வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–32

பகுதி ஐந்து :  நிலநஞ்சு – 1

bl-e1513402911361சேதிநாட்டு அரசியர் பிந்துமதியும் கரேணுமதியும் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து உபப்பிலாவ்யத்திற்கு வந்துசேர்ந்தபோது முன்மதியம் எழுந்து நகர்மேல் வெண்ணிற வெயில் அலைகொண்டு நின்றிருந்தது. தேர் நகரத்தின் சிறிய தெருக்களினூடாக எதிரே வந்த தேர்களுக்கும் பல்லக்குகளுக்கும் வழிவிட்டு ஒதுங்கியும் இருபுறமும் முட்டி மோதிய மக்கள் திரளை ஊடறுத்தும் அரண்மனையை சென்று சேர இரண்டு நாழிகைக்குமேல் பொழுதாகியது. தேரின் கூரைக் கும்மட்டம் வெயிலில் வெந்து உள்ளே அனலை இறக்கியது. காற்றிலாமல் திரைச்சீலைகள் அசைவிழந்து சகட அசைவுக்கேற்ப மெல்ல நலுங்கின.

கரேணுமதி மயிலிறகு விசிறியால் வீசிக்கொண்டு வாயைக் குவித்து காற்றை ஊதினாள். வியர்வை வழிய அமர்ந்திருந்த பிந்துமதி திரைச்சீலையை சற்றே விலக்கி சாலையில் நிறைந்த மக்களை பார்த்தாள். “ஏன் இத்தனை நெரிசல்?” என்று அவள் திரும்பாமலேயே கேட்டாள். கரேணுமதி மறுமொழி கூறவில்லை. “மிகச் சிறிய நகர். அதற்குப் பொருந்தாத பலர் நகருக்குள் புதிதாக வந்து நிறைந்திருக்கிறார்கள் போலும்” என்றாள் பிந்துமதி. கரேணுமதி “தெற்கிறங்கும்தோறும் வெம்மை மிகுகிறது. இந்திரப்பிரஸ்தத்தில் இருந்து நாம் பெரிய தேர்களில் கிளம்பியிருக்கவேண்டும், இந்தச் சிறுதேரே விரைவு மிக்கது என்று சொன்னதை நம்பிவிட்டோம்” என்றாள்.

பிந்துமதி சாளரம் வழியாக நோக்கி “இங்கே முகங்களில் ஒருமையே இல்லை” என்றாள். கரேணுமதி “ஆம், படைப்பிரிவுகளை விராடபுரிக்குள்ளும் எந்நாட்டுக்கும் உரித்தல்லாத பொதுக்காட்டுநிலங்களிலும்தான் திரட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆயினும் இந்நகருக்குள் படைத்தலைவர்களும் ஒற்றர்களும் படைச்சிற்பிகளும் பிறரும் வருவதை தடுக்க இயலாது. அவர்களுக்கு உரியவற்றை அளிக்கும் வணிகரும் அவர்கள் புகழ்பாடும் பாணரும் வந்துகொண்டேதான் இருப்பார்கள்” என்றாள். பிந்துமதி திரைச்சீலையை மூடியபின் களைப்புடன் இருக்கையில் சாய்ந்து “நெடும்பொழுது” என்றாள்.

“ஆம், அங்கிருந்து கிளம்பும்போது தொலைவு தெரியவில்லை. நகரை பார்த்த பின்னர் அரண்மனைவரை செல்வதற்கு இத்தனை பொழுதென்றால் சலிப்பு மிகுகிறது” என்றாள் கரேணுமதி. சகடம் ஒரு குழியில் விழுந்து அதிர தேருக்குள் மூலையில் உடல் ஒடுக்கி துயின்றுகொண்டிருந்த முதிய சேடி மாலதி எழுந்து வாயை துடைத்தபின் மலங்க விழித்தாள். பிந்துமதி காலால் அவளை உதைத்து “எழுந்திரடி, அரண்மனை நெருங்கிக்கொண்டிருக்கிறது” என்றாள். மாலதி தன் புன்குழலை கையால் சுழற்றி கொண்டையிட்டு மேலாடையை திருத்தியபின் எழுந்து ஆடும் தேர்த்தூணைப் பற்றியபடி நின்றாள். திரையை விலக்கி வெளியே பார்த்து “அரண்மனை உட்கோட்டை தெரியவில்லை, அரசி” என்றாள். பிந்துமதி “நீ கீழிறங்கிச் சென்று தெருவில் மறித்துக் கூத்தாடும் இக்கீழ்மக்களை விரட்டு. எவ்வளவு பொழுதுதான் சாலையில் முட்டி மோதுவது?” என்றாள். கரேணுமதி இகழ்ச்சியுடன் புன்னகைத்து “இவள் சென்றால் இக்கூட்டம் அதை செவிகொள்ளுமா என்ன? அத்தனை பேரும் திரண்டெழுந்து போருக்குச் சென்று தலையுடைந்து களத்தில் விழும்பொருட்டு துடித்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள்.

பிந்துமதி சிரித்து “ஆம், அதை நானும் உணர்ந்தேன். போர் அணுகிவிட்டது எனும்போதே இம்மக்கள் களிவெறி கொள்கிறார்கள். இறப்பு அத்தனை உவகையுடையதென்று இக்கீழ்மக்களின் முகத்தைப் பார்த்தாலொழிய எண்ணமாட்டோம்” என்றாள். கரேணுமதி “போர் எத்தனை பொறுப்புகளிலிருந்து விடுவிக்கிறது! மைந்தருக்காக உடைமைகள் சேர்க்கவேண்டியதில்லை. நாளை என எண்ணி கவலைகொள்ள வேண்டியதில்லை. இன்று மட்டுமே உள்ளது எனும்போது எழும் விடுதலை அவர்களை இயக்குகிறது” என்றாள்.

எண்ணியிராக் கணத்தில் சினம்கொண்டு பிந்துமதி கையை ஓங்கி “என்னடி சொல்லிக்கொண்டே இருக்கிறேன், வீணே நின்றுகொண்டிருக்கிறாய்?” என்றாள். மாலதி அச்சினத்தை பலமுறை கண்டவள் என்பதால் கைகளைக் குவித்து தோள்களை ஒடுக்கி நின்றாள். “இறங்கிச் சென்று சொல் தேரோட்டியிடம், இன்னும் சற்று நேரத்தில் அரண்மனைக்கு தேர் சென்றுசேரவில்லையென்றால் நானே இறங்கிச்சென்று அவனை சவுக்கால் அடிப்பேன் என்று” என்றாள் பிந்துமதி.

மாலதி மெல்ல “வெளியே இக்கூட்டத்தை ஒதுக்கி நமக்கு வழி உருவாக்க துணைக்கும் படைவீரர்கள் எவருமில்லை, அரசி” என்றாள். “இங்கு செல்லும் வீரர்கள் எவரையாவது அழை. அதையும் நான் உனக்கு சொல்லவேண்டுமா?” என்று பிந்துமதி பற்களைக் கடித்தபடி சொன்னாள். மாலதி திரையை விலக்கி தலையை வெளியே நீட்டி எட்டிப்பார்த்தாள். அங்கு வேலுடன் சென்று கொண்டிருந்த நான்கு வீரர்களில் ஒருவனை கைதட்டி அழைத்து “ஒரு சொல் கேளும் வீரரே, பாண்டவர்களின் அரசியர் உள்ளே இருக்கிறார்கள். அவர்கள் அரண்மனைக்கு செல்லவேண்டும். இத்திரளை விலக்கி வழி அமைத்துக்கொடுங்கள்” என்றாள்.

அவன் முகம்சுருங்க “எந்த நாட்டரசி?” என்றான். “சேதி நாட்டரசியர் கரேணுமதியும் பிந்துமதியும்” என்றாள் மாலதி. அவன் தன் அருகே நின்ற பிற வீரனை பார்த்துவிட்டு “நாங்கள் அவர்களை கேள்விப்பட்டதே இல்லை. இலச்சினை என ஏதுமுள்ளதா?” என்றான். சேடி திரும்பி பிந்துமதியை பார்க்க பிந்துமதி திரையை விலக்கி அவனை நோக்கி “மூடா, இச்சொற்களுக்காக உன்னை அரண்மனைக்குச் சென்றதுமே கழுவேற்றுவேன். அறிவிலி, உன்னிடம் நான் யாரென்று நிறுவ வேண்டுமா?” என்றாள்.

அவள் கொண்ட சினம் வீரர்களை குழம்பச் செய்தது. “தாங்கள் அரசி என்பதை இந்தச் சொற்களிலிருந்து புரிந்துகொள்கிறோம். எளிய மக்கள் இப்படி சொல்லமாட்டார்கள். இதோ வழி உருவாக்குகிறோம்” என்று சொன்ன முதிய வீரன் பிறிதொருவனின் தோளைத் தட்டியபடி முன்னால் சென்றான். “அறிவிலி… அவனுக்கு நற்சொல் புரியவில்லை. சவுக்குகளால் மட்டுமே ஏவப்படும் விலங்கு” என்றபடி பிந்துமதி சாய்ந்தமர்ந்தாள்.

கரேணுமதி “அவன் உன்னை ஏளனம் செய்துவிட்டுப் போகிறான்” என்றாள். “யார்?” என்றாள் அவள். “அவன் என்ன சொன்னான் என நீ செவிகொள்ளவில்லையா?” என்றாள் கரேணுமதி. “கேட்டேனே, நான் அரசி என்று தெரிகிறது என்றல்லவா சொன்னான்?” என்றாள் பிந்துமதி. கரேணுமதி புன்னகைத்து வெறுமனே அமர்ந்திருந்தாள். பிந்துமதி “இவர்கள் விராடபுரியின் வீரர்கள் என்று எண்ணுகின்றேன். நம்மை முன்னர் அறிந்திருக்கவில்லை” என்றாள். கரேணுமதி மறுமொழி சொல்லாததை உணர்ந்து “விராடர்கள் நிஷாத குலத்திலிருந்து எழுந்தவர்கள். முறைமையும் நெறிகளும் இன்னும் முழுதுருவாகாத நாடு அது” என்றாள் பிந்துமதி.

கரேணுமதி “அக்குடியில் பிறந்த அரசமகளே இந்திரப்பிரஸ்தத்தின் அரியணையில் நாளை அமரப்போகும் மைந்தனை பெறவிருக்கிறாள்” என்றாள். பிந்துமதி இதழ் சுளித்து “உகந்ததே. இங்கிருந்து மைந்தனென எழுந்து அவளை மணந்த இளவரசன் நற்குருதியினனா என்ன? யாதவர்கள் என்றைக்கு ஷத்ரியர்களாக ஆனார்கள்?” என்றாள். இருவரும் ஒருவரை ஒருவர் விழிதொட்டு விலக்கிக்கொண்டனர். அசைவுகளால் ஒருவர் சினத்தை பிறிதொருவர் தூண்டுவது அவர்களின் வழி என்பதனால் ஒவ்வொருவரும் பிறரை அதன்பொருட்டே விழிநாடினர்.

“ஆனால் அவனை நம் குடியில் நிகரற்ற வீரன் என்று சொல்கிறார்கள்” என்றாள். பிந்துமதி “களத்தில் வென்று எதிரியின் தலைகொண்டு வந்தவனல்லவா? நன்று” என்றாள். “அவன் களம்வென்றிருக்கிறான்” என்றாள் கரேணுமதி. பிந்துமதி “ஐம்படைத்தாலியுடன் சென்று வென்றுவந்த கதைகளா? அவற்றை சூதர் நம்மிடம் சொல்லமாட்டார்கள். ஐந்துமடங்கு படைகளுடன் கூண்டுத்தேரில் குழந்தையை வைத்து அனுப்பி கைதேரா சிறுவேந்தரை களத்தில் வென்று கதைகளை உருவாக்கினார்கள்…” என்றாள். “ஆற்றலிருந்தால் விதர்ப்பத்திற்கு அனுப்பி ருக்மியை வென்றுவரச் சொல்லலாமே? மைந்தன் புகழில் எவருக்கும் ஐயமிருந்திருக்காதே.”

“அவன் பாணாசுரனை வென்றான்” என்றாள் கரேணுமதி. “ஆம், துணைக்கு இளைய யாதவரும் சாத்யகியும் பிரத்யும்னனும் இருந்தனர்” என்றாள் பிந்துமதி. “தந்தை அம்பெடுத்துக் கொடுத்து வில்லையும் தாங்கினால் அவன் இந்திரனையும் வெல்வான்.” கரேணுமதி சிரிப்பை வாய்க்குள் அடக்கியபடி “பயிற்சிக்களத்தில் அவன் இலக்குகள் பிழைபட்டதே இல்லை என்கிறார்கள்” என்றாள். “யார் சொல்கிறார்கள்?” என்றாள் பிந்துமதி. “அவனுக்கு பயிற்சியளித்தவர்கள்” என்றாள் கரேணுமதி. “மக்கள் சொல்கிறார்களா?” என்றாள் பிந்துமதி. “அரசன் என்பவன் படைக்கலங்களுடன் சென்று எதிரியை வென்று மீள்பவன். களிக்களத்தில் நின்று வானில் செல்லும் பறவைகளின் இறகுகளை வீழ்த்தி மகிழும் சிறுவனல்ல.”

“அவ்வாறல்ல, அவன் கூர்திறன் கொண்டவனே” என்றாள் கரேணுமதி. “யாதவர்களுக்கு இலக்குதேர் திறன் மிகுதி. வளைதடியை வீசி பழங்களை உதிர்த்துப் பழகிய கைகள். உணவுக்கென பறவைகளை வீழ்த்தித் தேர்ந்த கண்கள்.” பிந்துமதி “போரென்பது பிறிதொன்று. எதிரி முன் நிலைதடுமாறாத உள்ளமும் பயிற்சி மறவாத உடலும் கொண்டிருத்தல் அது. அதற்கு தூய குருதி வேண்டும்” என்றாள். “இவற்றை எல்லாம் நாம் எந்த அவையில் சொல்லப்போகிறோம், இந்தத் தேர் சதுரத்துக்குள் அல்லாமல்?” என்றாள் கரேணுமதி. “சொல்லும் தருணம் வாய்க்கும். அப்போது சொல்வோம்” என்று பிந்துமதி சொன்னாள்.

இருவரும் வெறுப்பில் உறைந்த முகத்துடன் அமைதியாக இருந்தனர். பின்னர் பிந்துமதி இகழ்ச்சியுடன் இதழ் வளைத்து “அவன் என்ன தன் அரசியுடன் ஆறாண்டு காலம் கொஞ்சி மகிழ்ந்துவிட்டா துவாரகைக்கு சென்றான்? பற்றவைத்துச் செல்வதற்கு அவனிடம் இருப்பதென்ன கொள்ளிக்கட்டையா?” என்றாள். “இது நாம் பேசவேண்டியதல்ல” என்று சொன்னாள் கரேணுமதி. ஆனால் அவள் முகத்தில் ஒரு வஞ்சப் புன்னகை இருந்தது. “நாம் பேசாவிட்டால் நம் எதிரிகள் பேசுவார்கள். நாளை இந்திரப்பிரஸ்தத்தின் அரியணையில் அவள் பெறும் மைந்தன் அமர்வான் என்றால் அவன் குருதியின் மெய்யென்ன என்ற வினாவே முதன்மையாக எழும். சூதர் கண் தொடாத இடமேதும் மண்ணிலில்லை.”

கரேணுமதி “இதை இப்போது நாம் பேசினால் காழ்ப்பென்றே எண்ணுவார்கள்” என்றாள். “காழ்ப்பேதான். அரசகுடியினருக்கு அல்லாதவரை காணுகையில் எழும் ஒவ்வாமை இது. ஏனெனில் இந்த நிலம் ஷத்ரியர்களால் உருவாக்கப்பட்டது. வேலியிட்டுக் காத்து பயிர் மேலெழும்போது அறுவடைக்கு ஷத்ரிய மாற்றுருக்கொண்டு வந்தவர்கள் இந்த யாதவரும் நிஷாதரும் கிராதரும் பிறரும். அவர்களை வென்றழிப்பதே ஷத்ரிய அறம். அதை நூல்கள் தெளிவாகவே சொல்கின்றன.” பிந்துமதி “அதற்கு நம் மைந்தர் தங்களை ஷத்ரியர் என்று உணரவேண்டும் அல்லவா?” என்றாள்.

“அவர்களும் வழித்தூய்மை கொண்டவர்கள் அல்ல” என்று கரேணுமதி ஓங்கிய குரலில் சொன்னாள். “எப்போது இவர்களுக்கு நாம் அரசியரானோமோ அப்போதே திரிந்த குருதியை ஏந்தும் கலங்களாகிவிட்டோம். குருதித் தூய்மைகொண்ட ஒருவன் நம் மைந்தரில் இருந்தானெனில் யாதவப் பெண்ணின் மைந்தன் நிஷாதப் பெண்ணை மணந்து பெறவிருக்கும் குழந்தை அரியணை ஏறுவதை ஏற்று இவ்வண்ணம் அமைந்திருக்க மாட்டான்.” பிந்துமதி தலையசைத்தாள். கரேணுமதி பற்களைக் கடித்து “நன்று, அவர்கள் உடலுக்குள் எங்கோ தாய்வழி மூதாதையர் உறங்கக்கூடும். அவரில் ஒருவர் விழி திறந்தால்கூட ஷத்ரியக் குருதியின் ஆற்றலென்ன என்று இக்கீழ்மக்களுக்கு காட்டவும் இயலும்” என்றாள்.

வெளியே எட்டிப்பார்த்த மாலதி “அரண்மனை அணுகுகிறது, அரசி” என்றாள். “ஆம், அதை நீ சொல்லித்தான் எங்களுக்கு தெரியவேண்டும். வெளியே எங்கள் வருகையை அறிவிக்கும் முரசோசையும் சங்கோசையும் கேட்கிறது” என்றாள் பிந்துமதி. பிறகு மீண்டும் சினமெழ “உள்ளேயே பார்த்து நிற்காதே, இழிமகளே. எங்களை எதிர்கொள்ள முறைமைப்படி தாலங்கள் ஏந்திய சேடியரும் இசைச்சூதரும் அந்தணரும் அமைச்சரைச் சேர்ந்த ஒருவரும் முற்றத்தில் நிற்கிறார்களா என்று நோக்கிக் கூறு” என்றாள்.

மாலதி வெளியே பார்த்து “ஆம் அரசி, அமைச்சர் சுரேசர் நின்றிருக்கிறார்” என்றாள். “அவனா? சொல் திருந்தா இளைஞனாக வந்து அவையில் நின்றிருந்தவன். அக்கையே, அவன் முகத்தை நினைவுறுகிறாயா? வெண்ணிற எலி போலிருப்பான்” என்றாள் பிந்துமதி. “ஆம், ஆனால் இச்சிற்றூருக்கு அவனே அமைச்சன். சிறுசுனைக்கு அயிரை சுறா என்பதுபோல” என்றாள் கரேணுமதி. பிந்துமதி இதழ்கள் வளைத்து புன்னகைத்தாள்.

bl-e1513402911361பிந்துமதியும் கரேணுமதியும் தங்கள் அறைகளில் இருந்து கிளம்பி இடைநாழிக்கு வந்தபோது அவர்களை எதிர்கொள்வதுபோல தேவிகையும் விஜயையும் வந்தனர். பிந்துமதி கரேணுமதியின் தோளைத்தொட்டு “பதினான்கு ஆண்டுகளில் இவர்கள் கற்றுக்கொண்டது அரசியர்போல் உடையணிவதற்கு” என்றாள். கரேணுமதி “செவியறியப்போகிறது, மெல்ல பேசு” என்றாள். “செவி உணரட்டும் என்றுதான் சொல்கிறேன். தொலைவிலேயே நம் இதழ்களை உற்று நோக்கிக்கொண்டுதான் வருவார்கள். நாம் என்ன சொல்கிறோம் என்பதை உய்த்து அறியவும் செய்வார்கள்” என்றாள்.

தேவிகை அருகணைந்து “அரசியருக்கு வணக்கம். அன்னை தங்களை காத்திருக்கிறார்கள்” என்றாள். கரேணுமதி அவள் விழிகளை நோக்காமல் முகவாயைத் தூக்கி அப்பால் நோக்கியபடி தாழ்ந்த குரலில் “பேரரசி உடல்நலமின்றி இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். ஆகவே முதலில் அவர்களைப் பார்த்தபின் அவையமரலாம் என்று முடிவு செய்தோம்” என்றாள். தேவிகை “ஆம், அதை சுரேசர் சொன்னார். அன்னையிடம் முறைப்படி அறிவித்தோம்” என்றாள். கரேணுமதி “செல்வோம்” என்று பிந்துமதிக்கு கைகாட்டிவிட்டு நடந்தாள்.

அவர்கள் இருவரும் மறுமுகமன் உரைக்காததை விஜயை உணரவில்லை. ஆனால் தேவிகையின் விழிகள் மாறுபட்டன. அதை பிந்துமதி கண்டாள். முன்னால் நிமித்தச் சேடி கொம்பூதி சேதிநாட்டரசியின் வருகையை அறிவித்தாள். அவளுக்குப் பின் மங்கலத்தாலமேந்திய சேடி ஒருத்தி தொடர்ந்து சென்றாள். கரேணுமதி சீர்நடையில் மெல்ல ஒழுகிச்சென்றபடி “முன்னரே இங்கு வந்துவிட்டீர்கள் போலுள்ளது” என்றாள். “ஆம், இங்கு இருப்பதே முறை என்று தோன்றியது” என்றாள் விஜயை. பிந்துமதி “நானும் அதை எண்ணினேன். அங்கு எவ்வாறு இருக்க இயலும்? உங்கள் தந்தையும் மூத்தவர்களும் அஸ்தினபுரியுடன் படைக்கூட்டு அமைத்ததாக சொன்னார்கள்” என்றாள். கரேணுமதி “அது நன்றென்று எனக்கும் தோன்றியது. குருதித் தூய்மையும் குடிப்பெருமையும் இல்லாத அரசுகள் அவை உள்ள ஷத்ரிய அரசுகளுடன் இணைந்தே காலப்போக்கில் அதை பெறமுடியும். வைரத்தினருகே பளிங்குக் கல் என அமைவதே அறிவு” என்றாள்.

விஜயை ஏதோ சொல்லத்திரும்ப தேவிகை அவள் தோளில் கைவைத்து அடக்கியபின் “சேதிநாடும் அஸ்தினபுரியுடன் படைக்கூட்டு கொண்டுள்ளது என்று அறிந்தேன்” என்றாள். “ஆம், தூய குருதி கொண்ட ஷத்ரியர் அனைவரும் அங்கே ஒருங்கு திரள்கிறார்கள். எனவே சேதி நாடு அங்கே முதன்மை பெற்றே ஆகவேண்டும் அல்லவா?” என்றாள் கரேணுமதி. “நாங்கள் உபரிசிரவசுவின் குருதியிலெழுந்த விண்நின்ற மன்னர் சிசுபாலரின் தங்கையர். எந்நிலையிலும் சேதிநாடு எங்களுக்கும் உரியதே. ஆனால் சேதி அஸ்தினபுரியுடன் படைக்கூட்டை அறிவித்த நாளில் கிளம்பி இந்திரப்பிரஸ்தம் வந்தோம்.”

“இன்னும் சில நாட்களில் அஸ்தினபுரியில் ஷத்ரியப் பேரவை கூடவிருக்கிறது. பாலையன்னையரின் குருதிவழி வந்த துரியோதனர் ஷத்ரியப் பேரவையின் முதன்மை இடம் கொள்வதை மகதம், கோசலம், அயோத்தி போன்ற நற்குருதி கொண்ட ஷத்ரியர்கள் ஏற்கமாட்டார்கள் என்று பேசிகொண்டார்கள். ஆனால் துரியோதனரின் தலைமையை ஏற்று அவர் அடிசூடி படைத்துணை கொள்ள சேதி முடிவெடுத்திருப்பதாக அறிந்தேன்” என்றாள் தேவிகை. பிந்துமதி முகம் சிவந்து சொல்லெடுப்பதற்குள் தேவிகை “ஏனென்றால் சேதிநாட்டு தமகோஷர் மணந்த அன்னை சுருதகீர்த்தி யாதவக்குடியினர் அல்லவா?” என்றாள். விஜயை அவள் சொல்வதேதும் புரியாமல் தலையசைத்தாள்.

கரேணுமதியும் பிந்துமதியும் சீற்றத்துடன் மூச்சிரைத்தனர். பிந்துமதி சினத்துடன் ஏதோ சொல்லமுயல கரேணுமதி அவள் கைகளைப்பற்றி அழுத்தி நிறுத்தியபின் விழி ஒளிராத இனிய புன்னகையுடன் “போர் நிகழ்கையில் படைக்கூட்டுகள் அத்தருணத்திற்கேற்பவே அமையும். வேட்டையை நோக்கினால் எது சிம்மக்களிறு என அறியமுடியாது. முடிவில் இரையின் நெஞ்சை எது உண்கிறதோ அதுவே அரசன்” என்றாள். விஜயை பேச்சை மாற்றும்பொருட்டு “அன்னை நோயுற்றிருக்கிறார்” என்றாள். தேவிகை “ஆம், மேலும் சினங்கொண்டவர்களாக மாறிவிட்டிருக்கிறார்கள். அவர்களிடம் பேசுகையில் அனைத்து முறைமைகளையும் கடைப்பிடிக்க வேண்டுமென்று சௌனகர் எங்களிடம் சொன்னார். வணக்கத்திற்கு மறுவணக்கமும் இன்சொல்லுக்கு மறுசொல்லும் எடுப்பது நற்குடி வழக்கம்” என்றாள்.

பிந்துமதி உரத்த குரலில் “ஆம், முறைமை என்பது அதுவே. இணையானவர்களுக்கு இடையே முறையான சொல் என்பார்கள்” என்றாள். விஜயை சலிப்புடன் சற்று முன்னால் சென்று அவர்கள் வருவதற்காக காத்துநின்றாள். குந்தியின் அறைவாயிலை அவர்கள் அடைந்தபோது அங்கு நின்றிருந்த சேடி தலைவணங்கி “அரசியரே, வணங்குகிறேன். அன்னை இப்போதுதான் உணவருந்தி அமர்ந்திருக்கிறார்கள்” என்றாள். அவர்கள் காத்து நிற்க அவள் உள்ளே சென்று அரசியரின் வருகையை அறிவித்துவிட்டு திரும்பி வந்தாள். “வருக!” என்றாள்.

பிந்துமதியும் கரேணுமதியும் ஒருவரையொருவர் பார்த்தபடி விழிகளால் எதையோ உரைத்தனர். விஜயை தேவிகையின் விழிகளைச் சந்தித்து அது என்ன என்று வினவினாள். தேவிகை எதுவானால் என்ன என்று தோளசைவு காட்டினாள். அவர்கள் இருவரும் முதலில் சிற்றறைக்குள் நுழைந்து கைகூப்பியபடி குந்தியை நோக்கி சென்றனர். மஞ்சத்தில் தலையணைகளின் மீது சாய்ந்தவளாக மெல்லிய வெண்ணிறக் கால்களை நீட்டி அமர்ந்திருந்த குந்தி முகம் வெளுத்து தளர்ந்திருந்தாள். உதடுகள் உலர்ந்து ஒட்டியிருக்க கைகள் சேக்கையில் உயிரற்றவை என கிடந்தன.

இருவரும் அருகணைந்து அவள் கால்களைத்தொட்டு வணங்கினார்கள். கரேணுமதி “பேரரசியை வணங்குகிறேன். மீண்டும் தங்களைக் கண்டு நற்சொல் உரைக்கும் பேறுபெற்றமைக்கு மகிழ்கிறேன்” என்றாள். பிந்துமதி “இந்நாள் தங்கள் வாழ்த்துக்களை நாங்கள் அடையும் நற்பொழுது கொண்டது. இது என்றும் நினைவுகூரப்படும்” என்றாள். அந்த வெற்றுமுறைமைச் சொற்கள் குந்தியை எரிச்சலடையச் செய்வது தெரிந்தது. சலிப்பு கொண்டவள்போல் இருவரையும் விழிமணி அசைய மாறி மாறி நோக்கி “நலம் சூழ்க!” என்று வலக்கை தூக்கி பொதுவாக வாழ்த்தி அமரும்படி கைகாட்டினாள்.

விஜயையும் தேவிகையும் வந்து குந்தியின் கால்தொட்டு வணங்கி அப்பால் சுவர் சாய்ந்து கைகட்டி நின்றனர். என்ன பேசுவது என்று தெரியாமல் கரேணுமதியும் பிந்துமதியும் தயங்கினர். பிந்துமதி “போர்சூழ்கை அகன்றுவிட்டது என்று நாங்கள் கிளம்பும்போதே அறிந்தோம். ஆகவே இங்கு வந்து தங்களை சந்திக்கவேண்டுமென்று விழைந்தோம்” என்றாள். கரேணுமதி “எதன்பொருட்டு போர்சூழ்கை அகன்றிருந்தாலும் நமக்கே இழப்பு. நம் இளமைந்தர் நிகரற்ற ஆற்றல் கொண்டவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. போர் நிகழுமெனில் அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் நம் கொடிவழியினருக்கு உரிமையாகும். அதை இழந்துகொண்டிருக்கிறோம்” என்றாள்.

குந்தி மறுமொழி எதையும் சொல்லவில்லை. கரேணுமதி “அவ்வகையாயினும் நன்று. இப்போது போர் தவிர்க்கப்படுவதனால் நம் மைந்தர் மேலும் ஆற்றல்கொண்டவராக தோள்பெருக வாய்ப்பு அமைகிறது. பிறிதொருமுறை இப்போர் இம்மண்ணில் நிகழட்டும்” என்றாள். குந்தி விழிகளை விலக்கி அப்பாலிருந்த நீர்க்குவளையை நோக்கிக்கொண்டிருந்தாள். தங்கள் சொற்கள் அவளை உவகையில் ஆழ்த்தவில்லையென்பதை கரேணுமதி புரிந்துகொண்டாள். அவள் விழிகள் பிந்துமதியை வந்து தொட்டுச்சென்றன. தேவிகையையும் விஜயையையும் நோக்கக்கூடாதென கழுத்தை இறுக்கியிருந்தாள்.

“தாங்கள் நோயுற்றிருப்பது எங்களை உளம்குலைய வைத்தது, அன்னையே. இக்குடியின் முதன்மை ஆற்றல் என்பது தாங்களே. அன்னை பிடியானையைப்போல எங்கள் கொழுநரையும் மைந்தரையும் நடத்திச் செல்கிறீர்கள்” என்றாள் கரேணுமதி. பிந்துமதி “ஆம், நம் மைந்தர் பாரதவர்ஷத்தின் அரியணைகளில் அமர்ந்து உறுதிகொள்வதுவரை தாங்கள் இங்கிருந்தாக வேண்டும்” என்றாள். அவள் பிழை உரைத்துவிட்டதை அக்கணமே உணர்ந்த கரேணுமதி திரும்பி தேவிகையை பார்த்தாள். தேவிகை மெல்லிய புன்னகையுடன் அவளை நோக்கிவிட்டு விழிதிருப்பிக்கொண்டாள்.

நிகர்செய்யும்பொருட்டு கரேணுமதி “தாங்கள் நூறாண்டு வாழ்வீர்கள் என்று சூதர்கள் சொல்கிறார்கள். தங்கள் பெயர் மைந்தர் பெற்ற மைந்தரும் முடிசூடி பாரதவர்ஷத்தை ஆள்வதைக் காணும் பேறு தங்களுக்குண்டு என்கிறார்கள். இன்று அதையே முதன்மை நம்பிக்கையாகக் கொண்டுள்ளோம்” என்றாள். ஆனால் அச்சொற்கள் பிந்துமதியின் பிறழ்சொற்களை மேலும் விளக்கவே செய்தன. அவர்களின் தடுமாற்றம் குந்தியின் முகத்தில் ஓர் இகழ்ச்சிப் புன்னகையை உருவாக்கியது. “நன்று. நீங்கள் இங்கு இருப்பதாக எண்ணமா?” என்றாள். “ஆம், இந்திரப்பிரஸ்தத்திற்கு சென்ற வாரம் வந்தோம். அங்கே இருந்து என்ன செய்யப்போகிறோம்? இங்கிருந்தால் உங்களுக்குத் துணையாக அவையில் அமரும் வாய்ப்பும் அமையுமல்லவா?” என்றாள் கரேணுமதி.

“அது தேவை என்று நான் எண்ணவில்லை” என்றாள் குந்தி. “பலந்தரை எப்போது வருகிறாள்?” என்றாள். அச்சொல்லால் இருவரும் முகம் சிவந்தனர். ஒருகணம் கழிந்து கரேணுமதி “நாளை கிளம்புகிறார்கள் என்று அறிந்தேன்” என்றாள். “நன்று. நீங்கள் இங்கு ஓய்வெடுக்கலாம்” என்ற குந்தி அவர்கள் செல்லும்படி கைகாட்டினாள். கரேணுமதி அக்கையசைவைக் கண்டு சினம்கொண்டு பற்களைக் கடித்தபின் மெல்ல தன்னை தளர்த்தி எழுந்துகொண்டாள்.

குந்தி அவர்களை நோக்காமல் “ஒன்று நினைவு கொள்க!பாண்டவர் எங்கும் பெண்கொடை கொள்ளவில்லை. பெண்வென்று கொணர்ந்திருக்கிறார்கள். எனவே பெண்கள் பாண்டவர்களின் துணைவியர் மட்டுமல்ல, அடிமைகளும் கூடத்தான். அடிமைகளுக்குள் பூசல் என எதுவும் எப்போதும் எழலாகாது” என்றாள். பிந்துமதி அறியாது கரேணுமதியின் கைகளைப்பற்றி இறுக்கினாள். கரேணுமதி புன்னகையை முகத்தில் விரித்து “ஆம் பேரரசி, அரசமுறைமைகள் அனைத்தையும் நாங்கள் முன்னரே கற்றிருக்கிறோம். எங்கள் குடிகளில் முதிரா இளமையிலேயே அக்கல்வியை தொடங்கிவிடுவார்கள்” என்றாள். “கற்பது மட்டும் போதாது, உரிய தருணத்தில் அதை நினைவுகூரவும் வேண்டும்” என்றாள் குந்தி அவர்களை நேர்நோக்கி.

பிந்துமதியும் கரேணுமதியும் குந்தியின் கால்களைத்தொட்டு வணங்கி “விடைகொள்கிறோம், பேரரசி” என்றனர். குந்தி அவர்கள் தலைதொட்டு வாழ்த்தினாள். தேவிகையையும் விஜயையையும் நோக்காமல் அவர்கள் வெளியே சென்றார்கள். விஜயை தேவிகையை பார்க்க தேவிகை புன்னகைத்து “செல்வோம்” என்று வாயால் செய்கை காட்டினாள். அவர்கள் இருவரும் பிந்துமதியையும் கரேணுமதியையும் தொடர்ந்து வெளியே சென்றனர்.

முந்தைய கட்டுரைசிறுகதை விவாதம் முடிவு
அடுத்த கட்டுரைபுத்தகக் கண்காட்சிப் பரிந்துரைகள் – கடலூர் சீனு