வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–28

பகுதி நான்கு : ஒளிர்பரல் – 3

blஅவைநிகழ்வுகள் விரைவுகொண்டு ஒரு முனைநோக்கி சென்றுகொண்டிருந்தன. அனைவரும் வாயில்களைப்பற்றிய உணர்வுடனிருந்தார்கள். அசலை “அவர் அரசருக்கு முன்னாலேயே அவைபுகவேண்டுமே?” என்றாள். தாரை “அங்கிருந்து அவர் கிளம்பியதுமே செய்தி தெரிந்துவிட்டது. நம் எல்லைக்குள் அவரும் படைக்குழுவும் நுழைந்ததுமே பேரரசர் அனுப்பிய எதிரேற்புக் குழு அவர்களைக் கண்டு வணங்கி முறைமையும் வரிசையும் செய்ய முற்பட்டனர். தான் இப்போது அரசர் அல்ல என அவர் அவற்றை மறுத்துவிட்டார். வழியில் அவர்கள் தங்குவதற்கு காவலரண்களிலுள்ள அரண்மனைகளை ஒருங்குசெய்திருந்தனர். அவர்கள் வழியில் மரத்தடிகளிலும் பொதுச்சாவடிகளிலும் மட்டுமே தங்கினர்” என்றாள்.

அசலை “ஆம், அவர் அரசுதுறந்தார் என்றனர்” என்றாள். தாரை “அவர் எப்போதும் அவ்வரசை சுமந்ததில்லை” என்றாள். “தனியாகவா வந்தார்?” என்று அசலை கேட்டாள். “ஆம், என்றே சொல்லவேண்டும். அவருடைய தேரில் பிறர் எவருமில்லை. பின்னால் புரவிகளில் சாத்யகியும் எட்டு யாதவக் காவலர்களும் வந்தனர்.” அசலை “ஆம், அவருக்கெதற்கு காவல்?” என்றாள். “இங்கு புஷ்பகோஷ்டத்திலுள்ள அரசர்களுக்குரிய அரண்மனையில் தங்கமாட்டோம் என்றார். ஆகவே அப்பால் அயல்நாட்டுத் தூதர்களுக்குரிய மாளிகையே அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.”

விதுரர் அவைக்குள் நுழைந்த யுயுத்ஸுவிடம் ஓடிச்சென்று மெல்லிய குரலில் ஆணைகளை இட்டார். அவரை நோக்கி ஓடிவந்த கனகரிடம் மேலும் சில ஆணைகளை பிறப்பித்தார். ஒவ்வொருவரும் சிற்றமைச்சர்களை நோக்கிச்சென்று ஆணைகளை ஏவினார்கள். கைவீச்சுகள் நாவென சொல்லெடுப்பதை தாரை கண்டாள். விழியறியும் சொல் என எண்ணிக்கொண்டாள். யுயுத்ஸு மெல்லிய அடிகளுடன் ஓடிச்சென்று திருதராஷ்டிரரிடம் ஏதோ சொல்ல அவர் தலையைச் சரித்து முகம் சுளித்து அவன் சொற்களை கேட்டார்.

அப்போது அவையில் ஓசையெழுந்தது. தாரை விழிதிருப்பி அவையை நோக்கினாள். ஓசை வலுத்தது. “என்ன ஓசை?” என்று அவள் அசலையிடம் கேட்டாள். அசலை மறுமொழி சொல்லவில்லை. அவள் விழிகள் நிலைத்திருந்த இடத்தை தாரை நோக்கினாள். அங்கே இளைய யாதவரை கண்டாள். நெஞ்சில் கைவைத்து “ஆ” என மூச்சொலியால் ஏங்கினாள்.

இளைய யாதவர் எவரும் எண்ணியிராத வகையில் இயல்பாக கிழக்குச் சிறுவாயிலினூடாக உள்ளே வந்தார். கைகூப்பியபடி உள்ளே வந்து ஓரிரு நிரைகளைக் கடந்த பின்னரே அவர் வருகையை அவை அறிந்தது. அனைத்து தலைகளும் திரும்பி அவரை பார்த்தன. சிலர் அறியாது எழுந்தனர். கைகூப்பியபடி அவரை நோக்கிச் சென்ற விதுரர் தலைவணங்கினார். அவர் விதுரரிடம் முகம் சிரிப்பில் மலர மென்சொல்லுரைப்பது தெரிந்தது. கைவணங்கி தலைதாழ்த்தியபடி சென்று பீஷ்மரையும் துரோணரையும் கிருபரையும் வணங்கிவிட்டு திருதராஷ்டிரரின் அருகே நின்றார். அவர் இளைய யாதவர் அணுகியதுமே தலைகுனித்திருந்தார். தலைநிமிராமலேயே வலக்கை தூக்கி வாழ்த்தினார்.

முன்நிரையில் அரசர்களுக்குரிய இருக்கையில் அமரும்படி இளைய யாதவரிடம் விதுரர் கோருவது தெரிந்தது. இளைய யாதவர் புன்னகையுடன் அதை மறுத்து தனக்கு பொதுஇருக்கைகளின் நிரையிலேயே தூதர்களுக்குரிய இடம் அளிக்கும்படி கோர விதுரர் தயங்கி மேலும் ஒரு சொல்லெடுக்க அவர் தோளில் தொட்டு புன்னகையுடன் தலையசைத்து இளைய யாதவர் வலியுறுத்தினார். அவரை அழைத்துச் சென்று வணிகர்களுக்கும் குடித்தலைவர்களுக்கும் இடையே இடப்பட்டிருந்த அரசத் தூதர்களுக்கான இருக்கைகளில் ஒன்றில் அமரவைத்தார். யுயுத்ஸு அவரிடம் சென்று தலைவணங்கி முகமனுரைத்தான். அவர் அவனிடம் ஏதோ நகையாட்டுரைக்க அவன் நாணிச் சிரித்தான்.

இளைய யாதவர் அரசு பீடத்தில் அமராது எளிய தூதர்களுக்கான பீடத்தில் அமர்ந்த செய்தி அவை முழுக்க மெல்ல ஓர் அலைபோல பரவிச்செல்வதை கண்களால் பார்க்க முடிந்தது. அவைக்குள் நுழைந்த கனகர் யுயுத்ஸுவை நோக்கி கைகாட்டினார். யுயுத்ஸு நிமித்திகரிடம் ஆணையிட முதுநிமித்திகர் அரச மேடையிலெழுந்து தன் வெள்ளிக்கோலை மும்முறை சுழற்றினார். அவை ஓசையடங்கி அமைதி கொண்டது. யுயுத்ஸுவும் கனகரும் வெளியே சிற்றடி வைத்து ஓடினர். வாயிலில் மேலாடையை சீரமைத்தபடி விதுரர் நின்றார்.

நிமித்திகர் உரத்த மணிக்குரலில் “அவை வெல்க! விண்சூழ் மூதாதையர் புகழ் கொள்க! வெளியாளும் தெய்வங்கள் நிறைவு கொள்க! இத்தருணம் இதிலமைந்த அனைவரின் உள்ளங்களாலும் முழுமை கொள்க! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார். வெள்ளிக்கோலைச் சுழற்றி “அவையோர் அறிக! யயாதியின் குடித்தோன்றல், ஹஸ்தியின் நகர்த்தலைவர், குருவின் குருதிமரபர், பிரதீபரின் சந்தனுவின் விசித்திரவீரியரின் திருதராஷ்டிரரின் மைந்தர், நால்வகைக் குடிகளின் அரசர் துரியோதனர் அவைக்கு எழுந்தருள்கிறார்!” என்று அறிவித்தார். அவையிலமர்ந்த தலைவர்கள் தங்கள் குடிக்குறி கொண்ட கோல்களையும் கைகளையும் தூக்கி “மாமன்னர் துரியோதனர் வாழ்க! குருகுல மூத்தோன் வாழ்க! அஸ்தினபுரி வெல்க!” என வாழ்த்தொலி எழுப்பினர்.

வெளியே கொம்போசையும் மங்கல இசை முழக்கமும் எழுந்தது. அஸ்தினபுரியின் அமுதகலசக் கொடியுடன் முதற்கொடிவீரன் முன்னால் வந்து அவைக்கு முன்னால் அதை நாட்டி வணங்கினான். நிமித்திகன் உள்ளே வந்து மும்முறை கொம்பூதி அஸ்தினபுரியின் அரசர் துரியோதனர் அவை நுழைகை என்று அறிவித்தான். வாழ்த்தும் குரவையொலிகளும் முழங்கிச் சூழ மங்கலத் தாலமேந்தி சேடியர் நுழைந்து இரு பிரிவுகளாகப் பிரிந்து அகன்றனர். இசைச்சூதர் முழங்கியபடி நுழைந்து அவையமைந்தனர்.

கைகூப்பியபடி அவைநுழைந்த துரியோதனனை அவையின் வலது பக்கத்திலிருந்து பொற்குடங்களில் நீருடன் சென்ற வைதிகர் வேதம் ஓதி வாழ்த்தி நீர்தெளித்து எதிர்கொண்டார்கள். அவர்கள் அரச மேடையேறி கங்கை நீர் தெளித்து தூய்மை செய்த அரியணையில் விதுரர் அழைத்துச்செல்ல துரியோதனன் சென்று அமர்ந்தான். இடப்பக்கச் சிறுவாயிலினூடக சுடர்த்தாலமேந்திய மங்கலச்சேடியர் உள்ளே வர அவர்களுக்குப் பின் பானுமதி கைகூப்பியபடி அரசமேடையை அடைந்து துரியோதனனுக்கருகே அரியணையில் அமர்ந்தாள். அவை வாழ்த்து கூவ, சேடியர் குரவையிட மங்கல இசை அனைத்தையும் ஒன்றெனத் திரட்டி அக்கூடத்தை நிறைத்தது.

அஸ்தினபுரியின் தொல்குடிமூத்தவர்கள் எழுவர் பொற்தாலத்தில் மணிமுடியை கொண்டுவந்து அளிக்க வைதிகர் அதை எடுத்து துரியோதனனுக்கு சூட்டினர். அவையமர்ந்தோர் அரிசியும் மலரும் தூவி வாழ்த்தினர். குடிமூத்தோர் கொண்டுவந்த செங்கோலைப் பெற்று துரியோதனன் அணிக்கோலம் கொண்டமர்ந்தான். வேதமோதி வாழ்த்தி நின்ற வைதிகர்களுக்கு இரு ஏவலர் கொண்டுவந்த தாலத்திலிருந்து பொன்நாணயங்களை இரு கைகளாலும் அள்ளி பணிந்து கொடையளித்தான். அதன்பின்னர் ஐந்து குடிகளிலிருந்தும் அஸ்தினபுரியின் மக்கள் மூவர் மூவராக மேடையேறி அவனிடமிருந்து கொடைகளை பெற்றுக்கொண்டு வாழ்த்தி இறங்கினர். ஏழு புலவர்கள் துரியோதனனைப்பற்றி அவர்கள் இயற்றிய பொதுச்செயல்களைப் பாடி பரிசில் பெற்றனர்.

கனகர் பொற்தாலத்தில் கொண்டுவந்த மூன்று அரசாணை ஓலைகளைத் தொட்டு அவன் ஏற்க அவர் அவற்றை மேடையில் படித்து அறிவித்தார். அஸ்தினபுரியின் வடகிழக்கு எல்லையில் அமைந்த மூவிழியன் ஆலயத்திற்கு நெய்விளக்கேற்றுவதற்கான நிலக்கொடையும் ஆயர்குடியினருக்கு புதிய புல்வெளிக்காவல் அமைப்பொன்றை உருவாக்குவதற்கான ஒப்புகையும் ஷத்ரியக்குடிகளுக்கு கங்கைக்கரையில் புதிய கொற்றவை ஆலயம் அமைப்பதற்கான ஏவலும் மேடையில் அறிவிக்கப்பட்டன. அவற்றை கோல் தூக்கி “நிலம் பொலிக!! குடி வாழ்க! தேவர்கள் பெருகுக!” என வாழ்த்தி அவை ஏற்றுக்கொண்டது.

தாரை அவை நிகழ்வுகளை மெல்லிய பதற்றத்துடன் நோக்கிக்கொண்டிருந்தாள். இளமையிலிருந்தே அவள் மீண்டும் மீண்டும் பார்த்தவை அவை. மச்சநாட்டிலிருந்து அஸ்தினபுரிக்கு வந்தபோது அங்கிருந்த ஒவ்வொன்றும் அவளுக்கு திகைப்பும் அச்சமும் அளித்தன. நகரின் மாபெரும் கோட்டை அவள் மூதன்னை சொன்ன கதைகளில் வரும் பாதாளத்து நாகமாகிய கத்ருவைப்போல் தோன்றியது. அக்கோட்டைக்குள் நுழையும்போது நாகத்தால் விழுங்கப்படுபவளாகவே உணர்ந்தாள். அஞ்சி மெய்ப்புகொண்டு அருகிருந்த முதிய சேடியின் உடலுடன் ஒட்டி கண்களை மூடி விம்மி அழுதாள்.

அவளை அணைத்து சேடி “அஞ்சற்க அரசி, இப்பெருநகரில் அரசியென தாங்கள் நுழைவது மச்சர் குலத்திற்கு பெருமை. சதுப்புகளில் மீன்வேட்டையாடி முதலையூன் உண்டு வாழும் நாம் இதோ அஸ்தினபுரியின் உறவினர் என அறிவிக்கப்பட்டிருக்கிறோம். தங்கள் வயிற்றில் பிறக்கும் மைந்தர் ஷத்ரியக் குடியினர் என்று பாரதவர்ஷத்தால் ஏற்கப்படுவார்கள். தாங்கள் நம் குடியின் முகப்புக்கொடி. நாம் வெல்லவிருக்கும் பெருமீனைப் பற்றுவதற்காக வீசிய தூண்டில். கொழுமுனையே தாங்கள். தங்கள் உறுதியாலேயே நம் குலம் எண்ணிய அனைத்தையும் எய்த வேண்டும்” என்றாள்.

அஸ்தினபுரியின் விரிவான சடங்குகளும் முறைமைகளும் அணிச்சொற்களும் அவளுக்கு முற்றிலும் புரியாத நாடகம்போல் இருந்தன. ஒவ்வொரு முறையும் திகைத்துச் சொல்லிழந்து நின்றாள். பின்னர் ஓரக்கண்னால் நோக்கி பிறர் செய்வதைப்போலவே செய்வதற்கு கற்றுக்கொண்டாள். உடலிலும் நாவிலும் பழக்கமென அவை அமைந்த பின்னர் எண்ணத்திலிருந்தே விலகிச் சென்றன. வெற்றுச்சடங்குகளும், பொருளற்ற சொற்களும் மீள மீள நிகழும் நீண்ட பகல்கள். களைத்து உறங்கிக் கடந்துபோகும் குறுகிய இரவுகள். நாட்களும் மாதங்களும் ஆண்டுகளும் கடந்துசென்றன. அவள் தனக்குரிய சிறிய உலகொன்றை தன் அறைக்குள் உருவாக்கிக்கொண்டாள். சோலைச்சுனையின் மீன்களே அவளை மச்சநாட்டுக்கு கொண்டுசெல்லப் போதுமானவையாக ஆயின.

பிறகெப்போதோ அனைத்துச் சடங்குகளும் பொருள் கொண்டவையாக தெரியத்தொடங்கின. அது எப்போது தொடங்கியது என்று அவளால் உணர முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அன்னமூட்டும் வற்றாப்பெருநதியின் நீரால் தூய்மைப்படுத்தப்பட்ட அரியணையில் அரசன் அமர்வதும், குடித்தலைவர்கள் எடுத்து அளித்த பின்னரே மணிமுடி சூடுவதும், கோல்கொண்டு அவை வாழ்த்திய பின்னரே அரசன் என்று ஆகி அவன் அவர்களுக்கு ஆணைகள் இடுவதும், குலக்குறி பொறிக்கப்பட்ட செங்கோலும் இலைகளைக் கோத்து பின்னி அமைக்கப்பட்டவை எனத் தோன்றிய தொன்மையான அஸ்தினபுரியின் மணிமுடியும் அங்கு முன்பெப்போதோ நிகழ்ந்தவற்றின் மீள்நிகழ்வுகள் என்று தோன்றியது.

அங்கு நிகழும் ஒவ்வொன்றும் மூதாதையரால் பேருணர்வுடன் குருதியும் கண்ணீரும் நனைந்து நிகழ்த்தப்பட்டவை. எவரும் எதையும் புதிதாக செய்ய இயலாது. மூதாதையரின் வாழ்வை மீள மீள நடிப்பதன்றி அரசகுடிகளிடம் ஆற்றுவதற்கு பிறிதொன்றுமில்லை. அதை உணர்ந்த உடனே பிற அனைத்தையும் புரிந்துகொண்டோமென்று அவளுக்குத் தோன்றியது. மச்சர் நாட்டு ஒன்பது சிறுகுடிகளின் தலைவராகிய தன் தந்தையும் பாரதவர்ஷத்தின் முதன்மை அரசின் முடிதாங்கி அமர்ந்திருக்கும் துரியோதனனும் வேறுபட்டவர்கள் அல்ல. அரசென்றும் கோலென்றும் நெறி என்றும் அமைவதனைத்தும் ஒன்றே.

blஅரசுச் சடங்குகள் ஒவ்வொன்றாக நிகழ்ந்து முடிந்தன. விதுரர் அவைமுகப்பில் தோன்றி கையுயர்த்தி “அவை சிறப்படைக! முடிமன்னர் வெல்க!” என்றார். “அஸ்தினபுரிக்கு இன்று ஒரு நன்னாள். அவை மங்கலம் நிறைந்துள்ளது. அஸ்தினபுரியின் அரசர் தன் குடிமூத்தாரின் நெறிநின்று கொடையும் அறமும் ஆற்றி நிறைவுகொண்டமர்ந்திருக்கிறார். இந்தப் பெருநாளில் நம் பேரரசரின் இளையோர் பாண்டுவின் மைந்தர்கள் தங்கள் தூதரென யாதவகுலத்துப் பெருவீரரும் சாந்தீபனி மெய்மரபின் இன்றைய முதலாசிரியருமான இளைய யாதவரை இங்கு எழுந்தருளி தங்கள் தூதராக சொல்வைக்கும்படி அனுப்பியிருக்கிறார்கள். அவர் அளிக்கும் தூதை இந்த அவைநின்று கேட்க நாம் நல்லூழ் கொண்டுள்ளோம். அவ்வாறே ஆகுக!” என்றார்.

இளைய யாதவர் கைகூப்பியபடி எழுந்தபோது அவை முற்றமைதி கொண்டிருந்தது. “அஸ்தினபுரியின் பிதாமகரையும், ஆசிரியர்களையும், அவையமர்ந்த பேரரசரையும் அரியணை ஏறிய அரசரையும் ஆன்றோர் நிறைந்த தொல்லவையையும் வணங்குகிறேன். மதுவனத்து சூரசேனரின் பெயர்மைந்தனும் யாதவக் குடியினனுமாகிய நான் அஸ்தினபுரியின் பாண்டுவின் மைந்தர் யுதிஷ்டிரரின் அவைத்தூதனாக இங்கு வந்து அவருடைய சொற்களை முன்வைக்க பணிக்கப்பட்டுள்ளேன். என் சொற்கள் கனிந்த நன்னிலத்தில் விழுந்த விதைகள் என்றாகுக! மலரும் கனியும் கொண்டு நூறு மேனி பொலிக! இத்தருணத்தின் தெய்வங்கள் தங்கள் முழு அருளையும் சொரிக! நலம் சூழ்க!” என்று வாழ்த்தினார்.

தாரை அத்தருணத்தின் எடை தாளாமல் பெருமூச்சுவிட்டாள். காலம் நின்றதன் எடை அது. அது பனிமலைகள்போல குளிர்ந்தது. இளைய யாதவர் “அவையீரே, தங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். அஸ்தினபுரியின் பேரரசர் திருதராஷ்டிரரின் தூதுச் செய்தியுடன் அவருடைய சொல்லணுக்கராகிய சஞ்சயன் சில நாட்களுக்கு முன் உபப்பிலாவ்யத்தை வந்தடைந்தார். அங்கு குடிகளனைவரும் அமர்ந்த பேரவையில் அரசரின் தனிச் செய்தியை அவர் சொல்லில் தான் உரைத்தார்” என்றார். “அரசரின் சொற்கள் இவை. எந்நிலையிலும் எதன் பொருட்டும் தன் மைந்தரை பாண்டுவின் மைந்தர்கள் கொல்லலாகாது. அதற்கு வழியமைக்குமென்பதனால் அவர்கள் படையெழுச்சியை மறுசொல்லின்றி கைவிடவேண்டும்.”

“ஆன்றோரே, அஸ்தினபுரியின் அரசர் என்றல்ல, மைந்தரைப் பெற்ற தந்தையென்று நின்று அச்சொல்லை பேரரசர் முன்வைத்தார். பாண்டுவின் மைந்தரின் முதற்றாதையென நின்று அவர் அக்கோரிக்கையை ஆணையென்றும் மன்றாட்டென்றும் முன்வைத்திருந்தார். அவையிலெழுந்து அதை சஞ்சயன் உரைத்தபோது பாண்டவ முதல்வராகிய யுதிஷ்டிரர் விழிநீர்மல்கி தந்தையின் ஆணை தலைமேற்கொள்ளப்பட்டது, மறுசொல்லோ மறுஎண்ணமோ எனக்கில்லை, எந்நிலையிலும் பாண்டவர்கள் கௌரவர்களுக்கெதிராக படைமுகம் கொள்ளமாட்டார்கள் என்றார். பாண்டவர் தரப்பிலிருந்து படையெழுச்சி நிகழாதென்றும் எப்படைக்கலத்தாலும் எங்கும் பாண்டவர்கள் கையால் கௌரவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என்றும் ஆணையுரைத்தார். சான்றோரே, அவ்வுறுதியை இந்த அவையில் மீண்டும் உரைக்கவே நான் வந்துள்ளேன்.”

இளைய யாதவர் கைகூப்பியபோது அவையெங்கும் பரவிய மெல்லிய முழக்கத்தை தாரை கேட்டாள். அது வாய்களோ மூக்குகளோ எழுப்பியதல்ல, உள்ளம் நேரடியாக ஒலித்தது என்று தோன்றியது. திருதராஷ்டிரர் கைகூப்புவதுபோல் விரல்களைக் கோட்டி அதன்மேல் தன் முகத்தை அமைத்து தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவருடைய பெரிய தோள்களில் தசைகள் நெளிந்துகொண்டிருந்தன. பீஷ்மர் எச்சொல்லையும் கேளாதவர்போல் வேறெங்கோ விழிநட்டு அமர்ந்திருக்க துரோணர் குனிந்து கிருபரிடம் எதையோ சொன்னார். கிருபர் தலையசைத்தார்.

மேலும் எதையோ எதிர்பார்ப்பவன்போல இளைய யாதவரையே நோக்கிக்கொண்டிருந்தான் துரியோதனன். அவனருகே பானுமதி வெண்சுண்ணத்தாலான பாவை என வெறும்முகம் கொண்டு அமர்ந்திருந்தாள். அவன் இளையோர் மலைத்த விழிகளுடன் அவைநிறைத்திருந்தனர். சகுனி விழிகளைத் தாழ்த்தி தாடியை நீவிக்கொண்டிருக்க கணிகர் தான் அமர்ந்திருந்த சேக்கையிலிருந்த மரவுரியின் ஒரு நூலை மெல்ல பிரித்து எடுத்துக்கொண்டிருந்தார். தாரை தன் சூழலை உணர்ந்து அரசியரை நோக்கினாள். காந்தாரியின் நீலக் கண்பட்டை நனைந்து கன்னங்களில் விழிநீர் வழிந்தது. அசலை உதடுகளை உள்மடித்திருந்தாள். ஆனால் பிற அரசியர் அனைவரும் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் விழியொழிந்த தோற்றம் கொண்டிருந்தனர்.

“இந்த அவையில் பாண்டவரின் தரப்பில் நின்று நான் அறிவிப்பது ஒன்றே, போர் அகன்றுவிட்டது” என்று இளைய யாதவர் சொன்னார். “பாண்டவர்கள் இனி அஸ்தினபுரியிடம் கோருவதென ஏதுமில்லை. மண்ணோ, முடியோ, பிற உரிமைகளோ அவர்களுக்குத் தேவையில்லை. தங்கள் ஆற்றலால் தங்கள் ஊழின் வழியில் தொடர்வதென அவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த அவையில் பிதாமகரையும் ஆசிரியர்களையும் பேரரசரையும் பேரரசியையும் தன் இளையோனாகிய அஸ்தினபுரியின் அரசரையும் உடன்குருதியினர் அனைவரையும் வணங்கி, வாழ்த்துரைத்து யுதிஷ்டிரர் அனைத்து நலமும் சூழ்க என்கிறார். அவர் சொல் இந்த அவையில் திகழ்க!” என்றார். அவை மெல்ல சொல்லடங்கியது. இளைய யாதவர் மேலும் உரைக்கப்போகும் ஒன்றுக்காக செவிகூர்ந்தது.

“அவையோரே, இதனால் விளைவதென்ன என்று நன்கறிந்தே யுதிஷ்டிரர் இதை இயற்றியிருக்கிறார் என்றறிக! தந்தையென நின்று திருதராஷ்டிரர் சொன்னவற்றுக்கு தலைகொடுத்து இம்முடிவை அவர் எடுத்திருக்கிறார். ஆனால் செயல்களே வரலாறு, ஏன்களும் எவ்வாறுகளும் அல்ல. இன்னும் சிலநாட்களில் அவர் தன் முடியையும் மண்ணையும் துறந்து அகன்றது மட்டுமே சொல்லில் நின்றிருக்கும். அது அச்சமுடைமை என்றும் ஆண்மையின்மை என்றும்தான் விளக்கப்படும்” என இளைய யாதவர் சொன்னார்.

“விட்டுச்செல்வது எளிதல்ல. அவருடன் இணைந்து படைமுகம் வரை வந்த அரசர்களை கைவிடுவதுதான் அது. அவர்கள் இப்பக்கம் உங்களுடன் இணைந்த அரசர்களால் இனி வேட்டையாடப்படுவார்கள், கொன்று உண்ணப்படுவார்கள். அறிக, யுதிஷ்டிரர் அவர்களுக்குச் செய்தது பெரும் அறமின்மை. தந்தைசொல்லின் பலிபீடத்தில் தோழர்களை குருதியளிக்கிறார். உளமுவந்து அவர் அதை செய்ய முடியாது. அவர்கள் ஒவ்வொருவரும் அவர் விழிமுன் எழுந்து மெய்யுருக சொல்நெகிழ நெறியா என்று கேட்பார்கள். அவர்களின் நோக்குக்கு முன் அனல்முன் என்பிலி என சுருண்டுதுடிக்காமல் அவர் இனி எஞ்சிய வாழ்நாளை கடக்க முடியாது.”

இளைய யாதவரின் சொற்கள் அவையெங்கும் உணர்வலை ஒன்றை பரவவிடுவதை தாரை கண்டாள். கைகளை மார்பில் கட்டி பார்வையை மறுபக்கமிருந்த தூணொன்றில் நிலைக்கவிட்டு முற்றிலும் உணர்வற்ற கற்சிலை முகத்துடன் துரியோதனன் அமர்ந்திருந்தான். “அவருக்கிருக்கும் ஆறுதல் ஒன்றே, தோழரைக் கைவிட்டு அவர் எதையும் ஈட்டவில்லை என்பது. ஐவரும் தங்கள் அரசியரையும் மைந்தரையும் அன்னையையும் அழைத்துக்கொண்டு அறியா நிலம் நோக்கி செல்லவேண்டும். மலைவேடர்களாகவோ மச்சர்களாகவோ வாழவேண்டும். இனி அரண்மனையோ படைத்துணையோ குடியோ கோட்டையோ இல்லை. பாண்டுவின் பெயரன்றி அவர்கள் கொண்டுசெல்வதேதும் இல்லை. குடியிலிகளாக அவர்கள் வாழ்ந்து மடியவேண்டும்.”

“மேலும் பல தலைமுறைகளுக்குப் பின் அவர்களுக்குரிய குடி உருவாகிவரக்கூடும். அதுவரை பாண்டுவின் பெயரை மலைவேடர்மைந்தர்களே சூடியிருப்பர். இங்கு கொடியும் கோட்டையுமாக சொல்கொண்டு தார்த்தராஷ்டிரர்கள் அமர்ந்திருக்கையில் பாண்டவர்கள் அங்கே அவ்வண்ணம் ஆகவேண்டுமென்பதே தெய்வங்கள் வகுக்க முதற்றாதை சொல்லில் எழுந்தது என்றால் அதுவே நிகழ்க!” இளைய யாதவர் தலைவணங்கி அமர்ந்ததும் அவையில் சொல் என ஏதும் எழவில்லை. ஆனால் தொண்டை தீட்டும் ஒலியும் மூச்சொலிகளும் உடலசைவில் அணிகள் எழுப்பும் ஓசைகளும் கேட்டுக்கொண்டிருந்தன.

அனைத்து விழிகளும் துரியோதனனையே எதிர்பார்த்திருப்பதை தாரை கண்டாள். அசலை மெல்ல அசைந்து நீள்மூச்செறிந்து தலைசரித்து தாரையின் காதில் “அவர் ஒரு சொல்லும் உரைக்கப்போவதில்லை” என்று சொன்னாள். தாரை அந்த அமைதியின் உச்சநிலையில் எரிபட்ட கந்தகக்குவை என பெருங்குரலுடன் துரியோதனன் எழக்கூடும் என எதிர்பார்த்தாள். இரு கைகளாலும் தொடைகளையும் தோள்களையும் தட்டிக்கொண்டு அரசனென்றும் தொல்குடியினனென்றும் தான் சூடிய அடையாளங்கள் அனைத்தையும் வீசி வெறும் மல்லனாக அவன் எழும் தருணங்கள் பலவற்றை அவள் முன்னரே கண்டிருந்தாள்.

அவள் துரியோதனனையே நோக்கிக்கொண்டிருந்தாள். அவன் முற்றிலும் அசைவற்றிருந்தான், வேறு ஒரு காலத்திற்கு சென்றுவிட்டதுபோல. அவன் நீண்ட மூக்கு, கருங்கல்லில் கலிங்கச் சிற்பியால் செதுக்கப்பட்டவை போன்ற வாயும் தாடையும், நேர்கொண்ட உடல், பெருந்தோள்கள் என அவள் நோக்கு அலைந்தது. அவரை எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கிறோம் என அவள் உணர்ந்தாள். விழிகளை திருப்பிக்கொண்டு பெருமூச்சுவிட்டாள். இக்கணம் அவர் எழுந்து அரசுரிமையில் பாதியை தன் உடன்குருதியினருக்கு அளித்து அறத்தாறு நிற்பதாக அறிவித்தால் மகிழ்வோமா? அவளுக்கு அவ்வினாவே பொருளற்றதாகத் தோன்றியது. ஆனால் அவ்வினா ஏன் எழுந்தது?

அதைவிட தன் உள்ளத்தில் அதற்குரிய விடை என என்ன எழுகிறதென்று நோக்கலாம். அவள் சலிப்புடன் தலையசைத்தாள். எதிரில் அமர்ந்திருக்கும் கௌரவர்களை ஒவ்வொருவராக நோக்கினாள். துச்சலன், துர்மதன், சலன், சகன், துர்மர்ஷணன், துர்முகன், சத்வன், சுலோசனன், சித்ரன், சாருசித்ரன், ஊர்ணநாபன், நந்தன், உபநந்தன், சித்ரபாணன், சுபாகு… அனைவரும் அவரே என்று முதல்நோக்கிற்கு தோன்றினர். இயல்பாக விழிதூக்கியபோது அவையமர்ந்த அனைவருமே அவர் முகம்கொண்டிருப்பதாகத் தோன்றி திகைப்பு எழுந்தது.

ஆனால் அவர்கள் அவர் அல்ல. விழிநட்டு நோக்க நோக்க ஒவ்வொருவரும் அவரிடமிருந்து கூரிய வேறுபாடு கொண்டனர். அமர்வின் கோணலால், முகத்தின் பிழையால், விழிகளின் மங்கலால், தோள்களின் வடிவால், நெஞ்சின் விரிவால், விழிதொட்டறிய முடியாத ஏதேதோ கூறுகளால் அவர்கள் அவர் அல்லாதாயினர். அவர்களினூடாகச் சென்று அவர் தன் முழுமையை அடைந்துவிட்டிருக்கிறார் என்பதுபோல. ஒவ்வொருவரும் அவரே, ஆனால் ஒவ்வொருவரையும் ஒவ்வொருவகையில் உதறிக் கடந்துசென்றே அவர் அவ்வாறு ஆகியிருக்கிறார்.

மீண்டும் அவள் துரியோதனனை நோக்கினாள். சிம்மங்களும் வேங்கைகளும் கொள்ளும் முற்றமைதி. தனக்கு அப்பால் உலகே இல்லை என்பதுபோல் முற்றிலும் தன்னுடலுக்குள்ளேயே அமைதல். முற்ற நிறைந்து ஒரு துளிசொட்டா கலம்போல. குழல்கற்றைகள், நேர்நெற்றி, கூர்மீசை, அழுந்திய உதடுகள், குமிழ்ந்த முகவாய், மல்லர்களுக்குரிய காளைக்கழுத்து. முற்றிலும் பிழையின்மை கூடிய பேருடல். பிழைக்காகவே அவரை நோக்கும் விழிகளெல்லாம் தவித்துத் தேடுகின்றன. பிழையினூடாக அவரை மானுடனாக்கிக்கொள்ள விழைகின்றன. நிறைவு கண்டு திகைத்துச் சோர்ந்து விலகிக்கொள்கின்றன. அஞ்சி அகல்கின்றன. பின்னர் வெறுக்கத் தொடங்குகின்றன.

அங்கே அமர்ந்திருப்பவர்களில் எவரேனும் துரியோதனனை நோக்குகிறார்களா? அவள் விழிதிருப்பி நோக்கியபோது அனைவருமே அவரையும் இளைய யாதவரையும் மட்டுமே நோக்கிக்கொண்டிருப்பதை கண்டாள். விழிகள் துலாமுள் என அலைபாய்ந்துகொண்டிருந்தன. அவள் இளைய யாதவரை கண்டாள். சற்றே சரிந்த துலாத்தட்டு அளிக்கும் பொறுமையின்மையுடன் அன்றி அவரை பார்க்க முடிவதில்லை. படையாழியும் வேய்குழலும் நிகர்கொள்ளலாகுமா? குழல்சூடிய அப்பீலி ஒரு துலாமுள்.

அவள் திரும்பி காந்தாரியை பார்த்தாள். எவரும் எதுவும் சொல்லாமல் பொழுது கடந்தது. ஒரு கணத்தில் அவ்வெண்ணம் அவளுக்கு எழுந்தது. எவர் என்ன சொல்லமுடியும்? மேலும் சற்று முன்னகர்ந்தபோது அவள் உள்ளம் திகைத்து அசைவிழந்தது. என்ன சொல்லமுடியும்? ஆம், யுதிஷ்டிரரின் துறப்பை ஏற்கிறோம் என்றா? போர் நின்றுவிட்டதென கொண்டாடுவதா?

அப்போது செய்வதற்கு எஞ்சியது ஒன்றே. அவையெழுந்து ஆம், நிகராக நானும் முடி துறக்கிறேன் என்று சொல்லுதல். தந்தை அளிக்க பெற்றுக்கொள்கிறேன் என்று அறிவித்தல். அல்லது அனைத்தையும் கைவிட்டு மூத்தவரே என யுதிஷ்டிரரை அழைத்து ஏற்றுக்கொள்ளுதல். ஒருகணத்தில் அத்தனை முடிச்சுகளும் முற்றவிழலாம், அல்லது முற்றிலும் அசைவற்று முடிவிலி வரை தொடரலாம். பிறிதொன்றில்லை. அவளால் அமர்ந்திருக்க இயலவில்லை. எழுந்து ஓடிவிடவேண்டும் போலிருந்தது. அசலையின் கையை தொட்டாள். ஆனால் சொல்லெழவில்லை. அசலை அத்தொடுகையால் மெல்ல விதிர்த்தாள்.

அவள் இளைய யாதவரின் முகத்தை நோக்கினாள். அவர் கைகளை மார்பில் கட்டியபடி அங்கிலாத எதையோ நோக்கி புன்னகைப்பவர்போல அமர்ந்திருந்தார். அவள் முந்தையநாள் அறிந்த தந்தை வடிவம் அல்ல அது எனத் தோன்றியது. திகைப்புடன் அவர் குழலில் சூடிய பீலியை நோக்கினாள். அதுவும் அவளுக்கு நோக்களிக்கவில்லை. படபடக்கும் உள்ளத்துடன் அவள் அவர் புன்னகையை, ஒற்றைக்கல்லாரம் துவண்ட மார்பை நோக்கினாள். பின்னர் காலடிகளுக்கு நோக்கு தழைந்தாள். அறிந்தவை, அணுக்கமானவை. அவள் உளக்கொந்தளிப்பு அடங்கியது. அவள் அவர் கால்களையே நோக்கிக்கொண்டிருந்தாள்.

முந்தைய கட்டுரைசிறுகதை -ஓர் அறிவிப்பு
அடுத்த கட்டுரைஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 8