வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–30

பகுதி நான்கு : ஒளிர்பரல் – 5

blயுயுத்ஸு எழுந்து “ஆன்றோரே, இப்போது அவையில் இளைய யாதவரின் தூதுச்செய்தியும் அதன்மேல் பேரரசரும் அமைச்சரும் கொண்ட உணர்ச்சிகளும் முன்வைக்கப்பட்டன. ஆகவே பிதாமகர் பீஷ்மரும் ஆசிரியர்களான துரோணரும் கிருபரும் தங்கள் எண்ணங்களையும் முன்வைக்கவேண்டுமென கோருகிறேன். பிறிதெவரேனும் தங்கள் வழிச்சொற்களை உரைப்பதென்றாலும் ஆகலாம். அதன் பின்னர் இந்த அவையில் ஒரு முடிவை நோக்கி செல்லும் முயற்சிகள் நிகழ்வதே முறையென்றாகும்” என்றான்.

அவனுடைய எண்ணம் என்னவென்று அவையினரால் உய்த்துணர முடியவில்லை. ஆனால் விதுரரின் சொற்கள் அவர் எண்ணியதற்கு மாறாக அவையை சினம்கொள்ளச் செய்துவிட்டன என்று தோன்றியது. மெல்லிய அலையாக எழுந்துசென்ற குரல்முழக்கம் அவை எதிர் உளநிலையில் இருப்பதையே காட்டியது. அசலை அவள் எண்ணியதையே சொன்னாள். “புலியின் உடலுக்குள் எழும் உறுமல்போல் ஒலிக்கிறது.” தாரை “ஆம்” என்றபின் பீஷ்மரை நோக்கினாள்.

துரோணரும் விதுரரும் பீஷ்மரையே நோக்கிக்கொண்டிருந்தார்கள். யுயுத்ஸு மீண்டும் “பிதாமகரே, தங்கள் சொல்லைக் காத்து நின்றிருக்கிறோம்” என்றான். பீஷ்மர் திகைத்து விழித்துக்கொண்டவர்போல குருதிச்சிவப்பு படிந்த விழிகளுடன் துரோணரை நோக்கி “என்ன?” என்றார். “தங்கள் சொல்” என்றார் துரோணர். “ஆம்” என்றபடி அவர் தாடியை வருடிக்கொண்டிருந்தார். பின்னர் மெல்ல எழுந்து “அவையோரே, இந்த அவையில் என் மைந்தன் சொன்னதை கேட்டுக்கொண்டிருந்தேன். அவன் தன் துணைவியை மண்திகழ்தெய்வம் என ஏற்றுக்கொண்டிருப்பதாக உரைத்தான். அதற்கு எனக்குரிய உட்பொருளும் உண்டு, அவன் என்னையும் ஆசிரியர்களையும் கைவிடுகிறான். ஏனென்றால் நாங்கள் அவனை கைவிட்டுவிட்டதாக எண்ணுகிறான்” என்றார்.

“அது மெய். இந்நாட்களில் நான் அறமும் அல்லதும் தேர்ந்து என் நிலையை எடுத்தபோது அவனைப்பற்றி எண்ணியதேயில்லை” என தொடர்ந்தார். “அவனுக்கு நானளித்த சொல்லைப்பற்றி எண்ணினேன். அது என்னைப்பற்றிய எண்ணமே. பெருந்தந்தையாகிய அவன் உளம் இத்தருணத்தில் கொள்ளும் அழலை என் அகம் வாங்கிக்கொள்ளவில்லை. மெய்யுரைப்பதென்றால் இத்தருணத்தில்கூட அதை நான் உணரவில்லை. இங்குள்ளோர் உள்ளூர எண்ணுவதையே நானும் எண்ணுகிறேன், ஒருவேளை முளைக்காத குருதிகொண்ட எனக்கு அதை ஒருபோதும் புரிந்துகொள்ளமுடியாது போலும்.”

மேலும் சொல்ல ஏதுமில்லாதவர்போல அவர் தாடியை நீவிக்கொண்டிருந்தார். பின்னர் நிமிர்ந்து இளைய யாதவரை நோக்கி “அவனைப்போலவே பெருந்தந்தை அவையமர்ந்த இளைய யாதவர். அவர் சொல் தன் மைந்தருக்கும் சேர்த்துத்தான் எழுந்திருக்குமென எண்ணுகிறேன். குடியினரே, தந்தையரை ஏதோ ஒரு தருணத்தில் மைந்தர்கள் விலக்கவேண்டியிருக்கிறதா, விதையை முளை கீறியுடைத்து எழுவதைப்போல? அமைதியாக உணவாகுதல்தான் தந்தையருக்கு தெய்வங்கள் வகுத்த மெய்நெறியா?” என்றார். அச்சொற்களிலிருந்த நேரடியான முள் அனைவரையும் இளைய யாதவரை நோக்கச்செய்தது. அவர் புன்னகைத்துக்கொண்டிருந்தார்.

“இந்த அவையில் நான் சொல்வதற்கென்ன உள்ளது? என் நிலைபாட்டை இறுதியாக முன்னரே அனுப்பிவிட்டேன். எந்நிலையிலும் அஸ்தினபுரியின் முடிகொண்ட அரசனுக்குரியது என் வில். என் சொல் என் மைந்தன் திருதராஷ்டிரனுக்குரியது” என்றார் பீஷ்மர். அவர் அமரப்போவதை உடலசைவெழும் ஆயம் காட்ட விதுரர் முந்திய குரலில் “இத்தருணத்தில் அரசர் ஆற்றவேண்டியதென்ன என்பதை நீங்களே வழிகாட்டி உரைக்கவேண்டும், பிதாமகரே” என்றார். பீஷ்மர் நின்று அவரை எவர் என்பதுபோல சிலகணங்கள் நோக்கினார். அவருடைய ஒரு கண் சற்று கீழே இழுபட்டு பாதி மூடியது போலிருந்தது. இன்னொரு விழி நீர்கொண்டிருந்தது. உதடுகள் நடுங்கின. அவர் அதுவரை சொன்னவற்றை திரட்டிக்கொள்ள முயல்கிறார் என்பது தாரைக்கு தெரிந்தது.

“நான் சொல்வதென்ன? எது அனைவருக்கும் நன்மையோ அதையே இளைய யாதவர் சொல்வார். அவருடைய சொற்களை ஏற்கவேண்டும் என்பதே முதியவனாக நான் அரசருக்கு உரைக்கவேண்டியது” என்றார் பீஷ்மர். “எது நம் நாவுக்கு சுவையுடையதோ அது நம்மை வளர்க்கும். எது நம்மை வளர்ப்பதோ அது கட்டின்றிப் பெருகுவதாகவும் இருக்கும். பேணிப்பரவி ஓட்டப்பயிற்சி அளித்து புரவியை உருவாக்கும் நாமே கடிவாளமும் அணிவிக்கிறோம். இப்போது கடிவாளம் அணிவிக்கும் தருணம்.”

“அஸ்தினபுரிக்கு அரசர் தன் ஆற்றலை பாரதவர்ஷத்தில் ஐயமற நிறுவிவிட்டார். இன்று அவர் கொடிக்கீழேதான் பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்கள் அனைவரும் அணிதிரள்கிறார்கள். சத்ராஜித் என அமரவேண்டியவர் எவர் என்பதில் எவருக்கும் ஐயமில்லை. இதற்கப்பால் சென்று போரில் அதை குருதியினால் நிறுவவேண்டியதில்லை” என்றார் பீஷ்மர். “ஏனென்றால் போரென்பது ஒருமுகப்பட்ட ஒற்றைத் திசைபெருக்கு அல்ல என்றுணர்க! போரைக் குறித்து நூறாயிரம் நூல்கள் இங்கே எழுதப்பட்டுள்ளன. ஆனால் நேரில் நாம் காணும்போது ஒவ்வொருமுறையும் ஒவ்வொன்றாகவே அது உள்ளது.”

“இந்தப் பேரவையில் போரை மிக நன்றாக அறிந்தவன் நான் என்று சொல்லி இதைச் சொல்ல முற்படுகிறேன். இளையோரே, போர் என்பது வாழ்க்கையின், வரலாற்றின் சிறு நாடக வடிவமேயாகும். வாழ்க்கையையும் வரலாற்றையும்போல அதுவும் எவ்வகையிலும் அதிலீடுபடும் எவர் கையிலும் இல்லை, அதை தெய்வங்களே ஆள்கின்றன. போர்முரசு கொட்டும் முதற்தருணம் வரைதான் மானுடனுக்கு தன் குடித்தெய்வங்களின் அருளும் வழிபடும் முதன்மைத்தெய்வங்களின் கனிவும் துணையிருக்கிறது. போர் தொடங்கிய பின்னர் அனைவரும் தங்களை போருக்குரிய தெய்வங்களுக்கு முற்றாக ஒப்படைக்கவேண்டியதுதான்.”

“தெய்வங்கள் ஈன்ற கட்டற்ற தெய்வக்குழவிகள் அப்போர்தெய்வங்கள். தெய்வங்களே தலையில் அறைந்துகொண்டும் பதறிக் கூச்சலிட்டுக்கொண்டும் கண்ணீர்விட்டு மன்றாடியும் இறுதியில் சினம்கொண்டு கோலெடுத்து எழுந்தும்தான் அவற்றை கையாள்கின்றன. துடுக்கர்கள், குறும்பர்கள், சழக்கர்கள், அளியிலிகள், நெறியிலிகள், நாணிலிகள்” என்று பீஷ்மர் சொன்னார். அவருடைய உள்ளம் அவையை விட்டு முற்றாகவே விலகிவிட்டதென்று தெரிந்தது. தனக்குத்தானே என, ஏதோ மலையுச்சியில் நின்று காற்றை நோக்கி அரற்றுபவர் என உடைந்துடைந்து தெறித்த சொற்களில் பேசிக்கொண்டிருந்தார்.

முதுமையாலும் களைப்பாலும் குழறிய நாக்கும் பதறும் தொண்டையுமாக அவர் சொன்னார் “துடுக்கையும் குறும்பையுமே இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர்களின் மெய்முகத்தை பின்னர் நோக்குவோம். நான் நூல்களைப் பயின்றிருந்த அக்காலகட்டங்களில் எண்ணுவதுண்டு, போருக்கென ஏன் இத்தனை நெறிகளும் நோன்புகளும் வழிகாட்டுதல்களும் என. போர் தொடங்கிய ஓரிரு நாழிகைக்குள்ளாகவே அனைத்தும் சிதறிப்பறந்து மறையும். அங்கிருப்பவை தெய்வமேறிய உள்ளங்கள். விலங்குகளின் உணர்வுகள். ஆகவே பின்னர் நூல்களை முற்றாக கைவிட்டேன். அவை மானுடனின் ஏக்கங்கள், விழைவுகள் மட்டுமே. நெறிநின்று இயற்றப்படும் போர் என ஏதுமில்லை.”

“போரை வேள்வியென்றும் கலையென்றும் சொல்பவர்களை நான் படித்தறிந்துள்ளேன், அவர்கள் வெற்றிகொண்டவர்களை அண்டிவாழும் சூதர்களும் கவிஞர்களுமே. போர் முற்றிலும் பிறிதொன்று. அறிக, போர் என ஒன்று எழுமென்றால் நாம் ஆடைகளை என நாம் பெற்றும் கற்றும் உற்ற அனைத்தையும் கிழித்துவீசிவிட்டுத்தான் முன்செல்வோம். தந்தையர் நெஞ்சில் உதைப்போம். ஆசிரியர்களின் முகத்தில் உமிழ்வோம். உடன்பிறந்தார் தலைகளை கொய்வோம். இளமைந்தர் குருதியில் குளித்து களியாடுவோம்.”

“போரில் நாம் தோற்றால் உண்மையில் பெரும்பழியிலிருந்து காக்கப்படுகிறோம். வென்றால் காட்டெரியென மக்கள்மேல் எழுந்து பரவுவோம். கொன்று சூறையாடுவோம். களஞ்சியங்களை கொள்ளையடிப்போம். வயல்களை உழக்கி அழிப்போம். ஊருணிகளில் நஞ்சிடுவோம். ஊர்களை எரியூட்டுவோம். தாமரைச்சுனையில் இறங்கிய எருமைகள்போல கன்னியரை வலுப்புணர்வோம். பெற்ற அன்னையரும் பெண்டிரென்றே தெரியும் கீழ்மையில் திளைப்போம். போருக்கெழுந்தவர் எவரும் இவற்றை ஆற்றாமல் திரும்ப பாடிவீடு மீண்டதில்லை.”

“போர்களால் களஞ்சியங்கள் அழிகின்றன. மகளிர் கற்பு சிதைகிறது. அவையோரே, போருக்குப் பின் முற்றழிவது நெறி நம்பிக்கை. மூத்தோர் சொல்லும் நவில்நூலும் உரைத்த நெறிகளெல்லாம் மெய்யல்ல என்று கண்கூடாக அறிந்த மக்கள் பின்னர் நிலைமீள நெடுநாளாகும். அரசித்தேனீ கொல்லப்பட்ட தேனீக்களைப்போல அவர்கள் வஞ்சக்கொடுக்குடன் அலைவார்கள். தங்களுக்குள்ளேயே கொட்டி நஞ்சூட்டி அழிவார்கள். பிறிதொரு அரசித்தேனீ பிறந்தெழுந்து அவர்களை மீண்டும் தொகுக்கவேண்டும்.”

பீஷ்மர் பெருமூச்சுவிட்டார். சொல்லிச்சொல்லி அவர் எங்கோ சென்றுவிட்டார் என்று உணர்ந்து சொன்னவற்றை திரட்டிக்கொள்ள முயன்றார். நினைவுகள் குவியாமையால் தத்தளித்து அருகே நின்ற யுயுத்ஸுவை நோக்கி “என்ன?” என்றார். யுயுத்ஸு “மீண்டும் குடிகள் உருவாகி வரவேண்டியிருக்கும்” என்றான். “ஆம், போர் என்பது கோபுரத்தின் அடித்தளத்தை விரிசலிடச் செய்யும் அடி. மேல்கட்டுகள் இடிந்து சரியும். முற்றாக அள்ளி அகற்றி அடித்தளத்தை மீட்டமைக்காமல் மீண்டுமொரு கோபுரம் அங்கு எழமுடியாது.”

அவர் களைப்புடன் இரு கைகளையும் கோத்து மார்பில் வைத்தபடி நின்றார். “ஆகவே எந்நிலையிலும் போரை ஒழிக! நான் சொல்லவருவது அதுவே. குடிகள்மேல் அன்புகொண்டிருக்கும் அரசன் எவனும் அவர்களுக்கு போர்த்துயரை அளிக்கமாட்டான்.” மேலும் எதையோ சொல்ல வாயெடுத்து குழம்பி யுயுத்ஸுவிடம் “வேறென்ன?” என்றார். “அரசர் செய்யவேண்டியதென்ன என ஆணையிடுக, பிதாமகரே!” என்றான் யுயுத்ஸு. “அரசனுக்கு எவரும் ஆணையிடக்கூடாது. அவன் தந்தையும் ஆசிரியனும் முதன்மை வைதிகனும்கூட” என்றார் பீஷ்மர். “தங்கள் சொற்களைக் கூறுக!” என்றான் யுயுத்ஸு.

“இளைய யாதவர் சொல்வதென்ன?” என்றார் பீஷ்மர். “தன் இளமைத் தோழனாகிய துரியோதனனுக்கும் அவன் உடன்பிறந்தாருக்கும் அவர் உரைப்பவை என்ன?” இரு கைகளையும் நீட்டி “களமாடல் ஒழிந்து அவர் நேரடியாகவே சொல்லட்டும்” என்று உரக்க கேட்டார். தங்கள் குரல் மிகத் தாழ்ந்தொலிக்கிறதோ என எண்ணும் முதியவர்கள் தேவைக்குமேல் எழுப்பும் ஒலி கொண்டிருந்தது அது. யுயுத்ஸு “தங்கள் தரப்பை சொல்லலாம், யாதவரே” என்றான்.

இளைய யாதவர் எழுந்து “நான் சொல்வது ஒன்றையே. பாண்டவர்களுக்குரிய மேற்குநிலம், பாதி கருவூலம், இந்திரப்பிரஸ்தம் ஆகியவை உடனடியாக அளிக்கப்படவேண்டும். அவை கொடையென்றல்ல உரிமையென்று ஏற்று கையளிக்கப்படவேண்டும்” என்றார். “இதுவே அதற்கான தருணம் என நானும் உணர்கிறேன். இன்று அவற்றை அளித்தால் போருக்கஞ்சுவதாகவோ பேரத்தில் தோற்றதாகவோ பொருள் உருவாகாது. அரசர் தன் பெருந்தோள்களை விரித்து உடன்பிறந்தாரை தழுவிக்கொள்வாரென்றால் அத்தருணத்தை பாரதவர்ஷம் ஆயிரமாண்டுகள் விழவெனக் கொண்டாடும்.”

“ஆம், நானும் பிறிதொன்றும் சொல்வதற்கில்லை. இத்தருணத்தை பற்றிக்கொள்க!” என்றார் பீஷ்மர். கைவணங்கி “அவைக்கும் நான் உரைப்பது அதுவே. வஞ்சத்தின் உச்சம் கண்டுவிட்டோம். இனி மலையின் மறுசரிவில் இறங்குவோம்” என்றபடி அமர்ந்தார். இளைய யாதவர் “மூத்தவர்கள் எவ்வகையில் சொன்னாலும் அது ஆணையே” என்றபின் தானும் அமர்ந்தார். யுயுத்ஸு துரோணரிடம் “ஆசிரியரே, தங்கள் சொற்களை அவை எதிர்நோக்குகிறது” என்றான். துரோணர் மெல்ல எழுந்து “பிதாமகர் சொன்னதற்கு அப்பால் நான் எதுவும் சொல்வதற்கில்லை. ஆசிரியனாக ஒன்றை மட்டும் சொல்ல விழைகிறேன். வில்திறனில் இங்குளோரும் அங்குளோரும் நிகரானவர்கள். வேறுபாடென்பது மிகமிகச் சிறியது. ஆகவே எவர் வெல்வார் என்பதை இக்கணம் தெய்வங்களும் சொல்லமுடியாது” என்றார்.

“எவரேனும் வெல்வார்களா என்று சொல்வதும் அரிது” என்று துரோணர் தொடர்ந்தார். “ஆகவேதான் முற்றிலும் இணையான வீரர்கள் தங்களுக்குள் போர்புரிய குடித்தலைவர்களும் அரசர்களும் ஒப்புகை அளிக்கக்கூடாதென்று சொல்லப்பட்டிருக்கிறது. அவையோரே, அது அக்குடியும் நாடும் இருவரையும் இழப்பதாகவே சென்று முடியும். நாம் முற்றழிவதற்கு நம் திறன்களே வழிவகுக்கும் என்று உணர்க! எண்ணியே இச்சொல் எடுக்கிறேன். போர் நிகழுமென்றால் இரு தரப்பையும் முற்றழித்த பழி என்னை வந்துசேரும். எனக்கு வில்லளித்த ஆசிரியர்களுக்கும் அது சென்றடையும்.”

யுயுத்ஸு கிருபரை நோக்க அவர் எழுந்து “நான் கூறுவதுவும் அதுவே. படைக்கலங்களாலோ போராலோ எப்போதும் எதுவும் முடிவுசெய்யப்படுவதில்லை என்றே நூல்கள் கூறுகின்றன. அறமே இறுதியில் கொடியுடன் நின்றிருக்கிறது” என்றார். “அறத்தின் வழியென்றாகும்போதே போரும் நெறியென்று கொள்ளப்படுகிறது. அறத்தின் முதல் மைந்தன் சொல் என்கின்றன நூல்கள். சொல்லால் வெல்லப்படுவதே என்றும் வாழும் அறம்.”

யுயுத்ஸு கைகூப்பி “அவையீரே, இங்கு அனைத்தும் சொல்லப்பட்டுவிட்டன. இனி எழவேண்டிய குரல்களெனெ எவையேனும் உள்ளனவா?” என்றான். அவையிலிருந்து கலைவோசை எழுந்துகொண்டிருந்தது. விழிகள் அனைத்திலும் சொல் திகழ்ந்தது. ஆனால் எவரும் எழவில்லை. “மேலும் குரல்களில்லை என்றால் அவை தன் எண்ணத்தை அரசருக்கு கோல்தூக்கி அறிவிக்கலாம். அஸ்தினபுரியின் குடிப்பேரவைக்கு அரசரையும் கட்டிநிறுத்தும் ஆற்றலுண்டு என வகுக்கப்பட்டுள்ளது. குடியவை எண்ணித் துணியட்டும், நம் குலம்வாழும் முடிவு இங்கே எழுக!” என்றான்.

விதுரர் எழுந்து “மாற்றுச் சொல்லில்லை என்றால் அவையை சிற்றுணவும் இன்னீரும் வாய்மணமும் கொள்ளும்பொருட்டு ஒருநாழிகைப் பொழுது கலைக்கலாம். மூத்தோர் சற்று ஓய்வெடுக்கட்டும். அவையோர் தங்களுக்குள் பேசிக்கலந்து சொல்லொருமை கொள்ளட்டும்” என்றார். நிமித்திகர் அவை கலைவதை அறிவிக்கும்பொருட்டு வெள்ளிக்கோலுடன் அவைமேடை நோக்கி செல்ல கணிகர் கைதூக்கி “ஒன்றுமட்டும் வினவிக்கொள்கிறேன், அமைச்சரே. இது ஆற்றுப்படுத்தலோ அறிவுரையோ அல்ல. அவையோனின் எளிய ஐயம் மட்டுமே” என்றார்.

அசலை “மிகச் சரியான இடம்… இதையே அவரிடம் எதிர்பார்த்தேன்” என்றாள். “என்ன?” என்றாள் தாரை. “என்ன புரிந்துகொள்கிறாய் நீ? இதோ அவையினர் எழுந்து சொல்லுசாவச் செல்லவிருக்கிறார்கள். இப்போது சொல்லப்படும் இறுதிச் சொற்றொடரைப்பற்றி மட்டுமே அவர்கள் பேசிக்கொள்வார்கள். திருதராஷ்டிர மாமன்னர் அவையில் வீழ்த்திய விழிநீர் முற்றாகவே மறக்கப்பட்டுவிடும்” என்றாள். “ஆம், அனைவர் முகத்திலும் கணிகர் சொல்லைக்குறித்த கிளர்ச்சியே தெரிகிறது” என்றாள் தாரை.

விதுரர் இறுகிய முகத்துடன் “அவையில் எக்குரலும் எழலாம், அந்தணரே” என்றார். “இப்போது இளைய யாதவர் வழிநடத்த ஆசிரியர்களும் மூத்தோரும் கூறிய வழிகளை கேட்டேன். நன்று, அமைதி எவருக்கும் நலம்பயப்பதே. அளியும் கனிவுமே ஆன்றோரை நிறைவுசெய்பவை” என்றார் கணிகர். “ஆனால் இப்போது இருசாராரும் தோள்தழுவிச் செய்யும் அமைதியேற்பு என்பது அவர்களை எத்தனை காலம் கட்டுப்படுத்தும்?” விதுரர் “புரியவில்லை, அந்தணரே” என்றார். “மேலும் தெளிவாகக் கேட்கிறேன். இந்தச் சொல்லுறுதியை இவர்கள் மட்டும் தங்கள் வாழ்நாளெல்லாம் காக்கவேண்டுமா? அல்லது கொடிவழியினருமா?”

விதுரர் திகைப்புடன் துரியோதனனை நோக்கிவிட்டு “அதை இப்போது முடிவுசெய்ய வேண்டியதில்லை. நாம் பேசிக்கொண்டிருப்பது நம் தலைக்குமேல் உருண்டு நிற்கும் மலைப்பாறையைக் குறித்து மட்டுமே” என்றார். “தோள்தழுவி விழிநீர் வீழ்த்துவதுடன் அமைதியேற்பு முடிந்துவிடுமா? அன்றி ஏதேனும் ஓலை எழுதப்படுமா?” என்றார் கணிகர். “ஏனென்றால் முன்பு சூதுக்களத்தில் அளிக்கப்பட்ட வெறுஞ்சொல் பேணப்படவில்லை என்னும் ஐயம் பாண்டவர்களுக்கிருப்பதனால் அவர்கள் ஓலைப்பதிவை நாடக்கூடும்.” விதுரர் “ஆம், ஓலைப்பதிவு தேவையே” என்றதுமே தான் சிக்கிக்கொண்டதை உணர்ந்தார்.

“ஓலைகள் பலவகையான முடிப்புரைகளுடன் எழுதப்படும், அமைச்சரே. முடிப்புரைகளைக்கொண்டே ஓலைகள் மதிப்பிடவும்படுகின்றன. சூரியசந்திரர் உள்ளவரை, என் குருதி இங்கு திகழும் வரை என்பது அரசர்களின் அறிவிக்கைகளில் திகழும் பொதுவான முடிப்பு. அச்சொல்லை மாறா ஆணையென்றாக்கி தெய்வங்களுக்கு முன் படைப்பது அவ்வரியே. எளிய வணிக அறிவிக்கைகளில் அவ்வாறிருப்பதில்லை. இத்தனை காலத்திற்கென்று வகுப்பதுண்டு. ஒரு வியாழவட்டம். அல்லது அதன் மடங்குகளில் கூறுவது மரபு. ஆணையிடும் அரசனின் கோல்நிற்கும்வரை என்று அரிதாகச் சொல்வதுமுண்டு. இந்த ஓலையில் எவ்வரி இடம்பெறும்?”

விதுரர் “இது தெய்வங்கள்முன் உறுதி ஏற்பதே” என்றார். கணிகர் “நன்று, அவ்வாறே ஆகவேண்டும். ஏனென்றால் இது குருதிப்பூசல். கொடிவழிகள்தோறும் நீளக்கூடியது. நானும் அதையே வழிமொழிவேன்” என்றார். “ஆனால் வானும் மண்ணும் என ஆணையுரைத்தால் இன்று இந்த அவையில் செய்யப்போகும் முடிவென்பது எண்ணியிராக் காலம்வரை நம் கொடிவழிகளனைவரையும் கட்டுப்படுத்தும் என்கிறோம். நம் மைந்தருக்கும் மைந்தர்மைந்தருக்கும் மீறமுடியாத ஆணையொன்றை விடுக்கிறோம் என்றே அதன் பொருள்.”

“ஆம்” என்றார் விதுரர். தளர்ந்த குரலில் “நன்று, அமைச்சரே. நான் வினவுவது இதை மட்டுமே” என்றார் கணிகர். விதுரர் கைகாட்ட நிமித்திகன் அவைமேடைமேல் ஏறிநின்று அவை கலைவதை அறிவித்தான். அவையினர் பாவைகள் என எழுந்து மெல்ல கலையத் தலைப்பட்டனர்.

blசேடி வந்து வணங்கி “தாங்கள் சற்று இளைப்பாறலாமே, அரசி” என்றாள். அசலை எழுந்ததும் தாரையும் உடனெழ அவர்கள் அடுத்த அறைக்கு சென்றனர். பிற அரசியருக்கு அவையில் என்ன நிகழ்ந்தது என்று புரிந்திருக்கவில்லை. அவர்கள் தாழ்ந்த குரலில் தங்கள் தனிப்பட்ட உரையாடலை நிகழ்த்தியபடி நடக்க சிலர் மெல்ல சிரித்தனர். அணிகளும் ஆடைகளும் ஓசையிட்டன. அசலை அவர்களை நோக்கியபின் “மெய்யாக சொல்லப்போனால் அணியாடையே பெண்களை பெரும்பாலும் நிறைவுசெய்துவிடுகிறது. அவர்களை அது தனக்கு உகந்த முறையில் நடிக்கச் செய்கிறது. மிஞ்சியெழும் குரல்கள் அரிதே” என்றாள்.

தாரை அவர்களை வெறுதே நோக்கிவிட்டு “என்ன நிகழும், அக்கையே?” என்றாள். அசலை “அவையினர் உள்ளத்தில் பேரச்சம் ஒன்றை செலுத்திவிட்டார். தாங்கள் முடிவெடுக்கவிருப்பது தங்களை மீறிய ஒன்று என்ற எண்ணம் எழுந்தாலே எளியோர் எம்முடிவையும் எடுக்கமாட்டார்கள். பொறுப்பேற்க மறுத்தலாலே அவர்கள் எளியோர் என எஞ்சுகிறார்கள். அவர்கள் பலபேசி ஊடிமுயங்கிச் சிலம்புவார்கள். அது அப்பேச்சு நிலைக்கும்பொருட்டுதான். பேச்சு நின்றதும் வெற்றுள்ளத்துடன் திரும்புவார்கள். அனைத்தையும் அப்படியே மீண்டும் பிதாமகருக்கும் அரசருக்கும் அளித்துவிட்டு அவையமர்வார்கள்” என்றாள்.

தாரை “எளியோர் என்ற சொல் துயரளிக்கிறது” என்றாள். “ஏனென்றால் காலமெல்லாம் எளியோரை வைத்து ஆடியே வலியோர் வாழ்கிறார்கள்.” அசலை ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தாள். “எளியோர் பெருந்திரளென எழுந்தால் விராடவடிவுகொண்ட ஊழுருவே என்பார்கள்” என்றாள் தாரை மீண்டும். “ஆம், அது நிகழ்கிறது. ஆனால் இன்றுவரை முகப்பில் ஒரு வலியோனைச் சூடாது, அவனுக்குத் தாள்பணியாது எளியோர் திரண்டதோ எழுந்ததோ உண்டா? வென்றபின் அவனுக்கே அனைத்தையும் அடியுறை வைத்து அடிமைநில்லாது அவர்கள் அமைந்ததுண்டா?” என்றாள் அசலை.

தாரை மேலும் சொல்லெடுக்காமல் நடந்தாள். அவர்கள் சிற்றறைக்குச் சென்று அமர்ந்தனர். சேடி இன்னீர் கொண்டுவந்தாள். அசலை அக்கார அப்பத்தை வேண்டாம் என விலக்கினாள். அதை எடுக்க கைநீட்டிய தாரை ஓரக்கண்ணால் அசலையை நோக்கி சற்றுத் தயங்கிய பின்னர் அதில் இரண்டை எடுத்துக்கொண்டாள். “உண்க!” என்றாள் அசலை. தாரை “அக்கார அப்பம் எனக்கு இனியது. எங்களூரில் கோடையில் மட்டுமே வணிகப்படகுகள் வரும். அவர்கள்தான் அக்காரம் கொண்டுவருவார்கள். கோடையின் உணவு இது…” என்றாள்.

“கோடையில் மச்சர்நாட்டில் ஏழு விழவுகள் உண்டு. புதுச்சேறெழுதல், முதல் மீனெழுகை, கொன்றை பொலி, மூத்தோர் கொடை, அன்னையர் கொடை, முதல் கோடைமழை, கூட்டோலை” என்றாள். அசலை “கூட்டோலை என்றால்?” என்றாள். “அனைவரின் இல்லங்களையும் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஓலை வேய்வது… இல்லங்களை மழைக்கு முன்னதாகவே சீரமைத்துவிடுவோம்.” அசலை “அதற்குரிய தெய்வம் எது?” என்றாள். “கூர்மை என்னும் அன்னை. ஆமைவடிவிலிருப்பவள்.” அசலை சிரித்து “ஆம், இல்லத்தைச் சுமக்கும் குடித்தலைவி” என்றாள்.

சேடி உள்ளே வந்து சிற்றடி வைத்து அணுகி மெல்லிய குரலில் “அரசி, அரசர்களின் சிற்றவைக்கு வருக! அங்கே இளையவர்கள் அரசருடன் பூசலிடுகிறார்கள். பெருங்குரலெழுகிறது” என்றாள். அசலை ஒன்றும் சொல்லாமல் எழுந்து அவளுடன் விரைய தாரை உடன்சென்றாள். “இளையோர் சினம்கொண்டு கூச்சலிடுகிறார்கள்” என்றாள் சேடி. அவர்கள் பேரவையின் இடைநாழியை வளைத்து மறுபக்கம் சென்றனர். அரசர்களுக்குரிய கூடத்தின் வாயிலில் நின்றிருந்த காவலனை பொருட்படுத்தாமல் அசலை உள்ளே நுழைந்தாள்.

உள்ளே பேசிக்கொண்டிருந்த துர்மதன் திரும்பி நோக்கி அசலையை உணர்ந்தபின் மேலும் உரத்த குரலில் தொடர்ந்தான். “நாம் போர்முகம் கொண்டுவிட்டோம். போர்வெற்றி பிறருக்கு அமையும் என்று நம் படைப்பெருக்கை ஒருமுறை நோக்கிய எவரும் கூறமுடியாது. பாரதவர்ஷமே ஒருங்கிணைந்து நிற்கிறது. எவர் நம்மை வெல்வது? நிஷாதர்களும் கிராதர்களுமா? நாம் எவருக்கு அஞ்சுகிறோம்?” என்றான்.

துச்சலன் “நான் அஞ்சுவதைப்பற்றி சொல்லவில்லை. ஆனால் நம்மைப் பயிற்றுவித்த ஆசிரியர்கள் அவையிலெழுந்து சொன்னதை மறுக்கவேண்டியதில்லை என்கிறேன்… இருசாராரும் அழிவோம் என்றால்…” என்று சொல்ல துர்முகன் கைநீட்டி “அச்சொல்லை நான் ஐயுறவில்லை. ஆனால் நாம் எண்ணித்துணிகிறோமா என்று மீண்டுமொருமுறை ஆராய இதை ஒரு தருணமாக ஏன் கொள்ளலாகாது?” என்றான். துச்சகன் “ஆம், ஏற்கெனவே நாம் பெருவிழைவும் வஞ்சமும் கொண்டவர்கள் என சூதர் நம் குடிகளிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது யுதிஷ்டிரனை அறத்தோன் என்றும் நம்மை மறம்நின்றிருப்போர் என்றும் காட்டுவதற்கான சூழ்ச்சி” என்றான்.

சுபாகு “பெருஞ்செயல்களுக்கு முன்னால் தெய்வங்களின் எதிர்ப்புகள் எழும் என கேட்டதை இப்போது நம்புகிறேன். இயலுமா, பயனுண்டா, இழப்பவை என்னவென்று அறிவாயா, மீள இயலாதென்று எண்ணுக, இதைவிடவும் சிறந்த வழி பிறிதுள்ளது, இயல்வதை ஏற்று அமைவதே சிறப்பு, இன்னும் சற்று பொறுத்தமைக, விளைவுகள் எவையென்று இப்போது உரைக்கமுடியாது, ஊழுடன் பொருதுகிறாயா, மூத்தோர் சொல் கேள், வெற்றாணவம் இது, பெருவிழைவன்றி மற்றல்ல என்னும் பன்னிரு தடைச்சொற்கள் எழும் என்று நூல்கள் சொல்கின்றன. இங்கு அவையிலெழுபவை அவையே” என்றான்.

அசலை “நாம் பூசலிடவேண்டியதில்லை. அவையில் பேசிக்கொண்டவற்றுக்கு அப்பால் இங்கு நீங்கள் பேசப்போவதில்லை. அவையில் நம் குடித்தலைவரின் விழிநீர் விழுந்தது. அதுவன்றி அனைத்தும் வெற்றுச் சொற்களே” என்றாள். கௌரவ இளையோர் திகைத்தவர்களைப்போல அவளை நோக்கினர். “அரசர் சென்று தன் தந்தையை நோக்கி மீளட்டும். அவர் எந்நிலையில் அவையிலிருந்து நீங்கினார் என கண்டோம். எப்படி இருக்கிறார் என அறியோம்” என்றாள்.

துச்சாதனன் “இன்று அவையில் நிகழ்ந்ததில் நான் காண்பது பிறிதொன்று” என்றான். “ஒரே தருணத்தில் பிதாமகரும் ஆசிரியர் இருவரும் இளைய யாதவருடன் இணைந்துகொண்டுவிட்டார்கள். நம் படைவல்லமை என நாம் நம்புவது அவர்களின் வில்திறனையே” என்றான். “பிதாமகர் ஆணையிட்டால் அஸ்தினபுரியின் படைகளில் பெரும்பகுதி அவருடன் நிலைகொள்ளும். ஆசிரியர்கள் அறைகூவினால் வில்தேர்ந்த இளமைந்தர்களும் மீறமுடியாது. மூத்தவரே, நம் ஆற்றல் அனைத்தும் இன்று அயலாகிவிட்டன.”

துச்சலன் “நம்முடன் அங்கர் இருக்கிறார்” என்றான். துச்சாதனன் சீற்றத்துடன் “வாயை மூடு, மூடா. அங்கர் மாவீரர். ஆனால் பிதாமகரும் ஆசிரியர்களும் எண்ணினால் அங்கரையும் என்னையும் உன்னையும் அரசரையும் வென்று கைகால் பிணைத்து கொண்டுசென்று பாண்டவர் காலடியில் வீசமுடியும்” என்றான். அச்சொல் முடிவதற்குள் அவன் கன்னத்தில் துரியோதனன் ஓங்கியறைந்தான். கைகளால் கன்னத்தை பொத்திக்கொண்டு துச்சாதனன் பின்னடைந்து கால்மடித்து விழப்போனான். அசலை அவனை ஓடிச்சென்று தாங்கிக்கொள்ள அவன் அவளை உதறிவிட்டு எழுந்து கலங்கிய இடக்கண்ணுடன் உதடுகளை இறுக்கியபடி நின்றான். அவன் தாடை இறுகி அசைந்தது.

“என்மேல் போர்தொடுக்கின்றன தெய்வங்கள். காட்டு உன் ஆண்மையை என்கின்றன. காட்டுகிறேன்…” என்று துரியோதனன் சொன்னான். மேலுமேதோ சொல்பவன் என விம்மி பின் இரு கைகளையும் ஓங்கி அறைந்து பேரோசை எழுப்பினான். திரும்பி அறையைவிட்டு வெளியேறினான். அவனைத் தொடர்ந்து துச்சலனும் துர்மதனும் ஓடினர். சுபாகு “மீண்டும் அவைக்கே செல்கிறார்” என்றான். பின்னர் அவனும் ஓடினான். அசலை துச்சாதனனின் கைகளை மீண்டும் பற்ற அவளை வன்மையாக உதறியபின் அவனும் அறையைவிட்டு வெளியேறினான்.

முந்தைய கட்டுரைவைரமுத்து
அடுத்த கட்டுரைசிறுகதை விவாதம்- லீலாவதி- பிரபு மயிலாடுதுறை-1