சிறுகதை விவாதம்- சிறகதிர்வு,சுசித்ரா -1

SR

சுசித்ரா எழுதிய சிறகதிர்வு

ஜெ,

இந்தக் கதையின் பிற அம்சங்களை பற்றி சொல்வதை விட முதலில் அதன் மொழியைப் பற்றி சொல்ல வேண்டும். இதுவரையிலான மூன்று கதைகளிலும் சரளம் இருந்தது. இதில் மொழிச் சரளம் இல்லை. அதுவே இதன் பலம். அந்த சரளம் இணைய மொழியால் வந்த சரளம். அதை விட, பொதுவாக இன்றைய இளம் எழுத்தாளர்கள் எழுதுவது, “எதிர்ப்படும்” அன்றாடத்தின் தருணங்களை. ஆகவே மொழியும் சாதாரணமாக இருக்கிறது. சுசித்ராவின் மொழி தடுமாறுகிறது. பேச்சு மொழியும், எழுத்து மொழியும், கவிதை மொழியும் ஒன்றாகக் கலந்திருக்கிறது. ஆனால் இணைய மொழி இல்லை என்பதால் இவரால் எளிதாக தன் மொழியை உருவாக்கிக் கொள்ள முடியும்.

தமிழில் எழுத வருபவர்கள் பெரும்பாலும் யதேச்சையாக எழுத வருபவர்கள். பெரிய கேள்விகளோடு வருபவர்கள் அல்ல. அது கேள்வியாக கூட இருக்க வேண்டுமென்பதில்லை. வாழ்க்கையை நோக்கிய திகைப்பாக இருந்தால் கூட போதும். அப்படி இல்லை என்றால் அது அவர்கள் எழுத்திலும் தெரிந்து விடுகிறது, அதுவே உறவு சிடுக்குகளிலிருந்து துவங்க வைக்கிறது. இவருக்கு அப்படி ஒரு quest இருக்கிறது என்பது இவருடைய எழுத்தில் தெரிகிறது. அதற்க அவருடைய வாசிப்பும் உதவி செய்கிறது. அனேகமாக, சமீப வருடங்களில் நான் வாசித்தவற்றில் பிற எழுத்தாளர்களை qoute செய்து ஒருவர் எழுதுவது இதுவே முதல் முறை. அதுவே எழுத்தாளன் ஆவதற்கான வழி, வரலாற்றின் சிறந்த மனங்களை உள் வாங்கி பின் அதை நம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்வது. அங்கிருந்து நாம் அடையும் பதில் நம்முடையது, அது நாம் வரலாறுக்கு திருப்பித் தரும் நம் தரிசனம்.

கதையின் கேள்வியும் பதிலும் என, அறிவியலுக்கும் கவிதைக்குமான உறவை சொல்லலாம். அது இறந்த பறவையின், காகித கொக்கின் வழியாக சொல்லப்படுகிறது. உண்மையில் அறிவியல் இருப்பதையே கணக்கிலெடுத்துக் கொள்கிறது [மிகச் சமீப காலம் வரை]. இன்மையை அல்ல. ஆனால் இந்திய மரபு, குறிப்பாக பௌத்த மரபு, சூன்யம் என இன்மையையும் இருப்புக்கு இணையாக எடுத்துக் கொள்கிறது. உயிர் வாழ்தலின் பொருள் இருப்பில் இல்லை. மரணத்தில் இருக்கிறது. அது அம்மாவுக்கு தெரிந்திருக்கிறது. மகனுக்கு தெரிய ஐநூற்றி எழுபத்தெட்டு வருடங்கள் ஆகியிருக்கிறது. அப்பொழுதும் மரணத்தின், கவிதையின் வழியாகவே தெரிய வருகிறது, அறிவியலால் அல்ல. பனித்துகளை தங்கத் தூசாக ஆக்குவது அந்தக் கவிதையே.

ஆரம்ப காலக் கதைகளிலேயே இந்த உயரத்தை அடைவது அபூர்வம். சுசித்ராவிற்கு வாழ்த்துக்கள்.

அந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் தமிழர்களுக்கு பேருதவியாக இருக்கும். அறுநூறு வருடங்கள் கழித்து என்றாலும் கவிதையை புரிந்து கொள்வது நல்ல விஷயம் தான்.

ஏ.வி.மணிகண்டன்

***

அன்புள்ள ஜெ,

இம்முறை யூனிகோடுக்கு மாற்றி அனுப்பி உள்ளேன். பார்மேட் பிரச்சனை இருக்காது என கருதுகிறேன். சிரமத்திற்கு என் வருத்தம்.

**

ஒரு நல்ல கதையை வாசித்ததும் ஏற்படும் ஒரு சின்ன துணுக்குறல் சுசித்ராவின் “சிறகதிர்வு” படிக்கும்போது எனக்கு உண்டானது. கலையா அறிவியலா என்கிற பழமையான கேள்விதான் கதை. (கவிதைகள் உண்மைக்கு எதிரானவை என்று ப்ளேட்டோ கூறுகிறார்.கிறிஸ்துவுக்கு முன்னால் ஆரம்பித்த சிக்கல் இது). ஆனால் எல்லா பழமையான கேள்விகளைப் போல் இதுவும் ஒவ்வொருவரிடமும் தனித்தனியே விடையைக் கோருகிறது.

மகன் மரணத்தை வெல்ல நினைக்கிறான். ஏனெனில் அவன் மரணத்தை அஞ்சுகிறான்; மரணம் ஆபாசமானது என்கிறான். அம்மாவோ மரணத்தை அஞ்சாததால் அவளுக்கு வாழ்வின் நிறைவு மட்டும்தான் தெரிகிறது. மரணம் அவளுக்கு ஒரு பொருட்டல்ல. பறவைக்குள் இருக்கும் -அது இறந்தாலும் என்றும் அழியாத- இன்னொரு பறவையை அவள் கண்டுகொண்டுவிட்டாள்.

இக்கதையின் வழியே கலையின் பயன் என்ன, அது மனிதர்களுக்கு என்ன அளிக்கிறது என்பதுக் குறித்து வெவ்வேறுக் கோணங்களில் யோசிக்க முடியும். நான் ஒரு விஷயத்தை மட்டும் கூற எண்ணுகிறேன்.

ஒரு மகத்தான இயற்கைக் காட்சியை நாம் காண்பதும் வியப்பதும் ஏதாவது ஒரு கவிஞனின் சொற்களினாலேயே என்று நீங்கள் ஒருமுறை குறிப்பிட்டிருந்தீர்கள்.சிறகதிர்வில் கதைசொல்லி முதல்முறையாக அப்பறவையை கண்டதும் அவனுக்கு நினைவில் வருவதும் எமிலி டிக்சன்தான் – வரிகள் அவனுக்கு தெரியாமல் இருக்கிறபோதும். (அவனது உண்மையான இழப்பும் இதுவே). அந்த துலக்கமற்ற ஞாபகத்தின் வழியாகத்தான் அவன் அம்மாவை மனதில் மீட்டெடுக்கிறான். எந்தவொரு வாழ்க்கை அனுபவத்தையும் நாம் கலையோடு தொடர்புபடுத்தி பிரக்ஞையில் அள்ளும்போது அதன் எடை இன்னும் கூடிவிடுகிறது. மரணத்தை மனிதர்களால் ஒருவேளை வெல்ல முடியும் எனில் அது இப்படித்தான் சாத்தியம் என எண்ணுகிறேன். இந்த ஒரு வாழ்க்கைக்குள் நூற்றுக்கணக்கான வாழ்க்கைகளை வாழ்வதன் மூலமாக. (இதுவும் உங்கள் சொற்களே).

எல்லா நல்ல கதைகளிலும் வாசகர்களை குளிர்ந்த கை எனத் தொடும் ஒரு surprise element புதைந்திருப்பதை நான் என் வாசிப்பனுவத்தில் உணர்ந்திருக்கிறேன். (முன் தினம் வெளியிடப்பட்ட சுனீலின் பேசும்பூனையில் அச்செயலி வியாபார முகம் அணிந்ததும், விளைவாக தேன்மொழியின் வாழ்க்கையிலுள்ள வெறுமைக்கும் நுகர்வு மோகத்திற்கும் நடுவே ஒரு இணைப்பு உருவானதும் surprise element தான்). சிறகதிர்வில் அந்த காகித கொக்கு அப்படியான ஒரு வியப்புக் கூறு. அரவிந்தின் சீர்மை கதையில் த்ரேயா மிக இயல்பான,தன் சுயம் முற்றிலும் கரைந்த ஒரு மாயத் தருணத்தில் வண்ணத் தீற்றல்களின் ஊடே சீர்மையை கண்டடைவாள். சிறகதிர்வின் கதைசொல்லி தன்னையும் அறியாமல் அக்காகித கொக்கை உருவாக்கும் தருணத்தை சீர்மையின் மினியேச்சர் வடிவம் என்று சொல்லலாம்.

சுசித்ராவின் மொழியும்கூட கவித்துவமாக இருக்கிறது. நிறைய இடங்கள் கவர்ந்தன. உடனடியாக சுட்டிக்காட்ட விரும்புவது. “அம்மாவின் மூச்சுக்காற்றுப் புல்லாங்குழில் அடைக்கப்பட்டு வெளிவருவது போல ஒலித்துக்கொண்டிருந்தது.”. இறுதியில் பறவையின் மீது மண்ணைக் கொட்டுகையில் அதை “தங்கத்தூசுப் போல” என எழுதியிருந்ததும் அவரதுத் திறனை வெளிப்படுத்துகிறது.

கதைசொல்லி தன் ஆய்வுக்கூடத்தில் உயிரின் ரகசியங்கள் அறிகிற நுண்கருவிகள் யாவும் இருப்பதாக கூறுகிறான். ஒரு பெரும்பறவையின் சிறகு வெப்பத்தை அதன் அணைப்பை கருணையை அந்தக் கருவிகளால் ஒருபோதும் அறிய முடியாது. அது காதுகளால் கேட்கப்படாததும் கண்களால் பார்க்க முடியாததும் அறிவால் எட்டமுடியாததுமான பதில் என்பதையே இக்கதையின் சாரம் என தொகுக்கிறேன்.

காலத்துகளின் “நாகாஸ்திரம்” பற்றிய தன் கடிதத்தில் அக்கதையை தான் எழுதியிருந்தால் அது எப்படி இருந்திருக்கும் என்று சுசித்ரா ஒரு பார்வையை முன்வைத்திருந்தார். அதே சுத்ந்திரத்தை நானும் இங்கு சற்று எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். நான் எழுதியிருக்கும்பட்சத்தில் கதை இன்னும்கூட காட்சிபூர்வமாக இருந்திருக்கும்.இத்தகைய அறிவியல் புனைக்கதைகளில் அதற்கான வெளியும் உண்டு. மரணத்தை மனிதர்கள் வென்ற பின்பு அவ்விடத்தில் கேளிக்கைக்கூடங்கள் பெருகியதாக ஒரு குறிப்பு கதையில் வருகிறது. இது அருமையான இடம். கலையை மறுத்து அறிவியலை மட்டும் முன் வைக்கும்போது அங்கு நுண்ணுணர்வு அழிகிறது. (பகுத்தறிவு இருக்கும் இடத்தில் படைப்பாற்றல் இருக்காது என சமீபத்திய உரையில் நீங்கள் பேசியது நினைவில் தட்டுகிறது.) இப்புள்ளியை கதையில் கொஞ்சமேனும் விரித்தெடுத்திருந்தால் கதைக்கு மற்றொரு உள்ளடுக்கு கிடைத்திருக்கும். அதேப் போல் கதைசொல்லி உணர்கிற நிறைவின்மையும் அவனது அம்மாவுடனான உறவு சார்ந்ததாகவே இருக்கிறது. ஆனால் மரணத்தை வென்ற பின் அவன் தன் வாழ்க்கையில் என்ன அடைந்தான் அல்லது இழந்தான், மரணமற்ற உலகம் எப்படி இருந்தது என்பது பற்றி பெரிதாக எதுவும் பேசப்படவில்லை. என்னுடைய ஆர்வம் அக்கேள்விகள் சார்ந்தும் இருந்திருக்கும் என படுகிறது. சர்வ நிச்சயமாக நான் அவனை ஐநூறு ஆண்டுகள் உயிரோடு வாழவிட்டிருக்க மாட்டேன்.

அறிவியல் புனைகதை, கலையின் பயன், வாழ்வுக் குறித்த முழுமை நோக்கு – இவற்றைச் சுற்றியே சமீபமாக என் தேடல் இருக்கையில்  இக்கதையை படித்ததும் “ச்சே. இது நமக்கு தோன்றாமல் போய்விட்டதே” என்று சின்னதாக பொறாமையும் ஏமாற்றம் எழுந்தன. அவற்றுக்கு நடுவே எங்கோ ஓர் இடத்தில் என்னையும் மீறி ஒருவித மகிழ்ச்சியும் உண்டானது. சுசித்ராவுக்கு  என் வாழ்த்துக்கள்.

அன்புடன்,

விஷால் ராஜா

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–29
அடுத்த கட்டுரைஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 9