சிறுகதை விவாதம்- சிறகதிர்வு,சுசித்ரா -2

SR

சுசித்ரா எழுதிய சிறகதிர்வு

அன்புள்ள ஜெ,

சுசித்ரா எழுதிய சிறகதிர்வு சிறுகதையில் இரு உலகங்கள் சித்தரிக்கப்படுகின்றன. அன்னை மகன் என இரு பாத்திரங்கள். அவர்கள் அந்த இரு உலகங்களின் பிரதிநிதியாக வருகிறார்கள். ஒன்று அறிவியல் உலகம். இரண்டாவது கவிதை, ஓவியம் என விரியும் கலை உலகம்.

அறிவியலாளனுக்கு சாவு என்பது ஒர் அறைகூவல். வென்றெடுக்கவேண்டியது. கவிதை வாசிக்கும் அன்னைக்கு அது ஒர் ஆன்மீக விடுதலை. பறவை அதற்கு சரியான குறியீடாக வந்து அமர்கிறது. காலா உன்னை புல்லென மிதிக்கிறேன் என்று மெய்சிலிர்த்து பின் மெய்மறந்து தன் அகவிடுதலையை அடைகிறாள்.

எல்லையில்லா ஆயுள் ஆரோக்கியம் என்று சாவை புறத்தில் வென்றவன் தன் அகத்தில் வெல்லவில்லை. நூற்றாண்டுகள் கடந்துவிட்டான்.  இறந்த பறவையைக் கண்டு அதாவது சாவை மீண்டும் கண்டு திடுக்கிட்டு உறைகிறான். அதன்பின் அவன் செயல்கள் எண்ண ஓட்டங்கள் எதுவும் அவன் தர்க்கமனத்திற்கு புரியவில்லை. எதிரானவை. அன்னையின் மரண படுக்கையில் தன்னையறியாமலே காகித கொக்கு செய்த ஆழத்தின் எதிர்வினைகள்தான் அவை. கவிதையிலிருந்து அன்னை மூலம் பெற்றுக்கொண்ட ஆழம்.

இரு காட்சி சித்தரிப்புகளின் வழியே கதைசொல்லி தன் வாழ்வில் எதை இழக்கிறான் என்று தெளிவாகிறது. வெள்ளைப்பனி ஒரே நிறம் கொண்டது. அதில் வந்து செத்துப்போகும் பறவை நீலமும் பச்சை நிறமும் கொண்டது. அவன் அன்னை மீது அவன் கொட்டிய வர்ணங்கள். கதைசொல்லி வர்ணம் இல்லாத ஒற்றை நிற வாழ்க்கையை வாழ்கிறான்.

இருவரும் அடுத்தவரின் உலகத்தை எப்படி பார்த்தார்கள்? அறிவியலாளன் கவிதை பயனற்றது என்கிறான். கவிதை வாசிக்கும் தன் அன்னையின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கிறான். அன்னைக்கு அறிவியல் உலகத்தின் மீது விமர்சனம் ஏதும் இல்லை. தன் உலகத்தை போகப்போக புரிந்துகொள்வாய் என்று மட்டும் சொல்கிறாள். அவனை அறியாமலே அவன் காதிக கொக்கு செய்ததைக் கண்டு புரிந்துகொண்டான் என்ற நிம்மதியுடன் கண்மூடுகிறாள்.

கலை அம்சம் இல்லாத அறிவியல் தன் ஜீவனை உயிர்துடிப்பை சிறகதிர்வை இழக்கிறது. கதை சரியாக அபாயச்சங்கில் போய் முடிகிறது.

நல்ல கதை. சுசித்ராவுக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ராஜா.

மதிப்பிற்குரிய ஜெ,

இது என்ன அபத்தம்? காட்டுமிராண்டித்தனமாக இப்படியொரு எண்ணம்?

இறந்த பறவையை புதைப்பதில் என்ன அபதம் காட்டுமிராண்டிதனம்? ஒரு வேளை மனிதன் மரணத்தை வென்றுவிட்டால் இப்படி தான் மாறுவானா? மரணமில்லா வாழ்வு எல்லாவற்றையும் அபத்தமாகவும் பயனற்றதாகவும் தான் என்ன செய்யும்.  ஆனால் கவிஞர்கள் ! கலைஞர்கள்!

அவர்கள் எல்லாவற்றையும் நேசிக்கிறார்கள் இயற்கையோடு கலக்கிறார்கள் மரணமில்லா வாழ்வு வாழ்கிறார்கள், வாசகன் கூட அதை அடைய முடியும் என்று இக்கதை உணர்த்தியது.

சிறகிலிருந்து பிரிந்த

இறகு ஒன்று

காற்றின்

தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதிச் செல்கிறது.

பிரளீன் இக்கவிதை நினைவுக்கு வந்தது, கோழி ரோமத்தோடு கலந்து மரணமில்லா பெருவாழ்வு இப்படி தான் நிகழ்கிறது. முக்கியமாக இதில் கஷ்ட்டபட தேவையில்லை இதற்கு யார் மீதும் பரிசோதிக்க தேவையில்லை, வாழ்வில் அனைத்தையும் உற்றுநோக்கி நமது பிரஞ்சைக்குள் கொண்டு வந்தாலே போதும். இந்த உலகம் உயிர்த்திருப்பது மனிதர்கள் அல்ல பறவையின் எச்சத்தால்,  ஐநூற்றி எழுபத்தெட்டாம் பிறந்த நாள்  கொண்டாட வேண்டிய மனிதன் அல்ல பறவைகள் தான்….. இக்கதையின் மொழி மிக கச்சிதமாக சிறப்பாகவும் இருக்கிறது அருமை. வாழ்த்துக்கள்

ஏழுமலை

அன்புள்ள ஜெ

சுசித்ராவின் சிறகதிர்வு ஒரு நல்ல அறிவியல்கதை. அறிவியல் விஷயத்தை சும்மா திகைக்க வைப்பதற்காகவோ சாமானிய சமூகக்கருத்தைச் சொல்வதற்காகவோ கையாளக்கூடாது. அறிவியல் அளிப்பது ஒரு imagery யை மட்டும்தான் அதை வைத்துக்கொண்டு ஒரு philosophical idea   அல்லது vision  ஐ சொன்னால்தான் அது நல்ல அறிவியல்கதை ஆகும். தமிழில் அந்தமாதிரியான கதைகள் மிகவும் கம்மி. இது அந்தமாதிரியான கதை வாழ்த்துக்கள்

ராஜாராமன் சுந்தரராஜன்

சிறுகதை விவாதம்- சிறகதிர்வு,சுசித்ரா -1

முந்தைய கட்டுரைசிறுகதை விவாதம்- லீலாவதி- பிரபு மயிலாடுதுறை-1
அடுத்த கட்டுரைசிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -4