பகுதி நான்கு : ஒளிர்பரல் – 2
தாரை அசலையின் அறைவாயிலுக்குச் சென்றபோது முன்னரே அவள் தன் சேடியருடன் பேரவைக்கு கிளம்பிச் சென்றிருக்கும் செய்தியை அறிந்தாள். இடைநாழியினூடாக விரைந்து ஓடியபோது கழுத்தணிகளும் வளையல்களும் சிலம்புகளும் இணைந்து குலுங்கும் ஓசை பெரிதாக ஒலிக்கக்கேட்டு நின்று நெஞ்சில் கைவைத்து மூச்சிழுத்துவிட்டாள். பின்னர் பெருநடையாக தாவி ஓடி படிகளில் இறங்கி சிறுகூடத்திற்கு வந்து அங்கு நின்றிருந்த முதுசேடியிடம் “இளைய அரசி நெடுந்தொலைவு சென்றுவிட்டார்களா?” என்றாள். அவள் “இல்லை அரசி, நான்காவது வளைவு அணுகியிருப்பார்கள் இந்நேரம்” என்றாள்.
ஒவ்வொரு தூணையும் தொட்டுத் தொட்டு நுனிக்கால் வைத்து தாவித்தாவி அவள் ஓடினாள். நடுவில் ஒரு தூணை தொடாமல் விட்டபோது திரும்பி வந்து அதை தொட்டுவிட்டு முன்னால் சென்றாள். நின்று மூச்சிரைத்து கண்களை மூடி ஒருகணம் இளைப்பாறி மீண்டும் ஓடினாள். அவ்வரண்மனையில் அவ்வாறு ஓடுபவர்கள் அவளும் அவள் குலத்தைச் சேர்ந்த சிம்ஹிகி, புஷ்டி, அனங்கை, கலை, ஊர்வசி, அமிர்தை ஆகியோரும் மட்டுமே. மல்லநாட்டு இளவரசியர் தேவமித்ரை, தேவபிரபை, தேவகாந்தி, தேவமாயை, தேவகி ஆகியோர்கூட அவ்வாறு ஓடுவதில்லை.
தோட்டத்திலாடுகையில் தேவமித்ரை ஒருமுறை அவள் தோளைத் தொட்டுஅணைத்து “அவ்வாறு ஓடக்கூடாது தாரை… அரசியர் ஓடுவதில்லை” என்றாள். “ஏன்?” என்றாள் தாரை. “நம் அணிகளை பார். இவை ஓடுவதற்கும் விரைவதற்கும் உரியவை அல்ல.” தாரை அணிகளை நோக்கிய பின் “ஏன் ஓடக்கூடாது?” என்றாள். “அரசியருக்கு அனைத்தும் அருகிலுள்ளன. ஆணையிட்டால் அருகணையக் காத்திருக்கின்றன” என்றாள் சிம்ஹிகி. கலை “அவ்வாறு அருகணையாதவற்றை அவர்கள் நாடுவதும் பிழை” என்றாள். அவள் இளிவரலாடுகிறாளா என விழிகளிலிருந்து தெரியவில்லை. “அரசியரின் காலம் மிகமிக மெல்ல ஊர்வது, சினைகொண்ட பிடியானை என” என்றாள் தேவப்பிரபை.
“மெய்யாகவே சொல்க, ஏன் அரசியர் ஓடலாகாது?” என்றாள் தாரை. “ஓடும்போது அவர்கள் அரசியல்லாமலாகிறார்கள்” என்றாள் தேவகாந்தி. “ஏன்?” என்று தாரை மீண்டும் கேட்டாள். புஷ்டி “நான் இதை ஒருமுறை செவிலியிடம் கேட்டேன்” என்றாள். “அரசி என்பது ஒரு நிறைநிலை. ஆகவே அவர்கள் ஓடக்கூடாது என்றாள். பின்னர் என் தோளைத்தொட்டு நிறைந்திருக்கையில்தான் அது நீர்நிலை. அரசியர் ஓயாது தன்னிலூறும் சுனை ஆகலாம். ஊருக்கே உணவூட்டும் குளமோ ஏரியோ ஆகலாம். உணவூட்டும் ஊருணியாகலாம். ஓயாது அலைக்கும் கடலுமாகலாம். ஆனால் நிலைகொண்டாகவேண்டும் என்றாள்.”
தாரைக்கு அவள் சொன்னது புரியவில்லை. அவள் “எங்களூரில் ஓடுவதே முதல் பயிற்சி. நெடுந்தொலைவு ஓடுவதும் நெடுநேரம் துடுப்பிடுவதுமே ஆற்றல் என கொள்ளப்பட்டன” என்றாள். தேவமாயை “உங்களூரில் வெள்ளி என எதை சொல்வீர்கள்?” என்றாள். “அயிரை, கெண்டை” என்றாள். “பொன் என்று?” என்றாள் தேவமாயை. “செங்கயல்” என்றாள். தேவமாயை உதடு வளைய புன்னகைத்து “எங்களூரில் வெள்ளி என்றால் சருகு. பொன்னென்றால் தளிர்” என்றாள். “இங்கே வெள்ளியும் தங்கமும் வெறும் உலோகங்கள் மட்டுமே.” தாரை நீள்மூச்செறிந்தாள். தேவமித்ரை அவள் தோளை மீண்டும் அணைத்து “நீ துயர்கொள்ள வேண்டியதில்லையடி. மெய்யாகவே உன்னைப்போல் ஓடமுடியாதா என ஏங்குபவள் நான்” என்றாள்.
அவள் ஓடிவரும் ஓசையைக் கேட்டு அசலை நின்று திரும்பிப்பார்த்து புன்னகைத்தாள். அவளை அணுகி மூச்சை அடக்கி “பொறுத்தருள்க, அரசி. தாங்கள் பட்டத்தரசியுடன் அவைபுகுவீர்கள் என்று எண்ணினேன். தனியாக செல்கிறீர்கள் என்று அறிந்த பின்னரே அங்கு வந்தேன். அதற்குள் கிளம்பிவிட்டீர்கள்” என்றாள். “ஆம், இது பேரவை என்பதனால் பேரரசியுடன் தானும் செல்வதாக அரசி சொன்னார்கள். ஆகவே நான் தனித்து கிளம்பினேன்” என்றாள் அசலை.
மூச்சு அமைய தாரை “பேரவைக்கு பேரரசி வருகிறார்களா?” என்றாள். “ஆம், இன்றையநாள் அஸ்தினபுரியில் அனைவரும் எதிர்பார்த்திருப்பதல்லவா?” என்று அசலை சொன்னாள். “மேலும் அவருடைய சொற்களில் பாதி அன்னையை நோக்கியே எழும் என அனைவரும் அறிவர்.” தாரை “ஆம்” என்றபின் முகம்மலர்ந்து அசலையின் கையைப்பற்றி “நேற்று நான் சென்று இளைய யாதவரை பார்த்தேன்” என்றாள். அசலை திடுக்கிட்டு “நீயா?” என்றாள். “ஆம், நானும் என் கொண்டவருமாக சென்றோம். உண்மையில் நான் தயங்கிக்கொண்டிருந்தேன். அவர்தான் என்னை வற்புறுத்தி அழைத்துச் சென்றார்” என்றாள் தாரை.
சிறுமியைப்போல மூச்சிழுத்துவிட்டு “என்னால் எப்படி அத்தனை தொலைவைக் கடந்து அவர் அருகே அணுக முடிந்ததென்று இப்போது எண்ணினாலும் திகைப்பாக இருக்கிறது. ஆனால் அருகணைந்த பின்னர் நான் எப்போதும் அங்குதான் இருந்துகொண்டிருந்தேன் என்றுணர்ந்தேன். அவர் பிறிதெவருமல்ல, அங்கே மச்சபுரியில் சர்மாவதியில் படகோட்டி முதலைகளை வேட்டையாடி வாழ்ந்துகொண்டிருக்கும் என் தந்தைதான். அவர் என் கைகளைப் பற்றியதுமே நான் அதை உணர்ந்தேன். கண்களை மூடினால் தந்தையின் தொடுகையென்றே அது தோன்றியது” என்றாள் தாரை.
அசலை அதை கேட்கவிழையாதவள்போல மறுபக்கமாக தலைதிருப்பியிருந்தாள். ஆனால் தாரை அதை கண்ணேற்காமல் தொடர்ந்து பேசினாள். “நான் அதை அவரிடம் சொன்னேன். நான் உன் தந்தையேதான் என்று அவர் சொன்னார். என் தலையை மெல்ல தட்டினார், காதைப் பிடித்து முறுக்கினார். மெய்யாகவே அவருக்கு என் தந்தை எப்படி என்னை கொஞ்சுவார் என தெரிந்திருக்கிறது.” அசலை பெருமூச்சுடன் “நன்று” என்றாள். “நீங்களும் சென்று பார்க்கலாமே, அக்கை?” என்றாள் தாரை. “உன்னுடன் உன் கணவர் வந்தார்” என்றாள் அசலை. “ஆம், அது மெய். முறைமைகளைக் கடந்துசெல்ல இங்கு எவருக்கும் ஒப்புதலில்லை” என்றாள் தாரை.
இருவரும் பேசிக்கொண்டு நடந்தனர். அசலை தலைகுனிந்து எண்ணங்களில் ஆழ்ந்தவளாக நடந்தாள். தாரை அச்சூழலை விழியோட்டி நோக்கியபடி அவ்வப்போது இயல்பாக நின்று ஆடைகளும் அணிகளும் குலுங்க ஓடி அணுகி உடன்வந்தாள். அசலை விழிப்புற்றவள்போல “நீங்கள் எதைப்பற்றி பேசிக்கொண்டீர்கள்?” என்றாள். தாரை மெல்லிய திடுக்கிடலுடன் அக்கேள்வியை அடைந்தாள். துள்ளலுடன் அவளுடன் இணைந்து நடந்தபோது அவள் அணிகளும் வளைகளும் குலுங்கின. அவள் சொல்லெடுப்பதற்கு முன்னே அவள் உடல் ஒரு சொல்லை உரைத்தது போலிருந்தது.
“உண்மையை சொல்லப்போனால் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டது முழுக்க மச்சநாட்டை பற்றித்தான், அரசி. இளைய யாதவர் என் தந்தையின் தோழர். எங்கள் நிலத்தை நன்கறிந்தவர். நீங்கள் எங்கள் நிலத்தை பார்த்திருக்கமாட்டீர்கள். சர்மாவதி சேற்றுநதி. அதன் இரு கரைகளும் சதுப்பு நிரம்பியவை. எங்கள் இல்லங்கள் அனைத்தும் சதுப்பின் மீதுதான் அமைந்திருக்கும். நீரலைக்கு இருபுறமும் கோரைப்புல்லின் அலைகள். நீரில் படகுகள் ஒழுகிக்கொண்டிருக்கும். கோரைப்புற்களின் மீது எங்கள் இல்லங்கள் மூங்கில்கால் ஊன்றி நின்றிருக்கும். அவ்வளவே வேறுபாடு. படகுகளைப் பார்த்து அமர்ந்திருந்தால் வீடுகள் ஒழுகிச்செல்வதைப்போல தோன்றும்…”
அவள் சிறுமியைப் போன்ற விரைவுக்குரலில் “குடில்களுக்கு அடியில் இஞ்சிப்புல்லிட்டு புகையெழுப்பிக்கொண்டிருப்போம். இல்லையேல் சதுப்பின் கொசுக்கள் உடலை மொய்த்துவிடும். அப்புகை எங்கள் ஊர்களை முகில்போல மூடியிருக்கும். இளமையிலிருந்து நான் கண்ட அத்தனை முகங்களும் அப்புகைப்படலத்தினூடாக எழுந்தவைதான். எப்போதேனும் நல்ல கோடையின் இளங்காலையில் ஆற்றுக்குமேல் படகில் செல்கையிலேயே புகையில்லாத காட்சிகளை காண்பது. அது விழியிலிருந்து ஒரு மென்பால் படலத்தை உரித்து அகற்றியதுபோல காட்சி துலங்கும் ஒரு கனவறிதல். அதற்காகவே நான் சர்மாவதிக்கு செல்வேன்” என்றாள்.
“ஆனால் அது மிக அரிது. ஆற்றின்மேல் எப்போதும் நீராவிப் படலம் இருக்கும். காட்சிகள் மழையினூடே என நெளிந்தாடித்தான் தெரியும்…” என அவள் தொடர்ந்தாள். சொல்லச்சொல்ல எழுந்தபடியே இருந்தது அவள் உள்ளம். “நானே மீன் பிடிக்கத்தொடங்கியது ஏழாவது அகவையில். எனக்கு என் தந்தை கைக்கோடரியால் மென்மரம் குடைந்து ஒரு படகு செய்து தந்தார். அதில் துடுப்பிடுவதற்கும் அவரே கற்பித்தார். சிறுதூண்டிலுடன் ஆற்றில் தனித்துச் சென்று என் முதல் மீனை பிடித்துக்கொண்டு வந்ததை ஒவ்வொரு காட்சித்துளியெனவும் நினைவு கூர்கிறேன்.”
“அதுவொரு நீள்வால் கெளுத்தி. ஆழத்திலிருந்து விடியலில் மட்டுமே வெளிவரும் மீன். அதற்கு செவுள்கள் இல்லை. இலைக்குருத்துச் சுருள்போல மென்மையாக பளபளத்தது. அதை என் கையில் எடுத்தபோது துள்ளி நெளிந்தது. அது சர்மாவதியின் விரல் என்றும் என்னை உடல்கிளுப்பூட்டி சிரிக்கவைக்க முயல்கிறதென்றும் எண்ணினேன். படகை சேற்றுவிளிம்பில் நிறுத்தி பாய்ந்திறங்கி சதுப்பினூடாகச் செல்வதற்கு போடப்பட்டிருந்த மரத்தடி மீது தாவி என் குடில் நோக்கி ஓடினேன். ‘தந்தையே, நானே பிடித்த மீன்’ என்று கூவினேன். தந்தை என் அக்கையருடன் இல்லமுகப்பிலமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். எழுந்து ஓடிவந்து இரு கைகளையும் விரித்து என் இடை பற்றி தூக்கிக்கொண்டார். ‘என் குட்டி மீனே! என் ஒளிமிக்க மீனே!’ என்று கூவி என்னை முத்தமிட்டார்.”
“அதைத்தான் அவரிடம் பேசிக்கொண்டிருந்தாயா?” என்றாள் அசலை. “ஆம், என்னை என் தந்தை பரல் என்று அழைப்பார். அதை அவரே சொன்னார். நானே நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தேன். சென்ற பதினாறாண்டுகளில் நான் ஒருமுறைகூட பேசாதவை அவை. அவ்வளவு சொற்களும் என்னுள் ஆழத்தில் மீன்முட்டைகள் என கிடந்திருக்கின்றன. பெருகிக் கொப்பளித்து எழுந்தன. அக்கையே, நீங்கள் மழைக்காலம் முடிந்து முதல் வேனிலில் செம்பரலும் வெண்பரலும் முட்டைகள் விரிந்து மீன்குஞ்சுகள் எழுவதை கண்டிருக்கிறீர்களா? புயற்காற்றில் மணல்பரப்பு கொப்பளித்து எழுந்துசுருண்டு அணைவது போலிருக்கும்…”
“பெரும்படை! முகில்போல பெருஞ்சுருள்கள்! ஒன்றன்மேல் ஒன்றென எழும் அலைகள்! கண்ணிமைநுனி என பல்லாயிரம் சிறுவால்கள். பல இலக்கம் வெள்ளிச் செவுள்கள். பலகோடி கடுகு விழிகள். ஆனால் உள்ளம் ஒன்று. அவற்றை அள்ளிச் சுழற்றிவரும் விழைவுதான் மீன்களை நீரில் வாழச்செய்யும் இறையாணை. அதை விழிமுன் காண்பதென்பது இறைவடிவை எதிர்நின்று நோக்குவதுபோல. படகுகளில் ஏறி நாங்கள் சர்மாவதியின்மேல் சென்று அசைவற்று நிற்போம். எடைகொண்ட கற்களிரண்டை நங்கூரமாகக் கட்டி நீரிலிறக்கிய பின் எதிரொழுக்கில் துடுப்பிட்டால் படகுகள் அசைவிலாது நீர்மேல் நின்றிருக்கும். எங்கள் குடியில் எழமுடியாத முதியோர்கூட அப்போது நீரின்மேல்தான் இருப்போம்.”
“பரலெழுகை தொடங்குவதை நீரிலெழும் வண்ண மாற்றத்தினூடாக ஏழு நாட்களுக்கு முன்னரே எங்கள் குலமுதியோர் சொல்லிவிடுவார்கள். ஒருநாளுக்கு முன்னரே நீரின் மணம் அதை தெளிவாக காட்டும். இளஞ்சேற்றுமணம். ஆனால் அதில் சற்று குருதியும் கலந்ததுபோலிருக்கும். இரவே படகுகளில் சென்று நதிமேல் காத்திருப்போம். பரல்பெருக்கு அணைவதற்கு முன்னரே காற்றில் சுழலும் பறவைக்கூட்டம் அதை அறிவிக்கும். பின்னர் சர்மாவதி நிறம் மாறுவதை காண்போம். நீருக்குள் எழும் அலைகளென அவை வந்து சூழ்ந்துகொள்ளும். இளையோரெல்லாம் நீரில் பாய்ந்து மூழ்கித்திளைத்து அவற்றை நோக்குவோம்…”
அசலை புன்னகைக்க தாரை நிறுத்தி “நான் என்ன பேசிக்கொண்டிருந்தேன்?” என்றாள். “அவரிடம் நீ பேசியதை” என்றாள் அசலை. “ஆம், ஒரு கட்டத்தில் அவரிடமிருந்து எனக்கு தெரிந்துகொள்வதற்கு எதுவுமே இல்லை என்று தோன்றியது. தந்தையிடமென நான் எண்ணியதனைத்தையும் பேச விரும்பினேன். ஏதோ ஒரு மாயம் நிகழ்ந்தது. அவர் என் களித்தோழரானார். அதன்பிறகு முழுக்க மீன் வேட்டை குறித்தும் படகுப் போட்டிகளைப்பற்றியும் ஆற்றில் பாய்ந்து ஒழுக்குமுறித்து நீந்தி மீள்வதைப்பற்றியும் மட்டுமே பேசிக்கொண்டிருந்தோம். பேசிப் பேசி நெடுந்தொலைவு சென்ற பின்னர் உணர்ந்தேன், நானும் அவரும் மட்டும் வேறெங்கோ சென்றுவிட்டிருப்பதை. எங்கள் அறைக்குள்ளேயே என் துணைவர் நின்றிருந்தார். அவரை உணர்ந்து நான் திரும்பி வந்து அய்யோ நெடுநேரமாயிற்றே என்று புன்னகைத்தேன். தாழ்வில்லை, நீ ஒவ்வொரு அகவையாக உதிர்த்து மீண்டு செல்வதை கண்டேன். கருக்குழந்தையாக மாறிவிடுவாய் என்று தோன்றியது என்று அவர் சொன்னார்.”
மூச்சுத் திணறுவதுபோல சொல் இறுக நிறுத்தி “அப்போது நான் ஏன் அப்படி சொன்னேன் என்று தெரியவில்லை. அவ்வண்ணம் கருக்குழந்தையாக மாறினால் அவர் உடலுக்குள் புகுந்து ஓர் அணுவாக அமைந்துவிட வேண்டுமென்று தோன்றுகிறது என்றேன். இருவரும் நகைத்தனர். இளைய யாதவர் என் தோளைப்பற்றி சென்று வா, மீண்டும் நாம் சந்திப்போம் என்றார். சந்திக்கவில்லையென்றாலும் எப்போதும் நான் உடனிருந்துகொண்டிருப்பேன் என்று சொன்னார்” என்றாள் தாரை.
அசலை “ஆம்” என்றாள். பின்னர் நீள்மூச்செறிந்து “அனைவரிடமும் இருந்து கொண்டிருக்கிறார்” என்றாள். தாரை “பின்னர் என் அறைக்கு மீள்கையில்தான் அவர் வந்திருப்பது இந்திரப்பிரஸ்தத்தின் தூதுச் செய்தியுடன் என்பதை நினைவு கூர்ந்தேன். அவர் என்ன கூறினாலும் அதனுடன் முழுதுளம்கொண்டு நிற்பதாக அறிவிக்கவே நானும் அவரும் சென்றிருந்தோம். அதை மட்டும் அவரிடம் சொல்லவே இல்லை” என்றாள்.
“அல்லது அதை மட்டும்தான் சொல்லிக்கொண்டிருந்தாய்…” என்றாள் அசலை. தாரை அவள் கையைப்பற்றி “மெய்யாகவா? மெய்யாகவா, அக்கை? நான் அதை சொல்லிவிட்டேனா?” என்றாள். “நீ அறைக்குள் புகுந்ததுமே விழிகளால் அதைத்தான் சொல்லியிருப்பாய்” என்றாள் அசலை. “ஆம், அறைக்குள் நுழைந்ததுமே நான் முதலில் பார்த்தது அவர் கால்களைத்தான். அவர் முகத்தை நெடும்பொழுது கழித்தே பார்த்தேன். அவர் கால்களை நீங்கள் பார்க்கவேண்டும், அக்கையே. அவர் முகம் நம் கனவுகளில் இருப்பது. கனவுகள் மிக அண்மையிலும் மிகத் தொலைவிலுமென ஒரே தருணம் அமைந்திருப்பவை. கால்கள் அப்படி அல்ல, நாம் அன்றாடம் புழங்கும் ஒவ்வொரு பொருளும்போல கைக்கும் கருத்துக்கும் எட்டுபவை.”
“அக்கால்களை இப்போதும் விழிமுன் என பார்க்கிறேன். நீலத்தாமரை மொட்டுகள் போன்றவை. நகங்கள் இரு புன்னகைகள். அந்தக் கால்களை மலர்களாக குழலில் சூடிக்கொள்ள வேண்டுமென்று நேற்றிரவு எண்ணினேன். இனி என் குழலில் நீல மலர்களை அன்றி எதையும் சூடுவதில்லை என்று அப்போது முடிவெடுத்தேன்” என்றாள் தாரை. அசலை “நான் அம்முடிவை எடுத்து நெடுங்காலமாகிறது” என்று தன் குழலைத் திருப்பி அதில் சூட்டப்பட்டிருந்த நீலச் செண்பகத்தை காட்டினாள். தாரை திரும்பி அதைப் பார்த்து “மெய்தான்” என்றபின் “நானும்தான்” என்று தன் குழலில் சூட்டியிருந்த நீலமலர்களை காட்டினாள்.
“நீலம்போல் அழகிய வண்ணம் பிறிதெதுவுமில்லை. செம்மையும் பொன்மஞ்சளும் ஒளிகொண்டவை. நீலம் ஆழம் மிக்கது” என்றாள் அசலை. “ஆம் அக்கையே, பிறவண்ணங்கள் நம்மை நோக்கி வருகின்றன. நீலம் நம்மை இழுத்து தன்னுள் ஆழ்த்துகிறது” என்று தாரை சொன்னாள்.
காவலர் வாழ்த்துரைக்க நிமித்திகன் வரவறிவிக்க அஸ்தினபுரியின் குடிப்பேரவையை ஒட்டியிருந்த சிற்றறைக்குள் அசலையும் தாரையும் நுழைந்தனர். அங்கு மச்சநாட்டு இளவரசியர் சிம்ஹிகி, புஷ்டி, அனங்கை, கலை, ஊர்வசி, அமிர்தை ஆகியோர் மல்லநாட்டு இளவரசியர் தேவமித்ரை, தேவபிரபை, தேவகாந்தி, தேவமாயை, தேவகி ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தனர். புஷ்டி எழுந்து வந்து தாரையிடம் “உன்னை தேடினேன்… எங்கே சென்றாய்?” என்றபின் அசலையை பார்த்தாள். “வணங்குகிறேன், அரசி” என்றாள்.
மூஷிககுலத்து இளவரசியர் கமலை, ருத்ராணி, மங்கலை, விமலை, பாடலை, உல்பலாக்ஷி, விபுலை ஆகியோர் காமரூபத்து இளவரசியர் ஏகவீரை, சந்திரிகை, ரமணை, நந்தினி, ருக்மிணி, அபயை, மாண்டவி, சண்டிகை ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் எழுந்து அசலையை வணங்கினர். அசலை அவர்கள் நடுவே பீடத்தில் அமர்ந்தாள். அவளுக்குப்பின்னால் பீடத்தின் பின் வளைவைப் பற்றியபடி தாரை நின்றாள். உத்கலத்தின் இளவரசியர் திதி, சுரசை, பானு, சந்திரை, யாமி, லம்பை, சுரபி, தாம்ரை ஆகியோர் உள்ளே வந்து அசலையை வணங்கினர்.
மெல்ல மெல்ல அவ்வறை தோள்கள்தொடச் செறிந்து வண்ணங்களும் நறுமணங்களும் அணியொலிகளும் மூச்சுவெம்மையும் கொண்டதாக ஆகியது. கனகர் உள்ளே வந்து வணங்கி “இளவரசி, அவை கூடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவராக வந்து அமர்கிறார்கள்” என்றார். “அரசர்கள் உள்ளே சென்றுவிட்டனரா?” என்று அசலை கேட்டாள். “பெரும்பாலும் சென்று அவையமர்ந்துவிட்டனர். இளையவர் அரசருடன் அவைபுகுவாரென்று எண்ணுகிறேன்” என்றார் கனகர். அசலை “பேரரசி அவைபுகுந்துவிட்டார்களா என்று நோக்கிக் கூறுக!” என்றாள். “அவர்கள் மறுபக்க அவையில் இருக்கிறார்கள். பேரரசி அவைபுகுந்ததும் அணுக்கச்சேடி எனக்கு செய்தி அறிவிப்பாள்” என்றார் கனகர். “அவர்கள் அவைபுகும்போது நாமும் அவைபுகலாம்” என்று அசலை சொன்னாள். கனகர் வெளியே ஓடினார்.
அசலை கைகாட்ட சேடி மயிலிறகு விசிறியை அளித்தாள். அவள் தன் பின்னலைத் தூக்கி பின்கழுத்தை விசிறிக்கொண்டாள். “நான் வீசுகிறேன், அரசி” என்றாள் பாடலை. “வேண்டாம், நீ அரசணிக்கோலத்திலிருப்பவள்” என்று அசலை புன்னகை செய்தாள். பேரரசி அவைபுகுவதை அறிவிக்கும் சங்கொலி மறுபக்கம் எழுந்தது. குரவையும் மங்கல இசையும் ஒலித்தன. “அவைநுழைகிறார்கள்” என்றாள் லம்பை. அசலை தாரையிடம் “நீ என் அருகில் அமர்ந்துகொள்” என்றாள். தாரை “அவை முறைமைப்படி…” என்று சொல்தயங்க “இது என் ஆணை என்று கொள்க!” என்றாள் அசலை. “அவ்வாறே” என்றாள் தாரை.
அவர்கள் ஆடைகளை சீரமைத்தபடி எழுந்தனர். கமலையும் மங்கலையும் அசலையின் ஆடையின் பின்சுருக்கங்களை நீவிவிட்டனர். “பேரவையில் எவரும் நம்மை நோக்கப்போவதில்லை… ஆயினும் அணியாடைகள்” என்றாள் திதி. சுரசை “நாம் பார்ப்போமே?” என்றாள். கனகர் மூச்சிரைக்க மீண்டும் சிற்றறைக்குள் புகுந்து தலைவணங்கி “அவை ஒருங்கிக்கொண்டிருக்கிறது, அரசியரே” என்றார். அசலை “செல்வோம்” என்று பிறரிடம் சொன்னபின் முன்னால் சென்றாள். அவளுடைய நிமித்தச்சேடி வலம்புரிச்சங்கை ஊதி அரசியர் அவை புகவிருப்பதை அறிவித்தாள் மங்கலத்தாலமேந்திய மூன்று சேடியர் முன்னால் நடக்க அசலை அருகே தாரையுடன் நீளடி வைத்து மிதப்பவள்போல் நடந்து சென்றாள். கௌரவ அரசியர் மூவர் மூவராக நிரைவகுத்து அவளைத் தொடர்ந்து அவை நோக்கி சென்றனர்.
பேரவைக்குள் புறவாயிலினூடாக நுழைந்து அங்கு போடப்பட்டிருந்த இருக்கைகளில் அவர்கள் பரவினர். முன்னரே காந்தாரத்து மூத்த அரசியரான சுதேஷ்ணையும் சம்ஹிதையும் தேஸ்ரவையும் சுஸ்ரவையும் நிகுதியும் சுபையும் தசார்ணையும் இருக்கைகளில் அமர்ந்திருக்க அவர்களுக்குப் பின்னால் காந்தாரத்து அரசியர் ஸ்வாதா, துஷ்டி, புஷ்டி, ஸ்வஸ்தி, ஸ்வாகா, காமிகை, காளிகை, ஸதி, க்ரியை, சித்தை, சாந்தி, மேதா, பிரீதி, தத்ரி, மித்யா ஆகியோர் அமர்ந்திருந்தனர். சுதேஷ்ணையை வணங்கிவிட்டு தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.
பேரவை முழுக்க நிறைந்துவிட்டிருப்பதை அவர்களுக்கு முன்னால் போடப்பட்டிருந்த மெல்லிய பட்டுத் திரைச்சீலைக்கு அப்பால் மென்புகையிலூடாக என தாரை பார்த்தாள். குடித்தலைவர்களும் பெருவணிகர்களும் வைதிகர்களும் அவர்களுக்குரிய இருக்கைகளில் அமைந்து ஓசையின்றி அவைமேடையை நோக்கிக்கொண்டிருந்தனர். பின்நிரைகளில் மட்டும் ஓரிருவர் வந்து அமர்ந்தனர். அரசர்களுக்குரிய பகுதியில் கௌரவர்கள் முடிகளுடனும் கவசங்களுடனும் மாலைகளுடனும் முழுமையாக நிறைத்து அமர்ந்திருந்தனர். சகுனியின் அருகே தரையில் இடப்பட்ட மென்பஞ்சு சேக்கையில் கணிகர் சரிந்து படுப்பதுபோல் அமர்ந்திருந்தார்.
பீஷ்மரும் துரோணரும் கிருபரும் வலது எல்லையில் அந்தணர் நிரையை ஒட்டி போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். பீஷ்மர் அவருடைய இயல்புப்படி மெலிந்து நீண்ட உடலை மரவுரியிட்ட பீடத்தில் சற்றே வளைத்ததுபோல அமர்த்தி வலக்கையால் தாடியை உருவியபடி விழிதாழ்த்தி ஊழ்கத்திலென அமர்ந்திருந்தார். துரோணர் கிருபரிடம் தாழ்ந்த குரலில் எதையோ தொடர்ந்து உரையாடிக்கொண்டிருந்தார். சுபாகு எழுந்து சென்று யுயுத்ஸுவிடம் ஏதோ ஆணையிட்டுவிட்டு மீண்டுவந்து தன் இருக்கையில் அமர்ந்தான்.
சத்யசேனையும் சத்யவிரதையும் இருபக்கமும் நின்று காந்தாரியை அழைத்துக்கொண்டு அவைபுக மகளிர் அனைவரும் எழுந்து நின்று வாழ்த்தினர். அரசியர் நிரைக்கு எல்லையில் இடப்பட்ட அரியணையில் காந்தாரி அமர அவள் அருகே சத்யசேனையும் சத்யவிரதையும் அமர்ந்தனர். காந்தார அரசியர் தங்கள் குடி வழக்கப்படி முற்றிலும் முகத்தை மூடும்படி ஆடையணிந்து தாழ்ந்த குரலில் ஒருவரோடொருவர் உரையாடிக்கொண்டிருந்தனர். அரசியர் நிரையில் சிலரே அவையை நோக்கினர். பெரும்பாலானவர்கள் தலைகுனிந்து முற்றிலும் உளம் அகன்று அமர்ந்திருந்தனர். சிலர் பொருளின்றி எதையேனும் வெறித்து நோக்க சிலர் எதையோ துழாவுபவர்கள்போல அவை நோக்கி வெறுமனே விழிசுழற்றினர்.
திருதராஷ்டிரரின் அவைநுழைவை அறிவித்தபடி நிமித்திகன் கொம்பூதிக்கொண்டு அவைக்குள் நுழைந்தான். அவனைத் தொடர்ந்து மங்கலச்சேடியரும் இசைச்சூதரும் நிரைகொண்டு வர சஞ்சயனின் தோள்பற்றி திருதராஷ்டிரர் நடந்து வந்தார். அவையிலிருந்த விதுரர் எழுந்து சென்று முகமனுரைத்து வணங்கி திருதராஷ்டிரரை எதிரேற்றார். கைகூப்பியபடி அவைக்குள் நுழைந்து அவையை மும்முறை தலைதாழ்த்தி வணங்கிய பின் தன் இருக்கை நோக்கி சென்றார் திருதராஷ்டிரர். பீஷ்மரையும் துரோணரையும் கிருபரையும் வணங்கிவிட்டு அமர்ந்தார். அவருக்கு அருகே தாழ்ந்த பீடத்தில் சஞ்சயன் அமர்ந்தான். அவர் சென்று அமர்வதுவரை அவை வாழ்த்தொலி எழுப்பிக்கொண்டிருந்தது.