ஆண்டாள் குறித்த சமகாலப் பார்வைகளில் முக்கியமானது என நான் பெருந்தேவியின் இக்கட்டுரையைக் கருதுகிறேன். இந்த விவாதத்தில் பேசுபவர்கள் எவருமே இது இன்றைய பெண்களை எப்படிச் சென்றடைகிறது என்பதைக் கவனிப்பதில்லை. பெண்ணின் நோக்கில் இச்சொற்களின் ‘எடை’ என்ன என்பதை பெருந்தேவியின் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. தமிழின் சமகாலக் கவிஞர் என்றவகையிலும் இக்குரல் முக்கியத்துவம் பெறுகிறது.
*
சில கடவுள் ஆளுமைகள் தொன்மத்துக்கும் வரலாற்றுக்குமான இடையரங்கில் நிற்பவை. அவ்வகையில் ஆண்டாள், ராமன் போன்ற கடவுளர்களிடமிருந்து வேறுபடுபவள். எனவே, ஆண்டாளின் பிறப்பு போன்றவற்றைப் பற்றிப் பொது அரங்கில் யார் பேசினாலும் குறைந்தபட்சத் தரவுகளை முன்வைக்க வேண்டும். இந்தத் தரவுகள் வாய்வழி வரலாறுகளாகக்கூட இருக்கலாம். ஆனால், தரவுகள் சுட்டப்படுவது இன்றியமையாதது.