்டிரர் சொன்னார். “யாதவனே, ஐந்து ஊர்கள் நமக்கு எதற்கு? அதைக்கொண்டு நாம் இயற்றுவதென்ன?”
“ஐந்து ஊர்கள் அமைந்தால் நம் குடியினரை அங்கு வரவழைக்க முடியும். வடகிழக்கென்பது பெருங்காடுகளின் விளிம்பு. குடி பெருக நம் நிலம் பெருகும்” என்றார் இளைய யாதவர். “இங்கிருந்து அறியா நிலம் ஒன்றுக்குச் சென்று அங்கொரு அரசு அமைத்தல் எளிதல்ல. நாம் நிலம் வெல்லலாம், குடியமைய நெடுங்காலமாகும். தொல்குடிகள் பிறரை அரசரென ஏற்பதில்லை என்று அறிவீர்கள். மூத்த குடிகள் தொல்மூதாதையர் வகுத்த நீரெல்லைகளைக் கடந்து செல்வதுமில்லை. அஸ்தினபுரியின் எல்லைக்குள் என்றால் நம் மக்கள் நம்முடன் வருவார்கள்.” பீமன் “நாம் நமக்குரிய அனைத்தையும் புதிதாக ஈட்டுவோம்… பாரதவர்ஷத்தில் அரிய நிலங்கள் பல உள்ளன. நம் வில்லும் வேலும் காவலென அமையுமென்றால் நமக்கு அரசுரிமை அளிக்கும் குலங்களும் உள்ளன, நான் அறிவேன்” என்றான்.
“அது எளிதல்ல, இளையவரே” என்றார் இளைய யாதவர். “உங்கள் தோளாற்றலும் அர்ஜுனனின் வில்லாற்றலும் உங்களுக்கு நலம் பயப்பதே. கூடவே தீங்கும் பயப்பவை. நீங்கள் எங்கு குடியேறினாலும் அங்கு ஒரு புது அரசு நாளடைவில் எழுமென்பதை சூழ இருக்கும் பிற அரசர் உடனே உணர்வார்கள். உங்களை முளையிலேயே அழிக்கவே அவர்கள் முனைவார்கள். அது உங்களுக்கு இடர், உங்களை ஏற்றவர்களுக்கு அழிவு.” பீமன் ஒவ்வாமையுடன் தலையசைத்தான். “காலூன்றுவதற்கு ஒரு கைப்பிடி மண் கிடைத்தால் அங்கிருந்து பாண்டவக் கொடிவழியினர் கிளைத்தெழ முடியும். ஐந்து ஊர்கள் ஐந்து நகர்களாகும். ஐந்து முகம்கொண்ட அரசாகும்” என்றார் இளைய யாதவர்.
“அதற்கு அவர்கள் ஒப்புவார்களா?” என்று சகதேவன் கேட்டான். “ஒப்பக்கூடும். ஏனெனில் ஐந்து ஊர்களில் நாம் அமைய ஒப்புக்கொண்டால் இப்போது நம்முடனிருக்கும் பெரும்படை கலைக்கப்படும். ஷத்ரிய வீரர்களால் தலைமைதாங்கப்படாத நிஷாதர்களையும் கிராதர்களையும் சிதறடித்து அழிக்கலாமென்று சகுனி எண்ணக்கூடும். நாம் அந்த ஐந்து ஊர்களில் இருந்து கிளம்பி அரசொன்றை அமைத்து அஸ்தினபுரிக்கு எதிர்நிற்பதென்றால்கூட இரண்டு தலைமுறைகளாவது ஆகும். அதற்குள் அஸ்தினபுரி பேரரசு என எழமுடியும். அவர்கள் நமக்கு பாதி நிலம் மறுப்பதே துரியோதனர் சத்ராஜித் என அமரமுடியாதென்பதனால்தான். ஐந்து ஊர்களைப் பெற்றால் நாம் அரசர்கள் அல்ல. அஸ்தினபுரியின் அரசர் மும்முடிசூடி அமர எந்தத் தடையும் இல்லை.”
“இது மிகச் சிறந்த சொல்லொப்பு என்றே நானும் எண்ணுகிறேன், மூத்தவரே” என்றான் சகதேவன். “நமக்கு அளித்ததுமாகும், நம்மை ஒருபோதும் எழ முடியாதவர்களாக ஆக்கி அரசுகளிடமிருந்து விலக்கியதுமாகும். சற்றேனும் அரசுசூழ்தல் அறிந்த எவர் இருந்தாலும் இதை ஒப்புக்கொள்வார்கள். அவர்கள் ஐந்து ஊர்களையே நமக்கு அளித்தார்கள் என்று சூதர் பாடினால் அது அவர்களுக்கு இழிவு. ஐந்து ஊர்களை நாம் கோரினோம் என்னும்போது அவ்விழிவு மறைகிறது. நாட்டையும் கருவூலத்தையும் நகரையும் அளிப்பதென்பது தங்களுக்கு ஆற்றல் மிக்க எதிரியை எஞ்சவிடுவது. ஐந்து ஊர்களே என்றால் நூறாண்டுகளுக்கு பற்றிக்கொள்ளாத எரித்துளி என நம்மை எஞ்சவிடுவது. பழியின்றி வெல்வதுதான் அது.”
“அனைத்துக்கும் மேலாக ஒவ்வொரு அவையிலும் நம்மை சிறுமைப்படுத்தி மகிழவும் கௌரவர்களுக்கு அது வாய்ப்பளிக்கிறது. ஆகவே அதை விடமாட்டார்கள் என்று எண்ணுகின்றேன்” என்றான் நகுலன். பீமன் உரத்த குரலில் “மூத்தவரே, இவ்வாறு கிள்ளி வீசப்படும் இத்துளி நிலத்தைக்கொண்டு நாம் அடையபோவதென்ன, இரந்து நின்றோம் எனும் இழிவையன்றி? இவ்வைந்து ஊர்களையும் எங்கள் தோள்வல்லமையால் வெல்ல முடியாதென்று மெய்யாகவே எண்ணுகிறீர்களா?” என்றான்.
“இல்லை, இளையோனே. மிக விரைவிலேயே ஐந்து மடங்கு நிலத்தை வெல்லும் ஆற்றல் உங்களுக்குண்டு. ஆனால் குடித்தலைவர்கள் என்றே நாம் கொள்ளப்படுவோம். எந்த அரசவையிலும் நம்மை அமர்த்தமாட்டார்கள். அஸ்தினபுரியின் எல்லைக்குள் பாண்டுவின் வழியென்று கைப்பிடி நிலமேனும் நமக்கின்றி நாம் பாண்டவர்கள் அல்ல. நாம் பாண்டவர்கள் என்று சொல்லிக்கொள்வோம், நாமன்றி பிறர் அவ்வாறு கொள்ளமாட்டார்கள். நம்மை சூதர் பாடமாட்டார்கள். புலவர் அப்பெயர் சொல்லி வழுத்தமாட்டார்கள்” என்றார் யுதிஷ்டிரர்.
“அதன் பின்னர் நீங்கள் பாண்டவர் என்று சொல்லி ஷத்ரியப் படைகளை எங்கும் திரட்டவும் இயலாது. குலமும் குடியும் குறிப்பிட்ட சூழலில் மட்டுமே செல்லுபடியாகும் நாணயங்கள். இவற்றை உதறி அறியா நிலங்களுக்குச் சென்றால் நிஷாதரென்றும் அரக்கரென்றும் அசுரரென்றுமே அறியப்படுவீர்கள். நிஷாதர் அரசராக முடியுமெனில் அரசர் நிஷாதருமாகக்கூடும் என்று உணர்க! அஸ்தினபுரியின் எல்லைக்குள் ஐந்து சிற்றூர்கள் இருப்பினும்கூட அவை உங்களை இத்தலைமுறையில் பாண்டவர்கள் என்று நிறுத்தும்” என்றார் இளைய யாதவர். “ஷத்ரிய அவையில் நமக்கு ஆதரவாக ஆற்றலுள்ள சில குரல்கள் எழாமலிருக்காது. அங்கு அஸ்வத்தாமர் வருகிறார். அறம் அறிந்த உள்ளம்கொண்டவர். அங்கரைக்கூட அதன் பொருட்டு நாம் எதிர்பார்க்கலாம். ஒரு வலுவான குரல் எழுந்தாலும்கூட துரியோதனர் செவி சாய்க்காமல் இருக்க இயலாது.”
பீமன் “அன்னை என்ன சொல்கிறார்? இப்போது அதுவே முதன்மை” என்றான். “பாண்டுவின் நிலத்தையும் முடியையும் கைக்கொள்ளாமல் ஒருபோதும் அமையமாட்டேன் என்று இந்த அவையில் வஞ்சினம் உரைத்தவர் அவரே.” கரேணுமதி “ஆம், பாண்டுவின் துணைவியென்ற முத்திரைக் கணையாழி இல்லையேல் காடுசென்று கன்றோட்ட வேண்டுமல்லவா?” என்றாள். குந்தியின் அருகே குனிந்த சேடி அவள் தன் மெலிந்த உதடுகளால் நடுங்கும் தலையுடன் சொன்ன சொற்களைக் கேட்டு தலையசைத்து அவைமேடைக்குச் சென்று வணங்கினாள். பேசுமாறு யுதிஷ்டிரர் கைகாட்டினார்.
“பேரரசி குந்தியின் செய்தியை இந்த அவைக்கு சொல்ல விரும்புகிறேன். அரசி விழைவது பாண்டுவின் மண்ணையே. சிறிதோ பெரிதோ அது தன் மைந்தரின் குருதி உரிமை என்பது மட்டுமே அன்னைக்கு ஒரு பொருட்டென தெரிகிறது. ஐந்து ஊர்கள், கருவூலத்திலிருந்து ஐந்து கலம் பொன், அது போதும். தன் மைந்தரை அன்னை நம்புகிறார். என்றேனும் பாண்டுவின் கொடிவழி மைந்தர் எழுந்து மும்முடிசூடுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்” என்றாள் சேடி.
சௌனகர் “பாஞ்சாலத்தரசியின் கருத்தையும் அவை அறியட்டும்” என்றார். திரௌபதி விழித்துக்கொள்பவள்போல் உடலசைவுகொண்டு எழுந்து கைகூப்பி “அவையினர் விழைவது எதுவாயினும் எனக்கு ஒப்புதலே” என்றாள். யுதிஷ்டிரர் முகம் மலர்ந்து “பிறகென்ன? யாதவனே, இம்முறை இவையனைத்தும் நன்றே முடியும் என்று எண்ணுகிறேன்” என்றார். இளைய யாதவர் “இது அவையின் ஆணை என்றால் இதை மீண்டும் ஒருமுறை சென்று ஷத்ரியப் பேரவையில் உரைக்கிறேன்” என்றார்.
எவரும் எதிர்பாராதபடி பிந்துமதி எழுந்து வெண்பட்டுத் திரையை விலக்கி அப்பால் சென்றாள். சுரேசர் திகைத்து “அரசி” என்றார். “வெண்பட்டுத் திரைக்குப் பின்னாலிருந்து அவையை நோக்கும் வழக்கம் சேதி நாட்டில் இல்லை” என்று உரத்த குரலில் பிந்துமதி சொன்னாள். “இரந்து பெறும் நிலத்துடன் அமைதல் அரசருக்கும் இளையோருக்கும் உகக்கலாம், எங்கள் குடி ஷத்ரியக் குருதி கொண்டது. என் மைந்தர் எங்கு பிறந்தாலும் ஷத்ரியர்கள். இரந்த நிலத்தில் அவர்கள் வாழமாட்டார்கள். ஒரு பிடி மண்ணென்றாலும் குருதி சிந்தி வென்று ஆள்வதையே அவர்கள் விரும்புவார்கள்” என்றாள்.
கரேணுமதி அதற்குள் தானும் வெளிவந்து அவள் அருகே நின்று “நிலம் துறக்கும் உரிமை அரசருக்கு உண்டு. அவர் அன்னைக்கும் உண்டு. ஆனால் அவை அறிக! இது பாண்டு வென்று ஈட்டிய நிலமல்ல. ஹஸ்தியும் குருவும் ஈட்டி கையளித்த நிலம். ஆகவே எங்கள் மைந்தருக்கும் முற்றுரிமை கொண்டது. எங்கள் மைந்தரின் நிலத்தைத் துறக்க இங்கு எவருக்கும் உரிமை அளிக்கப்படவில்லை. நாங்கள் இதற்கு ஒப்பமாட்டோம்” என்றாள். யுதிஷ்டிரர் முகம் சுளித்தபடி “இதென்ன பேச்சு? இவர்களின் குரலுக்கென்ன இடம் இங்கே?” என்றார். நகுலன் “உன் கருத்தை உரைத்துவிட்டாய் அல்லவா? உள்ளே செல்” என்றான். கரேணுமதி “என் சொற்களை இங்கு நாட்டும்படியே வந்தேன். வேண்டுமென்றால் எங்களை வெட்டி வீழ்த்துக… இங்கிருந்து அகலப்போவதில்லை” என்றாள்.
இளைய யாதவர் புன்னகை மாறா முகத்துடன் “அரசி, இந்த அவை கூடி ஒருங்கிணைந்து எடுத்த முடிவுக்கு தாங்களும் கட்டுப்பட்டவர்களே” என்றார். சகதேவன் பெண்களை நோக்காமல் பீமனை நோக்கி “போதும், இனி சொல்பொறுப்பதில்லை” என்றான். பிந்துமதி அவனை நோக்கி “என்ன செய்வீர்கள்? தலையரிவீர்களா? இல்லை உங்கள் குடிமூத்தவர்களைப்போல ஆடையுரிவீர்களா?” என்றாள். கரேணுமதி “நாங்கள் வந்தது இதை சொல்லவே. இதோ, அவையமர்ந்து சூதர்களுக்கும் அந்தணர்களுக்கும் கொடையளித்தார் இவர்களின் மூத்தவர். நாளை இவர்களின் தூதராக யாதவர் ஒருவர் சென்று அஸ்தினபுரியில் நிரைநின்று கொடை பெறப்போகிறார். ஷத்ரியர் கொடுப்பவர்களன்றி கொள்பவர்கள் அல்ல” என்றாள்.
அவர்களின் கொந்தளிப்பு அவையை சலிப்புடன் அமைதிகொள்ளச் செய்தது. கரேணுமதி “இந்திரப்பிரஸ்தம், அஸ்தினபுரியின் கருவூலத்தில் பாதி, குருநிலத்தில் மேற்கு என பாண்டவர் உரிமையில் பத்தில் ஒன்றுக்கு உரிமை கொண்டவர்கள் நாங்கள். அதை உதற எவரும் எங்களிடம் சொல்லவேண்டியதில்லை” என்றாள். யுதிஷ்டிரர் சலிப்புடன் தலையை அசைக்க நகுலன் சினம் மீறி இடைவாளில் கைவைத்தபடி முன்னால் வந்தான். அவனை சகதேவன் தோள்தொட்டு தடுத்தான். “நாங்கள் சேதிநாட்டிலிருந்து ஷத்ரியர்களால் கவரப்பட்டோம். ஆகவேதான் அவர்களின் மணமாலையை ஏற்றோம். பரிசில் வாங்கி வாழும் சூதர்கள் எனத் தெரிந்திருந்தால் அன்றே சங்கறுத்து விழுந்திருப்போம்” என்றாள் கரேணுமதி.
“நன்றுரைத்தீர்கள் அரசி, இந்த அவையில் உங்கள் குரல் ஒலித்தது நிறைவளிக்கிறது” என்று இளைய யாதவர் சொன்னார். “ஆனால் உங்கள் மைந்தர் பதினாறாண்டு அகவை முதிராதவர்களாக இருக்கையில் மட்டுமே உங்கள் சொற்கள் அவையில் ஒலிக்கவேண்டும். அன்றேல் உங்கள் சொல்லை உங்கள் மைந்தர் முழுதேற்றுக்கொண்டார்கள் என்று இந்த அவையில் நீங்கள் உறுதிசெய்ய வேண்டும். உங்கள் மைந்தர் அவையில் எழுக! அவர்கள் உரைக்கட்டும் அவர்கள் விழைவதென்ன என்று” என்றார்.
பிந்துமதி திகைத்து “நாங்கள் அவர்களின் அன்னையர்” என்றாள். “அன்னையர் சொல் தங்களுடையதே என மைந்தர் வந்து அவையில் உரைக்கவேண்டும்” என்றார் இளைய யாதவர். இருவரும் திகைத்து ஒருவரை ஒருவர் நோக்கினர். இளைய யாதவர் மெல்ல விழிமாறுபட்டு “அமருங்கள்” என்றார். பிந்துமதி “எங்களுக்குரியதை பெறாமல் அமரப்போவதில்லை” என்றாள். இளைய யாதவர் “அமர்க!” என தாழ்ந்த குரலில் சொன்னார். கரேணுமதி நடுங்கத்தொடங்குவதை பிந்துமதி உணர்ந்தாள். “அமர்க!” என்றார் இளைய யாதவர். கரேணுமதி மெல்லிய ஏக்க ஒலியுடன் தளர்ந்து பிந்துமதியின் தோளில் சரிந்து நிலத்தில் விழுந்தாள்.