சிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்-6

nav5

சிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன்

அன்புள்ள ஜெ,

 

சந்தேகமே இல்லாமல் சமீபத்தில் நான் வாசித்த மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று என ‘போயாக்’ கைக் கூறலாம். காரணம் அதன் பேசுபொருள். எப்போதெல்லாம் ஒரு மொழிபு வடிவம் (சிறுகதை, நெடுங்கதை, நாவல், கவிதை) காலாதீதமான உணர்வுகளைச் சொல்லிச் செல்கிறதோ அப்போதெல்லாம் மிகச் சிறந்த இலக்கியம் உருவாகும். இக்கதை அப்படிப்பட்ட ஒரு ஆதி உணர்வை வெளிக்கொண்டு வந்துள்ளது.

 

நாகரிக சமூகத்தில் இருந்து வந்திருக்கும் ஒருவன் கனவிலும் செய்யத்தயங்கும் ஒரு காரியத்தை எவ்வித தயக்கமும் இன்றி செய்துவிட்டு, அதைப் பற்றிய குற்ற உணர்வும் அற்று வெறும் விலங்காக நீங்கும் ஒரு காட்சியில் முடிந்திருக்கும் கதை அதன் பிறகே வாசகனிடம் கேள்விகளை எழுப்பத் துவங்குகிறது. பொதுவாக சிறுகதையில் என்னை உள்ளிழுக்கும் கூறு ஒரு கூற்று. ஏதேனும் ஒரு கூற்று சட்டென்று கதையை மொத்தமாகத் திறந்து என் முன் வைத்து, என்னை உள்ளே தள்ளி விடும். அப்படி இக்கதையில் வந்த ஒன்று, “கண்ணீரின் உப்பு நத்தை விட்டுச்செல்லும் தடம்போல அவள் கன்னங்களில் பிசுபிசுத்தது. ஒரு மொட்டு காலையில் மலர்வதற்கு முன் எந்த அறிகுறியும் காட்டாதது போல ஆழ்ந்த உறக்கம் அவளது“.

 

மது அவர்கள் மட்டுமே இதைச் சரியாக வாசித்திருந்தார். வெண்முரசில் நகுஷன் அசோகசுந்தரியை வன்புணர்ந்ததற்கு நிகரான ஒரு நிகழ்வு இது. அப்போது உங்களிடம் பேசுகையில் பேரிலக்கியக்கங்கள் பேசும் பொருள்களில் ஒன்று “Rape of Innocent” – “களங்கமின்மையின் மீதான வன்கொடுமை”. ஆம், அது வல்லுறவு மட்டுமல்ல. அது அந்த களங்கமின்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. அதன் இருத்தலைக் கொச்சைப் படுத்தி அதை இப்புவியின் முகத்தில் இருந்தே நீக்குகிறது. அதை முற்றழிக்கிறது. இக்கதையை முக்கியமாக ஆக்குவது இந்த நிகழ்வு தான்.

 

ஏன் அவன் அக்குழந்தையைத் தேர்ந்தேடுத்தான்? ஏனென்றால் அது தன் தந்தையை விபத்தில் சிக்க வைத்தது சீமாவின் தந்தையின் கறுப்பு மாந்த்ரீகம் என்பதாலேயே அவரை பழி வாங்க என்று சொல்லலாம். ஏனென்றால் வயது வந்த குமரிகளுக்கு எதிராகத் தானே அவரது ‘நெற்றிக் குறி’ மாந்த்ரீகம் செயல்படும். இதெல்லாம் புறக் காரணங்கள். அடிப்படையில் அவர்கள் பழங்குடிகள். தங்கள் எல்லையில் பிறரை அனுமதிக்காதவர்கள். எல்லை மீறி வருபவனைக் கொல்பவர்கள். அப்படி எல்லை மீறி வந்த ஒருவனாகத் தன்னை எண்ணிக் கொள்ளும் கதை சொல்லி, அப்படி எல்லை மீறுபவன் என்ன செய்வானோ அதைச் செய்கிறான்.

 

ஆனால் இவன் நாகரிகமானவன், படித்தவன். எனவே ஒரு புது வித கீழ்மையை அரங்கேற்றி நகர்கிறான். இக்கீழ்மையை எதிர்கொள்ள அப்பழங்குடி இன்னும் தயாராகவில்லை அல்லவா!! இந்நிகழ்வு நடந்த இடமும் அவனுக்கே உரித்தான வீடு என்பதும், அது அந்த ரூமா பஞ்சாங் என்னும் குடியிருப்பின் எல்லைக்கு வெளியே என்பதெல்லாமும் அவனது ஆழ்மனம் கணக்கிட்டவையாக இருக்கக்கூடும்.

 

குலக் குழுவாக இருக்கும் ஒரு குமுகம், நாகரீக உலகில் அல்லது ஒரு பெரும் சமூகக் கூட்டில் பங்கெடுக்க நேர்ந்தால் முதலில் அழிவது அதன் களங்கமின்மை தான். அதன் பிறகு அதன் கூட்டு மனசாட்சி. அதன் பழக்க வழக்கங்கள். இரு தலைமுறைகளுக்குப் பிறகே அது தெளிவடையும். அதைத் தான் இந்த கதை சுட்டி நிற்கிறது. எல்லைகள் மீறுகையில் இழப்புகள் இயல்பு என உணர்ந்திருக்கும் ஒரு குடி முன் இரு வாய்ப்புகளை வைத்துச் செல்கிறது காலம். ஒன்று மேலும் இறுக்கமான ஒரு குடியாக இன்னும் அடர் காட்டினுள் செல்வது, இன்னும் இன்னும் ஒடுங்குவது. அல்லது இருப்பவற்றை உதறி நாட்டினுள் செல்வது, மேலும் மேலும் வளர்வது.

 

முதலை, எல்லை, ஜேத்தாவின் மகனின் மரணம் போன்றவை இக்கதையின் இன்றியமையா அம்சங்களாக இருந்து கதை சொல்லியின் ஆழத்தில் உறங்கும் சில உணர்வுகளை எழுப்புகின்றன. குறிப்பாக இக்கூற்று – “கொல்லவில்லை. தரைக்கு வந்து தாக்கினால்தானே அது கொலை. அத்துமீறல். தண்ணீருக்குள் மனிதன் போனால் அது முதலையின் உணவுதானே. அது அந்தக் கணத்தில் நடந்தது. அவ்வளவுதான்.”

 

சிம்பா – லயன் கிங்கில் வரும் சிங்கக் குருளையின் பெயர். அதன் களங்கமின்மையே அது தன் தந்தையைக் கொன்றதாகத் தவறாக எண்ணி தன் குடியை விட்டு நீங்கச் செய்கிறது. பின்னர் அது தன்னை உணர்ந்து தன் குடியை மீட்டெடுக்கிறது. அழுத படி உறங்கும் இவளும் அப்படி எழுவாளா என்பது  ஒரு பெரும் நாவலின் களம். நவீன் முயலலாம்.

 

இக்கதையில் போதாமைகள் என எதுவும் இல்லை. நேர்த்தியான சிறுகதை. சில சிறு குறைகள் இருக்கின்றன.

 

௧. சீமாவின் அறிமுகம் – அவள் பெயர் வரும் வரை கதை சொல்லி அவனது முதல் நாள் அனுபவங்களை மட்டுமே சொல்கிறான். சட்டென்று அவன் அங்கே இருப்பதற்கே சீமா தான் காரணம் எனக் கூறுகிறான். இத்தகைய தாவல்கள் கவனமாக கால உணர்வோடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

௨. எழுத்துப் பிழைகள் – ஒரு சிறந்த சிறுகதையில் வந்திருக்கும் இத்தகைய பிழைகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். சரியான பதத்தில் ஏலக்காயின் மணத்தோடு, இறுகி வந்திருக்கும் கடலை மிட்டாயின் இறுதிக் கடியில் மாட்டும் சொத்தைக் கடலை தரும் ஒவ்வாமையை இப்பிழைகள் தந்தன.

 

இவையிரண்டும் எளிய மறு வாசிப்பில் கண்டடையப்படக் கூடியவை. எளிதாகத் சரி செய்யப்படவும் கூடியவை. மற்றபடி ஒரு நிறைவான சிறுகதையை வாசித்த அனுபவம் கிடைத்தது. வாழ்த்துக்கள் நவீன்.

 

அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்

 

 

அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு,

 

நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

 

ம நவீனின் ‘போயாக்’ கதை, முதன்மைப் பாத்திரமான கதைசொல்லிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துபவைகள்,  பாறைகள் போல ஆங்காங்கே எழுந்து, அதன் மீது மோதித் தெறித்துத், தேங்கிய பின் சுழித்து, வளைந்து பாயும் குறு ஓடையின் போக்கினைப்  போல  விவரிக்கப்பட்டிருந்தது.  தன் கல்விக்கு பொருளுதவி செய்த அதே அரசாங்கத்தால், கதைசொல்லியின் பணிச் சூழலின் விருப்பதேர்வு உரிமை  நசுக்கப்படுகிறது. விமானம்,டாக்சி, படகு என காற்று, நிலம், நீர்  என்ற மூன்று வழிகளில்  ரூமா பாஞ்சாங்கிற்கு வருகிறார் ஆங்கில ஆசிரியரான கதைசொல்லி.   அந்த புதிய சூழலின் ஈபான் ஆதிகுடியை சேர்ந்த மனிதர்களான சக ஆசிரியர் லயாவ், ஊர் தலைவர் ஜேத்தா, இளம் குமரி சீமா, எதிர்காலத்தில் சீமாவை விட அழகியாகப் போகும் அவளின் தங்கை சிம்பா ஆகியோரின் அறிமுகமும் அணுக்கமும் ஒன்றன்பின் ஒன்றாகக் கிடைக்கிறது.

 

கதைசொல்லியின் வருகை மற்றும் அந்த சூழலின் தங்கி இருத்தலால், , ஈபான் ஆதிகுடியினருக்கு  ஆங்கிலக் கல்வியும், குற்றேவல் புரிந்தால் கிடைக்கும் கூலியும் பலனாகக் கிடைக்கிறது.  சீமாவிற்கோ அவள் பழகுவதற்கு அரிதான அயலானின் அணுக்க உறவும், வாய்ப்பமைந்தால் உடலின்பமும் கிடைத்திருக்கும். சிம்பாவிற்கு தான் என்றுமே கேட்டிடாத ஆங்கிலக் கதைகள் கேட்கக்  கிடைக்கின்றது. மரவள்ளிக் கிழங்கினை நொதிக்க வைத்து பெறப்பட்ட துவாக் பானம்,  சீமாவின் இளமையும், பார்வையும், உறவிற்கு இணங்குகிறேன் என்கிற உடல்மொழி ஜாடையும்,  காற்றில் பறந்து ஆடியபடி இறங்கும் சேவலின் வாலினைப் போல அவனுக்கு போதை தருகிறது.  இவைகளைத் தவிர அவன் காணும்   ஓரங் ஊத்தன், முதலைகள்,  பன்றிகள்,  நாய்கள், குச்சிகளின் மீது ஊன்றப்பட்ட மண்டை ஓடுகள், சீமாவின் வாயின் மண்புழுக்கள் என அனைத்துமே அவன் மனதில்  ஊறுணர்வு ஏற்படுத்தி உறுத்துகின்றன. கதைசொல்லியால்  உடைக்க முடியாத இந்த பாறைகளான,  படகோட்டியின் ஓரங் ஊத்தன் , ஈபான் பழங்குடிகளின், முதலை வேட்டைத் திறனும்,  சீமாவின் ‘இளங்குமரிகளுடன் உறவிருந்தால் நெற்றியில் குறி வளர வைக்கும்’ மாந்திரீக பின்புலம் கொண்ட தந்தையும், என இவை ஒவ்வொன்றுமே, அயலானின் சுரண்டலிலிருந்து  தங்களை காக்க அவரவர்களுக்கென்று அமைக்கப்பட்டு பேணப்படும் காவல் தடுப்பு போலத் தோன்றுகிறது.

 

இந்தக் கதையில், குறைகளாக  எனக்கு தோன்றிவைகள்,  முதலைகளின் அறிமுகமும் முதலைகளை ஈபான் பழங்குடிகள் வேட்டையாடும் நிகழ்வும், அதன் பின்னர் ஆயப்பட்டு அதனிலிருந்து பெறப்படும் கறியும் , கொழுப்பும் இன்னும் அழுத்தமான வர்ணிப்புகள் மூலம் சித்தரிக்கபட்டிருக்கலாம். உறுதியான மரத்தூண்களுடன் சுனை நீக்கப்பட்டு பிளக்கப்பட்ட மூங்கில்கள் சுவராக இருந்தன என ரூமா பராங்கில் ஆதிகுடிகளின் வாழ்வியல் சூழல் விவரிக்கப்படுகிறது. இன்னும் அழுத்தமாக அந்த சூழலின் இயற்கை வர்ணனைகள் மூலம் கதைசொல்லியின் மனவோட்டம் விவரிக்கப்பட்டிருக்கலாம். ஒருவேளை கதையின் மையமாக இதனைப் பற்றி பேசவில்லை, விளிம்பில் நிகழ்பவைகள் என்பதால்  விரிவான விவரணைகளை தவிர்க்கப்பட்டும் இருந்திருக்கலாம்.

 

ஒரு மழைநாளின் பின்னிரவில் நிகந்த அந்த நிகழ்வினை அறிகையில் மனம் எந்த வகையிலும் ஒப்பவில்லை. நத்தையின் தடம் போன்ற பிசுபிசுப்பான கன்னம்,  என நாசூக்காக விவரித்திருந்தாலும் ,  மனச்சமர் குலைந்து,  அந்த நிகழ்வு நிகழ்ந்திருக்கவே கூடாது என்றே மனதினுள் மன்றாடி வேண்டினேன்.  துருத்  துகள்களால் நிரம்பி அதனை உதிர்த்தபடியிருக்கும் ஒரு பழுஞ்சிவப்பு இரும்பு ஆணி,   மனிதத்தோலினை துளைத்தாலே, அது நாளங்களையும், நரம்பினையும் குத்தி, காயம் ஏற்படுத்தும்,   சீல் பிடிக்கும்.  அந்த காயத்திலிருந்து  முற்றிலும் மீள, நீடித்த ஆறுதலும், கவனம் குவிந்த தொடர்ந்த சிகிச்சையும் தேவைப்பட்டும்.  எதிர்க்க திராணியில்லாத  சிறுமியின் மீதான பாலியல் வன்புணர்வு நிகழ்ச்சி,  மலரக் காத்திருக்கும் உறைபால் வெண்மையும் இளஞ்சிவப்பும் கலந்த ஒரு  முகிழ்ந்த மொட்டின், மீது துருத்துகள் ஆணி இரக்கமின்றி கூராக செலுத்தி கிழித்ததைப் போல இருந்தது.

 

சிறுமியை பாலியில் நோக்கில் சுரண்டினால், எந்த ஒரு பின்விழைவும் நிகழாது  என அறிந்து,  இந்த குரூர நிகழ்வினை நிகழ்த்தியதற்காக கதைசொல்லிதான் முதன்மைக் குற்றவாளி.  கதைசொல்லியின் காம நோக்கினை அருகிலிருந்து உணர்ந்தபின்னும், அறியாமை கொண்ட அல்லது அறிந்தும் அலட்சியத்துடன்,  சிம்பாவை தனிமையில் விட்ட  சீமாதான் இரண்டாம் குற்றவாளி.  குழந்தை சிம்பாவிற்கென எந்த ஒரு பாதுகாப்பும் தராமல்,  கதைசொல்லியிடம் கல்வி என்கிற சாக்கில், அனுமதித்த  ஈபான் ஆதிக்குடி மக்களான லேத்தா , லாயவும் சேர்ந்துதான் குற்றவாளிகள்.    இத்தகைய ஆழமான கதை சமகால குற்ற நிகழ்வான, கிறித்தவ மதத்தின் பரப்பு ஊழியன் என்கிற அடையாளத்தில், தென்கிழக்கு ஆசியாவில்  குழந்தை பாலியல் குற்றம் புரிந்த ரிச்சர்ட் ஹக்கில் பிண்ணனியை மட்டும் பேசவில்லை எனத் தோன்றியது.

 

கதைசொல்லியை காலனிய ஆங்கில, பிரெஞ்சு பேரரசு சக்திகளாகவும், முதலைகள் சீனர்களாகவும், ஈபான் பழங்குடியினர் மலேயர்களாவும், சீமாவை கங்காணிகளாக இருந்த யாழ்பாண தமிழர்கள், மலையாளிகள், மேட்டுக்குடி தமிழர்கள் எனப் பொருத்தினால்  எந்த ஒரு உயிர் பாதுகாப்பும், இன்றி மலேசியாவின் மலைக் காடுகளில்,  உழைப்பின்  செல்கள் அனைத்தையும் உருவப்பட்டு, குரூரமாக சுரண்டப்பட்டு, முகமில்லாமல் மடிந்த பறையர்கள் என ஒருமுகமாகப் பார்க்கபட்ட,  ஆதிகுடி  தமிழக மூதாதையர்கள் என் முன் தோன்றினார்கள். மலேசிய வரலாற்றினை அறிவதும் என் மண்ணின் வராலாற்றை அறிவதும் ஒன்றுதான் என நான் அந்த தருணத்தில் உணர்ந்தறிந்தேன்.

 

நவீனுக்கு என் வாழ்த்துக்கள்.

 

என்றும் அன்புடன்,

உங்கள் வாசகன்,

சிவமணியன்

 

திரு. ஜெயமோகன்  அவர்களுக்கு,

 

 

முதலில்,   சிறுகதைகளை  அறிமுகப்படுத்தி  வாசகர்களையும் பங்கேற்க வைத்ததற்கு  வாசகர்கள் சார்பில் நன்றி.

 

ம. நவீன் அவர்களின் கதைகளை  நான் படிக்க நேர்ந்தது  இதுவே முதல் முறை.  ஆகவே,  அவரின் எழுத்து நடை பரிச்சயமில்லாத ஒரு வாசகனின் கடிதமே இது.    இக்கதையைப் படித்த ஒரு தகுதியை மட்டும் மனதில் கொண்டு  என்  எண்ணங்களைப் பதிவிடுகிறேன்.

 

ஒரு புதிய  களத்தைக்  காண்பிப்பதனால்,  விவரித்த வர்ணனைகளும்,  காட்சி நீட்டிப்புகளும்    ஆசிரியருக்குத்தேவைப்பட்டிருக்கலாம்.   ஒரு வாசகனாக, எனக்கு ஒரு புலம்  பெயர்ந்த  வேற்றிடம் தரவேண்டிய   தாக்கமோ,சோகமோ, பயமோ,  அழுத்தமோ அல்லது  இதைப்போன்ற ஒன்றோ  வெகுவாகக் குறைவதாக  உணர்ந்தேன்.  அதிகாலைப் பனிமூட்டத்தில்  படகுப் பயணம், வரப்போகும்  எதிரான  ஒரு சூழலின் நிகழ்வுகளுக்கு ஆயத்தமான ஒரு குறியீடாக  அமைந்திருந்தும், வாசகனை  அதில் இழுத்துச் செல்வதற்கான   தாக்கம்குறைந்திருப்பதாகவே பட்டது.  விடிவதற்குள்   மீளா தூரத்திற்கு  செலுத்தியிருக்கலாமே.   சேற்றில்  கால்புதையும்போதே,   பழக்கப்பட்ட  தினசரி வாழ்க்கையினின்றும் வழுக்கிச்  செல்லும்  கதைக்களம் உருவாகிவிடுகிறது.    வார்த்தைகளின்  அழுத்தம்  இன்னும்  உணர்வுகளை  ஆழமாகக் கடத்தியிருக்கக்கூடும்.  என்னதான்  இயற்கையை  ஒன்றிய வாழ்க்கையாக  இருந்தாலும், வேறு வகையான,   தினசரி வாழ்க்கையின்பழக்கத்தில்  ஒன்றைக்கூட  காண இயலாத  ஒரு சூழல்,  தாங்கமுடியாத  ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தவேண்டுமல்லவா?

 

 

முதலைக்கும்  மனிதர்களுக்குமான  ஒப்பந்தத்தின்  சாரம் சொல்லும்  இடம் நன்றாக இருந்தது. [கொல்லவில்லை.  தரைக்கு வந்து  தாக்கினால்தானே  அது கொலை. அத்துமீறல்.  தண்ணீருக்குள்  மனிதன்போனால்  அது முதலையின் உணவுதானே.  அது அந்தக்  கணத்தில்  நடந்தது.  அவ்வளவுதான்.”) .வாழ்க்கையே  மனிதனுக்கும்  சந்தர்ப்ப சூழலுக்குமான  ஒப்பந்தம் அல்லது மீறல்தானே.

 

 

எப்படியும்  ஒரு பழங்குடி பெண்ணையும் அவள் சார்ந்த ந்ழ்வுிகளையும்  எதிர்பார்த்தேன்.  இருந்தது. சீமாவைத் தீண்டும்போது, நாகரீக சமூகமோ, பழங்குடியோஎந்த சமூகத்திலும் வாழ்க்கைப் புலத்திலும் பெண் போற்றப்படுவது போன்ற தோற்ற மயக்கத்தில் கையாலாகாத எதிர்க்கமுடியாத சிறுமைக்கு உட்படுத்தப்படுகிறாள் என்ற உண்மை அழுத்தமாகப்பதியப்பட்டிருப்பதாக  உணர்கிறேன். சீமாவின்பார்வையிலிருந்து  சொல்லப்படாமல்  தன்மை ஒருமையில் சொல்லப்பட்டிருந்தாலும்…..  எதிர்ப்பைத்தெரிவிக்காது இருப்பது   மீறலை அனுமதிப்பதன்று.  ‘அவள்  என்னை முற்றுமாக தவிர்த்திருந்தாள்’ என்ற  அவளின்  மனதின் வலியைச்  சொல்வதாகவே  தோன்றியது.  தன்னை  உபயோகப்பொருளாக கருதியதன் வலியாகவே அவளின் தவிர்த்தலைக் கொள்ளமுடிகிறது. அந்த   ‘பொருளாகப்’ பாவிக்கும் உணர்வு ஆரம்பம் முதல் எந்த நாகரீகத்தின் உச்சியெனக் கருதும் சமூகத்திற்கும் மாறாத இயல்பை உடையது என்பதைக் காட்டுவதாக அமைந்திருந்தது நிதர்சனம்.

 

 

பயந்து  நெற்றியில்   துணியைக்கட்டிக்கொண்ட வரிகளில்  சட்டென்று  சிரித்துவிட்டேன்.அடுத்தடுத்து முரண்களின் அடுக்குகள்… கடைசியில் எஞ்சுவது தன்னிரக்கமும்,  குற்ற உணர்வுமே ..முதலை கடிக்காமல்,  குறி வளராமல். அப்பாவும்  பிழைத்து  நடந்தது அனைத்தையும்  ஒரு கனவுப் படிமமாக மட்டுமே  கொள்ளத்தக்க நீட்சி.   கனவில் இன்னும் ஆழமாக   நிலைத்திருந்திருக்கலாம்.

 

 

இக்கதையின் நிகழ்வுகளின் ப்ரயாணங்கள் சுவாரஸ்யமானவை.  களமும் அப்படியே. வாசகனுக்கு அளிக்கும்உணர்வுசார்ந்த பரிமாற்றம் இன்னும் சற்று கனமாக இருந்திருக்கலாம்.

 

நவீனுக்கு நன்றியும் வாழ்த்துகளும்….

நா. சந்திரசேகரன்

 

சிறுகதைவிவாதம், நவீனின் ‘போயாக்’ -2

சிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்,கடிதங்கள் 1

முந்தைய கட்டுரைசிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -5
அடுத்த கட்டுரைசிறுகதை 7 , எஞ்சும் சொற்கள் -சுரேஷ் பிரதீப்