சிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -4

suneel.jpg

பேசும் பூனை

அன்புள்ள ஜெ

சுநீல் கிருஷ்ணனின் பேசும்பூனை ஒரு நல்ல கதைதான். ஆனால் கதையின் சலிப்பூட்டும் அம்சம் ஒன்று உண்டு. அதை ஓரளவுக்கு போயாக் கதையிலும் காண்கிறேன்.  சுவாரசியமே இல்லாத சாதாரண டேட்டா மாதிரியான விஷயங்களை ஏன் கதையிலே சொல்லவேண்டும். தேன்மொழியின் வாழ்க்கை சலிப்பானது. ஆனால் ஏன் அவ்வளவு டீடெயில் அதற்கு? அவள் வாழ்க்கை சலிப்பானது என நமக்குச் சொல்லும் அளவுக்கு செய்திகள் போதுமே. சிறுகதையின் அழகு என்பதே சுருக்கம்தானே

ஒரு சிறுகதையில் ஒரு விவரிப்பு வரவேண்டும் என்றால் அது குறியீட்டு ரீதியானதாக இருக்கவேண்டும். அல்லது சுவாரசியமானதாக இருக்கவேண்டும். சூழலையோ மனநிலையையோ காட்டுவதெல்லாம் இந்த இரண்டு அம்சம்கொண்ட விவரிப்பை வைத்தே செய்யவேண்டும். சம்பந்தப்பட்ட சூழலில் உள்ள எல்லாவற்றையும் விரிவாகச் சொல்லவேண்டியதில்லை. இந்தக்கதைக்கு இந்த விவரணை தேவையா, இது வாசகனுக்குச் சுவாரசியமாக இருக்குமா என்று கண்டிப்பாக பார்க்கவேண்டும்.

இந்தக்கதையாசிரியர்கள் எல்லாம் புதுமைப்பித்தன், தி.ஜா, சுந்தர ராமசாமி, சுஜாதா ஆகியோரை கூர்ந்து வாசிக்கவேண்டும். அவர்கள் சுவாரசியமில்லாமல் சாதாரணமாக எதையுமே சொல்வதில்லை

எல்.மகாதேவன்

***

சில நாட்களுக்கு முன்னால், போன வருடம் படித்த சிறுகதைகளை மனதில் ஓட்டிக்கொண்டிருக்கையில் ஒன்றை உணர்ந்தேன். வாசித்தவற்றில் மனதில் நின்ற சிறுகதைகள், மீண்டும் மீண்டும் அசை போட்டு மனதில் வளர்த்தெடுத்த சிறுகதைகள், அனைத்துக்கும் ஒரு பொது அம்சம் இருந்தது. அவை அனைத்துமே “இலகுவான” கதைகள். அசோகமித்திரன், கி.ரா, கு.அழகிரிசாமி, பசீர், ஐசக் தினேசன், ஐசக் பாஷெவிஸ் சிங்கர், தால்ஸ்தாய், என்று பல மொழிகளில் பல பின்புலங்களில் வைத்து எழுதப்பட்டு மனதில் நின்ற கதைகள் எல்லாமே, பார்ப்பதற்கு எளிமையான கதைகளைப்போல் தோற்றமளித்தன. கட்டமைப்பில் இலகுவாக, பறந்து செல்லும் மெல்லிறகு போல இருந்தன. ஆடம்பரமான குறியீடுகள் இல்லாமல், பூடகம் இல்லாமல், சில நேரங்களில் குழந்தை கதைகளைப்போலவும் இருந்தன. அதே நேரத்தில், வாழ்க்கையை பற்றிய அடிப்படை உண்மையை ஆணித்தரமாக, மறுக்கமுடியாதபடி, கதைப்போக்கில் பேசிச்சென்றன. அந்த எளிமையான, இலகுவான, பறக்கக்கூடிய கட்டமைப்பே இந்த ஆணித்தரத்துக்கும் காரணம் என்று தோன்றியது.

அப்படி சிந்தித்துக்கொண்டிருக்கையில் சங்காலப்புலவர்களின் பாடல்களை பொற்றாமரை குளத்தில் வீசிப்பார்க்கும் தொன்மம் இப்படியல்லவா வந்திருக்க முடியும் என்று தோன்றியது. ஒரு கதையை வாழ்க்கைப்பரப்பு, அல்லது காலம், அல்லது வாசகரின் ரசனையின் பின்புலம் என்ற நீரில் வைத்து பார்க்கும் போது அது பறந்தோடும் படகாக இல்லாமல் தடுமாறி மூழ்கிவிட்டதென்றால் அது தோல்வியடைந்த கதையே. அந்தப்படகில் பயணிக்க முடியாதே! கதை என்பது அடிப்படையில் உண்மைக்கு மிகமிக அருகே இருக்கும் ஒரு பொய். நம்பகத்தனமான பொய்யாக இருப்பதாலேயே உண்மையை சுட்டிக்காட்டுகிறது. எவ்வளவு நம்பகத்தனமாக உள்ளதோ அவ்வளவு தூரம் உண்மையருகில் வருகிறது. அதற்கென்று உண்மையை அப்படியே எழுதினால் மூழ்கிவிடுகிறது. ஆனால் உண்மையைப்’போல்’ ஒரு உண்மையை இலகுவாக உருவாக்கியபடியே செல்லும் என்றால் கதை நீரின் மேல் பறந்து செல்லும். அப்போது கன்னத்தை வருடி கூந்தலைப்புரளச்செய்யும் காற்றாக இலக்கிய அனுபவம் ஆகிறது.

கதையில் இலகுத்தன்மை என்று சொல்லும்போது, கதையின் கருப்பொருளையோ, கதைமொழியின் எளிமைத்தன்மையையோ சொல்ல வரவில்லை. எவ்வளவு இருட்டான விஷயத்தைக்கூட, சிக்கலான உளவியலையும் கூட, நேரடியான கதைமொழியில், தேவையில்லாதவற்றை நீக்கியபடி, கதைக்குள் காற்றலையை இடம் விட்டுச்சென்றபடி, அதே நேரத்தில் காற்று எதிரொலிக்கும் விதத்தில் கச்சிதமான சட்டகம் பொருந்தியப்படி சொல்ல முடியும். இந்த அளவுகோலை ஏற்றுக்கொண்டோமென்றால், காத்திரமான கரு இருப்பினும் கதை மூழ்குவதற்கான காரணங்கள் சிலவற்றை சொல்லலாம். ஒன்று, ஆசிரியருக்கு கதை செல்லக்கூடிய தூரத்தை எதிர்நோக்கும் தொலைநோக்கு இல்லை. ஆகவே போதிய இடைவெளிகளை கதையில் விடாமல் இருந்துவிடுகிறார். அல்லது இடைவெளிகளை சரியான இடத்தில், அளவில், உருவாக்குவதில்லை. இரண்டு, கதையின் கட்டமைப்பில் குறைபாடுகள் உள்ளன. கதைக்கு என்ன தேவையோ அதை விட அதிகம் திணிக்கப்படுகிறது. எடை கூடி மூழ்கும் அபாயம் உள்ளது. ‘பேசும் பூனை’ கதையில் இவ்விரண்டு குறைபாடுகளையும் நான் கண்டேன். நல்ல கதை, அனேக சாத்தியம் கொண்டது, ஆனால் மனதில் நின்று நிலைக்கும் மிகச்சிறந்த கதையாக ஆகவில்லை.

இந்தக்கதையின் பெரிய பலம் பிரித்தெங்கும் கண்டிராத, அற்புதமான, பேசும் பூனை என்னும் குறியீடு. அதை கதையுலகுக்குள் கொண்டுவந்த கற்பனைத்திறன் வியப்பும் பொறாமையும் அளிக்காமல் இல்லை. பூனை இந்தக்கதையின் பின்புலத்தில் பலவகைகளில் பொருள்படுகிறது. கட்டிமுடிக்காத வீட்டில், கணவன் அனுப்பும் பணத்தை நம்பி மகளை சிபிஎஸ்ஈ பள்ளிக்கு அனுப்பும் தேன்மொழி ஒரு பூனை. பணத்தேவைக்காக வெளிநாட்டில் மனைவியை பிரிந்து வாழும்படி விதிக்கப்பட்ட கணேசன் இன்னொரு பூனை. தனிமையில் சிக்கிக்கொண்ட பெண்மனம் ஒரு பூனை. பூனை அவளுடைய சிறுவயது தோழனாகவோ, கள்ளக்காதலனாகவோ இருக்கக்கூடும். முதல் குழந்தை இறந்துவிட அதன் நினைவு மங்காமல் அதில் சிறையுண்டு மனப்பிறழ்வடையும் தாய்மனம் இன்னொரு பூனை. அல்லது கருப்பையில் வாழ்ந்த சிசு ஒரு பூனை. எல்லா பூனைகளும் திரை வழியே, மறைத்தபடி பேசுகின்றன. எதையாவது கேட்டு கேட்டு இறைஞ்சுகின்றன. அரற்றுகின்றன. இந்த அத்தனை சாத்தியங்களும் கதையில் உள்ளது.

அதே நேரத்தில், பூனை என்னும் குறியீடை கதை முழுமையாக தொடவில்லை என்று சொல்வேன். பூனை அடிப்படையில் சிறையில் மாட்டிக்கொண்ட ஒரு உயிர். நம்மை நம்பி வாழ்கிறது. நாம் உணவிடவில்லை என்றால், காசு ஈட்டிக்கொடுக்கவில்லை என்றால், அக்கறை காட்டவில்லை என்றால், செத்துவிடும். அதே நேரத்தில் அது நம்மையும் சிறைப்படுத்தியுள்ளது. நம்மை அதன் தேவைகளை பூர்த்திசெய்ய வைக்கிறது. மனிதர்கள் அனைவருமே ஒரு விதத்தில் சூழ்நிலைகளால், உறவுகளால், மனப்பாங்குகளால், இச்சைகளால், இயல்புகளால் இதே போல் பிணைக்கப்பட்டவர்கள் தானே! அவற்றிடம் நாம் சிறைப்பட்டுள்ளோம், ஆனால் அவற்றுக்கு நாமே பொரியிட்டு வளர்க்கவும் செய்கிறோம். இந்த தளத்தைத்தொட கதையில் எல்லா சாத்தியங்களும் உள்ளது. தேன்மொழி-கணேசனின் வாழ்க்கை முடிச்சுகளை, அலைக்கழிப்புகளை வேறெப்படி விளக்குவது? ஆனால் கதை, இந்த குறியீடு எதுவும் இதை நோக்கி பயணிக்காமல் போனது ஒரு குறைபாடு தான். பாய்மரங்கள் விரிந்து கடல்ராணியாக நிமிர்ந்து பறந்திருக்க வேண்டிய கதை. சிறிய கனமான படகாக முடிந்துவிட்டது.

இந்தக்கதையை கணையாழியில் வந்தபோதே படித்தேன். அப்போது கதை மிக நீளமாக இருப்பதாக, ஒரு சிறுகதையாக இன்னும் கச்சிதமாக வந்திருக்கலாம் என்று தோன்றியது. மறுபடியும் வாசிக்கையில் அந்த எண்ணம் மாறுபடவில்லை. கதையில் நிறைய சாத்தியங்கள் உள்ளன, ஆனால் கதை இறுதியில் எல்லாமே பறந்துசென்றுவிடுகின்றன. கதையில் காற்று அலைய உள்ள இடம் எதிரொலிக்க, இல்லை. இறுதியில் தேன்மொழி “விக்ரம்” என்கிறாள் – அப்படியென்றால் முன்பின் வராத அந்த பெயரை ஒட்டித்தான் கதையை மறுவார்ப்பு செய்து வாசிக்க வேண்டுமா? அவன் இறந்த குழந்தையா? காதலனா? இப்படி சில அம்சங்கள் தெளிவில்லாமல், குறுக்கும்விதத்தில் உள்ளன.

கதையில் நிறைய திணிக்கப்பட்டுள்ளது என்ற எண்ணத்தை கலைக்கமுடியவில்லை. ஒவ்வொன்றாக வரும் விளையாட்டுக்கள் – பேசும் பூனை, கோபக்கார புள்ளுகள், பாம்பு விளையாட்டு, குரங்குகள் துரத்தும் விளையாட்டு. எல்லாம் ஏதோ வகையில் குறியீடுகள், ஆனால் சலிப்பளித்தன. ஒரு வகையில் குறியீடு கொடுத்து பொருள்படுத்திக்கொள்ள வைக்கும் புத்திரக்கதைகளே சலிப்பூட்டத்தொடங்கியுள்ளன. குறியீடுகள் அற்புதமான கதை இயந்திரங்கள் (narrative devices), சரியாக கையாளப்பட்டால். இல்லையென்றால் தனியாக துருத்திக்கொண்டு நிற்கின்றன. கணவனுக்கும் மனைவிக்கும் விலகல்-ஒற்றுமை வரும் இடத்தில் கத்திச்சண்டை விளையாட்டை பற்றி மகள் சொல்கிறாள். “பாருங்கள், குறியீடு!” என்று ஆசிரியர் திரையை கிழித்துக்கொண்டு வந்து கத்திவிட்டு செல்வது போல் உள்ளது. இது எல்லாமே கதையின் இலகுத்தன்மையை குலைக்கிறது. இவற்றை கட்டமைப்புச்சிக்கல் எனலாம்.

தேர்ந்த எழுத்தாளர்களுக்கு கைகூடுவது, இளம் எழுத்தாளகளுக்கு, என்னையும் உட்பட, கைகூடாதது, கற்பனைத்திறன் மீதான ஆளுமை. வெகு நேரங்களில் ஒரு காட்சியோ குறியீடோ புரிதலோ தரிசனமோ அதன் வீச்சில் நம்மை அடித்துச்செல்வதை உணர முடியும். எந்த மூத்தவனுக்கும் தோன்றாத ஒன்றாகக்கூட தெரியும். ஆனால் எழுத அமர்ந்தால் கதைக்கட்டுக்குள், மொழிக்குள் அமராமல் பொசுக்கென்று தப்பித்து ஓடிவிடும். ஆற்றலை கையாளத்தெரிவதில், அதற்கான பயிற்சியில் தான் முடிச்சு உள்ளது போலும்.

ஆங்கிலத்திலும் தமிழிலும் புதிய எழுத்தாளர்கள் எழுதும் கதைகளை இந்த வருடம் ஓரளவு வாசித்து வருகிறேன். அப்படி பார்த்தால் “பேசும் பூனை”யின் படைப்பூக்க நிலை அரிதான ஒன்று. அற்புதமான கற்பனை. சூழலும் உரையாடல்களும் கதைமாந்தரும் சரியாக, இயல்பாக வந்துள்ளனர். அதே நேரத்தில் மேலும் வளர்ந்திருக்கக்கூடிய சாத்தியமுள்ள கதை.

ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

நன்றி,

சுசித்ரா

***

சிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -2

சிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -1

முந்தைய கட்டுரைசிறுகதை விவாதம்- சிறகதிர்வு,சுசித்ரா -2
அடுத்த கட்டுரைசிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்-5