”தமிழ் சினிமாவிலேருந்து நான் தப்பவே முடியாது. இதுக்குள்ளதான் என் கனவுகள் இருக்கு. ஏன்னா நான் சின்ன கைக்குழந்தையா இருக்கிற காலம் முதலே எங்கம்மா என்னைய தூக்கிட்டு சினிமாவுக்குப்போவாங்க. அதுக்கு முன்னாடி என்னை எங்கம்மா வயித்துக்குள்ள வைச்சிருந்த நாளிலேயே நான் சினிமாவை கேக்க ஆரம்பிச்சிருப்பேனோ என்னமோ. எனக்கு சினிமான்னு அறிமுகமாகிறது சத்தம் வெளிச்சம் சங்கீதம் எல்லாம் கலந்து மனசுக்குள்ள ஓடிட்டிருக்கிற கனவுகள்தான். மூணுவயசு வரைக்கும் நான் சினிமாவை ஒழுங்கா பாத்ததில்லை. கொஞ்சம் பாத்துட்டு தூங்கிடுவேன். அப்றம் கனவுகளும் வெளியே ஓடுற சினிமாவோட சத்தமும் எல்லாம் கலந்து வேறு ஒரு உலகத்தில நீந்தி போயிட்டே இருப்பேன். இப்பவும் என் கனவுகளுக்கு சினிமாவோட ரீ ரிக்கார்டிங் எ·பக்ட் இருக்கு. சினிமா என்னோட சப்கான்ஷியஸிலே ஊறிப்போச்சு சார்…”
வசந்தபாலன் சொன்னார். நான் அந்த மனநிலையை எளிதாக ஊகித்துக்கொண்டேன். ஏன் என்றால் எனக்கு கதகளி அதற்கு நிகரானது. நான் இளமையில் சினிமாவை குறைவாகவே பார்த்திருக்கிறேன். நாங்கள் இருந்த சிறிய ஊர்களில் சினிமாக்கொட்டகைகள் கிடையாது. நெடுந்தூரம் நடந்துசென்று படம் பார்ப்பதும் குறைவு. சினிமா எனக்கு என் ஐந்துவயதுக்கு மேலே ஓரளவு அறிமுகமாகிய கலை. புகுமுக வகுப்பு படிக்கும் காலகட்டத்தில் நான் ஒருவருடம் சினிமாப்பைத்தியமாக இருந்தேன். பின்னர் தமிழ் சினிமாவை உப்பக்கம் கண்டுவிட்டதாக ஒரு எண்ணம் ஏற்பட்டது. அதன்பின் அதிகமாகப் படம் பார்த்ததில்லை. பின்னர் 1984ல் கேரளத்துக்கு வேலைக்குப்போனபோது அதே போல ஒரு மலையாள சினிமா மோகம். அதுவும் இரண்டுவருடத்தில் தணிந்தது.
ஆனால் கதகளி அப்படி அல்ல. எங்களூரில் சுற்றிவர ஏழெட்டு கோயில்களில் வருடத்தில் பத்துநாட்கள் கதகளி நடக்கும். திருவட்டார் கோயிலில் இருபதுநாள். என் அப்பாவின் அம்மாவும் அப்பாவும் கதகளி ரசிகர்கள். என் அம்மாவுக்கும் கதகளி பிடிக்கும். ஆகவே நான் அம்மா வயிற்றிலேயே கதகளியை அறிய ஆரம்பித்துவிட்டேன். கைக்குழந்தையாக கதகளி பார்க்கச்சென்ற நினைவு எனக்கிருக்கிறது. உயரமான ஒரு மேடைமீது சிவந்த தீப ஒளியில் பளபளவென்று ஒரு உருவம் மெல்ல மெல்ல அசைந்து கொண்டிருந்தது. பின்னணியாக செண்டையின் மேளம். இலைத்தாளமும் சேங்கிலைகளும் எழுப்பும் இசைமுழக்கம். ஒரு பிரம்மாண்டமான வண்டுபோல என்ற எண்ணம் என் மனதில் எழுந்தது. அதை பல இடங்களில் எழுதியிருக்கிறேன்.
நெடுங்காலம் நான் கதகளியை திரைநோட்டம் வரைதான் பார்த்திருக்கிறேன். ககதளி உண்டு என்றால் எங்கள் வீட்டில் இருந்து அம்மாவும் பக்கத்து வீட்டு மாமிகளும் வேலைகளை முடித்துவிட்டு சாயங்காலம் குளிக்கச்செல்வார்கள். அப்போதே நான் பதற்றம்மிக்க உற்சாகத்துக்கு ஆளாவேன். பிருஷ்டத்தை கீழிருந்து ஒரு விசை தள்ளிக்கொண்டே இருப்பதனால் நிற்கவோ உற்காரவோ முடியாது. துள்ளிக்கொண்டே இருக்க வேண்டும். தோளில் இருந்து நிஜாரின் கொக்கி வேறு சரிந்துகொண்டே இருக்கும். குளத்துக்குப் போனதுமே என்னை குளிப்பாட்டி தலைதுவட்டி துண்டு உடுக்கச்செய்து கரையில் நிறுத்திவிட்டு அம்மாவும் பிற மாமிகளும் நிதானமாக குளிப்பார்கள். பெரும்பாலும் அம்மா கதகளியின் கதையை சொல்லுவாள். கீசகனை பீமன் வதம்செய்யப்போகிறான். சைரந்திரியை அவன் கீசகனிடமிருந்து காப்பாற்றுகிறான். இன்று என்ன ஆனாலும் தூங்கக்கூடாது, முழுக்கதகளியையும் பார்த்துவிடவேண்டும் என்று நான் மனதில் நினைப்பேன்.
இருட்ட ஆரம்பித்த பிறகு கும்பலாக மாமிகளும் அம்மாவும் கோயிலுக்குக் கிளம்பிச்செல்வார்கள். கைகளில் சுருட்டப்பட்ட சாக்குத்துணிகள். கதகளி பார்ப்பதற்கென்றே பிரித்து விளிம்பு மடித்து தைக்கப்பட்டவை. வறுத்த வேர்க்கடலை, பெரும்பயறு போன்றவை அடங்கிய துணிப்பை. பூ¨ஜைக்கான பொருட்கள். முன்னால் ஒரு மாமி தென்னை ஓலைச்சருகை சேர்த்துகட்டிய ‘சூட்டுப்பந்தத்தை’ கொளுத்தி செக்கச்சிவந்த தீயை நைலான் ரிப்பன் போல சுழலச்செய்தபடி செல்வாள். ஒளி சுழலும்போது சுற்றியிருக்கும் தோப்புமரங்கள் சுடர்ந்து சுடர்ந்து அணையும். மரங்களின் நிழல்கள் எழுந்து பிற மரங்களில் படரும். அக்காலத்தில் கிராமத்தில் திருட்டு போன்ற குற்றங்கள் இல்லை. எல்லாருமே தெரிந்தவர்கள். தோப்புகள் வழிகாக இருட்டில் பொன்நகைகள் அணிந்த பெண்கள் எட்டு கிலோமீட்டர் நடந்துசெல்வது இப்போது கற்பனைக்கே முடியாது.
கோயிலுக்குப் போகும்போது பூஜைகளும், வெளியே அரங்கில் சங்கீதக் கச்சேரி அல்லது பாகவத பாராயணம் நடந்துகொண்டிருக்கும். சங்கீதம் அனேகமாக உள்ளூர் அய்யரின் மனைவியால் அவரால் முடிந்தவரைக்கும் பாடப்படும். பிராமணபக்தி இருந்த காலமானதனால் யாரும் எதிர்மறையாக ஒன்றும் சொல்வதில்லை. கோயிலுக்குள் சென்று பூஜைப்ப்பொருட்களைக் கொடுத்து சாமிகும்பிட்டு, சந்தனக்குறி தொட்டு, மடப்பள்ளி அருகே உள்ள திண்ணையில் அமர்ந்து பச்சரிசிப்பாயசமும் கதலிப்பழமும் சாப்பிட்டுவிட்டு அங்கே உள்ள பிற பெண்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது நான் மணலில் பிற குழந்தைகளுடன் விளையாடுவேன், பெரும்பாலும் பெண் குழந்தைகளுடன்.
கேளிகொட்டு முழங்கத்தொடங்கும்போது ஊரிலிருந்து ஒவ்வொருவராக கதகளி பார்க்க வர ஆரம்பிப்பார்கள். அரைமணிமுதல் ஒருமணிநேரம் வரை முழங்கும் இரட்டைச்செண்டையின் தாளத்துக்குத்தான் கேளிகொட்டு என்று பெயர். கதகளி நடப்பதைப்பற்றிய அறிவிப்பு அது. கதகளி ஆரம்பிக்கும்போது ‘ரங்கமுற்றம்’ நிறைய ஆளிருக்கும். அதிகமும் பாட்டிகள்,தாத்தாக்கள். பெண்கள் குழந்தைகளுடன் வந்திருப்பார்கள். குழந்தைகளின் சத்தகங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும்.
களியரங்கு எப்போதுமே நான்குபக்கமும் திறந்த சதுர மேடை. அதில் ஆளுயரமான களிவிளக்கு கொளுத்திவைக்கப்படும். பெரிய கோயில்களில் களிவிளக்குகள் இருக்கும். பிரம்மாண்டமான பித்தளைக் குத்துவிளக்குகள். அவற்றை தனித்தனியாகக் கழற்றி நாலைந்துபேராகத்தான் கொண்டுவரவேண்டியிருக்கும். அதன் திரிகளும் கட்டைவிரல் கனத்துக்கு இருக்கும். ஏழுதிரிகள் போட்டு அதை கொளுத்தி அரங்கின் வலது மூன்பக்கம் நிறுத்துவார்கள். பழங்காலத்தில் கதகளி அந்த வெளிச்சத்தில்தான் நடக்கும். பின்னர் கியாஸ்லைட் வந்தது. நான் சின்னப்பிள்ளையாக இருக்கும் போதுகூட கதகளி அரங்கில் மின்விளக்குகள் போடப்படவில்லை. அரங்கில் ஒரு விசித்திரமான உருவம் , தெவனோ கந்தர்வனோ, உலோகவடிவில் வந்து நின்றுகொண்டிருப்பதுபோலிருக்கும்
காலியான கதகளிமேடை என்னை சிறு குழந்தையாக இருக்கும் காலம் முதலே கவர்ந்திருக்கிறது. கேளிகொட்டின் ஒலியில் ஏழுசுடர்களின் ஒளியில் காத்திருக்கும் மேடை. அதில் வரப்போவது யாரென்றே தெரிந்திருக்காது. அது மெல்ல துடித்துக்கொண்டிருப்பது போல் இருக்கும். அதன் மீது தோன்றப்போகும் அசுரர்களும் தெய்வங்களும் அங்கே காட்சிக்குத்தெரியாமல் வந்துவிட்டிருப்பது போல! நான் அரங்கை விட்டு கண்களை விலக்கவே மாட்டேன்.
கதகளியில் முதல் நிகழ்ச்சி திரைநோட்டம். இருவர் ஒரு செம்பட்டுத்திரைச்சீலையை கொண்டுவந்து அரங்கை மறைத்துக்கொண்டு பிடித்து நிற்பார்கள். அதில் மலையாளத்தில் அந்தக் கதகளி யோகத்தின் பெயர் எழுதப்பட்டிருக்கும். அவர்கள் பிடித்திருக்கும் விதத்தில் அது வளைந்து அலைகள் காற்றில் நெளிய, குத்துவிளக்கொளி பிரதிபலித்து அசைய, நின்றிருக்கும். கதகளியின் மையக்கதாபாத்திரம் பூர்ண வேஷத்தில் வந்து திரைச்சீலைக்குள் நிற்கும். செண்டையும் சேங்கிலைகளும் முழங்கும். திரைக்குள்ளேயே ரங்கபூ¨ஜை. குருவந்தனம் எல்லாம் நடக்கும். அதன் பின் உள்ளேயே சற்று நேரம் அவர் ஆடுவார். அவரது மணிமுடியின் கூம்புநுனி மட்டும் அவ்வப்போது மேலே தெரியும். என் மனம் படபடக்கும். உத்வேகத்தில் எழுந்து நின்றுவிடுவேன்.
சட்டென்று வெள்ளிநகமிட்ட விரல்கள் திரையின் நுனியைப்பிடிக்கும். ஆட்டம் அப்படியே நீடிக்கும். ஆட்ட அசைவுகளின் ஒரு கணத்தில் சட்டென்று திரையை கீழே இறக்கி முகம் மட்டும் காட்டப்படும். மேகத்துக்குள் இருந்து ஒரு முகம் மட்டும் தெரிந்து மறைவதுபோல. சிறுவயதில் என் கதகளியனுபவத்தின் உச்சம் அந்த முகம் தெரியும் கணம்தான். நான் உற்சாகமும் பயங்கர உணர்வும் கலந்து கூச்சலிடுவேன். காதுவரை நீட்டிவரைந்து சுண்டங்காய் போட்டு சிவக்க வைத்த உக்கிரமான கண்கள். இருகன்னங்களிலும் வெண்சுட்டிகள். தாமரையிதழ் வடிவில் விரிந்த வாயில் குமிழ்ச்சிரிப்பு.
பின்னர் கதகளி ஆரம்பமாகும். மெல்ல மெல்ல என் ஆர்வம் குறையும். நிதானமாக ஆடிக்கொண்டிருப்பார்கள். பாட்டும் மிக நிதானமாக, சேற்றில் கண்ணாடிவிரியன் போல வழுக்கி வழுக்கிச் செல்லும். அதிகபட்சம் அரைமணி நேரத்துக்குள் கொஞ்சம் கடலை பயறு கருப்பட்டி எல்லாம் தின்றுவிட்டு சாக்குப்படுதாவை மணலில் விரித்து அம்மா மடியில் அல்லது ஏதாவது மாமியின் மடியில் தலைவைத்து நான் தூங்கிவிடுவேன்.
ஆனால் அது அறிதுயில். கதகளியின் ஒலியில் எவராலும் முழுக்க மறந்து தூங்க முடியாது. செண்டையும் சேங்கிலைகளும் உரக்க ஒலிப்பவை. நான் மூழ்கி அலையும் என் அந்தரங்க வெளி முழுக்க கதகளி ஒலித்துக்கொண்டிருக்கும். கதகளிவேட முகங்கள் என்னை நோக்கிச்சிரிக்கும். சினக்கும். செஞ்சாந்துபூசப்பட்ட விரல்கள் குவிந்து மொட்டுகளாகும், விரிந்து மலர்களாகும். மலர்கள் விரல்களாகும். எப்போதோ விழித்துக்கொண்டு புரண்டுபடுக்கும்போது எழுந்து பார்க்கையில் வானத்தின் அந்தர இருள்த்திரையில் செவ்வொளி தகதகக்கும் அசுர தேவரூபங்கள் மெல்ல அசைந்துகொண்டிருக்கும். சட்டென்று சுழற்றி எடுக்கும் காற்றில் அவை அரையாடை சுழல எம்பிச் சுழன்றிறங்கும்.
கதகளி பெரும்பாலும் விடியும்வரை நடக்கும். அதிகாலையில் கோயிலில் உஷத்பூஜைக்கு முரசு முழங்கும்போதுதான் ஆட்டம் முடியும். கதை முடியாவிட்டால் மறுநாளைக்கு நீட்டி வைப்பார்கள். நான் பெரும்பாலும் கிளம்புவதை அறிவதே இல்லை. கண்விழித்து எழும்போது வீட்டில் எப்போதும்போல பாயில் கிடப்பேன். அம்மா மெல்ல கதகளிப்பதத்தை முனகியபடி அவளுடைய வேலைகளைச் செய்துகோண்டிருப்பாள். என் தலைக்குள் செண்டையும் இலைத்தாளமும் சேர்ந்து முழங்கும். கண்கள் கூசி தலை சுழலும். அலையலையாக விசித்திரக்கனவுகள் கிளம்பி வந்து வெயில் சரிந்து ஒளிரும் காலையுடன் கலந்துகொள்ளும்.
கிபி பதினாறாம் நூற்றாண்டு வாக்கில் கதகளி தோன்றியிருக்கலாம் என்பது ஒரு ஊகம். கதகளிக்கு முன்வடிவங்களாக மூன்று மரபுக்கலைகள் உள்ளன. ஒன்று தெய்யமாட்டம். வேலன் என்று சொல்லப்படும் பெருவண்ணார்சாதியால் ஆடப்படும் தெய்யம் ஒரு அனுஷ்டான கலை, அதாவது வழிபாடே கலையாக ஆன நிலை. போரில் கொல்லப்பட்ட வீரர்கள் போன்றவர்களை நடுகல்லாக்கி வழிபடும் வழக்கத்தின் ஒரு பகுதியாக, வருடத்தில் ஒருசில நாட்கள் அவர்களை எண்ணி தெய்வ வேடத்தை புனைந்துகொண்டு ஆவேச நடனமாடும் பூசாரியை தெய்வமாக எண்ணி பலிபூஜைகள் செய்து வழிபடுவது இந்த சடங்கு. ஆப்ரிக்கப் பழங்குடிகளிடம் உள்ள சடங்குகளை பலவகையிலும் நினைவூட்டுவது தெய்யம். தெய்யம் கெட்டு என்பது தெய்வம்கட்டுதல் என்ற சொல்லாட்சியின் மரூஉ.
தெய்யம் கெட்டில் கொந்தை என்று சொல்லப்படும் உயரமான மணிமுடிக்கு முக்கியமான இடம் உண்டு. அதைச்சுற்றி குருத்தோலையால் அலங்காரம் செய்திருப்பார்கள். முகத்தில் பலவகையான சாயங்கள் பூசி கன்னங்களில் மென்மையான கமுகம்பாளையால் சுட்டிகுத்தி முகத்தை அகலப்படுத்தி தெய்வத்தோற்றம் கொண்டுவரப்பட்டிருக்கும். இதேவேடத்தின் சாயல்களை புரதனமான கதைசொல்லி ஆட்டமான சாக்கியார் கூத்திலும் காணலாம். சாக்கியார் கூத்து பற்றி சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ராமனாட்டம் கிருஷ்ணனாட்டம் என்ற கலைகள் சாக்கியார்கூத்தில் இருந்து வந்தவை. இக்கலைகளின் கலவையால் உருவான செவ்வியல் கலைவடிவம்தான் கதகளி.
கதகளியென்பது காட்சி,வேடம்,நடிப்புமுறை, உணர்ச்சிநிலைகள் அனைத்திலும் நாட்டார் [·போக்] கலைகளின் இயல்புகள் கொண்ட கலைவடிவம். நாடகப்பிரதி, மெய்ப்பாடுகள், நுண்ணிய அபிநயமுறை ஆகியவற்றில் சம்ஸ்கிருத நாடக மரபை ஒட்டி உருவான மிகமிக விரிவான செவ்வியல் [கிளாஸிக்] பண்புகள் கொண்டது. இந்தக்கலவை காரணமாகவே கதகளிக்கு ஒருபோதும் தீராத புதுமை சாத்தியமாயிற்று. கதகளி பதினாறாம் நூற்றாண்டில் உருவானதனால் அதன் வேட அமைப்பில் அக்காலத்தைய உடைகள் உண்டு. பளபளக்கும் முழுக்கை அங்கி, பட்டுக்கால்சராய் போன்றவை உதாரணம். 1555- 1605 ல் கொட்டாரக்கர தம்புரான் என்னும் குறுநில மன்ன்ர் பல்வேறு கதகளிநடிகர்களை திரட்டி ஒரு சபை அமைத்து கதகளியை தொகுத்து வடிவம் கொடுத்தார். கதகளியில் படையணி களரி போன்ற சண்டைக்கலைகளின் பாதிப்பும் உண்டு.
கதகளியில் ஒரு புராணக்கதை இருக்கும். அதை ஒட்டி ஒரு கவிஞனால் எழுதப்பட்ட இசை-கவிதை-நாடகம் அதன் அடிப்படை. இது ஆட்டக்கதை எனப்படுகிறது. மலையளத்தில் இது ஒரு முக்கியமான இலக்கியவடிவம். உண்ணாயி வாரியர் என்பவரால் எழுதப்பட்ட நளசரிதம் என்ற ஆட்டக்கதை அவற்றில் ஒரு பெரும்படைப்பு. இந்த ஆட்டக்கதையை மேடையில் ஒரு தனி இசைக்குழு பாடுகிறது. இது கீதகம் எனப்படுகிறது. அத்துடன் செண்டை, இலைத்தாளம்,சேங்கிலை முதலிய தாளவாத்தியங்கள் இணைகின்றன. இவை வாத்யம் என்று சொல்லப்படுகிறன. பாடல்வரியை சங்கராபாரணம், பைரவி போன்ற பழைய ராகங்களில் மென்மையாகவும் நிதானமாகவும் பலமுறை பாடுவார்கள். அதற்கேற்ப நடிகர்கள் கைகளாலும் கண்களாலும் அபிநயம்பிடித்து ஆடுவார்கள். இது நிருத்யம் என்று சொல்லப்படுகிறது
ஒருசில வரிகள் பாடப்பட்டபின் தாளம் மட்டும் ஒலிக்கும். அதற்கேற்ப நடிகர் அந்த வரியை மிக விரிவாக தன் கற்பனை கலந்து நடிப்பார். உதாரணமாக நளன் ‘அன்னமே அழகே வருக’ என்று சொல்லி தமயந்திக்குத் தூதனுப்ப அன்ன்ப்பறவையை பிடித்தான் என்று ஒருவரியைப்பாடி முடித்ததும் நடிகர் அன்னப்பறவையை கையில் வைக்கும் சைகையுடன் நடிக்க ஆரம்பிப்பார். கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் திருவட்டாறில் ஒருமுறை இரண்டரை மணிநேரம் அந்த ஒருவரிக்கு அபிநயம்பிடித்தார் என்பார்கள். மானசரோவரில் நீந்தும் அன்னம்,தேசாடனம் சென்ற அர்ஜுனன் பார்த்த அன்னம், மேகம் போன்ற அன்னம் என்றெல்லாம் அந்த அன்னத்தை அவர் சைகையால் உணர்ச்சிகரமாக விளக்கியபடியே செல்வார். அந்த அன்னம் காதலுக்குக் குறியீடாக ஆகிவிடும். ஒட்டுமொத்த மானுடக்காதலைப்பற்றியே அவர் சொல்ல ஆரம்பித்துவிடுவார். கதகளியில் ரசிகர்கள் ரசிப்பது இதைத்தான். இது மனோதர்மம் எனப்படுகிறது.
இதில் உள்ள விரிவான சைகைகளை நாட்யம் என்கிறார்கள். கதகளிக்கு 24 அடிப்படை கைசைகைகள் உண்டு. இவை முத்ரகள் எனப்படுகின்றன. பெரும்பாலான முத்திரைகள் நம் சிற்பங்களில் உள்ளவைதான். அவை பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரப்படி அமைந்த¨வை. நவரஸங்கள் — ஒன்பது மெய்ப்பாடுகள்– பரதமுனிவரின் நிர்ணயத்தின் படி கதகளியில் நடிக்கப்படுகின்றன. இருந்தாலும் வீரம், சிருங்காரம்,கருணை [துயரம்] ஆகிய மூன்று ரஸங்களுக்கே கதகளியில் முக்கியமான இடம்.
பெரும்பாலான செவ்வியல் நாடக வடிவங்களைப்போலவே கதகளிக்கும் அவலம்தான் மையக்கரு. அதாவது ஒரு பெரும் கதாபாத்திரத்தின் வீழ்ச்சி. ஆகவே கதகளியில் எப்போதும் கதாநயகர்கள் புராணத்தில் உள்ள எதிர்நாயகர்கள்தான். ராவணன், துரியோதனன், நரகாசுரன், கீசகன் போன்ற கதாபாத்திரங்களைத்தான் கதகளி மையமாக்கியிருக்கும். அவற்றைத்தான் பெரும் நடிகர்கள் நடிப்பார்கள். அவர்களைக்கொல்லும் கிருஷ்ணனும் ராமனும் சிறு கதாபாத்திரங்கள்தான். திரை நோட்டத்தில் திரைக்கு அப்பால் வந்து நின்று வணங்கும் கதாபாத்திரம் பெரும்பாலும் ராவணன் அல்லது துரியோதனன்தான். அவர்களைத்தான் ரசிகர்கள் கும்பிடுவார்கள்
கதகளிக்கு வேடங்களில் பலவகை உண்டு. பச்சைவேடம் என்பது முகம் பச்சைநிறமாக இருக்கும் வேடம். ராமன் கிருஷ்ணன் போன்ற கதாபாத்திரங்கள். சத்வ குணம் மேலோங்கியவை. ராவணன் போன்ற தமோகுணம் மேலோங்கிய கதாபாத்திரங்கள் சுவந்ந தாடி வேடங்கள் எனப்படும்.சிவந்த தாடியும்ச் எம்முகமும் கொண்டவை இவை. முற்றிலும் தமோ குணம் கொண்ட நரகாசுரன் போன்ற கதபாத்திரங்கள் கத்திவேடங்கள் எனப்படுகின்றன. குரங்குகள் , காட்டாளர்கள் போன்றவை கரிய நிறம் கொண்டவை. அவை கரிவேடம் எனப்படுகின்றன. பெண்வேடங்கள் மினுக்குவேடம் எனப்படுகின்றன. பெண்வேடங்கள் கொண்டை, முக்காடும், பாவாடை மேல்சட்டை போன்ரவற்றுடன் இஸ்லாமிய அல்லது மராட்டி அரசியரின் வேடத்தில் இருக்கும். இவை தவிர ரிஷிகள் போன்ற பலவகை உதிரி வேடங்களும் உண்டு.
கதகளியில் வேணாட்டு சம்பிரதாயம் எங்களூரைச்சேர்ந்தது. கல்லடிக்கோடன் சம்பிரதாயம் நடுகேரளம். கப்ளிங்காட்டு சம்பிரதாயம் வடகேரள மரபு. இப்போது இவையெல்லாம் மகாகவிஞர் வள்ளத்தோள் நராயணமேனன் நிறுவிய கேரள கலாமண்டலம் என்ற அமைப்பல் சீர்ப்படுத்தப்பட்டு நவீன வடிவமாக மறுஆக்கம்செய்யப்பட்டுவிட்டன. கதகளியை கோயில்கலை என்ற நிலையிலிருந்து மீட்டு ஒரு பொதுவான கேரளகலையாக மாற்றியவர் வள்ளத்தோள் நாராயண மேனன். அனைத்து மதத்தவராலும் கதகளி இன்று ஆடப்படுகிறது. கலாமண்டலம் ஹைதர் அலி கதகளியின் பெரும்பாடகராக அமைந்த ஒருநிலை உருவானமைக்கு வள்ளத்தோள் காரணம் எனலாம்.
ஆகவே கதகளி பிற இந்தியக் கலைகளைப்போல அழியும் நிலையில் இல்லை. தழைத்து வளர்ந்து ஒரு பெரிய தேசியகலையாக இன்று உள்ளது. ஒவ்வொரு வருடமும் பலர் அதைப் பயில்கிறார்கள். அவர்கள் பெரிய நடிகர்களாக பணத்துடனும் புகழுடனும் இருக்கிறார்கள். கதகளியை தொழிலாகக் கொள்ள முடியும் இன்று. உலகம் முழுக்க கதகளிக்கு ரசிகர்கள் உள்ளனர். கதகளி கற்பிக்கும் நிறுவனங்கள் பல செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. மார்கி சேது, வேணு போன்ற மாபெரும் கலைஞர்கள் இப்போதும் இருக்கிறார்கள்.
ஆனால் கதகளியைப் பயிற்சி இல்லாமல் பார்க்க முடியாது. முதலில் அந்தக்கதை தெரிந்திருக்க வேண்டும். அந்த ஆட்டக்கதையின் வரிகள் தெரிந்திருந்தால் இன்னும் நல்லது. ஒட்டுமொத்த இந்தியப்புராணமரபு நுட்பமாகவே தெரிந்திருக்கவேண்டும். சைகையால் நடிகர் சுட்டக்கூடிய புராணக்குறிப்பு என்பது அப்போதுதான் நமக்குப்புரியும். கைமுத்திரைகள் தெரிந்திருக்க வேண்டும். ஓரளவு மரபிசை ரசனை இருக்க வேண்டும். கதகளி அதன் புதுமையால் நம்மைக் கவரும் கலை அல்ல. மீண்டும் மீண்டும் பார்க்கப்பட்டு ரசிக்கப்படும் கலை அது. ஒரே ஆட்டக்கதையை சிலர் ஐம்பது முறை பார்த்திருப்பார்கள். சென்ற முறை கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் நளனாக வந்து அன்னப்பறவையை இப்படியெல்லாம் காட்டினார், இம்முறை என்ன செய்கிறார் பார்க்கலாம் என்றுதான் வருவார்கள். அதாவது கதகளி அதன் நுண்ணிய வேறுபாடுகளினால் ரசிக்க வைக்கும் கலை.
ஆனால் கதகளியைப்பார்த்தே அந்தக்கலையைப் புரிந்துகொள்ள முடியும். எழுத்தே தெரியாத அம்மச்சிமார் கதகளியை நுட்பமாக ரசிப்பதைக் கண்டிருக்கிறேன். பொறுமையும் நிதானமும் கொண்ட வாழ்க்கை இருப்பது அவசியம், அவ்வளவுதான். என் பாட்டி லட்சுமிக்குட்டியம்மா ஒரு பெரும் கதகளி ரசிகை. கதகளி நடிகர்களே மறுநாள் வந்து பாட்டியின் கருத்தைக் கேட்டுத்தெரிந்துகொள்வார்கள். திருவரம்பில் இருந்து நான் திருவட்டாறு போய் பாட்டியுடன் கதகளிக்குச் செல்வேன்.
ஆனால் பத்துவயது தாண்டியபின் கதகளி சலிக்க ஆரம்பித்தது. இரவெல்லாம் ஒரே காட்சியை ஆடினால் எப்படிப்பார்ப்பது? ஆனால் அந்த விழா மனநிலை எனக்குப்பிடித்திருந்தது. கொஞ்சநேரம் கதகளி பார்த்துவிட்டு நழுவிவிடுவேன். கோயிலைச்சுற்றி பையன்களுடன் பலவிதமான சாகஸங்களில் ஈடுபடுவேன். பெண்களுக்குத்தெரியாமல் அவர்களின் தலையில் இருக்கும் பூவை கவர்ந்து செல்வது அவற்றில் முக்கியமானது. பெரும்பாலான பையன்களை விட நான் இதில் கெட்டிக்காரன். உண்மையில் பெண்களைப் பின் தொடர்ந்து போய் அக்கா அக்கா என்று கெஞ்சி கேட்டுவாங்கிக் கொண்டுவந்துவிடுவேன்.
ஒருநாள் பாட்டி நான் ஏன் கதகளிபார்ப்பதில்லை என்று கேட்டாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றேன். பாட்டி இதில் என்ன புரிந்துகொள்வதற்கு இருக்கிறது என்று சொல்லி அன்றைய கதையை எனக்கு விளக்கினாள். கர்ணமோட்சம் கதகளி அது. குந்தி கர்ணனை கண்டு வரங்கள் பெற்றுச்செல்லும் காட்சி.அந்தக்கதையை விரிவாகச்சொன்னாள். கதகளியில் கர்ணனின் கவச குண்டலங்கள், அவன் தந்தையின் தேரும் அவரது சம்மட்டியும், துரியோதனன் கர்ணனுக்கு அளித்த அங்கநாடு போன்ற விஷயங்களைத்தான் நடிகர்கள் பெரிதாக விரிவாக்கம் செய்வார்கள் என்றாள். பல கதகளி நடிகர்கள் அந்தக்காட்சியில் எப்படியெப்படி நடித்திருந்தார்கள் என்று சொல்லிக்கொண்டே இருந்தாள்.
அன்று கதகளி மேடையில் பாறசாலை சிவராமன் நாயர் நடித்த கர்ணன் வந்தபோது நான் அவனை ஏற்கனவே அறிந்திருந்தேன் என உணர்ந்தேன். பரிதாபமும் பிரியமும் வழிபாட்டுணர்வும் கலந்த உணர்வெழுச்சிகளினால் என் தொண்டை அடைத்தது. எப்பேற்பட்ட மனிதன். அனைத்து தகுதிகளும் கொண்டவன். பாண்டவருக்கும் கௌரவருக்கும் மூத்தவனாக நாடாள வேண்டியவன். அவமானங்கள் வழியாக வளர்ந்தான். எல்லா அவமானங்களையும் தன் வீரத்தாலும் கொடையாலும் வென்று தலைநிமிர்ந்தான். விதிவசத்தால் அநீதியின்பால் நின்றான்.செஞ்சோற்றுக்கடனுக்காக அநீதியைச் செய்தான். ஏமாற்றப்படுவதை அறிந்தும் தன் பாசத்தால் ஏமாற ஒத்துக்கொண்டான். தீய இயல்பால் அழிந்தவர்கள் உண்டு, தன் நல்லியல்புகளினாலேயே அழிந்தவன் கர்ணன்.
அரங்கில் குந்தி தோன்றினாள். நட்டாலம் திரிலோசனன் நாயர். முதலில் ஒரு மாபெரும் பொம்மைதான் என் கண்ணுக்குத்தெரிந்தது. ஆனால் மெல்லமெல்ல நடிப்புவழியாக அன்னை ஒருத்தியை என் முன் கண்டேன். துயரத்தையே மூச்சாக சுவாசிக்க விதிக்கப்பட்ட அன்னை. அவமதிப்பை அஞ்சும் இளம்பெண்ணின் அச்சமும் முதல்குழந்தையைப்பெற்ற அன்னையின் பரவசமும் ஒரே சமயம் கொண்டு தவித்தவள். முதல்குழந்தையை கைவிடநேர்ந்தவள். அக்குழந்தை ஆண்மையும் மிடுக்குமாக கண்முன் நிற்பதைக் கண்டு பூரிக்கும் ஆத்மாவும் உருகும் மனதுமாக நிற்பவள். இருபக்கமும் மைந்தர்கள் போடும் போரில் ஐந்து பிள்ளைகளுக்காக ஒரு பிள்ளையை இழக்க முடிவெடுத்துவிட்டதன் உக்கிரமான வலி ஆத்மாவை துடிதுடிக்கச் செய்ய, மேடையில் அவள் நின்று எரிந்துகொண்டிருந்தாள். என்னால் குந்தியைப்பார்க்கவே முடியவில்லை. என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது.
அந்த நாடகத்தருணம். அதில் சொற்களுக்குப் பொருளே கிடையாது. அங்கே பேசப்பட்ட எந்தச்சொற்களும் அவற்றின் அர்த்தங்களைக் குறிக்கவில்லை. மார்புடன் மகனைத்தழுவி ஒருபேதைப்பெண்ணாக கதறி அழ அன்னையின் உடல் துடித்த்து. கைகள் பலமுறைஎழுந்தன. முடியாமல் சோர்ந்து விழுந்தன. விம்மி எழுந்த அழுகையை ராஜதந்திரம் மிக்க சொற்களாக மாற்றிக்கொண்டிருந்தாள் அவள். அவனோ அப்படியே அவள் காலில் விழுந்து அழுவதற்கும் அவள் மடியில் தலைவைத்துக்கொள்வதற்கும் துடித்துக்கொண்டிருந்தான். அவன் கைகள் பலமுறை கூப்பி வணங்கின். தோள் பலமுறை பணிந்தது. ஆனால் அவன் அங்கதமும் கசப்பும் நிந்தனையும் நிறைந்த சொற்களைச் சொல்லிக்கொண்டிருந்தான். விதியை, தர்மங்களை, அரசர்குலத்து ஆசாரங்களை எள்ளிநகையாடிக்கொண்டிருந்தான். ரத்தம் ரத்தத்தை கண்டுகொண்டது. ஆனால் நடுவே பாவனையால் ஒரு பெரும் சுவரைக் கட்டி வைத்திருந்தது விதி.
பின்னர் அவள் உறுதிகொண்டாள், இந்தமகன் அவளுக்கு இப்பிறவியில் கிடைக்கவே போவதில்லை என. அவனை கைக்குழந்தையாக ஆற்றில் விட்ட அதே மனநிலையில் நின்று இப்போது அவன் உயிரை அவள் காணிக்கையாகக் கேட்டாள். அவன் தெரிந்துகொண்டான், இப்பிறவியில் தனக்கு அன்னைமடி இல்லை என. அவள் கேட்பதே நியாயம், அண்ணனாக அதை வழங்குவதே தன் கடமை என. இரு பெரிய மௌனமலைகளாக இருவரும் ஆனார்கள். அவன் பாண்டவர்களின் உயிரை அன்னைக்கு வாக்களித்தான். அதன் வழி தன் உயிரை இழக்க ஒத்துக்கோண்டான். அப்போது அவன் முகம் கைக்குழந்தையாக இருக்கும் ஐந்து தம்பியரையும் தோளில் ஏற்றிக்கொண்ட அண்ணனைப்போல் இருந்தது.
ஆனால் நினைத்ததை அடைந்த அவளோ ஏக்கமும் சிறுமையும் தன்னிரக்கமும் கொண்டு குறுகி நின்றாள். நடைபிணம் போல அவனிடம் விடைபெற்றாள். வாழ்க்கையின் குரூரத்தை முழுக்க கண்டவள் அதன் உச்சத்தை அப்போது அறிந்தாள். தர்மத்தின் பாதை வாள்நுனிமீது நடப்பது போன்றதென உணர்ந்தாள். பாசம் என்பது மனிதர்களுக்கு விதி அருந்தத்தரும் கடும் விஷம் என அறிந்தாள். இனி அவளுக்கு ஒன்றுமே மிச்சமில்லை, இந்த மகணின் சிதையைக் கூட்டுவதைத்தவிர. அவனோ அண்ணனாகி விட்ட பூரிப்பில் அவளை வழியனுப்பினான். என்னென்ன சைகைகள்! குந்தியின் இருகைகளும் பொருளுடனும் பொருளில்லாமலும் தன் இருமுலைகளையே காட்டிக்கொண்டிருந்தன. அவனுடைய இருகைகளும் அவனையே அறியாமல், அவளை எள்ளிநகையாடி வசைபாடும்போதுகூட, கூப்பிவணங்கிக்கொண்டிருந்தன. மனித உறவுகளில் இத்தனை உக்கிரமா? இத்தனை பாவனைகளா? இரு எரியும் கனல்கள் மேடையில் நின்றன. இரு உடல்கள் உதிரம் வழியும் ரணங்கள் போல நின்று தவித்தன.
குந்தி விடைபெற்றுக்கிளம்பினாள். அவள் திரும்பிச்செல்லும்போது அவள் முதுகுக்குப்பின்னால் பரிதவிப்புடன் , மன்னனையும் வீரனையும் கணவனையும் கழற்றிப்போட்டுவிட்ட கர்ணன் ஒரு கைக்குழந்தை போல கைநீட்டி ஓடினான். அக்கணம் அவள் திரும்பியிருந்தால் அவள் முலைகள் மீது முகம் அமர்த்தி கதறி அழுதிருப்பான் அந்த மாமன்னன். அவள் ஒரு கணம் கழித்து மனம் பொறாது திரும்பியபோது அவன் தன்னைத்திரட்டிக்கொண்டு வேறுபக்கம் திரும்பிவிட்டிருந்தன். பின்னால் கைநீட்டி ‘சென்றுவருக’ என்று சைகை செய்தான். அவள் உடலே ஒரு பெரிய நாக்காக மாறி கூவிக்கதறியது, எனக்கு உலகமே தேவையில்லை மகனே நீ மட்டும் போதும் என. அவள் ஆத்மாவே முலைகளாக மாறி பால் சுரந்தது. கைநீட்டி அவள் தவித்தாலும் ஒரு அடி எடுத்து முன்னால் வைக்க முடியவில்லை. சோர்ந்து தளர்ந்து அவள் திரும்பிக்கொண்ட அதே கணம் ஓசையே இல்லாமல் அம்மா என்று கதறியபடி கர்ணன் அவளைத் திரும்பிப்பார்த்தான்.
மீண்டும் மீண்டும் அந்த நாடகம் அங்கே நடந்தது. மாறி மாறி இருவரும் தவித்தார்கள்.தவன் திரும்புகையில் அவள் பார்த்தாள். அவன் அவ்ளை நோக்கி அழும்போது அவள் திரும்பிவிட்டிருந்தாள். ஒரு கணம் அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தால் மகாபாரதப்போரே நடந்திருக்காது.பேரழிவுகள் நடந்திருக்காது. ஆனால் அது நிகழவில்லை. இரு தவிக்கும் ஆத்மாக்களின் நடுவே விஸ்வரூபனாகிய விதி வந்து நின்று அவர்களைப் பிய்த்து இருபக்கமாக தள்ளுவதைக் கண்டேன். மானுட இனத்தை வைத்துச் சதுரங்கமாடி வரலாற்றை நிகழ்த்தும் பெருநியதியை ஒரு பத்தடிக்குப் பத்தடி மேடையில் கண்கூடாகக் கண்டேன். என் நெஞ்சைப்பற்றியபடி விம்மிக்கொண்டே இருந்தேன்.
கடைசியில் குந்தி மெல்ல இருளில் மறைந்தாள். அந்தக்கணம் கர்ணன் உடலில் வந்து அழுத்திய அந்த எடையை அந்த உடலசைவு மூலம் கண்டு நான் தளர்ந்து பாட்டியின் மடியில் சரிந்தேன். அக்கணம் கர்ணன் மொத்த மகாபாரதத்தையும் கண்டுவிட்டான் போர்களை, பேரழிவை! அந்த போரை நிகழ்த்தும் விதியின் பேருருவத்தை! அலையடங்கும் தன் நெஞ்சுக்கு ஆறுதல் கூறியபடி அவன் மேடையில் தளர்ந்து நின்றான். பின்பு மெல்ல அவன் இதழ்கள் விரிந்தன. அவன் முகம் முழுக்க பரவியது கசப்பு கலவாத ஓர் ஏளனம். விதியின் சதுரங்கக்காய் ஒன்று திரும்பி விதியை நோக்கிச் சிரிக்கிறது. இனி அவன் விதியின் அடிமை அல்ல. அவன் விடுதலை பெற்றுவிட்டான். அவன் அதேபுன்னகையுடன் அர்ஜுனனின் அம்புகளை மார்பில் வாங்கிக்கொள்வான்.
ஷேக்ஸ்பியர் என்கிறோம், காளிதாசன் என்கிறோம். அவர்களெல்லாம் என் மரபின் முன் சிறு குழந்தைகள். வாழ்க்கையென்றால் என்னவென்று அறியாத மழலைகள் அவர்கள். இந்த மண்ணில் மரவள்ளிக்கிழங்கும் மீனும் தின்று, ஓடும்நீரில் குளித்து, அடைக்காயும் வெற்றிலையும் மென்று வாழ்ந்து மறைந்து மண்ணில் உப்பான என் மூதாதையர் அறிந்திருந்தார்கள் வாழ்க்கையை கலை வெல்லும் அந்த தெய்வத்தருணத்தை. அவர்களின் வாரிசு நான். கண்ணீர் வழிய என்னை நான் நான் நான் என உணர்ந்த கணம் அது.
மறுபிரசுரம் முதற்பிரசுரம் Jan 21, 2012